நேற்றின் பாடம்….?????

Posted by அகத்தீ Labels:







நேற்றின் பாடம்….?????  

 

காலையில் அடுக்கக வளாகத்துக்குள்

இணையரோடு நடை பயிற்சி …

புறா ஒன்றை கவ்வித் தின்று கொண்டிருந்தது பூனை

”இவ்வளவு எலிகள் இங்கு சுற்றுகையில்

பூனைக்கு பாவப்பட்ட புறாதானா கிடைத்தது ?”

இணையர் நெஞ்சம் கலங்கக் கேட்டார் …

 

இரக்கம் சரிதான்

பூனைக்கு தேவை இரைதான்

 ஒவ்வொன்றின் உணவுத் தேர்வை

நாம் எப்படித் தீர்மானிக்க முடியும் ?

 

நாங்கள் அடுக்ககம் வந்த புதிதில்

புறாக்கள் ,கழுகுகள் ,பாம்புகள் ,எலிகள் ,நாரைகள்

எங்கும் வட்டமிட்டன…

ஒர் மருந்து நிறுவனத்தின் சமூக பொறுப்பின்மையால்

காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி - பல நூற்றாண்டு பழைய ஏரி

நச்சு இரசாயணம் கலந்து மாசு பட்டது

மீன்கள் செத்து மிதந்தன

சுற்றி இருந்த மரங்கள் பட்டுப்போயின

கழுகுகள் ,புறாக்கள் ,நாரைகள் பெரும் பகுதி காணாமல் போயின….

 

தன்னார்வ அமைப்புகள் எதிர்குரல் எழுப்பின வழக்குத் தொடுத்தன

வழக்கம் போல் தாமதமாய்த் சற்று தூக்கம் கலைந்தது அரசு

இப்போது மறு கட்டமைப்புக்காக ஏரி வற்ற வைக்கப்பட்டுள்ளது

அடுக்ககம் தண்ணீர் லாரியை எதிர்பார்த்துக் கிடப்பது அன்றாடப் பிழைப்பு..

 

 

ஆரம்பத்தில் அடுக்ககத்துள் பாம்புகள் நாலய்ந்து

கொஞ்சம் எலிகள் …

எலித் தொல்லைத் தாங்க முடியவில்லை ..

மின் வயர்களைக் கடித்து வைத்தன

மின் சாதனங்கள் பழுதாயின

பெரும் பாதிப்பு வாஷிங் மெஷின்களுக்கே

 

எங்கிருந்தோ ஓர் பூனை வந்தது

இனி எலித் தொல்லை இருக்காது என

எல்லோரும் கொண்டாடினர் …

பாலும் கறியும் மீனும் பூனைக்குக் கிடைத்தன…

பூனை ஜோடி சேர்த்துக் கொண்டது

குட்டிகள் போட்டன வேறு பூனைகளும் வந்தன

இப்போது பூனைகள் சாம்ராஜ்யம் கோலோச்சுகிறது

எலிகளும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தி குட்டிபோட்டு

பல்கிப் பெருகி வம்சம் தழைக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றன

பாம்புகளும் தன் இடத்தை மாற்றி மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன..

 

பிரச்சனையிலிருந்து தப்ப நினைத்து

பிரச்சனைகளில்ச் சிக்கிக்கொண்டு ..

மேலும் மேலும் மேலும் பிரச்சனைகள் சூழ….

மீள முடியா நம் வாழ்க்கைக்கு

இந்த பூனைகளும் எலிகளும் பாம்புகளும்

பாடம் சொல்லிக் கொண்டிருக்கின்றனவோ ?

 

நான் இப்படித் தத்துவம் சொன்னால்

இணையருக்கு கோபம் வராதா என்ன ?

 

நடை பயிற்சியின் போது இனி பேசக்கூடாது ….

நேற்றின் பாடம்… நடக்குமா ?

 

சுபொஅ.

 

 

 

 

 

 

 


ஒரு புத்தகமும் 11 + 1 பேர்கள் விமர்சனமும் ….

Posted by அகத்தீ Labels:

 





ஒரு புத்தகமும் 11 + 1  பேர்கள் விமர்சனமும்   ….


ஓசூர் புத்தகக் காட்சியில் இம்முறை ஒரு சோதனை முயற்சி செய்யப்பட்டது . தமுஎகச வோடு இணைந்து . புத்தக விமர்சனம் என்பதை ஒரு போட்டியாக்கியது . ஒரு புத்தகத்தை பலர் விமர்சனம் செய்ய வேண்டும் . சிறந்த விமர்சன்ங்களுக்கு பரிசு உண்டு .

