பொருளாதார பெருமந்தத்தின் உயிர் சித்திரம்.

Posted by அகத்தீ Labels:

 


பொருளாதார பெருமந்தத்தின் உயிர் சித்திரம்.

 

 “இயேசு எக்கச்சக்கமா பிரச்சனைகள்ள மாட்டிகிட்டார்னு தோணுது. அவரால் எதுவும் செய்ய முடியல. இதெல்லாம் என்ன நல்லதுன்னும், எதிர்த்துப் போராடுறதுலையும் , கணக்குப் போடுறதுலயும் என்ன உபயோகம்னு அவருக்கு தோணிடிச்சு . அவர் களைப்பாய் போயிட்டார் . அவர்கிட்ட இருந்த ஊக்கமெல்லாம் வடிஞ்சு போச்சு .அவர் முடிவுக்கு வர சமயத்துல நரகமாயிடிச்சு .அவர் அதனாலே காட்டுக்கு போயிட்டார்.”

 

1939 ல்  ஜான் ஸ்டீன்பெக் எழுதிய “கோபத்தின் கனிகள்” அமெரிக்க நாவல் . எண்பது ஆண்டுகள் கழித்து 2019 ல் தமிழில் வெளிவந்தது . அப்போது ஐம்பது பக்கங்கள் படித்துவிட்டு ஏனோ மூடி வைத்துவிட்டேன் .என் புத்தகக் கட்டின் அடியில் புதைந்துவிட்டது . தமிழாக்கம் செய்த தோழர் ரமேஷ் இந்த நூலுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதைப் பெற்றார் .

 

 ‘படித்துவிட்டீர்களா ,படித்துவிட்டீர்களா?’ என பலமுறை என்னைக் கேட்டார் . நானும் , ‘படிக்கிறேன் ,படிக்கிறேன்’ என காலம் கடத்தி வந்தேன் . கடைசில் படித்துவிட்டேன். தாமதமாகப் படித்ததற்காக உள்ளபடியே மனம் வருந்தினேன். தாமதமாயினும் ஓர் பொருள் பொதிந்த நாவலைப் படித்ததற்காக  மகிழ்ந்தேன். தமிழில் தந்த ரமேஷுக்கு இனிய பாராட்டுகள் .நன்றி!

 

1929 -1939 பத்தாண்டுகள்  “பொருளாதார பெருமந்தம்”[ Great Depression]  உலகை உலுக்கி எடுத்தது . சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையை நார்நாராய்க்  கிழித்துப் போட்டது .இதன் உயிர் சித்திரம்தான் இந்நாவல் .

 

அமெரிக்காவில் ஒக்லாஹாமாவில்  நிலத்தில் குத்தகைக்கு உழுது பயிர் செய்து பசியாற்றிவந்தது டாம் ஜோட் குடும்பம். பொருளாதார பெருமந்தமும் டிராக்டரின் வருகையும் வங்கி முதலாளித்துவமும் விவசாயிகளை வேட்டையாடத் துவங்கியது . வீடுகள் இடிக்கப்பட்டன .விவசாயிகள் வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் .

 

“குத்தகைதாரர்கள் அழுதார்கள் .தாத்தா நிலத்துக்காக இந்தியர்களைக் [ அமெரிக்க பூர்வகுடியினரைக்] கொன்றார் . அப்பா நிலத்துக்காக பாம்புகளைக் கொன்றார் . நாம் ஒரு வேளை வங்கிகளைக் கொல்லலாம் . அவை இந்தியர்களையும் பாம்புகளையும்விட மோசமானவை . நாம் நம் நிலத்தை வைத்துக் கொள்ள போராட வேண்டி இருக்கலாம் , அப்பாவும் தாத்தாவும் செய்ததைப் போல…” என எண்ணினர் .

 

டிராக்டர்கள் , எந்த அன்பும் இல்லாமல் நிலத்தை வன்புணர்ச்சி செய்து கொண்டிருந்ததாக ஓரிடத்தில் நூலாசிரியர் எழுதுகிறார் .

 

வயிற்றுப் பசியும் வாழ்க்கைப் போராட்டமும் நிர்ப்பந்திக்க ஒக்லாஹாமாவைவிட்டு குடும்பம் குடும்பமாக வேலைதேடி  சுமார் 2200  கிலோ மீட்டர்களுக்கு அப்பாலுள்ள கலிபோர்னியாவுக்கு பயணப்பட்டனர் . டாம் ஜோட் குடும்பமும் அதில் ஒன்று . டாம் ஜோட் தற்செயலான ஒரு கொலையால் தண்டனை பெற்று சிறையிலிருந்தவன் , நீண்ட பரோலில் வெளிவந்தவன்.

 

பயணம் புறப்படுவதற்கு முன்பே தங்கள் உடமைகளை தவிட்டு விலைக்கு விறக வேண்டிய சூழல் . எரிகிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என அலையும் வியாபாரிகள் . அந்த காட்சியை நாவலாசிரியர் விவரிக்கும் போது நம் அடுத்தவீட்டில்  நிகழும் அவலக் காட்சியாய் அது விரிகிறது .

 

டாம் ,அவர் அப்பா டாம் ,அம்மா ,பாட்டி ,தாத்தா , கிறுத்துவ மதபோதகர் , மாமாஜான் , நாலு பெண்கள் , இரண்டு குழந்த்தைகள் உட்பட  மொத்தம் 13 பேர் மிகவும் மட்டமான பயணற்றுக்கு லாயக்கற்ற ஒரு டிராக்டரில் புறப்படுகின்றனர் . கலிபோர்னியாவில் ஆரஞ்சுத் தோட்டத்தில் நல்ல வேலையும் கூலியும் வாழ்க்கையும் அமையும் என்கிற பெருங்கனவோடு பயணம் துவங்குகிறது .

 

ஆனால் வழிநெடுக மெல்ல மெல்ல கனவு கலைகிறது .உண்மை உறுத்துகிறது .திரும்பிப் போகவும் முடியாது .புலம் பெயர்தலில் பெருவலி நாவல் நெடுக ஓலமாய் கேட்கிறது .ரணமாய் உறுத்துகிறது . வழியிலேயே தாத்தா இறந்து போகிறார் .பாட்டியும் இறந்து போகிறார் . கர்ப்பிணி மனைவி ஷாரன் ரோஜினை வழியிலேயே கைவிட்டுவிட்டு கணவர் கோணி தனிவழி போகிறார் .

 

வேலையில்லா பட்டாளம் பெருகப் பெருக கூலி குறைக்கப்படுவதும் ,பட்டி நாயினும் கீழாய் நடத்தப்படுவதும் , லாபவெறி கொண்ட மூலதனத்தின் மூர்க்க முகம் அணு அணுவாய் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது .கூலியைக் குறைக்க இரக்கமற்ற எந்த கொடுஞ்செயலையும் செய்ய சுரண்டும் வர்க்கம் தயங்காது . விளம்பரமும் வாழ்க்கையும் நேர் எதிரே ! ஓக்கிகள் என இழிவு படுத்தப்படுவதும் தொடர்கிறது .

