வெற்றிடம் நிரப்ப ஆன்மீகமன்றி வேறு மார்க்கம் ஏது?

Posted by அகத்தீ Labels:










வெற்றிடம் நிரப்ப ஆன்மீகமன்றி 
வேறு மார்க்கம் ஏது?


சு.பொ. அகத்தியலிங்கம்

[ தீக்கதிர் வண்ணக்கதிரில் மாதமாதம் ஐந்து கேள்விகள் வீதம் இதுவரை 85 கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன் . இன்னும் 15 கேள்விகளே உள்ளன . வண்ணக்கதிர் வடிவம் மாறியதையொட்டி வாரம் இரண்டு அல்லது மூன்று கேள்விகளுக்கே இடம் கிடைக்கும் . வாரவாரம் தொடரும் . நூறு கேள்வி- பதிலோடு நிறையும் . அதாவது இந்தவாரக் கேள்வியும் சேர்த்து இன்னும் 15 கேள்விகளே ]

·         நீங்கள் நம்புகிற அறிவியல், கொள்கை, கோட்பாடுகள், தத்துவம் எல்லாம் ஏதேனும் ஒரு கட்டத்தில் உங்களைக் கைவிடலாம். இவை எல்லாவற்றிலும் உள்ள போதாமை அப்போது உங்கள் முன் பெருங் கேள்வியாகலாம். அப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆன்மீகத்தைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

·         முழுக்க முழுக்க ஒரு நாத்திகராய் உங்களால் வாழ்ந்திட முடியுமா? சவால் விட்டுக் கேட்கிறேன்.


கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்ப வெவ்வேறு வார்த்தைகளில் கேட்கிறார்கள் என்றபோதிலும் அவற்றை ஒதுக்கிவிட முடியாதுதான்.


நீங்கள் நம்புகிற அறிவியல், கொள்கை, கோட்பாடுகள், தத்துவம் எல்லாம் ஏதேனும் ஒரு கட்டத்தில் உங்களைக் கைவிடலாம். இவை எல்லாவற்றிலும் உள்ள போதாமை அப்போது உங்கள் முன் பெருங் கேள்வியாகலாம். அப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப ஆன்மீகத்தைத் தவிர வேறு மார்க்கம் ஏது?

விடுதலைப் போரில் தீவிரவாதியாய் களத்தில் நின்ற அரவிந்தர் பின்னர் ஆன்மீகத் துறவியாய் மாறினார். துறவியாய் நடைபயணம் புறப்பட்ட சுவாமி சகஜானந்தா உழவர்களின் துயர் கண்டு வருந்தி விவசாயிகள் சங்கத்தில் செங்கொடி ஏந்தி போராடினார். பீகாரில் அவரது போராட்டம் வலுவாயிருந்தது. புத்த துறவியாய் ஊர்சுற்றியாய்  உலகெங்கும் பயணித்த ராகுல சாங்கிருத்தியாயன் மார்க்சியத் தத்துவஞானி ஆனார். கேரளத்தில் நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாய் இருந்த பிலிப் எம் பிரசாத் பின்னர் சாயிய்பாபா பக்தரானார். கிறுத்துவ பாதிரியாராக முயன்ற எஸ்.ஏ. தங்கராஜ் தொழிலாளர் வேதனைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட் ஆனார்..... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 பயணம் தொடங்கிய திசையில் இல்லாமல் வேறிடம் போய் சேருவது பலர் வாழ்வில் நடக்கும். இதில் முன்னோக்கிப்  போனவர் பாதையும் பின்னோக்கிப் போனவர் பாதையும் ஒன்றல்ல.
தனிமனிதர்கள் என்கிற முறையில்  வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தின் தேவைகளும் தேடல்களும் சூழலும் அனுபவமும் வாய்ப்பும் சில கருத்தோட்டங்களை செதுக்கும்; அதுவும் மாறிக் கொண்டே இருக்கும். 

