கடவுள் கணக்கும் கவலையும் ….

Posted by அகத்தீ Labels:

 

கடவுள் கணக்கும் கவலையும் ….

 

கடவுள்கள்கூட எல்லோரும் சமம் அல்ல .கார்ப்பரேட் கடவுள்கள் , வசதியான கடவுள்கள் ,கஞ்சிக்கு வழியில்லாத கடவுள் , புலால் சாப்பிடாத கடவுள் ,புலால் சாப்பிடும் கடவுள் ,தீண்டக்கூடிய கடவுள் ,தீண்டாமை அனுஷ்டிக்கும் கடவுள் ,சீசனுக்கு சீசன் வந்து போகும் கடவுள், சாதிக்கொரு கடவுள் ,கலவரம் செய்யும் கடவுள், சேரிக்கு வர மறுக்கும் கடவுள் இப்படி விதவிதமாய் உண்டு .

 

ஆனால் எந்தக் கடவுளும் ஏழையை இரட்சித்ததாய் இதுவரை சாட்சிகள் இல்லை .கடவுள்கள் எப்போதும் லஞ்சம் அதுதான் காணிக்கை கொடுக்கும் பணக்கார பக்தர்களுக்கும் , வேஷம் கட்டி மோசடி செய்யும் சாமியார்களுக்குமே துணையாக இருக்கின்றன .

 

இந்தியா முழுவதும் ஆறு லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன . இவற்றில் கிராம தேவதைகள் ,நாட்டார் கோயில்கள் , தெருவோர திடீர் கோயில்கள் அடங்காது .

 

தமிழ் நாட்டில்தான் அதிகம் கோயில்கள் இருப்பதாக கூறப்படுகிறது . அதாவது சுமார் 79 ஆயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளதாக புள்ளிவிவரம் காணப்படுகின்றது . இதில் 38,675 கோயில்கள் மட்டுமே அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் வருகின்றன .

 

கோவில்கள் இவ்வளவு இருந்தாலும் எல்லா கோயிலும் ஒன்றல்ல . தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால்  அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூபாய் 2 லட்சத்துக்கு மேல் பத்து லட்சம் வரை வருமானம் வரும் கோயில்கள்  492  தான் . பத்து லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோயில்கள் 536 மட்டுமே !

 

ஆக 2.66 விழுக்காடு கோயில்கள் அதாவது 1,028 கோயில்கள் மட்டுமே  வசதி படைத்த சாமிகளைக் கொண்டது . மீதி 97 விழுக்காடு சாமிகள் அதாவது 37,647 கோயில்களில் சாமியின் அன்றாட சோற்றுக்கும் துணிக்கும் விளக்குக்கும் பெரிய கோயில்கள் கொடையாளர்கள் தயவில் அண்டிப் பிழைப்பவைதான் .

 

சிதம்பரம் போல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராத கோயில்கள் , சங்கர மடம் ,மேல்மருவத்தூர் ,கோவை ஜக்கி , கல்கி , வேலூர் பொற்கோயில் போன்ற பலவும்  கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் புரளும் பெரும் நிறுவனங்கள் எந்தக் கட்டுபாடும் அற்ற தனியார் கொள்ளைக் கூடங்கள் .

 

வந்துபோன அத்திவரதர் கணக்கையே ஊன்றி கவனித்தால் ஆட்டையப் போட்டதே அதிகம் என்பதை அறியலாம்.

 

திருப்பதிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கார்ப்பரேட் கடவுள் .  வட்டிக்கடைக்கு ஊருக்கு ஊர் கிளை திறப்பதுபோல் திருப்பதி மாநில மாநிலமாய் கிளை திறக்கிறது .அங்கு எல்லா கணக்குமே நாமம்தான் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள் .

 

அயோத்தி ராமர் கோயிலை திருப்பதி போல் இன்னொரு மாபெரும் கார்ப்பரேட் கோயிலாக்க சங்கிக்கூட்டம் திட்டமிட்டு வருகின்றது .பெரும் ஊழல் இப்போதே அதை சுற்றி அரங்கேறிவிட்டது .

 

திருவனந்தபுரம் பத்மனாமசாமிகள் கோயிலுக்குள் சுரங்க அறைகளில் பாதுக்காக்கப்படும் தங்கம் ,வெள்ளி ,வைரம் ,வைடூரியம் எல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் கிஞ்ஞ்சிற்றும் பயனற்று “ பூதம் காத்த புதையலாய்” வீணாக அடைந்து கிடக்கிறது .

