அரசு + கோயில் + பெரும்வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்

Posted by அகத்தீ Labels:அரசு + கோயில் + பெரும் வணிகம் = இந்துத்துவ கொடும் விஷம்


சு.பொ.அகத்தியலிங்கம் .

 “கடவுள் சந்தை” எனும் நூலின் தலைப்பே அதிர்ச்சியும் ஈர்ப்பும் கொண்டது .கடவுளும் மதமும் வியாபாரப் பொருளாக்கப்படுகிறதா அல்லது கூட்டாளியாகி பெரும் சீரழிவுக்கு காரணமாகிறதா? இந்நூல் பேசுவது இதைத்தான்.

“உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துவாக்குகிறது.”எனும் உபதலைப்பு நூலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் எனும் உந்துதலை ஏற்படுத்திவிட்டது .

நூலை வாசித்து முடித்தபின் நம்மை அறியாமலே நம்மிடம் அவ்வப்போது தலைநீட்டும் இந்துத்துவ செயல்பாடுகளை சுயஆய்வு செய்ய அகநெருப்பை மூட்டிவிடுகிறது .  

அரசு – கோயில் – பெருவணிகக் கூட்டின் மூலம் ஓங்கும் இந்துத்துவம் குறித்த மெய்விபரங்கள் நம்மிடம் புதிய விவாதத்தை தட்டி எழுப்புகிறது .

இந்நூல் அறிமுகம் உள்ளிட்டு ஆறு அத்தியாயங்களும் அதற்குமேல் பின்னினைப்புகளும் கொண்டது .

13 பக்க அறிமுகம் பகுதியில் நூலின் சாரத்தை பிழிந்து தந்திருக்கிறார் ஆசிரியர் . உலகமயமாக்கல் திறந்துவிட்ட புதிய வாய்ப்பினை இந்துத்துவம் எப்படி நுட்பமாய் கைக்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளது என்பதை எடுத்துகாட்டுவதே இப்புத்தகத்தில் ஓட்டுமொத்த நோக்கென இதில் சொல்லிவிடுகிறார் . ஆம். இதில் ஆசிரியர் தன் இலக்கை எய்துள்ளார் .

 “ இந்துத்துவ கருத்தியலும் தாராளமயப் பொருளாதாரமும் ஒத்துச் செல்லக்கூடியவை மட்டுமல்ல ,ஒன்றுக்கொன்று ஈடு செய்யக்கூடியவை.” என்கிற அய்ஜாஸ் அகமதுவின் மேற்கோள் பொருத்தமாக முதலில் இடம் பெற்றுள்ளது . 59 பக்கங்கள் நீளும் இந்த அத்தியாயம் நேருகாலப் பொருளாதாரம் ,நடைமுறை அவற்றில் நற்கூறுகள் , பலவீனங்கள் , அதையொட்டி உருவான அரசியல் போக்குகள் இவற்றை விளக்குகிறது. .

நேருவியத்தை எதிர்த்த ஒரு சாரார் சமூகப்பிளவை ஊக்குவிக்கவில்லை ஆனால் இன்னொரு சாரார் சமூகப் பிளவை முன்னிறுத்தினர் .ராஜீவ் , நரசிம்மராவ் ,வாஜ்பாய் , மன்மோகன் என தாராளமயத்தின் பக்கம் நின்றோரை மிகச் சரியாக அடையாளம் காட்டுவதுடன் , எப்படி இந்துத்துவ சிந்தனை அரசின் அனைத்து துறையிலும் மெல்ல ஊடுருவ அனுமதிக்கப்பட்டது என்பதையும் நூலாசிரியர் சுட்டுகிறார் .இந்துத்துத்துவா எழுச்சிக்கு தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசு உள்ளிட்டவை கடைப்பிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கை வழிகோலியதையும் சுட்டுகிறார் . இந்த அத்தியாயத்தை உள்வாங்குவது அடுத்துவரும் அத்தியாயத்தை சரியாகப் புரிய உதவியாகும் .

“கடவுளரின் நெரிசல் நேரம்” எனும் அதிர்ச்சித் தலைப்பு கொண்ட 56 பக்க அத்தியாயம் இந்திய நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் இந்துத்துவம் நோக்கி நகர்வதை படம்பிடிக்கிறது.சடங்குகள் ,பூஜைகள் ,வழிபாடுகள் ,யாத்திரைகள் ,யோகா ,தியானம் ,புராணம் ,பகவத்கீதை என் மத்திய தரவர்க்கம் தலைதெறிக்க ஓடுவதையும் , நிர்வாகயியலோடு கீதையை மகாபாரத்தை இணைத்து பேசுவதையும் , போலி அறிவியல் மூலம் மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்துவதையும் ,இந்த அத்தியாயம் விவரிக்கிறது .

இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது எனில் இந்து மதம் இருப்பதால்தான் ; இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் இந்து பார்வை வேண்டும் .இது போன்ற பார்வைக் கோளாறுகள் மத்திய தரமக்களிடம் ஊன்றிவிட்டதை இந்நூல் சொல்கிறது .

வேலை ,கல்வி ,வாழ்க்கை இவற்றை கேள்விக்குறியாக மாற்றியிருக்கும் நவதாராளப் பொருளாதாரக் கொள்கை உருவாக்கியுள்ள நிச்சயமின்மை ;அதனால் உருவாகும் மனச்சோர்வு ,பதற்றம் ,இவையே உலகெங்கும் மதவெறி மேலோங்க காரணியாகிறது .இங்கு அதுவே நிகழினும் இந்துத்துவா பேரபாயமாய் எழக்காரணமாவதை இந்நூலாசிரியர் கவலையோடு பகிர்கிறார் . 
75 பக்கங்கள் நீளும் அடுத்த அத்தியாயம் “அரசு –கோயில் –பெருவணிக கூட்டினைவும் இந்து தேசியவாதத்தின் இழிவும்.” பற்றி உரக்கப் பேசுகிறது .சடங்கு வெளிகளும் ,அரசியலாக்கப்பட்ட பொதுவெளிகளும் எப்படி இந்து குறியீடுகளால் நிரப்பப்படுகிறது என்பதை பதைபதைப்புடன் சுட்டிக்காட்டுகிறது .
கல்வி தனியார்மயமாவதும் ,ஆன்மீக சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படுவதும் ,அரசின் ஒவ்வொரு நகர்விலும் ,அரசு நிகழ்ச்சிகளிலும் ,செயல்பாடுகளிலும் இந்துமத அடையாளமோ ,மேற்கோள்களோ எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி முன்வைக்கப்படுகிறது .

