வார்த்தைகளுக்காகவே அலைகிறார்கள் !

Posted by அகத்தீ Labels:

 

வார்த்தைகளுக்காகவே அலைகிறார்கள் !

 

 

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

நீங்கள்

பேசிய ஆயிரம் வார்த்தைகளும்

அவர்களின் தேவையை

நிறைவு செய்யவில்லை !

 

மீண்டும் மீண்டும்

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

உங்கள்

தொண்டைக் குழியிலிருந்து

வார்த்தைகளை பிடுங்குகிறார்கள்

சிக்குகிற

ஒற்றை வார்த்தையின் மீது

அவர்களின்

வன்மத்தைத் திணிக்கிறார்கள்

 

அவர்கள்

சுமந்து திரியும் அகராதியே

மிகவும் அலாதியானது

 

அங்கு

வார்த்தைகள்

வன்புணர்வு

செய்யப்படுகின்றன

 

வெறுப்பு அரசியலை

நல்ல சொற்களாலோ

நேர்மையான சிந்தனையாலோ

ஒருபோதும்

செய்ய முடியாது என்பதை

அவர்கள் நன்கு அறிவார்கள் ..

 

எனவே

அவர்கள்

சில வார்த்தைகளுக்காகவே

அலைகிறார்கள் !

 

நீங்கள்

எச்சரிக்கையாக பேசவேண்டும்.

உபதேசம் சரிதான்.

 

ஆனால்,

நீங்கள்

எதைப் பேசினாலும்

அதற்கொரு

குதர்க்கம் பேச

மதவெறி நஞ்சூட்ட

அவர்கள் தீவிர

பயிற்சி பெற்றவர்கள் ..

 

இப்போது அவர்களுக்கு

புதிய சங்கடம்

காதுகளில் மக்கள்

 ‘சொற்கள் வடிகட்டி’

பொருத்திக் கொண்டார்கள் !

 

யார் சொல்கிறார்

எதற்குச் சொல்கிறார்

என்பதை வடிகட்ட

காதுகள் தேர்ந்துவிட்டன ..

 

இனி

பேசுவதற்கு மட்டுமல்ல

கேட்பதற்கும்

தடை வரலாம்…

 

மூளைக்கு காவியடிக்கும்

முயற்சி

இன்னும் தீவிரமாகலாம் ..

 

ஆயினும்

பகுத்தறியும் மூளையில்

காவி கறை படிவதில்லை .

 

சுபொஅ.

12/9/2023.

 

 

 

 


0 comments :

Post a Comment