முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே ?

Posted by அகத்தீ Labels:
முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே?

சு.பொ.அகத்தியலிங்கம் சிற்றின்பம் , பேரின்பம் என இரண்டாகப் பகுத்து உயர் வாழ்நெறி கண்டவர் நம் முன்னோர்கள். அவ்வழி செல்வதன்றோ சரியானது?

நிலப்பிரபுத்துவ சமுதாயம் நிலைக்க உதவிய மதம் முதலாளித்துவம் மலரும் போது தடைக்கல் அல்லவா? ஆயினும் முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே! இதன் மூலம் மதத்தின் தேவையும் வலுவும் தெளிவாகவில்லையா?


சிற்றின்பம், பேரின்பம் என இரண்டாகப் பகுத்து உயர் வாழ்நெறி கண்டவர் நம் முன்னோர்கள். அவ்வழி செல்வதன்றோ சரியானது?
காதலையும் உடலின்பத்தையும் அதாவது காமத்தையும் பாடுவது சிற்றின்பம் என்றும்; கடவுளைச் சரண்டைவதே – அதைப் பற்றிப் பேசுவதும் பாடுவதுமே பேரின்பம் என்றும் புலவர்கள் விளக்கம் சொல்வார்கள். அம்பிகாவதி - அமராவதி காதல் காவியம் இதனைச் சுற்றியே பின்னப்படிருக்கும். ஆனால் காமம் இல்லா வாழ்க்கையை கனவி
சிற்றின்பம், பேரின்பம்லும் மனிதகுலம் நினைக்க இயலுமா? நினைப்பது தேவையா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் .விலங்குகளுக்கும் காமம் என்பது இனப்பெருக்கத் தேவையினையொட்டி மட்டுமே ஊற்றெடுக்கும். சிம்பன்ஸி மனிதக் குரங்குகள் காலம் வரை இதுவே நிலை. கிப்பான்கள் என்கிற குரங்குகளே மனிதனுக்கு மிக நெருங்கியவை என்று கருதப்படுகின்றன.
இந்த கிப்பான் குரங்குகள் ஆண்டு முழுவதும் எப்போதுவேண்டுமானாலும் உடலுறவு கொள்ளும். இது அவற்றின் வாழ்க்கைமுறையை மாற்றியதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி கிப்பானைப் போன்று நினைத்த போதெல்லாம் உறவுகொண்டதே மனிதகுலம் விரைந்து முன்னேறவும் பல கண்டுபிடிப்புகளுக்கும் உந்துசக்தியாகியது என்பார் “கடவுள் உருவான கதை” நூலின் ஆசிரியர் அஜய் கன்சால்.

மனித குலத்துக்கே ஆண்டு முழுவதும் நினைக்குந் தோறும் காமம் ஊறும்.
“ ஊடல் உணர்தல் புணர்தல் இவைக்காமம்  
கூடியார் பெற்ற பயன்”
என்பாரே வள்ளுவரும். அந்த காமம் கெட்ட தன்று.
உற்பத்தி , மறு உற்பத்தி” -அதாவது உழைப்பும் காமமுமே உலகின் அச்சாணி என்பார் மார்க்ஸ். ஆண்டாளும் , காரைக்கால் அம்மையாரும் தம் காமத்தை ஆண்டவன் மீது ஏற்றிப்பாடவில்லையா? அதுமட்டுமா? அதிவீரராமபாண்டியர் எழுதிய “ கொக்கோகம்” மற்றும் வாத்சாயனர் எழுதிய “ காமசூத்திரத்து”க்கு நிகரான நூல் உலகில் இன்னொன்று இல்லை என்பர் .

