சின்னக்குத்தூசி: நினைவலைகள்

Posted by அகத்தீ Labels:திருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார்.

முன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை.

காட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி.

பிறப்பால் பிராமணர். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தின் வைரி. பெரியாரின் கொள்கை முரசம். இவர் வாழ்க்கையும் பயணமும் இன்றைய தலைமுறை அவசியம் அறியவேண்டிய பெரும் செய்தி.

இயற்பெயர் தியாகராஜன். திருவாரூரில் ஏழ்மையான பிராமணக் குடும் பத்தில் பிறந்தவர். வறுமையை சுவைத்தவர். மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பிராமணர்கள் தி.க வில் உறுப் பினராக முடியாது என்ற அன்றைய விதி காரணமாக உறுப்பினராக வில்லை. ஆயினும் திராவிடர் கொள்கைகளில் தீவிரமாய் செயல்படலானார்.

மணலூர் மணியம்மா என்கிற கம்யூனிட் போராளி, இடதுசாரி புத்தகங் களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவரது உதவியாளராக சிறிது காலம் செயல்பட்ட போது புத்தகங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.

வாழ்க்கைப் பயணத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். அக் காலத்தில் திமுக அரசியலோடு இவரது நெருக்கம் அதிகரித்தது. ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என தனி ஆவர்த்தனம் செய்த போது அவரைப் பின் தொடர்ந்தார். சம்பத் காங்கிர கட்சிக்குப் போன போது இவரும் காங்கிரஸோடு இணைந்து நின்றார். அப்போதும் பெரி யாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமூக நீதி கருத்துகளையும் உரக் கப் பேசிக் கொண்டே இருந்தார். காமராஜருக்குப் பின் திமுக அரசியலில் ஆர்வம் காட்டினார்.

மாதவி என்ற ஏட்டில் எழுதத் துவங்கி தமிழ்ச் செய்தி, அலையோசை, நவசக்தி, எதிரொலி, முரசொலி, நக்கீரன் என பல பத்திரிகைகளில் கூர்மை யான அரசியல் விவாதக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். இறக் கும் தருவாயிலும் மருத்துவமனையில் இருந்த படி அரசியல் விமர்சனக் கருத்துக்களை இவர் சொல்ல, மற்றொருவர் எழுத, பின்னர் அதுக் கட்டு ரையாக வெளிவந்தது என்பது தாம் மேற்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும்.

தீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் வாதங்களில் சின்னக் குத்தூசி எழுத்துகள் முக்கிய இடம் பெறும். பொதுவாக ஆதாரமோ மேற் கோளோ காட்டாமல் எதையும் எழுதமாட்டார். பழைய ஏடுகளில் தேடித் துருவி சில செய்திகளை சுட்டிக் காட்டி அரசியல் விவாதம் செய்யும் இவரது பாணி தனித்துவம் ஆனது.

முதல் நாள் இவரைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டு மறுநாள் நேரில் சென்று பார்க்கும் போது, தோழர் ரொம்ப நல்லா எழுதி இருந் தீங்க எனப் பாராட்டுவார். நமக்குத் தான் கூச்சமாக இருக்கும். கருத்துச் சண்டை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் கறாராக வாழ்ந் தார். தன் நிலைபாட்டில் வழுவ மாட்டார்; ஆனால் எதிராளி சொல்வதை காது கொடுத்துக் கேட்பார்; படிப்பார். இந்த ஜனநாயகப் பண்பு இப்போது எத்தனை பேரிடம் காண முடியும்?

இவரது எழுத்துகள் புதையல் கருவூலம் களஞ்சியம் பவளமாலை வைரமாலை பொற்குவியல் பூக்கூடை இடஒதுக்கீடு அன்று முதல் இன்று வரை என பல்வேறு தொகுதிகளாக நக்கீரனால் வெளியிடப்பட்டுள்ளன.

