பரண்கள் நேற்றும் இன்றும்

Posted by அகத்தீ Labels:

பரண்கள்: நேற்றும் இன்றும்

சு.பொ.  அகத்தியலிங்கம்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் பரண் இருந்தது . அதில் ஏற மரப்படியும் இருந்தது .உங்கள் வீடுகளிலும் இதுபோல் இருந்திருக்கும் . ஞாபகத்திரையை கொஞ்சம் ஓடவிட்டுப்பாருங்கள். தை மாதம் பொங்கலை ஒட்டியோ; சித்திரை வருஷப்பிறப்பை ஒட்டியோ வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடிப்பார்கள் . அப்போது பரணிலுள்ள எல்லாம் கீழே இறங்கும். அந்தக் காட்சி அப்படியே கண்முன் விரிகிறது .

மயில் குத்து விளக்குகள், தாம்பாளங்கள் ,வெங்கல பிள்ளையார் சிலை , மரத்தொட்டில் , நடைவண்டி,  தொட்டில் கம்பு ,கலைவேலைப்பாடுமிக்க மரப்பெட்டி, நெல் அளக்கும் மரக்கால் ,உலக்கை, குந்தாணி, பல்லாங்குழி, கடப்பாரை, வெட்டரிவாள்,  டிரங்பெட்டி, பித்தளை தவலைகள்,  வெண்கல உருளி, செம்புக்குடம் ,  கிணற்றில் விழுந்த வாளி போன்றவற்றை எடுக்கப் பயன்படும் பாதாளக் கொறடு, காலுடைந்த நாற்காலி, நாலைந்து மரப்பாச்சி பொம்மை , பிள்ளைகள் விளையாடும் மரச் சட்டிப்பானைகள், சைனா பீங்கான் ஊறுகாய்ச் சட்டி, மண் அகல் விளக்குகள்,  ஜாடிகள் ,  பழைய புத்தகங்கள், வெற்றிலை இடிக்கிற சிற்றுரல்-குழவி, திருகை ,  தாம்புக்கயிறு , சாக்குப்பைகள், டின்கள், பிஞ்ச விளக்குமாறு, சவுரிமுடி, கொண்டையூசி பழைய போர்வை... இத்யாதி இத்யாதி..

 “வீட்டை அடைச்சிக்கிட்டு இதெல்லாம் எதுக்கு? வேண்டாதவற்றை தூக்கிப் போட்டு விடலாமே  -” - இது அப்பாவின் குரல் . “ டேய் !அவசரப்பட்டு எதையும் செஞ்சுடாதே ! தலைமுறை தலைமுறையா ஞாபகமா இருக்கிறவற்றை போட்டுட முடியுமா? ஒவ்வொண்ணா பார்க்கலாம்..” - இது பாட்டியின் பதில். 

 “இது பாட்டி கொடுத்தது ,  இது திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திலே வாங்குனது, இது சுசீந்திரம் மாமா கொடுத்தது,  இது நாளை பேரப்பிள்ளைகளுக்குப் பயன்படும்...”  - இப்படி ஒவ்வொன்றாகக் கழித்த பிறகு பழைய புத்தகங்கள் கொஞ்சமும், சில சாக்குப் பைகளும், காலுடைந்த நாற்காலியும்தான் போகியில் கொளுத்தப்பட்டன.

வருடா வருடம் இதே காட்சிதான். எந்தப் பொருளும் கெட்டுப் போவதில்லை. சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் இல்லை . நேற்றின் நினைவுகளை பேசிக்கொண்டே இருக்கும்.

இப்போதெல்லாம் அந்த அளவு பரணுள்ள வீடுகளே அபூர்வம் ;  ஆனாலும் இருக்கிற லாப்ட் என்கிற குட்டிப் பரணில் ,  கட்டிலடியில், பாதரூமுக்கு மேல என கிடைக்கிற இண்டு இடுக்குகளில் அடைஞ்சி கிடக்கிறதை காலிபண்ண வீட்டிலே யுத்தமே நடக்கும் .

 “வீடு முழுக்க குப்பையும் கூளமும் நிறைஞ்சி போச்சு ; பூச்சி பொட்டு சேருது ஒரு நாள் டைம் ஒதுக்கி கிளீன் பண்ணுங்கண்ணு நானும் தலைபாட அடிச்சுக்கிறேன் .. இந்த மனுசன் காதிலேயே போட்டுக்க மாட்டேங்கிறாரு.. .” - இப்படி மனைவி பலநாள் புலம்பித் தீர்த்த பின்னால் ,  ஒரு நாள் ரோஷம் கொப்பளிக்க களத்தில் இறங்குவார்கள்.

