தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம் !

Posted by அகத்தீ Labels:

 

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன்.

 

 


தூங்கவிடாமல் துரத்தும்

குழந்தைகளின் மரண ஓலம் !

 

 

 இந்நூலை நேற்று படிக்கத் துவங்கினேன் . முதல் அத்தியாயத்தை முடிக்கும் முன்பே முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன் .” என 16/9/2023 ல் முகநூலில் பதிவிட்டேன் .

 

ஆயினும் மனந்தளராத விக்கரமாதித்தன் போல் கொஞ்சம் கொஞ்சமாய் இப்புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். ஆயின் வழக்கமாக இரண்டு நாட்களில் 360 பக்க புத்தகத்தை இரண்டு நாளில் முடித்துவிடுவேன் .இந்நூலில் துயமும் வலியும் ஆறு நாட்கள் இழுத்துவிட்டது . அழுகை ,கோபம் ,ரெளத்திரம் எல்லாம் ஒருங்கே முட்டி நிற்கின்றன .

 

மூளை அழற்சி நோய் உச்சத்தில் இருந்த காலம் அது .கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 2017 ஆகஸ்ட் 10 இரவு திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போய்விட்டது . இதனால் அந்த இரண்டு  நாட்களில் 63 குழந்தைகளும் 18 பெரியவர்களுமாக 80 பேருக்கு மேல் உயிர் இழந்தனர் . இதில் உயிரைக் காக்க தன் சக்திக்கு மீறி மனிதத்தோடு கடுமையாகப் போராடி பல உயிரைக் காப்பாற்றியவர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் கஃபீல் கான்.

 

ஆனால் அவரே குற்றவாளியாக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்டு ,ஜாமினும் மறுக்கப்பட்டு ,நீதிமன்றக் கதவுகளும் அதிகார வர்க்க வாயில்களூம் இறுக மூடப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட உண்மைக் கதை ; முழு ஆதாரங்களோடும் சாட்சிகளோடும் இந்நூலில் பதிவாகி உள்ளது .

 

 

மாநில பாஜக முதல்வர் ஆர் எஸ் எஸ் காவியுடை யோகி ஆதித்தியநாத் மகராஜ் மனச்சாட்சியே இல்லாமல் வெறியோடு பொய்யை , அவதூறைப் பரப்பி கஃபீல் கான் குடும்பம் முழுவதையும் அலைக்கழித்தை கண்ணீரோடும் வெப்பத்தோடும் இந்நூல் சொல்கிறது .

 

இங்கே எதை எழுதினாலும் எழுதாமல் விட்டதே அதிகமாக இருக்கும் . ஆயினும் நூல் அறிமுகத்தில் வெறும் புலம்பல் கூடாது அல்லவா ?

 

  “ பொறுமை காத்தது போதும் – எல்லாவற்றையும் எழுதிட வேண்டியதுதான்.என்ன நேர்ந்தாலும் சரி ,உலகத்திற்கு உண்மையைச் சொல்லிவிட வேண்டும் . என் மனைவியும் சகோதரர்களும் .இதற்கு ஒப்புக் கொண்டனர் .” என்கிற கஃபீல் கான் எழுதிய பத்து பக்க கடிதத்திலிருந்து ……. [நூலில் இடம் பெற்றுள்ளது .]

 

 “ 8 மாதங்களாக ஜாமின் இல்லாமல் சிறையில்!

நான் நிஜமாக குற்றவாளியா ?

….. ….. ….. ….. …… …..

…… …… …… ……. ……..

2017 ஆகஸ்ட் 10ம் தேதி இரவு அந்த வாட்ஸ் அப் தகவல் கிடைத்த கணத்தில் இருந்து ஒரு மருத்துவர் , ஒரு தகப்பன் , ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன் .

திரவ ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால் அபாயக் கட்டத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற முயன்றேன் .அந்த அப்பாவிக் குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் இயன்றதைச் செய்தேன் .