வாழ்வியல் நூலாம் திருக்குறள் தந்த வள்ளுவனும் அறம், பொருளோடு நில்லாமல் காமத்துப் பாலையும் நமக்குப் புகட்டினான். 250 குறட்பாக்களை இதற்காகவே ஒதுக்கினானே. அதுதானே சரியான வாழ்வியல் அணுகுமுறை.
“உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.”
ஆம். நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு. என ஒப்பிட்டு உரைத்தவன் வள்ளுவன் .
“மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.”
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே என வகுத்துரைதவனும் அவனே!
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.”
ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்என நெற்றியடியாய் காமத்துக்கு வரைவிலக்கணம் தந்தவன் வள்ளுவன்.ஆயினும்,

பெண்ணை அடிமைப் படுத்திய சமூகமும் அதன் மதமும் “பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை” என ஜடப்பொருளில் ஒன்றாய் காமத்தைச் சுருக்கிவிட்டது. “ மது, மாது, மாமிசம்” என, பெருப்பாலானோரின் உணவுப் பழக்கத்தையும், அனைவருக்கும் உரிய காமத்தையும் சம்மந்தசம்மந்தமே இன்றி போதையுடன் இணைத்து இழிவுபடுத்துவதும்; அதுவும் காமத்தை ‘மாது’ எனச்சுட்டி பெண் மீது பழியைச் சுமத்திவிட்டது மதம் .
காமம் என்பதை பெண்ணோடு மட்டுமே தொடர்பு படுத்தி “பெண்ணாசை” என “பாவப்பட்டியலில்” சேர்த்த மதம், அதில் ஆண்களும் சமபங்காளி என்பதை வசதியாக மூடிமறைத்துவிட்டது.

நம் நாட்டில் ரிஷிகளுக்கு ரிஷிபத்தினி உண்டு. புத்தம் தன் துறவிகளுக்கு பெண் தொடர்பு கூடாதென போட்ட தடை இந்து மதத்தையும் பற்றிக் கொண்டு விட்டதோ! ஆனால் அதன் பின் மிகவும் மூர்க்கமாய் காமத்தை இழிவு செய்தது . கிறுத்துவத்திலும் போப்புகள், பாதிரிகளுக்கும், சகோதரிகளுக்கும் காமத்தை தடுக்க போட்ட இருப்புவேலி இன்னும் தொடர்கிறதே!

வைதீகத்தை எதிர்த்த சித்தர் மரபில் மிகவும் போற்றத்தக்க பகுத்தறிவுக் கூறுகள் உண்டெனினும் அவர்களிலும் “ காமப்படுகுழி” எனப் பெண்களைப் பழித்து வெறுத் தொதுக்கியோருண்டு. எல்லா மதங்களிலும்காமம் சம்மந்தப்பட்ட அனைத்திலும் பெண்ணை மட்டுமே குற்றவாளியாக்குவது ஆணாதிக்கச் சிந்தனையின் தொடர்ச்சியே ! யார் எப்படிப் பேசினும் காமத்தை தவிர்க்கவும் முடியாது; தடுக்கவும் முடியாது.
ஏனெனின் இது வாழ்வியல் யதார்த்தம். காமத்தை பிழையற புரிந்து கொள்வதும்; தெளிந்து அணைவதும் வாழ்வின் தேவை. அதைப் பேசுவதும் பாடுவதும் பிழை அல்ல. தேவை .ஆண்,பெண் இரு பாலர் மட்டுமல்ல திருநங்கை , திருநம்பி என்கிறவர் உட்பட அனைத்து பாலினத்தவரும் காமம் குறித்து பேசுவதும் , எழுதுவதும் , உரையாடுவதும் குற்றமல்ல .இயல்பு. உரிமை என்பதறிக!

நம் சிற்பக் கலையில் , ஓவியத்தில் , நாட்டார் வழக்காறுகளில் ,பாட்டுகளில் , கதைகளில் காமம் விரவிக்கிடக்கும் ஏனெனில் காமம் வாழ்வோடு விரவிக்கிடப்பது .காதலும் காமமும் இயல்பானது. பாடத்தக்கது.