 

இவை இந்து மதக் கணக்கு மட்டுமே . மசூதி ,தர்க்கா ,சர்ச் ,வழிபாட்டிடம் , குருத்துவாரா,புத்த விஹார் ,சமண கோயில் இத்யாதி இத்யாதி கணக்குகள் தனி . ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதே உண்மை .

 

 

புதிதுபுதிதாய் தினம் தினம் முளைக்கும் கோயில்கள் ,சர்ச்சுகள் ,மசூதிகள் ,தர்க்காக்கள் ஏராளம் . ஏராளம்.

 

கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்று சொன்னார்களாம் முன்பு ; இப்போது கோயிலோ மசூதியோ ,தர்க்காவோ ,தேவலாயமே , பிள்ளையாரோ ,மேரியோ ஏதோ ஒன்று இல்லா தெருவோ ,சந்து ,பொந்தோ இந்தியாவில் இல்லவே இல்லை .இதுபோக வீடு , அலுவலகம் ,அடுக்ககம் , பிய்ந்த குடிசை ,ஓடும் வாகனங்கள் எங்கும் ஏதோ ஒரு கடவுள் ஒட்டிக்கொண்டே இருப்பார் . ஆனால் விமோச்சனம்தான் கண்காணாத் தொலைவில்.

 

ஏற்கெனவே உள்ள சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகள் போதாது என புதிது புதிதாக தினம் ஏதோ ஒன்றை கதை கட்டி பரப்பியவண்ணம் உள்ளனர் .அதுவும் யூ டியூப்புகளும் இணைய சங்கிகளும் 24 x 7 மணி நேரம் மூளையைக் கசக்கி பொய்யையும் புனை சுருட்டையும் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள் .போலி அறிவியலையும் புனைசுருட்டையும் கலந்து வியாபாரம் கனஜோராய் நடக்கிறது .

 

இவற்றைச் சுற்றி பெரும் பொருளாதார வட்டம் இயங்குகிறது .இந்த மதநிறுவனங்கள் சார்ந்த்து ஒரு கொள்ளைக்கூட்டமே பவனி வருகிறது . பல லட்சம் மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இவற்றை சுற்றியே பின்னப்பட்டு உள்ளது .

 

இவற்றைச் சுற்றி அரசியல் இயங்குகிறது .அதிகார மையம் இயங்குகிறது .மூடநம்பிக்கைகளும் அறியாமைகளும் இவற்றைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன .

 

பண்பாடும் தத்துவமும் வாழ்நெறியும் கூட இவற்றை சுற்றியே கட்டமைக்கப் படுவதால் அறிவுக்கும் சமத்துவத்துக்கும் விலங்கிடப்படுகிறது .

 

அதேசமயம் பள்ளி ,கல்லூரி ,மருத்துவமனை என மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு இவற்றிலிருந்து செலவிடும் தொகை குறுகிய சதவீதமே.

 

மூளையில் பிணைக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கை விலங்கை உடைப்பது அவ்வளவு எளிதானதல்ல . ஆயின் சமூக சமத்துவத்துக்கான தொடர் போராட்டத்தில்  இவற்றை அம்பலப்படுத்தாமல் கடந்து செல்லவே முடியாது .

 

செம்பில் களிம்பு சேராமல் சாம்பலால் துலக்கிக் கொண்டே இருப்பது போல் மனித மூளையில் கசடுகள் சேராமல் அறிவியல் துணையோடு கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

 

 

சுபொஅ.

1/9/2023.

 

 


ஒரே நாடு ஒரே மந்திரம்

Posted by அகத்தீ Labels:

 


ஒரே நாடு ஒரே மந்திரம்

 

 

சந்திராண்யா நமஹ ! சந்திராண்யா நமஹ !

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

 

வேலை கிடைக்கலையா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

விலைவாசி ஏறிபோச்சா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

மணிப்பூர் எரிகிறதா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

7.5 லடசம் கோடி டிமோ ஊழலா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

கழிவுநீர்க் குழாய் மரணங்களா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

சிறு குறு தொழில் நசிவா கவலைவிடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

ரூபாய் மதிப்பு வீழ்ந்து போச்சா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

அதானி துறைமுகத்தில் 3000 டன் போதை மருந்தா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

விவசாயிகள் வாழ்வுரிமை பிரச்சனையா கவலைவிடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

தொழிலளர் நலன் பாதிப்பா கவலை விடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

தலித் ,பழங்குடியினர் ,சிறுபான்மையோர் வாழ்வுரிமையா ?

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

பாலின சமத்துவமா கவலைவிடு

ஓம் ! சந்திராண்யா நமஹ !

