ஆத்மா - வாள் - மூளை: ஐக்கிய இத்தாலி

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி -34


ஆத்மா - வாள் - மூளை:
ஐக்கிய இத்தாலி

சு.பொ.அகத்தியலிங்கம்இயக்கத்தில் சேர்ந்தால்
தலை துண்டிக்கப்படும்
என்கிற முடியரசின் மூர்க்க கட்டளையும் மீறி
இளைஞர்கள் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்தனர்


மலைகளுக்குச் செல்லுங்கள்!
ஆலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் செல்லுங்கள்!
அவர்களுடன் உணவருந்துங்கள்!
அவர்களது உரிமைகளைப்பற்றிப் பேசுங்கள்!
அவர்கள் மீதான எல்லையற்ற அடக்குமுறைகளை உணரவையுங்கள்.”இந்தக்குரல் இத்தாலியை சிலிர்த்தெழத் தூண்டியது .19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஸ்பெயின், ஆஸ்திரியா, போப், குறுநிலமன்னர்கள் ஆதிக்கம் என துண்டுதுண்டாய்க் கிடந்த நாட்டை இணைத்து ‘ஐக்கிய இத்தாலி’யை உருவாக்க கனவு கண்டு சாதித்துக் காட்டியவர் மூவர்.இத்தாலியின் ‘ஆத்மா’ மாஜினி; ‘வாள்’கரிபால்டி; ‘மூளை’ காவூர் என தன் கவிதையில் புகழ்மாலை சூட்டினார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரி-டித் .கார்போனாரி (கரி எரிப்போர்) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலிய விடுதலைக்காக உழைத்தனர். 16ஆம் வயதிலேயே இந்த இயக்கம் மாஜினியை கவர்ந்தது. 1829 இல் அந்த ரகசிய இயக்கத்தின் உறுப்பினர் ஆனார். 1830 இல் அதற்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது கைதானார்; ஆறு மாதம் தண்டனை பெற்று, ஸாவோனா சிறையில் அடைக்கப்பட்டார் .  “இளம் இத்தாலி” எனும்  இயக்கம் காணத் திட்டம் தீட்டினார்.நாடு கடத்தப்பட்டார்.நாடுநாடாய் திரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . 1832இல் “இளம் இத்தாலி” எனும் பெயரில் இதழ் ஒன்றும், அதே பெயரில் தம் நாட்டின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் ஓர் அமைப்பும் தொடங்கினார்.ஆஸ்திரிய அமைச்சர் “ஒன்றுபட்ட இத்தாலி என்பது புவியியல் மாயை” என கூறியபோது “ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது, இளம் இத்தாலியர்கள் அதை சாதித்து காட்டுவார்கள்” என மாஜினி நம்பிக்கையை எங்கும் விதைத்தார்.‘தேசம் என்பது வெறும் எல்லைக் கோடல்ல. மண்ணும் கட்டடங்களும் மட்டுமே தேசமல்ல. மக்களின் பாசமும் நேசமும் பிசைந்த உணர்வில் கலந்த ஒரு மாபெரும் கருத்தாக்கம். உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு.’ என்கிற மாஜினியின் வரையறை உத்வேகத்தை அளித்தது .இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன கவித்துவமான வரிகள் மாஜினியுடையது ; மந்திரச் சொல்லாய் இளைஞர்களை முடுக்கிவிட்டது .இயக்கத்தில் சேர்ந்தால் தலை துண்டிக்கப்படும் என்கிற முடியரசின் மூர்க்கக் கட்டளையும் மீறி இளைஞர்கள் ’இளம் இத்தாலி’ இயக்கத்தில் சேர்ந்தனர் . மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவரும் காலம் வரை ஐரோப்பிய இளைஞர்களின் ஈர்ப்பாக விளங்கியவர் மாஜினியே. கம்யூனிஸ்ட் அகிலத்தில் மாஜினியின் கருத்தோட்டம் வலுவாக இருந்ததையும்; அவரது சீடர் லூயிஜி ஒல்ப் நகல் அமைப்பு விதிகளை முன்மொழிந்ததையும் அதில் எல்லா இடத்திலேயும் மாஜினியே எட்டிப்பார்த்ததையும்; தெளிவற்ற பிரெஞ்சு சோசலிசமே மூக்கை நுழைத்ததையும் தன் சகா ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.“ஜெர்மனியைப் போலவே இத்தாலியும் புரட்சிகர ஜனநாயக வழியில் ஒன்றுபடவேண்டும். நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பைக் காட்டிலும் புரட்சிகர ஜனநாயக முறையிலான ஒருங்கிணைப்பே உறுதியானது, சரியானது…1820 தொடங்கி ஆஸ்திரியா இத்தாலியை வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் ஆண்டு வருகிறது’….. இதற்கு ஒரே தீர்வு , ‘ஆஸ்திரியாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது.’ இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்கும் இது பொருந்தும்” என்றார் ஏங்கெல்ஸ்.1849இல் சார்டீனியாவின் புதிய மன்னராக, விக்டர் இமானுவல் பொறுப்பேற்றார். காவூர் எனும் ராஜதந்திரி, 1851 இல் அவருடைய பிரதமர் ஆனார். காவூர் ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கி இமானுவேலுக்கு முடி சூட்டிப் பார்க்க ஆசைப்பட்டார். காவூர் சூழ்ச்சி செய்து பிரெஞ்சு நாட்டில் நெப்போலியனுக்கும் ஆஸ்திரியாவுக்கும் சிண்டு முடிந்துவிட்டார். 1859 இல் இது நிகழ்ந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர். இந்த சந்தர்ப்பத்தைக் கரிபால்டி பயன்படுத்தி நேபிள்ஸ் - சிசிலி மீது படை எடுத்தார் .1859ஆம் ஆண்டு பிரான்ஸும் பிட்மாண்டும் போரிட்டுக் கொண்டன.இந்தப் போர் இத்தாலியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிகள் தேசிய விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்றாம் நெப்போலியன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏப்ரல் 1860 இல் சிசிலியில் இன்னொரு எழுச்சி ஏற்பட்டது. மே மாதம் கரிபால்டி தலைமையில் தன்னார்வலர்களின் பெரும்படை ஒன்று புறப்பட்டு தெற்கு நோக்கிச் சென்றது. கிராமங்களூடே செல்லும் போது ‘வாருங்கள், என் படையில் சேருங்கள். வீரமுரசு ஆர்க்கும்போது வீட்டுக்குள்ளிருப்பவன் கோழை. உங்களுக்கு நான் போரும் துன்பமும் களைப்பும் அளிக்கிறேன். ஒன்று நாம் வெல்வோம் அல்லது வீழ்வோம்.’ என கரிபால்டி முழக்கமிட்டார். இத்தாலிய இளைஞர்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் இழுத்து வந்தது இந்த அழைப்பு.


