குஷ்வந்த சிங் ; பாகிஸ்தான் ரயில்

Posted by அகத்தீ Labels:

[   
   குஷ்வந்த சிங் மரணத்துக்கு அவரது நூலை நினைவுகூர்வதைத்தவிர வேறு சிறந்த அஞ்சலி எதுவாக இருக்க முடியும் ? அதுவும் மதவெறி தலைவிரித்தாடும் தேர்தல் களத்தில்...........]பாகிஸ்தான் போகும்ரயிலும் 
 
மதச்சார்பின்மையின் அத்தியாவசியமும்
சு.பொ.அகத்தியலிங்கம்

பாகிஸ்தான் போகும் ரயில்,
ஆசிரியர் : குஷ்வந்தசிங்

தமிழில்:ராமன் ராஜா,

கிழக்குப் பதிப்பகம்,


பொதுவாகவே நான் ஆங்கில நாவல்கள் படிக்கும் பழக்கம் உள்ளவன் அல்ல. நூற்றுக் கணக்கான மொழிபெயர்ப்பு நூல்களைப் படித்துள்ளேன், ஆயினும் என் ஆர்வம் ஏனோ ஆங்கில நாவல்கள் பக்கம் 
குறிப்பிடத்தக்க விதத்தில் திரும்பியது இல்லை. குஷ்வந்த் சிங் ஜோக்குகளைப் படித்திருக்கிறேன்.ரசித்தும் இருக்கிறேன். இருப்பினும் அவர் எழுத்துகளில் மது, மாது(ஷ்வீஸீமீ ணீஸீபீ ஷ்ஷீனீமீஸீ) சங்கதிகளே 
தூக்கலாக இருக்கும். என்னுள் படிந்த சித்திரம் இதுவே. மேலும் அவர் காங்கிரஸ் கட்சி என்கிற எண்ணம் வலுவாக என்னிடம் வினையாற்றியது. அவர் சஞ்சய் காந்தியோடு நெருங்கி இருந்ததும் என் பார்வையில் குறுக்கீடாக இருந்தது. பின்னர் அவரது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம்வரினும், 

அவரை காங்கிரஸ் சார்பு மாநிலங்களவை உறுப்பினராகவே பார்த்தேன். அவர் இல்லஸ்ட்ரேட் வீக்லி போன்ற ஏடுகளின் ஆசிரியராகச் செயல்பட்டபோது அவற்றை படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாற்றல் மிகச்சிறப்பாக இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். இந்த நாவல் குறித்து பல நண்பர்கள் கூறியபோது 
படிக்க எண்ணினும் வாய்ப்பு அமையவில்லை. நானும் அது பற்றி பெரிதாக முயற்சித்ததில்லை. கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக, இப்போது தமிழில் வெளிவந்ததும் படித்தேன். குஷ்வந்த் சிங் என்னுள் 
விஸ்வரூபமெடுத்தார். அடடா இந்த நாவலை இதுவரை படிக்காமல் இருந்து விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியே ஏற்பட்டது. 

அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது இந்நாவல். இன்று படிக்கும் போதும் நாட்டின் பல பகுதிகளில் நடக்கும் சம்பவங்களோடு பொருந்திப் போவது தற்செயலானது அல்ல. ஆம், மதவெறி நெருப்பு தானாகப் பற்றுவதல்ல; பற்றவைக்கப்படுவதே என்பதை இந்நாவல் உரக்கப்பேசுவதால் -
நெஞ்சில் பதிய வைப்பதால் இன்றும் உயிர்த்துடிப்புடன் இந்த நாவல் மனதைக் கவ்வுகிறது. இந்திய விடுதலையின் போது இந்தியா- பாகிஸ்தான் என இரு கூறாக்கப்பட்ட சூழலில் இந்நாவல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் எல்லையோர இந்தியக் கிராமமான மானோ மாஜராதான் கதைக்களம். சீக்கியர்கள் 
பெரும்பான்மையாக உள்ள கிராமம். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தவரும் அருகருகே 

வாழும் அமைதியான கிராமம். எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சொற்பம்.நாட்டு நடப்புகள் குறித்து அதிகம் தெரிந்திராத மக்கள். உழைப்பையும் அன்பையும் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அந்த கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாக குஷ்வந்த் சிங் நம் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறார். 

அந்த கிராமத்தில் ராம்லால் சேட் வீட்டைப் பக்கத்து ஊர் சமூகவிரோதிகள் கொள்ளையடிப்பதும்... அந்தசமயம் அரசால் பத்தாம் நம்பர் ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஜக்கா சிங் ஒரு ஏழை நெசவுக்காரமுஸ்லிம் பெண் நூரனிடம் காதலால் கட்டுண்டு கிடப்பதுமாய் நாவல் மொட்டவிழ்கிறது. காதல் காட்சிகளை குஷ்வந்த் சிங் அவரது பாணியில் தீட்டியுள்ளார். கொள்ளைக்காரர்களால் ராம்லால் சேட் 
கொல்லப்பட்டதும் நாவல் சூடுபிடிக்கிறது. அதிகார வர்க்கமும் காவல் துறையும் மிக எளிதாக அந்தப்பழியை ஜக்கா சிங் மீது சுமத்துவது முதலில் அதிகார வர்க்க நடைமுறையைக் கேலிசெய்வதாக அமையினும், போகப்போக அதற்குள் மிகப்பெரிய மதக்கலவர சதி புதைந்திருப்பதை மிக நுட்பமான காட்சி சித்தரிப்புகளூடே குஸ்வந்த் சிங் நூல் நெடுகச் சொல்லிச் செல்கிறார்.அவை ஒவ்வொன்றும் இன்றையகுஜராத்தின் சில பக்கங்களையாவது நினைவூட்டாமலிருக்காது. 

கொம்புசீவிவிடப்பட்ட மதவெறியால் பாகிஸ்தானில் கோரமாய்க் கொல்லப்பட்ட சீக்கியப் பிணங்கள் கூட்ஸ்களில் நிரப்பப்பட்டு அந்த ரயில் கிராமத்துக்கு வந்தது. மத வேறுபாடின்றி அக்கிராம மக்கள் பதைத்தார்கள். கண்ணீர் உகுத்தார்கள். ஆயினும் அவர்களுக்குள் அது பகைமை நெருப்பை பற்ற வித்திடவில்லை. அதிகார வர்க்கம் சும்மா இருக்குமா? முன்பு நடந்த கொலைக்காக ஜக்கா சிங்கையும், 

சம்பந்தமின்றி ஊருக்குப் புதிதாய் வந்த படித்த இளைஞனை (அவன் கம்யூனிஸ்ட் என குஸ்வந்த் சிங் பெயர் சுட்ட மாட்டார் வர்ணனை அப்படி தோற்றமளிக்கச் செய்யும்) கைது செய்கிறது.லாக் அப்பில் பூட்டுகிறது அதிகார வர்க்கம். ஆனால், உண்மையான குற்றவாளியான மல்லியைக் கைது செய்தபின் அவனை விடுதலை செய்து மதவெறிக் கோரநர்த்தனத்துக்கு முன்னிற்கச் செய்கிறது. அதிகார வர்க்கத்தின் 
மூர்க்கம்,வஞ்சகம்,பேராசை, காமக்களியாட்டம் எல்லாம் நேரடிக்காட்சிபோல் நாவலில் நகர்கிறது. மீண்டும் பிண ரயில், அகதிகள் வருகை மெல்ல மெல்ல மனோ மஜரா கிராமத்தில் மதவெறி குரோத வைரஸ் செலுத்தப்படுகிறது.ஆயினும் மக்கள் மதமாச்சரியங்களை மீறி வாழவே பிரியப்படுகிறார்கள். முயற்சிக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்?விதியின் போக்கைத் தீர்மானிப்பது சூழலும் 
ஆளும் வர்க்கமுமாய் அல்லவா இருக்கிறது? இன்றும் அதுதானே நிலைமை. அந்த கிராமத்தை 

விட்டு முஸ்லிம்கள் வெளியேறவேண்டியதாகிறது. நூரன் குடும்பம் உட்பட முஸ்லிம்கள் மிகுந்த மனச்சோர்வோடுதான் வழியனுப்பப்படுகிறார்கள்.ஆனாலும் அதிகார வர்க்கத்தின் நோக்கம் வேறாகவே இருக்கிறது. மாஜிஸ்திரேட் ஹூகம் சந்த், சப் இன்ஸ்பெக்டர் இருவரின் நடவடிக்கைகளை விலாவாரியாகப் பதிவு செய்து அதிகார வர்க்கத்தையே தோலுரித்துக் காட்டிவிட்டார். 
குரோத நெருப்பு வலிய மூட்டப்படுகிறது. நெருப்பு சூடேற சூடேற இளைஞர்கள் பலர் மனதில் விஷம் ஏறுகிறது. மனிதம் தொலைய மிருகம் பழிவாங்கப் புறப்படுகிறது. அகதிகளாய் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட உள்ள முஸ்லிம்களைப் பிணமாக்கி பிண ரயிலை அனுப்பி பழிவாங்கக் கச்சிதமாய்த் திட்டம் தீட்டப்படுகிறது. இது ஒருபுறம். மறுபுறம், அந்த நேரம் ஹூகம்சந்த் மனதை விலைமாதாய் இன்பம் தர அழைத்துவரப்பட்ட இளம்பெண் ஹஜீனா மீதான மையல் ஆட்டிப்படைக்கிறது. தன் 
மகள் வயதொத்த அந்த முஸ்லிம் பெண்ணின் மீது பரிவும் பற்றும் அவருக்குள்ளும் கல்லுக்குள் ஈரமாய் தலைநீட்டுகிறது.விழித்துக் கொண்ட மனிதம் அவரை யோசிக்க வைக்கிறது. இப்போது 