 

இந்த புலம்பெயர்தலினூடே காதல் ,பிரிவு ,நட்பு ,பகை , வெறுப்பு ,மனிதம் , பக்தி ,கேள்வி ,நம்பிக்கை ,போராட்டம் ,ஊசலாட்டம் ,அடக்குமுறை ,கொலை , அடிதடி ,ஏமாற்றுதல்  அடடா ! எதுவும் விலகிப் போவதில்லை.தொடர்கிறது .

 

இந்நாவலைப் படிக்கும் போது கொரானா காலத்தில் நடந்த கொடூர பயணங்கள் நினைவில் வந்து போயின . பஞ்சம் பிழைக்கவும் ,வாழ்ந்து தொலைக்கவும் இன்னும் அகதிகளாய் புலம் பெயர்தல் நிற்கவில்லையே !

 

மத போதகர் கேஸி அறிமுகம் ஆனதிலிருந்து அவர் தன்னை போதகர் என சொல்லிக் கொள்வதையே விரும்பவில்லை . மறுதலிக்கிறார் . துவக்கத்தில் குறிப்பிட்டவை அவர் வரிகள்தாம்.  இலேசான கிண்டல் தொணியில் கிறுத்துவத்தை கேலி செய்கிறார் .மனிதத்தை நியாயத்தை பேசுகிறார் .

 

புலம் பெயர்தலினூடே சிவப்பும் போர்க்குணமும் எட்டிப் பார்ப்பதும் , போதகர் கேஸி ஓர் சிகப்பு மனிதனாய் பரிணமிப்பதும் நிகழ்கிறது .ஆனால் கேஸி கொல்லப்படுகிறார் .கேஸியைக் கொன்றவனை டாம் கொல்கிறார் .  ஏற்கனவே கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு பரோலில் இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு கொலை . முன்னது போலவே இதுவும் திட்டமிடப்படாத கொலை .

 

பின்னர் குடும்பத்திலிருந்து பிரிந்து தலைமறைவாய் செல்கிறார் டாம் . கடைசியாக தாயை சந்திக்கும் போது சொல்கிறார் , ” … அவர் [கேஸி] சட்டத்துக்கு விரோதமா எதுவும் செய்யலம்மா . நான் நிறைய யோசிச்சிக்கிட்டிருந்தேன் . நம்ம ஜனங்க பன்னி மாதிரி வாழ்றதப் பற்றி . ஒரு வேளை பத்து லட்சம் ஏக்கர் ஒரு ஆளுக்கு சொந்தமாக இருக்கலாம் .அதே சமயம் நூறாயிரம் பேர் பட்டினி கிடக்கிறாங்க .நம்ம ஆளுங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து குரல் கொடுத்தா…” டாம் சிந்தனையின் திசை சிவப்பு நோக்கி . சூழல் அவனை கைதியாய் தேடிக்கொண்டிருக்கிறது.

 

புலம்பெயர்தலின் போதும் பெண்களின்  சுமையும் வலியும் முன்பைவிட இரட்டிப்பாகிறது நாவல் நெடுக சமூகத்தின் வடுவாய் இந்த வலி பதிந்து நிற்கிறது ;அதே வேளை நெருக்கடி நேரத்தில் அவர்கள் காட்டும் வலிமையும் உறுதியும் வெளிப்படுகிறது .

 

 

சுரண்டலின் கோர நர்த்தனத்திற்கு இடையே இயற்கையும் பழிவாங்குகிறது .கடும் மழை வெள்ளம் . ஷாரன் ரோஜ் பிரசவவலியால் துடிக்கிறார் . குழந்தை இறந்து பிறக்கிறது . வெள்ளம் சூழ்கிறது. வேறு வழியின்றி ஒரு மேட்டுப் பாறைக்கு இடம் பெயர்கின்றனர் .

 

அங்குள்ள சிறுகொட்டகையில் ஷாரன் மார்பில் பால்கட்டித் தவிக்கிறார் .அங்கு ஒரு ஐம்பது வயதுக்காரரும் ஒரு சிறுவனும் ஏற்கனவே இருக்கின்றனர். அந்த ஐம்பது வயதுக்காரர் பசியால் மயங்கிக் கிடக்கிறார் .ஷாரன்  நெஞ்சில் பால் கட்டித் தவிக்கிறார் . எல்லோரும் வெளியேற ஷாரன் மார்பிலிருந்து பாலை அவர் வாயில் பீச்சுகிறார் . மாப்பசான் சிறுகதை ஒன்றிலும் இதுபோல் ஒரு முத்தாய்ப்பு படித்த ஞாபகம் .

 

மீண்டும் ஒரு பொருளாதார பெருமந்தம் உலகைச் சூழாது என முதலாளித்துவத்தால் உறுதி கூற முடியுமா ? முடியவே முடியாது . ‘கார்ப்பரேட்டே தெய்வம்’ எனத் தொழும் மோடி சர்க்கார் தொடருமாயின் இதனைவிட பேரவலத்தை இந்திய உழைப்பாளி மக்கள் சந்திப்பார்கள் .ஐயமில்லை.

 

ஜான் ஸ்டீன்பெக் 1939 ல் எழுதிய இந்நாவலுக்காக 1940 ல் புலிட்சர் விருது பெற்றார் . நூலாசிரியர் 1962 ல் நோபல் பரிசு வென்றார் . ஜான் ஃபோர்ட் இந்நாவலைத் தழுவி திரைப்படமும் 1940 ல் எடுத்தார் .

 

Steinbeck plainly stated his purpose in writing the novel: “I want to put a tag of shame on the greedy bastards who are responsible for this [the Depression and the plight of the worker].”

 

“ இந்த பெருமந்தத்துக்கும் தொழிலாளர் துயரத்துக்கும்  பேராசை பிடித்த எந்த bastards [ இந்த சொல்லை தமிழாக்க விரும்பவில்லை]காரணமோ அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்நாவலை எழுதினேன்.” என்றார்.

 

650 பக்க மொழி பெயர்ப்பு நாவலை , மாறுபட்ட பண்பாட்டு சூழலோடு பொறுமையாய் வாசித்தால் பெரிதும் விழிப்புணர்ச்சி உண்டாகும்.

 

ஒவ்வொரு சிறு நகர்வை , இயற்கையை ,சுற்றுச்சூழலை , மனிதர்களின் சின்ன சின்ன ஆசாபாச வெளிப்பாடுகளை , பொருளாதார மந்தத்தினை பயன்படுத்தி கொடும் சுரண்டலை அரங்கேற்றுவதை என எல்லாவற்றையும்  நுட்பமாக கிரகித்து துளித்துளியாக  விலாவாரியாக வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு வேளை அன்றைய காலகட்ட நாவல்களின் பொதுப் போக்காக இந்த பாணி இருந்திருக்குமோ ?

