ஞாபகக்குளத்தில்

Posted by அகத்தீ Labels:

 மீண்டும் என்னுடைய கவிதை ஒன்று கன்னடத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தோழர் மீனாட்சிசுந்தரம் அவர்களே இப்போதும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ಎಷ್ಟೋ
ಹಳೆಯ ಆಲ್ಬಂಗಳನ್ನು
ಕಸದ ಬುಟ್ಟಿಯಲ್ಲಿ
ಎಸೆದಿದ್ದೀರಿ..
ನೆನಪಿನ ಕೊಳದ
ಬುಡದಲ್ಲಿ
ಹೂತು ಹೋದವು
ಹಲವು !
ಅಂತಿಮ ನಮನದ ಮಾತುಗಳಲ್ಲಿ
ಆತ್ಮಗಳನ್ನು ಹುಡುಕಬೇಡಿ,
ಅವು ಕೇವಲ ಆಚರಣೆಗಳಷ್ಟೆ,
ಗಾಳಿಯಲ್ಲಿ ಹಾದು ಹೋಗುತ್ತವೆ.....
ನಿಮ್ಮ ಜೀವನದ ಕಥೆಯನ್ನು
ಗಾಳಿಯಲ್ಲೆ
ಬರೆದಿಟ್ಟರುವಿರಿ..
ಕಳೆದುಕೊಳ್ಳಲು ಏನು ಇಲ್ಲ!
Su Po Ahathyalingam ಪೊಸ್ಟ್ ಕನ್ನಡದಲ್ಲಿ
எத்தனையோ
பழைய ஆல்பங்களை
குப்பைகூடையில்
வீசி இருக்கிறாய்..
ஞாபகக்குளத்தில்
அடிதொட்டு
புதைந்து போனவை
அநேகம் !அநேகம் !
அஞ்சலி உரைகளில்
ஆத்மாவைத் தேடாதே
சடங்குகள் அவை
கடந்து போகும் காற்றாய்
உன் வாழ்க்கை கதையையும்
காற்றில்தானே
எழுதி வைத்திருக்கிறாய்
இழப்பதற்கு ஏதுமில்லை !
சுபொஅ.
26/10/2022.

Posted by அகத்தீ

 எத்தனையோ

பழைய ஆல்பங்களை

குப்பைகூடையில்

வீசி இருக்கிறாய்..


ஞாபகக்குளத்தில்

அடிதொட்டு 

புதைந்து போனவை

அநேகம் !அநேகம் !


அஞ்சலி உரைகளில்

ஆத்மாவைத் தேடாதே

சடங்குகள் அவை

கடந்து போகும் காற்றாய்


உன் வாழ்க்கை கதையையும்

காற்றில்தானே

எழுதி வைத்திருக்கிறாய்

இழப்பதற்கு ஏதுமில்லை !


சுபொஅ.

26/10/2022.

பெருங்கனவு

Posted by அகத்தீ Labels:

 


பெருங்கனவு

 

 

யாரும் எழுதாத கவிதையை

நான் எழுத வேண்டும் .

யாரும் வரையாத ஓவியத்தை

நான் வரைய வேண்டும்.

யாரும் இசைக்காத பாடலை

நான் பாட வேண்டும்.

யாரும் பயணிக்காத திசையில்

நான் பயணிக்க வேண்டும்.

 

இயற்கையில் எல்லையற்ற ஆற்றலை

நீ பாடி முடித்து விட்டாயா ?

இயற்கையின் வண்ணங்களை வனப்பை

நீ தீட்டி முடித்து விட்டாயா ?

இயற்கையின் எண்ணற்ற சங்கீதத்தை

நீ நகலெடுத்து முடித்து விட்டாயா ?

இயற்கையின் ஆழத்துள் விரிவினுள்

நீ பயணித்து முடித்துவிட்டாயா ?

 

மானுடத்தின் வற்றா துயரத்தினை -உன்

கவிதை முற்றாக சொல்லி முடியவில்லை.

மானுடத்தின் முடிவற்ற பன்முகத்தை –உன்

தூரிகை இன்னும் தீட்டி முடியவில்லை.

மானுடத்தில் முடிவுறா கனவுகளை –உன்

பாடலில் இசைக்கவே இல்லை .

மானுடத்தில் எல்லையற்ற சக்தியை – உன்

பயணம் இன்னும் நெருங்கவே இல்லை.

 

நாள்தோறும் புதியன விரும்பு

நாள்தோறும் பழமையை மீறு

நாள்தோறும் துணிந்து முடிவுசெய்!

நாள்தோறும் எதிர்நீச்சல் போடு

நாள்தோறும் அறிவினைத் தேடு

நாள்தோறும் அநீதியை எதிர் !

நாள்தோறும் அன்பை விதை!

நாள்தோறும் மானுடம் போற்று !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24 /10 /2022.