அவர் மூளையில் உதிப்பது சதியல்ல.. ஒரு புத்திசாலித்தனக் கணக்கு. ஜக்கா சிங்கின் காதலும் வெள்ளந்தியான மனிதநேயமும் முரட்டுவீரமும் உசுப்பிவிடப்பட்டால்-அத்துடன் அந்த படித்த இளைஞனும் சேர்ந்தால்... கதை மாறலாம் அல்லவா? அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.படித்த இளைஞன் ஆத்திரப்படுகிறான். குழம்புகிறான். கையைப்பிசைந்து மதுவில் மூழ்குகிறான். ஆனால் ஜக்கா சிங் ஒற்றை ஆளாய் கடவுளைக் கும்பிட்டுக் கிளம்புகிறான். அவனது நம்பிக்கைக்கு பெரிய 
தத்துவ அடிப்படை எல்லாம் கிடையாது. அன்பு... மனிதர் மீதான காதல். நல்லது செய்யும் பெரிய மனது. அவ்வளவுதான். அவனின் முயற்சி வெற்றிபெறுகிறது.சதிக்கும்பலின் திட்டம் இவனொருவனால் தவிடு 
பொடியானது.ஆனால் அதற்கு ஜக்கா சிங் தன் உயிரையே விலையாக அல்லவா தந்தான். நமக்கும் நிம்மதிப் பெருமூச்சு... இந்த நாவல் மத நடைமுறைகளை-தத்துவ ஊனங்களைப் போகிறபோக்கில் நன்றாகப் பகடிசெய்கிறது. ஒரு ஆபத்தான கதைக்கரு, கதைக்களம் கிட்டத்தட்ட வாள் முனைமேல் நடப்பது
போன்றது.அதில் குஸ்வந்த் சிங் வெற்றி பெற்றது எப்படி? 96 வயதைக் கடந்து எப்படியும் சதம் அடிப்பேன் என வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் தமது கடைசி நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். 

அதையொட்டி அவர் அளித பேட்டியொன்றில் தான் கடவுள் மத நம்பிக்கையற்று இருப்பதற்காகப் பெருமைப்பட்டார்.இறுதிமூச்சுவரை அப்படியே வாழ்வேன் என்றார்.மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தார். இந்த உறுதிதான் 1956ல் எழுதிய இந்த நாவலை இன்றும் பேசவைக்கிறது. குஸ்வந்த்சிங் எழுத்து நடை வீரியமிக்கது. காட்சிசித்தரிப்பாயினும், மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாயினும், சமூக விமர்சனமாயினும், ஆசிரியர் குரலாயினும் அதனை இயல்பாகப் 
பதிவு செய்கிற வல்லமை அவருக்கு கைவரப்பெற்றிருக்கிறது. அந்த வீச்சும் வேகமும் ஆற்றொழுக்கு நடையும் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிற ராமன் ராஜா நம் பாராட்டுக்குரியவர். மதவெறி இன்றைக்கும் நம் சமூகத்தில் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. குஜராத் அதன் சோதனைக் களமாக உள்ளது. இந்நிலையில் மதவெறிக்கு எதிராக உரக்கப்பேச இந்த நாவலும் ஆயுதமாகும்

ஆளுமையின் அடையாளம்

Posted by அகத்தீ Labels:ஆளுமையின் அடையாளம்சு.பொ. அகத்தியலிங்கம் 

பகத்சிங் என்ற பெயரே இன்றும் இளைஞர்களுக்கு உணர்ச்சி ஊட்டிக் கொண்டிருக்கிறது. இந்தப் பெயரைக் கண்டு அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யம் நடுங்கியதில் பொருள் உண்டு. ஆனால் இன்றும் இப்பெயரை முடிந்த வரை ஆளும் வர்க்கம் வரலாற்றில் இருட் டடிப்பு செய்கிறது. வெறுமே தீவிரவாதி என்ற அடைமொழிக்குள் பகத்சிங் என்கிற மாபெரும் ஆளுமை யை சிறையிடுவதற்கே ஆளும்வர்க்க வரலாற்று ஆசிரியர்களும் கல்வியாளர் களும் தொடர்ந்து முயற்சித்து வருகின் றனர். ஆயினும் அனைத்தையும் மீறி சூரியனாய் இளைஞர்களின் மன வானில் பகத்சிங்கே சுடர்விட்டுப் பிர காசித்துக் கொண்டிருக்கிறான்.

கார ணம், அவனது ஆளுமைத் திறன்.பகத்சிங்கின் ஆளுமை இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வழி காட்டியாகும். இதுகுறித்து எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை முன்வைக்க இயலும். ஆயினும் இங்கே ஒன் றிரண்டை மட்டும் சுட்டிக்காட்ட விழை கிறேன். ஆளுமை என்பது ஆற்றல் நீரோட்டத்தோடு நீச்சலடிப்பதல்ல. எதிர்நீச்சல் போடுவதாகும். செக்கு மாடாக ஒரே வட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவதல்ல. உழவு மாடாக ஆழமாகவும் அகலமாகவும் உழ உதவுவதாகும். ஆளுமை என்பது தொலைநோக்கு கொண்டது. சுயநலம் இல்லாதது. விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பது. இலட்சிய உறுதியோடு இருப்பது.

துணிவோடு சாவல்களை சந்திப்பது. ஆழமான அறிவுத்தேடலும் விசாலமான மனசும் கொண்டிருப்பது. இவை அனைத்துக்கும் பகத்சிங் எடுத் துக்காட்டாக இருக்கிறான்.பகத்சிங்கை சிறையிலிருந்து விடு விக்க அவரின் தந்தை முயற்சித்த போது எப்படியாவது விடுதலை கிடைத் தால் போதும் என்று சும்மா இருக்க வில்லை. தந்தையை கண்டித்து அன் போடு அவன் எழுதிய கடிதம் பகத்சிங் கின் மன உறுதிக்கும் தெளிந்த சிந்த னைக்கும் சாட்சியாகும். அதில் தந்தை தன்னைக் கேட்காமல் மனு அளித்தது தவறு என்றும், அது தனக்கு மிகுந்த மனவேதனையைத் தருவதாகவும் குறிப்பிட்டான். தந்தை என்ற முறை யில் அவர் மகன் மீது காட்டிய பாசத்தை பகத்சிங் புரிந்துகொண்டு அதே சமயம் தனது லட்சியத்திற்கு அந்த பாசம் இடையூறாக வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அந்த நெடியக் கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடு கிறான், எனது உயிர் அந்த அளவிற்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடு களை விலையாகக் கொடுத்து வாங்கும் அளவிற்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையதல்ல.

எனது வழக்கைப் போலவே மிகவும் கடும் குற்றச்சாட்டு களுடனான வழக்குகள் என் சக தோழர்களுக்கும் உண்டு. தாங்கள் அனைவரும் ஒரே பொதுவான கொள்கை வழி நின்று கடைசி வரை ஒரே மாதிரி அதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருந்தாலும் சரி, செயல்படுவ தென முடிவு செய்திருக்கிறோம். இதில் பகத்சிங்கின் லட்சியக் கட்டுப்பாடும் பொது வாழ்வின் இலக்கணமும் ஒரு சேர வெளிப்படுவதைக் காணலாம். இதுதானே ஆளுமையின் முக்கிய வரையறை.ஒருவர் இளமையில் கடவுள் மறுப் பாளராக திகழ்வது எளிது, இயல்பானது. பகத்சிங்கும் இளமையில் அவ்வாறு திகழ்ந்ததில் வியப்பில்லை. ஆனால், பிரச்சனைகள் குரல் வளையை நெரிக்கும் போது, சோதனைகள் அடுத்தடுத்து வறுக்கும்போது எதிர்காலம் நிச்சயமற்ற தாய் தெரியும்போது அப்போதும் கடவுள் மறுப்பு பேசுகிறவர்கள் மிகவும் சொற்பம். மரணபயம் எல்லாவற்றையும்விடக் கொடுமையானது. அதுவும் மரணத் தேதி ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டப் பிறகு ஒருவர் உணர்ச்சி வசப்படாமல் தொடர்ந்து அறிவுப்பூர்வ மாக செயலாற்றுவது என்பது அபூர்வ மானது. அது மிக உயர்ந்த ஆளுமையும் ஆகும்.