 

ரசித்து உள்வாங்கி பொறுமையாக வாசித்தால் சுவையாக இருக்கும் . சிலருக்கு மிக அதிகமான வர்ணனை அலுப்பூட்டலாம். வாசித்தலுக்கு இடையூறாகலாம்  . இது அவரவர் அளவுகோல். பலாச்சுளையை ருசிக்க பொறுமையாய் உரிக்காமல் பலாப்பழம் சாப்பிட முடியுமா ?

 

வாசிப்பீர் ! படிப்பினை பெறுவீர் !

 

கோபத்தின் கனிகள்  GRAPES OF WRATH [ நாவல் ]

ஆசிரியர் : ஜான் ஸ்டீன்பெக், தமிழில் : கி.ரமேஷ் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு :044 24356935 /24332424  / 8778073949    www.thamizhbooks.com    ,  thamizhbooks@gmail.com

பக்கங்கள் : 630  , விலை : ரூ.595/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

1/10/2023.

 

 

 

 

 


பின் நகர்த்தி

Posted by அகத்தீ Labels:

 


பின் நகர்த்தி

வைக்க வேண்டுமாம் .

 

வரலாற்றை

சமூகத்தை

வாழ்க்கையை

 

பின் நகர்த்தி

வைக்க வேண்டுமாம் .

 

வேதகாலத்திற்கு

சோழர் காலத்திற்கு

ஆதி காலத்திற்கு

 

அவரவர் கற்பனைக்கு ஏற்ப

பின் நகர்த்தி

வைக்க வேண்டுமாம் .

 

நவீன உடை

நவீன வாழ்க்கை என

அறிவியலின் படைப்புகளின்

மீது நின்று கொண்டு

அறிவியல் சாதனங்களின் வழி

கதறுகிறார்கள் மாறச்சொல்லி

 அறிவியல் தவிர்த்து

பழைய பஞ்சாங்கமாய் …

 

பின் நகர்த்தி

வைக்க வேண்டுமாம் .

 

சுபொஅ.

29/9/2023.

 

 


கேட்கக் கூடாது.

Posted by அகத்தீ Labels:


கேட்கக் கூடாது.

அவன் நன்றாக நீந்துவான்
காரணம்
அவன் மீன் சாப்பிடுவான்.
அவள் நன்றாக பாடுவாள்
காரணம்
அவள் குயில் சூப் குடிக்கிறாள்.
அவன் நன்றாக தவமிருக்கிறான்
காரணம்
அவன் கொக்குஃப்ரை சாப்பிடுகிறான்
அவள் நன்றாக ஆடுவாள்
காரணம்
அவள் மயில் பிரியாணி உண்கிறாள்
அவன் வேகமாக பாய்கிறான்
காரணம்
அவன் சிறுத்தை ரோஸ்ட் சாப்பிடுகிறான்
அவர்களுக்கு மணம் குணம் கிடையாது
காரணம்
அவர்கள் மாட்டு மூத்திரம் குடிக்கிறார்கள்
மாட்டிச் சாணி சாப்பிடுகிறார்கள்.
மூளை உண்டா என கேட்கக்க்கூடாது
வேதம் அனுமதிக்கவே இல்லை.
சுபொஅ.
22/9/2023.
சுபொஅ.
22/9/2023.

All reaction

தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம் !

Posted by அகத்தீ Labels:

 

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன்.

 

 


தூங்கவிடாமல் துரத்தும்

குழந்தைகளின் மரண ஓலம் !

 

 

 இந்நூலை நேற்று படிக்கத் துவங்கினேன் . முதல் அத்தியாயத்தை முடிக்கும் முன்பே முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன் .” என 16/9/2023 ல் முகநூலில் பதிவிட்டேன் .

 

ஆயினும் மனந்தளராத விக்கரமாதித்தன் போல் கொஞ்சம் கொஞ்சமாய் இப்புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். ஆயின் வழக்கமாக இரண்டு நாட்களில் 360 பக்க புத்தகத்தை இரண்டு நாளில் முடித்துவிடுவேன் .இந்நூலில் துயமும் வலியும் ஆறு நாட்கள் இழுத்துவிட்டது . அழுகை ,கோபம் ,ரெளத்திரம் எல்லாம் ஒருங்கே முட்டி நிற்கின்றன .

 

மூளை அழற்சி நோய் உச்சத்தில் இருந்த காலம் அது .கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 2017 ஆகஸ்ட் 10 இரவு திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போய்விட்டது . இதனால் அந்த இரண்டு  நாட்களில் 63 குழந்தைகளும் 18 பெரியவர்களுமாக 80 பேருக்கு மேல் உயிர் இழந்தனர் . இதில் உயிரைக் காக்க தன் சக்திக்கு மீறி மனிதத்தோடு கடுமையாகப் போராடி பல உயிரைக் காப்பாற்றியவர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் கஃபீல் கான்.

 

ஆனால் அவரே குற்றவாளியாக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்டு ,ஜாமினும் மறுக்கப்பட்டு ,நீதிமன்றக் கதவுகளும் அதிகார வர்க்க வாயில்களூம் இறுக மூடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட உண்மைக் கதை ; முழு ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் இந்நூலில் பதிவாகி உள்ளது .

 

 

மாநில பாஜக முதல்வர் ஆர் எஸ் எஸ் காவியுடை யோகி ஆதித்தியநாத் மகராஜ் மனச்சாட்சியே இல்லாமல் வெறியோடு பொய்யை , அவதூறைப் பரப்பி கஃபீல் கான் குடும்பம் முழுவதையும் அலைக்கழித்தை கண்ணீரோடும் வெப்பத்தோடும் இந்நூல் சொல்கிறது .

 

இங்கே எதை எழுதினாலும் எழுதாமல் விட்டதே அதிகமாக இருக்கும் . ஆயினும் நூல் அறிமுகத்தில் வெறும் புலம்பல் கூடாது அல்லவா ?

 

  “ பொறுமை காத்தது போதும் – எல்லாவற்றையும் எழுதிட வேண்டியதுதான்.என்ன நேர்ந்தாலும் சரி ,உலகத்திற்கு உண்மையைச் சொல்லிவிட வேண்டும் . என் மனைவியும் சகோதரர்களும் .இதற்கு ஒப்புக் கொண்டனர் .” என்கிற கஃபீல் கான் எழுதிய பத்து பக்க கடிதத்திலிருந்து ……. [நூலில் இடம் பெற்றுள்ளது .]

 

 “ 8 மாதங்களாக ஜாமின் இல்லாமல் சிறையில்!

நான் நிஜமாக குற்றவாளியா ?

….. ….. ….. ….. …… …..

…… …… …… ……. ……..

2017 ஆகஸ்ட் 10ம் தேதி இரவு அந்த வாட்ஸ் அப் தகவல் கிடைத்த கணத்தில் இருந்து ஒரு மருத்துவர் , ஒரு தகப்பன் , ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன் .

திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் அபாயக் கட்டத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயன்றேன் .அந்த அப்பாவிக் குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் இயன்றதைச் செய்தேன் .

வெறித்தனமாக எல்லோரையும் அழைத்தேன் . கெஞ்சினேன் . ஓடினேன் .கார்  ஓட்டினேன் .கத்தினேன் .கதறினேன். அறிவுரை சொன்னேன் . ஆறுதல் சொன்னேன் .செலவு செய்தேன் .கடன் வாங்கினேன். அழுதேன் .மனிதனால் சாத்தியப்பட்டது அனைத்தையும் செய்தேன்.

எனது துறைத் தலைவரை ,சக மருத்துவர்களை ,கல்லூரி முதல்வரை ,பொறுப்பு முதல்வரை ,சுகாதாரத்துறை உதவி இயக்குநரை ,தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரை எல்லோரையும் அழைத்து ,அழைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடுமையான சூழலை விளக்கினேன் .[ அந்த அழைப்புகளின் ஆவணங்கள் என்னிடம் உள்ளது .]

 

மோடி கேஸ் ,பாலாஜி கேஸ் ,இம்பீரியல் கேஸ் ,மயூர் கேஸ் என அனைத்து ஆக்ஸிஜன் நிறுவனங்களிடமும் கெஞ்சினேன் .எங்களைச் சுற்றியுள்ள அத்தனை மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டேன்.

 

அவர்களுக்கு ரொக்கமாக பணப்பட்டுவாடா செய்தேன் .சப்ளை வந்ததும் பாக்கியைத் தருவதாகச் சொன்னேன் .[ திரவ ஆக்ஸிஜன் வரும் வரையில் ஒரு நாளைக்கு ,சுமார் 250 சிலிண்டர்களை ஏற்பாடு செய்தோம். ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை ரூ. 216 /-]

 

ஒவ்வொரு படுக்கையாக ,வார்டு நூறு முதல் 12 வரையிலும் அவசர சிகிட்சைப் பிரிவிலும் ஓடி ஓடி ஆல்ஸிஜன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தேன் .

 

என் காரில் பக்கத்து மருத்துவ மனைகளில் இருந்து சிலிண்டர் வாங்கி வந்தேன் . அது போதவில்லை .ஷஸ்த்ராசீமாபால் ராணுவ முகம் சென்று அவர்களது டிஐஜியிடம் எங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.அவர் உடனடியாகச் செயல்பட்டார்.சிலிண்டர்களைத் தூக்கிவர ராணுவ வீரர்களோடு பெரிய லாரியையும் அனுப்பினார் .

 

அவர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தார்கள் .அவர்களது ஈடுபாடு [ மொழி பெயர்ப்பில் உற்சாகம் என்றிருக்கிறது] எங்களுக்கு உத்வேகம் தந்தது.எஸ் எஸ் பிக்கு [ டி எஸ் பி என இருந்திருக்க வேண்டுமோ ] சல்யூட் அடித்து நன்றி சொல்கிறேன் . ஜெய்ஹிந்த் !

….. …… ……. …… ……. ……. ……

……. …… …… …… ….. ….. …… …..

2017 ஆகஸ்ட் 12 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் திரவ ஆக்ஸிஜன் டேங் வரும் வரை முயற்சியை நிறுத்தவில்லை .

 

ஆனால் ,மறுநாள் 2017 ஆகஸ்ட் 13 அன்று முதலமைச்சர் யோகிஜி மகராஜ் காலையில் வந்ததும் என் வாழ்க்கை தலைகீழாகப் புதைந்தது. ‘ நீங்கள்தான் ,சிலிண்டர்கள் ஏற்பாடு செய்த டாக்டர் கஃபீலா ?’ நான் ,’ஆமாம் .சார்!’என்றேன் . அவருக்கு கோபம் வந்துவிட்டது .’ இப்படி சிலிண்டர் ஏற்பாடு செய்ததன் மூலம் நீ ஹீரோ ஆகிவிடலாம் என்று நினைக்கிறாய் … பார்ப்போம்’ என்றார் …….”

 

நான்கு பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்நூலில்  “ கடமை” என்ற தலைப்பு கொண்ட முதல் பாகம் 110 பக்கங்கள் கொண்டது . இதயம் உள்ளவரால் அழாமல் வாசிக்க முடியாது . சம்பவங்களின் விவரிப்பு . குழந்தைகளை இழந்த பெற்றோரின் அழுகுரல் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும் . இந்த பாகத்தின் ஏழாவது அத்தியாயத்தின் , அதாவது இப்பாகத்தின் இறுதி அத்தியாயத் தலைப்பு  “கதாநாயகனிலிருந்து வில்லனாக..” விளக்கம் தேவையா ?

 

அடுத்த பாகத்தின் தலைப்பு “ சிறைவாசம்” 104 பக்கங்கள் ஏழு அத்தியாயங்கள் .  தலைப்பே உள்ளடக்கத்தைக் கூறும் . ஆளும் அதிகா பீடமும்  நிர்வாக இயந்திரமும்  பழிவாங்கலில் வெறியோடு இயங்கியதையும் மரத்துப் போன மனச்சாட்சிக்கும் ,ஊழல் முறைகேட்டின் மொத்த உருவமாகவும் இருப்பதை இந்த பாகம் படம் பிடிக்கிறது . இந்நூலில் ஓரிடத்தில் கஃபீல் கான் எழுதுகிறார் ;

 

 “இரண்டே வாரங்களில் ,மனித இயல்பு பற்றி நிறையவே தெரிந்து கொண்டுவிட்டேன். மிக மோசமான நிலையிலும் தாக்குப் பிடிப்பது சாத்தியம்தான் .கடவுள் மனிதனுக்கு ஏராளமான பொறுமையைக் கொடுத்திருப்பதால் ,அவன் மோசமான தண்டனையை எதிர்கொள்ளும் போதும் ,வாழ்வதற்கான விருப்பம் அணைந்துவிடுவதில்லை . தூக்குத் தண்டனை கைதியும் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்கிறார் . குடியரசு தலைவரிடம் கருணை மனு செய்கிறார் .சிறையில் உயிர் பிழைப்பதற்காக ரோஷமின்றி வாழப் பழகிக் கொண்டேன்.”

 

மறுபுறம் மனிதமும் உண்மையின் மீது பற்றும் கொண்டோர் சிறையிலும் வெளியிலும் இருந்தனர் .அவர்கள் கஃபீல் கானோடு நின்றனர் . ஒரு சிறு பகுதியும் சங்கிக் கோஷ்டியும் அவதூறை வீசிய போதும் , அதிகாரத் திமிர் வன்முறையை ஏவிய போதும் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும் இருந்தனர் . பயத்தால் வாய்பொத்தி மவுனம் காத்தவர்களும் இருந்தனர் .இரண்டையும் இந்நூல் நன்கு பதிவு செய்திருக்கிறது .