இப்போதும் பழைய சாமான்கள்  குவிகின்றன . ஆனால் எது பயன்படும் என்று சொல்வது ரொம்ப சிரமம்.  நம் பட்டியலைப் பார்ப்போம்:

உடைந்த பிளாஸ்டிக் சேர், பாடாத ரேடியோ, ரிப்பேரான (இப்போது தேவைப்படாததாகவே ஆகிவிட்ட) டேப்ரிக்கார்டர், பழுதான டேபிள் ஃபேன், பிய்ந்த பிளாஸ்டிக் பொம்மைகள் ,  ஓட்டையாகிப்போன பிளாஸ்டிக் குடம் , ரிப்பேராகிப்போன குட்டி டிவி , கொஞ்சம் பைக் உதிரி பாகங்கள், பழைய இற்றுப்போன பிளாஸ்டி பாய்கள்,  ஃபீஸ் போன குண்டு பல்புகள், டியூப் லைட்டுகள், கொஞ்சம் எலக்ட்ரிக் ஒயர், சுவிட்சுகள், பிளக்குகள், பிய்ந்த மெத்தை,  உடைந்த சோஃபா, கொஞ்சம் பழைய பாத்திரங்கள், பாழாய்போன மிக்சி, கிரைண்டர், ஏசி மிஷின்,  மண்ணெண்ணை ஸ்டவ் ,  பழுதான கம்ப்யூட்டர், ஓட்டைக் கடிகாரம், உடைந்த கிரிக்கெட் மட்டை, பந்து, பழைய கேசட்கள், சிடிக்கள் , வாராந்திரிகள் , கொஞ்சம் புத்தகங்கள், ரிப்பன், பழைய பிய்ந்த தலையணை, ,சவுரிமுடி, ஹேர்பின், பவுடர் டப்பா, பிள்ளைகள் வாங்கிக் குவித்த கோப்பைகள், ஷீல்டுகள், நினைவுப் பரிசுகளென்னும் சில ஸ்டாண்டுகள், அட்டைப் பெட்டிகள் , தெர்மாகோல்கள், போட்டோக்கள்... இத்யாதி இத்யாதி...

போட்டோக்கள்,  சில பரிசுகள் தவிர எதுவும் ஞாபகச் சின்னமாய் இல்லை ; தாத்தா-பாட்டி முன்பு சண்டையிட்டது போல் சண்டையிடுவதில்லை ; அவர்களையே முதியோர் இல்லத்தில் தூக்கிப் போட்டுவிடலாமா என யோசிக்கிற  காலம் .  அவர்களும் கப்சிப். பாதுகாக்க வேண்டியது எதுவும் இல்லை.

அதனால் குவிந்த குப்பைகளை மொத்தமாய்த் தூக்கி பழைய சாமான் பிளாஸ்டிக் வாங்குகிறவனிடம்  போடுவதைத் தவிர வேறு வழியில்லை. அபூர்வமான புத்தகங்களையும் பழைய பேப்பர் கடைக்காரனிடம் போடுவது மட்டும்தான்  வருத்தத்துக்குரியது. இந்த பிளாஸ்டிக் குப்பைகள் வீட்டையும் நாட்டையும் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதைத் தவிர வேறொன்றுக்கும் உதவாது.

நேற்றைய பரண்கள் ஒவ்வொரு வீட்டிலும் குட்டி மியூசியமாக அருங்காட்சியகமாக இருந்தன. தலைமுறையின் ஞாபகவடுக்களை தழும்புகளை நம்மோடு பேசிக்கொண்டிருந்தது ; எல்லாவற்றையும் போற்றிப் பாதுகாக்கிற பாரம்பரியமாக இருந்தது; இடத்தை அடைத்தது . கனமாக இருந்தது. ஆனாலும் நெஞ்சம் அசைபோட நிறைய சேதி சொன்னது.

இன்றைய பரண்கள் குப்பைத்தொட்டியாய் உள்ளது . யூஸ் அண்ட் த்ரோ (பயன்படுத்து தூக்கி வீசு) கலாச்சாரத்தின் எச்சமாக உள்ளது . மாண்பைப் பறைசாற்றவில்லை ; மாறாக மாசாக - வீட்டுக்கும் நாட்டுக்கும் வில்லனாக உருவெடுக்கிறது ..

நேற்றையும் நேற்றைய பரண்களையும் அசைபோடுவோம்... இன்றை பரண்களை சுத்தபபடுத்துகையில் இன்றைய சுற்றுச்சூழல் மாசைக் குறைப்போம்...

நன்றி : தீக்கதிர் - வண்ணக்கதிர் 16 -02-2014Inline image 1

அசைபோட விவாதிக்க

Posted by அகத்தீ Labels:

அசைபோட... விவாதிக்க...
சு.பொ. அகத்தியலிங்கம்

எல்லாமாகிய எழுத்து ,ஆசிரியர் : சா . கந்தசாமி ,வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 , இளங்கோ தெரு , தேனாம்பேட்டை ,சென்னை - 600 018 .பக் : 144 , விலை : ரூ . 90
பேச்சு, எழுத்து, மொழி, படைப்பு, இலக்கியம், வாசகன், விருது, பாராட்டு, விமர்சனம், பிழை, சரி, எடிட்டர், சினிமா, உலக இலக்கியம் என எல் லாமாகிய எழுத்தே இந்நூல். “கட்டுரை என்பது ஆராய்ச்சி சார்ந்து - எடுத்துக்காட்டுகள் கொண்டதில்லை. படைப்பு போலவே சுதந்திரமான மனநிலையில் எழுதப் பட்டவை .எனவே படைப்புத்தன்மை கொண்டிருக்கிறது ” என முன்னுரையில் சா.க சொல்லியிருப்பது இந்நூ லைப் பொறுத்தவரை நிஜமே . புத்தகம் பேசுது இதழில் வெளிவந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “சர்ச்சையைக் கிளப்பாதது பேச்சோ ; எழுத்தோ கிடையாது . ஏனெனில் எழுதப்பட்டது எல்லாம் உண்மையானதோ சர்ச்சைக்கு அப் பாற்பட்டதோ கிடையாது ”- இந்த சா.க வின் வாக்குமூலம் இந்நூலுக்கும் பொருந்துமே !அசல் எழுத்து, அசல் இலக்கியம், அசல் படைப்பு என இந்நூல் நெடுக சா.க பேசுகிறார். எது அசல்? எது போலி? எது நகல் ? இதற்கான இலக்கணம் எதையும்கறாராக வரைய வில்லை .
வரையவும் முடியாது . கான மயில் , வான் கோழி இரண்டும் தோகை விரிப்பது ஒன்றை நகலெ டுத்து ஒன்றல்ல ; இரண்டும் அதனதன் இயல்பில் அசலாகவே செய்கின் றன . ஆனால் ஒப்பீடு செய்த படைப்பு மனம் கற்பித்தது உண்மையாகிவிடுமோ ! ஆக அசல் என வகைப்படுத்தல் தெளிவானதாக அமை யுமோ?.சில சொற்களும் சில செய்தியும் திரும்பத் திரும்ப வருகிறது ; வெவ் வேறு மாதங்களில் படிக்கும் போது சலிப்பில்லாமல் இருக்கலாம் , ஆனால் புத்த கமான பின் நெருடத்தான் செய்கிறது . ‘மரணமில்லா மனிதன் கட்டுரையில்’ ஜூலியஸ்பூசிக் மனைவி அகுஸ்தினா குறித்து முதலிலும் கடைசியிலும் கூறியது கூறல் ஏன் ? அக்காட்டன் மொழியில் எழு தப்பட்ட கில்காமெஷ் காவியம் பற்றிய குறிப்பு பல இடங்களில் ஏன் ? பேச்சின் வண்மை குறித்தும்,எழுத்தின் இயல்பு குறித்தும் சொன்னதும் சொல்லாமல் விட்டது குறித்தும் நூலில் திரும் பத்திரும்ப பேசப்படுகிறது.அசலான இலக்கியத்திற்கு மொழி கிடையாதென்கிறார் ; பண்டைய நாற் பத்தியோரு நூல்கள் மட்டுமா செம்மொழி எனக்கேள்வி எழுப்பி நவீன படைப் பிலக்கியத்திற்கு செம்மொழியில் உரிய இடம் வேண்டுமென்கிறார்; டால்ஸ் டாய் எழுத்தில் காந்தி கொண்ட பற்றுறுதியையும் லெனினுக்கு ஜாஜ்லண்டனின் உயிராசை மீதான காதலையும் அழுத்தம் திருத்தமாய் நினைவுகூர்கிறார்;
இருநூறு பக்கங்களில் சொல்ல முடியாத எதையும் இரண்டாயிரம் பக்கங்களில் சொல்லி முடித்துவிடமுடியாது என க.நா.சு கூறியதை வழிமொழிகிறார் ; உலகத் திலுள்ள கடினமான வேலைகளில் முதலாவது என்றால் படிப்பதுதான் என்கிறார்; நல்ல புத்தகம் கெட்ட புத்தகம் பேசிய சினிமா மௌன சினிமா பற்றியும் எழுது கிறார் ; கற்றது என்பது ‘ இன்னும் கற்க வேண்டியிருக்கிறது ’என்பதுதான் என முடி வாகக் கூறுகிறார் .ஆக இந்நூலில் அசைபோட சிலபல செய்திகள் உண்டு என்பது போல் விவாதிக்கவும் நிராகரிக்கவும் சில செய்திகளும் உண்டு .எந்த நூலுக்கும் எடிட்டர் தேவை இல்லை என்பது சா.க அபிப்பிராயம் ; ஆனால் எடிட்டர் தேவை என்பதே இன்றைய யதார்த்தம். “படைப்பிற்கு படிப்பு விரோதம் என்று சொல் லப்படுகிறது. எழுத்து ஞானத்தால் எழுதப்படுகிறது ”என்பது சா.கவின் கட்சி; ஆனால் ஞானம் பெறவே தொடர் வாசிப்பு அவசியமன்றோ ! படிப்பு படைப்புக்கு வலுசேர்க்குமே ! உலக ஞானத்தை அள்ளிவர படிப்புதேவையே ! ஆங்கில அறிவை போதுமான அளவு வளர்க்கத் தவறியதற்கான தண்டனையை இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பவன் நான். இப்படி சொல்லவும் இதில் நிறைய உண்டு. இலக்கியமும் சர்ச்சையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தை கள். இந்நூல் மட்டும் விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? படியுங்கள். உரையாடுங்கள்.