பகத்சிங் சிறையிலிருந்த காலத் தில் அதுவும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டப் பின்பு அவரது சக சிறை தோழன் ஃபணீந்திரநாத் கோஷ் என்பவர் பகத்சிங்கை பலமுறை சந் தித்து விவாதம் செய்தார். ஃபணீந்திர நாத் கடவுள் நம்பிக்கையாளர். அவர் பகத்சிங்கை கடவுள் பக்கம் திருப்பு வதற்காக பலமுறை விமர்சனம் செய் தார். அவருடைய கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லு கிற விதத்தில் சிறையிலிருக்கிறபோது எழுதிய நூலே நான் ஏன் நாத்தி கனானேன். அந்த நூலில் கடைசியில் எழுதினான், இன்னல்கள் அனைத் தையும் அதிகபட்சத் துணிவுடன் எதிர் கொண்ட நாத்திகவாதிகளைப் பற்றி நான் படித்திருக்கிறேன். எனவே, நானும் எனது கடைசி மூச்சிருக்கும் வரை தூக்குமேடையிலும் கூட தலை நிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்றான். சொன்னபடியே பகத்சிங் இறுதிவரை நாத்திகராக திகழ்ந்தான் என்பது அவ னுடைய அறிவார்ந்த ஆளுமையின் உயர்ந்த எடுத்துக்காட்டு.

பகத்சிங் சாகசப் பிரியன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்த சாகசங்களைவிட அதிமுக்கியப் பணி கள் உண்டு என்கிற தெளிந்த தொலை நோக்கு அவனிடம் இருந்தது. சாதாரண மாக ஆக்சன்களில் பங்கெடுப்பவர் களையும் தூக்குமேடை ஏறுபவர்களை யும்தான் புகழ்தேடி வருகிறது. அவர்கள் நிலை ஒரு பெரிய மாளிகையில் தலை வாசலில் பதிக்கப்பட்ட வைரம் போன் றது. ஆனால், அஸ்திவாரத்திற்குள் விழுந்து கிடக்கும் ஒரு சாதாரண கல்லுக் குள்ள முக்கியத்துவம் அந்த வைரத் திற்கு இல்லை என்றான். மேலும் அவன் கூறுகிறான், நமது இயக்கம் வைரங் களைத் திரட்டியதே தவிர அஸ்திவாரக் கற்களை சேர்த்து வைக்கவே இல்லை. அதனால்தான் நாம் இத்தனை மாபெரும் தியாகங்கள் புரிந்தும் மாளிகையை கட் டவே ஆரம்பிக்கவில்லை. இன்று நமக் குத் தேவை அஸ்திவாரக் கற்களே. இப் படிக் கூறியதோடு இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்தினான்.

தியாகமும் உயிர்பலி யும் இரண்டுவிதமானவை. ஒன்று குண் டடிபட்டும் தூக்கிலிடப்பட்டும் மரணத் தைத் தழுவுவது, இதில் கவர்ச்சி அதி கம் இருந்தாலும் கஷ்டம் குறைவு தான். 2வது வாழ்க்கைப்பூராவும் மாளிகை யை சுமந்து கொண்டிருப்பது . போராட் டம் நடந்து கொண்டிருக்கும் போது, நமக்கு எதிரான சூழ்நிலையில் நமது தோழர்கள் ஒவ்வொருவராக நம்மை விட்டுப் போய்க்கொண்டிருக்கும் போதும் நாம் ஒரு சில தேறுதல் வார்த் தைகளுக்காக தவிக்கிறோம். அப்படிப் பட்ட நேரங்களில் தட்டுத் தடுமாறாமல் தமது லட்சியபாதையை விட்டுச் செல் லாதவர்கள் மாளிகையின் சுமையால் அசைந்து கொடுக்காதவர்கள், பளு வுக்கு பயந்து தோள்களை கீழே இறக்காதவர்கள், ஒளிமங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தம்மைத்தாமே எரித்துக் கொள்பவர்கள், பாதையில் இருள் சூழ்ந்துவிடக்கூடாது என்பதற் காக தம்மை மெழுகுவர்த்தியைப் போல் கரைத்துக் கொள்பவர்கள் உயிர்த் தியாகம் புரிபவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் இல்லையா...? ஆம் பகத்சிங் வெறும் உயிர்த்தியாகங்களை நமக்கு போதிக்கவில்லை. அவனும் புரிந்து கொள்ளவில்லை.

அர்ப்பணிப்பும் தொலைநோக்கும் கொண்ட நெடிய பய ணத்தைத் தான் அவன் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனுடைய ஆளு மை நொடியில் மடியும் மின்மினிப்பூச்சி போன்றதல்ல. யுகங்களைத் தாண்டி ஒளிரும் நட்சத்திரம் போன்றது.தொழிலாளிகளையும் விவசாயி களையும் திரட்டுவதுதான் தான் கொண்ட லட்சியத்தை அடைய உறுதியான வழி முறை என்பதை பகத்சிங் ஒருபோதும் மறக்கவில்லை. அவன் நாடாளுமன்றத் தில் வெடிகுண்டை வீசியபோதும் கூட அதில் யாரையும் உயிர்பலியாக்க வேண் டும் என்கிற தீய நோக்கம் இருக்கவில் லை. மாறாக இந்த நாட்டு மக்கள் தங்களு டைய தூக்கத்திலிருந்து விழித்தெழ அது வெடியோசையாக இருக்க வேண் டும் என்றே கருதினான். அவ்வாறே செயல்பட்டான். குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு தனது லட்சியத்தை பிரகடனம் செய்தான். வெள்ளைக் காரை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய முதலாளிகள் அமர்வதால் எந்த நன் மையும் தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஏற்படப்போவதில்லை என் பதை பிசிறில்லாமல் எடுத்து வைத் தான்.

சுரண்டல் ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் அந்நிய ஆதிக்க நுகத்தடியி லிருந்தும் ஒரு சேர விடுதலைப்பெற வேண்டும் என்பதே பகத்சிங் நோக்க மாகவும் முழக்கமாகவும் இருந்தது.1. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி வெல்லட்டும்) 2. தொழிலாளி வர்க்கம் வெல்லட்டும். 3. ஏகாதிபத்தியம் ஒழியட் டும் என்ற மூன்று லட்சிய முழக்கங் களையே மையமாகக் கொண்டு பகத் சிங் செயல்பட்டான் என்பதை நினை வில் கொள்ள வேண்டும். அதுமட்டு மல்ல மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. எங்களுக்கு யாரிடத்திலும் தனிப்பட்ட முறையில் பகைமை இல்லை. நாங்கள் எல்லோரையும் எப்போதுமே அன்போடுதான் நேசித்து வந்தோம். என்பதை மீண்டும் மீண்டும் சொன்னது மட்டுமல்ல. சொன்னபடி நடந்தும் வந்தான். தனிநபர் கொலை களையோ அர்த்தமற்ற வெடிகுண்டு வீச்சுகளையோ பகத்சிங் ஒருபோதும் ஏற்றுக்கொண்டவனல்ல. சமூகத் தின் சகலப் பிரச்சனைகளையும் ஆழ மாகவும் நுட்பமாகவும் அலசி அதற்குத் தீர்வுகாண வேண்டும் என எப்போதும் துடித்துக் கொண்டிருந்தவன்.

பயங்கர வாதம் ஒருபோதும் புரட்சியாளர்களின் நோக்கம் அல்ல என்பதை அறிந்தவன் மற்றவர்களுக்கும் உணர்த்தியவன். அதே நேரத்தில் தேசத்திற்காகவும் உழைக்கும் மக்கள் நலனுக்காகவும் மரணத்தை ஆலிங்கனம் செய்யவும் தயாரான ஆயிரக்கணக்கான இளைஞர் களால்தான் உண்மையான விடியலை கொண்டு வரமுடியும் என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண் டிருந்தான். ஆயினும், தனிநபர்களால் இவற்றை சாதிக்க முடியாது. லட்சிய நோக்குடைய அறிவியல்பூர்வமான தொலைநோக்குத் திட்டம் கொண்ட நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழி லாளி விவசாயிகளின் கட்சித் தேவை என்பதை சோசலிசமே சமூகத்தின் எதிர்காலம் என்பதனை பகத்சிங் உணர்ந்திருந்தான். அதனை அழுத்த மாக மீண்டும் மீண்டும் அவனுடைய வார்த்தைகளில், பேச்சிலும் எழுத்தி லும் கடிதங்களிலும் குறிப்புகளிலும் சிந்தனைகளிலும் பதிவு செய்து கொண்டே இருந்தான்.ஒரு சிறு கட்டுரையில், பகத்சிங் கின் மொத்த ஆளுமையையும் வரைந்து காட்டுவது எளிதானதல்ல. ஆயினும் அவன் ஆரம்பம் முதல் இறுதி வரை அளவற்ற அறிவுத்தேடலுடனும், எல் லையற்ற மன உறுதியுடனும் திகழ்ந் தான்.

குறுகிய சாதி, மத, இன எல்லை களைத் தாண்டியவனாக புதிய உலகக் கண்ணோட்டம் கொண்டவனாக சோச லிச சமூகத்தின் தூதுவனாக சமூக மாறுதலின் சாரதியாக ஒட்டுமொத்தத் தில் இந்திய இளைஞர்களின் நம்பிக் கையின் குறியீடாக திகழ்ந்தான். மகாத் மாக்கள் அவனது பாதையை ஏற்க வில்லை. எதிர்த்தனர், விமர்சித்தனர், கைகொடுக்கத் தயங்கினர், கைவிட் டனர். ஆனால், இளைஞர்கள் அவனை கொண்டாடினர். மக்கள் தங்கள் நெஞ்சில் அவனை வரைந்து கொண் டனர். இந்திய சமூகத்தின் குறிப் பாக இளைஞர் சமூகத்தின் மனச்சாட்சி யாய் இன்றும் அவன் விளங்குகிறான். நாளையும் அவ்வாறே விளங்குவான்.