 வாழ்க்கைப் போராட்டத்தில் சலிப்பும் சோர்வும் ஏற்படும் வேளையில் அதுவரை நம்பிய அறிவியல், தத்துவம், கோட்பாடு எல்லாம் கைவிட்டுவிட்டதாகவோ – வாழ்வைப் புரிந்து கொள்ள அவை போதவில்லை என்றோ ஒருவர் கருதக்கூடும். இது இயல்பானது. அடுத்து அவர் ஆன்மீகத்துக்குத் திரும்பினால் அது அவரின் தனிப்பட்ட வீழ்ச்சி, அவ்வளவே.
 ஆன்மீகம் தீர்வா? அல்ல. அங்கேயும் புதிய புதிய கடவுளையும் சடங்குகளையும் தேடிக்கொண்டே இருப்பது ஏன்? அங்கேயும் ஏதோ வெற்றிடம் போதாமை இருப்பதால்தானே அவ்வாறு நிகழ்கிறது?

அந்த சுவாமி சன்னதிக்குப் போங்கள் அவர் சக்திவாய்ந்த பகவான்; இந்த அம்மன் கோவிலுக்கு போங்க அது பவர்ஃபுல். அந்த தர்காவில் வழிபட்டால் துயரம் நீங்கும், இந்த தேவாலயத்திற்குப் போனால் ஆசிர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் மடைமாற்றிவிட ஆட்கள் உண்டு. மாறிமாறிப் போயும் கண்ட பலன் ஒன்றுமில்லை.கடன் அதிகரித்ததுதான் மிச்சம். இப்போது ஏது வழி? தியானம், யோகா, பக்தி எல்லாம்கூட பிரச்சனைகளுக்குத் தீர்வு தந்துவிட முடியுமா?
 நிக்கோலாய் ஓஸ்ட்ரோவ்ஸ்கி  எழுதிய “வீரம் விளைந்தது” நாவலில் வரும் வார்த்தைகளை இங்கு நினைவு கூருவது சாலப்பொருத்தமே: 
 “மனிதரது மதிக்க முடியாத இனிய உடைமைகளில் மிகச் சிறந்தது வாழ்வாகும். காலம் எல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கிவிட்டேன் என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் சீராக வாழவேண்டும். அற்பனாக வாழ்ந்து இழிவு தேடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிக்காத வகையில் அவர் நேராக வாழவேண்டும்.உலகின் தலைசிறந்த லட்சியத்திற்காக, மனித குலத்தின் விடுதலை என்ற பொன்னான மார்க்கத்துக்காக  நான் என் வாழ்வு முழுவதையும் சக்தி முழுவதையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும்போது கூறும் உரிமை பெறும் வகையில் வாழவேண்டும். திடீர் நோயோ, சோக விபத்தோ வாழ்வுக்கு வெடிவைக்கக் கூடுமாதலால் மனிதர் தம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”

-இந்நாவலை முழுமையாக வாசிப்பது தெளிவை தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.
 குழந்தையாக இருக்கும் போது தைத்த சட்டை கொஞ்சம் வளர்ந்த பின் பொருந்துவதில்லை; புதிது தேவைப்படுகிறது. மனிதகுலமும் தான் குழந்தைப் பருவமாய் இருக்கையில் கொண்டிருந்த பல நம்பிக்கைகள், அனுமானங்கள்  அப்படியே தொடரவில்லை; தொடரவும் முடியாது. அனுபவமும் தேவைகளும் புதியன தேட உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும். அதே சமயம் அவற்றுக்குள் ஒரு தொடர்ச்சியும் இருக்கவே செய்யும்.

“ மனிதகுல அறிவு என்பது – ஒரு நேர் கோட்டுப் பாதை அல்ல மாறாக வளை கோடாகும்; அது வட்டங்களின் தொடராக அதாவது உயரமாக முடிவின்றிச் செல்லும் வட்டச் சுழற்சியை ஏறத்தாழ ஒத்திருக்கும்,” என்பார் லெனின்.

 ஆகவே மனித குலம் என பொதுமைப்படுத்திப் பார்க்கும்போது அதன் சிந்தனை திருப்தி அடைந்து முடங்கிவிட முடியாது; முட்டி மோதி முன்னேறிக் கொண்டேதான் இருக்கும்.

