சமூக முதல் + கடின உழைப்பு = வெற்றி

Posted by அகத்தீ Labels:ஒரு புத்தகத்தை முன்வைத்து...


சமூக முதல் + கடின உழைப்பு = வெற்றி

சு.பொ. அகத்தியலிங்கம்

வெற்றியாளர்களின்  வாழ்க்கை வரலாறுகளாகச் சொல்லப்படுவதெல்லாம் உண்மையா ? வாழ்க்கை வரலாறுகளில் உண்மையை, புனைவை  வேறுபடுத்திக் கண்டறிவது எப்படி?

சுயவரலாறாக எழுதப்படும்போது ஒரளவு உண்மைச் செய்திகள் மேலோங்கி இருக்கும். ஒரளவு என்று கூறுவது காரணத்தோடுதான். எல்லா உண்மையையும் எப்போதும் எல்லோரும் சொல்லிவிட முடியாது. சொல்லவும் தேவை இல்லை. நீதிமன்றங்களில்கூட நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத்தவிர வேறில்லை, என்றுதான் உறுதிகூறுகிறோம். இதன் பொருளே உண்மைகளையெல்லாம் சொல்வதென்பதல்ல, மாறாக சொல்வது உண்மை, அவ்வளவுதான். மகாத்மாகாந்தி, இ .எம் .எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன் ஆகியோர் எழுதிய சுயவரலாறுகளில் உண்மையின் பேரொளி சுடர்விட்டது.

ஆக, வெற்றியாளர்கள் வாழ்க்கையின் உண்மையை அறிவதற்குப் பகுத்தறிவை பயன்படுத்துவதே சரியான வழி. மாற்று இருப்பதாகத் தெரியவில்லை. அதை எப்படிச் செய்வது ? அதற்கு வழிகாட்டியாய் ஒரு நூல் வெளிவந்துள்ளது -பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள கணிதமேதை ராமானுஜன். ஏற்கெனவே ரகமி எழுதி தினமணிக்கதிரில் தொடராக வெளிவந்த - பின்னர் நூல் வடிவம் பெற்ற - பல லட்சம் வாசகரை சென்றடைந்த நூலின் மறுபதிப்புத்தான். ஆனால், அதில் த.வி. வெங்கடேஸ்வரன் செய்துள்ள தொகுப்பும் வழங்கியுள்ள குறிப்பும் நம்மை வேறு தடத்தில் சிந்திக்க வைத்து விடுகின்றன.
ராமானுஜன் சிறந்த கணிதமேதை இதில் யாருக்கும் ஐயமில்லை. த.வி.வெ.யும் அதைக் கேள்விக்கு உட்படுத்தவில்லை. மாறாக அவரது கணித மேதைமையின் உட்பொருளை மிகச்சரியாக இனம் காட்டியிருக்கிறார். அதே சமயம் புனைவுகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வெற்றியின் சமூகரகசியம் பற்றி உடைத்துக் காட்டியிருப்பதுதான் மிகமுக்கியம். இது அவரைச் சிறுமைப்படுத்த அல்ல; மாறாக சமூகநீதியின் அவசியத்தை உணர்த்தவே.

ரகமியின் புத்தகத்தை மறுத்தோ கண்டுகொள்ளாமலோ வெங்கடேஸ்வரன் புதிதாக ஒன்றை ஆக்கியிருக்கமுடியும். அது ஒரு பகுதியினரைச் சென்றடையும். ஆனால், அது புனைவையும் உண்மையையும் பிரித்தறிய உதவியிருக்காது. அவ்வகையில் இந்நூல் தனி கவனிப்புக்கு உரியது.
முதலில் ரகமி எழுதியதை தன் நோக்கிற்கு சிதைத்து வெளியிடவில்லை. மாறாக விளக்கம்,மறுப்பு,தகவல் பிழை இவற்றை சரியாகச் சுட்டிக்காட்டி மொத்தம் 28 அடிக்குறிப்புகள் தந்துள்ளார். எடுத்துக்காடாக [ பக்கம் 48] “ ராமனுஜம் எப்போதும் கணிதத்தில் நூற்றுக்கு நூறு வாங்குபவர் . எப். எ. தேர்வில் ராமணுஜம் மற்றபாடங்களில் தோல்வி அடைந்த போதும் கணக்கில் நூறுவாங்கினார், என்று ரகமி புத்தகம் கூறுகிறது. இப்படிக் கூறுவது தவறு. அவர் கணிதத்திலும் நூற்றி ஐம்பதுக்கு எண்பதைந்துதான் வாங்கினார் என்று வெங்கடேஸ்வரன் ஆதாரத்தோடு கூறுகிறார். இது ராமனுஜத்தின் பெருமையைக் குறைப்பதல்லை. மாறாக த.வி.வெ. கூறுவது போல், கணிதவியல் என்றாலே வேகவேகமாக வகுத்தல் - பெருக்கல் செய்வது; வர்க்க மூலம் கண்டுபிடிப்பது போன்ற கணித வித்தைகளைத்தான் நாம் நம் முன் கண்கிறோம். உள்ளபடி கணிதவியல் என்பது கூட்டல் பெருக்கல் அல்ல. 18 பெருக்கல் 8 என்பதை சட்டென்று சரியாகச் சொல்வது மெய்கணிதத் திறமை அல்ல. ஆகவே கணிதத்தில் நூற்றுக்கு நூறுவாங்குவது மட்டுமே கணித மேதைமை அன்று. இதைத்தான் அடிக்குறிப்பில் உணர்த்துகிறார் வெங்கடேஸ்வரன்.