 

என்ன ஜி ! எதைக் கேட்டாலும் ஒரே மந்திரத்த சொல்றீங்க

ஒரே நாடு ஒரே மந்திரம்

 

என்ன ஜி ! அநியாயமா இருக்கு

 

தேஷ் பக்தி ஹை …

அயோத்தி ராம் மந்திர் ! ஜெய்ராம்! ஸ்ரீ ராம் !

ஓம் ! சந்திராண்யா நமஹ !

ஷிவ் ஷக்தி நமஹா !

 

சுபொஅ.

28/8/2023.

 

 

 

 

 

 

 

 


மகாராஜா ஏன் அழுதார் ?

Posted by அகத்தீ Labels:

 


மகாராஜா ஏன் அழுதார் ?
ஊரெங்கும் இதே கேள்வி
கண்ணில் தூசி விழுந்ததால் என
அதிகாரி சொன்னார்
ஆனந்தக் கண்ணீர் என
விதூஷகன் சொன்னார்
தேஷ்பக்தி என்று
சங்கீஸ் உபந்யாசம் செயதனர்
மகாராஜா தனக்குள் சொல்லிக்கொண்டார் ;
“ என் வேதனை எனக்கு
நான் வன்முறையைத் தூவுகிறேன்
ஆனாலும்
நான் அனுபிய பஜ்ரங் சேனையைத் தவிர
யாரும் வன்முறையை நேசிக்கவில்லையே!
நான் எங்கும் வெறுப்பை விதைக்கிறேன்
ஆனாலும்
அன்பின் பரப்பு எப்படி விரிகிறது?”
அருகில் இருந்த அழுக்கு மூட்டை சொன்னது
“ மகாராஜா ! நாம் எதைச் சொன்னாலும்
மக்கள் எள்ளி நகையாடுகின்றனரே !
பேசாமல் ! சிரிப்பதற்கு
தடை போட்டு விடலாமா ?”
“ போயா ! நீயும் உன் யோசனையும்
நம்ம நிதி மந்திரி வரி போட்டபின்
எவன் சிரிக்கிறான் எங்கு சிரிக்கிறான்
நம் நண்பர்கள் ஓரிருவரைத் தவிர…”
மகாராஷாவும் அழுக்கு மூட்டையும்
கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்தனர் …
ஊர் சிரித்தது …
சுபொஅ.
17/8/2023.
All reactions:
You, Chinniah Kasi, பா. ஜீவ சுந்தரி and 116 others

கவலையில் விஸ்வகுரு

Posted by அகத்தீ Labels:

 


ஆஞ்சநேயர்
கைவிட்டுவிட்டார்
இப்போது
ராமனையும் முழுதாய்
நம்ப முடியவில்லை
துர்க்கா, முருகன்.ஐயப்பன்
யாரும் துணைக்கு
வருவதாய் தெரியவில்லை
சிவனை ,கிருஷ்ணனை
தோண்டி எடுத்தாலாவது
துணை நிற்பார்களா ?
கவலையில் விஸ்வகுரு
சுபொஅ.
19/8/2023.

நொந்து நூடுல்ஸான மூத்த குடிமகன்

Posted by அகத்தீ Labels:

 


எல்லாவற்றுக்கும் ஆன் லைனில் புகார் செய்யலாம் .உடன் புகாருக்கான பதிவு எண்ணும் கிடைக்கும் .எல்லாம் சரிதான் . எங்கள் அனுபவம் வேறு.
முதலில் நம்பரை டயல் செய்ததும் இந்திக்கு ஒன்றை அழுத்தவும் ஆங்கிலத்துக்கு இரண்டை அமுக்கவும் தமிழுக்கு மூன்றை அழுத்தவும் .அதை அழுத்திய பின் அதற்கு ஒன்றை அழுத்தவும் இதற்கு இரண்டை அழுத்தவும் எதற்கும் மூன்றை அழுத்தவும் , நாலை அழுத்தவும் இப்படி ஒண்பது வரை .அப்புறம் இன்னொன்றுக்கு 1,2,3.4 ன்னு தொடரும் . டைம் அவுட் ,உபயோகித்தற்கு நன்றி ,மீண்டும் முயற்சிக்கவும்.
இப்படி ஒன்றல்ல ,இரண்டல்ல ,பலமுறை முயற்சித்தும் காரியம் நடக்காது என் அனுபவம் அப்படி.
என் போன்ற மூத்த குடிமக்கள் காதும் சரியாக கேட்காது ;கவனிப்பதும் பிசகும் . மீண்டும் மீண்டும் எத்தனை முறை முயற்சிப்பது ?
எங்களுக்காக டயல் செய்ததும் குறைகேட்டு பதிய ஒரு ஏற்பாடு செய்யக்கூடாதா ?
நொந்து நூடுல்ஸான மூத்த குடிமகன்
சுபொஅ.
19/8/2023.

