#பறவையும் நாமும்

Posted by அகத்தீ Labels:






#பறவையும் நாமும்



இரவின் வாசனை மெல்லப் பரவுகிறது
கதிரவன் மேற்கு நோக்கி விரைவதாய்
தோற்றம் காட்டுகிறான் நமட்டுச் சிரிப்புடன்
என்ன அவசரமோ தெரியவில்லை பறவைகளுக்கு
வேகவேகமாய் கூட்டம் கூட்டமாய் விரைகின்றன
இரவு முழுதாய் விரிவதற்குள் தம் இருப்பிடம்
போய்ச் சேரும் அவசரம் அவைகளுக்கு இருக்குமோ ?
காட்டையே நாம் அழித்துக் கொண்டிருப்பதை அறியுமோ ?

கிழக்கிலே கதிரவன் தோற்றம் காட்டுகிறான்
பூமி சுழல்வதை வசதியாய் நாம் மறந்துவிட்டோம் !
இரவு நிம்மதியாய்த் தூங்கியதோ ? கனவு கண்டதோ ?
எந்தப் பறவையும் தூக்கமாத்திரை சாப்பிட்டதாய்ச் செய்தி இல்லை
எதையும் சட்டை செய்யாமல் அதே ஒற்றுமையோடு பறவைகள்
பறந்து வருகின்றன இரைதேடவோ ?நம்மை நலம் விசாரிக்கவோ ?
சுதந்திரச் செய்தியைச் சொல்லியபடி வட்டமிடுகிறது
நாம் ஏமாந்த கதை அவைகளுக்குத் தெரியாதுதானே ?


சு.பொ.அகத்தியலிங்கம்.

ஓர் உண்மை நிகழ்வு ஓர் உளவியல் பார்வை ஓர் அபாய எச்சரிக்கை

Posted by அகத்தீ Labels:







ஓர் உண்மை நிகழ்வு
ஓர் உளவியல் பார்வை
ஓர் அபாய எச்சரிக்கை

எம் .ஜி. ஆர் மறைந்த போது சென்னை அண்ணா சாலையில் கடைகள் சூறையாடப்பட்டன . மறுநாள் நாளேடுகளில் அப்படங்கள் வெளியாயின . அந்த அண்ணா சாலையிலும் கூவம் ஓரமும் வாழும் அடித்தட்டு மக்களில் ஒரு சிறு பகுதியினர் கடைகளில் புகுந்து கொள்ளை அடித்துள்ளனர் . ஒருவன் ஒரு கையில் வலது கால் ஷூ இடது கையில் இன்னொரு வலது கால் ஷு , எந்தெந்த பொருள் தேவை ,சரி ,பொருத்தம்  என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது கையில் கிடைத்ததை கைநிறைய வாரி எடுத்தனர் . ஒவ்வொரு படமும் இதையே சொன்னது .

மறு நாள் எல்லோரும் வன்முறை ,கலவரம் , இன்னும் இது போல் மோசமான சித்தரிப்புகளை அள்ளி வீசினர் . ஒரே ஒரு உளவியல் அறிஞர் சொன்னார் . இது வன்முறையோ ,சூறையாடலோ அல்ல .ஆண்டுக் கணக்காய்  அதே இடத்தில் உண்டு ,உறங்கும் அவர்களுக்கு அங்கே ஷோ ரூமில் வைக்கப்பட்ட பொருளெல்லாம் வெறும் காட்சி பொருளாகவும் எட்டாக் கனியாகவுமே இருக்கும் . ஆனால் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை உள்மனதில் இருக்கும் . ஏற்ற தாழ்வான சமூக அமைப்பில் ஏழைகளால் வெறும் கனவு மட்டுமே காண முடியும் . அப்படிப்பட்ட சூழலில் உள்மனக் கொதிப்பு ஏதேனும் ஒரு சூழலில் இப்படி தாறுமாறுக்க வெடிக்கும் . ஆக இது புரையோடிப் போயிருக்கிற சமூக ஏற்ற தாழ்வின் – சமூக அநீதியின் கோப வெளிப்பாடு !

இப்போது நடையாய் நடக்கிற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலையும் இதேபோல் மிகவும் வஞ்சிக்கப்பட்ட நிலைதான் . முறைசாராத் தொழிலாளர் நிலையும் இதுதான் . ஒடுக்கப்பட்ட  - ஓரம் கட்டப்பட்ட - வாழ்வை இழந்து நிற்கிற ஒவ்வொருவர் நிலையும் இதுதான் .ஒன்றல்ல இரண்டல்ல நாற்பது அல்லது ஐம்பது கோடி மக்களின் நிலை இதுவே ! இவர்களில் உள்ளக் குமுறல்  ஒரு நாள் வெடித்துச் சிதறும் போது  நாடு என்ன ஆகும் ? கற்பனை செய்து பாருங்கள் .  “எனக்கு அரசியல் வேண்டாம்  தானுண்டு தன் வேலையுண்டு” என இருக்கும் நடுத்தர மனிதரையும் விட்டு வைக்கது . சூறையாடலும் ,கொள்ளையும் பெருமளவு அரங்கேறும் . எல்லாம் அடித்து நொறுக்கப்படும் . இந்த பேராபத்து நம் தலையின் மீது தொங்கும் கத்தியாய் இருக்கிறது.