இன்னொரு எடுத்துக்காட்டு, டாக்ஸி நெம்பர் புதிர்  (பக்கம் 118). ராமானுஜன் எண் என்றே வழங்கப்படுகிற 1729 என்ற எண்ணைப் பற்றியது.   இரண்டு விதமாக 1729ஐ இரண்டு எண்களின் மும்மடி என ராமானுஜம் எளிதில் கூறியதில் வியப்பிற்கு இடமில்லை. உள்ளபடியே இவ்வாறு அமையக் கூடிய எண்களில் மிகச்சிறியது 1729 என்பதில்தான் அவரது கணிதப் புலமை அடங்கியுள்ளது. இதே போல, தனது இளம் வயதிலேயே ராமானுஜத்தால் பகா எண்களை   ஒரு கோடி வரையில் சொல்லமுடிந்தது என்கிறார் ரகமி இதனை தனது அடிக்குறிப்பில் த.வி.வெங்கடேஸ்வரன் தெளிவுப்படுத்துகிறார்:  இவ்வாறு ராமானுஜன் உள்ளபடி ஒருகோடி பகாஎண்கள் ஓன்றும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு கோடி வரையுள்ள பகா எண்கள் கூட இனம் கண்டு பதியவில்லை. பகா எண்களின் பட்டியலை அவர் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதினார் என்பது உண்மைதான். மெய்வருத்தி கணிதம் செய்து ஒவ்வொரு எண்ணாகப் பரிசோதித்துதான் பாகா எண் பட்டியலைத் தயாரித்தார்.  அதன் நோக்கம் பகா எண்களில் ஏதேனும் பாங்கு தென்படுகிறதா என அறியத்தான். உள்ளபடியே  2005ம் ஆண்டில் தான் முதல் ஒரு கோடி பகா எண்கள் கண்ணி உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு கணித உண்மைகளை நேர்மையுடன் வெங்கடேஸ்வரன் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் ராமானுஜத்தின் மேதைமை கொஞ்சமும் மங்கிவிடவில்லை. மாறாகப் பிரகாசிக்கவே செய்கிறது.

ரகமி தமது எல்லைக்கு உட்பட்டு ராமானுஜத்தை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பயனை மறுதலிக்காமல் மேலும் செழுமைப் படுத்த 28 அடிக்குறிப்புகள் த.வி. வெங்கடேஸ்வரன் தந்திருப்பது மிக முக்கியம். தமிழில் நானறிந்தவரை இதுவே இத்தகு முதல் முயற்சி. வழக்கமாகச் செய்வது போல இந்த நூலை வேகமாக வாசிக்க அடிக்குறிப்புகளை கண்டுகொள்ளாமல் பக்கங்களைப் புரட்டினால் அரிய பல உண்மைகள் தெரியாமலே போய்விடும்.

ப்.ஏ. தேர்வில் வெற்றிபெறவே முடியாமல் மூன்று முறை தோற்றவரான ராமனுஜம் வெளிநாடு செல்ல வாய்ப்பு பெற்றது எப்படி? தெய்வத்தின் அருளா? த.வி.வெ. நூலின் இறுதியில் தந்துள்ள மதிப்பீட்டுக் கட்டுரையில்  கூறுவது மிகவும் சிக்கலான, ஆனால் இந்திய சமுதாயக்கட்டமைப்பு சார்ந்த முக்கியமான செய்தியாகும். [ நூலில் 158 ஆம் பக்கம் பார்க்க]: போர்ட்  டிரஸ்ட் மேலதிகாரி பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங் ; இந்திய கணித சங்கத்தை தோற்றுவித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர் என ராமானுஜத்திற்கு உதவியவர் பலர். பிராமண உயர் சாதி வகுப்பில் பிறந்த காரணத்தினால் ராமானுஜத்தினால் உயர் பதவியில் உள்ள  பலரின் ஆதரவை எளிதில் நாட முடிந்தது. அதாவது தனது சமூகமுதலைப் பயன் படுத்தி அவரால் வெளிவரமுடிந்தது.

த.வி. வெங்கடேஸ்வரன் சுட்டியிருப்பது கசப்பான உண்மை. பிராமணியம் என்ற சொல்லை பயன் படுத்தவில்லை. சமூகமுதல் என்கிற சொல்லாடல் கவனத்திற்குரியது. ஏனெனில் அவர்கூறுவது இன்றைக்கு உயர்சாதி, உயர்பதவி, அரசியல் செல்வாக்கு என பல சமூக முதல்கள் உள்ளன. அதில் உயர் சாதி என்பது குறிப்பிடத்தக்கது அல்லவா?
தொடர்ந்து வாதிடுகிற வெங்கடேஸ்வரன் சொல்கிறார்:   சமூகமுதல்  (சோஷியல் கேப்பிட்டல்)  நமது வாழ்வில் வகிக்கும் பங்கு குறித்து இங்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். வறுமை. கிராமச் சூழல் முதலிய தடைகள் மட்டுமல்லாது சமூகமுதலின்மை என்ற சவாலையும் சந்திக்கும் மாணவ மாணவியர் அவ்வளவாக  நடைமுறைவாழ்வில் மெச்ச   முடிவதில்லை.” [மிளிர என்ற சொல்லே இருந்திருக்க வேண்டும். அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.]

ராமனுஜம் போலவே கணிதத் திறமை பொதிந்து ; ஆனால் சமூக முதலின்றிப் பிறந்த எவ்வளவு  ராமானுஜன்கள் வெளிவர முடியாமல் சேற்றிலே புதைந்துவிட்டனர்... என த.வி.வெ. வருந்துவது பொருள்பொதிந்தது. ஆம் ராமனுஜத்தின் கதை, சமச்சீர் கல்வியின் தேவையை -  சமூகநீதி இன்றைக்கும் தேவைப்படுவதை - மிக அழுத்தமாக பதியவைக்கிறது. ராமானுஜம் தம் சொந்த வாழ்வில் சனாதனியாக - பிராமண மடிசஞ்சியாக - நாமகிரித்தாயார்  என்ற குறிப்பிட்ட சாமி மீது பயபக்தி கொண்டவராக -  தற்கொலைக்கு முயன்றவராக இருந்ததை இந்நூல் படம்பிடிக்கிறது. அப்படிப்பட்டவர் வெற்றி பெற்றதன் ரகசியம் எது என்பதை அடிக்குறிப்புகளும் த.வி.வெ. கட்டுரைகளும் கூறுகின்றன.

