ஐரோப்பாவை விட இந்திய நிலப்பிரபுத்துவம் கருணை மிக்கதா ?

Posted by அகத்தீ Labels:

ஐரோப்பாவை விட
இந்திய நிலப்பிரபுத்துவம் 
கருணை மிக்கதா ?

சு.பொ.அகத்தியலிங்கம் .

கேள்வி பதில் - 19


* அடிமை வியாபாரம் என்கிற மனிதத்தன்மையற்ற கொடுமை ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்பதிலிருந்தே இந்தியா எப்போதும் மனித உரிமையைப் போற்றுகிற நாடென உரக்கச் சொல்லலாமே ; இதிலென்ன தயக்கம் ?
* ஐரோப்பிய நிலப்பிரபுக்கள் போல அல்ல, இந்திய நிலப்பிரபுக்கள் தம் பண்ணையாட்களைப் பெறாத பிள்ளைகளாகக் கவனித்துக் கொண்டனர் என்பதனால்தான் இங்கு நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான கலகங்கள் எழவில்லை என்பது மெய்யில்லையா ?
அடிமை வியாபாரம் என்கிற மனிதத்தன்மையற்ற கொடுமை ஒரு போதும் இந்தியாவில் இருந்ததில்லை என்பதிலிருந்தே இந்தியா எப்போதும் மனித உரிமையைப் போற்றுகிற நாடென உரக்கச் சொல்லலாமே; இதிலென்ன தயக்கம் ?
முதலில் அடிமைச் சமூகம் எப்படி கருக்கொண்டது என்பதைப் பார்க்கவேண்டும். வேட்டையை மட்டுமே பிரதான வாழ்நிலையாகக் கொண்ட சமூகத்தில் வறுமையைப் பங்கு போட்டுக்கொள்ளும் சூழலே நிலவியது; அன்றைய உற்பத்திக் கருவிகளான உழுவடைக் கருவிகள் வளர்ச்சியடைந்ததும்; மேய்ச்சல், மீன்பிடித்தல் என விரிந்ததும்; நிலம் பிரதான உற்பத்திக் கருவி என்றானபோது; நிலத்தில் உழைக்க நிறைய உழைக்கும் கைகள் தேவைப்பட்டன. இச்சூழலில் மற்றவர்களை அடிமையாகப் பிடித்து வசக்கி வேலைவாங்கும் வழக்கம் தொடங்கியது. இது புவியியல் உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் ஏற்ற இறக்கமாகவே பரவியது .
இந்தியாவில் அடிமைத்தனம் பற்றி கேள்வியாளர் சொல்வது ஒருவிதமான சமாதானம். அடிமை முறை கிரேக்கத்தில் இருந்ததற்கும் இந்தியாவில் இருந்ததற்கும் வேறுபாடுகள் நிச்சயம் உண்டு. பாபிலோன் மன்னன் ஹமுராபி தொகுத்த சட்டத் தொகுப்பும், எகிப்தின்பாப்ரிபோன்ற ஆவணங்களும், கல்வெட்டுகளும், புராண வர்ணனைகளும் பண்டைய எகிப்து, பாபிலோன், கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளில் தாண்டவமாடிய அடிமைத்தனத்தின் கொடூரத்தை பறை சாற்றும். அடிமைகளை விற்கலாம்; பரிசளிக்கலாம்; கொல்லலாம்; சூடு போடலாம். அடிமைக்கு சொத்துரிமை மட்டுமல்ல சாதாரண அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டது. அடிமைகள் எதிர்க்கும் போது அவர்களை சிலுவையில் அறைந்து மற்றவர்கள் பார்வைக்கு வைத்து மிரட்டினர். சிலுவை அடிமைகளுக்கான தண்டனைக் கருவியே. ஏசுவை அதில் அறைந்த பின்னர் அது புனிதச் சின்னமாகிவிட்டது என்பது தனிக்கதை. ‘ஸ்பார்ட்டகஸ்திரைப்படம் பார்த்தவர்கள் அடிமைத்தனத்தின் குரூரத்தை அறிவர். 18 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.இந்தியாவில் தஸ்யூக்கள் என்பது அடிமைத் தனத்தைக் குறிக்கும் சொல்லே. இந்தியா என்பது அப்போது ஒரு நாடாக இல்லை .