 

இம்முறை எடுத்துக் கொள்ளப்பட்டது என்ன தெரியுமா ? “ வானி” எனும் இளையோருக்கான நாவல் . 11 பேர் பங்கேற்றனர் .அதில் இரண்டு மாணவர்கள் . பெண்கள் 6 , ஆண்கள் 5 . முதல் முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாக இருப்பினும் முயற்சி நிறைவாக இருந்தது . நான் நடுவராகப் பங்கேற்றேன்.

 

எல்லோரும் புத்தகத்தை வாசித்து வந்திருப்பதை உணர முடிந்தது . அவரவர் அந்நூல் கூறும் செய்தியை தங்கள் வாழ்க்கை அனுபவத்தோடு உரசி ‘ சுற்றுச் சூழலை’ பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையைப் பகிர்ந்தனர் . வெறும் கதைச் சுருக்கமாக இல்லாமல் கருத்துச் செறிவோடு பேசியது மகிழ்ச்சி அளித்தது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் .

 

நூலின் பெயர் ’வாணி’ அல்ல ’வானி’ . ஏன் மூன்று சுழி போடாமல் இரண்டு சுழி போடப்பட்டது . வானி என்பது சரியே ஏன் ? எல்லோரும் விளக்கினார்கள் . இங்கே சொன்னால் எப்படி ? நூலை வாசித்து அறிக !

 

பவானி ஆற்றில் விஸ்கோஸ் ஆலை நச்சுக் கழிவு நீர் கலந்ததால்   தண்ணீர் மாசாகியது ,பொது மக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு தோல் நோய் ,புற்று நோய்ப் பரவ காரண மாகியது . இதனை எதிர்த்து சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போராடி நதியை மீட்டதே கதை .

 

கதாநாயகி டாக்டர் சத்திய சுந்தரியும் அவர் பேத்தி நித்திலாவும் தான் கதையின் மைய பாத்திரங்கள் . அவர்களின் உரையாடலே பெரும்பகுதி கதையை நகர்த்தியது . டாக்டர் சத்திய சுந்தரி , டாகடர் ஜீவா ஆகியோர் உண்மையில் அப்போராட்டத்துக்கு முன் நின்றவர்கள் . அமைப்பாக்கியவர்கள் . மக்களுக்கு விழிப்பூட்டியவர்கள் ,

விழிப்புணர்பிரச்சாரம் ,சட்டப் போராட்டம், மக்கள் பங்கேற்பு ,ஊடகக்குரல் எல்லாம் சேர்ந்து வெற்றியை ஈட்டியது .இதனை பேசியவர்களில் பலர் சுட்டிக்காட்டினர் .

 

நான் இங்கு கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை . வாசியுங்கள் ! வாசித்த பின் பேசிய ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்ட தென்பெண்ணை ஆற்றைப் பற்றி கவலையைப் பகிர்ந்தார் . ஒரு பெண் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தோடு நினைவு கூர்ந்தார் .ஒருவர் காவிரி மாசுபடுவதைச் சொன்னார் . ஒருவர் குடிநீர் சவாலைச் சொன்னார் .

 

நான் முடிவுரையில் பெங்களூரில் 1200 ஏரிகளில் நூறு மட்டுமே மிச்ச மிருப்பதை ; ஒரு மருந்து கம்பெனி கழிவால் என் வீட்டருகே உள்ள காச்சநாய்க்கன் ஹள்ளி ஏரி நாசமானதை . குடிநீர் தட்டிப்பாட்டில் கிராமமே அல்லாடுவதை . இப்போது ஏரியை மறு சீரமைக்க நடக்கும் முயற்சியைச் சொன்னேன் .

 

ஒரு நாவல் மேலும் பல உண்மைகளைப் பார்க்கத் தூண்டியது என்பது அந்நூலுக்கு பெருவெற்றி ஆகும் !

 

கடைசியாக ஒரு வேண்டுகோள் ஓசூர் புத்தகத் திருவிழா அமைப்பாளர்களுக்கும் தமுஎகசவினருக்கும் ! இனி ஒவ்வொரு ஆண்டும் இதனைத் திட்டமிடுவீர் ! பத்து நாட்கள் பத்து புத்தகங்கள் என யோசிக்கலாம் . சுற்றுச்சூழல் ,மனித உரிமை ,பாலின சமத்துவம் , மத நல்லிணக்கம் , விடுதலைப் போராட்ட வரலாறு  இப்படி பல பொருண்மைகளை மையப்படுத்திய நாவல் ,சிறுகதை , கவிதை ,ஆய்வு நூல் , உரைநடை என வகைக்கொண்றாய் எடுக்கலாம் . யோசிப்பீர் அன்பர்களே !


