குப்பைத் தீவுகளும் கம்ப்யூட்டர் சுமைகளும்.

Posted by அகத்தீ Labels:குப்பைத் தீவுகளும் 
கம்ப்யூட்டர் சுமைகளும்...

பஸ்சில் ரயிலில் பயணிக்கும் போது பார்வையை ஜன்னல் வழியே வீசினால் வழிநெடுக ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைத் திட்டுகளைப் பார்க்கலாம் ; சுற்றிலும் வழிந்தோடும் சாக்கடையும் மொய்த்து அப்பும் கொசுவும் நம்மை உறுத்தும் . “ பூமித்தாய் /முதுமை எய்துவிட்டாளோ ! /தேசமெங்கும்/ பிளாஸ்டிக் பைகள் ”எனக் கவலைப்படுகிறார் கவிஞர் தமிழ்தாசன் .அதைவிட்டால் ரியல் எஸ்டேட் மனை ஒதுக்கீடுகள் பச்சை வயல்களின் கல்லறையாகக் காட்சி தரும் . பசுமை விரைவாய் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறது . லாபவெறியில் நாம் எங்கே போகிறோம் ?

சரி !உலகம் நேரான பாதையில் போகிறது ; நாம் மட்டும் குறுக்குப் பாதையில் போகிறோமா என்று யோசித்தால் ; அப்படி ஒன்றுமில்லை தீமை பயக்கும் பாதையில் பயணிப்பதில்தான் உலகத்தோடு ஒட்டஒழுகுகிறோம்.உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பைத் தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது!இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிறதாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்தத் தீவு சொல்கிறது. இப்படி ஒரு கட்டுரையில் வேதனைப்படுகிறார் சுப்ர பாரதிமணியன் .

மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசு கொலையைப் போல / மன்னிக்க இயலா /பெரிய குற்றம் / மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே !

இந்தியாவில் பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. பெங்களூருவில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது.இந்திய அளவில் மின்னணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது .
சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம்.சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது.

இவற்றை முறையான மறுசுழற்சி மூலம் அகற்றினால் மட்டுமே மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.இந்த சூழ்நிலையில், சென்னையில் அங்கீகாரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது. அதிலும் சென்னை மாநகராட்சி அந்நிறுவனங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு காரணம், இந்த மின்கழிவுகளை அகற்றுவதில் காயலான் கடைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதுதான். இவை எலக்ட்ரானிக் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களை பிரித்தெடுத்துவிட்டு, மற்றவைகளை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறங்களில் வைத்து எரிக்கின்றனர்.இவ்வாறு மின்கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் டயாக்சின் என்ற அமிலம் பொதுமக்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம் 6, பெரிலியம், கேட்மியம் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் வெளிப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி டிஎன்ஏ மூலக்கூறுகளும் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு வேளைகளில் காயலான் கடைக்காரர்கள் இதுபோன்ற மின்கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊராட்சி பகுதிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் காயலான் கடைக்காரர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மின்கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.

எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது.மின்னணு குப்பைகளை மறு சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள் உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் இருக்கின்றன.

உரக்கக் கேட்கிறோம்

“மூச்சு திணறுதப்பா பூமிக்கு 
அவள்முந்தியில்
பிறந்தசந்ததிகள்
நாமொருமுடிவெடுக்க வேண்டாமா?”

- சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி ; தீக்கதிர் 07-02-2014

0 comments :

Post a Comment