எல்லா சுதந்திரங்களோடும்……. எவ்வித சுதந்திரமுமின்றி..

Posted by அகத்தீ Labels:எல்லா சுதந்திரங்களோடும்……. 
எவ்வித சுதந்திரமுமின்றி..

சு.பொ. அகத்தியலிங்கம்..

தமிழ் செம்மொழி . இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலான பழமையும் இலக் கியப் பெருமையும் உடையது .  சுமார் ஐநூறு (?) ஆண்டு மட்டுமே பழமையா னது மலையாளம் . ஆயினும் சில மலை யாளப் படைப்புகளை படிக்கும் போது இது போன்ற படைப்புகள் தமிழில் எப் போது வரும் என ஏங்கவைக்கிறது .

சென்னை புத்தகக் கண்காட்சியில் வம்சிபதிப்பகத்தைபார்வையிட்டபோதுகே.வி .ஷைலஷா தான் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த மூன்று நூல்களை எனக்களித்தபோது நினைவலைகள் பின்னோக்கி குமிழியிட்டன .

துப்பறியும் கதைகளைத் தேடித்தேடி படித்துக்கொண்டிருந்த மாணவப் பருவத்தில் குரோம்பேட்டையில் அறிமுக மான  நூலகப் பெரியவர் அனந்த நாரா யணன் என்னிடம் சில மலையாள மொழி பெயர்ப்பு நாவல்களைக் கொடுத்தார் . அவை என் ரசனையை மாற்றிப்போட்டு விட்டன. மின்சார ரயிலில் பழக்கம் ஏற்பட்ட  தூக்குமேடைசி.ஏ.பாலன் மலையாள மொழிபெயர்ப்பு மட்டுமல்ல வங்கம் , கன்னடம் , தெலுங்கு உட்பட பல மொழி யாக்கங்களை என்னுள் செலுத்தினார் . உலக இலக்கியங்களையும் படிக்க தூண்டுகோலானார் . இந்த இலக்கிய வாசிப்பு பெரியார்பக்தனாக இருந்த என்னை சிவப்பு சிந்தனை நோக்கி நகர்த்தியது .  அவசரகாலத்தில் பி.ஆர் .பரமேஸ்வரன் மொழியாக்கம் செய்த கையூர் தியா கிகள் வரலாற்றோடு பிணைந்த  “நினை வுகள் அழிவதில்லை”என்னும் உயிர் காவி யம் உள்ளத்தை இன்றும் நிறைத்திருக் கிறது .
சூர்ப்பனகை ,சர்மிஷ்டா ,சுமித்திரா எனும் புராண கதாபாத்திரங்கள் பெயரில் மூன்று நூல்கள் ; அதேசமயம் தற்கால வாழ்வை ஆழமாகவும் நுட்பமாகவும் இவை ஊடுருவிப்பார்ப்பது நேர்த்தியா னது .  “ மூக்கும் முலைகளும் அறுக்கப் பட்ட சூர்ப்பனகையின் மீது அவளுக்கு எப்போதும் மரியாதை இருந்தது. சரித் திரத்தின் ஆரம்பக் குறியீடாகச் சூர்ப்ப னகை இருந்தாளென்றாலும் அதுதானே யதார்த்த பெண்விடுதலை”கே.ஆர்.மீரா வின் சூர்ப்பனகை சிறுகதையில் அனகா கேட்பது எவ்வளவு பொருள்பொதிந்தது.
“கடவுளே எனக்கு மட்டும் அந்த ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதேன் ?” என ‘இத யம் நம்மை ஆக்கிரமிக்கிறது’ சிறுகதை யில் சாவித்திரி அம்மாள் வேண்டுவது ஆணாதிக்க சமூகத்தின் மீது சவுக்க டியாய் வீழ்கிறது. குடும்பத்தினர் தன்னை கவனிக்க வேண்டுமானால் தனக்கு ஹார்ட் அட்டாக் வரணும் என யோசிப்பது; எவ்வளவு ஆழமாக புரையோடியிருக்கிற சமூகப் புண்ணின் குறியீடு ... எப்படி இவர்களால் மட்டும் இப்படி இதயத்தை ஊடுருவிப் பார்க்க முடிகிறது ..
முன்னாள் நக்சலைட் சரசம்மா வோடு உரையாடல்; அது ஒரு டிவி தொட ருக்கான நிகழ்ச்சித் தயாரிப்பு .பேரனைத் தாலாட்டும் அம்மம்மா சரசம்மா  , “குழந்தை பைஜூ பாக்கியவான் . மற்ற பிள்ளைகள் யாரும் கேட்க முடியாத பல கதைகளை தன் அம்மம்மாவிடமிருந்து அவன் கேட்கமுடியும் " எவ்வளவு கூர் மையான அவதானிப்பு . சமகால அரசியலும் கலைபொக்கிஷமாக முடி யும் என்பதை எஸ்.எஸ்.மாதவனின் சர்மிஷ்டா சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையே பறை சாற்றுகிறது . முன்னுரை யில் சொல்லியிருப்பதைப்போல , “ ஏதோ வாழ்கிறோம் என்று மட்டும் சொல்லிக் கொள்ளும் பெண்களின் மன உணர்வுகளோடு உறவாடி இருக்கிறார் ”மாதவன் . அந்தத்துறையில் நாம் வெகு தூரம் போகவேண்டியுள்ளது.
