கம்யூனிஸ சமுதாயம் வெறும் கனவா ?

Posted by அகத்தீ Labels:

கம்யூனிச சமுதாயம் ஏற்கப்படும் 

காலம் கனியுமோ?

சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா?
மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்!

தொடர்ந்து பேசப்பேச நிறையவே கேள்விகள் வருகின்றன. வந்துள்ள கேள்விகளில் புதியவை இவை. தொடர்ந்து விவாதிப்பதற்கு மனதைத் திறந்துவைத்திருப்பதே முக்கியம்.

சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா?

அவசியம் பதில் சொல்ல வேண்டிய பெருங்கேள்வி. இதற்காக தனி நூலே எழுதத்தக்க அளவு விவரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயினும் ஒரிரு வரிகளில் சொல்லவேண்டியுள்ளது.சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படுகிற மொஹஞ்சோதாரா, ஹராப்பா நாகரீகம் ஆரியர் இந்த பூமிக்குள் நுழையும் முன்பே நின்று நிலைத்த நகர நாகரீகம்.

இம்மண்ணின் தொல்குடிகளான திராவிடருக்கு உரியது அது என்றே இதுவரை கிடைத்த அனைத்து சான்றாதாரங்களும் நிறுவுகின்றன. தொல்குடிகளை திராவிடர் எனச் சுட்டுவதில் மாறுபடுவோரும் உண்டு ; ஆனால் அது ஆரிய நாகரிகம் என்பதற்கு எந்தத் தடயமும் கிடையாது,

 இந்துத்துவம் பேசும் சங்பரிவார் இதனை மறுத்து சரஸ்வதி நதி நாகரீகம் என சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்காக அவர்கள் புனைந்த அனைத்துக் கட்டுக்கதைகளையும் அறிவியலாளர்கள் நிராகரித்து ; அவை அனைத்தையும் பொய்யென நிறுவிவிட்டனர். அது சிந்து சமவெளி நாகரீகமே. மொஹஞ்சதோரா - ஹராப்பா நாகரீகமே .

லெமூரியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் குறித்து தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. அண்மையில் வந்த சுனாமி போல் பெரும் ஆழிப்பேரலையாலோ கடற்கோள்களாலோ இப்பெரும் நிலப்பரப்பைக் கடல் கொண்டிருக்கும் எனக்கூறுகின்றனர்.1965ல் தனுஷ்கோடி மூழ்கியதும் 2004 சுனாமியில் ஏற்பட்ட பேரழிவும் ஏன் இது போல் பெரும் பரப்பை கடல் கொண்டிருக்கக் கூடாது என கேள்வி எழுகிறது.
சௌராஷ்டிரம் அருகே கடலுக்கடியில் ஒரு பழைய துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்டதும், பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில் கடலடியில் சிதைந்த கட்டிடங்கள் காணப்படுவதும் லெமூரியா கண்ட கற்பிதத்துக்கு உயிர் கொடுத்ததுபோல் தோன்றும். இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்ளும் சு.கி. ஜெயகரன் எழுதிய நூலொன்று லெமூரியா கண்டமொன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என புவியில் அறிவியல் துணையோடு வாதிடுகிறது .

ஆரம்பத்தில் புவியியலாளர்கள் மத்தியில் இக்கண்டம் குறித்த நம்பிக்கை வெளிப்பட்ட போதிலும் ஆய்வு வலுவானபின் இது குறித்த சந்தேகமே வலுத்துவருகிறது. இன்னும் உறுதியான அறிவியல் ரீதியான நிரூபனங்கள் தேவைப்படுகின்றன. அதுவரை தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியில் லெமூரியா கற்பிதம் தொடரவே செய்யும்.

சோழர் காலமோ, குப்தர் காலமோ, அசோகர் காலமோ பொற்காலம் என்பதெல்லாம் மிகைக் கூற்றே. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சில சிறப்புகள் இருக்கும்; அது போல் பெரும் அவலங்களும் இருக்கும். முன் கேள்வி ஒன்றில் நாம் குறிப்பிட்டது போல சோஷலிசத்துக்கு முந்தைய எல்லா ஆட்சிகளும் சாராம்சத்தில் சுரண்டும் வர்க்க ஆட்சியே.

மன்னராட்சி என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பேணிக்காக்கும் அரசமைப்பே. இந்த ஆட்சிகள் நிலப்பிரபுக்களின் நலனை பாதுகாத்தன.குடியானவர்களை வஞ்சித்தது. அடக்கி ஒடுக்கியது. சாதியம் ஏதோ ஒருவகையில் பாதுக்காக்கப் பட்டது.

கோடிக்கணக்கான மக்கள்“ஆடையின்றி வாடையில்மெலிந்துகையதுகொண்டு மெய்யது பொத்திகாலது கொண்டுமேலதுதழீ இப்பேழையில் இருக்கும்பாம் பெனஉயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனம்எனுமே”-எனும்படியாகத்தான் வாழ்ந்தனர்.

“இரந்தும் உயிர்வாழ்தல்வேண்டின்பரந்துகெடுகஉலகியற்றியான்”-என இறைவனையே சபிக்கும் படியாகத்தான் உயிர் வாழ்ந்தனர்.

உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இந்த ஆட்சிகள் ஒரு போதும் பொற்கால ஆட்சியல்ல.

இப்போது நாம் இங்கு காண்கிற ஆட்சி எதுவும் பொற்கால ஆட்சி அல்ல. பொற்கால ஆட்சி நேற்றும் இல்லை; இன்றும் இல்லை; இனிதான் பூக்க வேண்டும்.

இதனைச் சொல்வதால் பழம் பெருமைகளை முற்றாக நிராகரிப்பதாகாது; மாறாக முந்தைய நியாயமான பெருமைகளைச் சொல்வது வேறு; பொற்காலமென விமர்சனமின்றி போற்றிப் புகழ்வது வேறு.மன்னராட்சியா? குடியாட்சியா? அந்நிய ஆட்சியா? மண்ணின் ஆட்சியா? ஆளுவது அவரா? இவரா? எதுவாக இருப்பினும் ; கொடியும் கோஷமும் மாறினும், சுரண்டல் ஆதிக்கம் மட்டும் தொடரவே செய்யுமெனில், அடக்குமுறை நீடிக்குமெனில், உழைப்போர் நலன் உதாசீனப்படுத்தப்படும் எனில் -அது எப்படி பொற்கால ஆட்சியாகும்?