வெறித்தனமாக எல்லோரையும் அழைத்தேன் . கெஞ்சினேன் . ஓடினேன் .கார்  ஓட்டினேன் .கத்தினேன் .கதறினேன். அறிவுரை சொன்னேன் . ஆறுதல் சொன்னேன் .செலவு செய்தேன் .கடன் வாங்கினேன். அழுதேன் .மனிதனால் சாத்தியப்பட்டது அனைத்தையும் செய்தேன்.

எனது துறைத் தலைவரை ,சக மருத்துவர்களை ,கல்லூரி முதல்வரை ,பொறுப்பு முதல்வரை ,சுகாதாரத்துறை உதவி இயக்குநரை ,தலைமை மருத்துவக் கண்காணிப்பாளரை எல்லோரையும் அழைத்து ,அழைத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள கடுமையான சூழலை விளக்கினேன் .[ அந்த அழைப்புகளின் ஆவணங்கள் என்னிடம் உள்ளது .]

 

மோடி கேஸ் ,பாலாஜி கேஸ் ,இம்பீரியல் கேஸ் ,மயூர் கேஸ் என அனைத்து ஆக்ஸிஜன் நிறுவனங்களிடமும் கெஞ்சினேன் .எங்களைச் சுற்றியுள்ள அத்தனை மருத்துவமனைகளையும் தொடர்பு கொண்டேன்.

 

அவர்களுக்கு ரொக்கமாக பணப்பட்டுவாடா செய்தேன் .சப்ளை வந்ததும் பாக்கியைத் தருவதாகச் சொன்னேன் .[ திரவ ஆக்ஸிஜன் வரும் வரையில் ஒரு நாளைக்கு ,சுமார் 250 சிலிண்டர்களை ஏற்பாடு செய்தோம். ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை ரூ. 216 /-]

 

ஒவ்வொரு படுக்கையாக ,வார்டு நூறு முதல் 12 வரையிலும் அவசர சிகிட்சைப் பிரிவிலும் ஓடி ஓடி ஆல்ஸிஜன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்தேன் .

 

என் காரில் பக்கத்து மருத்துவ மனைகளில் இருந்து சிலிண்டர் வாங்கி வந்தேன் . அது போதவில்லை .ஷஸ்த்ராசீமாபால் ராணுவ முகம் சென்று அவர்களது டிஐஜியிடம் எங்கள் நிலைமையை எடுத்துச் சொன்னேன்.அவர் உடனடியாகச் செயல்பட்டார்.சிலிண்டர்களைத் தூக்கிவர ராணுவ வீரர்களோடு பெரிய லாரியையும் அனுப்பினார் .

 

அவர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்தார்கள் .அவர்களது ஈடுபாடு [ மொழி பெயர்ப்பில் உற்சாகம் என்றிருக்கிறது] எங்களுக்கு உத்வேகம் தந்தது.எஸ் எஸ் பிக்கு [ டி எஸ் பி என இருந்திருக்க வேண்டுமோ ] சல்யூட் அடித்து நன்றி சொல்கிறேன் . ஜெய்ஹிந்த் !

….. …… ……. …… ……. ……. ……

……. …… …… …… ….. ….. …… …..

2017 ஆகஸ்ட் 12 அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் திரவ ஆக்ஸிஜன் டேங் வரும் வரை முயற்சியை நிறுத்தவில்லை .

 

ஆனால் ,மறுநாள் 2017 ஆகஸ்ட் 13 அன்று முதலமைச்சர் யோகிஜி மகராஜ் காலையில் வந்ததும் என் வாழ்க்கை தலைகீழாகப் புதைந்தது. ‘ நீங்கள்தான் ,சிலிண்டர்கள் ஏற்பாடு செய்த டாக்டர் கஃபீலா ?’ நான் ,’ஆமாம் .சார்!’என்றேன் . அவருக்கு கோபம் வந்துவிட்டது .’ இப்படி சிலிண்டர் ஏற்பாடு செய்ததன் மூலம் நீ ஹீரோ ஆகிவிடலாம் என்று நினைக்கிறாய் … பார்ப்போம்’ என்றார் …….”