முழுக்க முழுக்க ஒரு நாத்திகராய் உங்களால் வாழ்ந்திட முடியுமா? சவால் விட்டுக் கேட்கிறேன். …

 “... ‘ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி’ என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்” (விவிலியம்; மத்தேயு 27:46).

“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று இதற்குஅர்த்தமாம். 
ஏசு நாதரே தேவன் மீது நம்பிக்கை இழந்து நாத்திகர் போல் கூப்பிட்டிருக்கிறார். இதனையும் மேலும் சில காட்சிகளையும் முன்வைத்து ஏசு ஒரு நாத்திகர் என வாதிடுவோர் உண்டு. அப்படி ஒரு புத்தகமே படித்த ஞாபகம். நான் அப்படிக் கருதவில்லை.

ஒருவர் முழுக்க நாத்திகராக வாழ விரும்பினாலும் சுற்றுச்சூழல் , பொதுமரியாதை, குடும்பச்சூழல் இவற்றால் சிலருக்கு சில சமரசங்கள் தவிர்க்கவே இயலாமல் போகலாம். மேலும் பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டு வாழ்வோடு ஊடாடிக் கொண்டிருக்கும் மதம் சார்ந்த, சடங்குகள் சார்ந்த கருத்தோட்டங்கள் சில நேரங்களில் நாத்திகரிடமும் எதிரொலித்துவிடக்கூடும்.

இந்தியச் சூழலில் நாத்திகராய் இருப்போரிடையே சிலரிடம் அவ்வப்போது சாதிய உணர்வு தலைதூக்கக் காணலாம்; ஆணாதிக்கம் மேலோங்கக் காணலாம். “மேடையில் புரட்சிகரமாய் முழக்கமிடும் பலர் வீட்டில் இந்துக் கணவனாய் மனைவியை  அடக்கி ஆள்வதைக் காண்கிறோம்” என்பார் கம்யூனிஸ்ட் தோழர் பி.டி. ரணதிவே.
ஆக, முழு நாத்திகராக, பகுத்தறிவாளராக, கம்யூனிஸ்டாக முழுமையாய்ப் பரிணமிப்பது கடும் போராட்டமே.

 வியட்நாம் புரட்சியின் நாயகன் ஹோசிமின் ஒரு முறை சொன்னார், “நான் கம்யூனிஸ்ட்டாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.” இதனை மேற்கோள் காட்டி இ.எம்.எஸ். இவ்வாறு சொன்னார்: “ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகிவிட்டதாலேயே அவர் கம்யூனிஸ்ட் ஆகிவிடமாட்டார். கம்யூனிஸ்ட் என்பவன் புதிய வார்ப்பு. நானும் கம்யூனிஸ்ட்டாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். பாட்டாளி வர்க்க கருத்தோட்டத்துக்கு மாறாக அந்நிய வர்க்க கருத்தோட்டங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்; அதை எதிர்த்து ஒவ்வொருவரும் தன்னுள் போராட்டம் நடத்துவதன் மூலமே மெய்யான கம்யூனிஸ்ட்டாக மாறமுடியும். நானும் அவ்வழியில் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார். சரிதானே !
 ஆயினும் ஒப்பீட்டளவில் நாத்திகர், பகுத்தறிவாளர், கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோர் ஏனையோரைவிட தமது லட்சியத்துக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றுகொண்டே இருப்பார்கள் என்பதே உண்மை .
அதே போல் முழு ஆத்திகர் என்று சொல்பவர் நடை முறையில் அறிவியல் சாராமல் வாழவே இயலாது; அவரது நடைமுறை வாழ்க்கை மேலும் மேலும் அறிவியலொடு பின்னிப் பிணைந்து கொண்டிருக்கும். ஆனால் அவரின் சிந்தனையோ அதற்கு நேர் எதிரான மூடநம்பிக்கைகளோடும் மத உணர்வோடும் பின்னியிருக்கும். இந்த முரண்பாடு பளிச்செனத் தெரியவும் செய்யும்.


நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் 6-03-2016.


0 comments :

Post a Comment