“ சுமித்திரா இறந்துவிட்டாள். இந்த ஒரு வரி தான் மொத்த நாவல் . இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கை அடங்கியிருக்கிறது ” என்கிறார் சுமித்ரா நாவலின் முன்னுரையில் எஸ். ராமகிருஷ்ணன் . 120 பக்கத்தில் முழு நாவலும் அடங்கி விடுகிறது . சிறு கதை , நாவல் என்பது எத்தனை பக்கம் என்பதிலா இருக்கிறது ? சாவு வீட்டுக் குள் ஒவ்வொருத்தர் மனவோட்டமும் எப் படியிருக்கும் ! அடடா ! இப்படியும் மனதை வாசிக்க முடிந்தால் ..கற்பனையில் படிக் கும் போது நன்றாகத்தான் இருக்கும் நிஜத்தில் இப்படி சாத்தியமானால் ...பெரும் குழப்பம் நேருமோ ?
“அளவாய் செதுக்கப்பட்ட / கண் ணாடித் தொட்டிக்குள் /கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன் / தினம் தினம் அக்க றையோடு / சுத்தம் செய்யப்படும் தண் ணீர் / பதப்படுத்தப்பட்ட செடிகொடிகள் / தேடி அலையாமல் வாய்க்குள் / வந்து விழும் உணவு / தேவையைச் சரியாய்ப் புரிந்துகொண்டு /அளிக்கப்படும் பொழுது போக்குகள் / என் இருத்தல் பார்ப்பவர்க ளுக்கு / நான் கொடுக்கும் சந்தோஷம் / அழகாய் வளைந்து நெளிந்து / பொன் நிறத்தில் மின்னி / வாலசைத்து தலைய சைத்து /சந்தோஷம் காட்டுவதாய் / எல்லா சுதந்திரங்களோடும் / எவ்வித சுதந்திரமுமின்றி ”
-சூர்ப்பனகை முன்னுரையிலும் கதையோட்டத்திலும் கலந்து நிற்கும் இக்கவிதை புதிய சாளரங்களைத் திறக்கிறது . பாரதி புத்தகாலயம் வெளி யிட்ட சத்யஜித்ரேவின்  ஃபெலுடாக் கதை வரிசையை பற்றி எழுதுகிறபோது தமிழில் இதுபோல் ஏன் முயற்சிகள் இல்லை என எழுதினேன் . இப்போது இம் மூன்று நூல்களும் அதேபோல் கேட்கத் தோன்றுகிறது . எட்டுத்திக்கும் சென்று அரிய பொக்கிஷங்களைத் தமிழில் கொண்டு சேர்க்கும் அரும்பணியை வம்சியும் ஷைலஜாவும் தொடரட்டும். இது போன்றவற்றை படித்துக் கிரகித்தும் தமிழில் புதிய ஊற்றெடுக்கட்டும் !

நன்றி : தீக்கதிர் , இலக்கியச் சோலை 17-02-2014

குப்பைத் தீவுகளும் கம்ப்யூட்டர் சுமைகளும்.

Posted by அகத்தீ Labels:குப்பைத் தீவுகளும் 
கம்ப்யூட்டர் சுமைகளும்...

பஸ்சில் ரயிலில் பயணிக்கும் போது பார்வையை ஜன்னல் வழியே வீசினால் வழிநெடுக ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைத் திட்டுகளைப் பார்க்கலாம் ; சுற்றிலும் வழிந்தோடும் சாக்கடையும் மொய்த்து அப்பும் கொசுவும் நம்மை உறுத்தும் . “ பூமித்தாய் /முதுமை எய்துவிட்டாளோ ! /தேசமெங்கும்/ பிளாஸ்டிக் பைகள் ”எனக் கவலைப்படுகிறார் கவிஞர் தமிழ்தாசன் .அதைவிட்டால் ரியல் எஸ்டேட் மனை ஒதுக்கீடுகள் பச்சை வயல்களின் கல்லறையாகக் காட்சி தரும் . பசுமை விரைவாய் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறது . லாபவெறியில் நாம் எங்கே போகிறோம் ?

