இறைவன் எங்கிருக்கிறான் ?

Posted by அகத்தீ Labels:

 



Gitanjali

Rabindranath Tagore 

[11]

Leave this chanting and singing and telling of beads! Whom dost thou worship in this lonely dark corner of a temple with doors all shut? Open thine eyes and see thy God is not before thee!

 

He is there where the tiller is tilling the hard ground and where the pathmaker is breaking stones. He is with them in sun and in shower, and his garment is covered with dust. Put of thy holy mantle and even like him come down on the dusty soil!

 

Deliverance? Where is this deliverance to be found? Our master himself has joyfully taken upon him the bonds of creation; he is bound with us all for ever.

 

Come out of thy meditations and leave aside thy flowers and incense! What harm is there if thy clothes become tattered and stained? Meet him and stand by him in toil and in sweat of thy brow.

 

==================================

 

கீதாஞ்சலி (11)

இறைவன் எங்கிருக்கிறான் ?

 

சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,

துதி பாடி, தோத்திரம் பாடி,

கையால்

ஜெபமாலை உருட்டி

உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை

நிறுத்தி விடு!

கோயில் தனி மூலையில்,

கதவுகளை மூடி,

கண்களை மூடிக் கொண்டு

காரிருளில் நீ

யாரைப் பூஜிக்கின்றாய்?

கண்களைத் திறந்துபார்,

உன் இறைவன்

முன்னில்லை என்பதை!

மெய்வருந்தி

இறுகிப் போன வயலை

உழவன் எங்கே

உழுது கொண்டு இருக்கிறானோ,

வேர்வை சிந்தி

நடைபாதை போடுபவன்

எங்கே கல்லுடைத்து வருகிறானோ

அங்கே உள்ளான் இறைவன்!

வெட்ட வெயிலிலும்

கொட்டும் மழையிலும்

தூசி படிந்த ஆடையுடன்,

உழைப்பாளி

கூடவே குடியுள்ளான் இறைவன்!

புனிதமான

உன் காவி மேலங்கி

உடையை எறிந்து விட்டு

புழுதி நிரம்பிய

பூமிமேல் கீழிறங்கி

உழவரைப் போல்

உன் பாதங்களைப் பதித்திடு!

 

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு

விடுதலையா?

எங்கே காணப் போகிறாய்

அந்த விடுவிப்பை?

படைக்கும் போதே

நமை ஆளும் அதிபன்,

பந்த பாசப் பிணைப்புகளைச்

சொந்தமாய் மேற்கொண்டு

களிப்புடன்

அளித்து வந்திருக்கிறான்,

உயிர்களுக்கு!

நிரந்தரமாய் நம் எல்லோரையும்

தன்னுடன்

இரண்டறப் பிணைத்துள்ளான்

இறைவன்!

தியானத்தை நிறுத்தி விட்டு

வெளியே வா!

தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,

அகர் பத்திகளின்

நறுமணப் புகை அனைத்தையும்

புறக்கணித்து விடு!

உன் ஆடைகள்

கறைபட்டுக் கந்தலானால் என்ன?

தீங்கென்ன நேரும் உனக்கு?

மெய்வருந்திப் பணிசெய்யும்

உழைப்பாளியை

சந்தித்து

நில் அவனருகே நீ,

நெற்றி வேர்வை நிலத்தில்

சிந்தி!

 

 [ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.]

 


வாழ்ந்ததின் எச்சங்கள்! வரலாற்றின் பக்கங்கள் !

Posted by அகத்தீ Labels:

 


வாழ்ந்ததின் எச்சங்கள்!

வரலாற்றின் பக்கங்கள் !

 

கீழடிக்கு போக வேண்டும் என்கிற வெகுநாள் எண்ணம் . 21 ஜூன் 2023  புதன் கிழமை அன்று கை கூடியது . நானும் இணையர் சி.கலாவதியும் சென்று வந்தோம் . திருப்புவனம் கட்சித் தோழர் சின்ன கருப்பன் , கீழடி அகழ்வாய்வில் உழைக்கும் தோழர் கதிரேசன் ,மற்றும் ஓட்டுநர்தோழர் கார்த்திக் ஆகியோர் உடன் உதவி வழிகாட்டினர் .மதுரை தீக்கதிர் தோழர்கள் ஒத்துழைப்புடன் இப்பயணம் மகிழ்வோடும் மனநிறைவோடும் நடந்தேறியது . அனைவருக்கும் மிக்க நன்றி!!!

 

கண்காட்சி , ஆய்விடங்கள் ,புதிய ஆய்விடம் கொந்தவை என எல்லாம் சுற்றிவந்தோம் . வியப்பும் பெருமிதமும் பொங்க கீழடியில் காலடி வைத்து தொல்பெருமையோடு தோளை நிமிர்த்தினோம் .