ஏராளமானோர் படையில் சேர்ந்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி, கரிபால்டியின் படை நேபிள்ஸில் நுழைந்த போது வெற்றி கண்களுக்குத் தெரிந்தது. விரைவில் தெற்கு இத்தாலி விடுவிக்கப்பட்டது.ஏங்கெல்ஸ் கரிபால்டியை வெகுவாகப் புகழ்ந்தார். கரிபால்டியின் அசாதாரணமான ராணுவத் திறனையும், செயல்திட்டத்தையும் ஏங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ‘ஆயிரம் பேரைக் கொண்டு நேபிள்ஸை கரிபால்டி வீழ்த்தியிருக்கிறார். போனபார்ட்டின் அரசியலை முறியடித்து, இத்தாலியை ஒருங்கிணைத்திருக்கிறார்’ என்றார்.காவூரின் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கையாலும், கரிபால்டி மற்றும் அவருடைய வீரர்களின் தாக்குதலாலும், மாஜினியின் பிரச்சாரத்தாலும், ஒத்துழைப்பாலும் இத்தாலி படிப்படியாக விடுதலை பெற்றது.இருப்பினும் மாஜினி விரும்பியதுபோல் அது குடியரசு ஆகவில்லை; 1871-இல் ரோமைத் தலைநகராகக் கொண்டு முடியரசாகவே மலர்ந்தது.கரிபால்டி உருவாக்கிய தொண்டர் படையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர், ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் ‘ஹீரோ ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’ என்று போற்றப்பட்ட கரிபால்டி 74 வயதில் மறைந்தார். தாம் பிறந்த ஜெனோவாவிற்குத் தெற்கில் உள்ள பைசா நகரில் 1872 மார்ச் 10இல் மாஜினி இயற்கை எய்தினார். ஆங்கிலக் கவிஞர்களான ஸ்வின்பர்ன், மெரிடித், எலிசபெத் பாரட் பிரெளனிங் ஆகியோரின் கவிதைகள் நெஞ்சை ஈர்ப்பன. ஸ்வின் பர்ன் எழுதிய “ரோமாபுரிக்கு முன் தங்குதல்” [THE HALT BEFORE ROME ] எனும் நெடுங்கவிதை காவியமாகும். கிரீஸ் விடுதலை போரை கவிஞர் பைரன் பாராட்டுவார்.உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போரை பாராட்டும் ஆங்கிலக் கவிஞர்கள் தங்கள் நாட்டு அரசென வந்தால் பேசா மடந்தை ஆகிவிடும் இரட்டை நிலையை ஜவஹர்லால் நேரு தன் நூலில் பகடி செய்வார். இங்கிலாந்துக்கு பக்கத்திலுள்ள ஐரீஸ் விடுதலை, தொலைதூர இத்தாலி, இந்திய விடுதலை எனில் மாக்சிம் துப்பாக்கியும் வெடி குண்டுகளும் அனுப்புவதைக் கண்டு கொள்ளாதது ஏன் என்பது அவரது ஆதங்கம்.புரட்சி தொடரும்...

நன்றி ; தீக்கதிர் , 26/05/2016


புரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி -33 புரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்


சு.பொ.அகத்தியலிங்கம் 166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது. 
உலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது. 
இன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட 
சில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்; 
ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்; 

தத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.
“கடந்த மாநாட்டில் ஒப்புக் கொண்டவாறு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 ஆம் தேதி - செவ்வாய்க் கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இதனை அவருக்குத் தெரியப்படுத்துமாறு பிரெஸ்ஸல்ஸ் மாவட்டக்குழுவிற்கு மத்தியக் குழு ஆணையிடுகின்றது. மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின்போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் மத்தியக் குழு கேட்டுக்கொள்கிறது .”- 1848 ஜனவரி 24 அன்று இக்கடிதம் கார்ல் மார்க்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .1848 பிப்ரவரி 21 அன்று ஸதேதியில் மாறுபடுவோரும் உண்டு] ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியிடப்பட்டது.முதல் பதிப்புக்கு வெளியீட்டு விழா நடத்தியதாக ஆதாரப்பூர்வமான குறிப்புகளில்லை .உலகைப் புரட்டிப் போட்ட அறிக்கை ;19 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கின் விளைச்சல் எனில் மிகையல்ல.

“1847ஆம் ஆண்டு மிகவும் கொந்தளிப்பான காலமாக இருந்தது ” என்கிறார் ஏங்கெல்ஸ். பிரஷ்யாவில் அரசியல் அமைப்பு சட்டமும் , சட்டசபையையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் - இத்தாலியில் வேகம் பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக யுத்த அறைகூவல் - ஸ்விட்சர்லாந்தில் உள்நாட்டு யுத்தம் - இங்கிலாந்தில் தீவிரவாதப் போக்கு கொண்ட நாடாளுமன்றம் - பிரான்சில் பெருகிய ஊழல்களும் சீர்திருத்த ஜிகினாக்களும் - மெக்சிகோ மீது அமெரிக்கா படையெடுப்பு - உலகெங்கும் ஏதோ ஒருவித எழுச்சி கனன்று கொண்டிருந்த காலம் என்கிறார்.மார்க்சும் ஏங்கெல்சும் 1845 இறுதியில் லண்டன் வந்தனர். சாசனவாதிகள், நீதியாளர் கழகம் இவற்றுடன் உரையாடினர்.

