சொல்.62

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .62 [ 31 /10/2018 ]

கோபத்தை அடக்கு என்பதே எல்லோரும் ,எங்கும் ,எப்போதும் சொல்லும் அறிவுரையாக இருக்கிறது . ஆனால் கோபம் வராத மனிதர்களை ஒரு போதும் சந்திக்கவே இயலாது .கோபம் எல்லோருக்கும் வரும் . உறவுகளை ,நட்புகளைக் காயப்படுத்தும் ,முன்னேற்றதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பொசுக்கென பொங்கும் கோபம் பொல்லாதது .வேண்டாதது .களையப்பட வேண்டியது .

கோபமும் ஒரு நல்ல உணர்வே , அதை கையாளுவதில்தான் எப்போதும் தோல்வி அடைகிறோம் . கோபம் அது இருபக்கமும் கூர்மையான கத்தி ; அதனைப் பயன் படுத்துவதில் மிக நுட்பம் தேவை .அதனைப் பயிலாததுதான் உண்மையானப் பிரச்சனை .

எதற்குக் கோபப்பட வேண்டும் எதற்குக் கோபப் படக்கூடாது .எங்கு கோபப்பட வேண்டும் .எங்கு கோபப்படக் கூடாது .எப்படிக் கோபப்பட வேண்டும் .எப்படி கோபப்படக்கூடாது .இப்படி பல நாம் கறக வேண்டும் .

ஒருவர் பணியைச் சரியாகச் செய்யாத போது வருகிற கடமைக் கோபம் , குழந்தை தப்பு செய்யும் போது கண்டிக்கும் பாசக்கோபம் ,கணவன் மனைவி இடையே தோன்றும் பொறுப்பான கோபம் , வாய் கூசாமல் ஒருவர் பொய்யுரைக்கக் கேட்டு வரும் சத்தியக்கோபம் இப்படி எண்ணற்ற உண்டு . இவை போன்றவை எல்லாம் மின்மினியாய் தோன்றி மறைய வேண்டிய கண நேரக் கோபங்கள் .நெஞ்சில் சுமக்கக்கூடாத கோபங்கள் .

சமூகத்தில் கண்ணெதிரே நடக்கும் அநீதிகள் கண்டு உன் விழிகள் சிவக்கவில்லை எனில் நீங்கள் மனிதரல்ல மரக்கட்டையே . இந்த லட்சியக் கோபம் இறுதி இலக்கை அடையும் வரை ஆறாமல் கனன்று கொண்டே இருக்க வேண்டும் .இந்த கோப நெருப்பை விசிறிக் கொண்டே இருக்க வேண்டும் .

கோபப்பட வேண்டியவற்றுக்கு கோபப்படாமல் இருப்பதும் ;கோபப்படக்கூடாதத்க்கு கோபப்படுவதுமே நாம் செய்யும் மிகப்பெரிய பிழையாகும் . புரிந்தால் நல்லது .
Su Po Agathiyalingam
ராமர் ஐயப்பன் ரக்சிய சந்திப்பு

Posted by அகத்தீ Labels:ராமர் ஐயப்பன் ரகசியச் சந்திப்புநடுநிசி சபரிமலையே நிசப்தத்தில் உறைந்து போயுள்ளது .

வன விலங்குகளும் பறவைகளும்கூட ஆழ்ந்த நித்திரையில் லயித்து கிடக்கின்றன.

அனுமார் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்து வருகிறார் .அவர் முதுகில் ராமர் கவலையோடு வீற்றிருக்கிறார் .

அனுமாரின் வருகையைக் கண்டு ஐயப்பன் சன்னதிக் கதவு தானே திறந்து கொள்கிறது .

ஏதோ அசாதாரண சமிக்ஞை வர ஐயப்பன் திடுக்கிட்டுக் கண் விழித்தார் .

அனுமார் முதுகிலிருந்து ராமர் குதித்தார் . ராமனைக் கண்ட ஐயப்பன் மகிழ்ந்து எப்போதும் வாபரைக் கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்வது போல் உளம் மகிழ வாழ்த்தினார் .அனுமாரையும் அதேபோல் அணைத்து மகிழ்வித்தார் .

 “ சீதாப் பிராட்டியை அழைத்து வரவில்லையா ?” என ஐயப்பன் அன்போடு வினவ …

 “ நீயோ பிரமச்சாரி பிரச்சனை இல்லை .இவனுக காவியம் எழுத என் பொண்டாட்டியைக்கூட என்னிடமிருந்து பிரித்துவிட்டான்கள் ….” என ராமன் கண் கலங்கினார் .

 “ அதை ஏன் கேட்கிறீங்க … வாபர் என் உயிர் நண்பர் .. எங்களுக்கு மத பேதமெல்லாம் கிடையாது … எங்கள எல்லோரும் பார்க்கலாம் … அதையும் தடை செய்ய மல்லுக் கட்டுறானுக … போகிற போக்கைப் பார்த்தால் என் உயிர் நண்பன வாபருக்கு என்ன ஆகுமோன்னு கவலையா இருக்கு …”

அங்கே நடுநிசி அமைதியையும் தாண்டி ஒரு பீதி நிறைந்த அமைதி நிலவியது … சற்று நேரத்துக்குப் பின் மூச்சுவிட்ட ராமர் சொன்னார் ;

 “ இவனுக சிம்மாசனத்தை பிடிக்க என்னைப் பகடைக் காயாயாக்கி ரொம்ம நாளாய் உருட்டிக்கிட்டிருக்கானுக ….. நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்க்கிறேன் … அவனுக திருந்துறாப்ல தெரியல … நாற்காலி மோகம் உச்சந் தலைக்கு ஏறி இப்போ உன்னையும் பதம் பார்க்க ஆரம்பிச்சிட்டானுக…மனசு கேட்கல அதுதான் உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன் …”