  காளிதாசனுக்கு காளி நாக்கில் எழுதி வரம் கொடுத்ததால் அவருக்கு சொல்வன்மை வந்தது என்பார் ; அதுபோல  நாமகிரித்தாயார் கொடுத்த வரமல்ல ராமானுஜத்தின் கணிதம். கடும் உழைப்பு; தீவிரப் படிப்பு; கல்விமான்களுடன் உரையாடல்; அடுத்தவரிடமிருந்து கற்றல் என்பதுதான் ராமானுஜ ரகசியம்.

  சமூகப் பின்புலம் என்கிற சமூக முதலுடன் கடின உழைப்பும் தீவிர படிப்பும் சேரும்போது அவர் மேதைமைக் குன்றிலிட்ட விளக்கானார். இத்தகைய சமூக முதலில்லாத மேதைகளைக் கைதூக்கிவிட சமூகநீதியும் சமதுவப்பார்வையும்,  கல்வி உரிமையும், சமச்சீர்கல்வியும் மிகமிக அவசியம். a

கம்பீரமான மீசை

Posted by அகத்தீ Labels:
- சு.பொ.அகத்தியலிங்கம்

கம்பீரமாீச
ிறுக
இவர் அவராக இருப்பாரோ?இருக்கலாம். அவரிடம் பேசிப்பார்ப்போமே... அவராக இருப்பினும், பேசுவதும் பழைய நினைவுகளைக் கிளறுவதும் சரியாக இருக்குமோ....

எந்த முடிவுக்கும் வரமுடியாமல் மூன்று நாட்களாய் தவிக்கிறேன். எங்கே போனாலும் காலை நடைபயிற்சியை விடக்கூடாது என்பதால் சில நாட்களாக இந்த விளையாட்டு மைதானத்திற்கு காலை வருகிறேன்.

இந்த இடம் மிகவும் ரம்மியமானது. சரவதி தேவி கோயில், பகத்சிங் சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் என மூன்றும் ஒரே வளாகத்தில் மரங்கள் சூழ பசுமையாய் விரிந்திருக்கிறது. மைதானத்தில் நடை பயில்வதும், கோயில்வளாகத்தினுள் பூங்கா பெஞ்சுகளில் அமர்ந்து இயற்கை காற்றை சுவாசிப்பதும்; சின்னஞ்சிறுசுகள் ரோலர் கேட்டிங் பயிற்சி பெறுவதைப் பார்ப்பதும் மனதுக்குள் சந்தோஷப் பூக்களை நிறைக்கிறது. காலையும் மாலையும் இங்கே வருவது இதமாக இருந்தது. ஆனால் மூன்று தினங்களுக்கு முன்பு நடைபயிற்சிக்கு சற்று தாமதமாகப் போக நேர்ந்தது. அந்த முதியவர் மெல்ல நடந்த போது அவரை எங்கோ பார்த்த ஞாபகம் என்னைத் துரத்தியது. அந்த மீசையை மறக்க முடியுமா? வெள்ளையானாலும் அந்த மீசையின் கம்பீரம் எனக்கு ரொம்பப் பிடிக்குமே!

ஒரு ரகசியம் சொல்லிவிடுகிறேன். என் மீசையை பார்த்து ம.பொ.சி. மீசை, திலகர் மீசை, தேவநேயப் பாவாணர் மீசை என அவரவர் அறிந்ததோடு ஒப்பிடுவது எல்லோருக்கும் வாடிக்கை. நான்தானே அறிவேன் என்னுள் இருக்கும் அந்த கம்பீரமான மனிதனின் மீசைதான் என் ரோல்மாடல் என்பதை.

பள்ளி நினைவுகள் சுழல்கிறது. அறிவியல் வகுப்பு இடிதாங்கி என்றால் என்ன? கேள்வி எழுப்புகிறார். மாணவர்கள் பதில் சொல்லுகிறார்கள். அவர் போகிற போக்கில் ஒரு செய்தியைச் சொன்னார்: கடவுள் சர்வவல்லமை பெற்றவர் என்கிறார்கள். அப்படியானால் அவரால் இடியைத் தாங்க முடியாதா? கோயில் கோபுரத்திலும், சர்ச் கோபுரத்திலும், மசூதி கும்பத்திலும் இடிதாங்கி எதற்கு? மாணவர்கள் திருதிருவென விழித்ததும் அவரே அறிவு வாசலைத் திறப்பார். அவரிடம் மாணவர்கள் பயமின்றி நண்பனைப் போல் பழகலாம். எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி கேட்டாலும் அவருக்கு பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் கேள்வி கேட்கும் மாணவர்களை கொஞ்சுவார். கேள்வி கேட்க மாணவர்களைத் தூண்டுவார். அவரைப் பிடிக்காத மாணவர்களே இருக்க மாட்டார்கள். அவரும் எந்த மாணவரையும் ஒதுக்கியதே இல்லை. அவர் மகனும் அதே  வகுப்புதான். அவன் என் நெருங்கிய தோழனும் கூட ஆக எனக்கு அந்த ஆசிரியரோடு உறவு பள்ளிக்கு வெளியேயும் தொடர்ந்தது.

அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா? அந்த வயதில் என்னால் எதையும் உறுதி செய்ய இயலவில்லை. எங்களை கோயிலுக்கு அழைத்துப் போவார். அங்கு சிலைகளையும் சித்திரங்களையும் ரசிக்கச் சொல்லுவார்; சுவரில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் தேவாரம் திருவாசகமும் பாடலை பாடச் சொல்வார். அவரும் பாடுவார். ஆனால் சாமி கும்பிடச் சொன்னதில்லை. அவரும் கும்பிட்டதில்லை. சர்ச்சுக்கு அழைத்துப் போவார் அங்குள்ள அமைதியை நேசிக்கச் சொல்வார். பைபிள் வாசகங்களை படிக்கச் செய்வார். ஆனால் அவர் ஒரு போதும் மண்டியிட்டு பிரார்த்தித்துப் பார்த்ததே இல்லை. மசூதிக்கும் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்வார். அங்கு ஒழுங்குகளை விளக்குவார். அப்போது குரான் தமிழில் மொழி பெயர்க்கப்படாதது குறித்து வருந்துவார். கோயில் பூசாரி, பாதிரியார், முல்லா எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். அவர்களுக்கு இவரை மிக கவுரவமாக நடத்துவார்கள்.  அவர் பெயர் அந்தோணிராஜ்.  கிறுத்துவர் என்பது சொல்லாமலே விளங்கும். அவர் எல்லா மதத்தையும் மதித்தார். அதே சமயம் அறிவியல் பூர்வமாக எல்லாவற்றையும் பரிசீலிக்க வேண்டுமென எங்களைத் தூண்டுவார். அவரிடம் பயின்றவர்கள் பகுத்தறிவாளராக மாறுகிறார்களோ இல்லையோ ஒரு போதும் மதவெறிக்கு ஆட்பட மாட்டார்கள்.

அவரைப் பற்றிய நினைப்பு சிறகை விரிக்க அவரின் உயரம் கூடிக் கொண்டே போகிறது. திடீரென்று ஒரு அதிர்ச்சி. அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். வீட்டையும் விற்றுவிட்டார். ஊரை விட்டுப் போய்விட்டார். அவரது குடும்பமே இடம் பெயர்ந்து எங்கோ போய்விட்டது.  என்னோடு படித்த அருண்ராஜ் பாண்டிச்சேரியில் ஒரு சர்ச்சோடு இணைந்த பள்ளியில் பயில்வதாக கேள்வி. அவர் திடீர் முடிவின் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. பல விதமான கதைகள் றெக்கை கட்டிக் கொண்டு உலாவந்தன. அக்கதைகள் அவரை சிறுமைப்படுத்தின. அவரைப் பிடிக்காத சிலர் அவரை இப்போது எள்ளி நகையாடினர். ஆனால் என் மனதில் அவரது கம்பீரம் குறையவே இல்லை. மற்றவர்கள் சொல்வதை மனம் ஏற்க மறுத்தது.  எனது ஆசிரியர் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்திருப்பார் என்கிற குரு பக்தி என்னுள் ஆதிக்கம் செலுத்தியது.

அந்த பூங்கா பெஞ்சில் உட்கார்ந்திருப்பது அவர்தானே? நெருங்கிடத் தயக்கம். இரண்டுநாள் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட தூக்கமும் தொலைந்துவிட்டது.

மாணவப் பருவத்தில் நண்பனைப் போல் பழக முடிந்த எனக்கு இப்போது நெருங்கிக் கேட்க பேச எது தடை? ஒரு வேளை அவருடைய பிம்பம் என்னுள்ளும் சிறுத்துவிட்டதோ? ச்...சே... கூடாது.. பேசியாக வேண்டும்.

துணிந்து அன்று காலை அவர் முன்னால் போய் நின்றுசார் வணக்கம்’என்றேன். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு. என் மீசையைப் பார்த்தார். “ உங்களைப் பார்த்து வளர்த்த மீசை” எனக்கூறி என் பெயர் முதலிய சில விபரங்களைச் சொன்னேன். எழுந்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டார். நான் உருகிப்போனேன்.  சிறிது நேரம் கனத்த மவுனம்.

 “இன்னும் என்மீது அதே மரியாதை வைத்திருக்கிறாயா?” என அவர் அழுத்தம் கொடுத்து கேட்ட கேள்வி என்னை உசுப்பிவிட்டது. “ சார்! நீங்கள் எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்வீர்கள். இது என்னுன் அசைக்க முடியாத நம்பிக்கை” என்றேன். சிரித்தார். அதில் ஆயிரம் செய்தி புதைத்திருந்தது.

 “நீங்க என்ன செய்றீங்க.எத்தனை பிள்ளைங்க..”. என அவர் கேட்க நான் என் கதையை விலாவரியாக சொல்லி முடித்தேன்.

“வகுப்பில் கேள்விக்கு பதில் சொல்லும் அதே வேகம் குறையவில்லை” என்றவாறு முதுகைத்தட்டிக் கொடுத்தார்.  “என் மாணவர்களில் நீங்கள் சமூகப் பணியில் இருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட காலம் வாழணும்னு வாழ்த்துகிறேன்” அந்த வார்த்தைகள் அவரின் இதயத்திலிருந்து வெளிபட்டு நேரடியாக என் இதயத்தை ஆசீர்வதித்த உணர்வு.

     என் பால்ய சிநேகிதன் அருள்தா பற்றிய விசாரணையையைத் தொடங்கினேன். அவர் மவுனம் காத்தார்.  “ சரி நீங்கள் எழுத்தாளர் உங்களிடம் சொல்வது நல்லதுதான்,” என பீடிகை போட்டு மனம் திறந்தார். காலம் பின்னோக்கி நகர்ந்தது.

 “அன்று மதியம் நீங்களும் அருள்தாஸ்சும் பிற மாணவர்களோடு கல்விச் சுற்றுலா போயிருந்தீர்கள். நான் வழக்கத்துக்கு மாறாக மூன்று மணிக்கே வீடு திரும்பினேன்...”

 “உங்களுக்குத் தெரியுமே, என் மனைவி இறந்து 5 வருடங்கள் மறுமணம் செய்யாமல் இருந்ததும் சில மாதங்கள் முன்புதான் திருணம் செய்ததையும் அறிவீர்கள் அல்லவா...? வீட்டுக்குச் சென்றபோது கண்ட காட்சி என்னை நிலை குலையவைத்துவிட்டன. அப்படியே இடித்துபோய் முற்றத்தில் உட்கார்ந்துவிட்டேன்.”