குறிப்பாக இடதுசாரி ஹார்னி, நீதியாளர் கழக ஷாப்பர், மோல், பெளவர் சைலிஷியாவைச் சார்ந்த வில்ஹெல்ம் உல்ஃப் போன்றோருடன் சேர்ந்து 1846 இல் “கம்யூனிஸ்ட் தொடர்புக் குழு”வை அமைத்தனர். இக்காலகட்டத்தில் ‘தேசங்களின் திருவிழா’ ஸகநயளவ டிக யேவiடிளே]விலும் பங்கேற்றனர். 1847 ஜூன் 2-7 இல் லண்டனில் மாநாடு கூடியது. பணமின்மையால் மார்க்ஸ் பங்கேற்கவில்லை. “கம்யூனிஸ்ட் லீக் ” அமைக்கப்பட்டது .இந்த மாநாட்டில் தயாரிக்கப்பட்ட விதிகளில்தான் முதன் முதலாக, “ அனைத்து மனிதர்களும் சகோதரர்களே!” என்கிற பழைய முழக்கம் கைவிடப்பட்டு “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கம் இடம் பெற்றது. மாநாட்டு முடிவுப்படி 1847 செப்டம்பரில் வெளிவந்த “கம்யூனிஸ்ட் ஜைதுங்” ஏட்டின் முகப்பிலும் இம்முழக்கம் இடம் பெற்றது .

மோஸ்ஸ் ஹெஸ் 1844 தயாரித்த “நம்பிக்கையின் கோட்பாடு” [confession of faith] அன்பை மையமாக நிறுத்திய கேள்வி - பதில் வடிவிலான ஆவணம். இதனை ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தார், இம்மாநாடு புதிய ஆவணம் தயாரிக்கும் பொறுப்பை ஏங்கெல்சுக்கு வழங்கியது. அவரும் கேள்வி - பதில் வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” [principles of communism] எனும் ஆவணத்தை தயார் செய்தார்.1847 நவம்பரில் மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் 1847 ஜூனில் தான் அவசர அவசரமாக எழுதிய ஆவணத்தில் மானுட சமுதாய வரலாற்றையும் சேர்க்க வேண்டியிருப்பதால் கேள்வி - பதில் வடிவம் பொருத்தமல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய “ தத்துவத்தின் வறுமை”. “அரசு - புனித குடும்பம் - சொத்து உறவுகள்” “ கூலி-உழைப்பு - மூலதனம்” “பிரான்ஸ் வர்க்கப் போராட்டம்”. “ஜெர்மன் தத்துவஞான விமர்சனம்” முதலியன நூல்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.

கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாடு 1847 நவம்பர் 29- டிசம்பர் 8 லண்டனில் நடைபெற்றது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவருக்கும் அறிக்கையை எழுதி முடிக்கப் பணித்தது. இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். இருவரும் சேர்ந்து விவாதித்து எழுத காலமும் சூழலும் அமையவில்லை. முந்தைய ஆவணங்களை அலசி மார்க்சே எழுதினார். உடனே லண்டனுக்கு அனுப்பினார்.சிவப்பில் அல்ல - கரும்பச்சை நிறத்தில் அட்டை அமைந்த - ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848 பிப்ரவரியில் லண்டன் பிஷப் கேட் பகுதியிலுள்ள லிவர்பூல் தெருவில் 46 ஆம் இலக்கமிட்ட ‘தொழிலாளர் கல்வி சங்க’ கட்டிடத்தில் ஜே. ஈ.புர்கார்ட்டஸால் அச்சிடப்பட்டது.கம்யூனிஸ்ட் லீக் வெளியிட்டதாய் சொல்லப்படவில்லை.

“கட்சி” என்ற வார்த்தை அப்போது சிந்தனைப் போக்கையே குறிக்கும். ஏனெனில் நவீனகால கட்சி அமைப்புகள் உருப்பெறாத காலம் அது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் !”என்றே பொதுவாய் மொழியாக்கம் செய்யப்படும். ஆனால் மார்க்சோ ஏங்கெல்சோ தேசங்கள் பல இருப்பதை நிராகரிக்கவில்லை. ஒரே உலக ஆட்சி எனக் சொல்லவில்லை working men of all countries, unite என்றுதான் சொல்லுகிறார்கள். working men of world, unite எனச் சொல்லவில்லை. எனவேதான் ’அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ எனச் சரியாக இப்போது மொழியாக்கம் செய்யப்படுகிறது.1931 இல் அக்டோபரில் பெரியார் நடந்தி வந்த சுயமரியாதை ஏடான ‘குடியரசு’ அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டது. ‘சமதர்ம அறிக்கை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. அறிக்கையின் முதல் பகுதி ஐந்து இதழ்களில் பிரசுரிக்கப்பட்டது.

பெரியார் ரஷ்யப் பயணம் இதன் பின்னரே நடை பெற்றதே. கம்யூனிஸ்ட் அறிக்கையை இப்போது படிக்கும்போது புரிவதில் சிரமம் ஏற்படும். நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டுள்ள எஸ் .வி.ராஜதுரையின் மொழியாக்கத்தில் - தக்க குறிப்புகளோடு - விளக்கங்களோடு வெளிவந்துள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை படிப்பது பயனுள்ளதாக அமையும்.“ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது- கம்யூனிசம் எனும் பேய்…” எனத் தொடங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை 166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது. உலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது. இன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட சில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்; ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்; தத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.

புரட்சி தொடரும்...
நன்றி : தீக்கதிர் , 19/06/2017.