புல்டோசருக்கு தெரியுமாம்

Posted by அகத்தீ Labels:

 
புல்டோசருக்கு தெரியுமாம்

எது முஸ்லீம் வீடென …

கொலைவாளுக்குத் தெரியுமாம்

எந்த உடல் பட்டியல் இனமென…

தீ நாக்குக்குத் தெரியுமாம்

எது தலித் குடிசை என…

கடப்பாரைக்குத் தெரியுமாம்

எந்த கடவுள் எதிரியென …

உங்களுக்குத் தெரியுமா ?

மனிதம் என்பது யாதென…

 

சுபொஅ.

13/8/2023.

 


எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ?

Posted by அகத்தீ Labels:

 


எருமை மீது எமனை

உட்கார வைத்தது யார் ? எப்போது ?

 

 “சிந்துவெளி நாகரிகம் தொட்டு இந்தியா முழுவதும் பரவியிருந்த திராவிட பண்பாட்டின் கூறாக சங்க இலக்கியத்தை பார்த்து , தமிழர் பண்பாட்டை அதன் அரசியல் வெப்பத்தோடு இந்நூல் பேசுகிறது .இந்நூலை ஒரு முறைக்கு இருமுறை வாசித்து உள்வாங்குவது மிக அவசியம். இந்தியாவின் பன்மைத்துவத்தை மறுக்கும் பாசிசம் கவ்வும் வேளையில் இந்நூல் புதிய சாளரத்தைத் திறக்கிறது .”

 

என 2021 ஆண்டு நவம்பர் மாதம்  ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய   “சங்கச் சுரங்கம் – முதலாம் பத்து – கடவுள் ஆயினும் ஆக ” நூல்  குறித்து நான் எழுதிய நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டேன்.

 

இன்று [ 12/8/2023] “சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை” நூலை படித்து முடித்தேன் . முதல் நூலுக்கு நான் எழுதியதையே மீண்டும் இங்கு முதல் கருத்தாய் முதல் பத்தியில் வழி மொழிந்துள்ளேன்.

 

இந்நூலில் இடம் பெற்றுள்ள பத்து உரைகளும் பத்து கோணத்தில் தமிழர் பண்பாட்டு வேரை நோக்கி நம்மைப் பயணப்பட வைக்கிறது . பத்தும் என்னைக் கவர்ந்தன ஆயினும் எருமை , பானை , விளையாட்டு ,காற்று , சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் ஆழ்ந்த வாசிப்புக்கு உரியன .இன்னொரு வகையில் வசையும்இசையும் ,பண்புடைமையும் பண்பின்மையும் ,நடுவுநிலைமை , எனும் கட்டுரைகள் புது பார்வை தருவன . ஏனைவை மதுரை குறித்தும் உலகெங்கும் பரந்த தமிழன் குறித்தும் புன்னையும் வன்னியும் குறித்தும்  சுவையான செய்திகள் தருவன .ஆக பத்தும் முத்துதான். இங்கே அனைத்தையும்  விரிவாகச் சொல்லல் சாத்தியமல்ல ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.

 

பசுவுக்குத் தரும் முக்கியத்துவம் ஏன் எருமைக்குத் தரப்பட வில்லை ? ஆனால் ஆதியில் இருந்தே எருமை நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது அல்லவா ? நீர் எருமை இந்தியாவில்தாம் முதன் முதலில் வீட்டு விலங்காகப்  பழக்கப்பட்டது என்பதும் ; இங்கிருந்தே மொசபட்டோமியா  சென்றது என்பதும் ,பால் உற்பத்தியில் இன்றும் எருமைப்பாலின் பங்கே அதிகம் என்பதும் ,எருமை இறைச்சி ஏற்றுமதியே அதிகம் என்பதும் வெறும் தகவல் அல்ல . இன்றும் பழங்குடியினர் வாழ்வோடு எருமை பிணைந்திருப்பது முக்கியமானது .