 

 

 

வாணம் – வாணவேடிக்கை – பட்டாசு

Posted by அகத்தீ Labels:

 வாணம் – வாணவேடிக்கை – பட்டாசு

 

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் உலகப் புகழ்பெற்ற நயகர நீர்வீழ்ச்சியின் இருபக்கமும் கனடாவும் அமெரிக்காவும் மாறிமாறி வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை தினசரி இரவு முழுக்க நடத்துமாம். இதனை வேடிக்கை பார்க்கவே பெரும் கூட்டம் கூடுமாம் . காணக் கண்கோடி வேண்டுமாம் இவ்வாண்டு நயகரா போய்வந்தபின் கனடாவிலிருந்து என் மகள் எழுதினாள்.சொன்னாள் .மகிழ்ச்சியின் பூரிப்பு கண்களிலும் வார்த்தைகளிலும் தெரிந்தது .

 

1985 மாஸ்கோ உலக இளைஞர் விழாவில் பங்கேற்ற போது , நிறைவு நாளன்று இரவு நடைபெற்ற வாணவேடிக்கைகளைக் கண்டு வியந்து போனவன் நான். .என் மகள் கனடாவிலிருந்து நயகரா வாணவேடிக்கை நிகழ்வைச் சொன்னபோது அது நினைவில் பூத்தது .

 

2008 ஆம் ஆண்டு சீனாவில் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த போது ; நிறைவு நாளன்று நடைபெற்ற வாணவேடிக்கைகளைக் கண்டு உலகமே வியந்து பாராட்டியது .அது ’எலக்ட்டிரானிக் ப்ளே’ன்னு ஒரு குற்றச்சாட்டை மேற்கு ஊடகங்கள் சொல்லிவிட்டு மூக்குடைபட்டது . சீன வாணவேடிக்கையின் அற்புதம் உலகில் தனித்துவமானது .மிகவும் மூத்ததும் கூட.

 

ஆதிகாலத்தில் இந்தியாவிற்கு பட்டாசுகள் அறிமுகமானதே சீனாவில் இருந்துதான் என்பது வரலாற்று உண்மை . சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் உருவானதே .சீன நாட்டிலிருந்தே தொழில் நுட்பம் கற்றனர் என்பதும் செய்தி .

 

இதன் பொருள் அதற்கு முன் நமக்கு பட்டாசே கிடையாது என்பதா ? அல்ல . சில வெடி பொருட்களும் முயற்சிகளும் நம்மிடம் உண்டு .சீனத்தின் மேம்பட்ட நுட்பம் ஒரு பெருங் கலையாக தொழிலாக பரிணமிக்க நமக்கு உதவியது .

 

நான் சிறுவனாக இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையின் போது தேங்காய் குடுமியில் குங்கிலிகம் ,கரித்துள் எல்லாம் பொதிந்து ஒரு கயிற்றில் கட்டி நெருப்பு வைத்து தலைக்கு மேல் சுற்றுவோம் பூப்போல் நெருப்புப் பொறி பறக்கும் . இருட்டு வானில் நம்மைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் பறப்பதுபோல் இருக்கும் .இதனை வாணம் என்போம். அது தனிக்கதை .வாணவேடிக்கை என்ற சொல் அதிலிருந்து பிறந்ததாக இருக்குமோ ?

 

கோயில் திருவிழாக்களில் இடம் பெறும் வாணவேடிக்கை மக்களை ஈர்க்கும் .கேரளாவில் திருச்சூரில் பூரம் திருவிழாவின் போது நடக்கும் வாண வேடிக்கை புகழ்பெற்றது .சில ஆண்டுகள் முன்பு கொல்லம் மாவட்டம் புட்டிங்கல்லில் அம்மன் கோவிலில் நடைபெற்ற வாண வேடிக்கையில் ஏற்பட்ட விபத்தில் 108 பேர் உயிர் பலியாகினர் . கேரளாவில் கோவில்களில் போட்டியாகவே வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது உண்டு.விபத்துக்குப் பிறகு இதற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவிட்டது .

 

வாணவேடிக்கைகளை கொண்டாட்டத்தின் ஒரு கூறாகவே மனித குலம் கொண்டிருக்கிறது .நேற்றும் அப்படித்தான் .இன்றும் அப்படித்தான். நாளையும் அப்படித்தான்.

 

தேர்தலில் வென்றால் பட்டாசு வெடிக்கிறோம் . தலைவர் வருகையின் போது பட்டாசு வெடிக்கிறோம். கல்யாணத்தின் போது பட்டாசு வெடிக்கிறோம். சாவையும் கொண்டாடி பட்டாசு வெடித்து விடுகிறோம் .

 

அப்படி இருக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை ஏன் ? இதுதான் பொதுவான கேள்வி .

 

தீபாவளிக்கு வெடிப்பதும் மற்ற சந்தர்ப்பங்களில் வெடிப்பதும் ஒன்றல்ல . அவை எப்போதோ எங்கோ குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மட்டும் வெடிப்பவை .இதனால் பெரிய பாதிப்பு இல்லை .இதுவும் தேவை இல்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து . ஊர் முழுக்க நாள் முழுக்க பட்டாசு வெடிப்பதின் மாசுகேட்டோடு அதை ஒப்பிடவே முடியாது .கொஞ்சம் யோசிப்போர் இதனை புரிந்து கொள்வர்.