வானி [ இளையோர் நாவல் ]

ஆசிரியர் : ஈரோடு சர்மிளா ,

சூழல் அறிவோம் பதிப்பகம் ,

91-8825857649 / 

suzhalarivom@gmail.com   


சு.பொ.அகத்தியலிங்கம்.

 


 

 

பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

Posted by அகத்தீ Labels:

 


பசு மாட்டோடு சேர்த்து நம்மையும் பாடாய்ப் படுத்தும் புத்தகம்…..

 

 


பேராசிரியர் .பி. ராஜமாணிக்கம் எழுதிய  பசு மாடு படும் பாடு’ என்னும் இச்சிறிய புத்தகம்  [ 32 பக்கங்கள் ] ஒவ்வொரு வரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .

 

சில கேள்விகள்…

1] பசு மாட்டின் சிறுநீர் புற்று நோயைக் குணப்படுத்துமா ?

2] பசு மாட்டின் சிறுநீரில்  தங்கம் இருப்பது உண்மையா ?

3] பசு மாடு ஆக்சிஸனை சுவாசித்து ஆக்சிஸனை வெளியிடுகிறதா ?

4 ] பசுஞ்சாணம் கதிர்வீச்சைத் தடுக்குமா ?

5] பசு மாட்டின் பூர்வீகம் எது ? அது எங்கே பிறந்தது ? மூதாதையர் யார் ?

 

இப்படி சில அடிப்படையான கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக ஆணித்தரமான பதில்களைத் தருகிறது இந்நூல் .ஆகவே ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டுகிறேன்.

 

தமிழ்நாடு அறிவியல் இயத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பேரா.பி. ராஜமாணிக்கம்  தேவையான நேரத்தில் , மிக அவசியமான இந்நூலை எழுதி இருக்கிறார்  . மாட்டுக்கறி வெறுப்பு அரசியலுக்குள் நுழையாமல் வேறு தளத்தில் நின்று அறிவியல் பூர்வமான நான்கைந்து கேள்விகளுக்கு மட்டும் தக்க ஆதாரத்துடன் பதில் சொல்லி இருக்கிறார். படங்கள் ,கார்ட்டூன் , சிந்திக்கத் தூண்டும் அட்டை என புத்தகம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளது .

 

புரளிகளை அறிவியல் என விற்கும் புழுகுணிப் பிரச்சாரங்களில் சிக்கிக் கொண்ட மக்களை விடுவிக்க ஒவ்வொருவருக்கும் இந்நூலைப் பரிசளியுங்கள் !  அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் இதனைக் கருத்தில்க் கொள்க !

 

பசு மாடு படும் பாடு , ஆசிரியர் : பேரா.பி. ராஜமாணிக்கம் , வாசல் வெளியீடு , 40 D / 3 – முதல் தெரு ,வசந்தா நகர் , மதுரை 625 003 , vasalviji@gmail.com + 91 98421 02133 . பக்கங்கள்: 32 , விலை : ரூ.42 /

 

சுபொஅ.

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:

 நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

 

 


நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

ஓங்கி உயர்ந்த கட்டிடங்களையா ?

விளம்பரத்தில் மினுக்கும் வர்த்தக நிலையங்களையா ?

கார்ப்பரேட் கொளையை பொதிந்த பெரும் நிறுவனங்களையா ?

பளபளப்பான கல்வி ஏலக் கடைகளையா ?

மரண வியாபாரத்தில் கல்லா கட்டும் மருத்துவ மனைகளையா ?

பகட்டும் போலித்தனமும் நிரம்பி வழியும் மெகா திருமண மஹால்களா ?

பாலம் ,சாலை ,ரயில் ,பஸ் ,கார் ,ஆட்டோ ,டூ வீலர் நெரிசல் நெரிசல் இதுதான் அடையாளமா ?

நின்று பேச நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களா ?

நுனி நாக்கு ஆங்கிலமும் நவநாகரீக உடையும் காதோடும் கண்ணோடும் ஒட்டிக்கொண்ட அலைபேசியுமாய் திரியும் இளைஞர்கள் இளைஞிகளையா ?

நகரென்று எதைச் சொல்கிறீர்கள் ?

நவீனத்தோடு கைகுலுக்கினும் சாதி ,மத ,பாலின வன்மத்தை சுமந்து திரியும் மானுடம் கொன்ற மனித உருவங்களையா ?

அம்பேதர் சாதி ,மத ஒடுக்குமுறையின் கொடூர உறைவிடமாய்  ; ஆதிக்கம் , ஏற்ற தாழ்வு மிக்க கிராமங்களைக் கண்டு கொதித்தார்

கிராமங்களின் நகலாய் திரியும் மனித மந்தை உலவும் சந்தையை நகரம் என்று எப்படி அழைப்பது ?