 

எருமையைப் பற்றி நம் சங்க இலக்கியம் நிறையச் சொல்கிறது .ஓரம் போகியார் எனும் புலவர் எருமைப் பத்து என பத்து பாடல்களை அகநானூற்றில் எழுதி இருக்கிறார் .நற்றிணை ,பெரும்பாணாற்றுப் படை .தொல்காப்பியம் ,திருக்குறள் கலித்தொகை ,அகநானூறு உட்பட எருமையை பற்றி குறிப்பிட்ட சங்க இலக்கிய வரிகள் பலவற்றை நூலாசிரியர் சுட்டி நிறுவி இருப்பது கவனிக்கத்தக்கது .

 

இக்கட்டுரையின் கடைசியில் ஆர் .பாலகிருஷ்ணன் எழுப்பிய கேள்விகள் முக்கியமானவை .

 

“ இந்தியாவில் வளர்ப்பு விலங்காகப் பழக்கப்பட்ட எருமை ஏன் எப்போதிருந்து பசுவாக்கப்பட்டது ?

சிந்துவெளிப் பொறிப்புகளில் முத்திரைகளில் கம்பீரமான காளை, சடங்கு வழிபாட்டு முறைகளோடு சித்தரிக்கப்படுகையில் பசுமாட்டு முத்திரையோ பொறிப்போ ஏன் இல்லை ?

பழங்குடி மக்களின் வாழ்வியலில் எருமையின் இடம் இன்னும் மாறவில்லை என்பது எதைக் காட்டுகிறது ?

சங்க இலக்கியம் எருமையைப் போற்றுவதற்கான சமூக உளவியல் மற்றும் தொன்ம மரபுகளையும் அதன் பின் நேர்ந்த தாக்கங்களையும் எப்படி மீள் கட்டமைப்பு செய்வது ?

எருமை மீது எமனை உட்கார வைத்தது யார் ? எப்போது ?”

 

ஓர் பண்பாட்டு சதி அல்லது பண்பாட்டுத் திணிப்பு நடந்துள்ளதை இக்கேள்விகள் சொல்லாமல் சொல்கிறது .

 

அடுத்து பானையும் குயவனும் எப்படி எங்கும் பண்பாட்டு வேரின் முக்கிய கண்ணியாக இருந்துள்ளனர் என்பதுதான். .

 

“கலம் என்ற சொல்தான் மையம் . அதுதான் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது . இன்று நாம் ‘பானை என்று சொல்வது ஓர் இடத்தில்தான் வருகிறது .’பானையன்என்ற ஓர் மனிதன் பெயர் வருகிறது .மற்றபடி தாழி ,குழசி ,பிழா [தட்டு ,பானை] ,குடம் ,வட்டி ,துதை [சிறு கலம்],மடாஅ[மடா] [ இன்றுகூட யாராவது குடிகாரனாக இருந்தால் மடா குடிகாரன் என்று சொல்வார்கள்]தடவு ,தசம்பு ,வள்ளம் [கிண்ணம் ,கோப்பை],கரகம் ,குடம் முதலிய சொற்கள் பயன் படுத்தப் பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் .

 

நற்றிணை ,பதிற்றுப்பத்து ,மலைபடுகடாம் ,அகநானூறு ,சிறுபாணாற்றுப்படை , ஐங்குறு நூறு ,பெரும்பாணாற்றுப்படை ,புறநானூறு என நெடுக பானையும் குயவனும் வந்து போவதை நூலாசிரியர் ஆதாரங்களுடன் நிறுவுகிறார் .

 

சீனர்களின் சில்க் ரூட் எனப்படும் பட்டுப்பாதை ,ஸ்பைஸ்ரூட் போல இந்தியாவில் ‘ பானைத்தடம் பற்றி நூலாசிரியர் பேசி சிந்து சமவெளி ,குஜராத் ,ராஜஸ்தான் ,தமிழ்நாடு ,கீழடி என  நம்மையும் அழைத்துச் சென்று காட்டுகிறார்.வரலாற்றுதடம் வியக்க வைக்கிறது . பானையில் கீறப்பட்ட குறியீடுகள் பற்றி பேசுகிறார் .

 

குயவர் படைப்பாளர் என்ற நிலையில்  முன்பு ஓங்கி இருந்ததும் ,அந்த படைப்பாளர் பின்னர் சமூகத்தின் தாழடுக்கில் தள்ளப்பட்டதும் குறித்து இக்கட்டுரை பேசுகிறது . பானையைக் கீறியவனே எழுத்தைக் கொண்டுவந்தான் எனச் சொல்கிற நூலாசிரியர் ,”அதனால்தான்சங்க இலக்கியம் அவனைமுதுவாய் குயவ என்று சொல்கிறது .’பண்டைய அறிவு பொருந்திய குயவன் என்று சொல்கிறது .