 “ எனக்கும் கவலையா இருக்கு… வெள்ளம் வந்தப்போ சம்மந்தமே இல்லாம என் தலையை உருட்டினானுக … பத்து காசு கொடுக்காம எங்க ஜனங்கள தவிக்க விட்டானுக … இப்ப என்னடான்னா என்னை பார்க்க தாய்க்குலம் வரக்கூடாதாம் குதிக்கிறானுக … சித்தி கேட்டாள் என்பதற்காக புலிப்பால் கொண்டு வந்த நானா என் பிரம்மச்சாரியத்தை உடைத்து பெண்களிடம் வம்பு செய்துவிடுவேன் .. என்னை ஏன் இப்படிக் கேவலப்படுத்துறானுக ..”

ஐயப்பன் தேம்பி அழ மலையே குலுங்கியது .

“ எல்லாம் இறைவன் படைப்புன்னு நம்ம பேருல சொல்லிக்கிறவன் நம்ம கருவறைக்கு எந்த சாதி வரலாம் ,எந்த சாதி வரகூடாது ,பெண்கள் வரக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு நம்மை அசிங்கப்படுத்துறானுக … நம்ம என்னமோ சமஸ்கிருததில பிஎச் டி வாங்கின மாதிரியும் தமிழ் ,மலையாளம் எல்லாம் நமக்கு தெரியாதுன்னும் வம்பு பண்றான் …” ராமர் அவர் பங்குக்கு புலம்பினார் .

 “ என் பெயரை பஜ்ரங்தள்னு வச்சிகிட்டு கலவரம் செய்து இடிக்கிறான் .. கொழுத்துறான் .. பெண்ணுங்கள பாலியல் வன்மம் பண்றான் … நாங்க விலங்குதான் ஆனால் சங்கிகள் மாதிரி அநாகரீகமாக ஈரமே இல்லாம நடந்துக்க மாட்டோம்…” இடையில் அனுமார் தன் காயத்தை திறந்து காட்டினார் .

 “ இவனுக பழையபடி சிம்மாசனத்துக்கு வந்து தேசத்தையே அவங்க கார்ப்பரேட் எஜமானன்களுக்குத் தாரைவார்க்க நம்மள பலிகடா ஆக்குறானுகளே எப்படித் தப்புவது ?” – ராமர் கேட்க .

இருவரும் மண்டையைக் குடையலாயினர் .

 “ ஐயப்பா !இப்படிச் செய்தாலென்ன ..”

 “ சொல்லுங்க ராமா !”

 “ பேசாமல் எங்காவது வேற நாட்டுக்கு ஓடிப்போயிரலாமா ?”

 “ அட ! நீங்க ஒண்ணு ராமா இன்னும் வெவரம் தெரியாமலே இருக்கீங்க … இங்க பழநியில முருகன வெளி நாட்டுக்கு கடத்திட்டுப் போயிட்டு டூப்ளிகேட்ட வச்சு ஏமாற்றுறானுக .. நாமோ ஓடிப்போயிட்டா நிம்மதின்னு டூப்ளிகேட்ட வச்சு கச்சிதமா காய் நகர்த்திருவானுக..!”

 “ அப்படின்னா பேசாமல் மதம் மாறிரலாமா ?”

 “ நமக்கு எல்லாம் ஒண்ணுதான் . ஆனால் இவனுக நம்மள உயிரோடு எரிச்சே போடுவானுக …ராமா அது வேலைக்கு ஆவாது …”

 “ என்ன செய்யலாம் … ஐயப்பா நீயே சொல்லு மகாபலின்னு நல்லவன் வாழ்ந்த பூமி உனக்குத் தெரியும் …”

 “ ராமா ! இவ்வளவு நாள் பொறுத்திட்டோம் … பல்லக் கடிச்சிட்டு இன்னும் ஆறுமாசம் இருப்போம் … நம்ம ஜனங்க ரொம்ப நல்லவங்க பழையபடி ஏமாற மாட்டாங்க … இவனுகள தொரத்தி அடிச்சிருவாங்க … ஃபிடல் காஸ்டிரோன்னு ஒருத்தரு சொன்னாராமே ‘ வரலாறு என்னை விடுதலை செய்யும்னு… அப்படி வரலாறு நம்மை விடுதலை செய்யும்னு நம்பி காத்திருப்போம் .. ஜனங்கள்ட்ட உண்மையைப் பேசுவோம் .நிச்சயம் விடியும் ..!!”

 “ கரெட் ஐயப்பா ! காத்திருப்போம் ! ஜனங்கள்ட்ட உண்மையப் பேசுவோம் … ஐயையோ இன்னும் கொஞ்ச நேரத்தில சூரியன் உதயமாயிடும் .. நம்ம இரண்டு பேரையும் இங்க ஒண்ணாப் பாத்தாப் போதும் அந்நிய சதின்னு நமக்கு எதிரா அந்த அமுக்குஷா  கூட்டம் கத்த ஆரம்பிச்சிரும் .. அதனால விடை பெறுகிறேன் ஐயப்பா !”

 ஐயப்பன் இருவரையு வாவரை அணைத்து மகிழ்வது போல் அணைத்து வழியனுப்பினான் .

 “அடுத்த முறை சீதாப்பிராடியோடு வருக! என ஐயப்பன் சொல்ல … அங்கே மூவரும் சிரித்ததில் சபரிமலையே அதிர்ந்திருக்கும் .