 

சுபொஅ.

 

 

Posted by அகத்தீ Labels:

 



கணணுக்கெடிய தூரம் வரை ஒளிக்கீற்றுத் தெரியவில்லை .

இருட்டு என்பதும் குறைந்த ஒளிதான் ; கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொன்றாய் புலப்படும் .

தேவை ; கொஞ்சம் நம்பிக்கை ,கொஞ்சம் தைரியம் , நிறைய ஞானம் .

இதுவரை கடந்ததைவிட , பல மடங்கு கொடிய பாதையே நம்முன் விரிகிறது.

முடங்க முடியாது .அடிபணிய முடியாது . முட்டி மோதி நடந்து கொண்டே இரு !

முடிந்தவரை கூட்டம் சேர்த்துக் கொள் ! எல்லோரும் கடைசிவரை வருவார்கள் என எதிர்பார்க்கதே !

அவரவர் சக்திக்கு ஏற்ப , புரிதலுக்கு ஏற்ப வருவதுவரை வரட்டும் !

மயக்கம் தெளியாவிட்டால் மரணம் . மயக்கம் தெளிந்துவிட்டால் விழிப்பு...

நட ... பேசு ... ஓடு ... கத்து .... இன்னும் ... இன்னும் ... இன்னும் ... இன்னும் ....


சுபொஅ.

Posted by அகத்தீ Labels:

 




கீழ்வானில் சூரியன் உதிக்கும் நொடியில்

மெல்ல ஜன்னலில் வந்தமர்ந்து

கொஞ்சிக் கொண்டிருக்கும் ஜோடிப்புறாக்கள்

இரவு சரியாகத் தூங்கி இருக்குமோ ?

 

நேற்று இரவு முழுவதும் தூக்கத்திலும்

விழித்து விழித்து குரைத்த நாய்கள்

விடியும் முன்பே ஓடத்  துவங்கிவிட்டன

என்ன அவசர வேலையோ ? யாரறிவார் ?

 

நிற்காமல் ஊர்ந்து கொண்டே இருந்தன

வரிசை மாறா எறும்புகள்

ஒரு வேளை வானிலை அறிக்கையைக் கேட்டு

தூங்காமல் இடம் பெயர்கிறதோ ?

 

இரவிலும் தூங்கி பகலிலும் தூங்கி

வாழ்வையும் நாட்டையும்

கோட்டை விட்டுக்கொண்டிருக்கிறானே

இந்த பாழும் மனிதன் ....

 

சுபொஅ.

 

 

 

 

Posted by அகத்தீ Labels:

 



’கமலாலயன் : இலக்கிய பெரினா விருது 2016 – சிறப்பு வெளியீடு’ வாசித்தேன் . 133 பக்கங்களில் கமலாலயன் பற்றி ஓர் பருந்துப் பார்வை அறிமுகம் எனில் மிகையல்ல .

 

சிறுகதை ,நாவல் ,மொழிபெயர்ப்பு ,கட்டுரை என பல முனைகளின் அவர் அளித்தப் பங்களிப்பை இந்நூல் பட்டியலிடுகிறது . பாவண்ணன் , உதயஷங்கர் இருவரின் கட்டுரைகளும் கமலாலயனின் காத்திரமானப் பங்களிப்பைச் சொல்கிறது .

 

கமலாலயனின் ‘ நகரப் பருந்துகள்’ எனும் குறுநாவல் இந்நூலுக்கு அழகு சேர்ப்பதோடு கமலாலயனின் சமூக அக்கறையையும் கூர்த்த பார்வையையும் பறை சாற்றுகின்றன . வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் செய்யும் அட்டகாசம் ; அதற்கு துணைபோய் அரசு பேருந்துகளை பழிவாங்கும் காவல்துறையும் நிர்வாகமும் இன்றும் தொடர் கதை . வேலூரில் இது தொடர்பாக நடந்த போராட்டத்தை ரத்தமும் சதையுமாய் பதிவு செய்கிறது இந்நாவல் . மனித உயிரைவிட லாபம்தான் உயிர்நாடியாகிப்போன சமூக அவலத்தின் சாட்சி . இன்னும் சொல்லப் போனால் 1990 களில் நடந்த ஓர் நிகழ்வை உள்ளது உள்ளபடி துல்லியமாய் பதிவு செய்துள்ளது .இதுவும் வரலாறு அன்றி வேறென்ன ?

 

முதுமையின் வலியைச் சொல்லும் ‘ ஓய்ந்தவர்கள்’ சிறுகதையும் , வாழ்க்கை துயரையும் கடவுள் நம்பிக்கையும் சேர்த்து பகடி செய்யும் ஓர் நுட்பமான சிறுகதையும் இதில் இடம் பெற்றுள்ளன .

