மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 30



சு.பொ.அகத்தியலிங்கம்


மரண தண்டனைக்குப் பின்னும் வீறுடன்...


போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர
1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்து
ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சிஉருவானது.
வெயிலண்ட் அதன் தலைவரானார்

அவரை 1872 இல் கைது செய்தனர் . விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படாமலே தீர்ப்பு வழங்கப்பட்டது . சாதாரணச் சிறைத் தண்டனை அல்ல ; மரணதண்டனையே விதிக்கப்பட்டது.அவர்தான் மேரி எட்வர்ட் வெயிலண்ட் .1840 ல் பிரெஞ்சு நாட்டில் வியர்ஸான் நகரில் பிறந்தார் .மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட தாய் மகனுக்கு மேரியின் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மேரி என்று பெயர் சூட்டினார் .தந்தை ஆவணச் சான்று அலுவலர் . பாரீஸுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது .அங்கு செயிண்ட் பார்ப் கல்லூரியில் பயிலும் போது கட்டுப்பாட்டை மீறியதாய் பலமுறை வெயிலண்ட் தண்டனை பெற்றார் .

அங்கு இளங்கலையும் , ஈகோஸ் பல்கலையில் பொறியியல் பட்டமும் , பின்னர் மருத்துவமும் பயின்றார். ரசாயன ஆய்வு கூடத்தில் பணியாற்றினார் . மெல்ல சோஷலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 1866 இல் ஜெர்மன், ஆஸ்திரியா என பயணித்த போது சோஷலிச உலகக் கண்ணோட்டம் வலுவானது .கம்யூனிஸ்ட் அகிலத்தில் ஜெர்மன் கிளையோடு இணைந்தார் . அகிலத்தின் மாநாடு லாஸோனில் 1867 இல் நடைபெற்றபோது பங்கேற்றார் .பாரீஸை பிரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட போது மீட்க வீறுகொண்ட தேசியப் பாதுகாப்புப் படையில் வெயிலண்ட் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

அப்போது வெளியிடப்பட்ட ஆவணத்தில் ஜூல் வால்ஸ்ஸோடு இணைந்து கையெழுத்திட்டவர் வெயிலண்ட். 37 ஆண்டுகாலம் வெஞ்சிறையில் வதைபட்ட சோஷலிஸ்ட் தலைவர் பிளாங்குயி மீது ஈர்ப்பு கொண்ட வெயிலண்ட், அவரது சகா குஸ்டாவ் ட்ரீட்டோனுடன் தோளிணைந்தார்.1871 பாரீஸ் கம்யூன் எழுச்சியில் பங்கு கொண்டார் . உள்துறை அமைச்சகப் பிரதிநிதியாய் தேர்வு செய்யப்பட்டார் ;கல்விக் கமிஷனுக்கும் தலைமை ஏற்றார். வெயிலண்ட் மட்டுமல்ல டியூவல், மியோட், புரேட்டோட், ராண்வியர், ரீகால்ட், ட்ரீடோன், ஃபெர்ரீ, ப்ளோரென்ஸ், சார்ட்டோன், இயூட்ஸ் போன்ற பல பிளாங்குயிஸ்டுகள் பாரீஸ் கம்யூனில் பங்குபெற்றனர். இவர்களின் எஃகு போன்ற உறுதியையும் ,கட்டுக் கோப்பான செயல்பாட்டையும் ஏங்கெல்ஸ் பாராட்டினார்.

வெயிலண்ட பாரீஸ் கம்யூன் கல்வி கமிஷன் தலைவராக சாதாரண மக்களுக்கு கல்வி அளிக்க விரைந்து செயல்பட்டார். திட்டமிட்டார். அவர் கனவு கைகூடவில்லை. இது அவர் குற்றம் அல்ல; பாரீஸ் கம்யூன் அற்ப ஆயுளில் முடிந்து போனதே காரணம். பாரீஸ் கம்யூன் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட கதையை முன்பே கண்டோம். கடைசி வரை போர்க்களத்தில் நின்றவர் வெயிலண்ட்.கம்யூன் தோற்கடிக்கப்பட்ட பின் தலைமறைவான வெயிலண்ட்; நண்பர்கள் உதவியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார் ஆயினும் கைது செய்யப்பட்டார். முதலில் குறிப்பிட்ட மரண தண்டனை விதிக்கப்பட்டது அப்போதுதான். 1880 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட போது அதன் பலனாய் வெயிலண்ட்டும் மரணதண்டனையிலிருந்து தப்பினார்.அகதிகள் கழகம், புரட்சிகர கம்யூன் இவற்றில் பணியாற்றிய வெயிலண்ட்டும் இதர பிளாங்குயிஸ்டுகளும் தொடர்பை விட்டுவிடாமல் அரசியலில் செயல்படலானார்கள். பிளாங்குயி மறைவுக்கு பின் சோஷலிஸ்ட் கட்சித் தலைமைக்குத் தேர்வு செய்யப்பட்டார். “பிளாங்குயிசம் வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் ஒரு சித்தாந்தமாகும்.