 

கண்காட்சியில் சங்க இலக்கிய வரிகளோடு செய்திகளைக் தரவுகளைக் காட்சிப் படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது . ஆதிச்ச நல்லூர் ,பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு  தொல் பெருமைகளை இணைத்து  நம் தொல் பாரம்பரியத்தை நச்சென பதிவு செய்திருக்கிறார்கள்.

 

 

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய கண்காட்சி. ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி .

 

சில கருத்துகள் :

Ø  கீழடி குறித்த தமிழ் /ஆங்கிலப் புத்தகங்கள் ஸ்டாக் இல்லை என்கின்றனர் .அரசு கவனிக்க வேண்டும்.

Ø  கீழடி குறித்தும் தொல்லியல் ஆய்வு குறித்தும் நம் பண்பாட்டுப் பெருமிதம் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக கடை ஒன்று உள்ளே அமைக்கலாம் .

Ø  வடநாட்டவருக்கு  இலவசமாக விநியோகிக்க இந்தியில் ஒரு சிறு வெளியீடு ஏற்பாடு செய்யலாம் . ஏனையோருக்கு தமிழ் / ஆங்கிலத்தில் விநியோகிக்கலாம்.

 

 

வாழ்ந்ததின் எச்சங்கள்!

வரலாற்றின் பக்கங்கள் !

 

 

அடி முடி கண்டதாய் பொய் உரைத்த

பன்றியையும் தாழம்பூவையும்

புராணப் புளுகாய் சாணியாய் மூளையில்

அப்பி வைத்த சனாதனமே !

 

கீழடி கண்டோம் – எம்மைக்

கிள்ளிப் பார்த்தோம்

உறைகிணறு ,முதுமக்கள் தாழி,

அணிகலன்கள், நாணயங்கள் ,

ஆயுதங்கள், ஆணிகள்

இரும்பு .எலும்பு,செங்கல் ,

சுடுமண் சிற்பம்,செங்கல் வீடுகள்

கழிவுநீர் வடிகால், மண் குழாய்கள்

 ஒவ்வொன்றும் தொல்பெருமை

பறை சாற்றி நின்றது !

 

எம் வேரின் தூரில் ஒட்டி இருக்கிறது

மூவாயிரம் ,நாலாயிரம் ஆண்டுகள்

நாகரீகத்தின் அழுத்தமான தடங்கள் !

எம் அடியும் முடியும் சனாதனத்தின்

தலையில் இடியாய் இறங்கும்.

தோண்டத் தோண்டத் தொல் பெருமை

தோளை நிமிர்த்தும் எம் தமிழர் !

இதிகாசக் கதைகளல்ல எம் முன்னோர்

வாழ்ந்ததின் எச்சங்கள்!வரலாற்றின் பக்கங்கள் !

 

குறிப்பு :

பட்டை போட்டு பொட்டு வைத்த போலீஸ்காரர் ஒருவர் ; வருகைதருவோர் பின்னாடியே வந்து தொன்மையின் மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் . ஊழியர்கள் அன்போடு பணியாற்றுகின்றனர் . அவர்களை வழிகாட்டியாக [கைடாக ] மாற்றும் அளவு பயிற்சியில் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 



தெருவில் நடக்கவா போராட்டம் ? வைக்கம் பற்ற வைத்ததீ

Posted by அகத்தீ Labels:

 


வைக்கம் போராட்டம் குறித்து மே மாத செம்மலரில் இடம் பெற்ற என் கட்டுரை கீழே உள்ளது … தாமதமானாலும் வாசிக்கலாம் எனக் கருதி பதிவிடுகிறேன் .கட்டுரை சற்று பெரியது .மூன்று பெட்டிச் செய்திகளோடு வாசிக்கவும்.வாசித்தபின் உங்கள் கருத்தை எனக்கு அனுப்பவும்.

சுபொஅ.

 

 

தெருவில் நடக்கவா போராட்டம் ?

வைக்கம் பற்ற வைத்த தீ

சு.பொ.அகத்தியலிங்கம்

 

வைக்கம் சத்தியாகிரகத்தின் உத்தேசம்கேவலம் நாய், பன்றி நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டும் என்பதல்ல; மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பதுதான். அந்தத் தத்துவம் இந்தத் தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகவே. தெருவில் நிரூபித்த சுதந்திரத்தைக் கோயிலுக்குள்ளும் நிரூபித்துக் காட்ட வேண்டியது மனிதர் கடமை.”

இது பெரியார் 1959 ல் பேசியது.