 

இக்கதைகள் ஏற்கெனவே வெளிவந்தவைதான் . இங்கு இவரின் ஆற்றலை படம்பிடித்துக் காட்ட தரப்பட்டுள்ளது .

 

இத்துடன் இவரின் பன்முகத்தைக் காட்டும் நான்கு கட்டுரைகளும் ஓர் நேர்முகமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன .இவையாவும்  இவர் விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் என்பதற்கு சாட்சியாகிறது .

 

வாலிபர் சங்கத்தில் தொடங்கிய எங்கள் தோழமை இன்றுவரை அதே உயிர்ப்புடன் தொடர்கிறது . தோழரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.

 

தேநீர் பதிப்பக வெளியீடு .விலை : ரூ140 / தொடர்புக்கு 9080909600.

 

சுபொஅ. 

இரங்கற் குறிப்புகளில்

Posted by அகத்தீ Labels:

 

இரங்கற் குறிப்புகளில்

சொல்லப்படுபவை  எல்லாம்

உண்மைதானேன்று

இறந்தவரா சாட்சி சொல்லுவார்

 

அஞ்சலி உரைகளில்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசப்படவில்லை என

மரித்தவரா மறுமொழி சொல்லப்போகிறார்

 

நினைவுகூரும் சடங்குகளில்

வரலாறு திரிக்கப்படவில்லை என

வாக்குமூலம் தந்திட இறந்தவர்

மீண்டும் வரவா போகிறார் ?

 

மேடைகளில் சொல்லப்படும்

இறந்தவர் பெருமைகள்

பெரும்பாலும் கட்டுக்கதைகளாய்

சிறுத்துப் போனது எப்படி ?

 

நான் கேட்டுக்கொண்டிருந்த போது

இடைமறித்த இறந்தவர்,

 வாழும் போது மட்டும் புகழ்கையில்

உண்மையா பொங்கி வழிகிறது?” 

 

இருப்பவரோ இறந்தவரோ

அவரவர் தேவைக்கு

கூட்டியும் குறைத்தும்

கதை கட்டவேண்டியதுதான் .

 

ஆனாலும் 

அடுத்தவரால் நெய்யப்படும்

வாழ்க்கைக் கதையைவிட

சுயவரலாற்றில் பொய் குறைந்து

உண்மை கொஞ்சம் நெருங்குமல்லவா ?

 

[ சமூக வலைதளங்களில் பட்டி மன்ற பேச்சாளர்களும் ரீல்ஸ் பிரியர்களும் அவிழ்ந்துவிடுகிற பொய் மூட்டைகளுக்கு எதிர்வினையே இது . ]

 

சுபொஅ.

 

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

Posted by அகத்தீ Labels:

 



பாலியல் வன்கொடுமை :

விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…

 

’தப்பு’ நாவலைத் தாமதமாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆயின் சரியானதைப் படித்தேன் என உறுதியாகச் சொல்லலாம் . கதை நேர்கோட்டுப் பாதையில் எளிமையாய்ச் செல்கிறது . திருப்பங்களும் இயல்பு போக்கிலேயே நடக்கிறது. தப்பு ஓரிடத்தில் மட்டுமே இல்லை திரும்பகிற இடமெல்லாம் தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு …..

 

ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு . முதலில் குழந்தை மீதான பாலியல் வன்முறை என்ற வகையில் தொடங்குகிறது . பின் 28 வயதுப் பெண் என நகர்கிறது .பெண்ணின் பெயர் சின்னப் பொண்ணு   அவள் மனநிலைப் பிறந்தவள் என காணப்பட்டு , அதன் பின் அவள் வயிற்றில் ஏழுமாதக் கர்ப்பமோடு இருப்பதைச் சொல்லி , அப்புறம் அக்குழந்தை வயிற்றில் செத்து இருப்பதை கண்டுபிடித்து … இப்படி நாவல் சிக்கல் மேல் சிக்கலாக நகருகிறது . குற்றவாளி யார் என்பதுதான் சஸ்பென்ஸ் . இது கிரைம் நாவல் அல்ல .சமூக நாவல் . சமூகத்தை ஸ்கேன் செய்து காட்டும் நாவல் .

 

கிட்டத்தட்ட நாவல் முழுவதும் ஆய்வாளர் மனோன்மணியம் பார்வையில் நகர்கிறது . நாவல் நெடுக மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமும் போலித்தனமும் தோலுரிக்கப்பட்டுக்கொண்டே கதை நகர்கிறது .