சற்று நேரம் நிறுத்தினார்... மீண்டும் மவுனம்... பெருமூச்சு...  “யாரிடமாவது எல்லாவற்றையும் சொல்லி விடுவது நல்லதுதான். நீ என் நம்பிக்கைக்குரிய மாணவன்” (நீங்கள் என கூறி இடைவெளிவிட்டு நின்று அவர் சட்டென இறங்கி நீ என நெருங்கியது அவருக்கும் எனக்கும் இடையே இறுக்கத்தைத் தளர்த்தது)

 “நீ சமூக ஊழியனும் கூட... என் கதை பிறருக்கு உதவலாம் இல்லையா?..”. இப்படிக் கேட்டுவிட்டு சிரித்தார். மீண்டும் மவுனம்... அப்புறம் பேசத் தொடங்கினார்.

 “என் மனைவி காத்ரீன்... இப்படிச் சொல்றது இப்போது தப்பு... காத்ரீன் ஆடைகளை சரி செய்தபடி அவசர அவசரமாக பதறி அடித்து எழுந்திருக்க முயல என் வருகையை கவனிக்காத என் மூத்த மகன் அவளை பிடித்து இழுத்து அணைக்க... அதைப்பார்த்த என் இதயம் வெடித்துவிடும் நிலை. செய்வதறியாது திடுக்கிட்டு உட்கார்ந்து விட்டேன். அவர்களும் அதிர்ச்சியால் உறைந்து நின்றனர். அப்பனும் மகனும் பேச்சற்று நின்றோம்... காத்ரீன் மயங்கிச் சரிந்தாள்...”

 “நடிப்பு.. கணவனுக்கு துரோகம் செய்துவிட்டு தப்பிக்க நாடகம்...” என நான் இடையிலேயே வார்த்தையை வெடிக்க அவரின் மவுனப்பார்வை சாந்தப்படுத்தியது.” பதறாமல் கேள்.”

 “நான் பலவிதமாய் யோசித்தேன்... குழம்பினேன். அதே சமயம் பதறுவதால் பலன் என்ன?... அவள் முகத்தில் நீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்தேன்.”

 “தப்பு அவர்களுடையது அல்ல. என்னுடையதுதான். திருமண வயதில் உள்ள மகனை மறந்து நான் திருமணம் செய்தது பெரிய தப்பு. ஐந்து வருடம் மறுமணம் வேண்டாம் என வைராக்கியமாக இருந்த நானே அவள் அழகிலும், பார்வையிலும தடுமாறி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன் எனில் அவன் வாலிபன் என்னை செய்வான்? அவனுக்கு அவள் நாலய்ந்து வயது மூத்தவள்தான். என்ன செய்வது, காமத்துக்கும் காதலுக்கும் வயது எல்லைகளும் இல்லையே...!”

 “சார்! தப்பு செய்தது அவங்க நீங்க உங்களை வருத்திக் கொள்வது சரியா...?” என இடையில் என கேள்வியை வீசினேன். பத்திரிகையாளர் புத்திபோகாது அல்லவா?

 “ஆம்! சரிதான்... ஆனால் யார் குற்றவாளி? யாருக்கு யார் என்ன தண்டனை வழங்குவது? இதையெல்லாம் விட முக்கியம் நடக்கக்கூடாதது நடந்துவிட்டது, அதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்பதுதானே கேள்வி”

 “நீங்க... சொல்றது சரிதான்...”

 “நான் ஆத்திரப்பட்டு அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றிருக்கலாம். விளைவு நான் சிறையில் வாட வேண்டும். அருள்தாஸ் கொலைகாரனின் மகனாக வாழவேண்டும்”.

 “வேறு வழி இல்லையா?”

 “நானும் யோசித்தேன் நான் ஓடிப்போகலாம் அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம்... காத்ரீனும் தற்கொலை செய்து கொள்ளலாம். யாருக்கு என்ன பயன்? தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் கிடையாது. தற்கொலை ஒரு போதும் தீர்வாகாது. தவறுதான், ஆனால் அதிலிருந்து மீள வேண்டும்...”

”நான் சூழ்நிலையை சற்று தளர்த்தி மகனிடம் பேசினேன். அருள்தா டூர் முடிந்து மறுநாள்தான் வருவான். ஆகவே அன்று விடிய விடிய பேசினோம். அழுதோம். குழம்பினோம் உடைந்தோம். யாரும் உயிரைப் போக்கிக் கொள்ளக்கூடாது என மீண்டும் மீண்டும் சொன்னேன். என் பேச்சும் செயலும் அவர்களை சற்று ஆகவாசப்படுத்தியது. நான் அன்று எடுத்த முடிவு சரியா? தவறா? என்னால் கூற முடியாது. ஆனால்..”.

 “அவனுக்கு சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு ஆர்டர் கிடைத்த சமயம் அது. அவனை சென்னையில் குடி அமர்த்தினேன். காத்ரீன் அவனோடு வாழச் செய்தேன். அதற்கு சம்மதிக்க வைக்க நீண்ட தர்க்கம் செய்ய வேண்டி இருந்தது.”

 “ஆமாம் மன்னித்து காத்ரீனை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் மகனுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்?” என குடைந்தேன். ஒருவேளை வரம்பு மீறுகிறேனோ என்று ஐயத்தோடு தடுமாறியபோது...