 

 “ விளையாட்டும் விரும்பார் கொல்” எனும் கட்டுரை தமிழ்ச் சமூகத்தில் விளையாட்டின் இடத்தை தெற்றென படம் பிடிக்கிறது .பகடைக்காய் குறித்து குறிப்பாகப் பேசுகிறது . பண்டை தமிழ்கத்தில் ஆண்கள் மட்டும் விளையாடுவது 10 ,பெண்கள் மட்டும் விளையாடுவது 15 , இருபாலரும் விளையாடுவது 12 என்கிற புள்ளிவிவரங்களோடு பேசும் இக்கட்டுரை நிறைய செய்தியை நமக்குச் சொல்கிறது .’விளையாட்டும் விரும்பார் கொல்’ என்கிற சங்க காலப் பண்பாடு பற்றி அறிய வாசிப்பீர் இக்கட்டுரை .

 

குட [மேற்கு ] ,குண [கிழக்கு] .தென்றல் [தெற்கு ] ,வாடை [வடக்கு] என திசையோடு சேர்த்து காற்றைப் பேசிய சங்க இலக்கியத்தோடு நம்மை அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் .

 

“ வெள்ளிக்கு வெளிச்சம் காட்டிய சங்கத்தமிழ் கடவுளை மறுக்கவில்லை , ஆனால் கடவுள் பிறக்கும் போதே நீரும் நிலமும் வானும் தீயும் இருந்தன என்ற இயற்கையின் இயல்பைத் தமிழ் அறிந்திருந்தது . காற்றின் மீதும் நீரின் மீதும் ,தீயின் மீதும் தமிழர்களுக்கு கவனிப்பு இருக்கிறது .ஆனால் அதற்கு அவர்கள் கடவுள் உருவம் கொடுக்க வில்லை.” என்கிறார் நூலாசிரியர் .

 

புன்னை மரத்தையும் வன்னி மரத்தையும் முன்வைத்து பேசும் ,’நும்மினும் சிறந்த நுவ்வை’ கட்டுரைச் செய்திகள் சுற்றுச்சூழல் சார்ந்த நம் விரிந்த பார்வையை வரலாற்று ,பூகோளத் தொடர்புகளோடு நம்மிடம் உரையாட வைக்கிறது .

 

 “ஆக , உலகளாவிய அளவில் பார்த்தாலும் சரி , தமிழ்த் தொன்மங்கள் காட்டுவதானும் சரி ,இசையும் நிற்கும் வசையும் நிற்கும் .சிலர் கல்யாண வீட்டில் மாப்பிளையாக இருக்கவும் ,இறப்பு வீட்டில் பிணமாக இருக்கவும் ஆசைப்படுவார்கள் .ஏனென்றால் அவர்களைத்தான் திரும்பத் திரும்ப புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள் . இந்த புகழாசை மிகவும் மோசமானது . இந்தப் புகழாசை மயக்கக்கூடியது .புகழ் என்பது அறம் சார்ந்ததாக ,ஆக்கம் சார்ந்ததாக ,சுயநலம் கடந்ததாக ,எதிர்காலத்தைக் கருதியதாக இருக்க வேண்டும்.” என சங்க இலக்கிய சான்றுகளோடு சொல்லும் “ வசையும் நிற்கும் ,இசையும் நிற்கும்” கட்டுரை உளவியலோடு நம்முடன் உரையாடுகிறது .

 

“ பண்பாடு என்பது வேறொன்றுமில்லை .நாம்தான் மகாத்மா காந்தி அடிகள் என தனித்து விலகி நிற்க முயற்சிக்கும் எந்தப் பண்பாடும் வாழ் முடியாது என்று குறிப்பிட்டுள்ளதையும் இங்கு நினைவுகூர்வோம் . உலகெங்கும் ஒடுக்கப்படுவோர் சார்பில் ஒலிக்கும் குரல்கள் அனைத்திற்கும் இவ்வுரை காணிக்கை “ என ஓரிடத்தில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார் .

 

சங்க இலக்கியத்தில்  கடந்த காலம் குறித்த “மீள் நினைவுகள் இருக்கின்றன,” என்பதை முந்தைய நூலைப் போல இந்த நூலிலும் வலுவாக எடுத்துக் காட்டுகிறார்.

 

 “ இப்படி ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்துப் பேசலாம் .சங்க இலக்கியச் செய்தி ஒன்றை எடுத்து அதை இந்திய வரலாற்றோடும் சிந்துவெளியோடும் இயைத்துக் காட்டும் ஆய்வு முறை தமிழுக்கும் இந்திய வரலாற்றுக்கும் புதியது.” என மிகச் சரியாகச் சுட்டுகிறார் பெருமாள் முருகன் முன்னுரையில்.