 

இன்றைக்கு நம் கடமைபெரிதினும் பெரிதாய் நீள்கிறது. சனாதனம் ஆட்சி அதிகார வெறியோடு சேர்ந்து போடும் பேயாட்டத்தைத் தடுத்து நிறுத்திட வேண்டும். புதிய புதிய வடிவங்களில் நுட்பமாய்த் தொடரும் தீண்டாமையை, ஆணவப் படுகொலைகளைப் போராடி முறியடிக்க வேண்டும்.

 

அதற்காக வரலாற்றை நினைவுகூர்வது நம் கடமை.

 

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் தலைவிரித்து ஆடிய சாதிப் பேயை இன்றைக்கு நினைத்துப்பார்த்தாலே நெஞ்சம் பதறும்.

 

நீங்கள் இன்றைக்கும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்குச் சென்றாலும், சுசீந்திரம்கோயிலுக்குச் சென்றாலும் நம்பூதிரி/போத்தி என பார்ப்பன உபசாதிப் பிரிவில் அடங்கிய பூஜாரிகள் பிரசாதத்தை கையில் கொடுக்க மாட்டார்கள் பிரசாதத்தை மேலிருந்து கீழே தூக்கிப் போடுவதைக் காணலாம். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை நாஞ்சில் நாட்டுக்காரர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தவர் என்பதால் இதனை அனுபவித்துதீண்டாமைப் பேய்எனும் பாடலில் சொல்லுவார்:

கண்ணுதல் ஆலயம் சென்றால்அங்கே

கையிற் பிரசாதம் போட ஒட்டாது;

எண்ணி வரையளந்திட்டேஅதற்கு

அப்புறம் இப்புறம் நில்லென்று அதட்டும்.”

அப்புறம் இப்புறம் என கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல வெளியிலும் அதட்டும்.

 

நவீனஇந்தியா வரலாறும் அரசியலும்எனும் நூலின் ஆசிரியர் ரோபின் ஜெப்ரி [Robin Jeffrey] விளக்குகிறார்.

நாயர் சாதியைச் சார்ந்தவர் நம்பூதிரி பார்ப்பான்அருகில் செல்லலாம்; தொடக்கூடாது. நம்பூதிரி பார்ப்பனர் நிற்கும் இடத்திலிருந்து ஈழவர் முப்பது எட்டு தள்ளி நிற்க வேண்டும். புலையர்தொண்ணூறு எட்டுதள்ளி நிற்க வேண்டும்; நாயர் நிற்கும் இடத்திலிருந்துஈழவர் பன்னிரெண்டு எட்டு தள்ளி நிற்க வேண்டும்; புலையரோ அறுபது எட்டு தள்ளி நிற்கவேண்டும்; பறையர் இதற்கும் அப்பால் தள்ளி நிற்க வேண்டும்.சிரியன் கிறுத்துவர் சில பகுதிகளில் நாயரைத் தொடலாம். அனுமதி உண்டு. பல பகுதிகளில் அனுமதி இல்லை. சாதி ஆதிக்கம் மிகுந்தஅச்சமூகத்தில் பறையர் பிறரைத் தொட முடியாது, பார்க்க முடியாது, அணுகவே முடியாது, ஒன்றாய் சாப்பிடுவதை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஒடுக்கப்பட்ட சாதி அடிமை எனும் நிலை.”

 

மேலும், ராஜா - நம்பூதிரிப் பார்ப்பனர் - நாயர்- வெள்ளாளர் போன்ற சில ஆதிக்கசாதிகளைத் தவிர ஏனையோர் கீழ்சாதியினர் என்பதால் குடை பிடிக்கக் கூடாது; செருப்புஅணியக் கூடாது; கிணறு,குளம், சாலை, சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.ஆண்கள் யாரும் மீசையோ தாடியோ வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் அதற்குத்தனிவரி கட்ட வேண்டும். பிராமணர் அல்லாத இதர சாதிபெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க ஆடைஎதுவும் அணியக் கூடாது எனவும், அப்படி அணிந்தால்அதற்குமுலை வரிகட்ட வேண்டுமென்ற கொடுமைகள்  கோலோச்சியது. குறிப்பாக சாணார், ஈழவப் பெண்கள் தோள் சீலை அணியவே தடை இருந்தது.

 

18–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திப்பு சுல்தான் ஆளுகையில் மலபார் பகுதி இருந்தது. அங்கு ஈழவப் பெண்கள் மேலாடை, ஜாக்கெட் போட உரிமையற்று இருந்தனர். மேல்சாதி ஆதிக்கக்கட்டளை அது. இதைக் கேள்விப்பட்ட திப்பு சுல்தான் வருந்தினார்.