 

 

பட்டாசுக்குத் தடை என்பது ஊடகங்களில் திரிக்கப்பட்ட

 செய்தி .மதவெறியர் கூச்சல் . உண்மையில் ஒழுங்கு படுத்தல் என்பதே சரி !

 

குறிப்பிட்ட நேரம் ,குறிப்பிட்ட ஒலி அளவு ,குறிப்பிட்ட மாசு அளவு இதற்கு உட்பட்டு வெடி என்பது பிழையானது அல்ல .மிகச்சரி ! மிகமிகச் சரி !

 

 

நாகரீக சமூகம் அதனை ஏற்க வேண்டும் . இந்துத்துவ வெறியரிடம் அந்த நாகரீகத்தை எதிர்ப்பார்ப்பது வீண்தான்.

 

ஒரு நாள் தான் ஒன்றுமாகாது என பொறுப்பில்லாமல் பேசும் அண்ணாமலைகளை என்ன சொல்வது ? மதவெறி தலைகேறினால் இப்படித்தான் பேசச்சொல்லுமோ ?

 

 

நான் மேலே தொடக்கத்தில் எடுத்துக் காட்டிய வாணவேடிக்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகும் .காதைக் கிழிக்காது . மூக்கை நெடி துளைக்காது .புகை மூச்சுமுட்டச் செய்யாது .சுற்றுச் சூழலை கவனத்தில் கொள்ளும் .

 

அப்படிப்பட்ட வாணவேடிக்கை அற்புதங்களை ஊர்கூடி செய்யலாமே .ஊரைக் கூறுபோட நினைக்கும் மதவெறியர் சாதிவெறியர் கூட்டத்துக்கு ஊர் ஒற்றுமை எனில் - ஊரும் சேரியும் கூடிய ஒற்றுமை எனில் கசக்கத்தானே செய்யும் ?

 

எல்லோர் தூக்கத்தையும் கெடுத்து ,பல விபத்துகளை உருவாக்கி , சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வீட்டுக்கு வீடு தெருக்கு தெரு பட்டாசு வெடிப்பதை நாம் ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது ? ஊர்கூடி வாண வேடிக்கை நிகழ்த்த ஏன் முன்வரக்கூடாது ? அப்போதும் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழல் மாசு காப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து  செய்ய வேண்டும் .

 

நான் மிக இளமையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டவன் . என் அண்ணனும் தம்பியும் மாமனும் மச்சானும் நண்பர்களும்  சுற்றியுள்ளோரும் வெடிக்கும் பாதிப்புகள் எனக்கும்தானே ! உங்களுக்கும் தானே !

 


சரி ! சரி ! பட்டாசு வெடிபோர் பாதுக்காப்பு விதிகளுக்கு உட்பட்டு வெடியுங்கள் ! வேறென்ன சொல்ல….

 

[ இங்கு சொல்லப்பட்டிருப்பவை முழுக்க முழுக்க என் தனிப்பட்ட கருத்துகளே .]

 

சுபொஅ.

23/10/2022.


சிறுகதை .6.தீபாவளியும் கிரஹணமும்

Posted by அகத்தீ Labels:

 


சிறுகதை .6.

 

 [ பிரச்சார சிறுகதையே என உறுதி அளிக்கிறேன் ]

 

 


 

தீபாவளியும் கிரஹணமும்

 

 

 மணி ஏழாச்சு .. துரைக்கு இன்னும் விடியலியா ? அப்படி விடிய விடிய என்னதான் போண்ல நோண்டிகிட்டு இருந்தானோ ? தீபாவளி அவனுக்கு கிடையாது ! சரி ! விட்டுத் தொலை ! கழுதையை திருத்த முடியாது ! பிள்ளைகளுக்காவது காலையில எழுந்திருக்கலாம் இல்லே …” – சிவதாணு புலம்பினார் .

 

 

 “ நல்ல நாளும் பொழுதுமாய் அவனைக் கரிச்சுக் கொட்றதே உங்க வேலையாப் போச்சு ! அவன் லேட்டாவே எழுந்திருக்கட்டும் ! நீங்கதான் மூணு மணிக்கே எழுந்திருச்சு யாரையும் தூங்கவிடாமல் அரிச்சிட்டிருக்கீங்களே “ – ஆவுடையம்மாள் பையனுக்கு வக்காலத்து வாங்கிற சாக்கில் புருஷனையும் போட்டு தாளிச்சிட்டா .

 

“ அடடா! லீவு நாள்ல கூட நிம்மதியா தூங்கவிடமாட்டீங்களே…” என சலிச்ச வாறு சுரேஷ் சோம்பல் முறித்தான் .

 

 “ அப்பா ! அப்பா ! இண்ணைக்காவது எங்ககூட எண்ணை தேய்ச்சி குளிங்க அப்பா ! “- பிள்ளைகளின் கோரஸ் கெஞ்சல் .

