புரட்சிப் பெருநதி – 29
புயல் வீசிய சொர்க்கம்: பாரீஸ் கம்யூன்
சு.பொ.அகத்தியலிங்கம்.
படையெடுத்து வந்த இராணுவத்தினர் மீது வெந்நீரைக் கொட்டியதாக
குற்றஞ்சாட்டி இருபத்தைந்து பெண்கள் கொல்லப்பட்டதாக
ஒரு பாதிரியார் விவரித்தார்.
“நான் எனக்காக வாதிடப் போவதில்லை; எனக்காக யாரும் வாதிடவும் அனுமதிக்கப் போவதில்லை. நான் புரட்சிக்காரிதான்! செய்தவை அனைத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன். இதில் ஒளிவு மறைவு எதுவுமில்லை; உங்கள் படைத் தளபதிகளைக் கொன்றதாகக் கூறுகிறீர்கள் – ஆம்! நான்தான் கொலை செய்தேன் !பாரீஸ் எழுச்சியைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள் – ஆம்! நான் அதில் பங்கெடுத்துக் கொண்டேன்!”
இப்படி விசாரணைச் சடங்கில் கம்பீரமாக முழக்கமிட்டார் வீராங்கனை லூயிமிச்சேல். 1871 மார்ச் 26-ஆம் நாள், பாரீஸ் கம்யூனிற்குத் தேர்தல் நடந்தது. எல்லோருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. பூர்ஷ்வாக்கள் வசம் இருந்த கவுன்சிலர்கள் கம்யூனில் பங்கெடுக்கவில்லை. ,தொழிலாளிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். தலைமை தாங்கியதோ தொழிலாளிகள். இதுவே பாரீஸ் கம்யூன் அரசு எனப்பட்டது. இதில் புருதோனியவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் என்று பலர் இருந்தனர்.
72 நாட்கள் மட்டுமே நீடித்தது; ஆயினும் சாதனைகள் படைத்தது. அமைப்பு ரீதியாக பாரீஸ் கம்யூனில் இராணுவ கமிஷன், பொதுப் பாதுகாப்புக் கமிஷன், வெளியுறவுக் கமிஷன், நீதிக்கமிஷன், செயல் மேற்பார்வை கமிஷன், தொழிலாளர் நலக் கமிஷன், உணவுக் கமிஷன், கல்விக் கமிஷன், பொது சேவைக் கமிஷன் என்ற வேலைப்பிரிவினை இருந்தது. முந்தி இருந்த பூர்ஷ்வா அரசினைக் கம்யூன் கலைத்தது. நிலையான படை, போலீஸ் ஆகியன அகற்றப்பட்டன. பழைய படைக்குப் பதிலாக தேசியப் பாதுகாப்புப்படை இடம்பெற்றது. பொது பாதுகாப்பினை ஆயுதம் தாங்கிய தொழிலாளிகள் வசம் கம்யூன் ஒப்படைத்தது.
அதிகாரிகள் ஊதியமும், தொழிலாளர்களது ஊதியமும் ஒரே அளவினதாக மாற்றப்பட்டது. பொருளாதாரத் துறையில் பல மாறுதல்களை கம்யூன் கொண்டு வந்தது. பல முதலாளிகள், நிறுவனங்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். இவற்றைத் தொழிலாளிகள் வசமே கம்யூன் ஒப்படைத்தது. முதலாளிகள், தொழிலாளிக்கு அபராதம் விதிப்பதை கம்யூன் தடை செய்தது. அடகுக் கடையில் இருந்த அடகுப் பொருள்கள் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டன.
வீட்டு வாடகை ரத்து செய்யப்பட்டது. மிக மோசமான வீடுகளில் இருந்த தொழிலாளிகள், பாரீஸை விட்டு ஓடிய பணக்காரர்கள் வீட்டிற்குக் குடியேற்றப்பட்டனர். இவை எல்லாவற்றிக்கும் மேலாக, மடாலயங்கள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டன. பிறப்பு, இறப்பு , திருமணப் பதிவு ஆகியவற்றை அரசே மேற்கொண்டது. பள்ளிகளில் மத போதனை தடை செய்யப்பட்டது. இலவச கட்டாயக்கல்வி அளிக்கப்பட்டது. மதகுருமார்கள் கம்யூனை எதிர்த்து வலுவான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாலாபுறத்திலும் எதிர்ப்புரட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இச்சூழலில் கிராமப்புறங்களை வென்றெடுக்க கம்யூனால் இயலவில்லை .
கம்யூன் உருவாக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவர் லூயிவர்லின்; இவர் ஒரு விவசாயியின் மகன். கம்யூன் ராணுவக் கமிஷன் பொறுப்பு இவரிடம் இருந்தது. கம்யூன் தோல்வியடைந்த பொழுது இவரை எதிர்ப்புரட்சியாளர்கள் தெருத்தெருவாக இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர். ஹங்கேரியரான லியோ பிராங்கெல் முன்னணிப் பாத்திரம் வகித்தார். போலந்து நாட்டினரான ஐரோஸ் லாடம் பிரௌவ்ஸ்கி புரட்சிப்படைகளுக்கு ஆலோசகராகச் செயல்பட்டார். லூயிமிச்சல் என்ற பெண் போராளி பெண்கள் படைப்பிரிவினை நிர்வகித்தார். அன்னா புஸ்டோவாய்டோவா என்பவர் “சோஷலிசக் குடியரசும், பாரீஸ் கம்யூனும் வாழ்க” என்று கூறி செங்கொடி ஏந்திப் போர்க்களம் சென்று உயிர்விட்டார்.