நன்றி : தீக்கதிர்  23-03-2014

காளியே ஆயினும்..

Posted by அகத்தீ Labels:ஒரு சிறுகதையை முன்வைத்து ..


காளியே ஆயினும்....

சு.பொ.அகத்தியலிங்கம்
இந்த அலசலின் சுருக்கப்பட்ட வடிவம் இன்றைய தீக்கதிர் இலக்கியச் சோலையில் இடம் பெற்றுள்ளது . முழுக்கட்டுரையையும் வாசிக்க விரும்புவோர் இங்கு வாசிக்கவும் ]
இடம் பெயர்தல் வாழ்க்கையின் நியதி வேலையின் நிமித்தம் பஞ்சம் பிழைக்க கலவர பூமியிலிருந்து உயிர் பிழைக்க ஆதிக்கத்தை எதிர்க்க வலிமையற்று ; என பலவாறாக அன்றாடம் இடம் பெயர்தல் நடக்கிறது நடோடிகள் அகதிகள் வந்தேறிகள்  இப்படி பலவிதமாய் வாழ்க்கைச் சூறாவழி குதறிப்போடுகிறது .
ஆயினும் பொதுவாக சாமிகள் இடம் பெயர்வதில்லை சாலை விரிவாக்கம் போன்ற விதிவிலக்குகள் தவிர பிள்ளையாரைத் திருடி பிரதிஷ்டை செய்வதே வழக்கம் என்றாலும் ஏழைகளின் குலசாமிகள் இடம் பெயர்வதில்லை வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில்  அணைக்காக கிராமமே பெயர்க்கப்பட்ட போது பேயத்தேவர் தன் குலதெய்வத்தை தம்மோடு கொண்டுவர முயன்ற காட்சி கண்ணில் நீரை வரவழைக்கும் சிரிக்கத்தெரியாதவன் மட்டுமல்ல அழத்தெரியாதவனும் மனிதனில்லை .
.காமுத்துரையின் “ இடம் பெயர்தல் பண்பாட்டு பாசிசம் சர்க்கரையாய் பேசி நெய்தடவி கழுத்தறுப்பதை நுட்பமாய் பதிவு செய்கிறது .

கோயிலு கோயிலுன்னு விழுந்தடிச்சு வேல பாக்கறியே.. அங்க என்னா மாசாமாசம் சம்பளமா
எண்ணித்தர்ராக..? ஒண்ணுக்கும் ஆகாதுன்னுதான ஓன் அண்ணந்தம்பியெல்லா இத ஓங்கிட்ட தட்டி
விட்டுட்டுட்டாங்க.. அதப் புரிஞ்சிக்காம நிய்யும் என்னத்தியோ பொதயலக் காக்குறமாதிரி பேயா
அலஞ்சிபெருச்சாளியா கொடஞ்சிக்கிட்டிருக்க.” கருத்தம்மாளின் பாட்டு ஓயாதொலித்தது

அவளைப்போல பூசாரிவேலையை அத்தனை அலட்சியமாய் போட்டுவிட்டுப் போய்விட
முடியாதுஜாதிக்குச் சொந்தமான கோயில்தான் என்றாலும்கருவறைக்குள் நுழைய தன்குடும்பம்
தவிர யாருக்கும் பாத்யதை இல்லைபங்காளிகள் வந்து போகலாம்ஆனால் தனக்கு இருக்கும்
உரித்து யாருக்கும் கிடையாது அந்த ஒருபெருமைதான் முருகேசனை பம்பரமாய் ஆட்டுகிறதுஆனால் அங்கும் இங்கும் பணம்புரட்டி கோயிலை நிர்வகிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை ஆயினும் கோயிலை பெருமைப்படுத்த முருகேசம் மற்றவர்களை காப்பியடிக்க ஆரம்பித்தார் .
விளக்குபூசை ஒன்றை காப்பியடித்து பெண்களை வரச் செய்து சொந்த மக்களுக்கு’ கோயிலின்
ஞாபகத்தை உருவாக்கினார்அதன் தொடர்ச்சியாகத்தான் மார்கழி முப்பதும் திருப்பாவை பாடி
பொங்கலும் பூசையும் அதிகாலையில் நடத்த முடிந்ததுஅது சிலபேருக்குப் பொறுக்கவில்லை.

இல்லாத வழக்கத்த ஆரம்பிக்கிற..!” என்றனர்.

காவு குடுத்து கறி படைக்கிறதுதே நம்ம வழம... தெரியாதா?..”

ரோட்டுமேல கோயில வச்சுக்கிட்டு ஆள்வராம வவ்வால் அடைஞ்சி கெடக்கே..சாமி..! ”

சரிப்பா...... பூசாரிக்கி பொங்கதிங்க ஆச வந்திருச்சு..”

ஆனா இதுக்கெல்லா சமுதாயத்துல இருந்து படி குடுக்க முடியாது முருகேசாஅம்புட்டு
வசதி நம்மட்ட கெடயாதுதெரியும்ல..”

அத நாம் பாத்துக்கறே..சாமி ஒங்க பிள்ளைகள மட்டும் கோயிலுக்கு தவறாம அனுப்பிச்சு
விடுங்க..” – என்று எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்.

பனிக்காலத்தில அவெவெ வேலவெட்டிக்கி வெளியேறவே நேரமில்லாமத் திரியிறாங்கெ.. நீ
என்னமோ பகுமானமா பஜனைக்கி வாப்பா...ங்குற....ம் ?”

ஆனாலும் படித்தஅரசு வேலைபார்க்கிற சிலபேர் முருகேசனுக்கு ஒத்துழைப்புத்
த்ந்தார்கள்அவர்கள்தான் மார்கழி பஜனைக்கு மைக் வைக்கச்சொன்னார்கள்அதுஒரு
பெரியசெலவாக இருந்தாலும் முருகேசனால் சமாளிக்க முடிந்ததுமைக் வந்ததும் திருப்பாவையும்
திருவெம்பாவையும் வேறஆளுக’ வந்து படித்தால் நன்றாக இருக்கும் என போஸ்ட்டாபீஸில்
வேலைபார்க்கும் நாகராசனின் சம்சாரம் பிரியப்பட்டது.

எதோ ஒரு உள்ளுணர்வில் அதுக்கெல்லா தோதுப்படாது’ என பலமாய் மறுத்த முருகேசன்
தானே படிக்க ஆரம்பித்தார்புத்தகம் வாசித்து பிற்பாடு பூசையும் நடத்துவது கொஞ்சம்
சிரமமாய்த்தான் இருந்ததுஎப்படியோ அந்தம்மாள் கொஞ்சநாளில் ஒரு குருக்களை அழைத்து
வந்துவிட்டார்அவர் வந்ததில் முருகேசனுக்கு ஒருவகையில் வசதியாய் இருந்ததுஅவர் பாசுரங்கள்
படிக்கிற நேரத்தில் பொங்கல் வைத்துவிட்டு அம்ம்னுக்கு அலங்காரம் முடித்துவிடலாம்.

குருக்கள்வந்து ராகம்போட்டு திருப்பாவை திருவெம்பாவை படித்ததில் கூடுதலாய் ஒரு கூட்டம் வந்து சேர்ந்ததுதினமும் சர்க்கரைப் பொங்கல் என்ற தளுகை மெனுவில் மாற்றம் உண்டாக்கினார் குருக்கள்திருவாதிரைக்கு அரிசிக்களியும்கூடார வெள்ளிக்கு புளியோதரையும்வளர்பிறை தேய்பிறை கிழமைகளைக் கணக்கிட்டு வெண்பொங்கல் முதலான பிரசாதங்கள் புதுபுதுசாக உருவாகினஅப்போதுதான் முருகேசனுக்கு ஒருபயம் கவியத் துவங்கியதுவிதவித மான பிரசாதத் தயாரிப்பில் தான் தோற்றுவிடக் கூடாதே என்பதற்காக கருத்தம்மாளிடம் வந்து யோசனை கேட்கலானார்.

அவளுக்குக் கடுப்பாகிப் போனது ‘’ ந்தாகூட்டுச்சாறுகோழிச்சாறுகறிக்கொழம்புகருவாட்டுக்கொழம்பு இப்பிடி எதியாச்சும் தெரிஞ்சதக் கேளு.. சும்ம்ம்மா.. வெம்பொங்களு வேகாதபொங்களு.. தேங்காசோறுமாங்காசோறுன்னு உயிர வாங்காத..”

இப்படி உள்ளே நுழைஞ்ச பார்ப்பணியம் ஒட்டகத்துக்குள் தலையை நுழைச்ச கதையாய் ஆகிப்போனது சிவன் விஷ்னு ,மகாலட்சுமி என ஒவ்வொண்ணா உள்ளே வந்தது திருவிளக்கு பூசைன்னு பெண்களை ஸ்பெஷலாக இழுக்க ஏற்பாடானது பரம்பரை காளி மெல்ல மெல்ல ஓரம் கட்டப்பட்டாள் .
ஒங்க தெய்வத்துக்கு பலி குடுக்கிற வழக்கமெல்லாம் உண்டா..?”