 

இதற்கு வறுமை காரணமென்றால் அதைப் போக்க வேண்டும். மன்னர் தண்டனை என்றால் அதை ரத்து செய்கிறேன். மூட நம்பிக்கை எனில் மதநம்பிக்கையைப் புண்படுத்தாமல் அதனைமாற்ற அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்என திப்புசுல்தான் ஆணையிட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாணார் பெண்கள்தோள் சிலை அணியத் தடை இருந்தது. அதனை எதிர்த்து குப்பாயம் அணியும் போராட்டம் கிறுத்துவர்கள் நடத்தினார்கள். குமரிமாவட்டத்தில் வைகுண்ட சாமிகள் தீவிரமாய் தோள்சீலை அணியும் போராட்டத்தையும் சாதி பேதமற்ற ஒற்றுமைக்கான வழிபாட்டையும் முன்னிறுத்தினார்.

 

பொதுவாக, கேரள மறுமலர்ச்சி அல்லது சமூக சீர்திருத்த வரலாற்றை எழுதும் எந்த ஆய்வாளர் ஆயினும் 1813-59 ஆண்டுகளில் நடந்த சாணார் எழுச்சிதோள்சீலைப் போராட்டம்வைகுண்ட சாமிகள் என்பதில்தான் தொடங்குவார்கள் .

 

வைகுண்டரைத் தொடர்ந்து கேரளத்தில் நாராயண குரு [1856-1928] வந்தார். நம் திருமூலர்ஒன்றே குலம், ஒருவனே தேவன்என்றது போன்றஓர் முழக்கத்தை முன்வைத்தார். சாதி வேற்றுமை தகரகல்வியே ஆயுதம் எனக் கருதினார். அருவிபுரத்தில் எல்லோரும் வழிபட ஓர் சிவனை பிரதிஷ்டை செய்தார். அதனை பார்ப்பனர்கள் எதிர்த்த போதுஇது பார்ப்பன சிவனல்ல; ஈழவ சிவன்என்றார். சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உறுதியாக நின்றார்.

நாராயண குருவை முன்னிறுத்தி டாக்டர் பல்பு முன் முயற்சியில் ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன யோகம்(எஸ்என்டிபி) என 1903இல் தொடங்கப்பட்டது. அதன் மூலம் நிறைய கல்லூரிகளும் பள்ளிகளும் நிறுவப்பட்டன.

 

கேரளாவில் கிறுத்துவதின் எழுச்சி குறிப்பாக கல்வியில் அவர்கள் காட்டிய நாட்டம் குமரிமாவட்டத்திலும் அதன் எதிரொலி உண்டு.

 

நாராயண குரு,வில்லு வண்டி போராட்டம் நடத்திய அய்யன் காளி,சமபந்தி போஜனம் நடத்திய சகோதரன் ஐயப்பன் எனதொடந்து சமூக சீர்திருத்த அலை கேரளாவில் 19 ஆம்நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது. 1924–ல் நடந்த வைக்கம் போராட்டம் அதன் தொடர்ச்சியே!

பல நூற்றாண்டுகளாக சமயம், சக்தி வாய்ந்த மேலாதிக்கக் கோட்பாடாகத் திகழ்ந்தது. தத்துவம் கூட சமயத்திடம் பணிந்து நடக்க வேண்டியதாயிற்று. இதன் காரணமாகத்தான் தொடக்க காலத்தில்தேசியம் தோன்றி உருக்கொண்டு வளர்ச்சி பெற்ற காலத்தில் அது பலவிதமான சமயக் கோட்பாடுகள் சமய சீர்திருத்தங்கள் வாயிலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்றது என்பார் பண்டிட் ஜவஹர்லால் நேரு.

பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம்,பிரார்த்தனா சமாஜம், தியாசாபிக்கல் சொசைட்டி எனப்படும் பிரம்மஞான சபா, ராமகிருஷ்ண மடம், அதுபோல் இஸ்லாம் மற்றும் கிறுத்துவத்துள்ளும் ஓங்கிய சீர்திருத்த குரல் எல்லாம் நேரு குறிப்பிட்டதின் சாட்சி.கேரளத்திலும் அவை தடம் பதித்தன. ஆயின்அவற்றின் வட்டம் மிகக்குறுகியதாகவே இருந்தது. வைகுண்டர், வள்ளலார், நாராயணகுரு போன்றோர் பயணப்பட்ட திசை வலுவானது.

 

சீர்திருத்த அலை தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கேரளாவிலும்ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி மிக்க மக்கள் சக்தியாய் எழுந்தது போல் வடக்கே அமையவில்லை. அதன் விளைவை இன்றும் தேசம் அனுபவிக்கிறது. தமிழ்நாடும் கேரளமும் சனாதன எதிர்ப்பில் தொடர்ந்து முன்னிற்கிறது.

 

இதை எல்லாம் பின்புலமாகப் பொருத்திப் பார்க்காமல் வைக்கம் போராட்டத்தை தனித்துப் பார்க்க இயலாது. பார்த்தால் அதன் வீச்சு புரியாது.

