பிரார்த்தனையும் புதிய பிரார்த்தனையும்

Posted by அகத்தீ Labels:#பிரார்த்தனையும் புதிய பிரார்த்தனையும்

கொடுங்கோல் மன்னன் துறவியிடம் கேட்டான்;
“ பிரார்த்தனைகளிலே மிகச் சிறந்தது எது ?”

துறவி சொன்னார் ;
“ உங்களைப் பொறுத்த மட்டில் உறக்கம்தான்.”

மன்னன் விழித்தான்…

துறவி சொன்னார் ;
“நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போதாகிலும்
மக்கள் துன்புறுத்தப்படாமல் இருக்கிறார்கள் அல்லவா ?
அதனால்தான்..”

இது சா அதியின் பாரசீகக் கவிதை .மொழியாக்கம் என்.ஆர்.தாசன்.
அன்றைக்கு எழுதிய கவிதை .இன்றைக்குப் பொருந்துமா ?

“மன்னரோடு துறவியும் உறக்கம் என்கிற உயர் பிரார்த்தனையில் ஈடுபடட்டும் . அப்போதாலும் மக்கள் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கிடைக்கும் அல்லவா ?”
என திருத்தம் சொன்னாள் சிஷ்யை .

சு.பொ.அகத்தியலிங்கம்.
27 செப்டம்பர் 2019.

அந்தச் சாலையில்…

Posted by அகத்தீ Labels:

அந்தச் சாலையில்…

இடி,மின்னல் ,மழை
வெள்ளம் வழிந்தோடியது
கால் வைத்தால் வழுக்கும்
சேறும் சகதியும்
சாலையாய் பல்லிளித்தது
மின்சாரமும் திடீர் விடுப்பு
ஊரே இருண்டு மிரட்டியது
தெருவே வெறிச்சோடியது

அந்தச் சாலையில்
கொட்டும் மழையில்
குடைகூட இல்லாமல்
கந்தல் புடவை முந்தானையில்
கைப்பிள்ளையை பொத்தியபடி
ஒற்றையாய் நடந்து செல்லும்
தாயின் வைராக்கியமும்
வாழ்க்கை வலியும்
உரக்கச் சொன்னது
அவள்
பூங்கொடி அல்ல
போர்க்கொடி .

நம்பிக்கை பாடத்தை
வேறு எங்கிருந்து
கற்கப் போகிறீர்கள் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
24 செப்டம்பர் 2019.

#முதியோர் தீர்மானம்

Posted by அகத்தீ Labels:

#முதியோர் தீர்மானம்

முதியோர்கள் சபையில்
’இன்னும் அழைப்பு வரவில்லை’
என்கிற ஆதங்கம்
கேட்காத நாளிருக்காது !

நோயில் விழாமல்
பாயில் கிடக்காமல்
பட்டென்று உயிர்பிரியும்
வரம் கேட்கா முதியோர் அபூர்வம் .

எங்கே பேச்சு தொடங்கினும்
மரணத்தைத் தொடாமல்
முதியோர் சபை
ஒரு நாளும் கலைந்ததில்லை .

இன்றொரு குரல் வித்தியாசமாய்
ஆனால் ஆத்மார்த்தமாய் வெளிப்பட்டது
 ‘பாசிசப் பேயிருள் தேசத்தைச் சூழ்கிறது .
பகத்சிங்காக வெளிப்பட இளவயது அல்ல
காந்தியாய் போராட சூழல் சரியில்லை
இனியும் வாழ்ந்து பயன் என்ன ?’

முதியோரின் உள்ளக் கிடக்கை
இளையோர் நெஞ்சில் நெருப்பை மூட்டுமோ ?
அது முதியோர் நெஞ்சில் பால் வார்க்குமோ ?
ஏக்கத்தோடு கலைந்தது
இன்றைய முதியோர் சபை !

சு.பொ.அகத்தியலிங்கம்.
20 செப்டம்பர் 2019.