ஆயின் காதல், காமம் என்கிற எல்லையைத் தாண்டி பெண்களை கொச்சைப் படுத்தவும், வக்கிரமாய் பார்க்கவும் தூண்டுவதே பிழை. அளவுக்கு மீறினால் அமிதமும் நஞ்சென்பது நம் முதுமொழி . உணவே ஆயினும் அதிகம் உண்டால் துன்பமே. எதுவுவாயினும் அததற்கு ஒரு எல்லை உண்டு . அதனை மீறுகிற போது துன்பம் உண்டு. காமம் குறித்த எல்லையும் புரிதலும் நாட்டுக்கு நாடு, காலத்துக்கு காலம் மாறும். இன்று அது குறித்து மனம் திறந்து பேச முன்வருவது உசிதமானது.
காமம் குறித்த உரையாடலையே பிழையாக, குற்றமாகக் கருதும் மனோநிலை ஆணிடமும் உண்டு. பெண்ணிடமும் உண்டு. இது தவறான பார்வையாகும், காமம் குறித்து செக்ஸ் கல்வி மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாய் போதித்தல் அவசியம். இது சிற்றின்பமல்ல. தேவையான இன்பம். மனிதம் குலம் தழைக்க மிக மிக அவசிவம் .

கடவுளிடம் சரண்டையச் சொல்லும் பேரின்பம் பயனற்றது. பொருளற்றது. தேவையற்றது. யதார்த்தமற்றது. நியாயமற்றது. அறிவியலுக்கு முரணானது. வெறும் கற்பனை மயக்கம். வேறென்ன சொல்ல?
நிலப்பிரபுத்துவ சமுதாயம் நிலைக்க உதவிய மதம் முதலாளித்துவம் மலரும் போது தடைக்கல் அல்லவா? ஆயினும் முதலாளித்துவ சமுதாயத்திலும் மதம் நீடிக்கிறதே! இதன் மூலம் மதத்தின் தேவையும் வலுவும் தெளிவாகவில்லையா?
ஆண்டான் - அடிமை யுகத்தில் எந்த சுதந்திரமும் இல்லாதவர்களாய் உழைப்பாளிகள் இருந்தனர். அடிமை நுகத்தடியில் உழன்றனர். ஆனால் அடிமைகள் திமிற ஆரம்பித்ததும் ; கலகங்கள் வெடித்ததும் ஆளும் வர்க்கம் உஷாரானது. அடிமைச் சங்கிலி அகன்றது. ஏட்டளவில் அனைவரும் சுதந்திரத் தொழிலாளிகள் ஆனார்கள். ஆனால் அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க ஆளும் வர்க்கம் புது உத்தி கண்டுபிடித்தது. அவர்களை நிலமற்றவர்களாக்கி, பண்ணைகளில் கூலியடிமைகளாக்கினார்கள். நிலப்பிரபுவை பகைத்தால் வேலையும் இல்லை. கூலியும் இல்லை. இப்படி பல்லக்கு சுமக்க ஒருவர்க்கமும் ; பல்லக்கு சுமக்க ஒருவர்க்கமும் என சமூக உளவியல் தத்துவம் அரசியல் அடக்குமுறை அனைத்தும் கட்டமைக்கப்பட்டன.கைவினைஞர்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரம் அனுபவித்தனர்.

ஆனால் முதலாளித்துவம் முளைக்கும் போது கைவினைஞர்களை ஓரம் கட்டவேண்டியிருந்தது . கூட்டம் கூட்டமாக விவசாயக் கூலிகளை கூலித்தொழிலாளர்களாய் நகரத்துக்கு கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது அவர்களின் மதநம்பிக்கைகளை கொஞ்சம் அசைக்க வேண்டிய தேவை முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பகுத்தறிவுப் பாதை அப்படியே தொடரவில்லை . ஏன் ?மதமும் கடவுளும் ஒற்றை இரவில் உருவாக்கப்படவில்லை. ஆதி பொதுவுடைமை யுகத்தில் மனிதர்களிடம் அறியாமை, பயம் இவற்றால் உருவான சில நம்பிக்கைகள்; அதனை அடுத்து வந்த சமூக அமைப்பான ஆண்டான் யுகத்தில் அடிமைத்தனத்தை நியாயபடுத்தவும் ஒடுக்கவும் கடவுள் மதக் கருத்துகளாய் வடிவெடுத்தன. நிலப்பிரபுத்துவ யுகம் தன் சுரண்டலுக்கு மதம் நல்ல கருவி என்பதை உணர்ந்து அதனைக் கூர்மைப்படுத்தி அதிகார மையமாக்கியது .