படித்த மத்தியதர வர்க்கமே போலி அறிவியலை உயர்த்திப் பிடிக்க முனைப்புடன் முன்நிற்கிறது ; தனியார்மயமாகும் உயர் கல்வி இப்போக்கிற்கு உரம் தருகிறது .

இந்தியா பெற்ற ஒவ்வொரு வெற்றியும் ,ஒவ்வொரு பெருமிதமும் இந்தியாவிலுள்ள அனைத்து மத ,சாதி ,இன ,பிரதேச மக்களின் ஒட்டுமொத்த சாதனை என்பதற்குப் பதிலாய் ; அது இந்துமதத்தின் சாதனையாய் பெருமிதமாய் பார்க்கப்படுவதை வேதனையோடு நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார் .அதே சமயம் அது இந்து சனாதன பிராமணிய மேல்சாதிப் பெருமிதமாகவும் சாதனையாகவுமே முன்னிறுத்தப்படுவதை ஆசிரியர் சொல்ல மறந்தது ஏனோ ? தலித்துகள் ,பழங்குடிகள் ,ஒடுக்கப்பட்டோர் முகமும் முகவரியும்கூட அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் ஆசிரியர் இன்னும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாமோ ?

அரசு –கோயில் –பெருவணிகக் கூட்டு மதநம்பிக்கை ,மதப்பெருமிதம் என்கிற கோட்டைத் தாண்டி இந்துத்துவ மதவெறியாக வேகமாய்ப் பரிணாமம் எடுப்பதினை இவ்வத்தியாயம் விவரிக்கிறது .

ஆர் எஸ் எஸ் போன்றவற்றின் சித்தாந்தம் இந்நூலில் விமர்சிக்கப்பட்டாலும் அதன் அமைப்பு பற்றிய நேரடிய விமர்சனம் இல்லை .ஆனால் அதைவிட ஆபத்தான விஷ சித்தாந்தம் கொண்ட  ‘வாய்ஸ் ஆப் இண்டிய’ போன்ற அமைப்புகள் , சீத்தாராம் கோயல் ,ராம் ஸ்வரூப் ,அருண் ஷோரி ,குருமூர்த்தி ,பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் , போன்றோரின் கருத்துகளின் விஷம் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது .

இந்து மதம் தவிர பிற அனைத்து மதத்தையும் இழிந்ததாகவும் ,தகுதியற்றதாகவும் ,அழித்தொழிக்க வேண்டுமென்றும் வாதிடுவதும் , தனியாரிடம் சகலதுறைகளையும் ஒப்படைத்துவிட்டு மக்களை விதியின் விளையாட்டுப் பொருளாய் உருட்டி விளையாட அனுமதிக்கச் சொல்வதும் இவர்களின் இயல்பு .ஆர் எஸ் எஸ் உடன் சேர்ந்து நின்றாலும் இவர்களின் விஷக்கொடுக்கு அதற்கு மேலும் நீளும் என்கிறார் .இந்த பகுதி இடதுசாரிகளே இன்னும் அதிகம் பேசாத அம்சமாகும் .

40 பக்கம் கொண்ட அடுத்த அத்தியாயம் , “ மதச்சார்பின்மையாக்கம் – ஒரு மறு சிந்தனை .” இந்தியாவை மனதிற்கொண்டு எழுதப்பட்டுள்ளது .உலகெங்கும் மதச்சார்பின்மை குறித்து நடக்கும் விவாதத்தினூடே இந்தியாவின் மதச்சார்பின்மையை அடையாளம் காட்ட ஆசிரியர் பெருமுயற்சி எடுத்துள்ளார் .

“கடந்தகாலமோ இன்றோ இந்தியாவின் எல்லா சாதனைகளுக்கும் மாபெரும் இந்து மனதைக் காரணமாகச் சொல்லும் இந்து பெரும்பான்மைவாத மன அமைப்பு வளந்துவருகிறது .மேலும் மேலும் பொதுக்களத்தில் இந்துச் சடங்குகளும் குறீயிடுகளும் சொற்களும் ஊடுருவும் போது , மத அடையாளங்கள் அற்று  மக்கள் வெறும் குடிமக்களாகத் தொடர்பு கொள்ளும்  மதச்சார்பற்ற வெளி குறைந்து வருகிறது.” என வருந்துகிறார் நூலாசிரியர் ;

 “அர்த்தமுள்ள மதச்சார்பற்ற வெளிகளையும் மதச்சார்பற்ற பொதுக் கலாச்சாரத்தையும் உருவாக்குவதைவிட இன்று இருக்கும் இந்தியாவுக்கு பெரும் சவால் வேறு எதுவுமில்லை.” என அடிக்கோடிடுகிறது இந்நூல்.

இந்நூல் தலித் ,மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கோணத்தில் கூர்மையாகப் பிரச்சனைகளைப் பார்த்திருப்பின் இன்னும் தெளிவு அதிகமாயிருக்கலாம் . இருப்பினும் இந்நூலை முன்வைத்து விவாதம் துவங்குவது புது வாயில்களைத் திறக்கக்கூடும் .

இந்நூலை செப்பமுற தமிழாக்கம் செய்த க.பூரணச்சந்திரன் அவர்களுக்கும் , வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள் .

ஆசிரியர் :மீரா நந்தா , தமிழாக்கம் : க.பூரணச்சந்திரன் ,வெளியீடு: அடையாளம் ,1205/1 கருப்பூர் சாலை ,புத்தாநத்தம் 621310 .திருச்சி மாவட்டம். பக் :314 ,விலை : ரூ.300/

[ இந்த நூலறிமுகத்தின் சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய [01/10/2018] தீக்கதிர் ,புத்தகமேசையில் இடம் பெற்றுள்ளது .]


சொல்.33

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .33 [ 1/10/2018 ]

பிக்னிக் [ picnic ] போவது ஒரு நல்ல பண்பாட்டு முயற்சி . பிக்னிக் என்பதற்கு பொருத்தமான தமிழ்ச் சொல் எது ? இதையும் இன்பச்சுற்றுலா என்றே அழைக்கின்றனர் . பிக்னிக் எனினும் பிழையில்லை அல்லவா ?