 

 “ உங்க அப்பா எண்ணிக்குடா எண்ணை தேய்ச்சி குளிச்சிருக்கான் … மொதல்ல காலையில குளிக்கச் சொல்லு …” சிவதாணு எரிச்சலோடு குரல் கொடுத்தார் .

 

 “ லீவு நாளில் எண்ணிக்கு நான் காலையில குளிச்சிருக்கேன் .இன்றைக்கும் அப்படித்தான்… வழக்கம் போல் மாலை 4 மணிக்குத்தான்….”- சுரேஷ்

 

 “ பல்லாவது விளக்குவானா கேளு !” _ சிவதாணு

 

 “ அப்பா ! நீங்க படுக்கையிலிருந்து எழுந்ததும் சிவசிவான்னு  சொன்னீர்களே ..எச்சில் வாயால் சிவநாமம் செப்பலாமோ …” – சுரேஷ் கேட்க .

 

“ஏண்டா ! அப்பாவ வம்பு இழுக்கிற … மொதல்ல எழுந்து போய் எச்சியை துப்பிட்டு பல் விளக்கிட்டு வந்து காபி குடி ..” –அம்மா ஆவுடையம்மாள் சத்தம் போட்டாள்.

 

 

 “வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயில் எச்சில் போக என்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே ..

என சித்தர் சிவவாக்கியர் பாடலை பாடிக்கொண்டே பாத்ரூம் நோக்கி நகர்ந்தார் சுரேஷ் .

 

 “ பாட்டி ! அப்பா ஏன் எண்ணை தேய்ச்சே குளிக்க மாட்டேங்கிறார் ?” – பேரப்பிள்ளைகள் பாட்டியைக் குடைய ஆரம்பித்தன .

 

“அத்தை ! இவங்களும் நூறு முறை கேட்டுட்டாங்க ! நீங்களும் நூறுமுறை சொல்லியாச்சு” – தருமு சொன்னாள் .

 

 “ பாட்டி ! பாட்டி ! அம்மா கிடக்கிறாங்க நீங்க சொல்லுங்க பாட்டி ..”

 

 “ உங்க அப்பன் சுரேஷ் எட்டாவது படிக்கும் போதுன்னு நினைக்கிறேன் .ஒரு திபாவளி அண்ணிக்கு காலங்காத்தால எண்ணை தேய்க்க உங்க அப்பனை அவங்க அப்பா அதுதான் உங்க தாத்தா  எழுப்பினாரு இவன் வர முடியாது .. தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை ..பார்ப்பான் பண்டிகை ..ன்னு முரண்டு பண்ணினான்…”

 

 “ அந்த கடன் காரன் ஈவெரா பொதுக்கூட்டத்தை கேட்காதேன்னு சொன்னேன் .  மாமன் கூட்டிட்டி போய் புள்ளயையும் கெடுத்திட்டான் … சரி ! பட்டாசு வெடிப்பியா ? பட்சணம் சாப்பிடுவியா ? புது டிரெஸ் போடுவியான்னு தாத்தா கேட்க …”

 

“ உங்க அப்பனும் பதிலுக்கு பட்டாசு வெடிக்கமாட்டேன் . புது டிரெஸ்ஸை இன்னொரு நாள் போட்டுக்குவேன் … அம்மா சுட்டத சாப்பிடுவேன்ன்னு சொல்ல …”

 

”அப்புறம்”- கோரஸாக குழந்தைகள் .

 

 “ அப்புறம் உங்க தாத்தா கோவத்தில ருத்ரதாண்டவமே ஆடிட்டா .. இன்னிக்கு எண்ணை தேய்ச்சு குளிக்கலைன்னா இனி ஆயுசுக்கும் எண்ணை தேய்ச்சுக் குளிக்கக்கூடாதுன்னு உணர்ச்சி வசப்பட்டு சொல்ல ; அவனும் சத்தியமா இனி எண்ணை தேய்ச்சி குளிக்கவே மாட்டேன்னு சொன்னவன் அப்புறம் எண்ணை பக்கம் தலைவச்சே படுக்கலை ..”

 

“ அதனாலே என்ன குடியா முழுகிப் போச்சு நாற்பது வருஷமா எண்ணை தேய்க்காததால எண்ணைக்கான செலவுதான் மிச்சம்..” என்றபடியே சுரேஷ் வெளியே வந்தான் .

 

 “ எண்ணை தேய்ச்சு குளிக்கலாமா ?கூடாதா ? பட்டிமன்றத் தலைப்பு ரெடி” என்றவாறு ராமசுப்பு உள்ளே நுழைந்தான் …

 

 “ இன்றைய தீபாவளி பட்டி மன்றம் வீட்டிலேயே ஆனால் என்ன லேடீஸ மட்டம் தட்ற ஜோக் தோரணங்க இருக்காது” தருமு பந்தை இலக்கு நோக்கி வீசினாள் .

 

 “ அடராமா ! ஆளவிடுங்க ! யாருக்கு உடம்புக்கு எண்ணை குளியல் தேவையோ அவங்க குளிங்க , வேண்டாதவங்க விடுங்க ,சடங்கு ,சம்பிரதாயம் ,கலாச்சாரம் ,புண்ணாக்குன்னு பேசிக்கிட்டு வராதீங்க..” உள்ளே நுழைந்த ராமலிங்க முதலிலேயே தீர்ப்பு வழங்க பட்டிமன்றம் துவங்காமலேயே முடிந்தது .