அறிவியலும் தொழில் வளர்ச்சியும் முதலாளித்துவ யுகம் கருக்கொள்ள களம் அமைத்தது; ஆனால் நிலப்பிரபுத்துவம் சார்ந்த மத நிறுவனங்கள் இதற்கு தடையாக இருந்ததால் எதிர்ப்பு வலுத்தது.

கத்தோலிக்க கிறுத்துவம் மன்னராட்சிக்கு குடைபிடித்தது எனில், மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் பிரிந்து வந்த புரட்டஸ்ட்டாண்டு முதலாளித்தும் விரும்பிய குடியரசுக்கு சாமரம் வீசியது. 1789ல் வெடித்த பிரெஞ்சுப் புரட்சி ஆரம்பத்தில் மதபீடங்களின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டது என்றாலும், தொழிலாளி வர்க்கத்தின் கையில் அதிகாரம் போய்விடக்கூடாது எனக் கருதியது. எனவே மத நிராகரிப்புக்கு பதிலாக மதச்சார்பின்மை முன்னுக்கு கொண்டுவரப்பட்டது. ஆயினும் நிலப்பிரபுத்துவத்தை நீக்கிவிட்டே முதலாளித்துவம் தன்னை பல நாடுகளில் நிலைநிறுத்திக் கொண்டது. அதே சமயம் மதத்தை தங்கள் தேவைக்கு வளைப்பதில் அவை வெற்றிபெற்றுவிட்டன. மதங்கள் நெகிழ்ந்து முதலாளித்துவத் தேவைக்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக் கொண்டது.

இந்தியாவிலோ நிலை வேறாக இருந்தது. இங்கே தொழில் வளர்ச்சியும் பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டதும் ஏறத்தாழ ஒரு சேர நிகழ்ந்தது. பிபின் சந்திரா எழுதிய “இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் விரிவாகக் காணலாம்.“வயிறார உணவும் சிறிது நீதியும் கிடைத்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருபதியோடு வாழ மக்கள் தயார்” என நிலைமையின் கடுமையை ‘அம்ரிதபஜார் பத்ரிகா’ எழுதியது மிகையல்ல.

“....இந்திய மக்களின் நிலைமை மோசமானது, இரங்கத்தக்கது, விலங்குகளுக்கும் கீழானது, ...இந்தியர்கள் பட்டினியில் வாழ்வதாக, வெறுக்கத்தக்க, கீழான, அஞ்சி ஒடுங்கத்தக்க வறுமையில் உழல்வதாக..” இந்திய பத்திரிகைகள் விடாமல் தினந்தோறும் வாரந்தோறும் எழுதின என்பதை நூலாசிரியர் மிகச் சரியாகச் சுட்டுகிறார். “பஞ்சங்களின் காரணம் விளைச்சல் இல்லாதது அல்ல. இருக்கக்கூடிய உணவு தானியத்தை வாங்க வசதி இல்லாததுதான்“ என்பதை அன்றைய ஏடுகள் எடுத்து இயம்பின . “விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் நாடு நிச்சயம் ஏழையாகத்தான் இருக்கும் “என்பதை மிகச்சரியாக புரிந்த தலைவர்கள் தொழில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமும் அக்கறையும் காட்டினார்கள் ; அதே சமயம் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை பெற்றதன் ஒரு முக்கியமான விளைவு, இந்திய நகர்ப்புற கைத்தொழில்களும், கிராமப்புற சிறுதொழில்களும் குறைந்து, அழிந்து பல நூற்றாண்டுகளாகப் பிணைத்திருந்த விவசாயம், உற்பத்தி தொழில்களை பாதித்ததாகும்.”இந்திய விடுதலைப் போரில் விவசாயிகள் நிலை கண்டு மகாத்மா கண்ணீர் விட்டதும்; அரையாடை தரித்ததும்ஒரு புறம் இருப்பினும்; விடுதலைப் போரில் தலைமை ஏற்ற ஆளும் வர்க்கமான பெருமுதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டது.