சனாதன தர்மம் இங்கு சாதிவழி அடிமைத்தனத்தை கட்டியது. மற்ற நாடுகளில் அடிமைத்தனம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு நாளில் உணர முடியும். ஆனால் இங்கோ இது பிறப்பின் வழி வந்தது என்பதால் அதற்கு தலைவணங்குவதே கடமையாக்கப்பட்டது. மதத்தின் பேராலும் கடவுளின் பேராலும் அது நியாயப்படுத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மனிதர் தன்னை உணரவோ விழிக்கவோ முடியாத அளவு இழிவு செய்த இந்திய அடிமைத்தனம் வன்மமானது.இங்கு இஸ்லாமியர் வருகைக்கு முன் அடிமைத்தனம் இல்லை என்பது வடிகட்டிய புளுகு. சாதியத்தோடு பிணைந்த வஞ்சகமான அடிமைத்தனம் இங்கு வேர்விட்டது என்பதே உண்மை. தமிழ்நாட்டில் அடிமைத்தனம் இருந்ததில்லையா? இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள் . ஆரல்வாய் கணவாய் வழி அடிமைகள் கடத்தப்பட்டதை தன் சிறுகதை ஒன்றில் விவரிப்பார் சு. சமுத்திரம். அதற்கான ஆதாரங்களையும் தந்திருக்கிறார். “தமிழகத்தின் அடிமை முறைஎன்ற அரிய நூலில் . சிவ சுப்ரமணியன் ஆணித்தரமாக ஏராளமான ஆதாரங்களோடு விரிவாக இது குறித்துப் பேசியிருக்கிறார்.
வேதகால இந்தியாவில்தயூஎன்ற சொல் முதலில் பகைவரையும், பின்னர் தாஸர் என்ற சொல் அடிமையையும் குறித்ததுஎன்கிறார். இதேபோல் தமிழகத்தைக் குறிக்க வந்த நூலாசிரியர், தமிழ்இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வெளிநாட்டுப்பயணிகளின் குறிப்புகள், கிறிஸ்துவ மிஷனரிகளின் கடிதங்கள், குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள் ஆகியவைகளில் அடிமைகளைப் பற்றிய செய்திகளும், குறிப்புகளும் காணக்கிடக்கின்றன என்கிறார்.சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வழக்கையைஆய்வு செய்து கீழ்க்கண்ட முடிவுக்கு வருகிறார் . சிவசுப்பிரமணியன்: அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது - அந்தணர்அடிமையாகும் வழக்கமில்லை. அடிமையாவோர் அடிமையாளருக்குஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு; இதற்கு ஆளோலை என்றுபெயர் - ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன்சாட்சிகளின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும் - தன்னைமட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையாக எழுதிக்கொடுக்கும் பழக்கம் உண்டு - அடிமை தன் பணியில் தவறினால்அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றங்களில் முறையிடலாம், தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையினை ஊரவை உறுதிப்படுத்தும் -வீட்டடிமையோடு, கோவில்களுக்கும், மடங்களுக்கும் கூட அடிமைகள் தானமாகவோ, விற்பனைக்கோ வழங்கப்பட்டார்கள்
-குழந்தைகள் கூட விற்கப்பட்டன. பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள் - அடிமைகளுக்கு முத்திரையிடும் பழக்கமும்உண்டு - பரம்பரை வழி தகப்பன், அவனது மகன், மகனுக்குப்பின் பேரன் என அடிமை முறை நீடிப்பது உண்டு - அடிமைகள் தப்பித்து ஓடினால், பிடித்து வந்து தண்டித்த வரலாறும் உண்டு.இது மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் தமிழகத்தில் இருந்த அடிமைத்தனத்தை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்படி அடிமைகள் இருந்தாலும் அவர்கள் அடிமை சமூகமாக உணர இயலாத வகையில் சாதியப் படிக்கட்டுகளில் அமுக்கிவைத்து; ஆண்டவன் பேரால், மதத்தின் பேரால் அவர்களின் மூளையில் அறியாமைச் சங்கிலையைப் பிணைத்து வைத்து;