 

காவல்துறை ,அரசு மருத்துவமனை இவற்றின் செயல்பாடு அன்றாடம் சமூக வாழ்வோடு நெருங்கி இருப்பதால் . இவற்றின் மீது எல்லோருக்கும் எரிச்சலும் கோபமும் இருக்கும் . அதற்கான நியாயமும் உண்டு . பணம் ,அதிகாரம் ,சாதி ,மதம் , அரசியல் செல்வாக்கு இவற்றின் கோரப்பிடி இங்கு வலுவாகவே உண்டு .

 

இங்கேயும் மனித இதயமும் , நீதி நேர்மைமீது பசிதாகமும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் . இங்குள்ள ஊழியர்கள் ,டாக்டர்கள் ,காவல்துறையினர்  படும்பாட்டை இந்நாவல் காட்டுகிறது .கிராமமோ நகரமோ தோற்றத்தைக் கண்டோ , பேச்சைக் கேட்டோ ஒருத்தரை எடை போட்டுவிட முடிவதில்லை .ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் உண்மைகளும் மிகவும் ஆழமானவை . குரூரமானவை .அருவருப்பனவைகூட .கசப்பானவைம்தான் .

 

பாலியல் குற்றவாளி யார் ? அவர் தண்டிக்கப்பட்டாரா ? நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . ‘ தப்பு’ என உன் ஒற்றை விரல் பிறரை நோக்கி நீளும் போது ஏனைய நான்கு விரல்களும் உன்னை நோக்கி நீள்கிறது . பாலியல் வன்கொடுமை பெரும் அநீதி . அயோக்கியத்தனம் . ஆயின் அதன் விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய் விரவிக் கிடப்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது . 24 வது அத்தியாயத்தின் மனோத்த்துவ மருத்துவரோட உரையாடல் நாவல் வாசிக்கிறவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றிவிடுகிறது . மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது .

 

நாவலை வாசித்து விடுங்கள். நாவலிருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்டுவதுகூட முழுவாசிப்புக்குத் தடையாகிவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் .கட்டாயம் வாசியுங்கள் !

 

தப்பு [ நாவல் ], நாராயணி கண்ணகி , எழுத்து பிரசுரம் , zerodegreepublishing@gmail.com , 89250 61999 , பக் : 284 , விலை : ரூ. 340 /

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

Posted by அகத்தீ Labels:

 




பிரச்சனைகளை டி கோடிங் decoding செய்து பார்த்தால்......

 

மனச்சோர்வு விடைபெற…. : ஓர் உரையாடல்.” என ஒரு கட்டுரையை இங்கு பதிந்திருந்தேன் . அதனை வாசித்த பலர் பாராட்டினர் .சிலர் கேள்வி எழுப்பினர் . கேள்விகள் எப்போதும் எனக்குப் பிடித்தமானவை . அதில் ஒரு கேள்வியை முன்வைத்து இன்றைக்குப் பேசலாம் எனக் கருதுகிறேன் .

 

“நாம் என்னதான் யோசித்துத் திட்டமிட்டுச் செய்தாலும் எதிர்பாராமல் ஏதேனும் நடந்து நம் முயற்சிகள் எல்லாம் வீணாகிவிடுகின்றனவே , இதனை விதி என்றோ தலையெழுத்து என்றோ  சொல்லாமல் வேறெப்படி புரிந்து கொள்வது ?”

 

யதார்த்தமான நியாயமான கேள்வி . ஒவ்வொருவரும் தம் வாழ்வில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை நிறையவே எதிர்கொண்டிருப்பீர்கள் . இன்னும் சொல்லப்போனால் சிறிதாகவோ பெரிதாகவோ இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள் .

 

கடன் வாங்காமல் பட்ஜெட் பத்மநாபன் போல் மிகமிகச் சிக்கனமாக வாழ்பவர் . அவருக்கு கஞ்சன் என்றே வீட்டில் கெட்ட பெயர் . மனைவி பிள்ளைகளுக்கு எல்லாம்கூட அவர் மேல் கோபம் . சினிமாவுக்கு போகும் போதுகூட பட்ஜெட்டுக்குள் அடக்குபவர் . அவர் வீட்டில் அப்பாவுக்கு திடீரென ஓர் விபத்து . மருத்துவச் செலவு எகிறுகிறது . கடன் வாங்க நேர்கிறது .