 

 “ தங்கச்சி ! என்ன ஸ்பெஷல் ஸ்வீட்டு ..”ராமசுப்பு கேள்வி

 

 “ அண்ணா நேற்றே உங்கள எதிர்பார்த்தேன் கறித்தீபாவளி ஆச்சே ! அண்ணா ஒரு ஸ்பெஷல் நியூஸ் அவர் தீபாவளி பிடிக்காதுன்னு சொன்னாலும் கறித்தீபாவளியில்  செம கட்டுதான்…” என கணவரை கிண்டலடித்தார் .

 

 “ சரி ! பலகாரம் முடிந்ததும் சீட்டுக் கச்சேரிதானே” சிவதாணு கேட்டார் .

 

 “ இதில மட்டும் அப்பா பிள்ளை நாத்திகர் ஆத்திகர் எல்லாம் ஒண்ணாயிடுறீங்க..” அம்மா ஆவுடையம்மாள் .

 

“ எனக்கொரு சந்தேகம் கர்நாடகாவில தீபாவளி நாலாவது நாள் கொண்டாட்டமே சூதாட்டம்தானாமே … போலிஸ்கூட கண்டுக்காதாமே …” தருமு வாயைக் கிளறிவிட்டாள்.

 

 “ தீபாவளிக்கு ஊருக்கு ஊர் ஒரு கதை ,நரகாசுரன் கதை , மகாவீர வர்த்தமானர் சமாதி ஆன கதை ,ராமாயண ராமன் அயோத்திக்கு திரும்பும் கதை ,லட்சுமி கதை , மகாபாரத பாண்டவர் வனவாசம் முடித்து ஹஸ்தினாபுரம் திரும்பும் கதை .. ஆமணக்கு எண்ணெய் கண்டுபிடிச்ச கொண்டாட்டம் , இப்படி அநேக உருட்டல்கள் . ஆங்காங்கு ஜனங்க கொண்டாடிக்கிட்டு இருக்கிற பண்டிகைகள மதம் ஹைஜாக் செய்து ஊருக்கு ஒரு கதை திரிச்சிட்டான்… ’ ஒரே நாடு ,ஒரு பண்டிகை , ஒரு கதை’ன்னு மோடி சொன்னால் எவனாவது கேப்பானா ? சாத்தியமா ?” இப்படி ராமலிங்கம் லெட்சர் அடிக்க ..

 

“ கர்நாடகாவில் தீபாவளிக்கு சூதாடுறது உண்டா இல்லையா சொல்லுப்பா…” சுரேஷ் இறுக்கினான் .

 

 “ உண்டு ! கர்நாடகாவில் சில பகுதிகளிலும் மகாராஷ்டிராவில் சில பகுதிகளிலும் சூதாட்டமும் பண்டிகையின் கூறாகும் ..அது மகாபாரத்தக் கதையோட சேர்த்தி..”

 

 

 “ சூதாட்டமும் பண்டிகையா ?” பாட்டி ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கொண்டார் .

 

 “ பொண்டாட்டிய வச்சு சூதாடினாலும் தருமர்தானே !” என ராமலிங்கம் வெடிவெடிக்க ராமசுப்பு கடுப்பானார் ..

 

“ பண்டிகையோ திருவிழாவோ ! ஆம்பளைகளுக்குதான் கொண்டாட்டம் .பொம்பளைகளுக்கு இரட்டை வேலை . கொண்டட்டமாவது மண்ணாங்கட்டியாவது “ என தருமு சலிக்க ஆவுடையம்மாள் ஆமாம் போட்டார்.

 

 “ சரி ! சரி ! சீக்கிரம் கச்சேரியை ஆரம்பிப்போம் … இண்ணைக்கு சாயங்காலம் சூரிய கிரஹணம் . பரிகாரமெல்லாம் இருக்குன்னு “ ராமசுப்பு சொல்ல …

 

“ ராமசுப்பு ! கச்சேரி முடிஞ்சதும் போய் கொஞ்சம் அருகம் புல் கொண்டாந்து தா ! கிரஹணத்தின் போது வீட்ல போட்டு வைக்கணும் …” சிவதாணு கேட்டுக்கொண்டார்.

 

 “ சாயங்காலம் நம்ம வீட்டுக்கு இந்த பக்கம் நிழலு விழுது ,காலையில அந்தப்பக்கம் விழுது அதுப்போல் நிலவு சூரியனுக்கு முன்புறமா செல்லும் போது பூமியில் சில பகுதியினருக்கு சூரியன் மறையும் .இதனால் மர்மக் கதிரோ விஷக் கதிரோ எதுவும் கிடையாது .அப்போது சாப்பிடலாம் . வெளிவரலாம் . சூரிய கிரஹணத்தைக் கண்டு களிக்கலாம்… கர்ப்பிணிப் பெண்களும் வெளியே வரலாம் பார்க்கலாம்” ராமலிங்கம்  லெட்சர் அடிக்க சிவதாணு கடுப்பானார் .