 “நிச்சயம் சீதாப்பிராட்டியோடு வருவேன்” என்றவாறே அனுமார் முதுகில் ஏறி ராமர் பறந்தார் .

பொழுது மெல்ல புலரத் தொடங்கியது …

சு.பொ.அகத்தியலிங்கம் .


சொல்.61

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .61 [ 30 /10/2018 ]

அவர்  ‘GENTLE MEN’  ‘ஜெண்டில் மேன்’ என சிலரைப் பற்றிச் சொல்கிறோம் .அடுத்து கொடுக்கும் விளக்கம் நம் தலையைச் சுற்ற வைக்கும்.  “அவர் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார் .” அதோடு நின்றாலாவது பரவாயில்லை . அதற்கும் மேலே சென்று சொல்வர்  “தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார் .” ஆக சுற்றி என்ன நடக்குது என்கிற அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர் எப்படி ஜெண்டில் மேன் ஆக முடியும் ?

ஆங்கிலத்தில் அதனை புரிந்து கொள்வதற்கும் நடப்பில் நாம் புரிந்து கொள்வதற்குமே வேறுபாடுண்டு . அடுத்தவர் விஜயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்காமல் ; சொன்ன சொல்லைக் காப்பாற்றி ,ரெச்பான்சிபில் சிட்டிஜனாக பொறுப்பான குடிமகனாக இருப்பதையே ஜெண்டில் மேன் என  வெளிநாட்டவர் அர்த்தப்படுத்துவர். இங்கு தலைகீழாக உள்ளது . என்ன செய்வது ?

யாரும் நம்மை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக , எல்லோரிடமும் நல்ல பிள்ளையாய் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக , எதையும் கண்டும் காணாமல் நழுவுகிற மனிதராக  ‘ஜெண்டில் மேனாக’ வாழ்வதைவிட கேவலம் வேறெதுவும் இல்லை . நடுநிலை என்பதெல்லாம் சுத்த ஏமாற்று ! நீங்கள் எந்தப் பக்கம் என்பதே வரலாறு நெடுகக் கேள்வி!

இங்கு தேவை நாம் புரிந்து கொண்டிருக்கிற ஜெண்டில் மேன்கள் அல்ல .சமூகத்தில் நடக்கும் அநீதிகள் ,அக்கிரமங்கள் கண்டு பொங்குகிற மனிதரே , சாதி மத வேறுபாடின்றி , ஆண் பெண் வேறுபாடின்றி சக மனிதரை நேசிக்கிற ,மதிக்கிற மனிதரே , நமக்குத் தேவை . இவரை கலகக்காரர் ,புரட்சிக்காரர் ,முற்போக்காளர் ,பிழைக்கத் தெரியாதவர் , என எப்படி வேண்டுமானலும் அழையுங்கள் .ஆனால் அவரே நமக்குத் தேவை .

காந்தி பொம்மை அல்ல நமக்குத் தேவை . அநீதிக்கு எதிராய் உரக்கப் பேசுகிற - கூர்ந்து கேட்கிற – நெருப்பாய் விழிக்கிற மனிதரா , இல்லை ‘ஜெண்டில் மேனா ” நீங்கள் யார் ? முடிவு செய்து விடுங்கள் !!!
Su Po Agathiyalingam
சொல்.60

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .60 [ 29 /10/2018 ]

எங்கள் ஊரில் சுடலை மாடனுக்கு எதிரில் ஒரு சிறிய குட்டி மாடன் வைத்திருப்பர் . எதிர் மாடன் இல்லாவிடில் சுடலை மாடனை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பது கிராமத்து வழக்கு !

எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு இருக்கும் . எதிர்ப்பு இல்லாவிடில் எது நண்மை எது தீமை என்பதுகூட தெரியாமல் போய்விடும் . வாழ்வதில்கூட சுவராசியம் போய்விடும் .எதிர்த்து வெல்வதில்தான் ஒரு த்ரில் இருக்கும் . தனிமனிதர் ,இயக்கம் ,நிறுவனம் எதுவாயினும் விதி அதுவே!

எல்லாவற்றையும்விட மிக முக்கியம் எதிர்த்து கேட்க நாதியில்லாத போது கடிவாளம் இல்லாத குதிரையாய் தறிகெட்டு ஓடி எங்காவது விழுந்து காலை ஒடிப்பதோ பேரிழப்பை சந்திப்பதோதான் நடக்கும் .

உங்கள் பேச்சுக்கு ,செயலுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் எல்லோரும் எதிரியல்ல ;உங்கள் நலனில் அக்கறை கொண்டோரும் உண்டு . தனிப்பட்ட விருப்பு வெறுப்பு ,பொறாமை போன்ற காரணங்களாலும் சிலர் எதிர்க்கக்கூடும் . அதனை ஸ்பீடு பிரேக்கராகக் கருதி வாழ்க்கை சக்கரத்தை எச்சரிக்கையாக ஓட்டி முன்செல்ல முயலவேண்டுமே தவிர அங்கேயே மல்லுக்கட்டிக்கொண்டு முடங்கிவிடக்கூடாது .

மார்பில் பதிந்த விழுப்புண் மட்டுமல்ல ; முதுகில் தாங்கிய காயமும் பல பாடங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கும் . நேருக்கு நேர் எதிர் கொள்ள வேண்டிய எதிர்ப்பு ,கண்டு கொள்ளாமல் புறந்தள்ள வேண்டிய எதிர்பு , எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டிய எதிர்ப்பு , நயவஞ்சகமாக பின்னப்பட்ட எதிர்ப்பு , நாமே உருவாக்கிக் கொண்ட எதிர்ப்பு , அவசரப்பட்டோ ஆசைப்பட்டோ அசுரகதியில் செயல்பட்டு சிக்கிக்கொண்ட நெருப்பு வளையம் , இப்படி எத்தனையோ உண்டு .அதைச் சரியாக இனங் காண்பதே வெற்றியின் முதல் படி .