கம்யூன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இயங்கியது. வர்க்க எதிரிகள் சும்மா இருப்பரோ? வெர்செய்ல்ஸ் என்ற இடத்தில் பூர்ஷ்வாக்கள், சிறு முதலாளிகள், விவசாயிகள் ஆகியோர் கூடி பழைய அரசினை அமைத்தனர். ஜெர்மனியில் வலுவாக இருந்த பிஸ்மார்க் இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். கம்யூன் தலைவர்கள் செய்த தவறு தியர்ஸைத் தப்பிக்க விட்டதும் விவசாயிகளை திரட்டுவதில் தோல்வியடைந்ததும்தான். தியர்ஸ் வெர்செய்ல்ஸ் சென்ற பின் சதித்திட்டம் தீட்டினான். பல இடங்களில் இருந்து போர் வீரர்களை ஒன்று திரட்டி – பாரீஸ் நகரத்தினை முற்றுகையிட ஏவினான். தியர்சின் ஒற்றர்கள் பாரீஸ் நகருக்குள் இருந்து செயல்பட்டனர். கம்யூன் அரசு இவர்களைக் கண்காணிப்பதில் கோட்டைவிட்டது.
முக்கியமானது வங்கிகளில் இருந்த ஏராளமான பணத்தினை வெர்செய்ல்ஸிற்குப் பலர் கொண்டு சென்றனர். இதனைக் கம்யூன் தடுக்கவில்லை. ஃபெரோ, போர்க்கஸ், லூயிமிச்சேல் ,டிரிங்குவே போன்ற வீரர்களுக்கு மத்தியில் ரோஸல் போன்ற சில துரோகிகள் இருந்தனர் . கம்யூன் படையினர் தெருக்களில் கடுமையாகப் போராடினர். கம்யூனிஸ்ட்டுகளின் வலுவான இடங்களில் ஒன்று பியரிலசெய்ஸ் சிமட்ரி. இங்கு 200 கம்யூனிஸ்ட்டுகள் வீரம் செறிந்த போராட்டத்தினை நடத்தினர். வெர்செய்ல்ஸ் படைகள் நுழைந்து அனைவரையும் சுட்டுக் கொன்றன. ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட் கிழமைக்கும் இடையில் மட்டும் 1900 பேர் கொல்லப்பட்டனர். வெறுமே 39 நிமிட விசாரணையில் பலர் கொல்லப்பட்டனர். கம்யூன் படையின் கடைசி நாட்கள் “இரத்தக்கறை படிந்த மே வாரம்” என்று அழைக்கப்பட்டது.
இறுதியாக 1871-ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் நாள் கடைசிப் போர் முடிவடைந்தது. எதிர்ப்புரட்சி வெற்றி பெற்றது. விசாரணை நாடகத்தில் நெஞ்சு நிம்ர்த்திய லூயிமிச்சேல் கூறியவற்றை ஆரம்பத்தில் பார்த்தோம். அவர் சிறைத்தண்டனை பெற்றார். மேலும் பலர் பெயார்டு என்கிற கொட்டடியில் அடைக்கப்பட்டனர்; புதிய கெலடோனியா என்ற பிரெஞ்சுத் தீவு கொலைக்களமானது. படையெடுத்துவந்த இராணுவத்தினர் மீது வெந்நீரைக் கொட்டியதாக குற்றஞ்சாட்டி இருபத்தைந்து பெண்கள் கொல்லப்பட்டதாக ஒரு பாதிரியார் விவரித்தார்.
“… மனிதாபிமானமற்ற சட்டங்களின் கீழ் வெர்செய்ல்ஸ் இராணுவம் வெறியோடு – கைதிகளை, பெண்களை, குழந்தைகளை கொன்று குவிக்கிறது. நம் நினைவுக்கு எட்டிய வரை வரலாற்றில் இதுபோல் நிகழ்ந்ததில்லை. வெர்செய்ல்ஸ் இராணுவத்தின் இந்த ஒட்டுமொத்த படுகொலை நம் ஆன்மாவை வேதனைப்படுத்துகிறது” என லண்டன் டைம்ஸ் குறிப்பிட்டது. இன்றைய பிரெஞ்சு வரலாற்றாசிரியர்களின் கணக்குப்படி 20,000 முதல் 30,000 பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம்.விசாரணைக்கு அனுப்பும் முன்னர் 40,000 கம்யூன் உறுப்பினர்கள் கப்பல்களில் சிறைவைக்கப்பட்டனர். இதில் 5,000 பேர் நாடுகடத்தப்பட்டனர் . 5,000 க்கும் குறைவானோருக்கு தண்டனை வழங்கப்பட்ட விபரம் உள்ளது .
அலிஸ்டர் ஹோர்னர் கூறியது போல் பாரீசின் முகமே அக்காலகட்டத்தில் விநோதமாய் மாறிப்போனது – வெள்ளையடிப்பவரில் பாதிப்பேர் – பிளம்பர்களில் பாதிப்பேர் – ஓடு பதிப்போரில் பாதிப்பேர் – செருப்பு தைப்பவரில் பாதிப்பேர் – உலோகத் தொழிலாளியில் பாதிப் பேர் காணாமல் போயிருந்தனர் . “பாரீஸ் கம்யூன் புயல் வீசும் சொர்க்கம்” எனவும், “அது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துவக்க முனை” என்றும் கூகெல்மன்னுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டது மிகை அல்ல.
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 22/05/2017.