அவை அவ்வப்போது எழும் அரசியல் தேவையை ஒட்டி அவர் பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. அவற்றில் பல கட்டுரைகள் அன்றைய சூழ்நிலை சார்ந்தது மட்டுமே. ஆயினும் பாபர் மசூதி இடிப்பு இட ஒதுக்கீடு மாநில உரிமை மதவெறி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு சமூக நீதி ஜனநாயக உரிமைகள் நதி நீர் பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் காலத்தை மீறி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

சின்னக் குத்தூசி என்ற புதையலைப் பற்றி கூறும்போது ஏ.எ. பன்னீர் செல்வன் கூறினார்: தமிழக தற்கால அரசியல் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. குறிப்பாக 1952 - ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை அறிந்து கொள்ள எந்தப் புத்தகமும் இல்லை. மாறாக வெவ்வேறு பத்திரிகைகளின் பழைய பிரதிகளை தேடிப் படித்துதான் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை. இந்தச் சூழலில் எல்லா பத்திரிகையாளர்களும் நாடிச் செல்லும் ஒரு தனிநபர் நூலகம் தான் சின்னக்குத்தூசி. அவரின் எழுத்துகளையும் இந்த வரலாற்றுப் பதிவின் ஒரு அம்சமாகவே நோக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு தடை சர்ச்சை என்ற தலைப்பில் 21.10. 2003 அன்று நக்கீரனில் எழுதிய கட்டுரை, எப்படி நீதிமன்றம் மக்களின் கோப உணர் வை வெளிப்படுத்தும் போராட்ட வடிவங்களை மேலோட்டமாக பார்க்கிறது என்று சாடியதுடன், அதனை உறுதியுடன் எதிர்கொண்ட மேற்குவங்க கம் யூனிட்களை பாராட்டவும் செய்தார். ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டும் போராட்டத்தில் இத்தகைய நேர்மையான குரல்கள் எப்போதும் தேவை அல்லவா?

தொகுக்கப்பட்ட இவரது எழுத்துகள் நிகழ்கால திராவிட இயக்க அர சியல் சார்ந்த வரலாற்றை பேசும். அதே சமயம் இடது சாரி இயக்கம் சார்ந்த அரசியலைப் பேசும் வரலாற்று தொகுப்புகள் இதுபோல் இல் லையே என்ற ஏக்கமும் எழுகிறது. பத்திரிகையாளர்கள் உரிமை பறிக்கப் படும் போது, அதனை பாதுகாக்க முன்வரிசைப் போராளியாக நின்றவர் சின்னக்குத்தூசி.

திருமணமே செய்து கொள்ளாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழு வதும் எழுத்துத் தவம் நோற்ற இவரின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாறாகும்.

ஊடக உலகம் தார்மீக விழுமியங்களை இழந்து காசுக்கு விலை போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எழுத்துக்காக வாழ்ந்தவரின் இறப்பு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகப் பெரியது. ஆயினும்....

சின்னக் குத்தூசியைப் போலவே வளரும் தலை முறை மீது நம்பிக்கை கொள்வோம்.

அரசியல் களத்தில் விவாதங்கள் சூடாகட்டும்.... கருத்துப் போராட்டம் கூர்மை அடையட்டும்... மக்கள் எது சரி எது தவறு என்று முடி வெடுக் கட்டும்... அய்யா சின்னக் குத்தூசிக்கு எமது இதயம் கனத்த அஞ்சலி.

ம.பொ.சி - யின் ஜனநாயகக் குரல்

Posted by அகத்தீ Labels:

இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட சிறந்த ஆளுமைகளில் ம. பொ.சி மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரது மீசையைப் போலவே தனித்து வமானவர். தேசிய விடுதலைப் போரில் ஈடுபட்டவர். காங்கிரதான் அவரது தாய்வீடு. ஆனால், கொள்கை அடிப்படையில் காங்கிரசி லிருந்து விலகி தமிழரசுக் கழகம் கண் டவர். மாநில சுயாட்சிபற்றி பொருள் செறிவுள்ள இவரது பேச்சுகளும் எழுத்துகளும் காலத்தால் அழியா தவை. தமிழ் இனத்தின் மீது இவர் கொண்ட காதல் எல்லையற்றது. ஆயி னும், குறுகிய வேலிக்குள் அடைபடா தவர். இன்றைக்கு முதலமைச்சர் கன வோடு கட்சி தொடங்குவோருக்கு மத் தியில் அன்று கொள்கை பற்றின்பால் தனிக்கட்சி கண்ட இவரது நெஞ்சுர மும், லட்சிய வேகமும், இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. இடது சாரிகளோடு இவர் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆனாலும், இவ ரது அரசியல் பயணம் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறமுடியாது. வாழ்வின் பிற்பகுதியில் திமுகவோடு கிட்டத் தட்டஒட்டி நின்று பதவிகளைப் பெற் றது வாழ்க்கை நாடகத்தின் ஒரு துன்ப யியல் முடிவுதான். இதைக் கொண்டு மட்டும் அவரது ஆற்றலை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவரது எழுத்துக்களை இன்று படித்தாலும் அதில் நியாயத்தின் குரல் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