எதிர்ப்பைக் கண்டு மலைக்கவும் கூடாது ; எதிர்ப்பை சரியாக எடை போடாமல் வலையில் சிக்கிக் கொள்ளவும் கூடாது .தடை தாண்டிய ஓட்டமே வெற்றிகரமான வாழ்க்கை என்பதறிக !
 Su Po Agathiyalingam
சொல்.59

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .59[ 28 /10/2018 ]

நாம் தெருவில் அல்லது அடுக்ககத்தில் இருக்கும் சிலரோடு ஓட்டிக் கொண்டே இருப்போம் . சிலரோடு மறந்தும் சிரிக்கவோ பேசவோகூட மாட்டோம் . நட்பு அல்லது பகை என இரண்டே நிலைகளில்தான் பொதுவாக நம் பழக்கம் இருக்கிறது .அலுவலகத்திலும் /பணியிடத்திலும் அப்படித்தான். சில காலம் நகமும் சதையுமாய் சேர்ந்தே இருந்தோர் பின்னர் எதிரும் புதிருமாய் நிற்பதும் , முகங் கொடுக்கவே தயங்குவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கும்.

நட்பு ,பகை என இரண்டைத் தவிர வேறுவகையான நிலை இருக்கவே முடியாதா ? ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கோப தாபத்தில் பிரிந்தவர் பிரிந்தேதான் இருக்க வேண்டுமா ?காலம் எவ்வளவோ காயங்களை ஆற்றிவிடும் ; நாமே கடந்த காலத்தை யோசித்துப் பார்த்தால் நம் தவறுகள் உறைக்கும் ;இதற்காகவா பிரிந்தோம் என நாமே வருந்துவோம் .ஆனாலும் வீம்பும் ,ஈகோவும் ஒப்புக் கொள்ளவோ மீண்டும் சேரவோ தடையாகிவிடும் .எத்தனை நட்பை இப்படி இழந்திருப்போம் ?

நட்பில் உரசல் ஏற்பட்டால் உடனடியாக எதிர்நிலைக்குப் போகாமல் கொஞ்சம் விலகி இடைவெளி விட்டு இருக்கலாமே ! பகை நிலை எடுக்க வேண்டாமே ! கறுப்பு ,வெள்ளை இரண்டுக்கும் இடையில் எத்தனை நிற அடுக்குகள் . மனித உறவிலும் ஏன் இருக்கக்கூடாது ?தோழர் ,நண்பர் ,தெரிந்தவர் ,பழகியவர் , அண்டை வீட்டார் ,தெருக்காரர் ,ஊர்க்காரர், உறவுக்காரர் இன்னும் விதவிதமாய் உறவிருக்கலாமே .

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியரை ஒரு முறை ரயிலில் சந்தித்தேன் .இருவரும் உடன் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்தனர் .அவர் அப்பெண்ணின் முன்னாள் காதலன் . மிக உயர்ந்த தளத்தில் உள்ள அந்தப் பண்பாடு என்னை வியக்க வைத்தது  . ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்பதால் பகைவராகத்தான் கருத வேண்டுமா என்ன ? நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது .

வியாபாரக் கூட்டாளியோ ,அரசியல் தோழரோ  தடம் மாறும் போது வலி அதிகம்தான் . மனித உறவைப் பேணிக்கொண்டே கொள்கைச் சண்டை நடத்துவதோ வியாபார போட்டியில் இறங்குவதோ இயலாததா என்ன ?

ஆம் .கறுப்பு ,வெள்ளை மட்டுமல்ல இடையில் பல வண்ணபேதம் இருக்கலாம் பிழையே இல்லை !!!
 Su Po Agathiyalingam
சொல்.58

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .58 [ 27 /10/2018 ]
குழந்தைகளுக்கு வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் ஏற்கப் பழக்குங்கள் .இப்படிச் சொன்னால் எதிர்மறையாகப் பேசுவதாக சிலர் கருதக்கூடும் . பாசிட்டிவ் பாசிட்டிவ் என ஒரு பக்கப் பார்வையை மட்டுமே மண்டையில் ஏற்றிவிட்டு ,பின் திடீர் தோல்வி வரும் போது துவண்டு போவதும் ; சில குழந்தைகள் தற்கொலைவரை போவதும் காண்கிறோம் . அப்படி பல அதிர்ச்சி சாவுகளைச் சந்தித்த அனுபவத்தில் சொல்லுகிறேன் , தோல்வியின் வலியையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கச் சொல்கிறேன் .

உங்கள் முகத்தில் கோபம் கொப்பளிப்பதைக் காண்கிறேன் . வகுப்பில் தோற்கச் சொல்கிறீர்களா ? இல்லை . முதலில் எப்போதும் ஃப்ர்ஸ்ட் ரேங்கில்தான் வரவேண்டும் எனச் சொல்வதை நிறுத்துங்கள் .முதலிடமோ அடுத்தடுத்த இடங்களோ எதுவாயினும் சரியே என சொல்லுங்கள் . இரண்டு , வெற்றி ,தோல்வி கவலையின்றி விளையாட்டு ,கலை ,இலக்கியம் என எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்கப் பழக்குங்கள் .

ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு மட்டம் தட்டவோ பாராட்டவோ வேண்டாம் .உங்கள் குழந்தையின் சிறிய முயற்சியையும் ஊக்கப்படுத்துங்கள் .விழுந்தால் எழ முடியும் என நம்பிக்கை ஊட்டுங்கள் .