பலி..ன்னா.. காவு தான.. அதெல்லாங் குடுப்பம்ங் சாமி..”

வேற..? “

வே.....யாராச்சும் நேந்துக்கிட்டாங்கன்னா..சாவ... கோழி ..அறுப்பாங்க..”

கோயிலுக்கு ஏடு வாசிச்சிருக்கீங்களா..? ‘

......... ........... ..........

மனுசரப்போல கோயிலுக்கும் ஏன் வீடுகளுக்கும் கூட தொட்ர்ச்சி இருக்கு... ஊர் மாற்றம்
கண்டதிலிருந்து ஒங்க தெய்வம் பசியோட அலையுது அது யாருக்காச்சும் தெரியுமா..? அதனோட
இயல்பான சக்தி பாதிக்கப் பட்டிருக்குபவர் இல்லாம பாவமா நிக்கிதுஅதனால சமுதாயத்துல
பொறுப்பில இருக்கவங்க குடும்பத்தில சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருக்குஏற்பட்டிருக்கலாம். “ ஏதோ
ஒரு ஏட்டுசுவடியை கையில் வைத்துக்கொண்டு பேசினார்கள்.

அவர்கள் சொல்வது பூராவும் வாஸ்தவமாகவே இருந்ததுபோன மூணாம்மாதம் தலைவராய் இருந்த கருப்பன் லாரியில் லோடுஇறக்கிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி வந்து துள்ளத்துடிக்கச் செத்துப்போனார்முதல்வருசம் கைகால்வராமல்போன பெரியதனம் இன்னமும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார்நாட்டாமை சுகர் பிரசர்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைகிறார்இப்படி பெருசுகள் பூராவும் விழுந்துகிடப்பது இதனால்தானா...! தரைவிரிப்பில் உட்கார்ந்திருந்த அத்தனைபேருக்குமே கவலை அதிகரித்தது.

’’ஒங்களப் பயமுறுத்தறதுக்காகச் சொல்லல.. எங்களுக்கு சொல்லப்பட்டதச் சொல்றம்..”

சுடுகாட்டு அம்பாளுக்கு பொணவாடைதான் சுவாசம்நீங்க சுவாசத்தத் தடை பண்றீங்க..

அதனால ஒங்க அம்பாள்மூச்சுத்திணறிக்கிட்டிருக்கா..”

உட்கார்ந்திருந்தவர்களுக்கு மூச்சுமுட்டுவது போலிருந்தது..

இருதரப்பிலும் அமைதி ஊடாடியது.

அப்பன்னா ஆத்தாள கொண்டுக்குப் போயி சுடுகாட்ல வச்சிரணுமா..”

உட்கார்ந்திருந்தவர்களில் ஒருகுரல் அவசரமாக ஒலித்தது.

அதுக்கு எடம் இருக்கா.” பீடத்தில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்தும் ஒருகுரல் அவசரமாய் வந்தது.

அதுக்காக ஆள் பேர்வராத எடத்திலயா போயா சாமிய வப்பாக..? பொண்ணுபொடுசுக
போய்வரவேணாமா..” கீழிருந்தே ஆட்சேபமும் எழும்பியது.

ந்மக்காக தெய்வத்த அலக்கழிக்கக் கூடாது..”

பேசாம இப்ப இருக்க கோவில்லயே ஒருபலிபீடத்த கட்டி வக்கெக்கலாம்ல..”

அது முடியாது. “ குருக்கள் கொஞ்சம் பலமாய் குரல் உயர்த்திச் சொன்னார்.,” அய்யப்பனுக்
கான ஆலயத்த உருவாக்கியாச்சுஅவருக்கான ஆச்சாரமும் அனுஷ்டானமும் எல்லாருக்கும்
தெரியும்பலிங்கற வார்த்தையே அய்யப்பனுககு ஆகாது அப்பறம் ஒங்க இஷ்டம்..”

அப்ப....? “ ஏதோ முட்டுச்சந்தில் சிக்குண்ட ஆட்டுமந்தைபோல அத்தனை பேரும்
பரிதவித்தனர்

இப்படி விரட்டியடிப்பது பார்ப்பணியத்தின் நுட்பமான யுத்தியாகும் .திருப்பதியில் மலைக்காளி இடம் சைவர்களாலும் பின்னர் வைணவர்களாலும் வஞ்சகமாகப் பறிக்கப்பட்டு இப்போது  வெங்கடாஜலபதியாய் மாற்றப்பட்டு மக்களையும் ஏற்கச்செய்துவிட்டனர்.பழமையின் மிச்சசொச்சமாய் மொட்டையடிப்பதை மட்டும் தொடர்கின்றனர் பதினோராம் நூற்றாண்டுவரை அதாவது பரிபாடல் காலம் வரை தமிழகத்தில் முருகனும் வள்ளியும் மட்டுமே கோலோச்சினர் அப்புறம் வடநாட்டு சுப்ரமணியனும் தமிழகத்து முருகனும் ஒன்றாக்கப்பட்டு வள்ளிஎனும் முருகனின் மனைவியே தெய்வயானையின் சக்காளத்தியாக்கப் பட்டாள் .
குமரி மாவட்ட வரலாற்றோடு பிசையப்பட்ட பொன்னீலனின் “ மறுபக்கம் ” நாவல் பாரம்பரிய இசக்கியம்மன் வழிபாட்டை பார்ப்பணிய வழிபாடு ஆக்கிரமித்ததை விவரிக்கும் ஒற்றைக் குரலாயினும் அதற்கு எதிரான வலுவான குரலுடன் நாவல் நிறைவு பெறும் .
இச்சிறுகதையும் அதன் நீட்சிதான் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டை எப்படி பார்ப்பணியப் பண்பாடு விழுங்கும் அதுவும் யானை தானே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொண்டதைப்போல நடக்கும் என்பதை நுட்பமாய் சித்தரிக்கிறது இது கதைமட்டுமல்ல நிகழ்கால அரசியலும் கூட ..முதுமை அவர்களுக்கல்ல

Posted by அகத்தீ Labels:
முதுமை அவர்களுக்கல்ல

- சு.பொ.அகத்தியலிங்கம்.


தோலில் முதுமையின் வடுக்கள் , உடம்பில் தளர்ச்சி , ஆனால் வார்த்தை களில் தெளிவு ; ஏற்றுக்கொண்ட பாதை யில் சறுக்கலின்றி இந்த நிமிடம் வரை சலிப்பில்லாப் பயணம்; இதுதான் அவர் களை நோக்கி நம்மை பொறாமை யோடு பார்க்கவைக்கிறது.
" உலக அளவில் முக்கியமான ஒரு புத்தகத்தை தமிழ்ல முழுமையா , விரிவா கொண்டுவந்துட்டோம்கிற மன நிறைவு ஒருபக்கம் இருந்தாலும் , நாம வெளியிலேர்ந்து கொண்டுவந்து சேர்க்க வேண்டிய படைப்புகள் இன்னும் கடல ளவு இருக்கேங்கிற கடமையும் நாம இருக்குற உடல்நிலை எதுவரைக்கும் அனுமதிக்கும்கிற உண்மையும் ஏக்கத்தைத்தான் உருவாக்குது ”இதைச் சொல்லுகிறவர் இளைஞரோ நடுத்தர வயதுக்காரரோ அல்ல; அகவை எண்பதைக் கடந்துவிட்டவர். ஒரு நூலுக் குச் சொந்தக்காரர் அல்ல; தமிழ் அறி வுத்தளத்தில் பல காத்திரமான படைப் புகளைத் தந்த ஆளுமை .பெரியார், சுயமரியாதை இயக்கம் , சாதி எதிர்ப்பு , மார்க்சியம் , மனித உரிமை என இவர் பதித்த தடம் அதிகம் .அவர்தான் எஸ்.வி. ராஜதுரை .

ஏற்ற இறக்கங்களை கம்யூ னிஸ்ட் இயக்கம் சந்தித்த போதும் அதன் மீது மாளாக் காதலுடன் இருக்கும் இந்த கிழவர் ‘ சோஷலிச மீசை இன்னும் கறுக் கும்’ என்கிற கவித்துவ வரிகளை நினை வூட்டுகிறார்.கம்யூனிஸ்ட் அறிக்கையை புதிதாக பிழையற மொழியாக்கம் செய்ததுடன் அது குறித்த விளக்கங்களுடன். இப் போது அவர் தமிழ் அறிவுலகிற்குத் தந்தி ருக்கும் கொடை போற்றுதலுக்குரியது . இப்படைப்பு குறித்து அவர் மனநிறை வடைகிற நேரத்திலேயே இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறதே உடல் ஒத்துழைக்க மறுக்கிறதே என முதுமை யிலும் கவலைகொள்வது குன்றா சமூக அக்கறையின் பெரும் சாட்சி அன்றோ ! இவரிடம் கனிந்து நிற்கும் உழைப்பை , தேடலை , சமூகப் பொறுப்பை இளைஞர் கள் வணக்கம் செய்தால் மட்டும் போதாது வரித்துக் கொள்ளவும் வேண்டும்.