சரி !உலகம் நேரான பாதையில் போகிறது ; நாம் மட்டும் குறுக்குப் பாதையில் போகிறோமா என்று யோசித்தால் ; அப்படி ஒன்றுமில்லை தீமை பயக்கும் பாதையில் பயணிப்பதில்தான் உலகத்தோடு ஒட்டஒழுகுகிறோம்.உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பைத் தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது!இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிறதாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்தத் தீவு சொல்கிறது. இப்படி ஒரு கட்டுரையில் வேதனைப்படுகிறார் சுப்ர பாரதிமணியன் .

மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசு கொலையைப் போல / மன்னிக்க இயலா /பெரிய குற்றம் / மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே !

இந்தியாவில் பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. பெங்களூருவில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.இந்திய அளவில் மின்னணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது .
சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம்.சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது.

இவற்றை முறையான மறுசுழற்சி மூலம் அகற்றினால் மட்டுமே மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இந்த சூழ்நிலையில், சென்னையில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது. அதிலும் சென்னை மாநகராட்சி அந்நிறுவனங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு காரணம், இந்த மின்கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதுதான். இவை எலக்ட்ரானிக் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களை பிரித்தெடுத்துவிட்டு, மற்றவைகளை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறங்களில் வைத்து எரிக்கின்றனர்.இவ்வாறு மின்கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் டயாக்சின் என்ற அமிலம் பொதுமக்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம் 6, பெரிலியம், கேட்மியம் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் வெளிப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி டிஎன்ஏ மூலக்கூறுகளும் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு வேளைகளில் காயலான் கடைக்காரர்கள் இதுபோன்ற மின்கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊராட்சி பகுதிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காயலான் கடைக்காரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மின்கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.மின்னணு குப்பைகளை மறு சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள் உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் இருக்கின்றன.

உரக்கக் கேட்கிறோம்

“மூச்சு திணறுதப்பா பூமிக்கு 
அவள்முந்தியில்
பிறந்தசந்ததிகள்
நாமொருமுடிவெடுக்க வேண்டாமா?”

- சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி ; தீக்கதிர் 07-02-2014

உப்பைக் காசு கொடுத்து வாங்கு!

Posted by அகத்தீ Labels:

உப்பைக் காசு கொடுத்து வாங்கு!

சு.பொ.அகத்தியலிங்கம்

சென்னை புத்தகக் காட்சியின் நிறைவு நாளன்று கடைசியாக ஒரு முறை சுற்றி வந்து விடுவோம் என சென்று கொண்டி ருந்த போது, “ தோழரே ! இந்தப் புத்தகங் களை கொஞ்சம் பாக்கிறீங்களா? ” என அறிமுகமான ஒரு இளைஞர் அணுகி னார். அவர் தோள் பை நிறைய பழைய புத்தகங்கள் இருந்தன. தற்போது அச் சில் இல்லாத பல அரிய இலக்கிய புத்த கங்களை சுமந்து கொண்டு தெரிந்தவர்க ளிடம் கடந்த பத்து நாட்களாக விற்று வருவதாக கூறினார். சினிமாவில் பிளாக் கில் டிக்கெட் விற்பது போல் அவருடைய அணுகுமுறையிருந்தது. அவர் காட்டிய என். ஆர். தாசனின் புத்தகம் நான் முன்பு படித்தது. என்னிடம் நீண்ட நாள் இருந் தது. யாரோ ஒரு நண்பர் இரவலாக பெற்று அவர் உடைமையாக்கிக் கொண்டது. மீண்டும் அந்தப் புத்தகத்தை படிக்க நினைத்த போது கிடைக்கவில்லை. இப் போது ஒரு பழைய பிரதி ஒன்று விற் பனைக்கு வந்தால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்? புத்தகக் காட்சி யில் வாங்கிய புதுப்புத்தகங்கள் ஒரு வித மன மகிழ்வை தந்தாலும்; அவற்றைப் படித்த பின் தான் அதன் மதிப்பு துல்லிய மாகும். ஆனால் முன்பே படித்த இந்தப் புத்தகம் அரிய புதையலைப்போல் எனக்கு மனநிறைவு கொடுத்தது.நான் அதற் காக செலவிட்டது வெறும் 15 ரூபாய் தான்.