குடும்ப உறவுகளை அழைத்துக்கொண்டு குலசாமி கும்பிடப் போவது பிக்னிக் ஆகாது .ஏனெனில் அதில் சாதி உறவும் , சடங்குகளுமே மேலோங்கி நிற்கும் .

ஐந்தாறு குடும்பத்தினர் சாப்பாட்டு மூட்டையுடன் மனைவி , குழந்தைகளோடு போனால்தான் அது பிக்னிக் . சாதி ,மதம் மீறிய சந்திப்பாய் அமைவது மிக நன்று .

நாள் முழுக்க ஆட்டம் ,பாட்டம் , உரையாடல் என கவலையை மறந்து கொண்டாடும் மனோநிலை மிக அவசியம் .அங்கே போயும் சொந்தக்கதை சோகக்கதை பேசி நொந்து நூடுல்ஸ்சாய் வருவது பிக்னிக் நோக்கத்திற்கு ஊறு செய்யும் . அப்படி பேசாமல் இருப்பதும் சிரமம் ; ஆனால் அதை மட்டுமே பேசி ஓய்வது பெருங்கொடுமை . கூடிக்களிப்பது என்பது ஒருபெருங்கலை .அதற்கு பழக வேண்டும் .

பிக்னிக் எனப் போய்விட்டு அங்கேயும் பெண்கள் சாப்பாடு பரிமாற ,தட்டுக் கழுவ என ஒதுங்க – ஆண்கள் தம்மடித்தல் , அரட்டை என பொழுதைக் கரைக்க – பிள்ளைகள் கண் மண் தெரியாமல் ஆடி இரத்த காயமாக ; சோகத்தோடு விடுதிரும்பும் கசப்பான அனுபவம் நிகழாதிருக்க வேண்டும் .

எல்லோர் திறமையையும் வெளிப்படுத்தும் களமாகவும் ; ஆரோக்கியமான உரையாடலின் வாய்ப்பாகவும் ; பிக்னிக் அமைய முன்கூட்டியே  திட்டமிடல்களோடு செல்ல வேண்டும் .வழிநடத்துவோர் கூட்டுக்களியை அர்த்தச் செறிவுள்ளதாக்க முன்முயற்சி எடுக்கவேண்டும் .

சுற்றுச்சூழலை கெடுக்காமலிருக்க  பிளாஸ்டிக் போன்ற யூஸ் அண்ட் துரோ ஐட்டங்கள் இல்லாமல் பிக்னிக்கை அமைப்பதும் . காடு ,தோட்டம் ,கடற்கரை , மலை , ஆற்றங்கரை என இயற்கையை போற்றும் நிகழ்வாக பிக்னிக்கை அமைப்பதும் அவசியம் .முற்போக்கு பண்பாட்டு நடவடிக்கை என வாய்ப்பறை கொட்டாமல் செயலில் துவங்கலாமே !


சொல்.32

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .32 [ 30/09/2018 ]

கூழானாலும் குளித்துக்குடி என்று சொன்ன அவ்வையே சனி நீராடு என்றும் சொல்லி இருக்கிறாள் . எதைச் செய்வது ? எது நம் பண்பாடு ? இது ஒரு நண்பரின் குதர்க்கக் கேள்வி .நான் சொன்னேன் . தண்ணீர் வசதி மிக்க இடத்தில் முன்னதைச் செய் ! வறட்சிப் பிரதேசத்தில் பின்னதைச் செய் !

பதில் சொன்ன பின்னும் மனம் ஏதோ குடைந்துகொண்டே இருந்தது . குளித்தல் வாழ்வியல் தேவை .ஆனால் யார் எப்போது குளிக்க வேண்டும் என்பதை அவரவர் சூழலே முடிவு செய்யும் .

கோயில் பூஜாரி குளித்துவிட்டு பணியைத் தொடங்குவது அவரின் தேவை .விவசாயி அப்படி குளித்துவிட்டு வயலுக்கு போவாரா ? வயல் வேலையை முடித்துவிட்டு குளிப்பாரா ?காவிரிக்கரையோரம் இருப்பவர் முங்கிக் குளிக்க விரும்புவர் . வாய்ப்பும் முன்பு இருந்தது .சென்னைவாசி ஒரு வாளித் தண்ணியில் குளித்துப் பழகியாக வேண்டும் .

குளித்தல் ஒவ்வொருவருக்கும் அவர் வாழும் சூழல் ,பணி ,தேவை , உடல்கூறு என பல்வேறு அம்சம் சார்ந்தது .அதற்கு புனித முத்திரை குத்துவதும் ; சாதிய ஒழுக்கமாய் பெருமை பீற்றுவதும் அயோக்கியத்தனம் .

குளித்தல் ஆரோக்கியக்கூறாகப் பார்ப்பின் பிரச்சனை இல்லை .அதற்கு மதத்தின் புனித பூணூல் அணியும் போதே வெறுப்பின் விதை தூவப்படுகிறது .குளித்தல் நம் தேவை ,உரிமை ,வாய்ப்பு அவ்வளவுதான்.

 .

சொல்.31

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .31 [ 29/09/2018 ]

தேங்கிய குட்டை நாறும் .ஓடுகிற தண்ணிக்கு சூதகம் இல்லை .என்பது சொல்வழக்கு .இயங்கிக் கொண்டே இரு என்பதே இதன் சாரம் .

சமூகமாயினும் தனிமனிதராயினும் இயங்கிக் கொண்டே இருப்பது மிகமிக அவசியம் .இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதன் பொருள் , வெறுமே தின்று விளையாடி இன்புற்றிருப்பதுவோ ? அல்லவே அல்ல .தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது என்பதே பொருள் .

தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பது என்பதன் பொருளென்ன ? நடை ,உடை ,நவீன கம்யூட்டர் ,லேப்டாப் ,ஸ்மார்ட் போண் என புதுப்பித்துக் கொள்வது மட்டுமே புதுப்பித்தலாகாது .

இப்படி நவீனமானவர்கூட சாதியம் ,பாலின பாகுபாடு ,பண்பாடு என அனைத்திலும் படுபிற்போக்காய் இருப்பின் அதனால் என்ன பயன் ? மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசிடின் என்ன பயன் ?