 “சரியாகத்தான் கேட்டாய்... அவள் என்னிடம் எதிர்பார்த்து கிடைக்காததால்தானே அவனை நாடினாள். யார் தவறைத் தூண்டினார் என்பது பிரச்சனையே அல்ல.காமமும் பசியைப் போல் இயற்கைத் தேவை அல்லவா?இனியும் சேர்ந்து வாழ்ந்தால் நெருடல் இல்லாமல் மன மகிழ்ச்சியோடு எங்களால் வாழமுடியாது என நினைத்தேன். ஆகவே நான் விட்டுக் கொடுப்பதே சரி என்று ஒருதலைப்பட்சமாக நானே முடிவெடுத்தேன்”

 “அவர்கள் சென்னையில் வாழ்ந்தனர். அருள்ராஜை பாதிரியார் காபிரியேல் வசம் ஒப்படைத்தேன் சொத்தை விற்றேன். வேலையை உதறினேன். கிடைத்த பணத்தை மூன்றாக பங்கிட்டு ஒரு பகுதியை பாதிரியார் காபிரியேல் பொறுப்பில் இளையவனை வளர்க்க அளித்தேன். ஒரு பகுதியை மூத்தவனுக்குக் கொடுத்தேன். நான் ஒரு பகுதியோடு மிஜோராம் சென்றேன். பாதிரியார் காபிரியேல்தான் உதவினார். அவருக்கு எல்லாம் தெரியும். அங்கு பழங்குடி மக்களிடையே கல்விப்பணி ஆற்றினேன். வயதாகிவிட்டது. சொந்த மண்ணுக்கு வரும் ஆவலில் வந்தேன் ஆனால் தமிழ்நாட்டுக்கு வரவிரும்பாமல் திருவனந்தபுரத்தில் பாதிரியார் ஜெயராஜ் உதவியோடு இங்கு ஒரு இல்லத்தில் வசிக்கிறேன்.”

 “நீ! ஒன்றை யோசித்துப்பார்! நாம் வெள்ளைக்காரனை - வெளிநாட்டுக்காரனை தேவையில்லாததுக்கெல்லாம் காப்பி அடிக்கிறோம். நல்லதுக்கு பின்பற்றினால் என்ன? ஒருவனுக்கு ஒருத்திநல்ல வாழ்க்கை நெறிதான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிலருக்கு வாழ்க்கை தப்புத்தாளமாகிவிடுகிறது. இதற்கு தற்கொலையா தீர்வு? கொலையா தீர்வு? விருப்பம் இருக்கிறவரை சேர்ந்து வாழ்வது, இல்லையேல் பிரிந்து அவரவர் வாழ்வை மறு நிர்ணயம் செய்து கொள்வது. இந்த ஐரோப்பிய வாழ்க்கை நெறியில் என்ன தவறு? சாவதைவிட உயிரைப் பறிப்பதைவிட இது மேலானதுதானே! காதல் தோல்வியில் தற்கொலை என்கிறார்கள். கொலை என்கிறார்கள் முட்டாள்தனம். ஒருவருக்குகொருவர் விசுவாசமாக இருப்பது மிக மிக அவசியம். கசப்பும் குரோதமும் வந்தபின் ஏன் சேர்ந்து வாழ வேண்டும். நட்பாக பிரிவது நல்லது. இதனால் பண்பாடு கெட்டுப் போகிறது என்பது முட்டாள்தனம் தற்கொலையைவிட கொலையைவிட வாழ்வது முக்கியம்... நான் சொல்வது சரிதானே?”

அவரின் பார்வை விசாலமாக மானுட அன்பை மழையாய்க் கொட்டுகிறது. அவரது பிம்பம் என்னுள் விவரூபமெடுக்கிறது.

விடைபெற வேண்டிய நேரம் நேரம் நெருங்கியது. ”சார் ஒரு சந்தேகம், மீண்டும் யாரையும் சந்திக்கவில்லையா...?”

 “இல்லை. சந்திக்க விருப்பவில்லை. சந்திக்கிறபோது என்னுள் தூங்கும் மிருகம் எழுந்துவிடக் கூடாதல்லவா? நானும் மனிதன்தானே. தவிர்த்தேவிட்டேன். ஆனால்...” அவர் நிறுத்திய நொடியில் மீண்டும் ஏதோ அதிர்ச்சியோ என விழித்தேன்.

 “சில வாரங்கள் முன் ஒரு இளைஞனும் அவனது மனைவியும் குழந்தையும் பாதிரியார் ஜெயராஜை பார்க்க வந்தார்கள். நான் அங்கிருந்தேன். குழந்தைக்கு என் மீசை பிடித்துவிட்டது. திருகி விளையாடியது. வரும் ஓணம் பண்டிகைக்கு அவர்கள் வீட்டுக்கு பாதிரியாருடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களின் பெற்றோர்கள் சித்தப்பா குடும்பம் எல்லோரும் ஒன்றாக சந்திக்கிறார்களாம்..”

 “வேடிக்கை என்ன தெரியுமா? என் மீசையைப் பிடித்து விளையாடியது  என் கொள்ளுப்பேரன்!”

 “நீங்கள் விருந்துக்குப் போகப் போகிறீர்களா?”

 “இல்லை. மீண்டும் மிஜோராம் போகிறேன். என் பேரனுக்கே கொள்ளுப்பேரனுக்கோ அவர்கள் பெற்றோர்கள் மீதான மரியாதை எந்த விதத்திலும் பட்டுப் போகக்கூடாது. நான் அங்கு போனால் ஒருவேளை யாரேனும் வெடித்து பழைய நினைவுகளை கிளறிவிடக்கூடுமே. எல்லோரும் மனிதர்கள் தானே. நான் நாளை பெங்களூர் போகிறேன். அங்கிருந்து மிஜோராம் போகிறேன்.”

 “எல்லாம் சரிதான் சார்.ஒரே ஒரு கேள்வி மட்டும் மிச்சமாக என் மனதில் இருக்கிறது. ஒரு குற்ற உணர்வோடு அவர்கள் இருவரும் இருந்த தருணத்தில் உங்கள் முடிவை ஒருதலைபட்சமாக அவர்களை ஏற்கவைத்து விட்டீர்களே? இன்னும் சற்று ஜனநாயகப் பூர்வமாக கலந்துபேசி கால அவகாசம் எடுத்து முடிவு எடுத்திருக்கலாமே?”

 “உண்மை. நீ அடுத்த தலைமுறை மனிதன். இன்னும் நன்றாக யோசிக்கிறாய். நான் போன தலைமுறை மனிதந்தானப்பா..”