 

மூன்றாவது பாகத்தின் தலைப்பு ,” கண்டு பிடிப்பு” .18 பக்கங்களில் இரண்டு அத்தியாயங்களாய் நீள்கிறது .” முடிச்சுகள் அவிழ்கின்றன” “ வெளிச்சத்தின் நம்பிக்கையின் கீற்று “ இரண்டுமே உண்மையை நோக்கிய பயணத்தின் கடுமையைச் சொல்கிறது . நீதிமன்றத்தின் தடுமாற்றமும் கொஞ்சம் துளிர்விடும் நம்பிக்கையும் கலந்தது வாழ்வும் இந்த அத்தியாயமும்.

 

ஓரிடத்தில் கஃபீல் கான் சொல்கிறார் ,”நான் கபில் ஜானாகவோ ,கபில் சிங்காகவோ ,கபில் பாண்டேயாகவோ ,எவ்வாறிருந்தாலும் ஒரே மாதிரிதான் நடத்தப் பட்டிருப்பேன் என்று நம்புகிறேன். அதை பல மேடைகளில் கூறி இருக்கிறேன் . அதாவது நான் கிறுத்துவனாக , சீக்கியனாக ,இந்து டாக்டராக இருந்தாலும் ,கோரக்பூர் சம்பவத்திற்கு என்னால்தான் அதிகமான கவனம் கிடைத்தது என்று அதிகார வர்க்கத்தின் கோபத்திற்கு ஆளாகித்தான் இருப்பேன்.”

 

பொறுப்புணர்வோடு டாக்டர் கஃபீல் கான் இதைச் சொன்னாலும் , இஸ்லாமியர் என்பதால்தான் அவரும் அவர் குடும்பமும் இரட்டை தாக்குதலுக்கும் அவமானத்துக்கும் ஆளானார்கள் என்பதே உண்மை .நூலை வாசிப்போர் உணர முடியும் .

 

பொதுவாய் துன்பம் வரும் போது கடவுளை வேண்டும் கதாநாயகர்களை சினிமாவில் பார்க்கும் போது எனக்கு பிடிக்காது .கேலியாக புன்னகைப்பேன் . ஆயின் கஃபீல் கான் சிறையிலும் தொழுகை நடத்தி அல்லாவை இறைஞ்சிய போது , எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வேட்டையாடப்படும் ஒருவரின் கடைசி நம்பிக்கையாக மார்கஸ் சொன்னது போல் ‘ ஏக்கப் பெருமூச்சாக’ எனக்குப் பட்டது .கஃபீல் கானின் தாயார் நுஷத் பர்வீனில் தைரியமும் ,பிரச்சனையை எதிர்கொண்ட விதமும், தொழுகையும் அம்மா என்ற உறவின் மேன்மைக்கு மேலும் ஓர் சான்றாகத்தான் நான் பார்த்தேன்.  மனைவி ஷபிஸ்தாவின் உறுதியும் தோள் கொடுத்த பாங்கும் பாராட்ட வார்த்தையில்லை .சகோதரர்கள் , சகோதரி ,நண்பர்கள்  மொத்த குடும்பமும் எல்லோரும் பாதிக்கப்பட்டனர் .ஆயினும் துணை நின்றனர். தங்கை ஜூனத்தின் மகள் ரித் பள்ளிக்கூடத்தில் சக மாணவரால் கடுஞ்சொல்லுக்கு ஆளானாள் . உன் மாமா திருடன் என வசைபாடப்பட்டாள் .சிறையிலிருந்து மருமகளுக்கு கஃபில் கான் எழுதிய கடிதம் ,”இனிமேல் யாருடனும் சண்டை போடாதே ! அல்லா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .உன் மாமா எந்தத் தவறும் செய்யவில்லை .எனவே அவமானப்பட ஒன்றுமில்லை .”

 

நான்காவது பாகம் “ தீர்மானித்தல்” முடிவுரை ,ஆசிரியர் குறிப்பும் நன்றியும் சேர்த்து ஆறு அத்தியாயங்கள்.72 பக்கங்கள் .

 

இங்கு முன்பு குறிப்பிட்ட பத்து பக்கக் கடிதம் இந்த பாகத்தில்தான் உள்ளது . “ பொறுத்தது போதும் பொங்கி எழு” என மனோகரா திரைப்படத்தில் ஓர் வசனம் எழுதி இருப்பார் கலைஞர் . இந்த அத்தியாயத்தில் கஃபீல் கானும் அவர் மனைவி ஷபிஸ்தாவும் உண்மையை நிலைநாட்ட மக்களை சந்திக்க முனைந்து அதில் வெற்றியும் கண்டது இப்பாகத்தில் நன்கு பதிவாகி உள்ளது . பொது புத்தியை மக்களின் குரலை முடக்கிவிட்டதாக ஆட்சியாளர்கள் கனவு கண்டாலும் ; சாம்பல் பூத்த நெருப்பாய் அவை இருப்பதையும் யாரேனும் ஊத முன் வந்தால் மீண்டும் பற்றிக் கொள்ளும் என்கிற வரலாற்றுப் பாடம் இதில் உள்ளது .

 

 “ அன்பான வாசகர்களே ! இந்தியா முழுவதுமான எனது மருத்துவப் பணியில் நான் கற்ற பாடங்கள் ,ஒரு மருத்துவரான நான் எப்படி உ.பி. அரசால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன் , ஆனால் எவ்வாறோ ஒரு செயல்பாட்டாளனாக மாறினேன்…” என சொல்கிறார் கஃபீல் .அதன் வளர்ச்சிப் போக்கு இந்த பாகத்தில் பதிவாகி உள்ளது .

 

அவரும் அவர் குடும்பமும் உரக்கப் பேசத் தொடங்கிய பின் தான் அவருக்கு ஜாமின் கிடைத்தது .அவர் ஓய்ந்துவிடவில்லை . அதற்கு முன் ஓர் செய்தி , ஓர் மருத்துவர் சமூக செயல்பாட்டளாராக மாறியபின் குடி உரிமை சட்டத்தின் அநீதியை எதிர்த்த போராட்டத்தில் இணைந்தார் .அதற்காக மீண்டும் சிறைப்பட்டார் . பல மாதங்களுக்குப் பின் விடுதலையானார் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் செய்ய நாடு முழுவதும் பயணப்பட்டார் .அதில் ஏராள அனுபவங்கள். இரண்டை சுட்டியாக வேண்டும் .