நாம் முன் கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவாறு சோஷலிச கட்டத்தையும் தாண்டி வர்க்கப் பகைமையும் மோதலும் இல்லாத - அரசும் அடக்குமுறையும் இல்லாத - “ உற்பத்தி சக்திகள் வளர்ந்து கூட்டு உழைப்பு எனும் ஊற்றிலிருந்து செல்வம் அளவின்றி பெருகி ஓடுகிற” கம்யூனிஸ சமுதாயமே பொற்காலமாகும். நம் கவிஞர்கள் கனவு கண்ட‘எல்லோரும் இன்புற்றிருக்கும் பொன்யுகம்’ இனிதான் பூக்க வேண்டும்.
அதற்காக உழைக்கும் மக்களை அணிதிரட்ட கடந்தகால பொற்கால மயக்கங்களை தோலுரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு. செய்வோம்.

மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்!

நூறு கேள்விகளோடு முடிக்கிறேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டதாலும், இதுவே நூறாவது கேள்வி என்பதாலும் கிடுக்கிப் பிடி கேள்வியை வீசி இருக்கிறார் நண்பர். பதில் சொல்ல பல பக்கங்கள் தேவை. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இதுவரை சொன்ன பதில்களை மீண்டும் அசை போட்டபடியே இப்பதிலை வாசிக்க வேண்டுகிறேன் .

மதமும் கடவுளும் இல்லாத தேசமும் ஒரு பொன்னாளும் கேடகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்நாளை உங்களைப் போலவே நானும் ஆவலொடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன் வறுமையும், வேலையின்மையும், அடக்குமுறையும் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு வேண்டும். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுதலை வேண்டும். இல்லையா ?
“எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் நம் வர்க்க ஆட்சியை நிலைபேறுடையதாக ஆக்கிக் கொள்வதற்காக இரு சேவைகள் தேவைப்படுகின்றன; ஒன்று, தூக்கிலிடுபவன் சேவை [ hungman’s function] , இரண்டு, பூசாரிகள் சேவை  [priestly function ]  - இரண்டும் அவர்களுக்குத் தேவை. ஏனெனில் , சுரண்டுவோருக்கு எதிராக சுரண்டப்படுவோர் மத்தியில் எழும் எதிர்ப்பை, போராட்டத்தை அடக்கி ஒடுக்க தூக்குமரமும் தூக்கிலிடுவோனும் தேவை. மறுபுறம் சுரண்டப்படுவோனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி, ‘துன்பங்களை கஷ்டங்களை சகித்துக்கொண்டு கீழ்ப்படிந்து தியாகம் செய்தால் உனக்கு இன்பம் கொழிக்கும் சொர்க்கம் கிடைக்கும்’ என்று சொல்லி - அது வெறும் சரடு நடை முறை சாத்தியமற்றது எனினும் - மயங்கச் செய்ய பூசாரி தேவை. வர்க்க ஆட்சியை உறுதி செய்து - அதற்கு அவர்களை அடிபணியச் செய்து - புரட்சிகர செயல்பாட்டிலிருந்து ஒதுக்கி - புரட்சிகர மனவெழுச்சி ஏற்படாமல் முனை மழுங்கச் செய்து  புரட்சிகர உறுதியைக் குலைக்க பூசாரிகள் தேவை,” என்றார் தோழர் லெனின்.
ஆக, ஆளும் வர்க்கம் அவ்வளவு சுலபமாக தன் ஆதிக்கக் கருத்தோட்டத்தை விட்டுக்கொடுத்துவிடாது. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் உள்ளிட்டு இதுவரையிலான எல்லா சமூக அமைப்புகளும் மதத்தையும் கடவுளையும் விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு அறிவியல் உண்மைகள் மதம், கடவுள் இவற்றை கேள்விக்குள்ளாக்கினும் தன் சுய நலத்துக்காக இவற்றை நீடிக்கச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது. நவீன அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் இதற்கே சேவை செய்கின்றன.

அதிலும் உலகமயம் சகல நல்ல விழுமியங்களையும் அடித்து உடைத்துவிட்டு வெறும் நுகர்வு இயந்திரமாக, பணவெறி மிக்க மிருகமாக, சுயநலக் கிருமியாக மனிதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் அவனுக்கு/அவளுக்கு ஏற்படும் மன உழைச்சலுக்கு ஆன்மீக மருந்து தடவுவதாய்க் கூறி மேலும் மேலும் மதத்திடமும் கடவுளிடமும் சரண்டையச் செய்கிறது .இச்சூழலில் சமூக உளவியலை வென்றெடுக்கும் சவாலான பணிநம்முன் உள்ளது .

ஆனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் வேலையின்மை , கடன் நெருக்கடி , வாழ்வைப்பற்றிய அச்சம் என எல்லா நெருக்கடியும் வேறுவழியின்றி மனிதனை வேறு பாதையை தேடவே நிர்பந்திக்கும். முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானே வெட்டிக்கொள்ளும். அச்சூழலில் சமூக அமைப்பை மாற்றுவதற்கான போரட்டமும் பகுத்தறிவுக்கான விழிப்புணர்வும் ஒரு சேர முன்னெடுக்க இயலும். செய்ய வேண்டும் .

“மனிதர்களை இயங்கச் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனத்தினூடே சென்று தீர வேண்டும். அது என்ன வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிதும் சூழ்நிலைகளையே பொருத்திருக்கும்,” என்று எங்கெல்ஸ் கூறினார்.

“ வரலாற்று வளர்ச்சியில் ஆன்மீகத்தின் இயங்கு பாத்திரத்தை புரிந்து கொள்ள இக்கூற்று உதவிடும். சமூக உறவுகள், தேவைகள் மற்றும் நலன்கள் சித்தாந்த மதிப்புகளின் வடிவத்தில், அதாவது கருத்துகள், இலட்சியங்கள், கோட்பாடுகள், நோக்கங்கள் என்ற முறையில் ஈடேற்றமடைகின்றன. பெருந்திரளான மக்கள் புரட்சிகர சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்திக்கொள்ளும் பொழுது அது பொருளாயத சக்தியாகிறது,” என்றனர் ரஷ்ய தத்துவ ஆசிரியர்கள் .