 “சார்... வருகிறேன்.” என்றவாறு குனிந்து காலைத் தொட்டு வணங்கினேன்.

”நீ யார் காலையும் தொட்டு வணங்கமாட்டாயே...!”

”ஆம்! உங்களை வணங்கத் தோன்றியது”

 “சரி! போய் வா! நன்றாக வாழ்க! ஒரே ஒரு வேண்டுகோள் எப்படியும் இதை கதையாக எழுதுவாய். நீச்சயம் எழுது ஆனால் யார் உள்ளமும் காயப்பட்டு விடாமல் எழுது. தப்புத்தாளங்கள் சரியல்லதான். ஆனால் கொலையோ தற்கொலையே தீர்வல்ல. யதார்த்தத்தை அங்கீகரிக்க மனிதகுலம் பழக வேண்டும் அதற்கு உன் எழுத்து பயன்படட்டும். அவர் வாழ்த்தி அனுப்பினார்.

கொள்ளுப்பேரனுக்கும் அந்த மீசை பிடித்தது ஆச்சரியமில்லைதான். அது கம்பீரமான மீசை அல்லவா?

நன்றி ; செம்மலர்  ,  ஜனவரி 2013

வசந்தத்’தை’ப் பூக்கவை

Posted by அகத்தீ


திவாலாகும் நாடு தீர்மானிக்கும் சக்தி ஆவது எப்படி?

Posted by அகத்தீ Labels:


 
திவாலாகும் நாடு 
தீர்மானிக்கும் சக்தி ஆவது 
எப்படி?தகர் நிலையில் உலக நிதிமூலதனம்,
ஆசிரியர் : என்.எம்.சுந்தரம்,
தமிழில் : இ.எம்.ஜோசப்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, 
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600 018.
பக் :338, விலை : ரூ.200/-

‘‘முகத்திரை கிழியும் சுதந் திரச்சந்தை முதலா ளித்துவம்” என்கிற துணைத் தலைப்பை யும் சேர்த்து நூல் தலைப்பைப் பார்த்ததும் உடன் ஒருவர் ஊகித்துவிட முடியும் - ‘இது இன்றையப் பொருளாதார நெருக்கடிகள்’ குறித்து ஆழமாக அலசும் நூல். அந்த யூகம் சரியானதே. பூலோக சொர்க்கம் அமெரிக்கா என்கிற மாயையை கூர்மையாகக் கிழித்தெறியும் நூல் இது.இன்று உலகம் சந்திக்கும் சகல நோய்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலமாய் இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் குரூரச் செயல்பாடுகளைத் தோலுரிக் கிறது இந்நூல்.

‘புதிர் நிலையில் அமெரிக்கப் பொரு ளாதாரம்’ என்கிற முதல் கட்டுரை தொடங்கி - ‘ மொத்தமாக மீறப்பட்ட சமூக ஒப்பந்தம் : பென்ஷன் பெருங்கொள்ளை’ முடிய 27 கட்டுரைகள் இடம் பெற்றுள் ளன.2008 முதல் 2011 வரை இன் சூரன்ஸ் ஒர்க்கர் மாத இதழில் எழுதப் பட்ட 26 கட்டுரைகளும் 2003 மார்ச்சில் எழுதிய ஒருகட்டுரையும் - அத்துடன் முதல் கட்டுரையும் சேர்ந்தது இந்நூல்.

“ஏஐஐஇயூ போன்ற தொழிற் சங்கத்தில் ஐம்பதாண்டு காலமாக முன்னணிப் பாத்திரம் வகித்ததன் பயனாக அவருக்கு (என்.என்.சுந்தரத்துக்கு) கிடைத்திருக் கும் அனுபவத்தினையும் பக்குவத் தினையும் இந்நூல் வெளிப்படுத்துவ தாக உள்ளது.” என்ற அமானுல்லா கான் கூற்று மிகையன்று.இ.எம்.ஜோசப்பின் மொழியாக்கம் நன்று.

வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜெர்னல், பைனான் சியல் டைம்ஸ் ஆப் லண்டன், கம்யூனி கேஷன்ஸ் நியூஸ் அப்டேட், எக்னா மிக்ஸ் ஏடு,டைம் மேகசீன், மணி மார் னிங், நீயூஸ் வீக், ஃபிலடெல்லோ மிரர், இப்படி டஜனுக்கும் மேற்பட்ட ஏடுகள், பால்க்ருக்மேன், தாமஸ் ஃப்ரீட்மேன், ஹைமன் மின்ஸ்கி, க்ரீன்ஸ்பேன், ஸ்டீபன் ப்ரூவியல், ஜோசப் ஸ்ட்க் லிட்ஸ்,அஷோக் பர்தன், டிவைட் ஜாஃபீ, ஹெர்பெர்ட் ஹூவர், ஜெப்ரி சாக்ஸ்,சைமன் ஜான்சன், ராபர்ட் பி ஸ்டின்னாட், ஜான் ப்ரோதஸ், ஜுவான் சமாவியா , ஜார்ஜ் ஹாங்க் உட்பட பலரின் கூர்மையான விவாதங்கள், மைக் ஸ்திடேஸ், ராபர்ட் ஜேஷில்லர்,லிண்டா பிளைம்ஸ், டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் எழுதிய பல ஆழமான பொருளாதார நூல் கள் - இவற்றின் சாற்றைப் பிழிந்து இந் தியஅனுபவத்தில்குழைத்துத்தந்துள்ளார் நூலாசிரியர்.

“.....இவ்வளவு பெரும் கடன் உள்ள வேறு எந்த ஒரு நாடும் இந்நிலையில் திவாலாகிவிட்டது என அறிவிக்கப் பட்டிருக்கும்.” “ அமெரிக்க மக்களுக்கு செலவழிப்பது என்பது போதைப் பழக்க மாக மாறிவிட்டது. அதீத நுகர்விலும், கடன் வாங்குவதிலும் அவர்கள் ஊறித் திளைத்து வருகின்றனர்.” இப்படி போகிற போக்கில் புழுதிவாரித்தூற்ற வில்லை. இதனை ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறார்.