உங்கள் குழந்தையோடு பயிலும் குழந்தை யாரேனும் தோற்றுவிட்டால் அவனோடு சேராதே எனச் சொல்லாதீர் .அந்தக் குழந்தைக்கு ஊக்கம் கொடுத்து அடுத்து முன் செல்ல வழிகாட்டுங்கள் .அதில் உங்கள் குழந்தையும் வாழ்க்கைப் பாடம் பெறுவார்கள் .

பள்ளிக்கு வெளியேயும் ஓர் உலகம் உண்டு .திருமணம் ,விழா,பயணம் ,எல்லாவற்றிலும் கற்க பாடம் உண்டு . எல்லா குழந்தையோடும் உங்கள் குழந்தை பழகட்டும் .நல்லதும் கெட்டதும் கற்கட்டும் .

எதையும் மறைக்காமல் தாய் தந்தையரோடு பரிமாற முடியும் என்கிற நம்பிக்கை ஒன்று இருந்தால் போதும் விழுந்தாலும் எழும் ஒவ்வொரு குழந்தையும் .
Su Po Agathiyalingam
சொல் .57

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .57 [ 26 /10/2018 ]

மாலை 5 மணி எனில் 4.55 க்கே வந்து விடுவார் .நேரம் தவறாமை அவரது அருங்குணம் எனச் சிலரைப் போற்றுவோம் . “அவரா ? கல்யாணத்துக்கு வரச் சொன்னால் பிள்ளை பிறந்த நாளுக்குத்தான் வருவார்!” என்பது சிலரைப் பற்றி நம் அபிப்பிராயம் .

நேர மேலாண்மையப் பொறுத்தவரை நம்மில் பெரும்பாலோர் சராசரிக்கும் கீழேதான் .நேரம் பற்றவில்லை என அங்கலாய்க்காதவர் குறைவு. நேரத்தை எப்படிக் கடத்துவது என்பது வேலையில்லாதவர்களுக்கும் ஓய்வுபெற்றவகளுக்கும் கவலை .

நீங்கள் எப்படி தலை கீழாக நின்றாலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் அதனைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது .அப்படியாயின் அதை செலவு செய்வதில் ஒரு திட்டம் இருக்க வேண்டுமா இல்லையா ? நம் பண்பாட்டில் அது இன்னும் பழகவில்லை . ராகு காலம் ,எம கண்டம் ,நல்ல நாள் , கெட்ட நாள் என நாளையும் பொழுதையும் விரயம் செய்வது எந்தவகையிலும் நியாயமில்லை .

நீங்கள் உரிய நேரத்துக்கு ஓர் இடத்துக்குப் போய்ச் சேர்வதோ தாமதமாவதோ போக்குவரத்து நெரிசலைப் பொறுத்தே அமையும் .எனினும் அதற்கும் உரிய வகையில் திட்டமிடல் வேண்டாமோ ? நீங்கள் தாமதம் ஆவதால் உரிய நேரத்தில் வந்தவர்களைத் தண்டிக்கிறோம் என்றே பொருள். உங்கள் தாமத குணத்தால் பிறர் தண்டிக்கப்படல் சரியோ

நேரநிர்வாகம் எனில் 24 மணி நேரம் அட்டவணை போட்டு சீரியஸாக உம்மணாம் மூஞ்சியாய் இருப்பதல்ல ; ஓய்வு ,உறக்கம் ,பொழுது போக்கு அரட்டை என எதையும் இழக்காமல் நாம் பங்கேற்க வேண்டியவற்றில் நேரம் தவறாமையே !இது ஒன்றும் பெரும் சவால் அல்ல .ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் போது பணி நேரத்தில் செல்ல பயிற்சி பெறுகிறோமே .அதுவேதான் .தனக்கு காரியம் ஆக வேண்டுமெனில் நேரம் காப்பதும் ;பொது எனில் தண்ணீர் ஊற்றுவதும் ஆகப்பெரும் தீய பழக்கம் .அது எங்கும் பல்கிப் பெருகி உள்ள வியாதி .

நேர நிர்வாகத்துக்கு பழகிப்பார் அதன் அருமை புரியும் .உடலுக்கும் மனதுக்கும் அது ஊக்க மருந்தாகும் .பழகப்பழக நம் BODY CLOCK எனப்படும் உடல் கடிகாரம் நம்மை இயக்கத் துவக்கிவிடும் . தாமதம் பெரும் வியாதி .நேரக் காத்தல் ஆரோக்கியத்தின் முதல்படி !
Su Po Agathiyalingam
சொல்.56

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .56 [ 25 /10/2018 ]

எம் திருமண் நாள் இன்று .சண்டையே போடாமல் 38 ஆண்டு இல்லறம் நடத்தினோம் என்று சொன்னால் அது பொய் . சண்டையும் சமரசமும்தான் வாழ்க்கை நியதி .

காதல் திருமணமோ ,ஏற்பாட்டுத் திருமணமோ எதுவாயினும் அழகு அல்லது ஏதேனும் ஒரு நல்லகூறு மட்டுமே முதலில் ஈர்க்கும் . ஆனால் வாழத் துவங்கிய பின்னரே பலவீனங்களும் குறைகளும் இருவருக்கும் பளிச்சிடும் .

இதனால் தொடக்கத்தில் இருந்த ஈர்ப்பு சில நேரம் வற்றி வெறுப்பும் மேலோங்கும் . அப்போதும் ஒரு சிக்கல் என்னவெனில் குற்றம் குறையற்ற ஒரு கற்பனை வாழ்வே இருவரின் குறியாய் இருக்கும் .