முன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியதுபோல, இப்போது கூட உலகில் வெறுமே 30 நாடுகள் மட்டுமே ஏதோ ஒரு வகையில் மதத்தோடு அரசைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. 166க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏதோ ஒருவகையில் மதம் அரசிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 22 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு வகையில் நாத்திகத்தை நெருங்கியுள்ளனர். 11 விழுக்காட்டினர் நாத்திகராகவே அடையாளப்படுத்துகின்றனர் .
எனவே நம்பிக்கை வலுக்கிறது .காலந்தோறும் சில கருத்துகள் அழிகின்றன; சில மாறுகின்றன; சில புதியனவாகத் தோன்றுகின்றன. வரலாற்றுப் பொருள் முதல்வாத நிலையிலிருந்து நோக்கும்பொழுது கருத்துகள் பிறத்தலும் மாறுதலும் அழிதலும் பொருளுற்பத்தி நிலைமைகளிலும் உறவுகளிலும் எழும் மாற்றங்களையொட்டியே நிகழ்கின்றன .எடுத்துக்காட்டாக , முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்ட நிலையில்தான் ஜனநாயகக் கருத்துகளும் சோஷலிசக் கருத்துகளும் மிகத் தெளிவாகப் பிறந்தன. புதிய பௌதீக நிலைமைகளின் ஆதாரத்தில்தான் புதிய கருத்துகள் பிறக்க முடியும் . பழைய கருத்துகள் சிலவும் கூட தொடர்ந்து ஒரு பங்கை வகிக்கும். மாறாதது எதுவும் இல்லை .

“ கம்யூனிசம் ஒரு நம்பிக்கை சார்ந்த கோட்பாடல்ல ;மாறாக அது ஒரு இயக்கம். அது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதில்லை; மாறாக நடப்பு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்பார் எங்கெல்ஸ். ஆம். நடப்பு உண்மைகளில் காலூன்றி சமூக மாறுதலுக்காக அர்ப்பணிக்கும் ஒரு பேரியக்கமாக கம்யூனிசம் வலுப்படும் சூழலில், மக்களை வென்றெடுக்க முடியும். கம்யூனிசக் கனவு கைக்கூடும்.

“ உலகத் தொழிலளர்களே! ஒன்றுபடுங்கள்! இழக்கப் போவது விலங்குகளே! எதிரே தெரியுது பொன்னுலகம்.” -கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த அறைகூவல் காலம் கடந்தும் எங்கும் உயிர்த்துடிப்புடன் ஒலிக்கிறது.

நூறு கேள்வி பதிலுடன் உரையாடலை நிறைவு செய்கிறேன்.இதன் பொருள் உரையாடலும் விவாதமும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல; இங்கு இவ்வளவுதான் சாத்தியம் . அவ்வளவே. உரையாடலை, விவாதத்தை வேறுவேறு தளங்களில் நாம் தொடர்ந்துகொண்டே இருப்போம். ஆம்  
அறிவைத் தேடிக்கொண்டே இருப்போம்!” “அநீதியை எதிர்த்துக் கொண்டே இருப்போம்!”

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 17-04-2016


நாத்திகம் வேர்பிடிக்கவில்லையா ?

Posted by அகத்தீ Labels:நாத்திகம் இங்கே வேர் பிடிக்கவில்லையா?

சு.பொ.அகத்தியலிங்கம்.


சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ?
இந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே? சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் ?

மாற்றுக் கருத்துகள் கூறுவோரைப் பார்க்க மாட்டேன் என்று கண்களையும், மாற்றுக் கருத்துகளைக் கேட்க மாட்டேன் என்று காதுகளையும், மாற்றுக் கருத்துகள் பற்றிப் பேச மாட்டேன் என்று வாயையும் மூடிக்கொள்வோரை விட, இப்படி விவாதிக்க வருவோர் சிந்தனைகள் வளம் பெற உதவுகிறவர்களே. ஆகவே, அவர்களிடமிருந்து ஒரே விதமான கேள்விகள் வரினும் விளக்கமளிப்பது மார்க்சியர்களின் கடமையே.

சோஷலிசம் , கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ?
சுற்றிச் சுற்றி இது ஒரு அந்நிய தத்துவம் என்று கோடு போட்டு, இந்த மண்ணில் இது முளைக்காது எனச் சொல்வது இந்தத் தத்துவத்தின் எதிரிகளுடைய ஒரு உத்தி. அது இருக்கட்டும், நம் தமிழ் நாட்டில் புரட்சி, அம்மா, மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட பல சொற்கள் படும்பாட்டைப் பார்த்தபின்னும் இப்படி ஒரு கேள்வியா ? கம்ப்யூட்டர், லேப் டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை ? பெயர்ச் சொல்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன? எந்தச் சொல்லால் விளிப்பது என்பதற்கு முன்னால் அவற்றின் உட்பொருளை அறிவது அவசியமல்லவா ?

முதலாளித்துவம் மூர்க்க லாபெவெறியோடு நிலம் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றை சிலரிடம் குவித்து ஏகபோகமாக்குகிறது. அவர்களின் சொத்தைப் பாதுகாக்க அரசு இயந்திரம் முழுதாய் முடுக்கி விடப்படுகிறது . உழைப்பாளி மக்கள் மேல் ஒடுக்கு முறை ஏவப்படுகிறது . இதற்கு துணையான கருத்தோட்டமும் ஒழுக்க விதிகளும் சமூகச் சட்ட மாக்கப்படுகிறது. கேள்வி கேட்போரும் எதிர்ப்போரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சமூகத்தின் மொத்த செல்வத்தின் பெரும் பகுதி குவிய; பெரும்பாலான மக்கள் வறுமைப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளி பெருகுகிறது. வறுமையும் வேலையின்மையும் வாட்டி வறுக்கிறது. போரும் மோதலும் தொடர்கிறது .

இந்த முதலாளித்துவ சமுதாயத்துக்கு மாற்றாக சோஷலிசம் முன் வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்திக் கருவிகளான தொழிற்சாலை சுரங்கம் முதலியன அரசுக்குரியதாகிறது. லாபவெறிக்கு கடிவாளம் போடப்படுகிறது. நிலக் குவியல் உடைக்கப்பட்டு பரவலாக்கப் படுகிறது. உணவும் உறைவிடமும் வேலையும் கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் உத்திரவாதப்படுத்தப்படுகிறது.ஏழை பணக்காரன் இடைவெளி ஒழிக்கப்படுகிறது; மாறாக சக்திக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் நடைமுறைக்கு வருகிறது. இங்கு அரசு என்ற அடக்குமுறைக் கருவி தொடரும்; ஆனால் முன்பு முதலாளிகள் நலன் காக்க உழைப்பாளிகளை ஒடுக்கியதற்கு மாறாக உழைப்பாளிகள் நலன் பேண முதலாளிகளை அடக்கும். உலகப் போருக்கு அல்ல உலக சமாதானத்துக்கே முன்னுரிமை. இன்னும் சொல்லலாம்.