விடுதலைப் போரில் தமிழகம் குறித்து இவர் பதிவு செய்யவில்லை என்றால் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். சிலம்பு குறித்து இவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதாகக் கூறமுடியாது. சிலம்பு செல்வர் என்கிற பட்டம் இவரைப் பொறுத்தவரை கவுரவப்பட்டம் அல்ல. மாறாக உண்மையின் குறியீடே. ம.பொ.சியைப் பற்றி ஒரு முழுமை யான மதிப்பீட்டை - அரசியல், இலக்கியம், சமூக அரங்கில் அவரது பங்களிப்பை குறித்து ஒரு சரியான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். வளரும் தலை முறைக்கு நாம் அளிக்க வேண்டிய கொடை.

காங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளி யேறிய சூழலில் தமது தமிழ் தேசியச் சிந்தனையை பரப்புவதற்காக அவ ரால் தொடங்கப்பட்ட ஏடு தமிழ் முரசு (1946-51), தமிழன் குரல் (1954-55), செங்கோல் (1950-95). இந்த ஏடுகள் இன்றைக்கு முழுமையாக கிடைக் குமா என்று தெரியவில்லை. ஆயினும், தி. பரமேவரி அரிதின் முயன்று தமி ழன் குரல் இதழ்களைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக வெளிக்கொ ணர்ந்துள்ளார். இது பாராட்டத்தக்க பங்களிப்பாகும். சரவதி, மணிக் கொடி, சிகரம், சுபமங்களா இப்படி நின்று போன ஏடுகள் பலவற்றை தேடிச் சேக ரித்து தொகுக்கும் முயற்சிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இது வர லாற்றை சரியான முறையில் பிழை யின்றிப் புரிந்துகொள்ள உதவும் ஊன்றுகோல்களாகும். அந்த வகை யில் தமிழன் குரல் தொகுப்பும் அடங் கும். அரசியல் கட்டுரைகள், இலக்கி யக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என மூன்றுப் பகுதிகளாக அமைத்துள் ளது வாசகனுக்கு எளிதாக வாசலைத் திறக்கும் நல்ல உத்தியாகும்.

அரசியல் கட்டுரைகள்


மொழி, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய எல் லாத்துறைகளிலும் தமிழினத்தின் நலன்களைக் காக்கவும், அவற்றை வளர்க்கவுமே தமிழன் குரல் வெளி வருகின்றது. என்று முதல் இதழ் தலையங்கத்திலேயே தன்னுடைய நோக்கத்தை ஐயம்திரிபுஅறச் சொல்லி யிருக்கிறார். அதனை உறுதியாகப் பிரச் சாரம் செய்ததை இந்தத் தொகுப்பு எடுத்துக்காட்டுகிறது. தமிழன் குரலில் வந்த தலையங் கம், ம.பொ.சி. அவர்களால் எழுதப் பட்ட அரசியல் கண்ணோட்டம் இரண் டும் தனித்த வாசிப்புக்குரியன. அரசி யல் என்கிற தலைப்பிலும், வரலாறு என்கிற தலைப்பிலும், டாக்டர் மு. வரதராஜன், நாமக்கல் கவிஞர் ராம லிங்கம், சோம.லெட்சுமணன், சாமிநா தசர்மா, ரா.பி. சேதுபிள்ளை உள் ளிட்ட பலரின் கட்டுரைகளும் உள் ளன. மொழிபற்றியும், தேசிய இனம் பற் றியும், தமிழ்மாநில உரிமைகள் பற்றியும், ம.பொ.சிக்கு இருந்த தெளிவு அன்றைக்கு காங்கிரசாரிடமும் இருக் கவில்லை. திராவிட இயக்கத்தாரிட மும் இல்லை. பெருமளவு இடதுசாரி கள் மட்டுமே இவரின் பல முடிவுக ளோடு ஒத்துப்போயினர். அவர்களும் எல்லைப் போராட்டத்தில் சில நேரங் களில் இவரோடு வேறுபட்டதும் உண்டு.