 

நான்கு பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்நூலில்  “ கடமை” என்ற தலைப்பு கொண்ட முதல் பாகம் 110 பக்கங்கள் கொண்டது . இதயம் உள்ளவரால் அழாமல் வாசிக்க முடியாது . சம்பவங்களின் விவரிப்பு . குழந்தைகளை இழந்த பெற்றோரின் அழுகுரல் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும் . இந்த பாகத்தின் ஏழாவது அத்தியாயத்தின் , அதாவது இப்பாகத்தின் இறுதி அத்தியாயத் தலைப்பு  “கதாநாயகனிலிருந்து வில்லனாக..” விளக்கம் தேவையா ?

 

அடுத்த பாகத்தின் தலைப்பு “ சிறைவாசம்” 104 பக்கங்கள் ஏழு அத்தியாயங்கள் .  தலைப்பே உள்ளடக்கத்தைக் கூறும் . ஆளும் அதிகா பீடமும்  நிர்வாக இயந்திரமும்  பழிவாங்கலில் வெறியோடு இயங்கியதையும் மரத்துப் போன மனச்சாட்சிக்கும் ,ஊழல் முறைகேட்டின் மொத்த உருவமாகவும் இருப்பதை இந்த பாகம் படம் பிடிக்கிறது . இந்நூலில் ஓரிடத்தில் கஃபீல் கான் எழுதுகிறார் ;

 

 “இரண்டே வாரங்களில் ,மனித இயல்பு பற்றி நிறையவே தெரிந்து கொண்டுவிட்டேன். மிக மோசமான நிலையிலும் தாக்குப் பிடிப்பது சாத்தியம்தான் .கடவுள் மனிதனுக்கு ஏராளமான பொறுமையைக் கொடுத்திருப்பதால் ,அவன் மோசமான தண்டனையை எதிர்கொள்ளும் போதும் ,வாழ்வதற்கான விருப்பம் அணைந்துவிடுவதில்லை . தூக்குத் தண்டனை கைதியும் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்கிறார் . குடியரசு தலைவரிடம் கருணை மனு செய்கிறார் .சிறையில் உயிர் பிழைப்பதற்காக ரோஷமின்றி வாழப் பழகிக் கொண்டேன்.”

 

மறுபுறம் மனிதமும் உண்மையின் மீது பற்றும் கொண்டோர் சிறையிலும் வெளியிலும் இருந்தனர் .அவர்கள் கஃபீல் கானோடு நின்றனர் . ஒரு சிறு பகுதியும் சங்கிக் கோஷ்டியும் அவதூறை வீசிய போதும் , அதிகாரத் திமிர் வன்முறையை ஏவிய போதும் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும் இருந்தனர் . பயத்தால் வாய்பொத்தி மவுனம் காத்தவர்களும் இருந்தனர் .இரண்டையும் இந்நூல் நன்கு பதிவு செய்திருக்கிறது .

 

மூன்றாவது பாகத்தின் தலைப்பு ,” கண்டு பிடிப்பு” .18 பக்கங்களில் இரண்டு அத்தியாயங்களாய் நீள்கிறது .” முடிச்சுகள் அவிழ்கின்றன” “ வெளிச்சத்தின் நம்பிக்கையின் கீற்று “ இரண்டுமே உண்மையை நோக்கிய பயணத்தின் கடுமையைச் சொல்கிறது . நீதிமன்றத்தின் தடுமாற்றமும் கொஞ்சம் துளிர்விடும் நம்பிக்கையும் கலந்தது வாழ்வும் இந்த அத்தியாயமும்.

 

ஓரிடத்தில் கஃபீல் கான் சொல்கிறார் ,”நான் கபில் ஜானாகவோ ,கபில் சிங்காகவோ ,கபில் பாண்டேயாகவோ ,எவ்வாறிருந்தாலும் ஒரே மாதிரிதான் நடத்தப் பட்டிருப்பேன் என்று நம்புகிறேன். அதை பல மேடைகளில் கூறி இருக்கிறேன் . அதாவது நான் கிறுத்துவனாக , சீக்கியனாக ,இந்து டாக்டராக இருந்தாலும் ,கோரக்பூர் சம்பவத்திற்கு என்னால்தான் அதிகமான கவனம் கிடைத்தது என்று அதிகார வர்க்கத்தின் கோபத்திற்கு ஆளாகித்தான் இருப்பேன்.”