நூறு சதம் நாம் விரும்பியது போல் இன்னொருவர் இருக்க மாட்டார் .ஏன் நாமே நூறு சதம் இருக்கவே முடியாது .குற்றம் குறையில்லா மனிதரோ வாழ்வோ எங்கும் இல்லை .இதுவரை இல்லை .இனியும் இல்லை .

குறை நிறைகளோடு ஒருவரை ஒருவர் அங்கீகரிப்பதும் ;புரிந்து கொள்ள முயற்சிப்பதும் பெரும் போராட்டமே .சிலருக்கு அது விரைவில் கைக்கூடி விடும் .சிலருக்கு இழுபறியாகவே இருக்கும் .

இரு கை தட்டினால்தானே ஓசை எழும் .தாம்பத்தியம் சங்கீதம் ஆவதும் தப்புத்தாளம் ஆவதும் ஒருவர் பிழை மட்டுமல்ல .ஒருவர் பங்கு அதிகமாக இருக்கலாம் .இன்னொருவர் பங்கு குறைவாக இருக்கலாம் .அவ்வளவே…

சமூகச் சூழலையும், பொருளாதார நடப்பையும், பாலின சமத்துவத்தையும், குடும்ப ஜனநாயகத்தையும் புரிந்து கொள்ளும் போராட்டத்தினூடே நான் 38 ஆண்டுகளைக் கழித்துள்ளேன் .அதுதான் யாதார்த்தம் .

எல்லாம் கச்சிதமாக பொருந்தும் வாழ்க்கை என்பது வெறும் கனவே .புரிதலுக்கான போராட்டமும் ஒத்துழைப்புமே வாழ்க்கையின் வெற்றிச் சூத்திரம் .


 

 Su Po Agathiyalingam
சொல்.55

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .55 [ 24 /10/2018 ]
1968 ஆம் ஆண்டு எங்க குடும்பம் பிழைப்பு நிமித்தம் சென்னைக்கு இடம் பெயர்ந்த காலம் .நானும் குரோம்பேட்டை நேரு போர்டு உயர் நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்ந்த காலம் . பெரியாரைச் சந்திக்க ஆர்வம் கொண்டேன் . காரணம் நான் ஊரில் இருந்தபோதே பகுத்தறிவுவாதியாக மாறத் தொடங்கிவிட்டவன் .

மின்சார ரயில் ஏறி எழும்பூர் பெரியார் திடலுக்குச் சென்றேன் .பெரியாரைப் பார்க்க வதிருப்பதாய்ச் சொன்னேன் .அழைத்துப் போனார்கள் . பெரியார் என்னைப் பற்றி ,குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரித்தார் .

 “இப்பவே பகுத்தறிவா யோசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க ரொம்ப சந்தோஷம் .உங்க அம்மா அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க ,மொதல்ல நல்லா படியுங்க,அப்புறம் எல்லாம் பார்த்துக்கலாம்…” என்று சொல்லி என்னை வழி அனுப்ப அந்த வயதிலும் எழுந்தார் .நான் உணர்ச்சி வசப்பட்டேன் .முதுகைத் தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தார் .

நான் மெல்ல மெல்ல கம்யூணிஸ்ட்  ஆனேன் . பெரியார் ,அம்பேட்கர் தேவையை அன்றும் இன்றும் உள்வாங்கிபடியே கம்யூனிஸ்டாய் பயணம் தொடர்கிறேன் .யாராயினும் பயணம் தொடங்கிய இடத்திலேயே நிற்பதில்லை . எதெது இந்த சமூக அமைப்புக்குத் தேவையே எதெது சமூகம் முன்செல்ல தேவையோ அவற்றினூடே பயணிப்பது தவிர்க்க இயலாது.

ஆனால் திருநீற்றுப்பட்டை ,சிகப்பு பட்டுநூலில் கோர்த்த உத்திராட்சக் கொட்டை ,தலையில்முடிமுன்வெட்டு ,தேவாரம், திருவாசகம் என சைவப் பழமாய் வளர்க்கப்பட்ட சிறுவயதை அசைபோட்டுப் பார்க்கிறேன் .அதில் தேவாரம் ,திருவாசகம் ,வள்ளலார் வழி அறிந்த தமிழ் மட்டுமே என்னோடு இன்றும் தொடர்கிறது .

பொத்திப்பொத்தி வளர்த்தாலும் புத்தியைத் தீட்ட முயன்றால் முற்போக்கின் திசைவழி தவிர வேறில்லை . புத்தியை பக்திக்கு அடகு வைத்தால் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத் தவிர வேறு நாதியில்லை .முடிவு உங்கள் கையில் … இது என் அனுபவம் .உங்கள் அனுபவம் என்ன ?
Su Po Agathiyalingam
சொல்.54

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .54 [ 23 /10/2018 ]

அதே வார்த்தையைத்தான் அவரும் சொன்னார் ,இவரும் சொன்னார் அவர் சொன்னபோது சரி என தலையாட்டியதும் .இவர் சொல்லுகிற போது எரிச்சல் பொத்துக்கொண்டு வருவதும் ஏன் ?

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் , பீமன்  “ தம்பி !எரிதழல் கொண்டுவா !” என சினம் பொங்கக் கூறிய போது அர்ச்சுனன் கேட்பான் ,” எங்கு சொன்னாய் ? யாவர் முன் சொன்னாய் ?”” எனக் கேட்பான் .

ஆம் எதைச் சொன்னாய் என்பது மட்டுமல்ல அதை எங்கு சொன்னாய் என்பதும் யாவர் முன் சொன்னாய் என்பதும் முக்கியம் .கணவன் மனைவி பிணக்கில் அம்மா முன்பு மனைவியையோ , மனைவி முன்பு அம்மாவையோ சொல்லும் போது அதன் பரிமாணம் பல்கிப் பெருகிவிடுவதை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம் . இதே அனுபவம் பெண்ணுக்கும் உண்டு .