 

ஆய்வு எனில் உடன்படவும் மறுக்கவும் இடம் உண்டுதானே ! இந்த ஆய்வு நூலிலும் யாரும் முரண்படலாம்.கேள்விக்கு உள்ளாக்கலாம் .அதன் மூலம்  இன்னும் தெளிந்த விசாலப் பார்வையை நாம் பெறக்கூடும்.

 

தற்பெருமிதங்களைத் தாண்டி ஆழ வேர்கொண்டு நிற்கும் தமிழர் பண்பாட்டை நாம் மிகச் சரியாய் உள்வாங்க உரையாடலைத் தொடங்குவோம் !! அதற்கு  இந்நூல் நிச்சயம் துணை நிற்கும் !!!

 

 

சங்கச் சுரங்கம் – இரண்டாம் பத்து – அணிநடை எருமை

ஆசிரியர் : ஆர் .பாலகிருஷ்ணன் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

தொடர்புக்கு :24332924 / 9498062424  , email : bharathiputhakalayam@gmail.com  , www.tamizhbooks.com  பக்கங்கள் : 167 ,  விலை : ரூ.160 /

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

12/8/2023.

 

வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும்.

Posted by அகத்தீ Labels:

 

 


வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும்.

 

 

மிழ்நாட்டு வரலாறு என்றதும் சேரன் ,சோழன் ,பாண்டியன் ,பல்லவன் என நம் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள செய்தியோடு இந்நூலைப் புரட்டுவோர்கள் ஏமாந்து போவார்கள் . இந்நூலில் ஏழு பகுதிகளில் அடங்கியுள்ள 25 கட்டுரைகளும் வரலாறு என்பது என்ன ? வரலாற்றைப் புரிந்து கொள்வதென்பது யாது ? வரலாற்றின் உயிர்த் தடங்கள் எவை என்பதை நமக்குப் பாடம் சொல்லும் .

 

கா.அ.மணிக்குமார் வெவ்வேறு இதழ்களில் பல ஆண்டுகளாக தனித்தனியே எழுதிய கட்டுரைகளை /நேர் காணலை /நூல் மதிப்புரைகளை ஒரே நூலில் கோர்த்துப் படிக்கும் போது ஒரு புதிய பார்வைக் கோணம் நமக்குப் புலப்படுகிறது.

 

புராணப் புனைவுகளை ,புருடாக்களை வரலாறு என சொல்லிக் கொடுக்க பாஜக அரசு கடும் முயற்சி செய்யும் காலத்தில்  இந்நூல் புதிய வழித்தடத்தில் நம்மை இட்டுச் சொல்கிறது .

 

” விடுதலைக்கு முன்பும் பின்புமாக சமூக வன்முறைகளை சாதிக் கலவரங்களாக பலரும் திரித்து கூறி வந்த நிலைக்கு மாற்றாக அவற்றை சமுக நீதிக்காகவும் , சமத்துவத்திற்காகவும் , சுயமரியாதைக்காகவும் என நிறுவும் மணிக்குமார் , இப்போராட்டங்கள் பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்பில் உண்டாக்கியுள்ள மாற்றங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்.” என முன்னுரையில் ஆதவன் தீட்சண்யா கூறுவது மிகை அல்ல.

 

இந்நூல் ஏழு பகுதிகளை உள்ளடக்கியது . முதல் பகுதி இந்திய வரலாற்று சான்றுகள் ,ஆரியர் திராவிடர் சர்ச்சை .பிராமண எதிர்ப்பு , புத்தமதக் கோட்பாடுகள் என ஓர் இந்திய வரலாற்று அறிமுகமாகவே அமைந்துவிட்டது.

 

இரண்டாம் பகுதி , ஆங்கில வருகையையும் பொருளாதார மாற்றங்களையும் சொல்லிச் செல்கிறது . தாதாபாய் நெளரோஜி அன்றே தொலை நோக்கோடு சொன்ன பொருளாதாரச் செய்திகள் முக்கியமானவை. “இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் [ 1880 - 1905 ]”எனும்  பிபன் சந்திரா  எழுதிய நூலின் தமிழ் மொழியாக்க நூலுக்கு அறிமுகமாக மணிக்குமார் எழுதிய கட்டுரையே "காலணிய இந்தியப் பொருளாதாரம் ‘ எனும் கட்டுரை  [பிபின் சந்திரா நூல் குறித்த அறிமுகத்தை 2013 செப்டம்பரில்  நான் எழுதியது நினைவுக்கு வந்தது .] .மணிக்குமார்  குறிப்பாக பயணிப்பது ’பொருளாதார வரலாறு எனும் நுட்பமான பிரிவு ஆகும். அது குறித்த அவரின் நேர்காணல் ஏழாவது பகுதியில் இடம் பெற்றுள்ளது .