 

இது குறித்து 1959 ல் மார்த்தாண்டம், இரணியல் ஆகிய இடங்களில் பேசும் போது பெரியார் சொன்னார்;

கீழ்சாதியான் மேல்சாதியான் கண்ணில் தென்படக்கூடாது; அவனின் நிழல்கூட மேல்சாதிக்காரர்கள் மேல் படக்கூடாது என்ற நிலைமை அல்லவா இருந்தது. அவன் தன்னை இன்னான் என்று காட்டிக் கொள்ள மறைவிலிருந்தே ஒருவித சத்தம் போட வேண்டும் என்று திட்டமிருந்தது. நாராயண குருசாமிஅவர்களின் போற்றத் தகுந்த தொண்டு காரணமாகத்தான் ஓரளவு கீழ்சாதி மக்கள் உணர்வுபெற்று, வைக்கம் கிளர்ச்சி நடந்து அதற்குபரிகாரம் கிடைத்தது. நிலைமை மாறியது என்று சொல்லலாம்.”

ஆம். நான் சாதித்தேன் எனச் சொல்லவில்லை. நாராயண குருவின் போற்றத்தக்க பங்கை நினைவு கூர்ந்து மகிழ்கிறார்.

 

சரி என்ன நடந்தது ?

 

வைக்கம் போராட்டம் என்பது திடீர் வெடிப்பல்ல. நீண்ட நாளாக உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த உணர்வு வெடிக்க திருவிதாங்கூர் ராஜா பிறந்தநாளுக்காகப் போடப்பட்ட பந்தல் உடனடி காரணமாயிற்று. நீதிமன்றம், அரசு அலுவலகம் எல்லாம் அங்கேதான் இருக்கிறது. கோவில் இருக்கும் தெருவில் நுழையாமல் போகமுடியாது. ஆனால் கீழ் சாதியார் அவ்வழி போக அனுமதி இல்லை என அறிவிப்பு போடப் பட்டிருந்தது.தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், நீதிமன்றப் பகுதிக்குள் நுழையக்கூடாது எனத் தடுக்கப்பட்டார்.

 

மாதவன் சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள்சத்தியாகிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு  செய்தார்கள்.” என வைக்கம்போராட்டத்தின் தொடக்கத்தைப் பற்றி மிகச்சரியாகக் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

1921 செப்டம்பரில்  திருநெல்வேலியில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற டி.கே.மாத வன் காந்தியை சந்தித்து வைக்கம் போராட்டம் குறித்து விவாதித்தார். காந்தியோ,சாதி உரிமைகளுக்கான போராட்டத்தை தனித்தனியே நடத்துவது, தேசியப் போராட்ட ஒற்றுமையைவலுவிழக்கச் செய்யும் என்று சொன்னார். வெள்ளையரின் நேரடி ஆட்சி இல்லாத சமஸ்தான மன்னர்களை காங்கிரஸ் தொந்தரவு செய்யாது என்கிற காங்கிரசின் நிலையையும் சொல்லி காந்தி தயங்கினார்.

 

1923இல் காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர்களான கே.பி.கேசவமேனன், கே.எம்.பணிக்கர், கேளப்பன் ஆகியோருடன் இணைந்துடி.கே.மாதவன்இப்பிரச்சனையை எழுப்பினார். காங்கிரஸ் தொடங்கவில்லை எனில் போராட்டம் வேறு திசையில் போய் விடும் என்கிற அச்சம் காந்தியை இணங்க வைத்தது.இதைத் தொடர்ந்து திருவாங்கூர் காங்கிரஸ் இப்போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுமாறு காந்தி கேட்டுக் கொண்டார்.

 

1924 ஜனவரி 24இல் எர்ணாகுளத்தில் கூடிய காங்கிரஸ் கமிட்டி வைக்கம் போராட்டக் குழுவை உருவாக்கியது. டி.கே. மாதவன் தலைமையில் கேளப்பன்,வி.சங்கரன், கே.வேலாயுதம் ஆகியோர் கொண்ட போரட்டக் குழு அமைக் கப்பட்டது.1924 பிப்ரவரியில் வைக்கத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது நடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய பட்டியல் இனமக்கள் உட்பட அனைவருக்கும் உரிமை உண்டு; அதற்கெதிரான எந்த தடையும் மீறப்படும் என அறிவிக்கப்பட்டது.

1924இல் மார்ச் 30இல் முதல் சத்தியாகிரகக் குழு சென்றது. முதல் குழுவில் கொச்சாத்தி(புலையர்), பாகுலேயன் (நாயர்), கோவிந்த பணிக்கர் (ஈழவர்) சென்றனர்.  போலீசார், நாயரைமட்டும் உள்ளே விடமுயற்சித்தனர். அதனைஏற்காது மூவரும் உள்ளே சென்ற போது கைதானார் கள்.