பன்னாட்டு நிறுவனங்களும் ஊழல் களும் முறைகேடுகளும் எப்படி பின்னிப் பிணைந்துள்ளன என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். இந்தியாவை கபளீகரம் செய்ய அவர்களைத்தாம் வெற்றிலை பாக்குவைத்து மன்மோகன் சிங் அரசு அழைக்கிறது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்.

“ ‘கடனே மிக மோசமான வறுமை’ என்று தாமஸ் ஃபுல்லர் எழுதினார். எவ் வளவு உண்மையான வார்த்தைகள்! ஏழை நாடுகளும் வளர்ச்சியடையாத நாடுகளும் கடன் வாங்கிய போது, அவர் களுக்கு விதிக்கப்பட்ட குருதியை உறிஞ் சும் நிபந்தனைகள், அவர்கள் மீது மேலும் விலங்குகளைப் பூட்டியது.” இதனை நூல் நெடுக விவரிக்கிறார்.

திவாலாகும் நிலையிலுள்ள நாடு உலகில் மிகப்பெரிய கடன்சுமையுள்ள நாடு அமெரிக்கா ; ஆனால், அந்த நாடு உலகைமிரட்டு கிறது, பணியவைக்கிறது, மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடிக்கிறது, சூறை யாடுகிறது, யுத்தங்களை ஏவுகிறது, இத் தனைக்கும் பிறகும் ஜனநாயக வேடம் போடுகிறது. உலகரட்சகன் என நம்ப வைக்க நாடகமாடுகிறது இந்த நிதிமூல தன அரசியலை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

“ அவன் ஏழை என்றால் அழுதாலும் விடமாட்டார்கள் ; கொடுங்கோன்மை யின் துணைவடிவங்கள் அனைத்தும் அவன் மீது பாய்ந்துவிடும். மற்றவர் களுக்கு பாதுகாப்பானது அனைத்தும் அவனுக்கு எதிரியாகிவிடும். ” என்கிற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் மேற் கோளுக்கு சரியான எடுத்துக்காட்டாக இன்றைய நிதிமூலதனம் குறிப்பாக அமெரிக்கா செயல்படுவதை தக்க ஆதா ரங்களோடு போட்டு உடைக்கிறார்.

அமெரிக்காவின்ராணுவவலிமையும், அரசியல் வலிமையும்; அதன் சுமை முழுவதையும், வலி முழுவதையும், நெருக்கடி முழுவதையும் வளரும் நாடுகள் தோள் மீது ஏற்றிவிட கருவி யாகிறது. கடன்கள், ஆலோசனைகள், மிரட்டல்கள், சதிகள், வஞ்சகம், அரசி யல் நாடகங்கள் என பலவகைகளில் தன் மேலாண்மையையும் சுமையையும் வளரும் நாடுகள் ஏற்கச்செய்வதை மிகநுட்பமாக- மிக வலுவாக இந்நூல் பதிவு செய்கிறது.

எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது எப்படி? அதனை அமெரிக்கா எப்படி தன்நலனை மட்டுமே முன்னிறுத்தி அணுகியது? பயங்கரவாதம் எப்படி யாரால் உருவாக்கப்பட்டது? எப்படி ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்படு கிறது? 1929 க்கு பிறகு முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடியில் சிக்கு வது ஏன்? இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் வேர் எங்குள்ளது? அது புதை சகதியில் மூழ்கும் போதும் மற்ற வர்கள் தலைமுடியைக் கெட்டியாகப் பிடித்து இழுத்துக் கொண்டே மூழ்குவது ஏன்? எப்படி? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தது மாதிரி இந்நூல் பதில் தருகிறது.


“ நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்” என்ற பால் ராப்சன் பாடல்வரிகளையும்; ஜான் ஸ்டீன்பெக் எழுதிய ‘ சீற்றத்தின் திராட்சைகள்’ என்ற நாவலையும் மிகப் பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ளது நூலுக்கு வலிமை சேர்க்கிறது.சுவையாகவும் ஆழமாகவும் எழுதப் பட்டுள்ள இந்நூல், அமானுல்லாகான் அணிந்துரையில் கூறியுள்ளது போல, “தொழிற் சங்க முன்னணி ஊழியர்கள் மட்டுமல்லாது , தொழிலாளி வர்க்கம் வாழ்வதற்கு ஒரு சிறந்த வாழ்விடமாக இந்தியாவை மாற்றப் போராடும் அனை வரும் கற்றுப் பயன் பெற வேண்டிய நூல்.” ஆம். இதில் ஐயமே இல்லை.

ஏற்கெனவே இந்நூலாசிரியர் எழு திய ‘ நிதி மூலதனச் சூறாவளி’ , ‘ வளர்ச் சிக்கு எதிரான அரசியல்’ என்கிற நூல் களின் தொடர்ச்சியே இந்நூல்.இவை அனைத்தும் ஏகாதிபத்திய பொருளா தாரத்தை , அரசியலை , மக்களின் துன்ப துயரங்களை உரக்கப் பேசுகின்றன. சோஷலிசமே மாற்று என்பதை கோடிட் டுக் காட்டுகிறது. வில்லனை வலுவாக சித்தரித்திருக்கிற இந்நூல், கதாநாய கனையும் மாற்றுப் பாதையையும் இன் னும் வலுவாகச் சொல்லி இருந்தால் இந்த ஆயுதம் மேலும் கூர்மையுடைய தாகி இலக்கை தப்பாது தாக்கி அழிக்கும் வல்லமையை தொழிலாளி வர்க்கத் திற்கு அளித்திடும். அடுத்த நூலில் அதனை எதிர்பார்ப்போம்.

-சு.பொ.அகத்தியலிங்கம்