இவரின் தொலைநோக்கு பார் வையை ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க இயலும். ஆயினும், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேரு வின் சோஷலிசம் என்ற கட்டுரையை பார்க்கலாம். 1954 டிசம்பர் மாதம் எழுதி யது. அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் கூறுகிறார்: பிரதமர் நேரு விரும் புகிறபடி, அடுத்த இருபதாண்டுக்குள் இந்தியா சோஷ லிச நாடாக வேண்டுமானால், ஐந் தாண்டுக்கு ஒருமுறை திட்டம் தயாரித் தால் மட்டும் போதாது. பின்வரும் மாறு தல்களை உடனடியாகச் செய்தாக வேண்டும்.

சோஷலிசம்தான் இந்தியாவின் லட்சியம் என்ற வாசகத்தை இந்தியக் குடியரசுச் சட்டத்தில் சேர்க்க வேண் டும். மற்றும், அந்த லட்சியத்தை அமல் நடத்துவதற்குச் சாதகமான வகையில் அரசியல் அமைப்பைத் திருத்தவும் வேண்டும்.

ஆளுங்கட்சியான காங்கிரசை சோஷலிச கட்சியாக புனருத்தாரணம் செய்ய வேண்டும்.

அரசாங்க நிர்வாக எந்திரத்தை சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களின் நலனுக்கேற்ப செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இந்திய ராஜ்யங்களை மொழிவாரி திருத்தி அமைப்பதோடு, அந்த ராஜ்யங் களை சம அந்ததுடைய சுயாட்சி அங்கங்களாகவும் செய்ய வேண்டும்.

இந்த நான்கு அம்சங்களை நிறை வேற்றாத வரை இந்தியா சோஷலிசப் பாதையில் ஒரு அங்குலம் கூட முன் னேற முடியாது

இந்த வரையறை ஓரளவுக்கு ஏற்கத் தக்கது. இதில் அரசியல் சட்டத் தில் சோஷலிசக் குடியரசு என்கிற பெயர் அவசர காலத்தில் அவசர கதி யில் சேர்க்கப்பட்டது. பெரும் போராட் டத்திற்குப் பிறகு மொழி வழி மாநிலங் கள் அமைக்கப்பட்டன. ஆனால், மாநில உரிமைகள் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளன. இந்தப் பின் னணியில் அன்றே இதுகுறித்து தீர்க்க மாய்ச் சிந்தித்த ம.பொ.சி.யின் பார்வை நம்மை வியக்க வைக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் காங்கிர எப்படியெல் லாம் சீரழிந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. காந்தியமும் காங்கிரசும் என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் மிக முக்கியமான கட்டுரைகள். ஏழைக ளுக்கு நில விநியோகம் செய்வது குறித்து லூயி பிஷருக்கும் காந்திக் கும் நடந்த உரையாடலை மிகப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டி விளை நிலங்களை உழுது பயிரிடும் விவசா யிக்கே வழங்க வேண்டும். இதை காந்தி விரும்பினார். காங்கிர நிறை வேற்றவில்லை என அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இப்படி ஒவ்வொரு கட்டு ரையும் அன்றைய உடனடி நிகழ்வை ஒட்டி தீட்டப்பட்டிருப்பினும் அதன் பார்வை தொலைநோக்கோடு அமைந் திருப்பதுதான் ம.பொ.சி.யின் சிறப்பு. அவருடைய அரசியல் பார்வையை முழுமையாக அப்படியே அங்கீகரிக்க எல்லோராலும் முடியாது. கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும், பெரிதும் சரியான நிலைபாட்டிற்காக உறுதி யாக தொடர்ந்து போராடியவர், எழுதிய வர் என்பதை இத்தொகுப்பை படிப்பவர் உணரலாம்.