 

நாராயணகுரு, மன்னத்பத்மநாபன் போன்றோர் அளித்த ஆதரவு வைக்கம் போராட்டத்துக்கு பெரும் ஊக்கசக்திஆனது.கேரள காங்கிரஸ் அழைப்பின் பேரில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் வழக்கறிஞர்பணியை நிறுத்திவிட்டு வைக்கம் வருகிறார். கே.கேளப்பன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்சிறையில் இருந்தபோது, போராட்டத்தின் முழுப் பொறுப்பை ஜார்ஜ்ஜோசப் ஏற்றுக்கொண்டார்.

 

ஜோஜப் ஒரு கிறுத்துவர் என்பதால் இந்துக்கள் சம்மந்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்க வேண்டாமென காந்தி அனுப்பிய கடிதம் கிடைக்கும் முன் அவர் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்தொடர்ந்து போராட்டம் நடைபெற வேண்டிய சூழலில், போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

 

 பெரியாரை கேரள காங்கிரஸ் கமிட்டிஅழைத்தது. பெரியார் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு கோவை அய்யாமுத்துவைஅழைத்துக் கொண்டு வைக்கம் புறப்பட்டார். பெரியாருடன் எஸ். ராமநாதன், சந்தானம்,சீனிவாச ஐயங்கார், தங்கப் பெருமாள் பிள்ளை உள்ளிட்டோருடன் போராட்டத்தில் குதித்தார்.

கீழ்சாதி மக்களான நாம் உள்ளே போவதால் தீட்டுப்பட்டுவிடும்- செத்துப் போகும் என்று சொல்லும் வைகுத்தப்பனைப் போட்டு வேட்டி துவைக்கணும்.” என அனல் பறக்கப் பேசினார்.

 

பெரியாரின் பிரச்சாரம்கேரள மக்களைக் கவர்ந்தது.1924மார்ச் 30 முதல் 1925 நவம்பர் 24 வரை மொத்தம் 603 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் 141 நாட்கள் பங்கேற்றார். இரண்டு முறை மொத்தமாக 79 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இது குறித்து .பொ.சிவஞானம் தன் நூலில் எழுது

கிறார்:

அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் .வெ.ராவுக்கு வேண்டியவராக இருந்தும், நட்பைவிட நாடே பெரிதென்றெண்ணி சத்தியாக்கிரக போரில் ஈடுபட்டார். அவருடைய மனைவி நாகம்மாள், சகோதரி கண்ணம்மாள் ஆகியோரும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு அடுக்குமுறைக் கொடுமைகளை ஏற்றனர்... பெரியார் .வெ.ராவைப் பாராட்டிவைக்கம் வீரர்என பட்டம் அளித்து தமதுநவசக்தியில் திரு.வி.கஎழுதினார்.”

 

திருவிதாங்கூர் மகாராஜா திடீரென இறந்துவிடமகாராணி பட்டத்துக்கு வந்தார். மகாராணி காந்தியோடு பேசி சமாதானம் செய்ய முன்வந்தார்.சாலையை திறந்துவிடுகிறோம், கோவில் நுழைவு எனபெரியார் தொடரக்கூடாது என்பது அவர் நிபந்தனை. காந்தி பெரியாரிடம் பேசினார்

இதுமுதல் கட்ட வெற்றி பின்னர் அடுத்ததைப் பார்ப்போம் என பெரியார் ஒப்புக்கொள்ள போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் முடியவில்லை.

 

1931–ல் கேரளத்தை உலுக்கிய குருவாயூர் கோயில் நுழைவுப் போராட்டம் துவங்கியது. கடுமையான போலீஸ் தாக்குதலுக்கு இடையேபோராட்டம் தொடர்ந்தது. சகாவு கிருஷ்ண பிள்ளை தடையை மீறி கோயில் மணியை அடித்தார். கோயில் பலநாள் மூடப்பட்டது. “கதவை திறவுங்கள் இல்லையேல் உடைப்போம்என தோழர் .கே.கோபாலன் எழுப்பிய முழக்கம் பெரும் எதிரொலியானது.

 

இதற்கிடையில் போராட்டத்தில் ஒரு திருப்பம் சிலர் இஸ்லாமுக்கு மதம் மாறினர். வைதீகம் நடுங்கியது. அரசர் பணிந்தார்.1936ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் பெரியாரோடு பங்கேற்ற எம்.எம்.பெருமாள்நாயுடு தலைமையில் சுசீந்திரத்தில் வெற்றிகரமாக கோவில் நுழைவு நடந்தேறியது.

