காலத்தே வந்திருக்கும் இரண்டாம் பதிப்பு

Posted by அகத்தீ Labels:


எஸ் வி வேணுகோபாலன்
சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள்,
ஆசிரியர்:சு.பொ.அகத்தியலிங்கம்,
பாரதி புத்தகாலயம்,
421,அண்ணாசாலை,தேனாம்பேட்டை,
சென்னை-600 018.
ப்க்கங்கள்:152,விலை:ரூ.60/வங்கிப் பணியில் சேர்ந்த புதிதில் அந்தச் சிற்றூரின் தெருவில் நடக்கையில், ரு முதியவர் என்னைப் பார்த்து, நீங்க என்ன வர்ணம் என்றார். அதற்குமுன் அந்தச் சொல்லை நான் அவ்வளவு அருகில் எதிர்கொண்டிருக்கவில்லை, கருப்பு வர்ணம் தான் என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். ஆனால், அது ஒரே ஊர் அல்ல, ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்தில் ஊரின் பெயரோடு காலனி சேர்த்து இன்னொரு ஊர் இருப்பதை அறிந்து கொண்டேன். நகரத்திலிருந்து குடி பெயர்ந்த எனக்கான பண்பாட்டு அதிர்ச்சிகளை அடுத்தடுத்து அந்தச் சூழல் எனக்குக் கற்பித்துக் கொண்டே இருந்தது. அதற்குச் சில மாதங்கள் கழித்து இன்னோர் ஊழியர் கிளையில் வந்து சேர்ந்தார். அன்று மாலையே வங்கி மேலாளரிடம் வந்து, சார் மீட்டிங் போடுங்க எனக்குக் கொஞ்சம் பேசணும் என்றார். புதிதாய்ச் சேர்கிற ஒருவர் இப்படி துணிச்சலாக எப்படி கேட்க முடியும் என்ற வியப்பு இந்த நாள் வரை எனக்கு நீங்கவில்லை. மேலாளரும் அன்று மாலை ஊழியர் கூட்டம் கூட்டினார். இருந்த நான்கு பேரும் வட்டமாகச் சுற்றி உட்கார்ந்ததும், புதியவர் கேட்டார், எனக்கு வாடகைக்கு வீடு தேடணும்னு மதிய உணவு இடைவேளை நேரத்தில் கடைத் தெரு பக்கம் போனால், நீ எஸ் சி தானேன்னு ஒருத்தன் கேட்கிறான், பேங்க்ல யாராவது சொல்லாம எப்படி இந்த விஷயம் ஊருக்குள் போயிருக்க முடியும், எப்படி சொல்லலாம் என்றார். யாரும் சொல்லவில்லை என்பதை சத்தியம் செய்த போதும் அவருக்கு ஏன் கோபம் குறையவில்லை என்பது அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியபிறகு புரியத் தொடங்கியது. தொடர்ச்சியான தேடலில் சாதி, இன, மத விவகாரங்கள் தொடர்பான பார்வை விரிவடையத் தொடங்கியது.

சாதி என்றால் என்ன, இந்தப் பாகுபாடுகளைத் தோற்றுவித்தது யார்,  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது நடைமுறையில் கடைப்பிடிக்காத வெற்றுச் சொற்றொடரா, சாதி இரண்டொழிய வேறில்லை போன்ற செய்யுள்கள் தேர்வில் மதிப்பெண் பெற மட்டுமான பாடமா, பிறப்பிலிருந்து இறப்பு வரை சுமத்தப்பட்டு விடும் இந்த அடையாளம் நாகரிக சமூகத்திலும் எப்படி விடாப்பிடியாய்த் தொடர முடியும்...சாதியத்தின் அனுசரிப்பில் தீண்டாமை என்கிற அம்சம் எப்போது எப்படி புகுந்து கொண்டு பேயாட்டம் போடத் தொடங்கியது, இதிலிருந்து மனிதர்கள் விடுதலை பெறப்போவது எப்போது..