இடம் கருதி இதோடு நிறுத்துகிறோம். இவைவெல்லாம் ஈயடிச்சான் காப்பியாக எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக அமையாது. அமைக்கவும் இயலாது. அந்தந்த மண்ணிற்கேற்ப ஆங்காங்குள்ள சமூகச் சூழல், சமூகத் தேவை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அக, புற சூழல் இவையொட்டி நாட்டுக்கு நாடு கூடுதலாகவோ குறைவாகவோ அமலாகும். இதனைக் குறிக்கும் சரியான சொல் சோஷலிசம் என்பதே. இதே உணர்வோடு சமதர்மம் என்ற சொல்லைச் சொன்னாலும் அட்டியில்லை.

மாறாக கம்யூனிசம் என்பது இதனினும் உயர்ந்த கட்டம். இன்னும் எங்கும் சோதிக்கப்படவில்லை. கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர் சொத்துரிமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவாக இருக்கும். தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் உழைப்பர். அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வர். இங்கே அடிமையும் கிடையாது எஜமானனும் கிடையாது. சுரண்டுபவரும் இருக்கமாட்டார். சுரண்டப்படு வோரும் இருக்கமாட்டார். ஒடுக்குவோரும் இருக்கமாட்டார் ஒடுக்கப்பட்டோரும் இருக்கமாட்டார். உடையோரும் இல்லாதோரும் இல்லாத - ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதிக்கிற =- அரசு என்கிற அடக்குமுறை கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற ஒரு பொன்னுலகம் அது. அந்த லட்சிய யுகத்துக்கு கம்யூனிஸம் என்று பெயர். இதனை பொதுவுடைமை என விளிக்க விரும்பினும் இதே உணர்வோடு விளிப்பின் நமக்கென்ன கசக்கவா செய்யும்?

“தனிநபராட்சி, அரசியல் சட்டரீதியான மன்னராட்சி, குடியாட்சி ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களே; இந்த வடிவங்களில் ஒவ்வொன்றும் அதன் வர்க்க உள்ளடக்கத்தின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் ஊடே கடந்து செல்கிறது என்று வரலாற்றின் இயக்கவியலில் உள்ளது.ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கான இடை மாற்றம் தன்னளவில், புதிய புறத்தோற்றத்தின் கீழ் உள்ள முந்தைய சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதில்லை,” என்பார் லெனின்.

ஆம். உண்மை அதுவே. வரலாற்றில் முதல் முறையாக சுரண்டும் வர்க்கத்தைக் கீழே தள்ளி உழைக்கும் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலில் உடகார வைத்தது சோஷலிசப் புரட்சியே. இதுதான் அதன் உள்ளடக்கத்திலேயே மிக முக்கியமானது. வர்க்க வேறுபாட்டை சோஷலிசம் முற்றாக ஒழித்துவிடாது, ஆயின் உழைக்கும் வர்க்க மேலாண்மையை நிறுவும். சோஷலிச சமுதாயத்தின் முக்கிய மரபணு இதுவே. இதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாய் அடக்கியும் சுரண்டியும் ஆளும் வர்க்கமாய் இருந்த சுரண்டும் வர்க்கம் தன் வீழ்ச்சியை இழப்பை தாங்கமுடியாமல் வஞ்சகம், சதி, கலகம் இவற்றின் மூலம் சோஷலிச சமூகத்தை அழித்தொழிக்க முயல்கிறது. சோவியயூனியன் உள்ளிட்ட சில இடங்களில் வெற்றியும் கண்டிருக்கிறது. எனினும் சோஷலிசத்தின் மீதான அவதூறுகளையும் தாக்குதலையும் முதலாளித்துவம் தொடரவே செய்கிறது.

கம்யூனிச சமுதாயமோ வர்க்க பகைமையே இல்லாத - வர்க்கங்களையே இல்லாமல் செய்துவிடும் புதிய சமூகம். அனைவரும் அனைத்திலும் எல்லாவிதத்திலும் சமம். வறுமையைப் பங்கு போடும் சமூகம் அல்ல. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றால் பெருகும் வளத்தினை எல்லொரும் தேவைக்கு ஏற்ப துய்க்கவும் - அதற்காக தன் சக்திக் கேற்ப உழைப்பை நல்கவுமான ஒரு புதுயுகம் .
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றறியேன்” என்கிற கனவு அப்போதே மெய்ப்படும். அந்தப் பொன்னுலகம் நம் கனவாகவும் லட்சியமாகவும் மட்டுமே இருப்பினும், எதிர்காலச் சந்ததியினர் வசப்படச் செய்வர் என்கிற சமூக அறிவியல் நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துவோம்!

மேலும் அறிய , ஆர். பார்த்தசாரதி எழுதிய “மார்க்சியம்- எதிர்காலம்” உட்பட ஏராளமான நூல்கள் நம்முன் குவிந்து கிடக்கின்றன.சரி! இப்போது சோசலிசம்,

கம்யூனிசம் எனும் வார்த்தைகளை நீங்கள் ஏற்பதும் மாற்றுவதும் உங்கள் கையில். அதே சமயம் மார்க்சியம் ஒரு மண்ணுக்கோ, ஒரு இனத்துக்கோ உரிய தத்துவம் அல்ல; உலகம் முழுமைக்குமான சமூக விஞ்ஞானம். மின்சாரமும் மார்க்சியமும் இன்றி உலகில் மெய்யான விடியல் கிடையவே கிடையாது .
இந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே? சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் ?
ஒரு நாட்டைப் பற்றிய சித்திரம் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தால்தான் உருவாக்கப்படும் . இங்குள்ள ஆளும் வர்க்கமும் இங்குள்ள பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் உருவாக்கிய மாயைகள் பல. இந்தியர்கள் எல்லோருமே புலால் மறுப்பாளர்கள், மரக்கறி உணவுப் பழக்கம் மட்டுமே உள்ளவர்கள் என்றே வெளிநாட்டுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. உண்மை என்ன? இங்கு மிகச் சிறுசதவீதத்தினரே புலால் மறுப்பாளர். பெரும்பகுதியினர் புலால் உண்போரே. அது போல் கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமுமே இந்தியக் கலை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டையும் விரும்புவோர் இங்கு மிகச் சொற்பமே. பெரும்பாலோர் பல்வேறு நாட்டார் கலைகளையே விரும்புகின்றனர். இதுபோல் இந்தியாவைப் பற்றி ஆளும் வர்க்கம் கட்டமைத்திருக்கும் பொய்மைகள் அநேகம். அதில் ஒன்றுதான் இந்தியா ஆன்மீக நாடென்பதும். இந்தியாவை உலகமே ஆன்மீக பூமியாகப் பார்க்கிறது எனத் தொடர்ந்து நம் காதில் பூ சுற்றப்படுகிறது. இந்தியா மிகவும் பின் தங்கிய நாடு. குறைந்த கூலிக்கு கொள்ளையடிக்கலாம். கனி வளங்கள் ஏராளம். விருப்பம் போல் வேட்டையாடலாம். இங்கு மூட நம்பிக்கைகள் அர்த்தமற்ற சடங்குகள் அதிகம்... இப்படித்தான் உலகம் நம்மை புரிந்து வைத்திருக்கிறது. இதனை மாற்றுவதே முற்போக்காளர் கடமை.

தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, அருணன், தேவ. பேரின்பன் உள்ளிட்ட பலர் எழுதிய நூல்கள் விரிவாக நம் தத்துவ வேர் ஏதோ ஒரு வகையில் கடவுள் மறுப்பு சிந்தனை என்பதை அடையாளம் காட்டுகின்றன. ஆழமாக நிறுவுகின்றன.நா. வானமாமலை இப்படித் தொகுத்துக் கூறுவார்:

1. இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.
2. நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சியம்தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திக வாதத்தை தருக்க நிலையில் இருந்து , கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்வைச் சுட்டிக் காட்டுகிறது.
3. இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையிலும் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்கவாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் .

“ இந்திய நாத்திகவாதிகள் மிகப்பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையிலேதான் இருந்தன. எனவே அறிவியலின் இயற்கை விதிகளைப் பயன்படுத்தித் தங்கள் நாத்திகவாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு , டார்வினது பரிணாமக் கோட்பாடு , புதிய அணுக்கொள்கை , வேதியல் மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தன. ஆயினும் விஞ்ஞான சோஷலிசக் கொள்கையின் மூலவர்களுக்கு , பிற்கால நாத்திகர்களின் நிலை கூட திருப்தி அளிக்கவில்லை .அவர்கள் இயக்க இயல் பொருள்முதல்வாதம் , வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சிந்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர்தான், நாத்திகம் சிந்தனைப் போக்கில் அதற்குரிய ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.”

மார்க்சிய தத்துவம் குறித்து இக்கேள்வி பதில் தொடரில் முன்பே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெரியார் சாதி மறுப்பில் தொடங்கி - சாதியைக் காப்பாற்றும் மதம் - மதத்தை போதிக்கும் புராணாங்கள் சடங்குகள் - இவற்றின் அடிப்படையான கடவுள் மறுப்புக்கு வந்து சேர்ந்தார். பின் பிசிறில்லாமல் கடவுள் மறுப்பில், மத மறுப்பில் உறுதி காட்டினார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோ அறிவியல் துணை கொண்டும், மார்க்சிய அணுகுமுறையோடும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
கருத்து மோதல்கள் இருப்பினும் தன் ‘குடியரசு’ ஏட்டில் சிங்காரவேலர் தொடர்ந்து எழுத பெரியார் இடம் கொடுத்தார்.சார்வாகர் தொடங்கி சிங்காரவேலர், பெரியார் எனத் தொடரும் இந்திய - தமிழக பகுத்தறிவாளர் படை இன்னும் வீரியமாகவே இருக்கிறது . பெரியார் என்கிற பெயரே இந்துத்துவ வெறியர்களுக்கு அலர்ஜியாக - ஒவ்வாமையாக இருப்பது இதனால்தான். இப்படை தோற்காது, மேலும் மேலும் முன்னேறவே செய்யும்.

(அடுத்த இதழில் இத்தொடர் நிறைவடையும்)

வண்ணக்கதிர் , தீக்கதிர் , 07 – 04-2016


உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட .......

Posted by அகத்தீ Labels:


உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட...


சு.பொ.அகத்தியலிங்கம் .

“பாட்டுத் தொழிலிலே மனதை வையடா / தீயைப் பிசைந்து கவிதை செய்யடா!” என தன் கவிதையில் சொன்னவன் மட்டுமல்ல ; அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி ஆம் பாட்டாளி பக்கம் நின்று பாடல் யாத்திடும் பாட்டாளி நவகவி

.“முறையாக எழுதத் தொடங்கி முப்பத் தேழு ஆண்டுகளாக நான் விட்ட உயிர் மூச்சுகளுக் கிடையில் இந்த கவிமூச்சுகளும் கலந்துள்ளன”என தொகையறாவில் நவகவி சொல்வது மிகையல்ல .

“இந்த முன்னுரையை எழுதுவதற்காக அவரு டைய தொகுப்புகளை ஒரு சேர வாசித்த போது மலைப்பு ஏற்பட்டது .கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த பூமியில் ,இந்த நாட்டில் ,இந்த தமிழ் மண்ணில் பொதுவெளியில் நடந்த எல்லாவற்றுக்கும் ஒவ் வொன்றுக்கும் முகம் கொடுத்துப் பாடியிருக்கும் தமிழின் ஒரே கவி நவகவிதான் என்கிற மலைப்பும்வியப்பும் …… ரூப்கன்வரிலிருந்து இடுவாய் ரத்தினசாமி கொலைவரை, பாபர் மசூதி இடிப்பிலிருந்து தொழிற்சங்கங்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வரை, சே குவாராவைப் பாடிய பாடலிலிருந்து கட்சிக்கு மாதமாதம் லெவி தர வற்புறுத்தும் பாடல்வரை என அவர் பாடிக்கொண்டே இருப்பதை  சக படைப்பாளிக்குள்ள பொறாமையுடன் பார்த்தேன்.” என முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை .

“நவகவி எனும் வேப்பமரத்தின் கிளைகளில் உட்கார்ந்து பழந்தின்று வளர்ந்த காக்கை நான்.” என்பதில் பெருமை கொள்ளும் ஏகாதசி 27 தலைப்புகளில் இந்த ஆயிரம் பாடல்களைத் தொகுத்திருப்பது தமிழுக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் செய்துள்ள அருஞ்சேவை .

“ மதுர மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்/ வருஷம் ஓர் கல்யாணமாம் – தெருமேலே/ மாப்பிள்ளை ஊர்கோலமாம் –எங்க / எதுத்த வீட்டுப் பொண்ணு வயசாகி நாளாச்சி / எப்பதான் கல்யாணமாம் – அவ கண்ணில் / எப்பவும் நீர் கோலமாம்!” – கரிசல் கிருஷ்ணசாமி குரலில் இப்பாடல் வரிகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம்.