அந்தப் புத்தகம் முழுவதும் மொழி பெயர்ப்புக் கவிதைகள். வழக்கமாக மொழிபெயர்ப்புக் கவிதைகள் மொழி பெயர்ப்பு நாவல்களைப்போல் - கட்டுரை களைப் போல் படிக்க சுவாரசியமானவை அல்ல. கொஞ்சம் அலுப்பூட்டுபவை தான். ஆனால் என். ஆர். தாசனின் சொற் கோலங் களில் அவை உயிர்ப்புடன் இருக்கும். அதுதான் அதன் சிறப்பு.
“கடலால் அலைக்கழிக்கப் பட்ட / பாறை கேட்டது; / ‘ உன்னுடன் எத்தனை யோ காலம் வாழ்ந்து விட்டேன் / ஆயி னும் ‘நான்’ என்றால் என்ன / என்பதை நீ எனக்குக் / கற்றுத் தரவே இல்லையே ’ / பாய்ந்து வந்த கடல் அலை சொல்லியது: / ‘இயங்கினால் நான் வாழ்கிறேன் / நின்றால் செத்து விடுகிறேன்’ ”
இப்படி உருது மொழியில் கவிஞர் இக்பால் சொன்னதை ‘வாழ்வும் போராட் டமும்’ என்ற தலைப்பில் படித்த போது இயங்கிக் கொண்டே இருக்க வேண்டிய தன் கட்டாயம் உறைத்தது.
“வரலாறு என்பது ஊர்வலம் / தனித்து நிற்காதே / மற்றவர்களுடன் கலந்து கொள் / ஊர்வலத்தில் சேர்ந்து போ / ஒரு வேளை உனக்குப் பக்கத்தி லேயே / ஒரு அவதார புருஷன் நடந்து வரலாம் ” இவ்வாறு சிந்திக் கவிஞர் டி. எல். வாஸ்வானி மொழிந்திருப்பதை மறு தலிக்க இயலுமா?
“ வெளவாலுக்குப் பகலாய் இருப்பது / காக்கைக்கு இரவாகும் / பணக்காரன் பிரியாணியைச் சுவைப்பது போல் / பசு புல்லைச் சுவைக்கிறது / எவரின் பார்வை துல்லியமானது? / யாருடைய கருத்து மேலானது/ ஒருவனின் ஈத் பண்டிகை விருந்து / மற்றவனுக்கு அமாவாசை விரதமாகிறது” இவ்வாறு காஷ்மீரிக் கவிஞர் குலாம் ஹாஸன் பேக் அரீஃப் போகிற போக்கில் வேற்றுமையில் ஒற் றுமை காண்பது இன்றைக்கும் தேசம் புரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தம் அல்லவா?

இன்றைக்கு செய்தி ஊடகங்களைப் பற்றி ஏராளமான விமர்சனங்கள் வரு கின்றன.ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவு மோசமென்று சொல்ல முடியாது அல்லவா ? ஆயினும் அப்போதும் ஊடகங்கள் எப்படி இருந் தன. சுதிர் கோலட்கர் என்ற மாராத்தியக் கவிஞர் பாடுகிறார் “ செய்தி, நிர்வாண மானது. / நாக்குகள் எல்லாம் துண்டிக் கப்பட்டு, / ஒன்றோ டொன்று இணைக்கப் பட்டால் / அதன் மூலம் பூமியையே சுற் றிக் கட்டி விடலாம். / ஆனால் ஒரே ஒரு நாக்கு மட்டும் / தனித்துக் கிடக்கும் / அது .... / செய்தியாளனின் நாக்கே. ”

வெள்ளைக்காரன் நம்மை அடிமைப் படுத்தினானா ? நாம் அடிமையானோமா ? இக்பால் பதிலளிக்கிறார், “ பரிதாபத்திற் குரிய இந்தியாவே, / உனது துயரங்கள் சொல்லக் கூடியன அல்ல. / எப்பொழு தும் மற்றவர் மகுடத்திலேயே / மாணிக் கமாகி ஜொலிக்கிறாய் / புதைகுழி துப்பிய பிணங்களாகவே / உனது விவ சாயிகள் இருக்கிறார்கள். / அவர்களின் சவப்பெட்டிகள் நொறுங்கி / மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கின்றன. / அவர்களின் உடலும், ஆத்மாவும் / அந் நியனுக்கு அடகு வைக்கப்பட்டு விட்டன. / வாழ்ந்த இடமும் மறைந்தது. / பரி தாபத்திற்குரிய இந்தியாவே. / வெள்ளையனுக்கு நீ அடிமையானாய் / நான் குற்றம் சாட்டுவது / அவனை அல்ல; / உன்னைத்தான்.” இன்று மட்டும் நிலைமை மாறியா விட்டது?

நிறைய காதல் கவிதைகள் இத் தொகுப்பில் உள்ளன. எதைச் சொல்லா மல் விடுவது ஹரீந்திர சட்டோபாத்தி யாயா எழுதிய ஒரு கவிதை , “ நான் ஒரு மண் பானையைப் போல் இருக்கிறேன் / காலச்சக்கரத்தில் நான் உருவாக்கப் பட் டேன். / இப்பொழுது கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன் / மண் பானையாக சிருஷ்டி பெறுவதற்கு முன்... / பயங்கர மாகச் சுழற்றப் பட்டேன். / வெயிலில் கிடந்து காய்ந்தேன் / நெருப்பில் கிடந்து வெந்தேன் / மண் பானையாவது தியாகத் தைத் தவிர வேறல்ல. / அன்பே, உன் கைகளில் நான் / மண் பானையாகக் கிடக் கிறேன் / இதை நிரப்புவதும், நிரப்பாது விடுவதும் உன்னிஷ்டம்.