சமூகத்தின் அடி ஆழத்தில் வேர் விட்டு நிற்கிற சாதியம் குறித்த விவாதத்தை, சு பொ அகத்தியலிங்கம் அவர்களின் "சாதியம் - வேர்கள், விளைவுகள், சவால்கள்" நூல் எளிய முறையில் நடத்துகிறது. ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை என்கிற அற்புதமான நூலில், பிரும்ம தத்துவம் குறித்து யாக்ஞவல்கியன் நிகழ்த்தும் உரையாடலில், பாட்டன் வசிட்டன், விசுவாமித்திரன் உருவாக்கிய படகுகள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும், எவராலும் நொறுக்க முடியாத உறுதியான ஒன்றாகத் தான் பிரும்ம தத்துவத்தை உருவாக்கி இருக்கிறேன், எனது பிரும்மம் கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டது..என்று வரும். இப்படி பார்ப்பனிய சூழ்ச்சியோடு உருவாக்கப் பட்ட சமூக விதிகள், நிலவுடைமைச் சமூகத்தின் வருண பேதங்கள், நூற்றாண்டுகளைத் தொடர்ந்து எப்படி இன்னும் நீடிக்கிறது என்ற சிக்கலான விஷயங்களை ஆசிரியர் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விரித்தெடுத்து அடுத்தடுத்து கிடைக்கப்பெறும் விளக்கங்களோடும், கூடவே பெருகும் புதிய கேள்விகளோடும் ஓர் உள்ளார்ந்த பயணத்தைத் தொடர்கிறார்.

இனப் பிரிவா, நிறப் பிரிவா, கோத்திரப் பிரிவா என்று வெளிநாட்டோர் கேட்கும் கேள்விகளுக்கு விளக்க முடியாத சூட்சுமமான சாதியை அனுபவிப்பவரே புரிந்து கொள்ள முடியும், இன்னது என்று விளக்குவது கடினம் என்கிறார் சு பொ. "ஏற ஏணி இல்லாத இறங்க வழி இல்லாத - பல அடுக்குமாடிகளைக் கொண்ட ஒரு பெரிய கோபுரம் தான் இந்து சமுதாயம்; எந்த மாடியில் ஒருவன் பிறக்கிறானோ அந்த மாடியில் தான் அவன் வாழ்ந்து இறந்தாக வேண்டும்" என்று பாபாசாகேப் அம்பேத்கரை மேற்கோள் காட்டிவிட்டு, உலக நாடுகளில் இந்த சாதி என்ற ஏற்பாடு வேறெங்கும் உண்டா என்று தேடும் தேடலில் தெற்கு ஆசியா தவிர வேறெங்கும் இப்படியான சமூக அடுக்குகள் கிடையாது, ஆனால் சாதியம் இந்தியாவில் இருப்பது போல் வேறெங்கும் வியாபித்து இருக்க வில்லை என்று விளக்குகிறார்.  ஜப்பானில் "எட்டா" என்று கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் சமூகத்தவர் உண்டு, ஆனால் தீண்டாமை இல்லை என்கிறார்.

தலித் சிந்தனையாளர் பர்தீப் சிங் ஆட்ரி ஹிண்டு நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில் (ஞாயிறு சிறப்பு இணைப்பு:  22 11 2009 )  ஹங்கேரி நாட்டில் ரோமா என்ற இனக்குழு மிகவும் தாழ்ந்த நிலையில் வைத்து இழிவு படுத்தப் படுவதாகவும், அவர்களது எழுச்சிப் போராட்டத்தில் ஜெய் பீம் இயக்கம் என்று அம்பேத்கர் பெயரும், புத்தகங்களும் இப்போது பெரும்பங்கு ஆற்றி வருவதாகவும் சொல்லும் அவர்,"ஜிப்ஸி என சொல்லப்படும் ரோமா இனத்தவர் பொதுவாக ஐரோப்பிய நாடோடி மனிதர்களாக - கருப்புத் தோல் கொண்டவர்களாக உள்ளனர் என்றும், உலகெங்கும் சுமார் 12 மில்லியன் (1 கோடியே 20 லட்சம்) எண்ணிக்கையில் இருக்கும் இவர்கள் ஆதியில் வட இந்தியாவிலிருந்து சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  80 லட்சம் பேர் ஐரோப்பாவில் வாழ்வதால், அந்தக் கண்டத்தில் சிறுபான்மை என்ற விதத்தில் மிகப்பெரிய அளவில் உள்ள சிறுபான்மைப் பிரிவினர் ரோமாக்கள்.  காலகாலமாக ஐரோப்பிய வெள்ளை இனத்தவரால் நிராகரிக்கப்பட்டும், புறந்தள்ளப்பட்டும், வெறுத்து ஒதுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும், கொடுமைகளுக்கு ஆட்பட்டும், இழிவான முத்திரை குத்தப்பட்டும் வாழ்ந்து வருவதுதான் இவர்களது வரலாறு.  ஹங்கேரி மக்கள் தொகையில் இவர்கள் 7 சதவீதமாக உள்ளனர்..." என்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நான்கு ஊராட்சிகளில் நீண்ட காலம் நடத்த முடியாதிருந்த தேர்தல் முதன்முறை நடந்ததைப் பதிவு செய்த 'இது வேறு இதிகாசம்'   (ஜா.மாதவராஜ்) என்ற ஆவணப் படத்தில் கீரிப்பட்டியில் வெற்றி பெற்ற வாக்காளரை தலித் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கையில் அதைப் பொறாத வகுப்பினர் அடைந்த ஆத்திரமும், குறிப்பாகப் பெண்கள் 'இது அந்த சாமிக்கே அடுக்காது' என்று மண்ணள்ளித் தூற்றியதும் சாதியம் புரையோடியிருக்கும் தன்மைகளின் சாளரப் பார்வையாக இருக்கிறது.