நான் செத்த பிறகு சடங்குகள், சம்பிரதாயங்கள், மேளம் ,வெடி , மாலை மரியாதை எதுவும் செய்ய வேண்டாம் ; படத்திறப்புகள்கூட வேண் டாம் ; எரித்து விடுங்கள் என 92 வயது கி.ராஜநாராயணன் குமுதத்தில் வேண்டு கோள் விடுத்ததைப் படித்த போது ; 20 வயதுகளில் இடைச்செவல் கிராமத்தில் ஆயுதப்புரட்சிக்கு பதியம் போட்ட இளைஞனின் கம்பீரம் சற்றும் குறையாமல் இருப்பதைக் காண முடிகிறது .பள்ளிப்படிப்பையே தாண்டாத அவர் புதுவைப் பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராய் உயர்ந்தது எப்படி ; வாசிப்பு என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடலாம் .

புத்தக வாசிப்பு மட்டு மல்ல மனிதர்களை வாசித்ததும், கிராம வாழ்க்கையை ரத்தமும் சதையுமாய் வாசித்ததும் தான்.கோபல்ல கிராமமும் , வேட்டியும் , நாட்டுப்புற கதைகளும் , கரிசல் காட்டு இலக்கியமும் காலந்தோறும் கி.ரா பேரை சொல்லி நிற்கும் .அவரது எழுத் தில் வீசும் கரிசல் காட்டு மனிதர்களின் வாசம் ஒருபோதும் நம்மை விட்டு அக லாது . அவரைப் பின் தொடரும் கரிசல் காட்டு படைப்பாளி படையொன்று உண்டு.வாழ்வின் இறுதி அழைப்பை எதிர்பார்க்கும் நேரத்திலும் அவரது வாசிப்பு வேட்கையும் எழுத்து வேட் கையும் நமது சோம்பேறித்தனத்தின் மீது சவுக்காய் விழுகிறதே ! இளையதலை முறை வெறியோடு பின்பற்ற அவரிடம் நிறைய நிறைய இருக்கிறது .
“ எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது நல்லது .அந்த வேர்கள் அறுந்து போய்விட்டது . இப்போது புதிதாக வேர்களைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது . சில சமயம் வேர் பிடித்துக் கொள்கிறது. சில சமயம் பிடிக்கிறது இல்லை.” என்கிறார் 83 வய தான அசோகமித்திரன்.
“நாலு வரு ஷத்திற்கு முன்பே இறுந்து விடுவேன் என நினைத்த அவருக்கு இப்போது தமிழக அரசு விருது கொடுத்து கவுரவித் திருக்கிறது . விருதை வாங்க 20 படிக்கட் டுகள் ஏறவேண்டுமா என்பது இவரது தற்போதைய கவலை.கணையாழி இதழின் ஆசிரியராக இருந்தவர். அப்பாவின் சிநேகிதர், 18வது அட்சக்கோடு போன்ற பல படைப்புகளின் சொந்தக்காரர். நாவல் ,சிறுகதை இரண்டிலும் முத்திரை பதித்தவர்.

கவிதை குறித்து சந்தேகப் பார்வை கொண்டவர் . தண்ணீர் தண்ணீர் என கோமல் சாமிநாதன் அரசியலும் சமூக மும் கலந்து தயாரித்த நாடகமும் சினி மாவும் சக்கைப் போடு போட்ட காலத்தில் இவர் தனிமனித பாலியல் வாழ்வோடு பிசைந்து எழுதிய தண்ணீர் எதிர்திசையி லான பயணமாகும் . இவரது இலக்கியக் கோட்பாட்டில் மாறுபட்டவரும் இவரது எழுத்தை விரும்பி ரசிப்பார்கள் .“படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம்” என இன்றும் கூறும் இவர் ; தயங்காமல் மாற்று கருத்துகளை இப் போதும் முன்வைக்கிறார் .பரந்த கூர்மை யான வாசிப்பும் எழுத்தும் இந்த நொடி வரை ஜீவத்துடிப்போடு இவரை வைத்தி ருக்கிறது . “ உடம்பு முடியுதோ இல் லையோ ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிச்சுடுவேன். வாசிப்பு என்னை வேற உலகத்துக்கு கொண்டுபோயிடும்” அந்த முயற்சியும் உழைப்பும் படைப்பு வரம் வேண்டி நிற்கும் புதிய தலைமுறை கறாராகப் பின்பற்ற வேண்டியவை அல்லவா ?

உடற்கூறியலில் செல்லின் வளர் சிதை மாற்றம் வயதாக வயதாக எதிர் திசையில் நகரும்.ஆனால் மரணம் அணைக்கிற வரை தன்னைப் புதுப்பித் துக் கொண்டே இருப்பவன் தான் படைப் பாளி. மேலே சந்தித்த மூவரும் தாங்கள் படைப்பாளி என்கிற கவுரவத்தை உயர்த்திக் காண்பிக்கிறார்கள்..அதற்கு அவர்கள் நல்ல வாசகர்களென்பதும் ; இடைவிடா தேடலில் உழல்பவர்க ளென்பதும் முக்கியம் . இதைவிடவா அவர்கள் வாழ்க்கை பெரிய செய்தி சொல்ல வேண்டும் ?

இஸ்லாம் உலகில் நடந்தது... – நடப்பது... – நடக்கவேண்டியது ...…

Posted by அகத்தீ Labels:

இஸ்லாம் உலகில் நடந்தது... – நடப்பது... – நடக்கவேண்டியது ...…

- சு.பொ. அகத்தியலிங்கம்

அடிப்படை வாதங்களின் மோதல்சிலுவைப்போர் ,ஜிகாத் ,நவீனத்துவம்ஆசிரியர் : தாரிக் அலி ,தமிழில் : கி.ரமேஷ் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் 7 , இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,சென்னை - 600 018.பக் : 528 , விலை : ரூ. 350 .

--

  " இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண் டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன் . ” - என முன்னு ரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது .

“ நான் இஸ்லாம் குறித்தும் அதன் மூலம் அதன் வரலாறு , அதன் கலாச்சாரம் , அதன் செல்வங்கள், அதன் பிரிவுகள் குறித்து எழுத விரும்புகிறேன் . அது ஏன் சீர்திருத்தத்துக்கு உள்ளாகவில்லை ? அது ஏன் இவ்வளவு பேரச்சத்திற்கு ஆட்பட்டுள்ளது ? குரானை அர்த் தப்படுத்தல் மத அறிஞர்களின் அதிகாரமாக இருக்க வேண்டுமா ? இன்று இஸ்லாமிய அரசியல் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது? இஸ்லாமிய உலகில் இந்தச் சூழல் மேலெழுவதற்கு இட்டுச்சென்ற நடைமுறைகள் யாவை ? இந்தப் போக்கை பின்னிழுக்கவோ மீறிச் செல்லவோ இயலுமா ? சில விஷயங்கள் இஸ்லாமிய உலகிற்குள்ளும் வெளியிலும் விவாதத்தை உருவாக்குமென்ற நம்பிக்கையில் ஆரா யப்பட்டுள்ளது. ” இவ்வாறு முன்னுரையில் மொழிந்திருப்பதற்கு இந் நூல் நியாயம் வழங்கி இருக்கிறது .

ஐந்து பாகங்கள் 26 அத்தியாயங்கள் 528 பக்கங்கள் என அளவில் மட்டுமல்ல; உள்ளடக்கத்திலும் மிகவும் கனமான நூல் . இதைப் படித்துச் செரிப்பது அவ்வளவு சுலபமானதுமல்ல . இஸ்லாமின் தோற்றம் , அது எதிர்கொண்ட இடையூறுகள் , சிலுவைப்போர்கள், அதன் தத்துவப் பின்னணி,ஆட்சியதிகாரப்போட்டி என அனைத்த யும் முதல் நூறு பக்கங்களில் விமர்சனப் பூர்வமாக சுண்டக்காய்ச்சிய பாலாக நூலாசிரியர் தந்துள்ளார் . ஏற்கெனவே இவ்வரலாற்றுச் செய்தி களை பருந்துப்பார்வையாகவேனும் அறிந்து வைத்திருந்தால் மட் டுமே இப்பக்கங்களை கூர்மையாக உள்வாங்க இயலும். .

அதே சமயம் இந்த அடித்தளத்தைப் புரியாமல் இன்றைய இஸ்லாமிய உலகச் சிக் கல்களை புரிந்து கொள்வதும் சிரமம் .“ இஸ்ரேல் ,பாகிஸ்தான் இரண்டிலுமே அவற்றை உருவாக்கிய தந்தைகள் ஒப்புக்கொள்ளும் அரசியலிலிருந்து தொலைவிலிருந்த னர். கடவுட் கொள்கையில் அவ்வளவாக நம்பிக்கையற்றவராக அறி யப்பட்ட ஜின்னா தமது மதத்தில் பல தடைகளை மீறியவர் . இஸ்ரே லின் பென்குரியனும் மோசே டயானும் தம்மை நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். எனினும் இந்த இரு நாடுகளையும் உருவாக்கியதில் அடிப்படைவாதிகளின் விருப்பத்திற்கெதிராக மதம் மையமான இலக்காகிப் போனது . ஜமாத் - இ - இஸ்லாமியும் அதன் யூதப்பங்காளிகளும் இந்த நாடுகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்தனர் . ” - இந்த பத்தியை மீண்டும் ஒருமுறை படியுங்கள் உள் ளீடாக இருந்த நுட்பமான முரண்பாடுகள் புரியும் . அதனை இந் நூலில் சில அத்தியாயங்களில் அலசி உரசிக் காட்டியுள்ளார் .