பேச்சு என்பது வெறும் சொற்களின் கூட்டு மட்டுமல்ல . எங்கு சொன்னாய் , யாவர் முன் சொன்னாய் , எப்போது சொன்னாய் , என்பதோடு ஏன் சொன்னாய் எப்படிச் சொன்னாய் என்பதும் மிக முக்கியம் .

பாடி லேங்குவேஜ் என இப்போது சொல்லும் உடல் மொழி மிக முக்கியம் . சொல்லும் பாணியும் முக்கியம் . ஒரே சொல் அன்பாய் சொன்னதா அல்லது எரிச்சலாய் சொன்னதா என்பதை அவையே தீர்மானிக்கும் .

ஆக ,சொல்லும் முறையில் அன்பு ,கோபம் ,உறுதி , வெறுப்பு , மகிழ்ச்சி , சும்மா என எத்தனை அர்த்தம் பொதிந்து வழங்க முடியும் . ஆக பேசும் கலை என்பது வாழும் கலையின் இன்னொரு முகமே !

பேசப்பழகு என்பதன் பொருள் இடம் ,பொருள் ,ஏவல் என எல்லாம் உணர்ந்து பேசப்பழகு என்பதே ! இதன் நுடபம் அறியாது பேசிவிட்டு பின் சிக்கலில் மாட்டி முழிப்பதும் நம் அனுபவம் அல்லவா ? இனியேனும் பேச்சை வெறும் பேச்சென ஒதுக்காமல் பேசப் பழகுக !
Su Po Agathiyalingam
சொல்.53

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .53 [ 22 /10/2018 ]

விதவிதமான டிசைன்களில் பல்வேறு வண்ணங்களில் வரிசையாய் புடவைகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன அந்த ஜவுளிக் கடையில் . ஒரு பெண் முகத்தைச் சுழித்து ஒதுக்கும் ஒன்றை இன்னொரு பெண் ரசித்து அணைக்கிறாள் . ஒருத்தி ரசித்து எடுக்கும் ஒரு புடவையை இன்னொருத்தி இது என்ன ரசனையோ என முணுமுணுக்கிறாள் .பெண்கள் மட்டுமல்ல ஆண்களின் தேர்விலும் இது போன்றே நிகழும் .

சிலருக்கு பளிச் நிறங்களில் ஒரு ஈர்ப்பு இருக்கும் .வேறு சிலரோ உறுத்தாத நிறமாக எடுங்கள் என்பர் . நான் இளைஞனாக இருந்த போது வேலைதேடி செல்கையில் சிவப்பு ,கறுப்பு ,பச்சை என அடர் நிறங்களை தவிர்க்க யோசனை சொல்வர் . இப்போது  கணினி ஊழியர் மட்டுமல்ல உயர் பதவியில் இருப்பவர்களும் இது போன்ற நிறங்களை விரும்பி அணியக் காண்கிறோம் . கணினியின் வருகை நிறம் குறித்த பார்வையை உடைத் தெறிந்துவிட்டதோ ?

கிராமத்துக்கும் நகரத்துக்கும் , கணவனுக்கும் மனைவிக்கும் ,அப்பாவுக்கும் மகனுக்கும் ,அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே போல் ரசனை அமைவது அபூர்வம் .பள்ளியில் /அலுவலகத்தில் சீருடையில் இருப்போருக்கு ஒரு நாள் விதிவிலக்கு எனில் கொண்டாட்டமே !குழந்தையின் ஈர்ப்பு இளைமையில் மாறும் ,முதுமை இன்னொன்றை நாடும் .காலந்தோறும் ரசனை மாறிக்கொண்டே இருக்கும் .

பெரும் பொருட் செலவில் விளம்பரம் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட நிறமும் டிசைனும் கூட ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரையே ஈர்க்கும் . எது உயர்ந்த ரசனை ? எது தாழ்ந்த ரசனை ? அளவு கோல் எது ? எது வளமான பண்பாடு ? எது வறண்ட பண்பாடு ? சொல்ல முடியுமா ?

ஒருபோதும் ஒற்றை ரசனை சாத்தியமே இல்லை .ஒரு ஜவுளிக்கடையில் இவ்வளவு வண்ண வேற்றுமை ரசனை எனில் காலங்காலமாக முகிழ்த்த பண்பாட்டில் எவ்வளவு இருக்கும் ! எங்கும் ஒற்றைப் பார்வை எப்போதும் இல்லை !விதவிதமாய் மனிதர் ! ஒவ்வொருவரையும் ரசிப்போம் ! மகிழ்ந்து கூடிக் குலாவுவோம் ! சரிதானே !

Su Po Agathiyalingam
சொல்.52

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .52 [ 20 /10/2018 ]

என் தாத்தா குடுமியையும் தலைமுடி முன்வெட்டையும் மாற்றி கிராப்புக்கு மாறியபோது வீடே அல்லோகலப்பட்டதாம் . குடியே மூழ்கிவிட்டதாய் அவரது தாத்தாவும் பாட்டியும் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்களாம் . இத்தனைக்கும் எம் குடும்பம் பிராமணர் அல்ல .

என் பாட்டி ஜாக்கெட் போட்ட போதும் அதே ஆர்ப்பாட்டம்தான் .

என் அப்பா பெரிய வெங்காயத்தில் தயிர் பச்சடி செய்யச் சொன்னபோதும் ;என் அம்மா அதை செய்த போதும் வீட்டுக்குள் பூகம்பமே வெடித்தது . முட்டை வீட்டுக்குள் நுழைந்த போதும் அப்படித்தான் .