 

பொறுப்புணர்வோடு டாக்டர் கஃபீல் கான் இதைச் சொன்னாலும் , இஸ்லாமியர் என்பதால்தான் அவரும் அவர் குடும்பமும் இரட்டை தாக்குதலுக்கும் அவமானத்துக்கும் ஆளானார்கள் என்பதே உண்மை .நூலை வாசிப்போர் உணர முடியும் .

 

பொதுவாய் துன்பம் வரும் போது கடவுளை வேண்டும் கதாநாயகர்களை சினிமாவில் பார்க்கும் போது எனக்கு பிடிக்காது .கேலியாக புன்னகைப்பேன் . ஆயின் கஃபீல் கான் சிறையிலும் தொழுகை நடத்தி அல்லாவை இறைஞ்சிய போது , எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வேட்டையாடப்படும் ஒருவரின் கடைசி நம்பிக்கையாக மார்கஸ் சொன்னது போல் ‘ ஏக்கப் பெருமூச்சாக’ எனக்குப் பட்டது .கஃபீல் கானின் தாயார் நுஷத் பர்வீனில் தைரியமும் ,பிரச்சனையை எதிர்கொண்ட விதமும், தொழுகையும் அம்மா என்ற உறவின் மேன்மைக்கு மேலும் ஓர் சான்றாகத்தான் நான் பார்த்தேன்.  மனைவி ஷபிஸ்தாவின் உறுதியும் தோள் கொடுத்த பாங்கும் பாராட்ட வார்த்தையில்லை .சகோதரர்கள் , சகோதரி ,நண்பர்கள்  மொத்த குடும்பமும் எல்லோரும் பாதிக்கப்பட்டனர் .ஆயினும் துணை நின்றனர். தங்கை ஜூனத்தின் மகள் ரித் பள்ளிக்கூடத்தில் சக மாணவரால் கடுஞ்சொல்லுக்கு ஆளானாள் . உன் மாமா திருடன் என வசைபாடப்பட்டாள் .சிறையிலிருந்து மருமகளுக்கு கஃபில் கான் எழுதிய கடிதம் ,”இனிமேல் யாருடனும் சண்டை போடாதே ! அல்லா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .உன் மாமா எந்தத் தவறும் செய்யவில்லை .எனவே அவமானப்பட ஒன்றுமில்லை .”

 

நான்காவது பாகம் “ தீர்மானித்தல்” முடிவுரை ,ஆசிரியர் குறிப்பும் நன்றியும் சேர்த்து ஆறு அத்தியாயங்கள்.72 பக்கங்கள் .

 

இங்கு முன்பு குறிப்பிட்ட பத்து பக்கக் கடிதம் இந்த பாகத்தில்தான் உள்ளது . “ பொறுத்தது போதும் பொங்கி எழு” என மனோகரா திரைப்படத்தில் ஓர் வசனம் எழுதி இருப்பார் கலைஞர் . இந்த அத்தியாயத்தில் கஃபீல் கானும் அவர் மனைவி ஷபிஸ்தாவும் உண்மையை நிலைநாட்ட மக்களை சந்திக்க முனைந்து அதில் வெற்றியும் கண்டது இப்பாகத்தில் நன்கு பதிவாகி உள்ளது . பொது புத்தியை மக்களின் குரலை முடக்கிவிட்டதாக ஆட்சியாளர்கள் கனவு கண்டாலும் ; சாம்பல் பூத்த நெருப்பாய் அவை இருப்பதையும் யாரேனும் ஊத முன் வந்தால் மீண்டும் பற்றிக் கொள்ளும் என்கிற வரலாற்றுப் பாடம் இதில் உள்ளது .