பாட்டாளி வர்க்க சித்தாந்தம் மூலம் அல்லாது மிகச் சிறுபான்மையினான அறிவாளிகள் தீட்டும் சதித்திட்டங்கள் மூலம் மனித குலம் விடுவிக்கப்படும் என பிளாங்குயிசம் எதிர்பார்க்கிறதுஎன்பார் லெனின்.வெயிலண்ட் அதிலிருந்து மாறுபட்டு மார்க்சியப் பார்வையோடு சோஷலிச பார்வையை கட்டமைக்க முயன்றார்.நகர் மன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். கியூஸ்ட் தொழிலாளர் கட்சி உள்ளிட்ட துண்டு துக்காணியாய்க் கிடந்த சோஷலிச சக்திகளை ஒன்றிணைக்க பெரு முயற்சி மேற்கொண்டார். அதே சமயம் சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி தலைவர் மில்லரண்ட்டின் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை கடுமையாக விமர்சித்தார். 1897 இல் நகர் மன்ற டெபுடி ஆனார். அப்போது அவர் ஆற்றிய பணிகள் மக்களைக் கவர்ந்தது.

ஒரு பகுதியினரை ஒருங்கிணைத்து பிரெஞ்சு சோஷலிஸ்ட் கட்சியை அமைத்தார். பத்திரிகைகள் துவங்கி தொழிலாளி வர்க்கத்தவரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்ல பெரிதும் முன்னுரிமை அளித்தார். 1904 க்குள் கட்சிக் கட்டுப்பாட்டில் 22 செய்தி ஏடுகள் வெளிவந்தன . 1902 இல் மேலும் ஒரு சோஷலிஸ்ட் கட்சி உதயமானது. பல அமைப்புகளும் இந்த இரண்டு கட்சியின் கீழும் அணிவகுக்க ஒரு விரிவான இணைப்புக்கு வழி வகுக்கப்பெற்றது.போராட்டமும் விவாதமுமாய் நாட்கள் நகர 1905 ஏப்ரல் மாதம் எல்லோரும் ஒன்றாக இணைந்துஐக்கிய சோஷலிஸ்ட் கட்சிஉருவானது. வெயிலண்ட் அதன் தலைவரானார்.1905 ரஷ்ய புரட்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவித்தார். 1913 இல் பிரெஞ்சு குடியரசுத் தேர்தலில் வெயிலண்ட் போட்டியிட்டார். அப்போது லெனின் எழுதினார்; “வெயிலண்டை ஆதரித்து வாக்களிப்பது என்பது; பாரீஸ் கம்யூனை கவுரவப்படுத்துவதாகும் .

ஏனெனில் வெயிலண்ட உயிரோடு உலவும் பாரீஸ் கம்யூனின் நினைவாலயம் ஆவார். அந்த வெள்ளை முடி கொண்ட வெயிலண்ட் வெற்றி பெற வேண்டும்; பாரீஸ் நகரத் தொழிலாளர்கள் வீர வரவேற்பு அளிக்க வேண்டும்.”ஆசை நிறைவேறுவது அவ்வளவு சுலபமா என்ன ? 1871 ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்கக் கிளர்ச்சியை நசுக்குவதற்காக பிஸ்மார்க்கிடம் நாட்டையே விற்ற வெர்ஸேல்ஸில் - 45 வருடங்கள் முன்பு ஒரு மன்னனுக்காக ஏங்கி நிலப்பிரபுக்கள் ஊளையிட்ட அதே வெர்ஸேல்ஸில் - அதே மண்டபத்தில் தொழிலாளி வர்க்க டெபுடிகள் வெயிலண்ட்டுக்கு வாக்களித்ததையே மகிழ்ச்சி பொங்க லெனின் வருணித்தாரெனில் பார்த்துக் கொள்ளுங்கள் .பிரெஞ்சு ஆளும் வட்டாரத்தின் காலனி ஆதிக்கக் கொள்கையினைபோர் அச்சுறுத்தலை - ராணுவமயமாக்கப்படுவதை எதிர்த்து முழக்கமிட்டார். இது தொடர்பாக அவர் எழுதிய பிரசுரம் மிகவும் முக்கியமானது.

போருக்கு எதிராக முழங்கிய வெயிலெண்ட் முதல் உலகயுத்தம் துவங்கிய போதுபிரெஞ்சு நாட்டுக்காக - குடியரசுக்காக - மனிதகுலத்துக்காகஎனக் கூறி யுத்தத்தை ஆதரித்தார். லெனின் இதனைக் கடுமையாக விமர்சித்தார்.முதலாளித்துவ சுரண்டலை எதிர்ப்பதிலும்; உழைக்கும் வர்க்க நலன் காப்பதிலும் வெயிலெண்ட இறுதி மூச்சு உள்ளவரை போராடியதை வரலாறு பெருமையுடன் பதிவு செய்கிறது.1915 டிசம்பர் 18 ஆம் நாள் பாரீஸ் கம்யூனின் தளபதிகளில் ஒருவரும் - பிரெஞ்சு சோஷலிஸ்ட்டுமான வெயிலெண்ட் மரணமடைந்தார்.இவர் பெயரை மாஸ்கோ நினைவுத் தூணில் லெனின் பொறித்தார்; இளைஞர் கற்க வேண்டிய வரலாற்று பாடத்தில் இவரையும் இணைத்தார்.

புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் , 29/05/2017


0 comments :

Post a Comment