“ இலைகள் அழுத ஒரு மழை இரவு” இந்தப்பாடலுக்கு உருகாதார் யார் ? இன்றும் மாறாத சமூகச் சித்திரமன்றோ அது . “ அழகைப் பாட ஆயிரம் கவியுண்டு / எங்க ஊர் / அழுக்கைப் பாட ஏடெடுத்தேன் நெஞ்சில் / ஆசைமிகக் கொண்டு” என பிரகடனம் செய்த நவகவி அப்படியே வாழ்ந்து காட்டுவதன் சாட்சி இந்நூல் . இவன் பாடல்கள் வெற்று கோஷமோ வெறும் கண்ணீரோ அல்ல ; அதையும் மீறி ஒரு கண்ணீரின் சீற்றம் .கலையின் புதிய பரிணாமம் .


“ திரும்பிய பக்கமெல்லாம் தேசத்தின் காயங்கள் / திருடரின் கைகுலுக்கும் நீதிகள் நியாயங்கள்” என்ற தொகையறாவுடன் தொடங்கும் ‘’முறையீடு’ பாடல் இன்றைய குரூர யதார்த்தத்தை படம்பிடித்துவிட்டு கவித்துவமாய் – நாட்டார் மரபுபோல் கற்பனையில் நீளும் ; இந்த சோகத்தைக் கேட்டால் ‘ பூக்களும் அரும்புகளும் இடம்பெயரும்’ .’ ‘ மலை குலுங்கி அழும்’ ‘ மேகமாய் மாறி கடல் வான்போகும்’ .

“இந்தப் பக்கம் அடுப்பு; /அந்தப் பக்கம் படுக்க/ ஏதுமில்ல தடுப்பு /எப்படி முத்தம் கொடுக்க’ – யோசிச்சுப் பாருங்க நெஞ்சை சுருக்கென்று தைக்கும் . ‘ எருமைப்பட்டியும் எங்க வீடும்’ என்கிற இந்தப் பாடலில் கடைசியில் சொல்லுவார் “இப்படி வீடு கட்ட – நீ / எதுக்கு திட்டமிட்ட? / மானங்கெட்ட மரக்கட்டயா / எங்கள நினைச்சிப்புட்ட” . கருணாநிதியை ஒரு முறை நள்ளிரவில் கைது செய்த போது படுக்கையறையில் நுழையலாமா என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அத்துணை பேரும் அறிக்கை விட்டனர். மனித உரிமை பற்றி வகுப்பெடுத்தனர். படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே ஒற்றை அறையாய் இருக்கும் ஏழையைப் பற்றி அவர்கள் யோசித்ததில்லை . நவகவி யோசித்தார்.பாடினார். அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது கூவம் கரையோர மக்களை கூண்டோடு பெயர்த்து பெரும்பாக்கத்தில் கொட்டடியில் அடைத்தஜெயலலிதாவின் கருணையை பாராட்டியவர்கள் அந்த எட்டடி குச்சின் அங்கலட்சணத்தை சொன் னாரா ? இந்தப்பாடல் தீர்க்க தரிசனமாய் ஒலிக்கிறது. சென்னையிலும் எருமைப்பட்டி நிலைதான்.

“ உலகம் பிறந்த கதை தெரிந்தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா ? / கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா” என்கிற நவகவி “ அவனே எனது கதாநாயகன்” என்கிறார். உழவின் மேன்மையை உழவரின் வலியை பல பாடல்களில் சொல்லி அறச்சீற்றம் கொள்கிறார் .

“ மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம் நாங்க / மனுஷன் மட்டும் தீண்டக் கூடாதா ?” என எரிஈட்டி வீசும் கவிஞரிவர் . “ வேத கால பிராமணர் வீட்டுக்கறி / ரிஷிபத்தினி சமைச்ச மாட்டுக்கறி /சாப்பிடக் கூடாதாம் எப்படிச் சரி / சனாதனிகள் மூஞ்சியில பார் அடுப்புக்கரி” இப்படி இவர் பாடாத பொருள் ஏது ?

“ மனிதன் இருக்கும் இடமே அழகின் வாழிடம்! / மனிதன் இல்லா இடமோ வெறுமை பாழிடம்! ” என்பது கவிஞரின் முடிபு ; பாடல் நெடுக அதன் புன்னகை விரிப்பு .
காதலையும் உழைப்பையும் போற்றுவதே மார்க்சியம் . மார்க்சியத்தில் தோய்ந்த நவகவி போற் றாமல் இருப்பாரோ ? காதலைப் பாடும் கவிஞரின் வார்த்தைகளில் மண்ணின் வாசமும் மனசின் நேசமும் ஒட்டிக்கிடக்கிறது . “கரிசக் காட்டுச் செழுமையாட்டம் / கன்னம் தெரிந்தது – அவள் / விதைத்த சோளம் சிரிப்பில் வந்து / விந்தை புரிந்தது / அது – நாணல் போல குனிந்து குழையாத காதல் / மூங்கில் போல நிமிர்ந்து வளர்கின்ற காதல்.” அடடா ! இதைவிடவா இலக்கிய நயம் சொட்டணும் .

நீங்கள் சந்திக்கிற – பேசுகிற – எழுதுகிற ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றியும் நெக்குருகி பாடியிருக்கிறார் நவகவி . நீங்கள் அதனை உங்கள் பேச்சில் எழுத்தில் கலந்து தந்தால் மக்கள் இதயத்தை ஊடுருவுமே ! ஏன் செய்யக் கூடாது ? ; இவரது இலக்கியம் புத்தக அலமாரியில் அழகு பார்க்க அல்ல ; உங்கள் பரப்புரைக்கு அழகும் ஆழமும் சேர்க்க என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது :தொடர்ந்து விடாது பயன்படுத்தினாலே படைப்பின் நோக்கம் நிறைவேறும்.

சிறுகதை எழுத்தாளர்களே ! குட்டிக் கதை சொல்லிகளே ! வாழ்வின் நாட்டின் நீள அகலங்களை ஆழங்களை காயங்களை படைப்பாக்குங்கள்! நவகவி 1000 போல் அவையும் எம் கைவாளகும் ! இதைவிட பெருவிருது உமக்கு வேறேது ?


நவகவி 1000 பாடல்கள்,ஆசிரியர் : கவிஞர் நவகவி,தொகுப்பு : ஏகாதசி,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை,சென்னை- 600 018.பக் :1072 , விலை : ரூ .745.

