அந்தச் சாலையில்…

Posted by அகத்தீ Labels:





அந்தச் சாலையில்…

இடி,மின்னல் ,மழை
வெள்ளம் வழிந்தோடியது
கால் வைத்தால் வழுக்கும்
சேறும் சகதியும்
சாலையாய் பல்லிளித்தது
மின்சாரமும் திடீர் விடுப்பு
ஊரே இருண்டு மிரட்டியது
தெருவே வெறிச்சோடியது

அந்தச் சாலையில்
கொட்டும் மழையில்
குடைகூட இல்லாமல்
கந்தல் புடவை முந்தானையில்
கைப்பிள்ளையை பொத்தியபடி
ஒற்றையாய் நடந்து செல்லும்
தாயின் வைராக்கியமும்
வாழ்க்கை வலியும்
உரக்கச் சொன்னது
அவள்
பூங்கொடி அல்ல
போர்க்கொடி .

நம்பிக்கை பாடத்தை
வேறு எங்கிருந்து
கற்கப் போகிறீர்கள் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
24 செப்டம்பர் 2019.

0 comments :

Post a Comment