இலக்கியக் கட்டுரைகள்


மூன்றாம் வகுப்பு வரை படித்த மனிதர் நாற்பதாவது வயதில் அரிதின் முயன்று இலக்கியம் பயில்வதும் அந்த இலக்கியத்தின் அழகியலைத் துய்ப்பதுடன் நிறைவுறாமல் தமிழ்நாட் டின் நலனுக்குப் பயன்படுத்துவதும், அரசியலையும் இலக்கியத்தையும் குறிப்பிட்ட கலவையில் கலந்து பயன் பாட்டுத்தன்மை பெறுவதும் ம.பொ.சி. வாழ்வில் குறிப்பிடத்தகுந்தவை. மர பார்ந்த இலக்கியத்தில் ஆழ்ந்திருக் கும் கவியுளம் காணுதலும் அதன்வழி அரசியலை மீட்டெடுத்தலும் புதுமை நோக்காகும். என தி. பரமேவரி கூறுவது மிகவும் பொருத்தமானது. பொதுவாக நாட்டைப்பற்றி எழுதுவ தென்றால் தேசியவாதி என்ற புனைப் பெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் என் றால் ஞானம் என்றப் புனைப் பெயரி லும் பாட்டாளி மக்களுக்கானது என் றால் பாமரன் என்றப் புனைப் பெயரி லும் எழுதுவது ம.பொ.சி. வழக்கம். தன் பெயரை நேரடியாகவும் குறிப்பிட்டு எழுதுவார். இலக்கியப் பகுதியில் அவர் எழுதியது மட்டுமின்றி ந. சஞ் சீவி, கு.ரா, மதுரை சிவம், அ.ச.ஞான சம்மந்தம், கி.வா. ஜகநாதன், குன்றக் குடி அடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நா. பார்த்தசாரதி உள்ளிட் டோர் பங்களித்துள்ளனர்.

சங்க இலக்கியம், குறளும் சிலம் பும், பிற்கால இலக்கியம் என்ற தலைப் புகளில் கட்டுரைகளை பரமேவரி தொகுத்துள்ளது நுழைவதற்கு எளிதா னது. இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. என்ற கட்டுரை மிகுந்த முக்கியத்து வம் உடையது. அதில் பெரியாருடைய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிவிட்டே, இலக்கியத்துறை யில் அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ. வெ.ராவுக்கு அறிவோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டையத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவ ருக்கு நல்ல எண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பய னற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமானக் கருத்து. இத்தகைய கடு மையான வார்த்தைகளோடு விமர்சிக் கிறார் ம.பொ.சி. அதற்கு தி.க. வட் டாரத்திலும் கடுமையாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பதிலுக்கு மீண்டும் ம.பொ.சி. பதில ளித்திருக்கிறார். இலக்கியம் குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந் திருக்கிறது. தமிழரசு இயக்கத்தா ருக்கு இலக்கியம் என்பது பொழுது போக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந் தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்ப டும் உரைகல்; எதிர்காலத் தமிழகத் துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம் ம.பொ.சி.யின் இந்தப் பார்வை இத்தொ குப்பு நெடுக நிறைந்திருக்கிறது. இந்த இலக்கியக் கட்டுரைகளை இன்றைய இளைஞன் வாசிப்பது அவசியம். அது தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள ஒரு ஜனநாயகப் பார் வையை நிச்சயம் வழங்கும்.

படைப்பிலக்கியம்
பல்துறைக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் என பண் முகப் படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. குயிலன், லட்சுமி, ஆ.ரா. இந்திரா, சீதாலட்சுமி, தண்ட பாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிஞர் கா.மு. ஷெரீஃப், பெ. தூரன் உட்பட பலரின் அரிய கட்டுரை கள் இடம் பெற்றுள்ளன. பண்டிகையும் பொருளாதாரமும் என்றக் கட்டுரை யைப் படிக்கிறபோது அதை ஆதாரக் குறிப்பாகக் கொண்டு பண்டிகை களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண் டால் மிகுந்த பயன் உண்டாகும் எனத் தோன்றுகிறது. அந்தக் கட்டு ரையில் அவர் கூறுகிறார், பொதுவாக பண்டிகைகளெல்லாம் சமயங்களின் பேரால் - புராணங்களின் போதனை யால் கொண்டாடப்படினும் அந்தப் பண்டிகைகளைத் துவக்கி வைத்த தற்கான அடிப்படைக் காரணம் பொரு ளாதாரம்தான்..... ஒரு பண்டத்தை கொடுத்து இன்னொரு பண்டத்தை வாங்கும் பண்டமாற்று வாணிபம் இருந்த காலத்தில் நாடு முழுவதுமாக பண்டிகைகள் கொண்டாடப்பட வில்லை. பண்டத்தைப் பணத்திற்கு விற்கும் நாணயமாற்று முறை ஏற்பட்ட காலத்தில்தான் பண்டிகைகள் கொண் டாடும் வழக்கம் ஏற்பட்டதாகத் தெரி கின்றது. பண்டிகைகள் பழக்க வழக் கங்கள் ஆகியவற்றின் உண்மைக் காரணங்களை மறைத்து கற்பனைக் காரணங்களைச் சொல்லுவது இந்துக் களிடையே தொன்றுத்தொட்டு இருந்து வரும் வழக்கம்..... தீபாவளி பண்டி கையையொட்டி வழங்கி வரும் புரா ணக் கதையும் கற்பனையே அன்றி சரித்திரமன்று. இப்பார்வை அனைவ ருக்கும் உண்டாயின் மதப் பகைமை தோன்றுமோ!