 

 “ அடேய் ! ரொம்ப ஓவராப் போறிங்க கர்ப்பிணிகளும் வெளிய வரலாம் திங்கலாம் .. என்னடா இதுவெல்லாம் ..”

 

“ அப்பா ! பதறாதீங்க உலகத்தில எந்த நாட்டிலாவது கர்ப்பிணி பெண்ணுங்க சூரிய கிரஹணத்தின் போது வெளியே வரக்கூடாதுன்னு இருக்கா ! திங்கக்கூடாதுன்னு இருக்கா ? அங்கெல்லாம் குழந்தைக செத்தாப் போச்சு … ஏன் விலங்கு ,புழு ,பூச்சி ,பறவை இவற்றில கர்ப்பமா இருக்குது போய் ஒளிஞ்சுக்கவா செய்யுது ? இங்கதான் அந்த முட்டாள்தனமெல்லாம்…” ராமலிங்கமும் சுரேசும் மாறி மாறி சொல்ல்..

 

 “ ராமசுப்பு ! அவங்க கிடக்காங்க தறுதலைங்க நீங்க அருகம் புல் கொண்டாங்க…” சிவதாணு கட்டளையிட்டார்.

 

 “ யார் !யாரு ! எங்கூட வந்து சூரிய கிரஹணத்தைப் பார்க்கவும் ஐஸ்கிரீம் சாப்பிடவும் வரீங்க … தமிழ்நாடு அறிவியல் இயக்கம் டெல்ஸ்கோப்பெல்லாம் ஏற்பாடு செஞ்சுருக்காங்க  “ ராமலிங்கம் கேட்க

 

பிள்ளைகள் ,சுரேஷ் ,தருமு எல்லோரும் கையை உயர்த்தினாங்க … சிவதாணு முறைக்க தருமு கையை இறக்கினாள் .

 

 “பாட்டி நீங்களும் வாங்க” எனப் பேரப்பிள்ளைகள் அடம் பிடிக்க பாட்டியும் சூரியகிரஹணத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட ரெடியானாள் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

22/10/2022.

 

 

 

 


உரைச் சித்திரம். 22. என் ஆடை .என் தேவை . என் தேர்வு .என் உரிமை.

Posted by அகத்தீ Labels:

 


உரைச் சித்திரம். 22.

 

என் ஆடை .என் தேவை .

என் தேர்வு .என் உரிமை.

 

எந்தப் பண்டிகை ஆயினும் புத்தாடை வாங்கித்தான் ஆக வேண்டுமா ? கடன் பட்டுத்தான் ஆக வேண்டுமா ? யார் அந்த விதியை திணித்தது . ஆடை என்பது அவரவர் தேவைக்கு வாங்குவதாக ,வாய்ப்பு சார்ந்து வாங்குவதாகவே அமையும். புத்தாடையோடும் பண்டிகை கொண்டாடலாம் .புத்தாடை இல்லாமலும் கொண்டாடலாம் .இப்பார்வையே சரி !

 

 

 

ஆடையில்லா மனிதன் அரைமனிதன் என்பது தமிழர் பண்பாடு .மனிதப் பண்பாடு . முழு அம்மணத்தை கும்பிட்டுப் பணியும் கும்பமேளா வடவர் பண்பாடு.

 

 

 

துகில் , கலிங்கம் ,அறுவை ,வம்பு [கச்சு] , படம் [சட்டை போன்றது] சிதாஅர் [ அழுக்கேறிய கந்தலாடை] புலராக் காழகம் [அர்ச்சகர் உடை] இன்னும் இதுபோல் ஏராளமான சொற்கள் ஆடை குறித்து சங்க இலக்கியத்தில் புழங்குகின்றன .

 

 

உண்பது நாழி உடுப்பது இரண்டே என்பது புறநானூறு . உடுப்பது நான்கு முழம் என்பது சொல்வழக்கு .  கந்தையானாலும் கசக்கிக் கட்டுஎன்பது மூதுரை .

 

 

செல்வச் செழிப்பு மிக்கோரின் ஆடை குறித்தும் ஏழைகளின் கந்தல் ஆடை குறித்தும் சங்க இலக்கியங்கள் ஒருங்கே பேசுகின்றன .

 

முடத்தாமக் கண்ணியார் எனும் புலவர் சோழன் கரிகால் பெருவளத்தானை நோக்கி பாடிய பாடல் ,பொருநரை ஆற்றுப்படுத்தும் பொருநர் ஆற்றுப்படையில் ஓர் காட்சி .

 

கரிகால் பெருவளத்தான் எங்களைப் பார்த்தான் . எப்படிப் பார்த்தான் ? அடங்கா   பேராசையோடு பார்த்தான் .விழுங்கிவிடுவதுபோல் பார்த்தான் . நாங்களோ  வறுமையில் வாடிக்கிடந்தோம் . நாங்கள் உடுத்திருந்ததோ கந்தல் ஆடை ; அதுவும் கிழிசலை தைத்து தைத்து வேற்று நூல் எது ஆடை எது என்று காண முடியாத அளவுக்கு கந்தலாயிருந்தது . பல நாள் துவைக்காமலும் வியர்வையில் நனைந்தும் இருந்தது . எங்களுக்கு முதலில் மாற்று ஆடை தந்தான்.

