சொல்.54

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .54 [ 23 /10/2018 ]

அதே வார்த்தையைத்தான் அவரும் சொன்னார் ,இவரும் சொன்னார் அவர் சொன்னபோது சரி என தலையாட்டியதும் .இவர் சொல்லுகிற போது எரிச்சல் பொத்துக்கொண்டு வருவதும் ஏன் ?

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் , பீமன்  “ தம்பி !எரிதழல் கொண்டுவா !” என சினம் பொங்கக் கூறிய போது அர்ச்சுனன் கேட்பான் ,” எங்கு சொன்னாய் ? யாவர் முன் சொன்னாய் ?”” எனக் கேட்பான் .

ஆம் எதைச் சொன்னாய் என்பது மட்டுமல்ல அதை எங்கு சொன்னாய் என்பதும் யாவர் முன் சொன்னாய் என்பதும் முக்கியம் .கணவன் மனைவி பிணக்கில் அம்மா முன்பு மனைவியையோ , மனைவி முன்பு அம்மாவையோ சொல்லும் போது அதன் பரிமாணம் பல்கிப் பெருகிவிடுவதை ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம் . இதே அனுபவம் பெண்ணுக்கும் உண்டு .

பேச்சு என்பது வெறும் சொற்களின் கூட்டு மட்டுமல்ல . எங்கு சொன்னாய் , யாவர் முன் சொன்னாய் , எப்போது சொன்னாய் , என்பதோடு ஏன் சொன்னாய் எப்படிச் சொன்னாய் என்பதும் மிக முக்கியம் .

பாடி லேங்குவேஜ் என இப்போது சொல்லும் உடல் மொழி மிக முக்கியம் . சொல்லும் பாணியும் முக்கியம் . ஒரே சொல் அன்பாய் சொன்னதா அல்லது எரிச்சலாய் சொன்னதா என்பதை அவையே தீர்மானிக்கும் .

ஆக ,சொல்லும் முறையில் அன்பு ,கோபம் ,உறுதி , வெறுப்பு , மகிழ்ச்சி , சும்மா என எத்தனை அர்த்தம் பொதிந்து வழங்க முடியும் . ஆக பேசும் கலை என்பது வாழும் கலையின் இன்னொரு முகமே !

பேசப்பழகு என்பதன் பொருள் இடம் ,பொருள் ,ஏவல் என எல்லாம் உணர்ந்து பேசப்பழகு என்பதே ! இதன் நுடபம் அறியாது பேசிவிட்டு பின் சிக்கலில் மாட்டி முழிப்பதும் நம் அனுபவம் அல்லவா ? இனியேனும் பேச்சை வெறும் பேச்சென ஒதுக்காமல் பேசப் பழகுக !
Su Po Agathiyalingam
0 comments :

Post a Comment