 

இது விதியா ? தலை எழுத்தா ? இல்லை நம் குடும்ப பட்ஜெட்டில் எதிர்பாரா மருத்துவச் செலவு , கல்விச் செலவு ,வருங்காலத்துக்கான சேமிப்பு இவற்றுக்கான ஒதுக்கீடு செய்யும் அளவு வருமானம் இல்லை என்பதுதானே உண்மை . மருத்துவம் இலவசம் என்கிற அரசியல் சூழலும் இல்லை .நம் வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாய் போகையில் எதிர்காலத் திட்டமிடல் சாத்தியமாகுமா ? விலைவாசி ஏறிக்கொண்டே இருக்க வருவாய் அதற்கொப்பக் கூடாமல்த் தேங்கும் சூழலில் ,வருவாயில் முப்பது சதம்  குறைந்தது இருபது சதம் சேமியுங்கள் என்று சொல்லலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியமா ? சமூக அரசியல் சூழலிலின் நெருக்கடியைப் பற்றி யோசிக்காமல் விதி ,தலையெழுத்து என பேசி தப்பிக்க இயலுமா ?

 

ஒரு வேலைக்கான இண்டர்வியூவுக்குப் போக ரயிலில் டிக்கெட் போட்டிருந்தான் . திடீரென ஏற்பட்ட ரயில் விபத்தால் போக்குவரத்து முடங்கிப் போய்விட்டது . அவனால் போக முடியவில்லை . தன் தலை எழுத்து என நொந்து கொள்கிறான் . உண்மையில் இது ஒரு தற்செயல் நிகழ்வு . பஸ் ,விமானம் ,கார் என மாற்று பயண ஏற்பாட்டை முயற்சி செய்ய அவன் முயலாமல் இருந்திருக்கலாம் . அல்லது அதற்கான பண ஏற்பாடு முடங்கி இருக்கலாம் .அதற்கான நேரம் கடந்திருக்கலாம் .வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம் . சம்மந்தப்பட்ட நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு சூழலை விளக்கி மறுவாய்ப்பு பெற முயற்சித்திருக்கலாம் . ஒரு வேளை எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டிருக்கலாம் . இது எதிர்பாரா நெருக்கடி . தற்காலிகப் பின்னடைவு . அடுத்து முயன்று முன்னேறுவதுதான் தீர்வு .விதி ,தலையெழுத்து ,நம்ம நேரம் சரியில்லை என முடங்கிவிட முடியாது .

 

Breadwinner என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் , தன் ஒற்றைச் சம்பாத்தியத்தால் குடும்பத்தையே காப்பாற்றுகிறவர் என்று சொல்லப்படுகிற குடும்பத் தலைவர் எதிர்பாரா விபத்தில் மரணித்துவிடுக்கிறார் . பேரிழப்பு . ஈடு செய்வது மிகச் சிரமம் .

 

 நம்ம விதி அப்படி ,நம்ம தலயில அப்படி எழுதியிருக்கு ,நம்ம பொறந்தநேரம் அப்படி போன்ற சொற்கள் கண்ணீருக்கும் அழுகைக்கும் சொல்லப்படுகிற தற்காலிக சமாதானங்களே தவிர தீர்வல்ல . வாழ்க்கை முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டதுபோல் ஆகலாம் .அதற்காக அங்கேயே தேங்கிவிட முடியுமா ?வாழ்க்கை என்பது முட்டுசந்தல்ல ; முடங்கி நிற்க ; பயணப் பாதையை மாற்றி நடக்கும் நேரம் . அவ்வளவுதான்.

 

இப்படிச் சொல்லிக் கொண்டே போக முடியும் விபத்துகளும் தற்செயல் நிகழ்வுகளும் வாழ்க்கை நெடுக குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும் . அப்போது வலியில் துடிப்போம் . அந்நேரம் வலி நிவாரணி போல் ஒரு சில சொற்கள் பயன்படலாம் .ஆயின் அது முடிவல்ல .தீர்வல்ல.அங்கேயே வாழ்க்கை தேங்கிவிடாது .

 

தனக்கு மட்டுமே இப்படி நிகழ்வதாக நினைத்து வருந்தலாம் . ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது இன்னொரு சந்தர்ப்பத்தில் இதுபோல் நிகழ்ந்திருக்கும் . ஆக , உலக ஞானம்தான் இந்த அறியாமையிலிருந்து விடுதலை தரும் .