எழுச்சியான துவக்கம் சோகமான முடிவு

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி-32


எழுச்சியான துவக்கம் சோகமான முடிவு

சு.பொ.அகத்தியலிங்கம்


விவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது
 லாஸ்ஸலை 
எல்லோரும் உற்று நோக்கச் செய்தது. 
மார்க்சும் ஏங்கெல்சும் 
இவ்வழக்கை கூர்ந்து கவனித்தனர்.“இந்தச் செய்தியைக் கேட்டு நான் எவ்வளவு தூரம் மனம் உடைந்து போனேன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவும் இயலாது. தனிநபர் என்கிற முறையில் லாஸ்ஸல் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி. கற்றறிந்த மேதை அவர். அரசியலுக்கு மிகுந்த மதிப்பளித்தவர், இந்தவகையில் முக்கியமானவர்களுள் ஒருவர். நமக்கு இப்போது நம்ப முடியாத நண்பனாக இருந்தாலும்; எதிர்காலத்தில் அவர் விரோதியாகத் தான் மாறுவார். அது எவ்வாறு இருப்பினும்;

ஜெர்மன் நாடு குறைவாகவோ கூடுதலாகவோ திறமையானவர்களைச் சீர்குலையச் செய்வதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனையாக உள்ளது. அங்கு உற்பத்தியாளர் மத்தியிலும் - முன்னேறிச் செல்லும் நாய்கள் மத்தியிலும் ஆனந்தக் கூத்திடுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனின் ஜெர்மனியில் அவர்களுக்கு குலைநடுக்கம் ஏற்படச் செய்த ஒரே மனிதர் லாஸ்ஸல் தான்”.இந்த இரங்கற் செய்தியே அவர் குறித்த ஒரு சித்திரத்தை உங்கள் நெஞ்சில் வரைந்திருக்கும்.

இந்த இரங்கற் செய்தியை ஏங்கெல்ஸ் எழுதி மார்க்ஸுக்கு அனுப்பினார் எனில் அதன் பொருள் இன்னும் ஆழமானதல்லவா?1825 ஆம் ஆண்டு பிரெஸ்ல்லாவில் பணக்கார வியாபாரியின் மகனாகப் பிறந்தார் பெர்டினண்ட் லாஸ்ஸல். தந்தையைப் போல் வியாபாரத்தில் ஈடுபட விருப்பமற்று கல்லூரி காலத்தில் இலக்கியத்தில் தோய்ந்தார், ஹெயின் போல் கவிஞனாக கனவு கண்டார். ஆயின் நாட்டு நடப்பு அவருள் நெருப்பை மூட்டியது. லாஸ்ஸல் மாணவர் பேரணியில் அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஃபாயர்பர்க்கை ஆதரித்தே உரையாற்றினார், அவர் மீது வழக்கு பதிந்து; நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் பாரீஸ் சென்று கவிஞர் ஹெயினை சந்தித்தார். தனக்கு கிடைத்த பேராசிரியர் பதவியை மறுத்தார். சட்டம் பயின்றார். 1844 இல் சீமாட்டி ஹேட்ஸ் பெல்ட்டிக்காக விவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது லாஸ்ஸலை எல்லோரும் உற்று நோக்கச் செய்தது. அந்த சீமாட்டியை கணவர் கொடுமைப்படுத்தியதை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். “பெண்களின் சமவுரிமைக்குப் போராடும் மாவீரன்” என பெண்கள் மகிழ்ந்து கூத்தாடினர். மார்க்சும் ஏங்கெல்சும் இவ்வழக்கை கூர்ந்து கவனித்தனர். தொழிலாளர்களிடையேயும் பெரும் அனுதாபம் உருவானது. எட்டாண்டுகள் இழுத்தடித்து, சமரசத்தில் முடிந்தது.1848 புரட்சியின் போது தான் வாழ்ந்த டஸ்ஸல்டோர்ப் நகர மக்களைப் பார்த்து, “வரி கொடுக்காதீர்! அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்பீர்! “ என அவர்விடுத்த அறைகூவல் ஆட்சியாளரை கோபம் கொள்ளச் செய்தது. கைது செய்யப்பட்டார். தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மார்க்சும் ஏங்கெல்சும் நியூ ரெயினிஸ்ச் ஸெய்டங் பத்திரிகையில் இவர் பக்க நியாயங்களை எடுத்துவைத்தனர்.

மார்க்ஸோடு கடிதத் தொடர்பால் கம்யூனிஸ்ட் அறிக்கையெல்லாம் படித்தார் . ஆனால் அது அவரைக் கவ்வவில்லை.ஹெகலை, பிரெளதனைப் பின்பற்றினார்.1860 இல் ஜெர்மனிய பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்பொன்றின் தேவையை ஓங்கி ஒலித்தார் ,லீப்ஸிக் தொழிலாளருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அனைவருக்கும் வாக்குரிமை சமாதானப்பூர்வமான வழிமுறை, நாடாளுமன்ற முறை இவையே சரியான மாற்று. அதற்காக ஒரு பொது அமைப்பின் கீழ் திரள வேண்டும் என்றார்.அதே நேரம் வர்க்கப்புரட்சி என்பதை நிராகரித்தார் .1862 வசந்த காலத்தில் பெர்லினில் பொதுக்கூட்டங்களில் முழக்கமிட்டார். தன் கோட்பாடுகளை நூலாக்கினார்; இறுதிப் பகுதியில் “உழைக்கும் மக்களின் செயல் திட்டம்” ஒன்றை வெளியிட்டார். இந்த அறைகூவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையொட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் அரசின் கட்டுப்பாட்டில் - அரசின் உதவியோடு - சுதந்திர உற்பத்திக் கழகங்கள் என கனவுத் திட்டத்தை முன்வைத்தார்.சோற்றுக்கும் துணிக்கும் மட்டுமே கூலி கொடுத்தால் போதுமென வாதிட்டார் லாஸ்ஸல்.