 

அவன் தந்தது பூப்போட்ட புத்தாடை , பாம்பு தன் தோலை அடிக்கடி உரிக்கும் . அத்தோல் மிக மென்மையதாக இருக்கும் .அதுபோல் இருந்தது .ஆனாலும் உள்ளுறுப்புகளை ஊடறுத்துப் பார்க்க முடியாது . எங்களை மழைக்கால குளிர் நிலவுவது போன்ற மாடத்தில் உட்காரவைத்து  போக்கில்’ [கள் போன்றதாக இருக்கக்கூடும்] என்கிற உற்சாக பானத்தை அளவின்றி தந்தான் .அதுவும் அழகிய ஆபரணங்கள் அணிந்த எழில்மிகு பெண்கள் பானத்தை ஊற்றிக் கொண்டே இருந்தனர். கறியை கடித்துக் கொண்டே பானத்தைக் குடித்து குடித்து துன்பம் தொலைத்து பெருமித செருக்கோடு எழுந்து நின்றோம்.”

 

இதில் ஏழையின் உடையும் மேட்டுக்குடி உடையும் ஒப்புவையோடு சொல்லப்பட்டு விட்டது .

 

இன்னொரு காட்சி  சிறுபாணாற்றுப் படையில் இருந்து ,

 

ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக் கோடனை நோக்கி பாணர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நாத்தனார் பாடியது .

 

பாணர்களே ! நீங்கள் நல்லியக் கோடனை நாடுங்கள் . அவன் எப்படிப் பட்டவன் தெரியுமா ? நீங்கள் அவனைக் கும்பிட கையெடுக்கும் முன்பே உங்களுக்கு ஆடை நல்குவான் .எப்படிப்பட்ட ஆடை தெரியுமா ? மூங்கிலை உரித்த தோல் போல அவ்வளவு நேர்த்தியான அழகான ஆடை .அப்புறம் பாம்பு சினந்து எழுவது போன்று எழுச்சியைத் தரும் கள்ளை குறைவின்றி ஊற்றித் தருவான். அப்புறம் அறுசுவை உணவு தருவான் .அது எப்படி இருக்கும் தெரியுமா ? அம்புகள் நிறைந்த அம்புறாதுணியையும் பூப்போட்ட கச்சணிந்த அர்ச்சுனனின் அண்ணன் வீமசேனன் எழுதிய சமையல் குறிப்பின் வழி சமைக்கப்பட்டதாகும் .

 

ஆடையின் நேர்த்தியை கவனீத்தீர்களா ? அடுத்து …

 

 

மலைபடுகடாம் எனும் சங்க இலக்கியத்தில் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் எனும் குட்டிப் பெயரைக் கொண்ட புலவர் ,பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் என்கிற இன்னொரு குட்டிப் பெயர்கொண்ட மன்னனை பாடியது.

 

நன்னன் தன்னை நாடி வருகிறவர்களுக்கு எல்லாம் ஆடை தருவான் . எப்படிப்பட்ட ஆடை தெரியுமா ? அரைகுறையாய் ஆடை உடுத்தி வந்தோருக்கு  யாரும் பழித்துச் சொல்ல முடியாத அளவு சிறந்த ஆடை . இழை மிக பெருக்கமாக பின்னப்பட்ட , மெல்லிய ,மென்மையான அதே நேரம் உடலுறுப்புகளை காட்சிப் படுத்திவிடாத அற்புதமான ஆடை தருவான் . எத்தனை நாள் தங்கினும் சலிக்காது நீண்ட நெல் அரிசியில் –[ யானைக் கொம்பன் அரிசியாக இருக்குமோ ?] விலங்குக் கறியோடு சேர்ந்து சோற்றை அள்ளி அள்ளி கொட்டிக் கொண்டே இருப்பான்.

 

மேலே சுட்டிய எல்லா பாடலிலும் ஏழையின் அழுக்கேறிய கிழிந்த அரையாடை காட்சிப் படுத்தப் பட்டுள்ளதையும் ;கூடவே அழகிய நேர்த்தியான மெல்லிய ஆடை காட்சிப் படுத்தப் பட்டிருப்பதையும் ஒப்பு நோக்கி அச்சமுதாய நிலை உணர்க ! கூடவே குடிக்கக் கள் ,புசிக்க கறி சோறு ! தமிழர் பண்பாடு சிறப்போ ! சிறப்பு !