சிந்தனையைப் புதுப்பித்துக்கொண்டே இரு !திறந்த மனதோடு எதையும் பார்க்கப் பழக்கிக் கொண்டே இரு ! உறுதியாகத் தெரியாத போது MAY BE OR MAY NOT BE அதாவது இருக்கலாம் ,இல்லாமலும் இருக்கலாம் எனச் சொல்லப் பழகு !

அறிவைத் தேடிக்கொண்டே இரு ! அநீதியை எதிர்த்துக் கொண்டே இரு ! பிதுப்பித்தல் என்பதன் மெய்ப்பொருள் அதுவே !


 .

சொல்.30

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் .30 [ 28/09/2018 ]

சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என ஐந்து பேரிடம் கேட்டால் ஐந்து பதில் வரும் .ஏனெனில்  ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொருவிதமாய் பழகிவிட்டது .

அறுசுவை என சொல்லிவிட்டு அதில் எது சுவை இல்லை என்பீர் ? பாவற்காய் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது . சிலருக்கு இனிப்பு ,சிலருக்கு புளிப்பு ,சிலருக்கு காரம் , சிலருக்கு துவர்ப்பு ,சிலருக்கு உவர்ப்பு ,சிலருக்கு கசப்பு என சுவை மாறுபடும் .

ருசியாகச் சமைப்பதும் ; ருசித்துச் சாப்பிடுவதும் தனிக்கலை .அது வாய்க்கப் பெறுவது பெரும் பேறு . அதே சமயம் நாக்கு ருசிக்கு அடிமையாகி கொஞ்சம் குறைந்தாலும் தொண்டைக் குழியில் இறங்காது என்பது அதீதம் .

அம்மாவோ ,மனைவியோ ,கணவனோ அல்லது யார் சமைத்தாலும் ஒருநாள் போல் ஒருநாள் அமையாது .ஏதோ காரணம் இருக்கக்கூடும் . இதனைப் புரியாமல் சாப்பாட்டின் மீது வெறுப்பைக் காட்டுவது அறியாமையின் உச்சம் மட்டுமல்ல ;ஆணாதிக்கத்தின் உச்சமும்கூட .இது பெண்களிடமும் வெளிப்படக்கூடும் .

ஒரு கவளம் சோறுகிடைக்காமல் துடிக்கும் பல்லாயிரம் மக்களின் வலியை ஒரு நிமிடம் நெஞ்சில் நிறுத்துங்கள் .

கிடைத்ததை ருசித்துச் சாப்பிடுங்கள் . எப்படியும் ஆறு சுவையில் ஒன்றாகத்தானே இருக்கும் .பாராட்டுங்கள் .வாழ்க்கை நரகமல்ல நந்தவனம் என்பது புலனாகும் .


 .

சொல்.29

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .29 [ 27/09/2018 ]
திருமணங்களை முற்போக்காய் நடத்துவதே பெரும் போராட்டம் . ஆனால் அதைவிட பெரும் சவால் மரணத்தின் போது சந்திப்பது .

வாழ்நாளெல்லாம் பகுத்தறிவாளராய் ,முற்போக்காளராய் இயங்கிய ஒருவரின் இறுதிச் சடங்கை சகல மத ,சாதி சம்பிரதாயங்களுடன் நடத்துவதைவிட அவரை வேறு எதனாலும் இழிவுபடுத்திவிட முடியாது . ஆனால் வாரிசுகளும் உறவுகளும் இதனை உணர்வதே இல்லை .

இதனை எப்படி எதிர்கொள்வது ? உடுமலை நாராயண கவிராயர் தன் இறுதி நிகழ்வை சாதி ,மத ,,சடங்கு ,சம்பிரதாயமின்றி நடத்த முன்கூட்டியே உயில் எழுதி வைத்தார் . ஜோதிபாசு தன் உடலை மருத்துவ ஆய்வுக்கு என எழுதி வைத்தார் . பல முற்போக்காளர்கள் மரண சாசனம் எழுதிவைத்துள்ளனர் . ஐரோப்பிய நாடுகளில் இது சகஜம் .

மரணம் எந்த நிமிடமும் யாருக்கும் நிகழலாம் .எனவே இங்கே இரண்டே வழிகள்தான் உள்ளன . ஒன்று , வாரிசுகளும் உறவுகளும் இறந்தவரின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்வது .இரண்டு . வாரிசுகளிடம் முடிந்தவரை முன்கூட்டியே உறுதியாய் விவரமாய்ச் சொல்லிவிடுவது .

செண்டிமெண்டாய் அடுத்தவர் கருதுவார் எனத் தயங்காமல் ஒவ்வொருவரும் மரண சாசனம் எழுதி முன்கூட்டியே அறிவித்துவிடுவதே சாலச் சிறந்தது .கசப்பாய் இருப்பினும் வேறுவழி இல்லை.

மரணத்திற்கு பிந்தைய நிகழ்வுகளும் இறந்தவர் உரிமை ,விருப்பம் என்பது உணர்க !

 .

சொல்.28.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .28 [ 26/09/2018 ]

முன்பெல்லாம் இன்பச் சுற்றுலா என்பர் . இப்போதெல்லாம் ஆன்மீகச் சுற்றுலா என்றே விளம்பரமும் ஆள் சேர்ப்பும் நடக்கிறது .கோயில் கோயிலாய் இழுத்துச் செல்கிறார்கள் . திவ்ய தரிசனம் என குதுகலிக்கின்றனர் .

சுசீந்திரம் கோயிலின் ஒவ்வொரு தூணிலும் கலை கொஞ்சும் சிற்பம் உண்டு .நான் சிறுவனாயிருக்கும் போது ஒவ்வொன்றாய் நுணுகிப் பார்த்தவன் .சுவரில் தேவாரம் ,திருவாசகம் எழுதப்பட்டிருக்கும் . சிறுவனாயிருக்கும் போது வாய்விட்டு வாசித்து அதன் அழகு தமிழில் சொக்கி இருக்கிறேன் .

ஆனால் ஆன்மிகச் சுற்றுலா என்பது இது போன்றவற்றையோ ஊரின் இதர பெருமைகளையோ பேசாமல் வெறுமே சாமி கும்பிடுவது ,அர்ச்சனை செய்வது ,சாமி படம் வாங்குவது .பிரசாதம் வாங்கித் தின்பது என முடிந்துவிடுகிறது .