 

ஒரு பழைய பாடல் நினைவிற்கு வந்தது

 

 “ஆ ஈன மழை பொழிய இல்லம் வீழ

    அகமுடையாள் மெய் நோவ அடிமை சாக

     மாஈரம் போகுதென்று விதை கொண்டு ஓட

     வழியிலே கடன்காரர் மறித்துக்கொள்ள

      சாவோலை கொண்டொருவன் எதிரே வர

      தள்ளவொணா விருந்து வர சர்ப்பம் தீண்ட

      கோவேந்தர் உழுதுண்ட கடனைக் கேட்க

     குருக்களோ தட்சணைகள் கொடு என்றாரே” 

 

பாடலின் பொருள் நம்மை அதிரவைக்கும் . மிகவும் சோகம் ததும்பும் கதையைச் சொல்லும் . ஒருவன் வீட்டில் பசுமாடு கன்று போட்டிருந்ததாம். அது மகிழ்ச்சிதான் எனினும் மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த அவஸ்தை உடனே புரியும். ஏனெனில் அப்போது வீடே நச நச என இருக்கும். வெள்ளம் புகுந்த வீடு மாதிரி இருக்கும். அப்போது மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தால் நிலை கேட்கவே வேண்டாம் .அந்நேரம் பார்த்து மனைவிக்கு உடம்பு சரியில்லை எனில் வீடே நாறிப்போய்விடும். சட்டென்று வீடும் இடிந்து விழுந்து விட்டால் கேட்கவும் வேண்டுமா துயரம் . வீட்டு வேலைக்காரும் வரவில்லை , விசாரித்தால் அவரும் செத்துவிட்டாராம் ..  கிடப்பது கிடக்கட்டும் நமது வயலுக்கு இப்போது தண்ணீர் / ஈரம் உள்ள நேரம் ஆதலால் விதைப்போம் என்று வயல்வெளிக்கு ஓடியபோது ;  வழியில் கடன்காரர் மறித்துக்கொண்டால் எப்படி இருக்கும் ? அந்தநேரம் பார்த்து. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டார் என்று சாவோலை  வந்தால் அழுவதற்கும் நேரம் இருக்குமா . இப்படி நிலை இருக்க மறுக்கவே முடியாத சொந்தக்காரர் ஒருவர் திடீரென விருந்துக்கு வந்துவிட்டாராம். வீட்டில் ஒருவரை பாம்பும் தீண்டிவிட்டதாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் விவசாயத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிக் கேட்டு வாசலில் நின்றனர் ஆட்சியாளர்கள். நேரம் காலம் தெரியாமல்  குருக்கள் எனக்கு சேரவேண்டிய தட்சணை கொடு என்று அடம் பிடித்தாராம் !

 

சும்மா கற்பனைதான் எனினும் இப்படி அடுக்கடுக்காகத் துன்பம் படை எடுப்பது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் விவகாரம்தானே ! இது மனித குலத்துக்கான பொது விதி . ஆயிண் இப்பாடலைக் கூர்ந்து கவனித்தால் புரியும் ;  ஓர் ஆட்சி மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுகிற ஆட்சியாக இருப்பின் இதில் சொல்லப்பட்ட பல பிரச்சனைகளே அல்ல .இன்றைய பாணியில் சொல்வதாயின் டி கோடிங் decoding செய்து பார்த்தால் பிரச்சனைகளை எளிதாய் புரிந்து கொள்ளலாம் ; தீர்வின் நுனி கையில் அகப்படும் . 

 

எனவே விதியென்றோ தலையெழுத்தென்றோ எதையும் எண்ணி முடங்க வேண்டியதில்லை .சிலவற்றின் காரணம் பளிச்செனப் புலப்படும் .சிலவற்றின் காரணம் உடனே புலப்படாது . தற்செயலாகவோ விபத்தாகவோ இருக்கலாம் ; அல்லது நாம் யோசிக்கத் தவறிய புதிய கோணமாக இருக்கலாம் .புதிய சவாலாக இருக்கக்கூடும் . 

 

விதி ,தலையெழுத்து என சோர்ந்து கிடந்தால் பிரச்சனையிலிருந்து வெளியேறவே முடியாது .கவலையே கொன்றழித்து தின்றுவிடும் . மனதை தைரியமாக்கிக் கொண்டு இதிலிருந்து மீள்வது எப்படி என யோசிக்கத் தொடங்கினால் , முயற்சியைத் தொடங்கினால் தொலைதூரத்திலேனும் வெளிச்சம் புலப்படும் . விடாப்பிடியாக நகர்ந்து நெருங்கலாம் .பிரச்சனைகளைக் கண்டு பயந்து ஓடாமல் ; மனோதைரியத்துடன் எதிர்கொள்வதுதான் நம்முன் உள்ள ஆகச் சிறந்த வழி .

 

 

Natarajan Narayanaswamy என்பவர் என் பதிவொன்றில் சொல்லி இருக்கிறார் ,” கம்யுனிசம் ஒரு கானல் நீர். அதை ரசிக்கலாம். நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாதது.” இதற்கு விரைவில் பதில் சொல்ல முயல்வேன்….

 

சு.பொ.அகத்தியலிங்கம்

01 /06 /26 .

 

 

 

 

 

 

l