மார்க்ஸ் இதனை மறுதலித்தார் . கூலி விகிதங்களின் அளவு என்பது தொழிலாளியின் உணவு உடை போன்ற சில வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது .தொழிலாளர்களின் பண்பாட்டுத் தேவை, வளர்ச்சி - அரசியல் உணர்வு - புரட்சிகர கண்ணோட்டம் - அமைப்பு வலு - முதலாளிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் என பலவற்றைச் சார்ந்தது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார்.ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தை அமைத்திட முயற்சி மேற்கொண்டார், நாடு முழுவதும் பயணித்து கனல் கக்கும் உரைகளால் தொழிலாளி வர்க்கத்தை ஈர்த்தார். பெருமளவில் உறுப்பினர்களும் சேர்ந்தனர்.

அதன் தனிப் பெரும் தலைவராக லாஸ்ஸல் திகழ்ந்தார்.பிஸ்மார்க்குடன் சமரசம் செய்ய முனைந்தார் .அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை, அளித்து தொழிலாளி வர்க்கத்திற்கு மணிமகுடம் சூட்டுங்கள் என யோசனை சொன்னார். பிஸ்மார்க்கோ நரி; இவரிடம் இனிக்கப் பேசி சில சலுகைகள் தருவதாய்ப் போக்குக்காட்டி ஏமாற்றிவிட்டார்.மனந்தளராமல் 1864 இல் தொழிலாளர் சம்மேளனத்தில் மேலும் அதிக தொழிலாளரை உறுப்பினராக்க லீப்சிக், சோலிங்கன், ப்ரெமன், கொலோன், வெர்மல்ஸ் உட்பட பல நகரங்களில் இவர் ஆற்றிய உரை ஆட்சியாளர் அடிவயிற்றைக் கலக்கியது. ரோன்ஸ்டோர்பில் ஆற்றிய உரைக்காக கைது செய்யப்பட்டு; நீதிமன்றத்தால் ஆறுமாதம் தண்டனை பெற்றார் . சிறையில் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டது .அரசியலைவிட்டு விலகி விஞ்ஞான பிரச்சாரத்தில் கவனம் குவிக்க விழைந்தார் . 1864 இல் மருத்துவ ஓய்வுகாக சுவிட்சர்லாந்து சென்றார். அங்கும் சும்மா இருக்கவில்லை “சிக்கனம் கடைப்பிடித்து சுயமூலதனத்தில் சுய தொழில்” என சுல்ஸ் டெலிட்ஸ்க் முன் வைத்த கருத்தோட்டத்தை நிராகரித்தார்.

மறுப்பு நூல் எழுதினார். இதுவும் மார்க்சிய அடிப்படையில் அமையாமல் அரசு உதவியோடு என்கிற தன் பழைய பார்வையோடு நின்றது .இந்நூல் எந்த அசைவையும் தொழிலாளர் மத்தியில் உருவாக்காததால் மனம் சோர்ந்தார்.1862 இல் ஹெலன் எனும் பேரழகியை சந்திதார். அப்போதே அவருக்கு அவள் மீது மயக்கம் ஏற்பட்டது .1864 ல் சுவிட்சர்லாந்தில் மீண்டும் சந்தித்தபோது முழுதாய் அவள் மீது மையல் கொண்டார். வெறியோடு காதலிக்கலானார். ஆனால் ஹெலனுக்கும் ருமெனிய பெரும் செல்வர் ஜங்கோவான் ரகோவிட்ஸ்சுக்கும் ஏற்கெனவே நிச்சயமாகி விட்டது. ஆயினும் இவர் காதலை தெரிவிக்க ஜங்கோவனுக்கும் இவருக்கும் மோதல் வெடித்தது. 1864 ஆகஸ்ட் 31 ஆம் நாள் லாஸ்ஸல் கொல்லப்பட்டார்.ஏங்கெல்சின் இரங்கற் செய்தி பொருள் பொதிந்தது அல்லவா?

புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 12/06/2017.

தாய் பிறந்த போர்க்களம்

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி – 31

தாய் பிறந்த போர்க்களம்


சு.பொ.அகத்தியலிங்கம்30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை,
 பசி, நோயால் இறந்தனர். ஒவ்வொரு ஐந்து நாளிலும் 
நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


அறை கலகலப்பான நகைச் சுவையால் மூச்சுத்திணறியது ; ‘யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கள்’ என்கிற வேண்டுகோளோடு உரையை அவர் முடிக்க… இசைவெள்ளம் பெருக்கெடுத்தது.1905 நவம்பரில் வெளிநாட்டிலிருந்து ரகசியமாய் வந்து பீட்டர்ஸ்பர்க்கில் தலைமறைவாய் இருந்தபடியே லெனின் போராட்டங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார் .

டூமா எனப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜார் மன்னர் உத்தரவிட்டார். சட்டமியற்றும் அதிகாரமில்லாத வெறும் பேச்சுமடமாக டூமா கூட்டப்படும் சதியை சுட்டிக்காட்டி டூமாவைப் புறக்கணிக்குமாறு லெனின் வேண்டுகோள் விடுத்தார்.போராட்ட உணர்வு மேலோங்கும் சூழலில் பின்லாந்தில் டாமர்போர்ஸ் எனுமிடத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் போல்ஷ்விக், மென்ஷ்விக் ஒற்றுமை குறித்தும், டூமா பகிஷ்கரிப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் தான் லெனினை ஸ்டாலின் முதல் முறையாக நேரடியாகச் சந்தித்தார்.நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை ஜார் பிரகடனப்படுத்தினார். மாநாடு மாஸ்கோ பொது வேலைநிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. டிசம்பர் 7 ஆம் நாள் தொடங்கியது. 9 ஆம் தேதி ஆயுதபாணியாய் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதித்தடையரண்களை எழுப்பி உக்கிரமாய் போரைத் தொடங்கினர். கிரஸ்நயாபிரஸ்நாயா, கிரஸ்னோயார்ஸ்க், மோடோவிலிகா, கிரோன்ஸ்டாட், சோர்மோவோ என பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது.