தீண்டாமைக் கொடுமைகளை அரங்கேற்றினர் என்பதே கசப்பான உண்மை. தீண்டாமையின் பேரால் சாதி அடிப்படையில்ஊர் - சேரிஎனப் பிரித்து வைத்திருக்கும் கொடுமை நம் அடிமைத் தனத்தின் நீளும் சாட்சி அல்லவா ?தனிப் புத்தகமே எழுதும் அளவு விரிந்த பொருள் இது . இடம் கருதி இத்தோடு முடித்துக் கொள்கிறோம் . மேற்குறிப்பிட்ட . சிவசுப்பிரமணியம் எழுதிய நூல் உள்ளிட்டு பல நூல்களை படித்து அறிக !
ஐரோப்பிய நிலப்பிரபுக்களைப் போல அல்லாமல் இந்திய நிலப்பிரபுக்கள் தம் பண்ணையாட்களைப் பெறாத பிள்ளைகளாகக் கவனித்துக் கொண்டனர் என்பதனால்தான் இங்கு நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான கலகங்கள் எழவில்லை என்பது மெய்யில்லையா?
சென்ற கேள்வியின் தொடர்ச்சிதான் இதுவும்.அடிமைகளின் கலகங்களைத் தொடர்ந்து இனியும் அடிமையாய் வைத்திருந்து வேலைவாங்க முடியாது என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அடிமை என்பதற்குப் பதில் ஓரளவு சுதந்திரமுள்ள பண்ணையாட்கள் முறையை உருவாக்கினர். இதில் நிலத்தின் உரிமையும் மேலாண்மையும் நிலப்பிரபுக்கள் கையிலேயே இருக்கும். பண்ணையடிமைகள் இவர்களை அண்டி வாழவேண்டியவர்களாய் பொருளாதார நுகத்தடி பூட்டப்பட்டிருக்கும் . இந்த நிலப்பிரபுத்துவ முறை அதிகச் சுரண்டலுக்கு வழிசெய்தது .ஐரோப்பிய நாடுகளைப் போல் ஒரு சமூக அமைப்பை அடித்து நொறுக்கிவிட்டு இன்னொரு சமூக அமைப்பு என்பது இங்கில்லை .
ஆளும் வர்க்கம் மிகவும் சாமர்த்தியமாக அதிகாரத்தையும் மதத்தையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறை மூலம் தம் மேலாண்மையை நிறுவிக் கொண்டது . பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு இன்னது நேர்ந்துள்ளது என்பதை அறிவதற்கு கூட வழியில்லாமல் கடவுள், மதம் , சாதி இவற்றால் வஞ்சிக்கப்பட்டார்கள் . இங்குள்ள சாதி அமைப்பே நிலப்பிரபுவுக்கு சமூகத்தில் மேல்சாதி அந்தஸ்தும், சேற்றிலிறங்கிப் பாடுபடும் பாட்டாளிக்கு சூத்திர, பஞ்சம அந்தஸ்தும் தந்தது. இந்தியா முழுவதும் இப்படி உருவான நிலப்பிரபுத்துவம் குறித்து நிறைய ஆய்வு நூல்கள் வந்துள்ளன.“தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும்எனும் நூலில் பேரா. சி.கே. காளிமுத்து நிறைய விவரங்கள் தருகிறார். காலனி ஆதிக்கத்துக்கு முந்தைய வேளாண் சமூகம் குறித்து ஒரு பின்புலத்தை சுட்டுகிறார்.