ஓட்டோமான் பேரரசு எனப்படும் துருக்கிப் பிராந்திய அரசின் நெடிய வரலாறும், துருக்கியில் கமாலும், எகிப்தில் நாசரும், இந் தோனேசியாவில் சுகர்னோவும், ஆப்கானிஸ்தானில் நஜிபுல்லாவும், இன்னும் சிலரும் வரலாற்றில் வகித்த முற்போக்குப் பாத்திரங்களும் இஸ்லாம் எப்போதுமே மதவெறிகொண்ட பயங்கரவாதிகளின் உலக மாக இருந்திடவில்லை என்பதை நினைவூட்டுகிறது .

இரண்டு உலகப்போர்கள் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்ப டித் தன்னை உலகப் போலீஸ்காரனாக சுயநியமனம் செய்துகொண்டது; பெட்ரோலுக்காக இஸ்லாமிய நாடுகளின் உள்விவகாரங்களில் எப்படிப் புகுந்து விளையாடியது ; ஜிகாத்தையும் ஆட்சியதிகாரத்தை யும் எப்படி பொம்மலாட்டம்போல் ஆட்டுவிக்கிறது ; கம்யூனிச எதிர்ப்பு என்கிற பனிப்போர் காலகட்டத்தில் இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாட மதவுணர்வை எப்படி முடுக்கி விட் டது ; சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகும் - அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிந்தைய காலகட் டத்திலும் அமெரிக்கா போடும் பயங்கரவாத எதிர்ப்பு வேடம் எத்தகையது - அதன் தத்துவ அடிப்படை என்ன? இப்படி ஒரு பரந்த சித்திரத்தை இந்நூல் நமக்குக் காட்டுகிறது .

இங்கு இந்துத்துவ வெறியர்கள் முஸ்லிம் மதத்தில் எதிர்ப்புகுரலே இல்லை ; இருந்தால் அழிக்கப்பட்டு விடும் என வரலாற்றை அறியா மல் உளறித்திரிகின்றனர் . “அன்வர் ஷேக் வழக்கு ” என்கிற 15 வது அத்தி யாயத்தை கண்டிப்பாக படிக்கவேண்டும் .கடந்த நூற்றாண்டில் மட்டுமே நஜீம் `ஹிக்மத் , பெயிஸ் அஹமது பெயிஸ் , அப்துல் ரகு மான் முனிஃப் , மகமுத் டார்விஷ் , ஃபாசில் இஸ்கந்தர் , நக்வி மக்போஸ், நிஸார் கப்பானி , பிரமோதய ஆனந்த டோயர் , ஜிப்ரில் டியோப் மம் பேடி, மற்றும் பலர் மதச்சார்பற்ற அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இருந்துள்ளனர் ” என்கிறார் நூலாசிரியர் . இந்நூலாசிரியர் தாரிக் அலியே கூடதன்னை ஒர் நாத்திகர் என பெருமையோடும் அறிவுப்பூர்வமாகவும் பிரகடனப் படுத்திக் கொண்டவர். இடதுசாரிச் சிந்தனையாளர்.

இந்நூலை வரலாற்று நூலாக பொதுவில் வகைப்படுத்தலாம் ; எனினும் கூர்மையான தத்துவ விமர்சனமும் அரசியல் விமர்சனமும் ஊடும் பாவுமாய் இழையோடியுள்ளது . வரலாற்றைப் புரட்டிய பல கவிதைகள் , நாவல்கள் , சினிமாக்கள் என பல அரிய படைப்புகளை பொருத் தமான இடத்தில் கையாண்டு இந்நூலுக்கு உயிர்த்துடிப்பை வழங் கியுள்ளார் . இஸ்லாமிய உலகு குறித்த ஒரு அரிய நாவலெழுதும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தேடி சேகரித்த அறிவை இந்நூலில் தந்துள்ளார். இஸ்லாமிய உலகில் மார்க்சியம் உருவாக்கிய தாக்கங்களும் ; கம்யூனிஸ்டுகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளும் உரிய அங்கீகா ரம் பெற்றுள்ளதுடன் ; அதன் சரிவுகளும் தோல்விகளும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது .

மத அடிப்படைவாதம் ஒற்றை இரவில் ஒசாமா பின்லேடன் என்கிற ஒற்றை மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும்; அந்த ஒசாமா பின்லேடனே அமெரிக்க ஏகாதிபத்திய உருவாக்கமே என்பதையும்; தூண்டிவிடப்பட்ட ஜிகாத்தின் பின்னே ஏகாதிபத்திய நலனும் பெட்ரோல் எண்ணெய்க்கிணறுகளின் மீதான பேராசையுமே உள்ளதையும் இந்நூல் நிறுவுகிறது .

அதே சமயம் “ ஒரு இளம் முஸ்லிமுக்கு கடிதம் ” என்கிற 22 வது அத்தியாயம் விடுக்கும் செய்தி மிக முக்கியமானது; இந்நூலின் குவி மையம் அதுதான்;
“மதவாதம் எழுச்சி பெற்றதற்கு ஒரு பகுதி காரணம் புதிய தாராளவாதத்தின் உலகளாவிய கட்சிக்கு வேறு மாற்றுக் கண்டுபிடிக்க முடியாததால்தான் . இங்கு இஸ்லாமிய அரசுகளும் தமது நாட்டை உலகமயம் ஊடுருவ அனுமதிக்கும் வரை சமூக அரசியல் அரங்கில் தமக்கு வேண்டியதைச் செய்துகொள்ள அனு மதிக்கப்படும் என்பதை நீ காணலாம் . அமெரிக்கப் பேரரசு முன்பு இஸ்லாத்தை உபயோகித்தது . மீண்டும் அதைச் செய்ய முடியும். இங்குதான் சவால் இருக்கிறது.அடிப்படைவாதிகளின் பைத் தியக்காரத்தனமான ஆசாரத்தன்மையையும் , பிற்போக்குத் தனத் தையும் அடித்துச் செல்லக்கூடிய ஒரு இஸ்லாமிய சீர்திருத்தம் தேவை. ஆனால் அதற்கும் மேலாக , இன்று இஸ்லாமிய உலகிற்கு மேற்கு அளிப்பதாகச் சொல்வதற்கும் மேலாக , முற்போக்கான புதிய யோசனைகளுக்கு இஸ்லாமிய உலகைத் திறந்துவிடுவது தேவை . இதற்கு ஆட்சியையும் மசூதியையும் உறுதியாகப் பிரிப்பது தேவைப்படும் ; மதகுருக்களை ஒழிப்பது தேவைப்படும்; இஸ் லாமியக் கலாச்சாரம் முழுமைக்கும் சொந்தமான புத்தகங்களை அர்த்தப்படுத்த முஸ்லிம் அறிவுஜீவிகள் தங்களுக்குள்ள உரி மையை நிலைநாட்டுதல் தேவைப்படுகிறது; சுதந்திரமாகவும், பகுத்தறிவுடனும் கற்பனை வளத்தோடும் சிந்திக்கிற உரிமை தேவைப்படுகிறது ; இந்த திசையில் நாம் செல்லாவிட்டால், நமது பழைய போர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் . புதிய மனிதாபி மானமிக்க செல்வம் மிக்க எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதற்கு மாறாக நிகழ்காலத்திலிருந்து பழையகாலத்துக்கு எப்படிச் செல்வ தென சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் .இது ஏற்க முடி யாத பார்வை ”
இப்படி நூலாசிரியர் எச்சரிப்பதும் வேண்டுவதும் இந்நூலின் முத்தாய்ப்பாகும்.

கடினமான இந்நூலை கடிது முயன்று மொழியாக்கம் செய்த கி. ரமேஷூக்கும் வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் பாராட்டு களைத் தெரிவிக்காமல் இருக்க முடியாது . எனினும் இந்நூலின் கடினத்தன்மைக்கு மூலத்தின் அடர்த்திதாம் காரணமா , மொழி யாக்கமும் பங்கு வகிக்கிறதா என்பதை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வல்லுநர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.
மெசபொடோமியா என்பது ஈராக்கை மையமாகக் கொண்டது; ஒட்டோமான் பேரரசு துருக்கியை மையமாகக் கொண்டது என்பன போன்ற பழைய வரலாற்றுச் செய்திகளை புரிய ஏதுவாக ஒரு அருஞ்சொல் விளக்கப் பட்டியலை முன்பகுதி யிலேயே தொகுத்து வழங்கி இருக்கலாம் .

அது போல நூலினை சரியாக புரிந்து கொள்ள ஏதுவாக தமிழ் - ஆங்கில சொற்களஞ்சி யம் ஒன்றை பின் இணைப்பாக வழங்கி இருக்கலாம் . அந்தந்த காலகட்ட உலக வரை படம் தேவை . மெசபொடோமிய காலம், இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய காலம் , இன்றைய உலகம் எனப் பிரித்து இணைப்பாகத் தருவது அவசியம்.இப் போதுகூட இவற்றை அச்சிட்டு மீதமுள்ள நூலுக்கு இணைப்பா கத் தருவது மிகமிக அவசியம் . ஏனெனில் இந்நூல் இடதுசாரி ஊழியர்கள் அவசியம் படித்து உள்வாங்கவேண்டிய நூலாகும்.