 

மூன்றாம் பகுதி , விடுதலைப் போரில் தமிழ் நாட்டின் பங்கான வரலாற்றின் சில அத்தியாயங்களைப் பேசுகிறது .வேலூர்ப் புரட்சி , திருநெல்வேலி உருவாக்கம் , விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள் பங்கு எனும் கட்டுரைகள் அறிய வேண்டிய செய்தி .

 

நான்காம் பகுதி சமூக எதிர்ப்பு இயக்கங்கள் குறித்த ஓர் அழுத்தமான பார்வையை முன் வைக்கிறது . நூலாசிரியர் சொல்கிறார் ;

 

“ பெரும்பாலும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் பொழுதே சமூக வன்முறைகள் வெடிக்கின்றன .அவை பின்னர் சமூக இயக்கங்களாக உருவாகின்றன . சமுதாயத்தில் அதிகாரமற்ற பிரிவினர் தாங்கள் விரும்பிய மாற்றத்தைக் கொண்டுவர சமூக வன்முறைகள் அவசியம் என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர் .ஆனால் வன்முறை தழுவிய அத்தகைய ஜனநாயக இயக்கங்கள் பெரும்பான்மையும் சாதிய மோதல்களாகவும் சாதியக் கலவரங்களாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளன .சமூகநீதிப் போராட்டத்தில் மக்களுடைய பங்கை மறுத்து அல்லது மறைத்து சில தலைவர்களை மட்டுமே போராளிகளாக உயர்த்திக் காட்டும் தமிழகப் பாரம்பரியமும் அதற்கு ஓர் முக்கிய காரணமாகும்.”

 

இந்த கோணத்தில் நாடார்கள் போராட்டம் , சிவகாசிக் கொள்ளை ,கழுகுமலைக் கலவரம் ,முதுகளத்தூர் கலவரம் , தென் மாவட்ட சாதிய மோதல்கள் , இடங்கை வலங்கைப் பிரச்சனை , கொடியங்குளம் ,கீழ்வெண்மணி ,நாலுமூலைக் கிணறு ,பிளாக் டவுண் கலவரம் ,பெத்து நாயக்கன் பேட்டை மோதல் ,தாமிரபரணி படுகொலை உட்பட நிறைய சமூக மோதல்களை சுட்டி அவற்றை வரலாற்றின் ஓர் முக்கிய கூறாக உணர வைத்துள்ளதில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது .

 

 நூல் அறிமுகங்களும் ,நேர் காணலும் ஓர் பரந்த பார்வையைக் கொடுக்கின்றன . ஐந்து மற்றும் ஏழு பகுதிகள் இவ்வகையினால் ஆனது . இந்திய வரலாற்றில் தென் இந்தியாவிற்கு இடமில்லை என்கிற கட்டுரை இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம் .இடதுசாரிகள் எழுதும் வரலாற்று நூலிலும் இப்போக்கு நிரம்பி உள்ளது ; அதிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப் படுகிறது என்பது என் அழுத்தமான கருத்து.  அம்பேத்கர் குறித்து மணிக்குமார் கூறிய ஒரு  கருத்தில் ஆதவன் தீட்சண்யா மாறுபடுகிறார் .[ எனக்கும் ஆதவன் தீட்சண்யா கூறும் அதே கருத்தே.]

 

ஆறாவது பகுதியாக இடம் பெற்றுள்ள ,வரலாற்று பேரறிஞர் எரிக் காப்ஸம் குறித்த கட்டுரை வரலாறு குறித்த நம் பொதுபுத்தியை திருத்தி நேர் செய்து சரியான திசையில் பயணிக்க உந்துவதாக அமைந்துள்ளது .

 

மொத்தத்தில் வரலாறு குறித்த பழுதான பார்வைகளை இனங்காணவும் ; புதிய திசை வழியில் பயணிக்கவும் உதவும் நூல் . வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும்.

 

தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும்,

ஆசிரியர் : கா.அ.மணீக்குமார் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,

தொடர்புக்கு :24332924 / 8778073949   bharathiputhakalayam@gmail.com

பக்கங்கள் : 304 , விலை : ரூ .280 /

 

சுபொஅ.

2/08/2023.