” இப்படியே பஞ்சாபி கவிதைகள், வங்க மொழி கவிதைகள், ஜப்பானிய கவி தைகள், அரபு கவிதைகள், இந்தி கவிதை கள் , மலையாள கவிதைகள் என பல ரத்தினங்களை தமிழுக்கு அப்போதே அள்ளித்தந்திருக்கிறார் என். ஆர். தாசன். ‘அங்கேயும் இங்கேயும் ஆகா யங்கள்’ என்கிற அந்தக் கவிதைத் தொகுப்பை இப்போது படித்தாலும் இலக்கிய மதுவைக் குடித்த போதை ஏறும். அதே சமயம் புதிய வீரியம் நம் முள் ஊற்றெடுக்கும். என்னார்தா, பத்மன், யக்ஞன் ஆகிய புனைப் பெயர்க ளில் கண்ணதாசன், சோலை, கவிதாசரண் போன்ற இலக்கிய இதழ்களில் பிரசுரமான வற்றின் தொகுப்பு இது. 240 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை யாராவது மறுபதிப்பு செய்தால் எவ்வளவு பயனுள் ளதாக இருக்கும்?

என். ஆர். தாசன் தமுஎகசவின் தொடக்ககால முன்னணிப் படை(ப்பு) வீரர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

கவிதை மட்டுமல்ல கவிதை நடை யில் சில குட்டிக் கதைகளும் இடம் பெற் றுள்ளன. அவை வெறும் கதையல்ல, மானுடத்தின் மனச்சாட்சியை சவுக்கால் அடித்து தட்டியெழுப்பும் . எடுத்துக்காட் டாக சா அதியின் பாரசீகக் குட்டிக்கதை ஒன்றை பார்ப்போம். தலைப்பு: அடிச்சுவட் டில் “ வேட்டையாடிய மிருகங்களையும், பறவைகளையும் / சமைக்க உப்பு தேவைப்பட்டது. / பக்கத்து கிராமத் திற்குச் சென்று / உப்பு வாங்கி வரச் சொன்னான் அரசன். / உப்பு வாங்கச் செல்பவனிடம் / அரசன் முன்னெச்சரிக் கையுடன் சொன்னான்:/ ‘உப்பிற்கான காசைக் கொடுத்து விடு. / இல்லை, அதுவே பழக்கமாகி விடும்.’ / அரச னுடன் இருந்தவர்கள் கேட்டார்கள்: / ‘இது அற்பமான விஷயம் / இதற்கு இவ் வளவு எச்சரிக்கை தேவையா?’ / அரசன் சொன்னான் / ‘உலகில் கொடுமைகள் சிறிய அளவிலேயே / இருந்தன துவக் கத்தில். / பின்னால் வந்த ஒவ்வொருவ ரும் தான்/ அவற்றை இந்த அளவிற்கு / வளர்த்து விட்டதற்குப் பொறுப்பாவர். / அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால், / அவனது ஆட்கள் / ஒரு மரத் தையே சாய்த்து விடுவார்கள்... ” சரிதானே !

பாரசீகம் உயர்ந்த கலாச் சாரத்திற்கு சொந்தமானது. இப்போது ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளை யாய் பிறந்து காலப்போக்கில் பயங்கர வாதிகளாய் மாறிவிட்ட சிலரைக்கொண்டு மொத்த அரபையும் அல்லது இஸ்லாமி யர்களையும் கொடுமையா னவர்களாய் சித்தரிக்கும் மதவெறியர்களுக்கு இது போன்ற பாரசீக கதைகள் அவர்களின் விழுமியத்தை பறைசாற்றும்.

ஜப்பானிய கவிதை ஒன்றில் பேச்சு பற்றி வருகிறது, “ என் இதயத்தில் இருப் பவற்றை / நான் வெளிப்படுத்தவே செய் வேன். / பேசுவதை என்னால் எப்படி நிறுத்த முடியும் ?/ அஃறிணைப் பொருள்களான / இந்தப் புற்களும் மரங்களும் கூட / ஒலி எழுப்பி காற்றுடன் சம்பாஷிக்கின்றன.” ஆமாம் நீங்கள் மட்டும் எல்லா அழகை யும் அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு எப்படி மௌனமாக இருக்கிறீர் கள் என்று நம் கன்னத்தில் அறைந்து கேட்பது போல் அல்லவா இருக்கிறது?

கவிதைகள் என்பது , “ என் கவிதை கள்... / எனது உயிர்; எனது கண்ணீர்; / எனது ரத்தம்; எனது மூச்சு; / எனது நம்பிக்கைகள்; எனது அச்சங்கள்.” - இது ஜப்பானியர்களுக்கு மட்டுமானதா? தமிழர்களுக்கும் தானே பொருந்தும்.

நன்றி :தீக்கதிர் ,இலக்கியச்சோலை 03-02-2014