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆவடியில் ஆண்டியப்பன் என்ற படைப்பு விடுதலைக்குப் போராடிய காங்கிர வேறு, ஆவடி சோஷலிச மாநாடு கூட்டுகிற காங்கிர வேறு என்பதை அற்புதமாக சித்திரமாகத் தீட்டிக்காட்டிவிட்டது.
மொழிபெயர்ப்பு கதைகளை வெளி யிட்டிருப்பது எட்டுதிக்கிலும் சென்று கலைச் செல்வங்களை தமிழில் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சி. தமிழன் குரலில் மொழி பெயர்ப்பு சிறு கதைகள் இடம் பெற்றிருப்பது பாராட் டுக்குரியது. பூட்டு சாமியார், மாளி கையும் மண்குடி லும், வளர்த்த கடா போன்ற படைப்புகளின் தலைப்பே செய்தியைச் சொல்லும் பொதுவாக வெறும் பொழுது போக்குக்காக எந்த படைப்பும் இடம் பெறவில்லை.

நாடும் நகரும் / நகர்ப்புறமும் நன்றாக / வீடும் குடியும் / விளக்கமுற நீடுலகில் / தக்கபணி யாற்றி / தமிழன் குரலென்றும் / மக்களிடை வாழ்க / வளர்ந்து என தமிழன் குரலுக்கு கவி மணி தேசிய விநாயகம்பிள்ளை எழு திய வாழ்த்துக்கவிதையும் இடம் பெற் றுள்ளது. கவிமணிக்கு ம.பொ.சி. தீட் டிய இரங்கல் கட்டுரையும் இதே தமி ழன் குரலில் இடம் பெறநேர்ந்தது.

பொதுவாக தமிழன் குரல் ஒரு விரிந்த தளத்தில் தமிழ்தேசிய அரசி யலை பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வாகனமாக திகழ்ந்திருக் கிறது. அதே நேரத்தில் அது பிரி வினை முழக்கமாகவோ வேறு திரிபு வாத போக்குகளாகவோ சிதைவுறா மல் ஆக்கபூர்வமான வகையில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும், அன் றைய தமிழ்ச் சூழலில் இத்தகைய ஜனநாயக ரீதியான புரிதல் ஏனோ பெரும் வரவேற்பை பெறாமல் போய் விட்டது. முதலில் பிரிவினைவாதிகள் கை ஓங்கியதும் பின்னர் அவர்களே அதைக் கைவிட்டு சரணாகதி ஆகிய தும் ஆன தமிழகச் சூழலில் ம.பொ. சி.யின் ஜனநாயகக் குரல் உரிய கவ னிப்பைப் பெறாதது தமிழகத்துக்குத் தான் நட்டம்.

இப்போது இந்த மூன்று தொகுப் பையும் வாசிப்பதும் ஆய்வுக்குட்படுத் துவதும் அடுத்த கட்ட அடிவைப்புக்கு உதவும். ம.பொ.சி.யின் இதர ஏடு களையும் இதுபோல் தொகுக்க தி. பரமேவரி முயல்வாராக.

ம.பொ.சி.யின் தமிழன் குரல்
இதழ்த் தொகுப்பு: தி. பரமேவரி
அரசியல் கட்டுரைகள்
பக். 272 விலை ரூ. 150/-
இலக்கியக் கட்டுரைகள்
பக். 216 விலை ரூ.125/-
படைப்பிலக்கியம்:
பக். 272 விலை ரூ. 145/-
சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083