நிலப்புரட்சி இங்கே நடக்கவே இல்லை .“உலகமெங்கும் சுயமுன்னேற்றத்தின் உந்து சக்தி சுயநலம்தான். தன்னலமற்ற வேதாந்தத்தில் ஊறிய நாட்டிலும் மனித இயல்பு வேறுமாதிரியாக இருக்க முடியாது .கரும்பாறைகள் உள்ள இடத்தையும் ஒருவனுக்கு சொந்தமாகக் கொடுத்தால் அவன் அதனைத் தோட்டமாக்கி விடுவான் . இது பிரான்சிலும் நார்வேயிலும் உண்மை என்றால் இந்தியாவிலும் உண்மைதான்.இன்று விவசாயிகள் அக்கறையின்றி இருப்பதை மாற்ற அவன் உழும் நிலத்தை அவனுக்கே உரியதாக்கி அதன் பலன்களுக் அவனுக்கே என்று கூறுவதைவிட நல்லவழி ஏதுமில்லை.” என்றார் அன்று முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோஷி. இன்றும் அதுவே உண்மை.

இங்கே மேற்கு வங்கம், கேரளம் தவிர எங்கும் நிலக்குவியல் உடைக்கப்படவில்லை. நிலம் உழுபவனுக்குத் தரப்படவில்லை.நிலப்பிரபுத்துவம் மட்டும் இங்கு நீடிக்கவில்ல்லை அதனோடு சாதி, மத, பழமைவாத அத்தனை கசடுகளும் தொடர்கின்றன.பேயாட்டம் போடுகின்றன. இந்தியாவின் விஷேசத்தன்மை இது.இச்சூழல் கடவுள், மதம், சாதி, மூடப்பழக்க வழக்கங்கள் இவற்றின் இருத்தலை நமக்கு வலியுறுத்துவதாகச் சொல்வதைவிட; இவற்றுக்கு எதிராக சமரசமற்றத் தத்துவப் போர் நடத்த வேண்டிய தேவையையே நமக்கு அழுத்தமாய் வலியுறுத்துகின்றது.

நன்றி : வண்ணக்கதிர்  , தீக்கதிர் 27-03-2016.
[ இத்துடன் 93 கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டுவிட்டது .இன்னும் 7 கேள்விகள் தொடரும்]


மதச் சடங்குகளில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவதேன் ?

Posted by அகத்தீ Labels:
மதச் சடங்குகளில் பெண்கள்
அதிகஅக்கறை காட்டடுவதேன்?

சு.பொ.அகத்தியலிங்கம்


மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்என நம்முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனசு அலைபாயாமல் தடுக்க பக்தி, தியானம் தேவை அல்லவா ?
மதம் பெண்களை இழிவு படுத்துவதாய்க் கூறுகிறீர்கள்; ஆனால் அந்த மதச் சடங்குகளில் மிகுந்த ஈடுப்பாடு காட்டுவதும், வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவதும் பெண்களாகவே உள்ளனர். அப்படியாயின் உங்கள் குற்றச்சாட்டு பொய்யென்று ஆகிவிடவில்லையா?


 மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்என நம்முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். மனசு அலைபாயாமல் தடுக்க பக்தி, தியானம் தேவை அல்லவா?


மனம் அது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்.” மெத்தச் சரி! எப்படி? அறத்துக்கு விளக்கம் சொல்ல வந்த வள்ளுவர்,

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிறஎன்றார் .”

