விளக்குவீரா !!!

Posted by அகத்தீ Labels:

விளக்குவீரா !!!

சு.பொ.அகத்தியலிங்கம்

இந்தியா நெடுகிலும்
தேடிச் சலித்தேன்
நாகரீக மனிதர்
ஊருக்கு ஒருவரேனும்
அகப்படவே இல்லை...

இன்னும்
இந்தியா நாகரீக நாடெனச்
சொல்லித் திரியாதீர் !!

இப்படிச் சொல்லுவதால்
தேசபக்தி இல்லாதவனென்றோ
தேச விரோதி என்றோ
என்மீது முத்திரை குத்துவதில்
எனக்கு வருத்தமே இல்லை !!

எனது கவலை எல்லாம்
நாகரீக இந்தியரைத்
தேடிக் கண்டுபிடிப்பதுதான்..

சாதியை
வரதட்சணையை
தொலைக்காதவரை
நாகரீக மனிதரென்று
எப்படிச் சொல்வது ?
அருள்கூர்ந்து விளக்குவீரா !!!

எங்களுக்கு இல்லை குழப்பம்..

Posted by அகத்தீ Labels:எங்களுக்கு இல்லை குழப்பம்..

சு . பொ .அகத்தியலிங்கம்

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்a
எங்களுக்கு இல்லை..

வறுமையை அளப்பது எப்படி
அளவுகோல் தேவை இல்லை
எங்கள் அனுபவம் சொல்லும்...

ஊரை இரண்டாக்குவது யார் ? எது ?
ஆராய்ச்சி எதுவும் தேவை இல்லை
எங்கள் காயங்கள் சொல்லும்..

விலைவாசியை யார் குறைப்பார்கள் ?
யாரையாவது நம்பித் தொலைக்க
நாங்கள் இன்னும் இளிச்சவாயர்களா ?

வேலையின்மை எப்போது தொலையும் ?
வாக்குறுதிகள் சோறு போடாது
எங்களுக்குத் தேவை தலைகீழ் மாற்றங்கள் !!

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..

அற்புத சுகமளிப்பவர் அவரா ? இவரா ?
சிபாரிசுகளும் பரிந்துரைகளும் தேவை இல்லை
உண்மையான சிகிட்சையை யாமறிவோம்..

தொழுகையும் வழிபாடும் பூஜையும் பிரார்த்தனையும்
வியாபாரமாய் அரசியலாய் வலுத்தவன் கைப்பாவையாக
கடவுளே கண்கலங்கி சூழ்நிலைக் கைதியாய்...

அடுக்களையும் பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் சாலைகளும்
முகமூடிகளை கழற்றி எறிந்துகொண்டிருக்கின்றன
எங்களின் அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது...

அடிவயிற்று வெப்பத்தை அளவிட இயலுமோ ?
யுகநெருப்பை பன்னீரா அணைக்கும் ?
சூடேறிக்கொண்டிருக்கிறது எங்கள் ரத்தமும் கண்ணீரும்

எங்கள் உணர்வுகளைக் கணிக்க அளக்க
எந்தக் கொம்பனுக்கும் சக்தி இல்லை - வாழ்நிலை
 அணுதினம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது

.நங்கள் தெளிவாக இருக்கிறோம்
எங்கள் ரட்சகர்கள் ஊடகங்களில் இல்லை
அவரும் இல்லை இவரும் இல்லை

நாங்கள் தெளிவாக இருக்கிறோம்
நாங்கள் நிச்சயம் வாக்களிப்போம்
அது தீர்வல்ல என்பதறிவோம்..

உண்மையான மாற்று அருகில் இல்லை
வெகுதூரப் பயணத்துக்கு தயாராகிறோம்
இளைப்பாறுதலாய் இடைக்கால ஏற்பாடுகள்...

குழப்பம் ஊடகங்களுக்குத்தான்
எங்களுக்கு இல்லை..