விடுதலைப் போரின் போது சுசீந்திரம் சாமி தேரில் காங்கிரஸ் கொடியை ஏற்றியதையோ ,அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் டஜனுக்கும் மேற்பட்டோர் பலியானதையோ யாருக்கும் சொல்லுவதேயில்லை .

அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் செல்வோர் அங்குள்ள ஓவியக் கண்காட்சியில் விடுதலைப்போரில் சீக்கியரின் அளப்பரிய பங்களிப்பை ,தியாகத்தை மெய்சிலிர்க்க உணரலாம் .

ஆன்மிகச் சுற்றுலா வெறும் சடங்காகவே எங்கும் பொதுவாய் இருக்கிறது . இந்தியா ஓர் நந்தவனம் .இதன் பன்மையை ,பெருமையை ,பண்பாட்டு பல்வண்ணத்தை , உணரவைக்கும் வானவில் சுற்றுலா எப்போது கைக்கூடும் ?

முற்போக்கு என்பது போராட்டக் களங்களோடு முடிவதல்ல ; வானவில் சுற்றுலாக்கள் பண்பாட்டு முன்னெடுப்பாவது எப்போது ? உங்களில் எவர் அதற்காக முன்கை எடுக்கப் போகிறீர்கள் ?

 .

சொல்.27.

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .27 [ 25/09/2018 ]

எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரிக் கொழுக்கட்டை , எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரி அதிரசம் , எல்லோர் வீட்டிலும் ஒரே மாதிரி சுண்டல் ,இப்படி ஒவ்வொரு பண்டிகையும் ஏதேனும் ஒன்றுக்குள் அடங்கிப் போகிறது .பல வேளை சலிப்பாகவும் ஆகிப்போகிறது .

ஏன் மாற்றி யோசிக்கக் கூடாது ? நகரங்களில் அருகருகே இருக்கும் ஐந்தாறு குடும்பங்கள் கொஞ்சம் முன்கூட்டியே கலந்துரையாடினால் நிலைமை மாறலாமே !

ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் ஒரு பண்டம் செய்யலாம் . கூட்டாகச் சேரும் போது எல்லோருக்கும் ஐந்தாறு வகை கிடைக்கும் . பண்டிகைக்கு வண்ணமும் வனப்பும் சேருமே !அதுமட்டுமா எண்ணங்களிலும் இணக்கமும் இனிமையும் கூடுமே !

கூட்டம் சேர்த்து கூட்டாஞ்சோறு ஆக்கியுண்ணும் பழைய கிராமியப் பண்பாடு மெல்ல மங்கி மறைகிற போது , அதன் வேரிலிருந்து புதியன நகரங்களில் யோசிக்கலாமே !மாதம் ஒரு முறை ஐந்தாறு குடும்பங்கள் திட்டமிட்டு ஆளுக்கொரு வகை உணவு தயாரித்து கூடி பங்கிட்டு உண்டால் உறவு மேம்படுமே ! உற்சாகம் குலவையிடுமே!

ஆனால் ஒன்று ,பாராட்டும் உள்ளமும் ஒத்துப்போகும் உயர்ந்த அணுகுமுறையும் ,விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையும் இருக்க வேண்டும் .வளர்க்க வேண்டும் .முயற்சிக்கலாமே!

 .

சொல் .26

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .26 [ 24/09/2018 ]

புது வீட்டில் ஒழுங்கு படுத்தும் போது எவ்வளவு கறாரான கட்டளைகள் விதிகள் போடப்பட்டன . மூன்றே மாதங்களில்  அவை என்ன ஆயின ?

தேவை ஒவ்வொன்றிற்கும் ஒரு இடத்தை கொடுத்துவிட்டனவே ! அதுவே இயல்பு . ஆசை மட்டுமே எதையும் தீர்மானித்துவிட முடியாது ; அவசியத் தேவையே முந்தி நிற்கும் .

வீடு மாறும் போது எவ்வளவோ கழித்தபின்னும் ஆறே மாதத்தில் எவ்வளவு குப்பை சேர்ந்துவிட்டது ? ஏன் ?

எது குப்பை என்பதில்கூட ஆளுக்கொரு அளவுகோல் உண்டே ! அதைக் கணக்கில் கொள்ளாமல் எதையும் அவ்வளவு சுலபமாய் தூக்கி எறியவும் முடியாது .

வீடென்பது அருங்காட்சியகமும் [மியூசியமும்] அல்ல ; குப்பைத் தொட்டியும் அல்ல . புதியன சேர்வது தவிர்க்க முடியாததுபோல் பழையன கழித்தலும் அவ்வப்போது நடத்தப்பட்டாக வேண்டும் .

வீட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைத்த்து மாதந்தோறுமோ மூன்று மாதத்துக்கு  ஒரு முறையோ வேண்டாதவற்றை உரியமுறையில் வெளியேற்றுக ! ஆண்டுக்கொரு போகி போதாது !!! .

சொல் .25

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .25 [ 20/09/2018 ]  

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் எங்கேயும் இருப்பார்கள் .தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது அவர்கள் நினைப்பு .அவர்கள் மூக்கை நுழைக்காத விவகாரம் எதுவும் இருக்காது .

நீங்கள் கூப்பிடவே வேண்டாம் .அவகளாகவே வந்து ஆலோசனைகளை அள்ளிவீசுவார்கள் .ஒரு சிலர் மேலே ஒருபடி போய் தேரை இழுத்து தெருவில் விட்டதுபோல் சிக்கலில் மாட்டிவிடுவார்கள் .

இவர்களைச் சமாளிப்பது பெரும் கலை .முக தாட்ச்சண்யம் பார்க்காமல் கறாராக சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை .

உங்கள் ஆலோசனைக்கு நன்றி ! நாங்கள் என்ன செய்வது என விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.உங்கள் உதவி தேவைப்படும் போது நிச்சயம் கூப்பிடுவோம் .இப்படி உடைத்துச் சொல்லப்பழக வேண்டும் .

எல்லோருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் தெரிந்ததுபோல் நடப்பதே சிக்கல் என உணர்வோம்.உணர்த்துவோம்.

 .

சொல்.24

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .24 [ 19/09/2018 ]

அவர் ரொம்ப தங்கமானவர் . இருக்கிற இடம் தெரியாது .யார் வம்பு தும்பிற்கும் போகமாட்டார் . இப்படி சிலரைப் பற்றி சொல்லுவார்கள் .