 

ஒன்று சுயவிமர்சனமாக இடதுசாரிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும் . அவர் எழுதுகிறார் ,

 

“2018 செப்டம்பரில் கேரளாவில் கடும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது .நான் கேரளா சென்று திருச்சூர் ,வயநாடு , கோழிக்கோடு மாவட்டங்களில் மருத்துவ முகாம்களில் ஒரு வாரம் பணியாற்றினேன். நான் சென்ற தலித் பகுதிகளில் பெரியவர்களிடையே காசநோயும் ,குடிப்பழக்கமும் அதிகம் இருந்தன . குழந்தைகளிடம் ஊட்ட சத்துக் குறைவு அதிகம் இருந்தது …”

 

பொதுசுகாதாரத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் கேரளாவிலேயே இந்த நிலை எனில் உ.பி .பிஹார் எல்லாம் கேட்கவும் வேண்டுமோ ?

 

பீகார் நிலைக்கு ஒரு சாட்சி அவர் படம் பிடிக்கிறார் , ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ மனைதான் வட பீஹார் முழுமைக்குமான ஒரே மருத்துவ மனையாக இருந்தது என்கிறார் .

 

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கவனிக்க இரண்டே இரண்டு இளம் மருத்துவர்களும் நாலு செவிலியரும் மட்டுமே இருந்தனர் . ஒவ்வொரு கட்டிலிலும் இரண்டு மூன்று குழந்தைகள் .டிரிப்ஸ் பாட்டில்களை கயிற்றில் கட்டித் தொங்க விட்டிருந்தனர் .

 

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை கஃபீல் கான் பதிகிறார் ,”கடந்த முறை 2015 ல்  மூளை அழற்சி நோய் அதிகமாக பரவிய போது அன்றைய மத்திய [ பாஜக ] சுகாதார அமைச்சர் ஹர்ஷத் வர்த்தன் ‘ ஒரு ஆய்வு மையமும்.நூறு படுக்கைகள் கொண்ட மூளையழற்சி நோய்க்கான மருத்துவ மனையும் திறக்கப்படும் என்றார் .அவை திறக்கப்படவே இலை . [ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ] 2019 ல்  இதே மருத்துவ மனைக்கு வந்த போதும் அதே வாக்குறுதியை அளித்தார்.”

 

பீஹாரிலும் ,தமிழ்நாட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது வருகிறது என வாய்ப்பறை கொட்டுவது போல்தான் இதுவும் .

 

இந்நேரத்தில் முன்னுரையில் கஃபீல் கான் குறிப்பிட்ட ஓர் செய்தியை அறிவது அவசியம் , “ பொதுவாக மூளை அழற்சி நோய் வசதி குறைந்தவர்களைத்தான் தாக்கும் .பெரும்பாலான ஏ இ எஸ் [ Acute Encephalitis Syndrome AES] மூளை அழற்சி நோய் பாதிப்புக் குழந்தைகள் ஏழ்மையான ,விழிம்புநிலை சமூகங்களைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் . மக்கள் தொகை , ஏழ்மை ,ஊட்டசத்து குறைபாடு , சுத்தமான குடிநீர் கிடைக்காமை , தடுப்பூசி போதுமான அளவு போடாதது, சுகாதாரக் குறைபாடு , சுத்த குறைபாடு ஆகியவைதான் முக்கிய காரணங்கள் . ஆங்கிலத்தில்  Sevaen Ps – population ,poverty ,poor nutrituin .poor supply of dringing water , poor hygiene and poor sanitation    என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.”

 

நூல் மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது . ஒன்று உ.பி.யோகி அரசின் தோல்வியையும் பழிவாங்கும் வெறியையும் . இரண்டு , அடக்குமுறை மனிதர்களை ஒடுக்கிவிடாது உறுதியான போராளியாக்கும். மூன்று “அனைவருக்குமான ஆரோக்கியம்” எனும் பாதையில் விழிப்புணர்வை ஊட்டவேண்டியது காலத்தின் கட்டளை .

 

 இந்நூலை ச.சுப்பாராவ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நன்று . முதல்வர் எனும் போது முதலமைச்சரே நினைவுக்கு வருவர் எனவே கல்லூரி முதல்வர் எனச் சொல்லியிருக்கலாம் . இதுபோல் ஒன்றிரண்டு கவனிக்கப்பட வேண்டும் .பிழை திருத்தம் செய்வதில் உள்ள குறைபாடு தேதி குழப்பம் ஓரிரு இடங்களில் . மொத்தத்தில் ஒரு முக்கியமான ஆவணத்தை மொழியாக்கம் செய்த சுப்பாராவுக்கு பாராட்டுகள்.

 

 யோகி ஆத்தித்தய நாத் காலில் விழுந்து , அவர் சந்நியாசி என நியாயப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்நூலை அனுப்பச் சொல்ல வேண்டும் என முதலில் நினைத்தேன் . அப்புறம் அக்கருத்தை மாற்றிக்கொண்டேன் . அவர் தெரியாமல் செய்யவில்லை .தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப் படுத்தியவராயிற்றே !

 

மனச்சாட்சியும் இதமும் உள்ள ஒவ்வொருவரும் இந்நூலைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.உரக்கப் பேச வேண்டுகிறேன்.

 

ஓர் வரலாற்றுத் துயரமும் துரோகமும் பழிவாங்கலும் நிறைந்த இந்த நினைவலைகளை ஒவ்வொருவரும் வாசியுங்கள் .

 

1990 களில் மும்பையில் ஒரு மருத்துவ மனையில் கலப்படம் செய்யப்பட்ட குளுகோஸால் பலர் மரணம் அடைய நேர்ந்தது .அதன் பின்னே ஆழமான கார்ப்பரேட் கழுத்தறுப்பு போட்டியும் சதியும் ஊழலும் இருந்தன. அது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது .இப்போது சுத்தமாக சமூகம் மறந்துவிட்டது . அப்போது என் நண்பர் டாக்டர் டென்னீசன் அதுகுறித்து தமிழில் எழுதிய  சிறிய நூலை சென்னை புக்ஸ் வெளியிட்டது . அந்நூலை இப்போது மறுபதிப்பு கொணர யாராவது முயலாலாமே !

 

கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் : ஓர் மருத்துவரின் நினைவலைகள் . ஆசிரியர் : டாக்டர் கஃபீல் கான் ,தமிழில் : ச.சுப்பாராவ் ,வெளியீடு  : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :24332924 /8778073949 bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com  பக்கங்கள் :344  ; விலை : ரூ320/

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

20/9/2023.

 

 

 

 

சொல்லடா ! ஜி 21 !

Posted by அகத்தீ Labels:

 


சொல்லடா ! ஜி 21 !

 

புவி சூடாகிறது

காலநிலை தடுமாறுகிறது

வானம் பொய்த்துப் போகிறது

வாய்ப்பறை விண்ணைக் கிழிக்கிறது !

 

கவிதையில் கதையில் கலையில்

இயற்கையை நேசிப்பதாய் கதைக்கிறாய்

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலிலும்

இயற்கையை யோசிக்காமலே வதைக்கிறாய் !

 

ஒவ்வொரு தனிமனிதரும்

இயற்கையை சிதைக்கும் குற்றவாளியே !