அறம்ணா என்னன்னு அலட்டிக்காதீங்கப்பா….. மனசுல கள்ளம் கபடம் இல்லாம சுத்தமா இருக்கிறதுதானப்பா அறம்,” என்றார் . சரிதான் . மனதுக்கு முக்கியப் பங்கிருக்கு . மன உறுதி , மன வலிமை , மன ஈடுபாடு இவை தனி மனித வெற்றிக்கும் நிம்மதிக்கும் மிக முக்கியம்.

மனதொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம்செய் வாரின் தலை

-என்று சொன்னதும் வள்ளுவரே ! மனமொன்றி வாய்மைவழி ஒருவன் நிற்பின் ; அவன் தானம் தருமம் செய்வாரெல்லோரையும் விட உயர்வானவன் என்று எல்லாவற்றையும் விட மனம் வாய்மை என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் அவர்.

உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கி விடும்

-ஊக்கமுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறளில் ஊக்கம் என்ற சொல்லுக்கு பதில் உள்ளம் என்றே சொல்லியுள்ளதுடன், ஊக்கம் உடைமையே நிலையான செல்வம் எனவும் மற்றவை எல்லாம் போய்விடும் என்றும் சொல்லுகிறார்.

அஷ்ட லட்சுமிகளில் எந்த லட்சுமியை இழந்தாலும் தைரிய லட்சுமியை மட்டும் இழக்கக் கூடாது என்பது நாட்டு வழக்கு. ஏனெனில் மனதைரியம் இருப்பின் இழந்ததைப் போராடி மீட்கலாம் . இப்படி ஆக்கப்பூர்வமாய் மனவலிமைக்கும் உறுதிக்கும் வள்ளுவனைப் பின்பற்றி முக்கியத்துவம் கொடுப்பதில் பிழையே இல்லை. தேவையும் கூட. வாழ்வியலைச் சொல்லும் வள்ளுவ வழி உவப்பானதே .
ஆனால் , பகவத் கீதை காட்டும்ஸ்திதப் பிரஞ்ஞன்இப்படிப் பட்டதா?

பார்த்தா! ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின் அப்போது ஸ்திர புத்தியுடையோன் - ஸ்திதப்பிரஞ்ஞன் என்று கூறப்படுவான்” -( கீதை 2.55)“

ஆமை தன் அவயங்களை இழுத்துக் கொள்வது போல், எப்புறத்தும் விஷய யதார்த்தங்களினின்று புலன்களை ஒருவன் மீட்க வல்லவன் ஆயின் அவனறிவே நிலைகொண்டது.”

இது மனம் சலனமற்றிருப்பது அல்ல; ஆன்மீக தன்னகங்காரம் . மாறாக தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது எனப் பார்ப்பதும் கேட்பதும் பேசுவதும் மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் கடமையாகும். அத்தகையோரால்தான் உலகில் நல்லன நடந்து கொண்டிருக்கிறது . தியானம், பக்தி எல்லாம் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வம் சார்ந்தது.

முந்தைய ஒரு கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவீரம் விளைந்ததுஎன்ற நாவல் போன்ற படைப்புகள், லட்சியவாதிகளின் வாழ்க்கை வரலாறுகள் நமக்கு மனவலிமை தரும். வள்ளுவன் வழியின் மனசுக்கண் மாசு இலனாய் இருப்போம் .மதம் பெண்களை இழிவு படுத்துவதாய்க் கூறுகிறீர்கள்; ஆனால் அந்த மதச் சடங்குகளில் மிகுந்த ஈடுப்பாடு காட்டுவதும், வழிபாட்டில் அதிக அக்கறை காட்டுவதும் பெண்களாகவே உள்ளனர்.அப்படியாயின் உங்கள் குற்றச்சாட்டு பொய்யென்று ஆகிவிடவில்லையா?


மதங்கள் பெண்களை இழிவு படுத்துவதும் மெய்யே ! மதச் சடங்குகளில் , சம்பிரதாயம் , வழிபாடு இவற்றில் பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டுவது அதனினும் மெய்யே! இது எமது நிலையை உறுதிப்படுத்துகின்றது என்பதே மெய்! குழப்பமாக இருக்கிறதா?
 இதோ விளக்கம்.மதம் பெண்களை சமையலறைக்குள்ளும் , படுக்கை அறைக்குள்ளும் அடைந்து கிடக்கவே சொல்கிறது .

