என்ன படிக்கலாம் ? பாட்டனுக்கு பூட்டன் பதில் ..

Posted by அகத்தீ Labels:

 

என்ன படிக்கலாம் ? பாட்டனுக்கு பூட்டன் பதில் ..

 

[ பஜ்ரங் ராஜ்யத்தின் அதாவது கதை ]

 

பையனை என்ன படிக்க வைப்பது?

நாளை எதற்கு வேலை கிடைக்கும் ?

அப்பா தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தார்.

 

அவர் பாட்டனுக்கு பூட்டன் கேலி செய்தார் .

என்னிடம் அனுப்பி வை

சோதிடம் கற்றுத் தருகிறேன்.

 

நாளை ஒவ்வொரு நீதி மன்றத்திலும்

நீதிபதிக்கு உதவ ஓர் சோதிடன் நியமிக்கப்படலாம்.

குற்றவாளியின் கட்டங்களை சோதித்து

அவன் விடுதலை செய்யப்படலாம்.

 

ஒவ்வொரு மருத்துவமனையிலும்

ஹார்ட் அட்டாக் வந்தாலும்

ஆக்சிடெண்ட கேசானாலும்

ஆபத்தான கேசானாலும்

சிகிட்சைக்கு நேரம் குறிக்க

சோதிடர் வேண்டாமா ?

 

கல்வி நிலையங்களிலும்

சோதிடர் நியமிக்கப்படலாம்

அவனுக்கு  ‘வித்யா யோகம்’

இருக்குதென சோதிடர் சொல்லாமல்

இடம் தர முடியாதே !

பிறப்புச் சான்றிதழாய்

சோதிடர் எழுதித்தரும் ‘ஜாதகம்’

ஒவ்வொருவருக்கும் தேவையன்றோ !

 

விண்வெளி மையத்திற்கும்

சோதிடர் தேவை

ராகுகாலம் எமகண்டம்

பார்க்காமல்

ராக்கெட் விட முடியுமா ?

விண்வெளி விஞ்ஞானமும்

தாயக்கட்டை உருட்டுக்கு

கட்டுப்பட்டதுதானே !

 

அவரின் இன்னொரு  பாட்டனுக்கு பூட்டன் வந்தார்

அவனை என்னிடம் அனுப்பு

மந்திரவாதி ஆக்குகிறேன்

மந்திரம் போட்டே இனி

வியாதிகள் சொஸ்தமாகும்

ஆஸ்பத்திரிகள் கிரிமினல் வேஸ்ட் !

 

இந்திய எல்லையிலே

எலுமிச்சம் பழத்தை தொங்கவிட்ட

அமைச்சரைப் பார்க்கவில்லையா ?

இனி குட்டி சாத்தான் ஏவலும்

பில்லிசூனியமும்

முட்டை மந்திரமும்

இராணுவத்தில் சேர்க்கப்படும் !

விபத்தைத் தடுக்க

ரயில்கள் முன்னே மந்திரிச்ச

எலுமிச்சம் பழம் தொங்கவிடப்படும் !

 

அவர் பாட்டிக்கு பூட்டி தன்பங்கிற்கு சொன்னாள்

என்னிடம் அனுப்பு

பெரிய எழுத்து விக்கரமாதித்தன் கதை முதல்

ஜகன் மோகினி கதை வரை எல்லாம் அத்துப்படி

கேட்டு வளர்ந்தால் நாளை

வானமுகட்டைப் பார்த்தே எழுதும்

வரலாற்று அறிஞராகலாம்.

 

 

எல்லாவற்றையும்

கேட்டுக்கொண்டிருந்த

பையன் சொன்னான்

நான் சாமியாராகவோ

அகோரியாகவோ

மாறிடப்போகிறேன்.

ஊரை அடித்து

உலையில் போடுவேன்.

என் காட்டில்

காசு கஞ்சா காமகோட்டம்

எல்லாம்

கொட்டோ கொட்டென கொட்டும் !

இஷ்டம் போல சோக்கோ சோக்கு !!

 

அப்பா மயக்கமானார் !

 “ அதற்கும் நீட்டு பூட்டென

ஏதாவது வைத்துவிடுவார்கள்

மநு சொன்னபடிதான் உன் இடம்…… …”

எனச் சொல்லி

பாட்டனுக்கு பூட்டனும் பாட்டிக்கு பூட்டியும்

இடியென சிரித்தனர் !!!

 

சுபொஅ.

10/6/2023.

 

0 comments :

Post a Comment