அவர்கள் பேசட்டும் ..

Posted by அகத்தீ Labels:Top of Form
Bottom of Form


பேசட்டும் அவர்கள் !!!
============================

பேசட்டும் அவர்கள் !
வெளிப்படுவது ஆணவமோ அறியாமையோ மட்டுமல்ல ,
நரம்பில் குருதியில் உறைந்து போயுள்ள
ஆணாதிக்கத் திமிரும் கூட

அவர்கள் தானாகவா பேசினார்கள் ?
இல்லவே ! இல்லை!
பிறந்தது முதல் மூளையில் தூவப்பட்ட ஆதிக்க விதை
போதனைகளால் கதைகளால் செயல்களால்
உரம்போட்டு நீர்பாய்ச்சி ஊட்டிவளர்த்த விஷச்சிந்தனை
திரும்பும் இடமெல்லாம் திரும்பத் திரும்பத்
திணிக்கப்பட்ட கருத்துருவாக்கம்.

பேசியது அவர்கள் மட்டுமா ?
லோககுருக்கள் , சந்நியாசிகள்
முல்லாக்கள் , பாதிரிமார்கள் ,
கலாச்சார வேஷமிடும் அடியாட்கள்
அரைடவுஸர் ஆசாமிகள்
எல்லோரும்தான் ..

அவர்களை பேசவைத்தது யாரோ அல்ல ? எதுவோ அல்ல
பெண்கள் பாவயோனியில் பிறந்தவரென்றிடும்
கீதா உபதேசம்
பெண்ணை ஆணுக்கு கீழ்படிந்தவரென்றிடும்
வேதாகமம்
பெண்ணை ஆணுக்கு கீழ்படிந்தவராக்கிய
குரான்
பெண்ணை மாயப்பிசாசமாய் சித்தரித்த
சமய போதனைகள்
எல்லாம் எல்லாம்தான்


பேசட்டும் அவர்கள் !
வெளிப்படுவது ஆணவமோ அறியாமையோ மட்டுமல்ல ,
நரம்பில் குருதியில் உறைந்து போயுள்ள
ஆணாதிக்கத் திமிரும் கூட
அவர்கள் பேச்சு


சமூகத்தின் மனச்சாட்சியைக் கிளறிவிடுமோ ?
சமூகத்தின் பொதுபுத்தியை உசுப்பிவிடுமோ ?
நடக்கட்டுமே !
தயவு செய்து தடுக்க வேண்டாம் !
வெறுமே உதட்டை அசைப்பதைவிட
உடைத்துப் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது !
அனைத்தையும்
உலுக்கித் தள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது !
இப்போதே தொடங்குக !
இனியும் வேண்டாம் தாமதம் !


-
சு.பொ.அகத்தியலிங்கம்

பிரட் அண்ட் ரோசஸ்

Posted by அகத்தீ Labels:


பிரட் அண்ட் ரோசஸ்`இறைவனுக்கும் , இயற்கைக்கும் எதிராய் நீ  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாய் . ஆணின் வெற்றி வியர்வையிலிருந்து தனது ரொட்டியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்ற நீதியின் கோட்பாட்டுக்கு எதிராகவும் , இறைவனுக்கு எதிராகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாய்


இப்படித்தான் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்வெட்ஷாப் நிறுவனப் பெண் ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார் . இது நடந்தது 1909 . இடம் நியூயார்க்.  .அந்தக் காலம் எவ்வளவு அடக்குமுறைகளின் களமாக இருந்த்து என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?


மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் எவருடைய கருணைக் கொடையுமல்ல . போராட்டக் களத்தில் பூத்தது . குருதிச் சேற்றில் மலர்ந்தது . இதற்கு நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு .


தாங்கொணா கொடுமைகளை எதிர்த்து 1920ல் நியூ இங்கிலாந்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றபோது முதலில் அதிர்ச்சி ஏற்பட்டது ; இது சரியா என விவாதக்களம் சூடானது .1834 ல்  மகாச்சூட்டிலும் ; மீண்டும் 1844 லிலும் ; மீண்டும் 1857 மார்ச் 8 ல் நியூயார்க் நகரத்தில் பேரணி இப்படி தோல்விகளைப் புறந்தள்ளி துணிச்சலுடன் மீண்டும் மீண்டும் பெண்கள் எழுந்தனர் .


51 ஆண்டுகள் இடையே கனத்த மவுனம் ; ஆனால் போர் கங்குகள் உள்ளுக்குள் கனந்து கொண்டே இருந்தது .1908 மற்றும் 1909 மார்ச் 8 பல்லாயிரம் பெண்
களின் அணிவகுப்பும் போர்முழக்கமும் ஐரோப்பாவையே கிடுகிடுக்க வைத்தது .


1909 ஆண்டு உறையவைக்கும் குளிரைத் தாங்கிக் கொண்டு 16 லிருந்து 25 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 13 வாரங்கள் நடத்திய மறியல் போர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியது . அந்தப் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் நீதிபதி சொன்னதையே முதலில் படித்தோம் . இப்போராட்டத்தின் வீச்சால் கவரப்பட்ட நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணாட்ஷா  ஆதரவுத் தந்தி அனுப்பினார் . அரசு இயந்திரம் போராட்டத்தை நசுக்கியது .