 

இதற்குமுன்பே திருச்செந்தூர், வில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கோவில் நுழைவு முயற்சிமேற்கொள்ளப்பட்டது.அது தனிக்கதை.

 

அம்பேத்கர் மஹர் போராட்டத்தை வைக்கத்தின் உத்வேகத்தில்தான் தொடங்கினேன்என்பார்.மகாத்மா காந்தி அரிஜன நலம் எனப் பேச அம்பேத்கர்இயக்கமும் , இந்து மதத்தின் கொடுமைக்குள்ளான தாழ்த்தப்பட்டோர் மதம் மாறுவது தொடர்ந்ததும்தான் காரணமானது என்பதையும் இதனோடு சேர்த்தே பார்க்க வேண்டும். நாராயணகுரு இயக்கத்தின் அலை கேரளா முழுவதும் தொடர்ந்து வீசி கொண்டே

இருந்தது. அய்யன் காளியின் புலையர் சபா உருவாகியது. நாயர்களின் நாயர் சர்வீஸ் சொசைட்டி உருவாகியது.

 

நம்பூதிரிகளின் முற்போக்கு பகுதியினர் யோக சேம சபா என்ற சீர்திருத்த இயக்கத்தை துவக்கவும் காரணமாயிற்று. அதிலிருந்துதான் .எம்.எஸ். நம்பூதிரிபாட் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் தலைவர் உருவானார். பூணூல்அறுப்பு, நம்பூதிரி விதவைகளை திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி போராட்டம், உண்ணி நம்பூதிரிஎனும் பத்திரிகை என யோக சேம சபாவின் பணிகளைவிவரித்த பின் அது குறித்து தன் சுயசரிதையில் .எம்.எஸ் எழுதுகிறார்:

 

“….இவை அனைத்திற்கும் அரணாக வாய்த்தது போல் இருந்தது எதுவென்றால்; ஈவெரா போன்ற தலைவர்களின் நாத்திகவாதமும், பிராமண எதிர்ப்பு பிரச்சாரமும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் புரட்சி அரசியலுமேவைக்கம் வெறுமே சாலை நுழைவுப் போராட்டம்மட்டும் அல்ல ; மூடநம்பிக்கை ,சாதி ஆதிக்கம் இவற்றுக்கு எதிராக பகுத்தறிவு சாலை அமைத்த போராட்டமும்கூட எனில் மிகையாமோ?

 

சாதியத்துக்கு எதிரான போர்பாலின சமத்துவதுக்கான போர்சனாதனத்துக்கு எதிரான போர்மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியல் பார்வைக்கான விடாப்பிடியான போர் என்று இவை அனைத்தின்தேவையும் பன்மடங்கு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் நிலைமை என்ன?

 

மாராட்டிய தலித் கவிஞர் பிரதன்யா பவார் கவிதையில் சொன்னபடி

எவ்வளவு தொலைவில் இருக்கிறது

சாதியை அழித்தொழிப்பதற்கான போராட்டம்

எவ்வளவு தொலைவில் நிற்கிறான்

வரிசையில் காத்திருக்கும் அந்த கடைசி மனிதன்

எவ்வளவு தொலைவில் இருக்கிறாள்

வரிசையில் இன்னும் இடம்பெறாத அந்தப் பெண்…”

 

------

கட்டுரை உள் பெட்டிச் செய்தி .1

தெருமறிச்சான்….

 

நான் பிறந்தது 1953. இந்த போராட்டங்களை எல்லாம் பார்த்தவன்அல்லன் ஆனால் சுசீந்திரத்தில் குளிச்சப்பத்து மூலையில் எனது தாய்மாமாவீட்டருகே சுங்கசாவடி தடைபோல ஓர் மூங்கில் கழியோடு கூடிய அமைப்பு செயல்படாமல் இருந்தது.அதை தெருமறிச்சான்என்பார்கள். ஒரு காலத்தில் அந்த தெருமறிச்சான் போக்குவரத்தை தடுத்தது. அதைத்தாண்டி கீழ்சாதியினர் உள்ளே வரவோ தேர்வீதியில் புழங்கவோ முடியாதாம். வயலில் இருந்து வரும் நெல்,மேய்த்துவரும் ஆடு,மாடு எல்லாமும்கூட அங்கேயே நின்றுவிடுமாம். இந்தப் பக்கம் உள்ள சில சாதியினர் மட்டுமே அவற்றை வீடு கொண்டுசேர்ப்பாராம். வைக்கம் போராட்டத்திற்கு பின்னரே அந்த தெருமறிச்சான்சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டு வெறும் நினைவுச் சின்னம் ஆனது.தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழாவின் போது எல்லோரும் வரலாம் தடைகிடையாது. ஆனாலும் 1936 வரை கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

 