கொன்றுக் குவிக்கத் துவங்கியது. டிசம்பர் 19 வரை நீண்ட இப்போர் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டது.ரயில்வே போக்குவரத்தை முடக்க முடியாததாலும் ,கிராமப்புறங்களை முழுமையாய் ஈடுபடுத்த முடியாததாலும் தோல்வி ஏற்பட்டது; எனினும் இன்னும் உறுதியுடன் தீவிரமாகப் போராட வேண்டுமென லெனின் சொன்னார். ஆயுதம் ஏந்தியதே தவறென்றார் பிளக்கனோவ். இப்படி இரு வேறு கருத்தை சொல்லிடினும் ஒற்றுமை முயற்சியும் சூடுபிடித்தது.மென்ஷ்விக்குகள், போல்ஷ்விக்குகள் இணைந்த மத்தியக்குழு உருவாக்கப்பட்டது. மென்ஷ்விக்குகளின் ’தீப்பொறி’ ஆசிரியர் குழுவும், போல்ஷ்விக்குகளின் ‘பாட்டாளி’ ஆசிரியர் குழுவும் இணைந்து ‘பார்ட்டினியே இஸ்வெஸ்தியா’ ஸ கட்சிச் செய்தி] எனும் ஏடு -1906 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் இரண்டு இதழ் வெளிவந்தன.1906 ஏப்ரல் 23 முதல் மார்ச் 8 வரை ஸ்டாக்ஹோமில் சமூக ஜனநாயகக் கட்சியின் நான்காவது மாநாடு ஒற்றுமை மாநாடாக நடைபெற்றது .57 குழுக்கள் பங்கேற்றன. மென்ஷ்விக்குகளே அதிகம்.

சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட இரண்டாவது டூமாவில் பங்கேற்பது என மாநாடு முடிவெடுத்தது மத்திய கமிட்டியிலும் அவர்களுக்கே பெரும்பான்மை . இம்மாநாடு குறித்து ஸ்வெர்த்தாலாவா என்ற புரட்சிக்காரி எழுதிய வரிகளையே ஆரம்பத்தில் பார்த்தோம். லெனின் வேண்டுகோளை ஏற்று பியானோ வாசித்து இவானவிச் பாட அனைவரும் சேர்ந்திசைக்க அரங்கம் அதிர்ந்ததை குறிப்பிட்ட அவர். புரட்சிக்காரர்கள் உம்மணாம் மூஞ்சியாகத்தான் இருப்பார்கள் என்பதை லெனின் சொல்லாலும் செயலாலும் மாற்றிக் காட்டினார். இசையை ரசித்தார். ஊக்குவித்தார், நகைச்சுவையால் கலகலப்பாக்கினார் என்றார்.கட்சியின் ‘சமூக ஜனநாயகம்’ ஏடு மென்ஷ்விக்குகள் கைக்கு போய்விட்டதால்; ’வோல்னா’ஸஅலை]எனும் தினசரி மே,ஜூன் மாதங்கள் வெளியிடப்பட்டது. ‘ முன்னேறு’, ‘எக்கோ’ ஸஎதிரொலி] எனும் இரு ஏடுகள் வெளிவரலாயிற்று.

லெனின் தொடர்ந்து எழுதலானார் .புரட்சி நசுக்கப்பட்டாலும்,1907 ஆம் ஆண்டு 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கு கொண்ட வேலை நிறுத்தங்கள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய கலகங்கள் வெடித்தன. 1905 பேட்டில்ஷிப் போத்தம்கின் கப்பற்படை எழுச்சிக்குப் பின் 1906 செப்டம்பர் வரை 230 சிறு போராட்டங்களும் 21 பேரெழுச்சிகளும் இராணுவத்தில் நடந்தன. சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றனர்.1907-1908 ஆண்டுகளில் மட்டும் அரசியல் குற்றங்களுக்காக 28,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் . 1905 -12 காலகட்டத்தில் 30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை, பசி, நோயால் இறந்தனர் .

ஒவ்வொரு ஐந்து நாளிலும் நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .பலர் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக ; ஸ்வெர்டுலோவ் மூன்று முறை கைது செய்யப்பட்டார், இரு முறை நாடு கடத்தப்பட்டார்; மொத்தத்தில் 12 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். ஆர்டுஜோனிகிட்ஷே கடுஞ்சிறை ,கடும் உழைப்பு முகாம் , நாடுகடத்தல் என 14 ஆண்டு வாடினார். இருமுறை கைது செய்யப்பட்ட டிஜெர்ஷின்ஸ்கி 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.

பட்டியல் பெரிது.ஜார் மன்னனின் ‘குண்டாந்தடிக் கொள்கை’ ஒரு புறம்; மறுபுறம் புரட்சிகர உறுதியை சிதற அடிக்க கறுப்பு நூற்றுவர் ,ரஷ்ய மக்கள் சங்கம் ,முடியரசு வாதிகள் ,ஐக்கிய பிரபுக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் சித்தாந்த தாக்குதல். ஒரு கணித மேதை பல்வேறு கணக்குகளைப் போட்டுக்காட்டி எப்படிக் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தாலும் ஜாரை முறியடிக்க முடியாதென வாதிட்டார். மென்ஷ்விக்குகள் சீர்குலைவு பிரச்சாரத்தில் மூழ்கினர். பிளக்கனோவ் மட்டுமல்ல டிராட்ஸ்கியும் எதிர்முனையில் நின்றார்.இந்தச் சூழலில்தான் மாக்ஸிம் கார்க்கி தன் புகழ் பெற்ற படைப்பான “தாய்” நாவலை எழுதினார். அந்நாவல் உந்துவிசையாய் மாறியது.