1911 மார்ச் 25ல் நடந்த சம்பவம் உலகின் மனச்சாட்சிக்கு பெரும் சவாலானது . பெண்கள் வேலைதளத்தில் எந்த அடிப்படை வசதியுமின்றி 16 மணிநேரம் 18 மணி நேரம் உழைக்கக் கட்டாயப்படுத்தப் பட்டனர் . பெண்கள் வேலைப் பளு தாங்காமல் வெளியேறிவிடக்கூடாது என்பதற்காக ஆலையே வெளியே பூட்டப்படும் . அப்படி பூட்டப்பட்ட ட்ராயாங்க் ஆயத்த ஆடை தொழிலகத்தில் தீப்பிடித்தது . 16 லிருந்து 25 வயதுக்குட்பட்ட 146 இளம் பெண்கள் எரிந்து சாம்பலாயினர் .


கடந்த ஒரிரு ஆண்டுகளுக்கு முன் இது போல் வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலகத்தில் பற்றி எரிந்த தீயில் 300 பெண்கள் கருகினர் . கொடுமை தொடர்கிறது .

80களின் துவக்கத்தில் சென்னையில் ஆயத்த ஆடை நிறுவனங்களில் நடந்த வேலநிறுத்தங்கள்  சிஐடியு தோழர்கள் நெஞ்சில் இன்னும் கனந்து கொண்டிருக்கும் .


1910 மார்ச் 8 அமெரிக்க மான்ஹெட்டன் நகரில் பல்லாயிரம் பெண்தொழிலாளர்கள் வீதியில் கோப ஆவேசத்துடன் திரண்டனர் .தொழிலாளர் உரிமையுடன் பெண்களுக்கான வாக்குரிமையும் கோரிக்கை முழக்கமானது .


எங்களுக்கு ரொட்டியோடு ரோஜாவும் வேண்டும்இப்பாடல் இன்றும் சர்வதேச பெண்களின் இதயகீதமாகவே உள்ளது . லாரென்ஸ் டெக்ஸ்டைல்ஸ் போராட்ட களத்தில் பெண்கள் முழங்கிய பாடல் இது ;


அழகான நாளில் நாங்கள் ஆணிவகுக்கும் வேளையில்
ஆயிரம் ஆயிரம் இருண்ட சமையலறைகளும்
சாம்பல் நிறத்தில் ஓங்கி நின்ற எந்திர ஆலைகளும்
திடீரெனத் தகிக்கும் சூரிய பட்டொளியில் 
உணர்ச்சி கொப்பளிக்க பாடுகிறோம் 
கேட்போர் நடுங்க உரக்கப் பாடுகிறோம்
பிரட் அண்ட் ரோஜஸ் ! பிரட் அண்ட் ரோஜஸ் 


நாங்கள் அணிவகுத்து முன்னேறியே 
இனிய நாட்களை எமதாக்குவோம் !
பெண்கள் எழுவதெனில் 
இனமே எழுந்ததாய் பொருளாகும்
அடிமைத்தனம் இனி இல்லை !
சோம்பேறிகளுக்கு இடமில்லை !
வெட்டியாய் ஒருவன் சுகித்திருக்க
பலபேர் உழைப்பதும் இனியில்லை!
இனி  வாழ்க்கை என்பது
மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வதே !
பிரட் அண்ட் ரோஜஸ் ! பிரட் அண்ட் ரோஜஸ்!”


1910 ல் கோபென்கெகனில் நடைபெற்ற சர்வதேச  சோஷலிசப் பெண்கள் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் முன்மொழிந்த தீர்மானதை நூறு பெண் பிரதிநிதிகள் வழிமொழிய மார்ச் 8 சர்வதேசப் பெண்கள் தினம் உருவானது .


ஆணாதிக்கத்தை எதிர்த்து விடாது போரிட்டலெனினோடு கூட இதற்காக வாதிட்ட கிளார ஜெட்கின் ,பாசிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட   ரோசா லுக்சம்பர்க் உப்பட பலரின் தன்னலமற்ற உழைப்பில் ஜனித்த இத்தினம் உழைக்கும் பெண்களின் சமத்துவத்துக்காகவே பிரகடனப் படித்தப்பட்டது . காலவெளியில் இது உலக மகளிதினமாக விரிந்து செழித்தது .


பெயரிலி ஆம் அனாமிகா ஆம் நாமம் அற்றவள் .. ஒரு ஆப்பிரிக்கப் பெண்ணில் லண்டாய் கவிதைவரிகள் சிலவற்றை இங்கே இப்போது உரக்கப் பாடுவோம் :
 “ என் குரலற்ற குரல் உயரும்போது
கவிதைக் காட்சிகளைப் பார்ப்பாய் !
அக்குரலுக்குப் பின்னே
ஆயிரம் ஆயிரம் குரல்களைக் கேட்பாய் !
காயப்பட்ட இதயம் வெடிக்கும் போது
துயரில் தோய்ந்த சொற்கள் வெடிக்கும் !
நீ கேட்பாய் ! நீ கேட்பாய் !
கேட்கப்படாத 
ஆயிரம் ஆயிரம் என் பாடல்களை 
நீ கேட்பாய் ! நீ கேட்பாய் …..”


நன்றி : இளைஞர் முழக்கம் மார்ச் 2015 இதழ் – சு.பொ.அகத்தியலிங்கம் .