 

 “ அன்பான வாசகர்களே ! இந்தியா முழுவதுமான எனது மருத்துவப் பணியில் நான் கற்ற பாடங்கள் ,ஒரு மருத்துவரான நான் எப்படி உ.பி. அரசால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன் , ஆனால் எவ்வாறோ ஒரு செயல்பாட்டாளனாக மாறினேன்…” என சொல்கிறார் கஃபீல் .அதன் வளர்ச்சிப் போக்கு இந்த பாகத்தில் பதிவாகி உள்ளது .

 

அவரும் அவர் குடும்பமும் உரக்கப் பேசத் தொடங்கிய பின் தான் அவருக்கு ஜாமின் கிடைத்தது .அவர் ஓய்ந்துவிடவில்லை . அதற்கு முன் ஓர் செய்தி , ஓர் மருத்துவர் சமூக செயல்பாட்டளாராக மாறியபின் குடி உரிமை சட்டத்தின் அநீதியை எதிர்த்த போராட்டத்தில் இணைந்தார் .அதற்காக மீண்டும் சிறைப்பட்டார் . பல மாதங்களுக்குப் பின் விடுதலையானார் . பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் செய்ய நாடு முழுவதும் பயணப்பட்டார் .அதில் ஏராள அனுபவங்கள். இரண்டை சுட்டியாக வேண்டும் .

 

ஒன்று சுயவிமர்சனமாக இடதுசாரிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும் . அவர் எழுதுகிறார் ,

 

“2018 செப்டம்பரில் கேரளாவில் கடும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது .நான் கேரளா சென்று திருச்சூர் ,வயநாடு , கோழிக்கோடு மாவட்டங்களில் மருத்துவ முகாம்களில் ஒரு வாரம் பணியாற்றினேன். நான் சென்ற தலித் பகுதிகளில் பெரியவர்களிடையே காசநோயும் ,குடிப்பழக்கமும் அதிகம் இருந்தன . குழந்தைகளிடம் ஊட்ட சத்துக் குறைவு அதிகம் இருந்தது …”

 

பொதுசுகாதாரத்தில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் கேரளாவிலேயே இந்த நிலை எனில் உ.பி .பிஹார் எல்லாம் கேட்கவும் வேண்டுமோ ?

 

பீகார் நிலைக்கு ஒரு சாட்சி அவர் படம் பிடிக்கிறார் , ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ மனைதான் வட பீஹார் முழுமைக்குமான ஒரே மருத்துவ மனையாக இருந்தது என்கிறார் .

 

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கவனிக்க இரண்டே இரண்டு இளம் மருத்துவர்களும் நாலு செவிலியரும் மட்டுமே இருந்தனர் . ஒவ்வொரு கட்டிலிலும் இரண்டு மூன்று குழந்தைகள் .டிரிப்ஸ் பாட்டில்களை கயிற்றில் கட்டித் தொங்க விட்டிருந்தனர் .

 

மேலும் ஒரு அதிர்ச்சியான தகவலை கஃபீல் கான் பதிகிறார் ,”கடந்த முறை 2015 ல்  மூளை அழற்சி நோய் அதிகமாக பரவிய போது அன்றைய மத்திய [ பாஜக ] சுகாதார அமைச்சர் ஹர்ஷத் வர்த்தன் ‘ ஒரு ஆய்வு மையமும்.நூறு படுக்கைகள் கொண்ட மூளையழற்சி நோய்க்கான மருத்துவ மனையும் திறக்கப்படும் என்றார் .அவை திறக்கப்படவே இலை . [ நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ] 2019 ல்  இதே மருத்துவ மனைக்கு வந்த போதும் அதே வாக்குறுதியை அளித்தார்.”

 

பீஹாரிலும் ,தமிழ்நாட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது வருகிறது என வாய்ப்பறை கொட்டுவது போல்தான் இதுவும் .