ரஷ்யப் புரட்சியில் ஓர் காட்சி இங்கே நினைவுகூரத்தக்கது . லெனின் தலைமையிலான புரட்சிப் படை மாரிக்கால அரன்மனையை சுற்றி வளைத்தது . மக்கள் வெள்ளம் அரன்மனைக்குள் கட்டற்றுப் பாய்ந்தது .போனவர்கள் அரன்மனையின் ஒவ்வொரு பொருளாக சூறையாட ஆரம்பித்தனர் . அப்போது லெனின் தலையிட்டு , “ இனி இது நமது பொருள் .நமக்குச் சொந்தம் .இதனை யாரும் தனிப்பட்ட முறையில் சூறையாடக்கூடாது . நமது அரசு எல்லோருக்கும் உரியதை வழங்கும்.” என உறுதிகூற குண்டூசிகூட திருடப்படாமல் கூட்டம் விடை பெற்றது . புரட்சிகரமான கட்சியும் புரட்சிகரமான தலைமையும் புரட்சிகரமான அரசியல் விழிப்புணர்வும் இதைச் சாதித்தன . [ நேரில் கண்ட ரஷ்யப் புரட்சி ,உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் ஆகிய நூல்கள் வாசிக்கவும்.]

நாளை இந்தியாவில் எம் ஜி ஆர் சாவின் போது நடந்ததுபோல் நடக்க வேண்டுமா ? ரஷ்யப் புரட்சியின் போது நடந்தது போல் நடக்க வேண்டுமா ? விடை , எந்த அளவு மக்களுக்கு வர்க்க அரசியலை போதிக்கிறோம் என்பதைப் பொறுத்தே . வரலாறு தன் சுமையை இப்போது கம்யூனிஸ்டுகள் தோளில் ஏற்றி வைத்து விட்டது .

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.

yuukikkamudiyavillai

Posted by அகத்தீ Labels:


#யூகிக்க முடியவில்லை

மூளையைக் கசக்கி கசக்கி
யோசித்து யோசித்து
சோர்ந்து போகிறேன் ….
இனி என்ன நடக்கும் ?
யூகிக்க முடியவில்லை…..


வெறுப்பின் கருகிய வாடை
குடலைப் புரட்டுகிறது
பாதம் வெடிக்க நடக்கும் மனிதர்களைப்
பார்த்து பார்த்து பதறுகிறது மனது


மோடியின் வாய்ப்பந்தலில்
ஒரு புடலங்காயும் காய்க்காது
காற்றில் நிர்மலா வரைந்த கணக்கு
ஒற்றைப் பருக்கைக்கும் ஆகாது
கனவுக் கோட்டைகளில்
சுல்தான் மோடிஷா சஞ்சரிக்கிறார்

கொரானா பீதியில் உறைந்த மக்கள்
விழித்துப் பார்த்த போது
கொள்ளிவாய் பிசாசு , இரத்தக் காட்டேரி,
விதவிதமாய் பேய் பிசாசு சாத்தான்கள்
எதிர்காலம் இருட்டாய் மர்மமாய்
பேரச்சத்தை உள்ளதில் உசுப்புகிறது

மூளையைக் கசக்கி கசக்கி
யோசித்து யோசித்து
சோர்ந்து போகிறேன் ….
இனி என்ன நடக்கும் ?
யூகிக்க முடியவில்லை…..
 
இந்த அமைதி நிச்சயம்
சமாதானத்தின் அறிகுறி அல்லவே !

சுபொஅ.

corana kalak kanavu

Posted by அகத்தீ Labels:





#கொரானா காலக் கனவு ….

தூக்கமும் துண்டு துண்டாய்
கனவும் அப்படித்தான்
நீண்ட நேரம் தூங்கி வெகுநாளாச்சு
முதுமையின் ஓர் குணமோ இது .


இப்போதெல்லாம் என் கனவில்
நந்தவனம் இல்லை
தென்றல்  இல்லை
தேனிசை இல்லை
கொஞ்சுவதில்லை
மகிழ்ச்சி இல்லவே இல்லை.


அழுகை, பற்கடிப்பு,
ஒப்பாரி, மரண ஓலம்,
பொய், பித்தலாட்டம்.
துரோகம், வஞ்சகம்
சகிக்க முடியாததாய்ப் போகும்
வாழ்வின் நடப்பு
கனவாய் நீட்சி பெறுகிறதோ !!


எப்படியோ
ஒவ்வொரு நாளும்
துப்பாக்கியோடும்
ஆவேசமாய் ஆர்ப்பரிக்கும்
உழைக்கும் தோழரோடும்
முடிகிறது கனவு.
விடிகிறது பொழுது !!!

சுபொஅ.


ஓர் பிரார்த்தனை – ஓர் அசரீரி!

Posted by அகத்தீ





ஓர் பிரார்த்தனை – ஓர் அசரீரி!


 “ ஆண்டவரே ! ஆண்டவரே !
என்னை ஏன் மனிதராகப் படைத்தாய் ?
என்னை ஏன் மனிதராகப் படைத்தாய் ?
சாதியை மதத்தை கட்டி அழும்
மனிதம் செத்த தேசத்தில்
என்னை  ஏன் மனிதராய்ப் படைத்தாய் ?
விலங்காகச் சபித்துவிடு ! விலங்காகச் சபித்துவிடு
சாதி ,மதம் இல்லாத விலங்காகச் சபித்துவிடு !”

 “ பக்தா ! பக்தா ! மூடபக்தா !
உனக்கு வாயிருக்கு அழுகிறாய்
உணர்ச்சி இருக்கு கொதிக்கிறாய்
வெறும் கற்சிலைக்கும் கற்பனைக்கும்
என்ன இருக்கும் ? மூடபக்தா !
எனக்கும் சாதி இல்லை .மதம் இல்லை .
இனம் இல்லை .மொழி இல்லை .தேசம் இல்லை .
இந்த மனிதப் பதர்களிடையே நான் படும்பாடு
தாளம் படுமோ ? தறி படுமோ ?
தற்கொலை செய்து கொள்ளலாம் எனில்
எனக்கு உயிரும் இல்லையே !”

சு.பொ.அகத்தியலிங்கம்.