ஆதியில் தாய்வழி சமுதாயமும், தாய் தெய்வங்களும் சமூகத்தின் மையமாய் இருந்த நிலை மாறி ஆண் ஆதிக்கமும் , ஆண் தெய்வங்களுமாய் ஆண் மைய சமூகம் உருவெடுத்தது முதல் இந்நிலையே.

பெண் அடிமைத்தனம் சமூக ஒழுங்காக்கப்பட்டது .அதிர்ந்து பேசக்கூடாது. ‘பொம்பள சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சுஎனச் சிரிப்புக்கும் கட்டுப்பாடு

.“தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்எண்ணுங்காலை கிளத்துக்கு இல்லை”-என்பது தொல்காப்பியம். அதாவது தன் ஆசையை தன் கணவன் முன் சொல்லக்கூட பெண்ணுக்கு உரிமை மறுக்கப்பட்டது.

பொது இடங்களில், பொது சபைகளில் பெண்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர். பொது அறிவுக்கான தேடலும் வெளியும் கூட அவர்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆண்கள் சுதந்திரமாய் உலவும் அனைத்து பொது வெளிகளும் பெண்களுக்கு மறுக்கப்பட்டன .இச்சூழலில் ஒடுக்கப்பட்ட பெண்களின் ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்கக்கூடிய இடம் கோவில்கள் மட்டுமே என்றானது .

அங்கே பேசாத, கேட்காத, உணராத கடவுளிடம் தங்கள் வலியை வேதனையைக் கொட்டித் தீர்ப்பது மட்டுமே அவர்களின் ஒரே வடிகாலானது. பென்கள் மதச்சடங்குகளிடம் மண்டியிட்டுக் கிடப்பதற்கும் ஆணாதிக்க சமூகமே காரணம். எந்த மதம் பெண்களை இரண்டாந்தர குடிமக்களாய் ஆக்கியதோ, அதே மதத்தின் காலடியில் கும்பிட்டுக் கிடக்க அவர்களைப் பழக்கப்படுத்தி, அதன் மூலமாக மதமும் மதத்தின் வழி ஆணாதிக்கமும் தங்கடைய ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டன என்பதே உண்மை .

இன்றைக்கும் ஆட, பாட, தன் சந்தோஷத்தையோ துக்கத்தையோ வெளிப்படுத்த, எல்லாவற்றிலும் ஆணோடு பெண்ணும் சரிநிகராய் களத்திலும் வீதியிலும் பொதுவெளியிலும் நிற்க , செயல்பட பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதா? ஆடைக் கட்டுப்பாடு, ஒழுக்கக் கட்டுப்பாடு எல்லாம் இன்றும் பெண்களுக்கே பெரிதும் விதிக்கப்படுகிறது.

இந்நிலை உடையும் வரை சடங்கு, சம்பிரதாயம் இவற்றிலிருந்து பெண்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல .விளக்கு பூஜை, விரதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் பெண்களை அதே போதையில் தொடர்ந்து இருக்கச் செய்திட மதவெறிக் கூட்டம் முயல்கிறது.
இதற்கு எதிராகப் பொதுப் பண்பாட்டு வெளியை உருவாக்கி அதில் பெண்களை ஈடுபடுத்தும் ஆகப்பெரிய சமூகக்கடமை, சவால் மிக்கப் பணி நம்முன் உள்ளது என்பதையே இக்கேள்வி உணர்த்துகிறது. இக்கேள்வியும் அதன் தேவையை வலியுறுத்துகிறது.

கீழே உள்ள பாலபாரதி கவிதையை அசை போடுங்கள் நான் சொல்வது விளங்கும்:

என் அன்பு அம்மா
அலுவலகம் முடிந்ததும்
அர்ஜூனன் கை அம்பாக
வீடுவந்து சேர எனக்கு
விருப்பம் இல்லை!