ஆடம்பரமும் சுரண்டலும் லாபவெறியும்

சுயநலமும் ஏகபோகமும் பெரும் வைரிகளே !

 

எல்லாவற்றையும் சரிசெய்ய கூடினார்கள்

விடிய விடிய பேசினார்கள் விருந்துண்டார்கள்

ஒருப்படியாய் ஓர் செயல்திட்டமும் இல்லாமலே

வழக்கமான வாய்ப்பறையோடு வசுதைவ குடும்பம்

மந்திரத்தையும் நீட்டி முழக்கி  பேசி ஓய்ந்தனர் !

மந்திரத்தால் மாங்கனி விளையுமோ ! சொல்லடா ! ஜி 21 !

 

சுபொஅ.

14/9/2023.

 

வார்த்தைகளுக்காகவே அலைகிறார்கள் !

Posted by அகத்தீ Labels:

 

வார்த்தைகளுக்காகவே அலைகிறார்கள் !

 

 

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

நீங்கள்

பேசிய ஆயிரம் வார்த்தைகளும்

அவர்களின் தேவையை

நிறைவு செய்யவில்லை !

 

மீண்டும் மீண்டும்

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

உங்கள்

தொண்டைக் குழியிலிருந்து

வார்த்தைகளை பிடுங்குகிறார்கள்

சிக்குகிற

ஒற்றை வார்த்தையின் மீது

அவர்களின்

வன்மத்தைத் திணிக்கிறார்கள்

 

அவர்கள்

சுமந்து திரியும் அகராதியே

மிகவும் அலாதியானது

 

அங்கு

வார்த்தைகள்

வன்புணர்வு

செய்யப்படுகின்றன

 

வெறுப்பு அரசியலை

நல்ல சொற்களாலோ

நேர்மையான சிந்தனையாலோ

ஒருபோதும்

செய்ய முடியாது என்பதை

அவர்கள் நன்கு அறிவார்கள் ..

 

எனவே

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

நீங்கள்

எச்சரிக்கையாக பேசவேண்டும்.

உபதேசம் சரிதான்.

 

ஆனால்,

நீங்கள்

எதைப் பேசினாலும்

அதற்கொரு

குதர்க்கம் பேச

மதவெறி நஞ்சூட்ட

அவர்கள் தீவிர

பயிற்சி பெற்றவர்கள் ..

 

இப்போது அவர்களுக்கு

புதிய சங்கடம்

காதுகளில் மக்கள்

 ‘சொற்கள் வடிகட்டி’

பொருத்திக் கொண்டார்கள் !

 

யார் சொல்கிறார்

எதற்குச் சொல்கிறார்

என்பதை வடிகட்ட

காதுகள் தேர்ந்துவிட்டன ..

 

இனி

பேசுவதற்கு மட்டுமல்ல

கேட்பதற்கும்

தடை வரலாம்…

 

மூளைக்கு காவியடிக்கும்

முயற்சி

இன்னும் தீவிரமாகலாம் ..

 

ஆயினும்

பகுத்தறியும் மூளையில்

காவி கறை படிவதில்லை .

 

சுபொஅ.

12/9/2023.

 

 

 

 


கடல் ஒன்று கைக்குட்டை ஆனது…..

Posted by அகத்தீ Labels:

 


 

 

கடல் ஒன்று  கைக்குட்டை ஆனது…..

 

 “ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின் சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை” நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம்.

 

அபார்ட்மெண்டுகளில் உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி நடப்பவற்றை பதிவு செய்வதுபோல் மதுரை சந்தையை சுற்றி எழுத முனைந்துள்ளார் நூலாசிரியர் யாழ் .எஸ்.ராகவன்.

 

கிராம சந்தைகள் அருகி வருகின்ற போது அவற்றைக் குறித்து அசை போடுவது அவசியமே .  இன்னும் சந்தைகள் முற்றாய் அருகிப் போய்விடவில்லை ; ஆனால் அழிவின் வேகம் அதிகரித்துவிட்டது .

 

சந்தை எனில் விதவிதமான பொருட்கள் ,அவரவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப கொள்ள கொடுக்க வாய்ப்பு .இரைச்சல் ,கூப்பாடு ,நாற்றம் ,போட்டி ,ஏமாற்று ,கந்துவட்டி ,கண்ணீர் எல்லாம்தான் .சந்தைக்கென அரசியலும் உண்டு .

 

கு.சின்னப்பபாரதியின் “ சங்கம்” நாவலில் கொல்லிமலையில்  பழங்குடி மக்களுக்கு சந்தை வேண்டுமென எழுந்த போராட்ட அரசியல் வரும் . மறக்க முடியா சமூக யதார்த்தம் அது . சத்தியமங்கலத்தில் திங்களூரில் பழங்குடி மக்களுக்கான சந்தை அமைக்கக் கோரி இடதுசாரிகள் போராடியது எப்போதோ அல்ல எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தான் . நானும் அதில் ஒரு நிகழ்வில் பங்கேற்றவன். அப்பணசாமியின் “கொடைக்கோனார் வழக்கு” நாவலும்  கோவில்பட்டி சந்தை ,கடைத்தெரு பின்னணியில்தான் நிகழும் .இன்னும் பல உண்டு .

 

வாரம் தோறும் சந்தை என்பது விற்கவும் வாங்கவும் சந்திப்பு மையமான பொருள் விற்பனையின் ஒரு முகம் எனில் ; வீடு தேடி தெருத்தெருவாய் பொருள் விற்றது சந்தையின் இன்னொரு கண்ணி . இதுதான் ஆசிய மாடல் .குறிப்பாக இந்திய மாடல் ; அங்காடி வீதிகள் சங்க இலக்கியத்திலேயே காணக் கிடைக்கும் காட்சி . சந்தை நோக்கி மக்கள் என்பதே ஐரோப்பிய மாடல் . உலக மயமும் தாராள மயமும் ஆசிய மாடலை உட்செரித்து ஆன் லைன் வியாபாரம் என்றும் மால் என்றும் பாகாசுர ஏகபோக முதலையாக்கிவிட்டனர் .நம் சந்தையும் சிறுவியாபாரமும் வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது .உலகமயம் ,தாராளமயம் ,தனியார்மயம் செய்யும் அழிவு ; இதனை பின்னணியாகக் கொண்டே இந்நாவலும் நகர்கிறது .

 

நாவலில் மதுரை சந்தைதான் கதாநாயகன் கதாநாயகி எல்லாம். பட்லர் பொன்னனையா ராணுவத்தில் இருந்தவர் .பின்னர் சந்தையில் பூண்டு விற்பவர் .அவரின் மகன் பொறுப்பற்றவன் , அவனை திருத்த முயல்கிறார் .திருந்தியதாக நம்பி தன் சக வியாபார நண்பர் பழநிச்சாமி வளர்க்கும் அவள் மருமகள் புஷ்பவள்ளியை மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார் .