அவர் வீடடங்கி இருக்கமாட்டார் . ஊரு வேலையெல்லாம் இவர் தலைமேல்தான் .இப்படி சிலரைப் பற்றி கூறுவர் .

பின்னதாக இருக்க விருப்பமில்லையா பரவாயில்லை . நிச்சயம் முன்னதாக இருக்காதீர்கள். !

பெருநகரில் பெரும்பாலான அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெறும் இயந்திரமாகிக்கொண்டிருக்கிறது.

வீட்டுக்கும் வெறும்கூட்டுக்கும் வித்தியாசம் உண்டு .குடியிருப்பென்பது வெறுமே உண்டு உறங்கும் மடமல்ல .உயிரும் உணர்வும் உலாவும் வாழிடம். இதனை மனதில் நிறுத்துங்கள் !

அண்டை அயலாரோடு பழகுங்கள் !நட்பாய் இருங்கள் ! சுற்றி நடப்பதென்ன என என்று உற்று நோக்குங்கள் ! அநீதிக்கு எதிராய் முணுமுணுக்கவாவது செய்யுங்கள் !நீங்கள் ஒரு மனிதர் இயந்திரமல்ல …

 .

சொல்.23.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .23 [ 18/09/2018 ]

நண்பர் ஒருவர் சொன்னார் , “ நாங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை இரவு உணவின் போது தொலைகாட்சியை ,அலை பேசியை நிறுத்திவிட்டு ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிடப் போகிறோம் .”

வேடிக்கைக்காகச் சொன்னாரோ , மெய்யாகச் சொன்னாரோ நான் அறியேன் . உரையாடல் இல்லாமல் குடும்பத்தில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்டது என்பது உண்மையே .

ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் ஏதேனும் அவசியத் தேவையைக் கேட்பதைத் தவிர வேறு என்ன உரையாடல் நிகழ்கிறது ? பார்த்த சினிமா ,கேட்ட பாடல் , சுற்றி  நிகழ்பவை என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் வீட்டில் நடக்கிறதா ?

தொலைகாட்சியும் ,அலைபேசியும் இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாததுதான் .ஆயினும் மனம்விட்டு உரையாடுவதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை ,புரிதலை இழக்கலாமா ?

சாப்பிடும் போது பேசக்கூடாது என்கிற பழைய பழக்கத்தை துடைத் தெறியுங்கள் ! பேசிக்கொண்டே உற்சாகமாக கூடிச்சாப்பிடப் பழகுங்கள் !

வீட்டுக்குள் உரையாடல் உற்சாகமாக நடக்கட்டும் அது பல சிக்கலின் முடிச்சுகளை அறுத்துவிடும் .சரிதானே !

                                  

 .

சொல் .22

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .22 [ 17/09/2018 ]

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் முக்கியமான நிகழ்வே ! ஆனால் திருமணம் மட்டுமே வாழ்க்கை இல்லை .

திருமணம் வேண்டுமா .வேண்டாமா என் முடிவெடுக்கிற உரிமையும் ஒவ்வொருவருக்கும் உண்டு .

குழந்தை பேறு குடும்ப வாழ்வில் மிக காத்திரமானதே ஐயமில்லை . ஆனால் குழந்தை இல்லை எனில் அது பிழையோ முழுமையற்ற வாழ்வோ அல்ல .

திருமணமோ ,குழந்தை பேறோ  அதற்குரிய வயதை எட்டிய ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை . அதில் தேவையற்று மூக்கை நுழைக்க மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை .

பெற்றோரே ஆயினும் பிள்ளைகளின் விருப்பம் ,உரிமை உணர்ந்து வினையாற்றல் காலத்தின் தேவை .இதில் தேவைக்கு அதிகமாய் வருத்திக்கொள்ளல் விரும்பத்தக்கதல்ல .

நம்மைவிட நம் பிள்ளைகள் நிச்சயம் மிகச் சரியான முடிவெடுப்பார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்களின் விருப்பம் ,தேவை ,உரிமை இவற்றுக்கு மதிப்புக் கொடுக்க பழகுவதே பெற்றோருக்கு அழகு !

தோளுக்கு மிஞ்சிய மகனோ / மகளோ தோழரே என உணர்வீர் ! உறவில் புதிய பார்வை வளர்ப்பீர் !

                                  

 .

சொல் ,21

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .21 [ 15/09/2018 ]  

நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு என்பது என்னிடம் என்றைக்கும் இல்லை என நெஞ்சை நிமிர்த்துவது பலரின் வாடிக்கை .

பொதுவாய் அது சரிதான் ,ஆனால் எப்போதும் அதுவே சரியல்ல .மாறாதது எதுவும் இல்லை . நேற்றுச் சொன்ன எல்லாம் இன்றைக்கு அப்படியே சரியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

நேற்றோ இன்றோ என்பதல்ல முக்கியம். பேசியதில் எது சரி எது நியாயம் என்பதே கேள்வி .

நேற்று சொன்னது பிழை எனில் வம்படியாய் அதனை தூக்கிச் சுமக்க வேண்டாம் . எப்போதும் உண்மையைத் தேடுவதாய் இருக்கட்டும் நம் பேச்சு . .

சொல். 20

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .20 [ 14/09/2018 ]  

அழகு படுத்திக் கொள்ள பெண்கள் அதிகம் மெனக்கிடுகிறார்கள் .காசும் செலவு செய்கிறார்கள் என்பது பொதுவாக வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை .

ஆண் தன் முகத்தை மழிப்பது ,மீசை தாடியை ஒழுங்கு செய்வது எல்லாம் அழகின் ஒரு கூறுதானே . இன்றைய நுகர்வு உலகில் அழகு சாதனப் பொருட்களில் ஆண்களுக்கானதும் நிறைய வந்துவிட்டதே !

ஆணோ ,பெண்ணோ தன்னை ஒப்பனை செய்து கொள்வது குற்றமல்ல .தேவையும்கூட .நம்பிக்கையையும் மிடுக்கையும் அது கொடுக்கக்கூடும் .

ஒருவரின் தோற்றப் பொலிவு அவருக்கான அடையாளமாய் இருக்கும் விதத்தில் தன்னை அழகுபடுத்திக் கொள்வதின் தேவையை யாரும் மறுதலிக்கவே முடியாது .