வீட்டுக்குள் கக்கூஸ் கட்டலாமா வேண்டாமா என்பதற்காக நடந்த சண்டை கொஞ்சமா ?

அக்கா வயதுக்கு வந்த பின்னும் பள்ளிக்கு அனுப்ப [ ஐம்பது அறுபது வருசங்கள் முன்பு ] அப்பா ஆச்சியோடு முட்டி மோதியது நினைவில் இருக்கிற்து ஆனாலும் எட்டாம் வகுப்பைத் தாண்டவிடவில்லை .

ஐயர் பையன் லெதர் டெக்னாலஜி படிப்பதும் ; அருந்ததியர் மகள் முட்டி மோதி டாக்டராவதும் மரபை மீறித்தானே ! கணித மேதை ராமானுஜம் வெளிநாடு போனதற்காக அவர் இறந்த போது இறுதிக்கடன் செய்ய சக ஐயர்கள் மறுத்ததும் , அவர் மனைவி கிராமம் கிராமமாய் ஓடி ஒழிந்து செய்ததும் .வரலாறு .இன்று அத்திம்பேர் ஆஸ்திரேலியா ,அண்ணா யூஎஸ் என பீத்திக் கொள்வது மரபை மதித்தால் கிடைக்குமா ?

வீட்டுக்குள் எவ்வளவு மாற்றம் ? கோயிலும் வழிபாடும் மாறாமலா இருந்திருக்கிறது ? சைவமும் வைணவமும் போட்ட சண்டை கொஞ்சமா ? இப்போது மிச்ச சொச்சம் அங்கொன்று இங்கொண்று உண்டு . ஆயினும் எல்லா கோயிலுக்கும் எல்லோரும் போவர் .

மாறாத மரபோ .சடங்கோ ,சம்பிரதாயமோ ,பழக்க வழக்கமோ என்றும் எங்கும் எப்போதும் இல்லை ,மாற்றங்கள் நிகழும் போதெல்லாம் பழமைவாதிகள் முட்டி மோதுவர் . ஆனாம் புதுமையே வெல்லும் ,பழமை வீழும் .
சொல்.51

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .51 [ 19 /10/2018 ]

என் நண்பர் ஒருவர் ஒரு முறை உரையாடும் போது வேதனையோடு சொன்னார்   பாலின சமத்துவத்தை நானும் ஏற்கிறேன் .அதன் பக்கம் உறுதியாக நிற்கிறேன் . .ஆனால் குடும்பத்தில் பெண்கள் செய்வதெல்லாம் நியாயமா ? கண்மூடி ஆதரிப்பது சரியா ?” என வெடித்ததோடு அவருக்கு ஏற்பட்ட பல கசப்பான அனுபங்களைப் பகிர்ந்தார் .

மெய்தான் . பெண்களின் சில பிடிவாதங்கள் பிழையான புரிதலோடு இருப்பது கண்கூடு .அவற்றை மாதர் இயக்கங்கள் தக்க முறையில் சுட்டிக்காட்ட வேண்டும் .எடுத்துக்காட்டாக ,சடங்கு ,சம்பிரதாயம் ,பூஜை , மூடநம்பிக்கைகள் ,கரடுதட்டிப்போன பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தொடர்ந்து பேணிக்காப்பதில் பெண்களின் பங்கு மிகப்பெரிது .இவற்றுக்கு எதிராக மாதர் இயக்கங்கள் சமரசமற்ற விழிப்புணர்வு முயற்சியை தொடர வேண்டும் . ஐயமே இல்லை .

குடும்பத்தை நிர்வகிப்பதில் கணவன் ,மனைவி இருவரும் சம பொறுப்பாளர்கள் .குடும்ப பட்ஜெட் , குழந்தை வளர்ப்பு ,உள்ளிட்ட எதுவாயினும் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் .ஆனால் நிர்வாகத்தில் டிரான்ஸ்பரன்ஸி அதாவது வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே இது சாத்தியம் .இரு பக்கமும் ஹிட்டன் அஜெண்டா அதாவது மறைமுக காய்நகர்த்தல் இருப்பின் குடும்ப ஜனநாயகம் வெறும் பேச்சாகவே இருக்கும் .இதில் ஆணின் குறைகளைச் சுட்டுவதுபோல் பெண்ணின் பக்கம் உள்ள குறைகளையும் எடுத்துச் சொல்வது பிழையே அல்ல .தேவையே !

ஆணாதிக்கம் என்பது ஆணிடம் மட்டுமே உள்ள தீய குணமல்ல . ஆணாதிக்கம் என்பது சமூகம் குறித்தும் குடும்பம் குறித்தும் ஆணை மையப்படுத்திய ஆதிக்க மனோநிலையாகும் .இது ஆணிடம் ஓங்கி இருக்கும் .பெண்ணிடமும் அவளின் பல பேச்சுகளில் செயல்களில் வெளிப்படும் .ஆதிக்க மனோநிலையை யார் வெளிப்படுத்தினும் குற்றம் குற்றமே !

பாலின சமத்துவத்தில் துளியும் பிசகக்கூடாது  . அதேவேளை அநீதி ,அராஜகம் ,அறியாமை எங்கு யாரிடம் வெளிப்படினும் – ஆணிடம் ஆயினும் பெண்ணிடம் ஆயினும் எடுத்துரைக்க தயங்கவே கூடாது .இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரி அல்ல ; நடைமுறையில் ஆதிக்கத்திற்கு எதிரான இரட்டைக்குழல் துப்பாக்கியே ஆகும் !