 

மகன் திருந்தாமல் செத்துப்போக புஷ்பவள்ளி விதவையாகிறாள் . அவள் மகளே பேச்சியம்மாள் . புஷ்பவள்ளி மாயாண்டியை விரும்பி அவனோடு பயணப்பட்டு விடுகிறார் . பேச்சியம்மாள் அந்த சந்தையின் அறிவிக்கபடாத தலைவிபோல் எல்லோரையும் அரவணைத்து வழிநடத்துகிறாள் . அவளுக்கு நிக்கோலசோடு காதல் திருமணத்தில் முடிகிறது . இதுபோல் வேறுபல கிளை காதல் கதைகளும் நாவலில் உண்டு .

 

சந்தையை ஆக்கிரமிக்க நினைக்கும் ராம் சேட் ,செல்வா கும்பலின் திட்டமிட்ட வன்முறையில் நிக்கோலஸ் சிறை செல்கிறார் .பேச்சியம்மாள் குடும்பத்தையும் பாதுகாத்து சந்தையையும் காக்க உழைக்கிறாள் .பேச்சியம்மாள் –நிக்கோலஸ் பிள்ளைகள் ரவி ,லட்சுமி என வாழ்வு தொடர்கிறது .ரவி நன்கு படித்து பெங்களூருக்கு வேலைக்கு போகிறான்,லட்சுமி டாக்டருக்கு படிக்கப் போகிறாள் ,சந்தையும் களவாடப்பட்டு சுருங்குகிறது .

 

இந்நாவலில் நான் பெரிதும் வியந்த ஓர் செய்தி பெண் பாத்திரங்களே .பொதுவாய் பெண் பாத்திரங்களை கண்ணீர் காவியங்களாகவோ , காமப் பெட்டகங்களாகவோ , தோல்வியின் உருவங்களாகவோ காட்சிப் படுத்தும் நாவல் உத்தியிலிருந்து விலகி நிற்கிறது இந்நாவல்.

 

புஷ்பவள்ளி ,பேச்சியம்மாள் , வள்ளியம்மை ஆச்சி ,கீரைப்பாட்டி ,கனகா , சாவித்திரி ,செண்பகம் ,ஸ்டெல்லா ,மானூத்து விஜயா [ முழுப்படியலும் போடவில்லை]  இப்படி நிறைய பெண் பாத்திரங்கள் .ஒவ்வொருவரும் வாழ்வில் பாதிக்கப்பட்டவர்கள் .ஆனால் எல்லோருமே தடையை உடைத்து எழுபவர்கள் . விதவை மறுமணம் நாவலில் சமூக இயல்பாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது .ஆம் .உழைக்கும் மக்களின் பண்பாடு அதுவே .மத்திய தரத்தின் மேட்டுக்குடியின் பண்பாடுதான் விதவை மறுமணத்துக்கு எதிரானது . அதிலும் தன் சொந்தக் காலில் எழுந்து நிற்கும் பெண்கள் நாவல் நெடுக .

 

பட்லர் பொன்னனையன் ,ஜமால் ,நிக்கோலஸ் ,சாலமன் ,தஞ்சை பார்த்திபன் ,ஞானதாஸ் ,குமரேசன்,காளிதாஸ் ,ராமையா ,கணேஷ் ,ரவி ,பாலமுருகன் ,சன்னாசி ,மொக்கராசு,சிவா இப்படி நாவல் நெடுக உழைக்கும் மனிதர்கள் எல்லோரும் வாழ்வை அதனதன் போக்கில் எதிர்கொள்ளும் எளிய மக்கள் .

 

பூ வியாபாரமும் , கருவாட்டு வியாபாரமும், காய்கறிக்கடையும், மீன் கடையும், சந்தை மாரியம்மாள் கோயிலும் விழாவும் , ஆட்டு சந்தையும் ,மாட்டுச் சந்தையும், துணி வியாபாரமும் ,கந்துவட்டியும் , சுய உதவிக்குழுவும் ,இட்லிக் கடையும் ,டீ வடை வியாபாரமும் எல்லாம்தானே சந்தை .

 

மஞ்சுநாதன் ,ராம்சேட்,சாமியார் ,செல்வா என வில்லன்கள் . இவர்களால் சந்தை பறிபோவது நாவலில் மையச் சரடு . முதல் பாதி பரபரப்பு ஏதும் இல்லாமல் கிராமத்தான் பாடு சொல்வது போல் கதை நகர்கிறது .பின் பகுதி கொஞ்சம் விறுவிறுப்பு . ஆயினும் கால வர்த்தமான மூர்க்கமான மாறுதலை எளிய மக்கள் எதிர்த்து நிற்க முடியாமல் வெவ்வேறு திசையில் ஓட வேண்டியுள்ளது.

 

ராம் சேட் மொத்த சந்தையையும் விழுங்க வெறிகொள்கிறான் .கூட்டாளி செல்வா அதற்கு மாறாக மக்கள் கோபத்தை கணக்கில் கொண்டு பாரம்பரியமான சந்தைக்கு கொஞ்சூண்டு இடம் விடும் உத்தி நாவலின் இறுதி கிளைமாக்ஸ் மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட  “ கடல் ஒன்று  கைக்குட்டை ஆனது ; நீண்ட பாரம்பரியம் காலநதியில் கரைந்து போனது .”

 

சந்தையின் இரைச்சலுக்கும் கூச்சலுக்கும் மத்தியில் மென்மையாய்  புல்லாங்குழலை வாசிப்பதுபோல் நாவல் நகர்கிறது . இது ஒரு முரண் தொகைதான் .மனிதர்கள் ஆண்களும் பெண்களுமாய் மனிதம் மிளிர வலம் வருகிறார்கள் .  ஆயினும் சந்தையோடு இணைந்த விவசாயிகள் ,உற்பத்தியாளர்கள் , நுகர்வோர்கள் உளவியல் சமூக உறவுகளோடு நாவல் விரிந்திருக்கலாமோ என ஒரு சிறு பொறி என்னுள் . அதே போல் நாவலில் சாதி மதம் இலை மறைவு காயாக ஆங்காங்கு தலைநீட்டுகிறது . உண்மையில் சந்தையின் செய்ல்பாட்டிலும் சாதியின் கோரக்குறுக்கீடு உண்டல்லவா ? அதுவும் மதுரைச் சந்தையில் அது இல்லாமலா ? நூலாசிரியர் ஏனோ தவிர்த்துவிட்டார் .

 

சந்தைகளின் வீழ்ச்சி ; பேச வேண்டிய களம் . இன்னும் உரக்க , இன்னும் அதிகமாகப் பேசவேண்டும்.

 

 

சந்தை [ நாவல் ],ஆசிரியர் : யாழ் .எஸ் .ராகவன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 – 24332924 /24332424 /8778073949 www.thamizhbooks.com  , bharathiputhakalayam@gmail.com

பக்கங்கள் : 232 , விலை : ரூ.240/

 

 

சுபொஅ.

12/9/2023.