ஆயின் அளவுக்கு மிஞ்சினால் எதுவும் சிக்கல்தான் . விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும் . அந்த அளவை யார் தீர்மானிப்பது ?

ஆணோ ,பெண்ணோ அவரவரே தீர்மானிக்க முடியும் . அடுத்தவர் இதில் மூக்கை நுழைப்பது அநாகரீகமே!

அழகாய் இருக்க முயலுங்கள் ! புற அழகு மட்டுமே ஈர்ப்பாகாது என்பதையும் உணருங்கள் !

சொல். 19.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .19 [ 13/09/2018 ]
[ நான்கு நாள் விடுப்புக்கு பிறகு மீண்டும் தினம் ஒரு சொல் ]

அன்றாட வாழ்வில் அடுத்தவர்களை மதிப்பது என்பதன் பொருள் அவர் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டுவதல்ல .

நமக்கு உடன்பாடில்லாத அல்லது பிடிக்காத ஒன்றை ஏற்க வேண்டியதில்லை . ஆனால் அதை அவர்களுக்குத் தெரிவிப்பதிலும் அதனை அவர்கள் புரிந்து கொள்வதிலும்தான் மனித நாகரீகம் குடிகொண்டுள்ளது .

குடும்ப வாழ்வில் பொதுவாய் இது அமலாகவில்லை .குடும்பத் தலைவர் எனில் அது சர்வாதிகாரம் கொண்ட பொறுப்பென நினைக்கின்றனர் .

எதிர்த்துப் பேசுவதோ ,ஏன் எதிர்த்து கேள்வி கேட்பதோகூட ஒழுக்கக்குறைவாக அடங்காபிடாரித்தனமாகப் பார்க்கப்படுகிறது .

குடும்பத்தில் ஜனநாயம் பேணப்படுவதில் மிகுந்த குறைபாடு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும் .

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ,பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு  மனம் திறந்த உரையாடல் கிட்டத்தட்ட இல்லை .

சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பத்தில் புறக்கணிக்கப்படும் ஜனநாயகத்தன்மை ஒட்டு மொத்த சமூகவாழ்விலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்வினை ஆற்றுகிறது .

சர்வாதிகாரத்தின் ஊற்றுக்கண் உங்கள் வீட்டுக்குள்ளும் இருக்கிறது .ஜனநாயகத்துக்கான போராட்டமும் அங்கிருந்துதானே தொடங்க வேண்டும்!


சொல் .18.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .18 [ 8/09/2018 ]

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் பிடிக்கும் ; இன்னொரு நிறம் பிடிக்காது .இதற்கு என்ன காரணம் ?

மகிழ்ச்சியான மற்றும் சவாலான தருணங்களின் போது குறிப்பிட்ட நிற உடை அணிவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர் .ஏன் ?

ஒரு குறிப்பிட்ட இசை அல்லது ஒரு குறிப்பிட்ட பாடல் தனக்கு உற்சாகம் தருவதாய் சிலர் நினைக்கிறார்கள் . ஏன்?

இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவருக்கும் பிடித்த ,பிடிக்காத ,உற்சாகம் ஊட்டுகிற ,சோர்வூட்டுகிற ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் .ஏன் ?

இதற்கெல்லாம் ஏதேனும் காரணம் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை . பழக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம் . தனிநபர் விருப்பம் சார்ந்ததாகவும் இருக்கலாம் .

இது முழுக்க முழுக்க தனிநபர்  மனவோட்டம் சார்ந்தது என்பதால் குறை சொல்ல ஏதுமில்லை . மாறாக அது அவரின் சுதந்திரம்கூட.

ஆனால் , ராசி ,தோஷபரிகாரம் , என ஏதேனும் கற்பிதங்களை முன்வைத்து ஒவ்வொன்றுக்கும் புனிதம் கற்பிப்பதையோ நிராகரிப்பதையோ ஏற்பது சரியா ? யோசியுங்கள் !அவ்வளவுதான்….     


சொல். 17

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் .17 [ 7/09/2018 ]   

பெய்ர்த்தி மேகாவை எப்போது  கையில் எடுத்தாலும் என் மீசையைப் பிடித்து உலுக்குவதிலேயே குறியாய் இருக்கிறாள் . என்ன கேட்க நினைக்கிறாள் ?

 “ தாத்தா ! பெண் உரிமை ,சமத்துவம் நிறையப் பேசுகிறாய் ,  வாழ்க்கையில் வீட்டில் எப்படி ?”

 “ மேகா! சரியாகக் கேட்டாய் . சொல்லுவது மிகவும் எளிது ;சொன்னபடி நடப்பதுதான் அரிது .நான் வாழ்க்கையில்,வீட்டில் பாலின சமத்துவம் பேண முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் .

பல முறை தோற்றிருக்கிறேன் ,சறுக்கி இருக்கிறேன் .மீண்டும் மீண்டும் விடாது முயன்றுகொண்டே இருக்கிறேன் . மேகா! உங்கள் காலத்தில் பெரு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்!”

நரம்போடும் ரத்த அணுக்களோடும் உறைந்து போயுள்ள ஆணாதிக்கம் அவ்வளவு சீக்கிரம் உதிர்ந்துவிடாது ; தொடர்ந்து உள்ளும் புறமும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் . சரிதானே!

அதிலும் தோற்றுவிட்டார்

Posted by அகத்தீ Labels:அதிலும் தோற்றுவிட்டார் …. !!!!

முதலில் பொய் சொன்னார்கள்
அப்புறம் அந்தப் பொய்யை
சீவி சிங்காரித்து ஜோடித்துச் சொன்னார்கள்

அப்புறம்
வளர்ச்சி எனும் வர்ணம் பூசிச் சொன்னார்கள்

அப்புறம்
துல்லியத் தாக்குதல் என்று
அதிரச் சொன்னார்கள்

அப்புறம்
தேசபக்த முலாம் பூசி
உணர்ச்சி கொப்பளிக்கச் சொன்னார்கள்

அப்புறம்
பாகிஸ்தான் சதி என்று
பச்சையாய் புழுகினார்கள்
இந்து இந்து என ஜெபித்துகொண்டே
கட்டியுள்ள இடுப்பு வேட்டியை உருவிச் சொன்னார்கள்

விதவிதமாய் வேஷங்கட்டி
வார்த்தை ஜாலங்காட்டி
சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்
பொய்யைத் தவிர வேறில்லை .