நன்றி : தீக்கதிர் . புத்தகமேசை , 07-2016.


மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா ?

Posted by அகத்தீ Labels:மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா?

சு.பொ. அகத்தியலிங்கம்

தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக்கொண்டதே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா?
சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே
இறுதியானது என்பது சரிதானே?

 “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ?
தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக் கொண்டனவே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா ?

அல்பேனியா, கியூபா போன்ற நாடுகளில் செங்கொடி பறக்கத் துவங்கியபோது அவை நாத்திக நாடுகளாகவே தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஆனால் சோவியத் யூனியன் தகர்விற்குப் பின்னால் அந்த நாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளிலும் மக்களின் மதநம்பிக்கை மற்றும் வழிப்பாட்டு உரிமையை அங்கீகரித்துவிட்டன.

சோவியத் யூனியன் பிறந்த போது லெனின் அதனை நாத்திக நாடாக அறிவிக்கவில்லை; ஆயினும் தீவிர பிரச்சாரம் மூலமு, சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் , கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தைத் தொடர்ச்சியாகப் போதிப்பதன் மூலமும் ஒரு பகுத்தறிவுப் பேரொளி சுடர்விடச் செய்தார்.

மக்கள் சீனமும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது .ஆனால் கலாச்சாரப் புரட்சி இதனை மாற்றிப் போட்டது. ஒரு பத்திரிகையாளர் தூதுகுழுவில் ஒருவனாக நான் சீனம் சென்றிருந்தபோது ஒரு புத்தவிகாரைப் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது. அந்த புத்தவிகார் கலாச்சாரப் புரட்சியின்போது ஒரு தொழிற்சாலையாக மாற்றப்பட்டதாகவும், பின்னர் கலாச்சாரப் புரட்சி விலக்கிக்கொள்ளப்பட்டபோது மீண்டும் அது பழையபடி புத்தவிகாராக மாற்றப்பட்டதும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது; அதற்கான தடயங்களும் இருந்தன.

ஆக , இப்போது எந்த நாடும் தன்னை நாத்திக நாடென அறிவித்துக்கொள்ளவில்லை. எனினும் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளில் 166 நாடுகள் மதச்சார்பின்மையே அரசின் கோட்பாடாக, அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. மீதமுள்ள இஸ்ரேல், ஈரான், இராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளில் மட்டுமே மதம் அரசமைப்போடு நேரடியாக ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செய்கிறது.

வங்கதேசம் உருவான போது மதச்சார்ப்ன்மையே அதன் அரசியல் முகமாக இருந்தது . இடையில் முஸ்லீம் நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது . தற்போது மீண்டும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க மாணவர்களும் இளைஞர்களும் போராடுகின்றனர் .கானா, னைஜீரியா,அர்மேனியா, பிஜி, மெசிடோனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் ,உள்ளிட்ட சில நாடுகளில் பெரும்பான்மையோர் மதநம்பிக்கையாளராக உள்ளனர் .
அதே சமயம் சீனா, ஜப்பான், செக்குடியரசு, அல்பேனியா, பிரான்ஸ்,தெகொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்டிரியா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாண்டு ரஷ்யா,வியட்நாம், ஸ்பெயின், உக்ரெயின், இத்தாலி,ஸ்வீடன் , பெல்ஜியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மத நம்பிக்கையற்றோர் மிகுதியாக உள்ளனர் .

மதமில்லா நிலையானது - இயற்கைச் சமயவாதம், உலோகாயதம், உறுதியிலாவாதம், மத மறுப்பு, ஐயுறல்வாதம், ஏதோவொன்றெனும் சிந்தாந்தம், மதமில்லா ஆன்மிகம், சுதந்திரச் சிந்தனையியல், இறைமறுப்பியல், கடவுள் பற்றிய கவலையிலாவாதம், நம்பிக்கையின்மை, இறை சாரா பேரண்டவாதம், சமயச்சார்பிலா மானுடம், மதமில்லா இறைமை, பேரண்டமே கடவுளெனும் தத்துவம், படைத்தபின் பேரண்டமாய் மாறிவிட்ட கடவுள்வாதம் என - உலகெங்கும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் உலக மக்களில் 33 சதவீதத்தினர் நாத்திகர்கள் அல்லது மதம் சாராதவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 11 சதவீதத்தினர் நாத்திகர்கள், 22 சதவீதத்தினர் மதம் சாராதவர்கள்.

 [Irreligion, which may include deism, agnosticism, ignosticism, antireligion, atheism, skepticism, ietsism,spiritual but not religious, freethought, antitheism, apatheism, non-belief, pandeism, secular humanism, non-religious theism, pantheism and panentheism, varies in the different countries around the world. In a 2014 poll 33% of the world population were estimated to be atheist or not religious, splitting into 11% atheists and 22% not religious. ]

ஆக, மதம் இன்னும் சாகவில்லை எனினும் மதமறுப்பாளர் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே போகிறது என்பதே கண்கண்ட உண்மை .

சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே இறுதியானது என்பது சரிதானே?
சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் தடம் மாறிய பின்னணியில், இனி சோஷலிசத்திற்கு எதிர்காலம் இல்லை, முதலாளித்துவமே இறுதியானது என்றனர் சில அறிஞர்கள்.

அப்போது சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பசவபுன்னையா ஒரு சவால் விடுத்தார். வறுமையை, வேலையின்மையை, ஏற்றத்தாழ்வை முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியுமா என்பதே அவரின் கேள்வி. முடியாது என்பதே உறுதியான பதில். அப்படியானால் சோஷலிசத்தின் தேவை முடியவில்லை. மீண்டெழும் என்பதே பதில் .

ஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்கு எதிராக 99 சதவீத மக்கள் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் செல்வ மையமான வால் ஸ்ட்ரீட் போராட்டம் அதனை உறுதி செய்தது .

முந்தைய வேறெந்த சமூக அமைப்போடு ஒப்பிடினும் முதலாளித்துவம் முற்போக்கானதே. எனினும் அது அடிப்படையில் முதலாளி தொழிலாளி என இரு பெரும் முகாம்களாய் உலகைப் பிரித்துவிட்டது. உற்பத்திக் கருவிகளும் , பெரும் செல்வமும் தம் கையிலே கொண்ட முதலாளிவர்க்கம் மக்கள் தொகையில் மிகச் சொற்பம் ஆனால் அதிகாரமும், செல்வமும் அவர்கள் கையில்தான். மறுபுறம் மக்கள் தொகையில் பெரும்பாலாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் கையில் செல்வமும் இல்லை . உற்பத்திக் கருவிகளும் இல்லை. வறுமையும் . துன்பதுயரமுமே மிச்சம். இந்த ஏற்றதாழ்வு சமூகத்தின் பெருங்கேடு. இதனை வீழத்தி சமத்துவமான புதுயுகம் மலர்வது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவை. ஆனால் , அது அவ்வளவு எளிதல்ல .

வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகளுடனான பழைய முதலாளித்துவ சமுதாயம் இருந்த இடத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியானது அனைவரது சுதந்திரமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமைப்பை நாம் பெறுவோம்என 1948ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் தெளிவாகச் செய்த பிரகடனமே இன்னும் உலகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கான நெடிய போராட்டம் தொடர்கிறது. இதனை மடைமாற்றவே மத அடிப்படைவாதமும் , சாதி , இனப் பகைமையும் கொம்பு சீபப்படுகின்றன. விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.முந்நூறாண்டுக்கு பேல் பல நெருக்கடிகளை யுத்தங்களைத் தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் பெரும் மூச்சுத்திணறலோடு இருந்துகொண்டிருக்கிறது. இவற்றோடு ஒப்பிடும் போது சோஷலிசத்தின் வயது மிகக்குறைவு; தனிமனிதன் நூறாண்டு வாழ்வு என்பது மிகப்பெரிது. ஆனால் வரலாற்றில் நூறாண்டு என்பது மிகக்குறைவு.

முதலாளித்துவமும் தட்டுத்தடங்கலின்றி முந்நூறு ஆண்டுகளைக் கடக்கவில்லை. யுத்தம், பிறநாடுகளை அடிமைப்படுத்தியது; – கொள்ளையடித்தது; இவை மூலமே முதலாளித்துவம் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் யுத்தங்களில் சோஷலிச நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அதன் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று. முன்மாதிரி இல்லாத ஒன்றில் சறுக்கல்களும் தடுமாற்றங்களும் இயல்புதானே! முதலாளித்துவ நாடுகளின் சூழ்ச்சியும் ஆட்சியாளர் செய்த தவறுகளும் சோஷலிசத்துக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிவிட்டது. எனினும் இதிலிருந்து பாடங்கற்று சோஷலிச சக்திகள் மீண்டெழும்.

மின் விபத்து ஏற்பட்டதால் மின்சாரமே பிழையானது என்பரோ? மின்சாரமும், மார்க்சியமும் இல்லாமல் இனி உலகம் உய்ய முடியாது. தாமதமாகலாம். தவிர்க்க முடியாது.முதலாளித்துவம் வீழ்த்தப்படுமா? மதம் , கடவுள் , சாதி இல்லாத சமுதாயம் உருவாகுமா? சமத்துவம் பூக்குமா? அரசும் அடக்குமுறையும் இல்லாத சமூகம் மலருமா? பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் நிரந்தர விடுதலை எப்போது? இறுதிப்பகுதியில் பேசுவோம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ?
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே / அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமேஎன்றார் தாயுமானவர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மிகவும் உன்னதமானது. மிகவும் பரந்த உள்ளம். “பராபரமேஎன கடவுளை நோக்கிச் சொன்னதாலேயே நமக்குப் பிடிக்காமல் போகாது .

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்கிற பெருங்கனவோடு நமக்கும் உடன்பாடு உண்டு. “நாமார்க்கும் குடியல்லொம் நமனையஞ்சோம்” “மற்றுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மாஇப்படியான மனதைக் கவ்வும் வரிகளும் ; அது சொல்லும் பொதுமை நலமும் எக்காலத்தும் மனிதர்களின் மனதை விசாலப்படுத்தும். ஆன்மிகம் சார்ந்த சான்றோர் சொல்லினும் அதில் உள்ள பொதுமைக் கருத்துக்காக இது போன்றவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதில் பிழையே இல்லை.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே / சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே / ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் / அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவேஎன வள்ளலார் சொன்னதையும் கூடவே அசை போடவேண்டும். அதுதான் முக்கியம்.

சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல / தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம் / விதவித மானவான வேறுநூல்களும் / வீணான நூல்களே என்று ஆடு பாம்பே!” எனப் பாம்ப்பாட்டிச் சித்தரின் சீற்றம் இன்றும் தேவைப்படுகிறதே !

பிறப்பிலே சாதி மதத்திலே சாதி / பேசிடும் மொழியிலே சாதி /நிறத்திலே சாதி நாட்டிலே சாதி / நீதியில் நிறையில் சாதி / அறத்திலே சாதி ஆலயச் சாதி / அழுகிய பிணத்திலும் சாதி / புறத்தகஞ் சாதி நாற்றமும் சாதி எங்கும் / புங்கவ அழித்தல் நிற்கெளிதோஎன நெஞ்சுடைந்து தமிழ்த் தென்றல் திரு.வி.. வேதனைப்பட்ட நிலை மாறிவிட்டதோ இன்று ?இப்படி நிறையவே தொகுக்கலாம் இடம் போதாது .
மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு மரபுஎனும் நூலில் இளங்கோவன் சொல்லுவதை இங்கு நினைவு கூர்தல் சாலப்பொருந்தும்:

காலந்தோறும் தமிழ்ச்சமூகம் வைதீகத்திற்கு எதிரான வேலைத் திட்டத்தை தனக்கானபாதையாக வகுத்துக்கொண்டு போராடி வந்துள்ள நிலையில் இன்று அதனை மிகப் பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது . இதற்கு முற்போக்கு தமிழ் மரபுகளை நினைவு படுத்துவதும் மக்களிடையே பரப்புரை செய்வதும் அவசியமாகிறது.”

அதே நேரம் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு செய்தி உண்டு. நல்லெண்ணத்தால் மட்டுமே நல்லது விளையாது; மாறாக எது நல்லது அதற்கு எது தடை , ஏன் தடை என்பன போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளே நுழையும் போதுதான் திரை அகலும் . தெளிவு பிறக்கும்

.“உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறதுஎன்றார் காரல் மார்க்ஸ். இந்த வாழ்க்கை அவலங்களுக்கான காரணத்தைத் தேடுவதும்; அதற்கு எதிராக போராடுவதுமே நாம் நினைப்பது போல்எல்லோரும் இன்புற்றிருக்கவழியாகும் . வெறும் வார்த்தைகளாலோ, இறைவனிடம் மண்டியிடுவதாலோ எதுவும் மாறாது என்பதே வாழ்க்கை அனுபவம் நேற்றும் , இன்றும் .

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 03-04-2016