சோழப்பேரரசாயினும் விஜயநகர சாம்ராஜ்யமாயினும் பிரம்மதேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கும், தேவதானம் என்கிற பெயரில் கோவில்களுக்கும் அதன் மூலம் பிராமணர்கள், வேளாளர்கள் என மேல்சாதியினருக்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தியைச் சொல்கிறார். நிலத்தில் நேரில் இறங்கி பயிரிடாத பிராமணர்களின் நிலத்தை வாரக்குத்தகையில் இடைப்பட்ட சாதியினர் பயிரிட்டதை எடுத்துக்காட்டுகிறார். வேளாண்மை செழிக்க மன்னர்கள் காலத்தில் நீர்நிலைகளை மேம்படுத்தியதையும் மறுபுறம் தேவையான உழைப்பு சக்தியை திரட்டி உறுதிப்படுத்தியதையும் கூறுகிறார். அதுவே பள்ளர், பறையர் என அடிமைத்தனம் சாதிய வடிவில் கெட்டிப்படுத்தப்பட்டதையும்;
அதன் பொருட்டு அச்சாதியினர் நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டதையும் அழுத்தமாக கூறியுள்ளார். இடைப்பட்ட சாதியினர் வைத்திருந்த துண்டு துக்காணி நிலத்தையும் பிடுங்கி பிராமணர்களுக்கு தானம் வழங்கினான் ராஜராஜ சோழன். இவ்வாறுகுடிநீக்கம்செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன என்கிறார். ஒன்று. நிலவுடைமையாளர்கள் யாரும் ஒரு துண்டு நிலங்கூட உழைத்து சம்பாதித்ததில்லை. அவர்கள் நிலம் அனைத்தும் தானமாகப் பெற்றதும் அபகரித்ததும்தான். இரண்டு, தமிழகத்தில் அடிமைத்தனம் இருந்தது.
அது பள்ளர், பறையர் என சாதியாய் கெட்டிப்படுத்தப்பட்டது. மூன்று, வரிக்கொடுமைக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் கலகங்கள் செய்துள்ளனர். அரசன் அதிகாரத்தை கேள்வி கேட்க கோவில் சுவரையே இடித்துள்ளனர். எல்லா கலகமும் ரத்தச் சகதியில் மூடி மறைக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட காலத்தின் முன்னும் பின்னும் தஞ்சை மாவட்டத்தில் வீறுகொண்டெழுந்த விவசாயிகள் எழுச்சி நிலப்பிரபுத்துவதின் கோரமுகத்தைப் படம் பிடிக்கும். வெண்மணி சம்பவமே நிலப்பிரபுத்துவம் இங்கு கருணையோடு இருந்ததில்லை என்பதை பறை சாற்றும். இந்தியா முழுவதும் இன்னும் நீடிக்கும் கொடூர தீண்டாமை, சாதிய ஒடுக்குமுறை, பின்தங்கிய நிலைமை தொடர நிலப்பிரபுத்துவம் நீடிப்பதே பெரிதும் காரணம் . ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவத்தின் சாம்பல் மேட்டில் முதலாளித்துவம் பூத்தது போல் இங்கு பூக்கவில்லை; முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் சமரசம் செய்து கொண்டன. சாதிய தாண்டவத்துக்கும், மதவெறி பேயாட்டத்துக்கும் இது காரணமானது.
மன்னர் காலந்தொட்டு இன்றுவரை இடைத்தட்டு சாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் மோதிக்கொள்வதின் பொருளாதார வேர் நம் நாட்டில் நிலப்பிரபுத்துவம் உருவாக்கப்பட்டதில் உறைந்துள்ளது . ஆம் கடுமையான விவசாய வேலைகளைச் செய்ய தேவையான உழைப்பு சக்தியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள - அடிமைத்தனம் சாதிய முறையில் - தீண்டாமை வடிவில் இங்கு எல்லாகாலத்திலும் கெட்டிப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ள வரலாற்றை புரிவது தீண்டாமையை எதிர்த்துப் போராட மேலும் வலு சேர்க்கும்.

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் , 13-08-2015


0 comments :

Post a Comment