தப்பித் தவறி எங்கேயாவது எப்போதாவது
ஒரு உண்மையையாவது
உளறியிருக்கமாட்டாரே !
தேடித் தேடி சலித்துப் பார்த்தால்……

அதிலும் தோற்றுவிட்டார் மோடி !!!!

-சு.பொ.அ.


சொல் .16

Posted by அகத்தீ Labels:
தினம் ஒரு சொல் … 16 [ 6 /9/2018 ]

உறவினரோ வேண்டியவரோ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் போது கட்டாயம் போய் பார்க்கத்தான் வேண்டுமா ? அலைபேசியில் விசாரித்தால் போதாதா ?

பொதுவாக மருத்துவமனையில் நோயாளியும் மருத்துவ ஊழியர்களும் மட்டுமே இருப்பதே நன்று . பல நாடுகளில் இதுவே நடைமுறை.

மிக அவசியத் தேவையின் பொருட்டு மருத்துவமனை அனுமதிக்குமானால் ஒரே ஒரு நபர் உடன் இருக்கலாம் .பார்வையாளர்கள் ,தீடீர் அலோசகர்கள் என கூட்டம் சேர்வது மருத்துவச் சூழலுக்கும் கேடு .தேவையற்ற மனச் சங்கடமும் வந்து சேரும் .

அதிலும் நோயாளியைப் பார்க்க வரும் ஒவ்வொருவரும் அள்ளிவீசும் இலவச மருத்துவ ஆலோசனைகள் பெரிதும் நண்மைக்குப் பதில் சிக்கலையே உருவாக்குகிறது .

மருத்துவமுறை எதுவாயினும் சில ஒழுங்குகளை கறாராக அமுலாக்கிய தீர வேண்டும் .எல்லோரும் அதற்கு ஒத்துழைத்தே ஆகவேண்டும் .

மருத்துவமனைக்கு கூட்டமாகப் போவதும் , தேவையற்றதை வாங்கிச் செல்வதும் , எந்தவித புரிதலுமின்றி பொருத்தமே இல்லாமல் ஆலோசனை என்கிற பெயரில் அபத்தமாய் ஏதேனும் உளறுவதுமே பாசத்தையும் நெருக்கத்தையும் மரியாதையும் காட்டும் வழியா ? இந்தத் தப்பான பார்வையிலிருந்து எப்போது விடுபடப் போகிறோம் ?

                                                                                      
 

சொல் .15

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 15 [ 5 /9/2018 ]

நான் சொன்னதை நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டீர்கள் …. நான் சொல்ல வந்தது அதுவல்ல … இப்படி நாம் பல சந்தர்ப்பங்களில் பேசியிருப்போம் .

தப்பு யாரிடம் ? நாமும் அவசரப்பட்டு பேசும் போது சொல்ல வந்த செய்தி சரியாக பதிவாகமல் போயிருக்கக் கூடும் . உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாறுமாறாக வார்த்தைகளைக் கொட்டி இருக்கக்கூடும் .நமக்கே தெளிவு இன்மை இருக்கக்கூடும் .

அதேபோல் கேட்டவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்வாங்குவதில் தவறியிருக்கக்கூடும் – சரியாக காது கொடுக்காமல் இருந்திருக்கக்கூடும் – தெளிவின்மை அவருக்கும் இருக்கக்கூடும்

அப்போதைக்கு அதனை மேலும் பேசாமல் அமைதி காப்பதும் ,ஒத்திவைப்பதும் ,பின்னர் தனியாக இருவரும் அசை போடுவதும். மீண்டும் பேசுவதும் பயன் தரலாம் .முந்தைய புரிதல் குறைபாடு சற்று தணியலாம் .

ஒருவர் அடுத்தவர் கோணத்தில் நின்று கொஞ்சம் யோசிப்பின் இருபக்கமும் புரிதல் மேம்படும் .
ஒவ்வொருவரும் அடுத்தவரைப் புரிந்து கொள்வதும் ,புரியவைப்பதும் ஓர் கலை .அதை மெல்லக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் கடைசிவரை ….அதுவே வாழ்க்கை விதி.


                                                                                      
 

சொல் .14.

Posted by அகத்தீ Labels:தினம் ஒரு சொல் … 14 [ 4 /9/2018 ]

எளிமை ,ஆடம்பரம் என்பதற்கு நிரந்தர அளவுகோல் ஒன்றுமில்லை .காலந்தோறும் மாறும் . ஊருக்கு ஊர் ,நபருக்கு நபர் மாறும் .

காந்தி ,காமராஜ் வாழ்ந்த காலம் வேறு ; இன்றையக் காலம் வேறு .

ஒரு முறை ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தோழர் இஎம்எஸ் சொன்னார் . “நாங்கள் கம்யூனிஸ்டுகள் ,ஆனால் எங்கள் தலைமுறை காந்தியிடமிருந்தே எளிமையைக் கற்றுக்கொண்டது . இன்றையத் தலைமுறை அதனை அப்படியே பின்பற்றுவது இயலாது ; தேவையுமில்லை .”

கதர் ஒரு காலத்தில் எளிமை ;இன்று ஆடம்பரம் . ரெடிமேட் ஒரு காலத்தில் ஆடம்பரம் இன்று அதுவே எளிமை .வானொலிப் பெட்டியே ஒரு காலத்தில் ஆடம்பரம் ; இன்று டிவியே ஆடம்பரமல்ல தேவையாகிவிட்டது .

தேவைக்கும் ஆடம்பரத்திற்குமான கோடு கூட மாறிக்கொண்டே  இருக்கிறது .

ஒவ்வொருவரும் அவரவர் உழைப்பில் அவரவர் சக்திக்கு உட்பட்டு நன்கு உடுப்பதோ ; உண்பதோ ; பொருட்கள் வாங்குவதோ ஆடம்பரம் ஆகாது .

ஊரார் உழைப்பில் – ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தில் – தேவைக்கு சம்மந்தமே இன்றி வாங்கிக் குவிப்பதும் ; மினிக்கித் திரிவதுமே ஆடம்பரம் .

அட, “ ஊரன் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே” என்பதுதானப்பா ஆடம்பரம் .அநீதி.அராஜகம்.