நாடு முச்சூடும் வேதனை விசும்பல்கள்

Posted by அகத்தீ Labels:


நாடு முச்சூடும் வேதனை விசும்பல்கள்





நாடு முச்சூடும் வேதனை விசும்பல்கள்
நாடாள்வோருக்கோ செவிப்பறை இல்லை
அதிகாரத் திமிரின் ஆணவக் கொக்கரிப்புகள்
மண்டியிடுவோருக்கு பட்டம் பதவிகள்
பேசுவது குற்றம் எழுதுவது குற்றம்
கேள்விகேட்பது குற்றம் நடிப்பது குற்றம்
நகைச்சுவை குற்றம் கவிதை குற்றம்
கட்டுரை குற்றம் முறைப்பது குற்றம்
விழிப்பது குற்றம் எழுவது குற்றம்
வெடிப்புற பேசுவது மாபெரும் குற்றம் !
வீதியில் திரளல் அதினினும் குற்றம்
வெந்ததைத் தின்று விதியை நொந்து
முடங்கி கிடத்தலே ஆட்சியின் விருப்பம்
பசிக்கும் வயிறும் துரத்தும் விலையும்
விரட்டும் வேலையும் ஒடுக்கும் அதிகாரமும்
நரம்பில் பின்னிவளர்ந்த தன்மான முறுக்கும்
மானுடம் போற்றும் விரிந்த மனதும்
ஒவ்வொரு நொடியும் நெஞ்சைக் குடைய
சோம்பிக் கிடப்பதும் அடங்கிஒடுங்குதலும்
ஆகுமோ சொல்வீர் ! ஆனது ஆகட்டும்
அழுது புலம்பி அடங்கி ஒடுங்கி
நடைபிணமாய் வாழ்வது சரியோ ?
வெகுண்டெழுந்து போரிட எழுவதே நியாயம் !
வாழ்வோ சாவோ போர்க்களம் தரட்டும் !

யார் தோழர் ?

Posted by அகத்தீ Labels:


யார் தோழர் ? 







தோழர் உன்னதமான சொல்
அற்புதமான உறவு
யாரை விழிக்கலாம்
கட்சிக்காரரை மட்டுமா ?
அல்ல ..அல்ல
தொழிலாளி
விவசாயி
நடுத்தரவர்க்கம்
உழைப்பாளர்
வியாபாரி
சிறு முதலாளி
அறிவிஜீவி
ஆண்
பெண்
திருநங்கை
திருநம்பி
பாலியல் தொழிலாளி
ஊடகக்காரன்
நடிகன்
நடிகை
கவிஞர்
எம் போராட்டப் பயணத்தில்
ஒரே ஒரு அடி கூடவருகிறவர்
யாரொருவரும் எம் தோழரே !
முதுகில் குத்திவிட்டுப் போகிறவர்
மூஞ்சியில் துப்புகிறவர்
அணைத்துக் கெடுக்கிறவர்
காட்டிக் கொடுக்கிறவர்
யாராயினும்
எம் அணிவகுப்பில்
நிற்கின்ற நொடியில்
எம் தோழரே !
தோழராய் அணைத்துப் பார்
அதன் ருசி அப்போதுதான் தெரியும் !