 

இந்நேரத்தில் முன்னுரையில் கஃபீல் கான் குறிப்பிட்ட ஓர் செய்தியை அறிவது அவசியம் , “ பொதுவாக மூளை அழற்சி நோய் வசதி குறைந்தவர்களைத்தான் தாக்கும் .பெரும்பாலான ஏ இ எஸ் [ Acute Encephalitis Syndrome AES] மூளை அழற்சி நோய் பாதிப்புக் குழந்தைகள் ஏழ்மையான ,விழிம்புநிலை சமூகங்களைச் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் . மக்கள் தொகை , ஏழ்மை ,ஊட்டசத்து குறைபாடு , சுத்தமான குடிநீர் கிடைக்காமை , தடுப்பூசி போதுமான அளவு போடாதது, சுகாதாரக் குறைபாடு , சுத்த குறைபாடு ஆகியவைதான் முக்கிய காரணங்கள் . ஆங்கிலத்தில்  Sevaen Ps – population ,poverty ,poor nutrituin .poor supply of dringing water , poor hygiene and poor sanitation    என்று மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள்.”

 

நூல் மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது . ஒன்று உ.பி.யோகி அரசின் தோல்வியையும் பழிவாங்கும் வெறியையும் . இரண்டு , அடக்குமுறை மனிதர்களை ஒடுக்கிவிடாது உறுதியான போராளியாக்கும். மூன்று “அனைவருக்குமான ஆரோக்கியம்” எனும் பாதையில் விழிப்புணர்வை ஊட்டவேண்டியது காலத்தின் கட்டளை .

 

 இந்நூலை ச.சுப்பாராவ் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் நன்று . முதல்வர் எனும் போது முதலமைச்சரே நினைவுக்கு வருவர் எனவே கல்லூரி முதல்வர் எனச் சொல்லியிருக்கலாம் . இதுபோல் ஒன்றிரண்டு கவனிக்கப்பட வேண்டும் .பிழை திருத்தம் செய்வதில் உள்ள குறைபாடு தேதி குழப்பம் ஓரிரு இடங்களில் . மொத்தத்தில் ஒரு முக்கியமான ஆவணத்தை மொழியாக்கம் செய்த சுப்பாராவுக்கு பாராட்டுகள்.

 

 யோகி ஆத்தித்தய நாத் காலில் விழுந்து , அவர் சந்நியாசி என நியாயப்படுத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இந்நூலை அனுப்பச் சொல்ல வேண்டும் என முதலில் நினைத்தேன் . அப்புறம் அக்கருத்தை மாற்றிக்கொண்டேன் . அவர் தெரியாமல் செய்யவில்லை .தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப் படுத்தியவராயிற்றே !

 

மனச்சாட்சியும் இதமும் உள்ள ஒவ்வொருவரும் இந்நூலைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்.உரக்கப் பேச வேண்டுகிறேன்.

 

ஓர் வரலாற்றுத் துயரமும் துரோகமும் பழிவாங்கலும் நிறைந்த இந்த நினைவலைகளை ஒவ்வொருவரும் வாசியுங்கள் .

 

1990 களில் மும்பையில் ஒரு மருத்துவ மனையில் கலப்படம் செய்யப்பட்ட குளுகோஸால் பலர் மரணம் அடைய நேர்ந்தது .அதன் பின்னே ஆழமான கார்ப்பரேட் கழுத்தறுப்பு போட்டியும் சதியும் ஊழலும் இருந்தன. அது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது .இப்போது சுத்தமாக சமூகம் மறந்துவிட்டது . அப்போது என் நண்பர் டாக்டர் டென்னீசன் அதுகுறித்து தமிழில் எழுதிய  சிறிய நூலை சென்னை புக்ஸ் வெளியிட்டது . அந்நூலை இப்போது மறுபதிப்பு கொணர யாராவது முயலாலாமே !

 

கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் : ஓர் மருத்துவரின் நினைவலைகள் . ஆசிரியர் : டாக்டர் கஃபீல் கான் ,தமிழில் : ச.சுப்பாராவ் ,வெளியீடு  : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :24332924 /8778073949 bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com  பக்கங்கள் :344  ; விலை : ரூ320/

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

20/9/2023.

 

 

 

 

0 comments :

Post a Comment