 

காவிரியாறு கஞ்சியாய் போனாலும் நமக்கு என்ன கிடைத்துவிடும் ? புற்நானூற்றில் பொருண்மொழிக் காஞ்சியில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் சொல்லுகிறார் ;

 

உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் அடக்கி ஆளும் அரசராயினும் , இரவும் பகலும் அலைந்து திரிந்து கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் ஓர் வேடனாயினும்  உண்பது நாழி[ அன்றைய முகத்தால் அளவு] அளவுதான் ; உடுப்பது மேலாடை ,கீழாடை இரண்டுதான் . ஆகவே ஒருவன் பெற்ற செல்வத்தைக் கொண்டு பிறர்க்கு உதவாமல் , தானே அனுபவிக்க எண்ணினால் அழிந்து போவான் .

 

மேலும் ஒளவையாரும் நல்வழி (28)யில் ஒளவையாரும்  இதனை வேறுவகையில் சொல்லிச் செல்கிறார் . யாரா இருப்பினும் உண்பது நாழி அளவே .உடுப்பது நான்கு முழம் துணியே . ஆனால் ஆசையும் கனவும் கோடியாக இருக்கிறது .  அவனால் நிதானமாக சிந்திக்கவே முடிவதில்லை . இதனால் அவர் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருப்பதில்லை .எளிமையாகவும் இருப்பதில்லை .எளிதில் உடைந்து போகும் மண் கலயம் போன்றுதான் இருக்கும் .

 

இந்த நான்கு முழமும் ஆதியிலேயே வந்ததில்லை .

 

மரவுரி ,தோலாடை என பரிணாம வளர்ச்சி பெற்றதே ஆடை . தமிழர் வாழ்வியலில் நேர்த்தியான ஆடைகளின் சங்கமமாக அந்தந்த காலத்தில் இருந்துள்ளன .

 

ஒரு முறை மேனாள் துணைவேந்தர் ..அறவாணன் சென்னை பல்கலையில் ஊடக பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசும் போது ,” ஆடைகளை நேர்த்தியாக தைத்து உடுத்துவது மொகலாயர் காலத்திற்கு பின்னரேஎன்றார் . ஆம் . வரலாறு அதுதான் .தையல் இயந்திரத்தின் வருகை எல்லாம் மிகவும் அண்மையில்தான் .

 

நம் பெண் கடவுள்கள் ஜாஜ்கெட் அணிந்ததெல்லாம் ஓவியர் ரவிவர்மாவின் கைவண்ணம் எனச் சொல்லவும் வேண்டுமோ ?

 

உணவு ,உடை எல்லாம் காலந்தோறும் மாறி மாறி வந்திருக்கிறது .இனியும் மாறும் .நம் பண்பாடு எனச் சொல்லி மீண்டும் நான்கு முழத்துக்கு போக முடியுமா ? முப்பாட்டன் முருகனின் உடை என கோவணத்துக்கு மாற முடியுமா ?

 

ஆணோ பெண்ணோ உடை என்பது அவரவரின் தேவை ,விருப்பம் ,வாய்ப்பு சார்ந்தது . அவரவர் வாழ்நிலை சார்ந்தது .

 

நான் என்ன உடுக்க வேண்டும் என ஆணையிட யாருக்கும் உரிமை இல்லை .

 

என் ஆடை .என் தேவை .என் தேர்வு .என் உரிமை.

என் ஆடையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

 

 

 

 

 உருகு பவைபோ லென்பு குளிர்கொளீஇ

ஈரும் பேனும் இருந்திறை கூடி

வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த 80

துன்னற் சிதாஅர் துவர நீக்கி

   நோக்குநுழை கல்லா நுண்மைய பூக்கனிந்து

அரவுரி யன்ன அறுவை நல்கி

மழையென மருளும் மகிழ்செய் மாடத்து

இழையணி வனப்பி னின்னகை மகளிர் ...

போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்

வாக்குபு தரத்தர வருத்தம் வீட

ஆர வுண்டு பேரஞர் போக்கிச்

செருக்கொடு நின்ற காலை மற்றவன்     

 

பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார்

பாடப்பட்டவன் :: சோழன் கரிகால் பெருவளத்தான்

பொருநர் ஆற்றுப்படை

 

“…………………………………………………… மாசில்

காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்

பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்

காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்

பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட்   240

பனுவலின் வழாஅப் பல்வே றடிசில் ..”

 

பாடியவர் :– இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்

பாடப்பட்டவன் :– ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன்

திணை :– பாடாண் திணை சிறுபாணாற்றுப்படை

 

 

 இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்

எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ

முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு

நெடுவெ ணெல்லின் அரிசிமுட் டாது

தலைநாள் அன்ன புகலொடு வழிச்சிறந்து           565

பலநாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது

செல்வேந் தில்லவெந் தொல்பதிப் பெயர்ந்தென

மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்

 

மலைபடுகடாம், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் பல் குன்றக் கோட்டத்துச் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனைப் பாடியது.

 

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்

நடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பது இரண்டே

பிறவும் இல்லாம் ஓரொக்குமே,

செல்வத்துப் பயனே ஈதல்.”

 

புற்நானூறு . பொருண்மொழிக் காஞ்சியில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்:

 

 உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த

மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்.”

 

நல்வழி[28] .ஒளவையார் .

 

என் ஆடையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

19/10/2022.