“காலத்துக்கேற்ற மிகவும் முக்கியமான புத்தகம்” என லெனின் உச்சிமோந்தார்.முதல் டூமா புறக்கணிப்புக்கு பின்னர் லெனின் சுயவிமர்சனமாகச் சொன்னார்,” 1906 இல் டூமாவைப் புறக்கணித்ததானது சிறிய, சுலபத்தில் நிவர்த்தி செய்யக்கூடிய தவறாகும் .தனி நபர்களுக்கு எது பொருந்துகிறதோ அது அவசியமான திருத்தங்களுடன் அரசியலுக்கும் பொருந்தும் .புத்திசாலி என்பவன் ஒரு தவறும் செய்யாமலிருப்பவனல்ல ; அத்தகைய மனிதர்கள் யாருமில்லை; இருக்கவும் முடியாது ;மிகப் பெரும் தவறுகளைச் செய்யாதிருப்பவனும்; செய்த தவறுகளை விரைவாகவும் சுலபமாகவும் திருத்திக் கொள்பவன்தான் புத்திசாலி.” “முதல் டூமா கலைக்கப்பட்டபோது லெனின் எழுதிய “டூமா கலைப்பும் பாட்டாளி கடமைகளும்” என்ற பிரசுரமும்;

இரண்டாவது டூமாவில் பங்கேற்க வேண்டி அவர் ஆற்றிய உரைகளும் “ சமூக ஜனநாயகவாதிகளும் தேர்தல் உடன்பாடும்” என்ற பிரசுரமும் முக்கியமானவை .முதல் டூமாவில் 18 பேர் இடம் பெற்றனர். இரண்டாம் டூமாவிற்கு தேர்வான 65 பேரில் 18 பேர் மட்டுமே போல்ஷ்விக்குகள். ஒரு வேடிக்கை பீட்டர்ஸ்பர்க்கில் மென்ஷ்விக்குகள் சீர்குலைவாளர்களோடு செய்த ரகசிய உடன்பாட்டை அம்பலப்படுத்தி “ பீட்டர்ஸ்பர்க் தேர்தலும் 31 மென்ஷ்விக்குகளின் மாய்மாலமும்” என எழுதிய கட்டுரை பிரச்சனையானது. லெனின் மீது விசாரணைக் கமிஷனைக் கட்சி அமைத்தது. லெனில் தக்க ஆதாரங்களோடு வாதிட அந்த விசாரணை அப்படியே முடங்கிப்போக விடப்பட்டது.

புரட்சி தொடரும்...
நன்றி ; தீக்கதிர் . 05/06/2017.

மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி – 30சு.பொ.அகத்தியலிங்கம்


மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...


போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர
1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து
ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சிஉருவானது.
வெயிலண்ட் அதன் தலைவரானார்

அவரை 1872 இல் கைது செய்தனர் . விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படாமலே தீர்ப்பு வழங்கப்பட்டது . சாதாரணச் சிறைத் தண்டனை அல்ல ; மரணதண்டனையே விதிக்கப்பட்டது.அவர்தான் மேரி எட்வர்ட் வெயிலண்ட் .1840 ல் பிரெஞ்சு நாட்டில் வியர்ஸான் நகரில் பிறந்தார் .மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட தாய் மகனுக்கு மேரியின் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மேரி என்று பெயர் சூட்டினார் .தந்தை ஆவணச் சான்று அலுவலர் . பாரீஸுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது .அங்கு செயிண்ட் பார்ப் கல்லூரியில் பயிலும் போது கட்டுப்பாட்டை மீறியதாய் பலமுறை வெயிலண்ட் தண்டனை பெற்றார் .

அங்கு இளங்கலையும் , ஈகோஸ் பல்கலையில் பொறியியல் பட்டமும் , பின்னர் மருத்துவமும் பயின்றார். ரசாயன ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் . மெல்ல சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1866 இல் ஜெர்மன், ஆஸ்திரியா என பயணித்த போது சோஷலிச உலகக் கண்ணோட்டம் வலுவானது .கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜெர்மன் கிளையோடு இணைந்தார் . அகிலத்தின் மாநாடு லாஸோனில் 1867 இல் நடைபெற்றபோது பங்கேற்றார் .பாரீஸை பிரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட போது மீட்க வீறுகொண்ட தேசியப் பாதுகாப்புப் படையில் வெயிலண்ட் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அப்போது வெளியிடப்பட்ட ஆவணத்தில் ஜூல் வால்ஸ்ஸோடு இணைந்து கையெழுத்திட்டவர் வெயிலண்ட். 37 ஆண்டுகாலம் வெஞ்சிறையில் வதைபட்ட சோஷலிஸ்ட் தலைவர் பிளாங்குயி மீது ஈர்ப்பு கொண்ட வெயிலண்ட், அவரது சகா குஸ்டாவ் ட்ரீட்டோனுடன் தோளிணைந்தார்.1871 பாரீஸ் கம்யூன் எழுச்சியில் பங்கு கொண்டார் . உள்துறை அமைச்சகப் பிரதிநிதியாய் தேர்வு செய்யப்பட்டார் ;கல்விக் கமிஷனுக்கும் தலைமை ஏற்றார். வெயிலண்ட் மட்டுமல்ல டியூவல், மியோட், புரேட்டோட், ராண்வியர், ரீகால்ட், ட்ரீடோன், ஃபெர்ரீ, ப்ளோரென்ஸ், சார்ட்டோன், இயூட்ஸ் போன்ற பல பிளாங்குயிஸ்டுகள் பாரீஸ் கம்யூனில் பங்குபெற்றனர். இவர்களின் எஃகு போன்ற உறுதியையும் ,கட்டுக் கோப்பான செயல்பாட்டையும் ஏங்கெல்ஸ் பாராட்டினார்.