எல்லா சேனல்களாலும்
கொட்டப்படும்
சினிமாகுப்பைகளை எத்தனை நாள்தான்
பார்ப்பது?
சிலமணி நேரங்களாவது
என் சிந்தனைக்காக
நூலகத்தில் செலவழிக்கப்
போகிறேன்

பாதுகாப்புக் கைதியைப் போல்
என்னைக் கேயிலுக்கு அழைத்துச்
செல்வாயே
நாளை முதல் நானே தனியாக
சென்று வருகிறேன் அம்மா

இரவு உணவை
நீயே தயார் செய்துகொள்
நடைபாதைக் கடையில்
விதவைப் பெண்ணின்
வியாபாரத்தில்
என்எளிய உணவை நானே
முடித்துக் கொள்கிறேன்

எட்டரை மணிக்கு மேலாகியும்
என்னைக் காணாமல்
அப்பா ஆவேசப்படுவார்
ஊருக்கு வெளியே உள்ளஒற்றைப்
பாலத்தின் மீதமர்ந்துஎன்
இலக்கிய நண்பர்களோடுஉரையாடிக் கொண்டிருப்பேன்
என்று கூறிவிடு

போருக்கு கிளம்பிவிட்ட
குதிரைகளின் குளம்பு ஓசையை
நீ கேட்டதுண்டா
இரவு நேர கொத்துப்பரோட்டாக்
கடைகளில்
கிளம்பிவிடும் ஓசையைக்
கேட்டுவந்து சொல்கிறேன்

நடுநிசி தாண்டிய நேரத்தில் நாய் குரைத்தால்
நான் வருகிறேன் என்பதை உணர்ந்து கொள்

கோடைப் புழுக்கத்தில்
கொட்டும் வியர்வையில்
அறைக்குள்ளே என்னால்
அடைந்து கிடக்க முடியாது
வேப்பமரக் காற்றில்
வெளித்திண்ணையில் படுத்துறங்கும்
உன் இளைய ராஜ குமாரனை
எழுப்பி விடு
சூரியன் எழுப்பும்வரை
என்னைக் கொஞ்சம் சுகமாகத் தூங்கவிடு!

காலையில் கண் விழித்ததும்
தெருமுனைக் கடை சென்று
தேநீர் அருந்தி
எழுமணி செய்தி கேட்டு
எல்லா நாளிதளும் வாசித்து
அவசரமில்லாமல் குளித்து
அலுவலகம் செல்ல வீடு வருவேன்


இப்படிச் சொன்னதும்
அம்மா அதிர்ந்தே போனார்
ராவுத்தர் பிச்சையிடம் மந்திரித்து
தாயத்து கட்ட வேண்டும்
பக்கத்துவீட்டு மாமியிடம்
பதற்றத்தோடு சொன்னாள்
மனநல மருத்துவரிடம்
அழைத்துப் போக
தயாரானார் அப்பா
காலாகாலத்தில் யார் தலையிலாவது
கழுதையைக் கட்டிவிடுங்கள்
அண்ணன் அலோசனை கூறினான்
பின்னே
நான் ஒரு பெண் அல்லவா?”

இந்தக் கவிதைநான் ஒரு பெண்ணல்லவா!” -என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் கவிஞர் பாலபாரதி எழுதியது.

இது திருமணம் ஆகக் காத்திருக்கும் ஒரு பருவப்பெண்ணின் மனோநிலையில் எழுதப்பட்டுள்ளது . பெண் இழந்துள்ள சுதந்திர வெளி இதில் தெரிகிறது. அதன் வலியும் இதில் தெறிக்கிறது . திருமணமான பெண்ணின் வெளி இன்னும் சுருங்கும் இன்னும் வலி அதிகரிக்கும். அவர்களின் ஒரே பொதுவெளி கோயிலென்று ஆனது அவர்களின் குற்றமா? ஆணாதிக்கம் திணித்ததா? யோசியுங்கள்.

நன்றி : வண்ணக்கதிர் . தீக்கதிர் , 20 -03-2017