சொல்.39

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .39 [ 7 /10/2018 ]

சிலர் பார்த்த முதல் நாளிலேயே கலகலப்பாய்ப் பழகத் துவங்கிவிடுவார்கள் .இன்னும் சிலர் பழகவே கூலி கேட்பார்கள் . சிலர் எப்போதும் முகத்தில் புன்னகை தழுவ இருப்பார்கள் .இன்னும் சிலரோ காங்கிரீட் மூஞ்சி என்பதுபோல் இறுக்கமாய் இருப்பார்கள் .

யாரையும் முதல் நாளிலேயே எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது .பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதுபோல் சிலர் உறவு ஆகிவிடும் . தேய்க்க தேய்க்க மணக்கும் சந்தணமாய் சிலர் உறவு மேம்படும் .

வெளித் தோற்றத்தைக் கொண்டோ , பகட்டுப் பேச்சைக் கொண்டோ எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது . யாரையும் எடைபோட்டுப் பார்க்க எந்தத் தராசும் இதுவரை கண்டிபிடிக்கப் படவில்லை .

தொடர்ந்து பழகுவதன் மூலமும் , மனம் திறந்த உரையாடலின் மூலமுமே ஓரளவு சாத்தியம் .அதிலும் ஒருத்தரைப் போல் இன்னொருவர் ஒரு போதும் இருக்கமாட்டார் . ஆயிரம் பேர் இருப்பின் ஆயிரம் விதமாகவே இருப்பர் .

குறையில்லா மனிதர் யாருமில்லை . குறை ,நிறை இரண்டும் கலந்தே ஒவ்வொருவரும் இருப்பர் . தர முத்திரையோடு யாரும் உலவுவது சாத்தியமில்லை . நிபந்தனையற்ற அன்பே இதயங்களை ஒட்டவைக்கும் .

லாபக் கணக்கு போட்டு யாரும் யாரோடும் பழகாதீர் .அது நட்பல்ல .வியாபாரம் .உடுக்கை இழந்தவன் கையாய் உதவிக்கு முந்துவீர் ! அன்பின் வலுவும் வலியும் மிகப்பெரிது .
0 comments :

Post a Comment