வெயிலண்ட பாரீஸ் கம்யூன் கல்வி கமிஷன் தலைவராக சாதாரண மக்களுக்கு கல்வி அளிக்க விரைந்து செயல்பட்டார். திட்டமிட்டார். அவர் கனவு கைகூடவில்லை. இது அவர் குற்றம் அல்ல; பாரீஸ் கம்யூன் அற்ப ஆயுளில் முடிந்து போனதே காரணம். பாரீஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட கதையை முன்பே கண்டோம். கடைசி வரை போர்க்களத்தில் நின்றவர் வெயிலண்ட்.கம்யூன் தோற்கடிக்கப்பட்ட பின் தலைமறைவான வெயிலண்ட்; நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் ஆயினும் கைது செய்யப்பட்டார். முதலில் குறிப்பிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது அப்போதுதான். 1880 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது அதன் பலனாய் வெயிலண்ட்டும் மரணதண்டனையிலிருந்து தப்பினார்.அகதிகள் கழகம், புரட்சிகர கம்யூன் இவற்றில் பணியாற்றிய வெயிலண்ட்டும் இதர பிளாங்குயிஸ்டுகளும் தொடர்பை விட்டுவிடாமல் அரசியலில் செயல்படலானார்கள். பிளாங்குயி மறைவுக்கு பின் சோஷலிஸ்ட் கட்சித் தலைமைக்குத் தேர்வு செய்யப்பட்டார். “பிளாங்குயிசம் வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் ஒரு சித்தாந்தமாகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மூலம் அல்லாது மிகச் சிறுபான்மையினான அறிவாளிகள் தீட்டும் சதித்திட்டங்கள் மூலம் மனித குலம் விடுவிக்கப்படும் என பிளாங்குயிசம் எதிர்பார்க்கிறதுஎன்பார் லெனின்.வெயிலண்ட் அதிலிருந்து மாறுபட்டு மார்க்சியப் பார்வையோடு சோஷலிச பார்வையை கட்டமைக்க முயன்றார்.நகர் மன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். கியூஸ்ட் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட துண்டு துக்காணியாய்க் கிடந்த சோஷலிச சக்திகளை ஒன்றிணைக்க பெரு முயற்சி மேற்கொண்டார். அதே சமயம் சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மில்லரண்ட்டின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை கடுமையாக விமர்சித்தார். 1897 இல் நகர் மன்ற டெபுடி ஆனார். அப்போது அவர் ஆற்றிய பணிகள் மக்களைக் கவர்ந்தது.

ஒரு பகுதியினரை ஒருங்கிணைத்து பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியை அமைத்தார். பத்திரிகைகள் துவங்கி தொழிலாளி வர்க்கத்தவரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்ல பெரிதும் முன்னுரிமை அளித்தார். 1904 க்குள் கட்சிக் கட்டுப்பாட்டில் 22 செய்தி ஏடுகள் வெளிவந்தன . 1902 இல் மேலும் ஒரு சோஷலிஸ்ட் கட்சி உதயமானது. பல அமைப்புகளும் இந்த இரண்டு கட்சியின் கீழும் அணிவகுக்க ஒரு விரிவான இணைப்புக்கு வழி வகுக்கப்பெற்றது.போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர 1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்துஐக்கிய சோஷலிஸ்ட் கட்சிஉருவானது. வெயிலண்ட் அதன் தலைவரானார்.1905 ரஷ்ய புரட்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார். 1913 இல் பிரெஞ்சு குடியரசுத் தேர்தலில் வெயிலண்ட் போட்டியிட்டார். அப்போது லெனின் எழுதினார்; “வெயிலண்டை ஆதரித்து வாக்களிப்பது என்பது; பாரீஸ் கம்யூனை கவுரவப்படுத்துவதாகும் .

ஏனெனில் வெயிலண்ட உயிரோடு உலவும் பாரீஸ் கம்யூனின் நினைவாலயம் ஆவார். அந்த வெள்ளை முடி கொண்ட வெயிலண்ட் வெற்றி பெற வேண்டும்; பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் வீர வரவேற்பு அளிக்க வேண்டும்.”ஆசை நிறைவேறுவது அவ்வளவு சுலபமா என்ன ? 1871 ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியை நசுக்குவதற்காக பிஸ்மார்க்கிடம் நாட்டையே விற்ற வெர்ஸேல்ஸில் - 45 வருடங்கள் முன்பு ஒரு மன்னனுக்காக ஏங்கி நிலப்பிரபுக்கள் ஊளையிட்ட அதே வெர்ஸேல்ஸில் - அதே மண்டபத்தில் தொழிலாளி வர்க்க டெபுடிகள் வெயிலண்ட்டுக்கு வாக்களித்ததையே மகிழ்ச்சி பொங்க லெனின் வருணித்தாரெனில் பார்த்துக் கொள்ளுங்கள் .பிரெஞ்சு ஆளும் வட்டாரத்தின் காலனி ஆதிக்கக் கொள்கையினைபோர் அச்சுறுத்தலை - ராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து முழக்கமிட்டார். இது தொடர்பாக அவர் எழுதிய பிரசுரம் மிகவும் முக்கியமானது.

போருக்கு எதிராக முழங்கிய வெயிலெண்ட் முதல் உலகயுத்தம் துவங்கிய போதுபிரெஞ்சு நாட்டுக்காக - குடியரசுக்காக - மனிதகுலத்துக்காகஎனக் கூறி யுத்தத்தை ஆதரித்தார். லெனின் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதிலும்; உழைக்கும் வர்க்க நலன் காப்பதிலும் வெயிலெண்ட இறுதி மூச்சு உள்ளவரை போராடியதை வரலாறு பெருமையுடன் பதிவு செய்கிறது.1915 டிசம்பர் 18 ஆம் நாள் பாரீஸ் கம்யூனின் தளபதிகளில் ஒருவரும் - பிரெஞ்சு சோஷலிஸ்ட்டுமான வெயிலெண்ட் மரணமடைந்தார்.இவர் பெயரை மாஸ்கோ நினைவுத் தூணில் லெனின் பொறித்தார்; இளைஞர் கற்க வேண்டிய வரலாற்று பாடத்தில் இவரையும் இணைத்தார்.

புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் , 29/05/2017