நன்றி : தீக்கதிர் ,  2-3-2014 .

ஒரு சிறுகதையும் பெரும் நிஜமும்..

Posted by அகத்தீ Labels:

ஒரு சிறுகதையும் பெரும் நிஜமும்..

சு.பொ.அகத்தியலிங்கம்.

 சாமி ! எங்களுக்குச் சொந்தமாக இருந்த மலைகளையும் மலங்காட்டையும் அவங்களுக்குச் சொந்த மாக்கிட்டாங்க . புலைகுடியே அழிஞ்சுபோச்சு . மலையிலே புலையனுக்கின்னு ஒண்ணும் கெடையாது . இங்கேயாச்சும் கூழோ கழியோ கெடைக்கிது . தயவு பண்ணி என்னை வெளியே அனுப்பிடாதீங்க ..” என்று பழனி சொல்வதைக்கேட்டு நீதிமன்றமே ஸ்தம்பித்துப்போனது .
இது பிப்ரவரி மாதச் செம்மலரில் டி.செல்வராஜ் எழுதிய  சிறைஎன்ற சிறுகதையின் முத்தாய்ப்பு .இப்போது பழங்குடி மக்களை வேரோடு பிய்த்தெறியும் அரசின் வனக்கொள்கையைவிட சிறையே மேலென மலைமக்கள் வருந்தும் நிலையை இச்சிறுகதை நன்கு படம்பிடித்துள்ளது .
இது திடீர் நிகழ்வல்ல ; அற்றைத் திங்களில் அவ்வெண்நிலவில் எங்களுக்கு காடு சொந்தமாக இருந்தது ஆனால் வேந்தர்கள் அதை ஆக்கிரமித்துகொண்டனரே என உண்மையை உரைக்கும் புறநானூற்றுப் பாடலொன்றை சிறுகதையின் ஆரம்பவரிகளாய் சுட்டி ; ன்று தொடங்கி இன்றைக்கு வந்து சேர்ந்துள்ள இழிநிலையை இக்கதை பறை சாற்றுகிறது . இது கற்பனை அல்ல உறுத்தும் நிஜமே !
சுற்றுச்சூழல் ஆர்வலர் ராமச்சந்திர குஹா தன் சொந்த அனுபவத்தைக் கூறுகிறார் ; “ இப்போது என் சொந்தக் களத்திற்கு வருகிறேன் . தெற்கு கர்நாடகாவில் நாகர் ஹோலே வனப்பகுதியில் நாற்பது புலிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது . இந்தப் புலிகளைக் காப்பதற்காக இந்திய , வெளிநாட்டுப் பணம் கொள்ளையளவில் கொட்டப்படுகிறது . இப்போது நாகர் ஹோலெ சுமார் ஆறாயிரம் பழங்குடி மக்களின் வாழிடமாக உள்ளது . புலிகள் வாழ்வதைப் போலவே நினைவிற்கு எட்டாத காலந்தொட்டு இப்பழங்குடி மக்களும் இங்குதான் வசித்து வருகிறார்கள் . இவர்கள் காட்டைச் சீரழிப்பதாகவும் , வனவிலங்குகளைக் கொல்வதாகவும் எனவே பழங்குடி மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிறது மாநில அரசின் வனத்திறை . ஆனால் அதற்குப் பதிலாக மக்கள் வைக்கும் கோரிக்கை நியாயமானது . காலங்காலமாக தேனெடுப்பது , பழங்கள் சேகரிப்பது , அடுப்பிற்கான விறகு சேகரித்தல் , பறவைகளின் முட்டைகள் சேகரித்து விற்றல் என அவர்கள் வாழ்வாதாரம் காடு சார்ந்தது . தங்களிடம் சொந்தத் துப்பாக்கிகளும் இல்லை . காடுகளின் விழிம்பில் காப்பித் தோட்டம் பயிர் செய்வோர்  தான் நிறைய துப்பாக்கிகள் வைத்திருக்கின்றனர் . அவர்கள் தாம் சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடலாம் என்கிறார்கள் . அவர்களுடய இறுதியான கேள்வி ; காடுகள் புலிகளுக்காக மட்டும்தான் என்றால் காட்டின் நடுவே சங்கிலித் தொடர் போல் வன ஓய்வில்லங்களைக் கட்ட தாஜ் குழுமம் போன்றவைகளை அனுமதிப்பதேன் ? ”
இதே கேள்வியைத்தான் நீலகிரி கூடலூர் மக்களும் கேட்கின்றனர் . புலிகள் மட்டுமல்ல பழங்குடியின மக்களும் நினைவிற்கெட்டா காலந்தொட்டு அங்கே வாழ்வது இயல்பல்லவோ ? 

 மேற்குமலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது.

உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன. எனவே இம்மலைத்தொடர் பாதுகாக்கப்படவேண்டுமென கூறுவதையும் , அதிக மழைப்பொழிவுள்ள இம்மலைத்தொடர் காக்கப்படுவது அவசியம் எனவும் கூறுவதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அதனை எப்படி சாதிப்பது என்பதுதான் கேள்வி . கார்கில் குழுவும் , கஸ்தூரி ரங்கன் குழுவும் செய்துள்ள பரிந்துரைகள் பழங்குடி மக்களையும் பாதுகாக்காது ; வனத்தையும் பல்லுயிரியையும் பாதுகாக்காது ; மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளைக்கே வழிவகுக்கும்.

பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை ஏன் ? தாய்மொழியில் உண்மையறியாமல் கருத்து சொல்ல இயலுமா ?

1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் எழுபது சதம் பேர் எதிர்க்கும் நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை  அமல்படுத்த வகையில்  டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது ஏன் ?

மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இவை வழங்குடி மக்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதாகாதா ?

 இங்கு வெறும் அழகியல் உணர்வால் இயற்கையை நேசிக்கும் நகரவாசியைவிட விவசாயிகளும் , பழங்குடிமக்களும் தான் இயற்கையை பொறுப்புடன் பராமரிப்பதில் மகத்தான உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதை இவ்வுலகம் அறிந்து கொள்ளவேண்டும் என சிப்கோ உள்ளிட்ட வனப்பாதுகாப்பு இயக்கங்கள் கூறுவதை அதிகார மமதை மிக்க அரசு புரிந்துகொள்ளத் தவறுவது ஏன் ?

காட்டைப் பாதுகாப்பதற்காக வைக்கப்படும் அனைத்து வாதங்களும் பழங்குடி மக்களின் உரிமையை மறுப்பதற்காக எழுப்பப்படும் வாதமே ஆகும் என்கிறார் சுற்றுச்சூழலியலாளர் வெர்னியர் எல்வினால் . மேலும் அவர் வாதிடுவது சரிதானே ? காட்டு மரங்களை வெட்டிக் கடத்துவோரும் யானைதந்தம் புலித்தோல் கடத்துவோரும் பழங்குடி மக்களா ? அவர்களுக்கா அவ்வளவு வாகன வசதியும் தகவல் தொடர்பும் பணபரிவர்த்தனையும் அதிகாரவர்க்க கள்ளக்கூட்டும் இருக்கிறது ? அப்பாவி பழங்குடி மக்களா பணத்தில் புரளுகின்றனர் ? பங்களாக்களில் வசிக்கின்றனர் ? தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர் ?

வனத்தை பாதுகாக்க மலையின் மக்களைவிட உரியவர் யார்  ? கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார் , “ தமது கைக் குழந்தையைப் போன்று பாதுகாத்து வைத்துள்ளனர் .” அந்த பழங்குடி மக்களை நம்பாமல் வேறு யாரை நம்புவது ? மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையில் அமைந்த இடதுசாரி அரசு அப்படித்தான் செயல் பட்டது . உள்ளூர் மலை மக்களையும் உள்ளாட்சியையும் நம்பியது . பழங்குடிகளையும் வனத்தையும் ஒருசேரப் பாதுகாத்தது . தொடர்ந்து வனப்பாதுகாப்புக்காக ஐ.நா. விருது வாங்கியது ; ராமச்சந்திர குஹா கூறுகிறார் ;

 மேற்கு வங்கத்தில் இணைந்த வன மேலாண்மைக்குக் கிடைத்த வெற்றி ஆய்வாளர்களுக்கும் , செயல்பாட்டாளர்களுக்கும் , மலை மக்கள் மீது அனுதாபத்துடன் செயல்படும் குடிமை ஊழியர்களுக்கும் ஊக்கமளித்தது . இப்போக்கு இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது . என்றாலும் இபோக்கு அதன் பிறப்பிடத்திற்கு வெளியே மிக நிதானமாகவே நடந்தது .”

இன்றும் திரிபுரா இடதுசாரி அரசு பழங்குடி நலனையும் வனத்தையும் ஒருசேரக்காப்பதில் முன்மாதிரியைப் படைத்து வருகிறது . இடது சாரிகளின்றி வேறு யாரால் இது சாத்தியமாகும் ? என்றும் மலைமக்களுக்கும் வனத்துக்கும் உற்ற தோழர்கள் இடதுசாரிகளே !

நன்றி : தீக்கதிர் 27-2-2014