அதுபோல் சுசீந்திரம் கோவிலில் ஊட்டுப்பெரை என்றஒரு அமைப்பு இருந்தது. அங்கே போத்திகளுக்கு பார்ப்பனர்களுக்கு மதியம் அறுசுவை உணவு இலவசமாக தரப்பட்டது. மூன்று வயதுகுழந்தையாயினும் பார்ப்பானுக்கு கிடைக்கும்.ஆயின் பாப்பாத்திகள் பெண் என்பதால் கிடைக்காது. பார்ப்பனர்சாப்பிட்டபின் மீந்த உணவை புதைத்துவிடுவார் களாம்.கோயில் மடப்பள்ளியோடு இணைந்த ஓர் ஆள் நுழையும் மடை ஒன்றுமாடத்தெருவிலுள்ளது; இவ்வழி பார்ப்பனர்கள் அங்கிருந்த உணவை,உணவுப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பார்களாம். அப்பொருட்களை வாங்கி விற்றவர்களில் கீழவீதியில் கடை வைத்திருந்த என் அம்மா வழி உறவும் ஒருவராம்.இது என் ஆச்சி வழி அறிந்த செய்தி.

 

ஊட்டுப்பெரை வைக்கம் போராட்டத்திற்கு பிறகே மூடப்பட்டது. அதன் பின் சோற்று பெரையில் கோயில் சோறு - சிவப்பரிசி சோறு விற்கப்பட்டது. வியாபாரத்தில் அனைத்தையும் என் தந்தை பறிகொடுத்த பின் என் வீட்டில் கோயில் சோறுவாங்கிச் சாப்பிட்டே பல நாட்கள் பசியாறி இருக்கிறோம். அதனை வாங்கிவரும் பொறுப்பு எனக்குத்தான்.

 

நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் வரை அதாவது என் அம்மா வழி ஆச்சிஇறக்கும் வரை பள்ளிக்கூடம் போய்வந்ததும் டவுசர் , சட்டை, துணிப்பைஎல்லாவற்றையும் வாசலிலேயே கழற்றிவைத்து, ரெண்டு சொம்பு தண்ணீரை அதன் மேல் ஊற்றிவிட்டு, எங்கள் தலையில் கொஞ்சம் தண்ணீர்தெளித்துவிட்டுத் அம்மணமாகத்தான் வீட்டுக்குள் செல்ல முடியும்.ஏனெனில் நாங்க கண்ட சாதி பசங்களோடு புழங்கிட்டு வர்றதாலேதீட்டுபட்டுவிட்டதாம். 1950களின் இறுதியில்தான் இந்த நிலைமை.இன்னும் நிறையச் சொல்லலாம் இடம் கருதி முடித்துக் கொள்கிறேன்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

----- ---------------------------- ------------------------

பெட்டிச் செய்தி -2

 

நல்லாரை உழைப்போரைப் பறையர் என்றார்

நயவஞ்சக முடையோரை மேற்சாதி என்றார்

பொல்லாத கொடியவரை மன்னர் என்றார்

பொயுரைத்த கயவர்தமை குருக்கள் என்றார்

சூதுமிகும் ஆசாரம் சமயம் என்றார்

இல்லாத பொய்வழியில் சென்றதாலே

இந்நாட்டவர் அடிமைவாழ் வெய்தி னாரே

 

.ஜீவானந்தம்.

 

•••••••••••••••• -------------------------- ---------------------

பெட்டிச் செய்தி -3

 

தாழ்குலத்தார் கோடிஜென்மம் தவம்புரிய

வேண்டும் உயர் சதுர்த்தராக

 

ஏருழவர் கோடி ஜென்மம் தவம் புரிய

வேண்டும் வணியர் ஜென்மம் கிடைக்க

 

சூழ்வணியர் கோடிஜென்மம் தவம்புரிய

வேண்டும் ராசாவென தோன்றா நிற்க

 

வாழரசர் கோடிஜென்மம் தவம் செய்யினும்

கிட்டாது மறையோர் ஜென்மம்…”

 

 

குற்றாலக் குறவஞ்சிபாடிய திரிகூட

ராசப்ப கவிராயரே இப்பாடலையும் எழுதியதாக நம்பப்படுகிறது.

மாறுபடுவோரும் இருக்கக்கூடும்.

 

ஆயினும், நால் வர்ண அடுக்கு வலுவாக வேர்விட்டிருப்பதையும்,

பார்ப்பனரே எல்லோருக்கும் மேலானவர். மற்ற சாதியார் யாரும்

ஒரு போதும் பார்ப்பானாகவே முடியாது என அழுத்திச் சொல்லும்

இப்பாடல் அன்றைய வர்ணாஸ்ரம இறுக்கத்தைப்

பிரதிபலிக்கிறது.