அந்த வகையில், "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்" என்ற பகவத் கீதை வாக்கியம் இது கடவுள் உருவாக்கி வைத்த விதி என்று அங்கீகாரம் அளிப்பதால், சாதியத்தின் வேர்களை இந்து மதத்திற்குள் தான் தேட வேண்டும் என்னும் சு பொ அவர்களின் தொடர் தேடல், சாதி எப்படி உருவானது, எங்கேயிருந்து வந்தது, சுத்தத்திற்கும் சாதி மேன்மைக்கும் தொடர்பு உண்டா, சுத்தபத்தமாக இருந்தால் சாதி தொலைந்துவிடுமா, மதமாற்ற தீர்வு அளிக்குமா, அறிவியல் யுகத்திலும் சாதி தொடர்வதேன்...என்ற விளக்கமான தலைப்புகளில் விவாதத்தை மேலும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்வது சாதாரண வாசகர்களைப் புதிரான ஒரு சமூக வழக்கத்தை இலகுவாக விளங்கிக் கொள்ளவும், அதன் மீது ஒரு கோபம் வளர்த்துக் கொள்ளவும் தோதாக செல்கிறது. 'மநு என்னும் மாபாவி' பகுதி சமூக இழிவாகக்தின் உட்கூறுகளை உயிரியல் கல்வி போல அறுத்தெடுத்துக் காண்பிக்கிறது.   சாதியத்தின் பல முகங்கள், பல முனைகள் பகுதியும் முக்கியமானதாகிறது.

சாதியம் குறித்து சமூக சீர்திருத்தவாதிகள் பலரும், போராளிகளும் சிந்தித்தவற்றை நிறைய மேற்கோள் காட்டிச் செல்லும் நூலாசிரியர் அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளின் வலுவான பார்வையில் மேலும் கேள்விகளை எழுப்பியவாறு வாசகர்களை சிந்திக்கத் தூண்டுவதும், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆதாரமான நூல்களைத் தவறாது பட்டியல் இட்டிருப்பதும், அதனால் எந்தெந்த நூல்கள் அதிகம் பயன்பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வைப்பதும் மேலும் தேடலில் ஆழ விரும்பும் வாசகர்களுக்கு மிக நேர்த்தியான உதவியாகும். சாதியத்தின் நுகத்தடியில் பெண்களே அதிகம் பாதிப்படைவது என்பதையும் ஆசிரியர் முக்கிய கவனத்தோடு விவாதிப்பது குறிப்பிடத் தக்கது.

நூலில் இட ஒதுக்கீடு குறித்த விவாதம் ஆதிக்க சக்திகளின் விஷமத் தனமான வாதங்களுக்கு நல்ல பதிலடி கொடுக்கிறது. அதன் போதாமையையும் பேசுகிறது. தலித் மக்களுக்கான சிறப்புக் கூறு திட்டம் எப்படி ஆட்சியாளர்களின் சுவாரசியமற்ற போக்கினால் போய்ச்சேரவே மறுக்கிறது என்பதையும் நூல் சுட்டிக் காட்டுகிறது. பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு மண்டல் கமிஷன் அளித்த பரிந்துரை, மேல் சாதி மாணவர் போராட்டம், தூண்டிவிட்ட அருண் சோரி போன்ற அறிவுஜீவிகளின் பேச்சு ஆகியவை  போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.

வர்க்கப் பார்வை மேலோங்கி நிற்கும் கம்யூனிஸ்டுகள் சாதியத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து அதிகம் கவலை கொள்ளவே இல்லை என்று வைக்கப்படும் விமர்சனத்தை சுய விமர்சனத்தோடு ஆசிரியர் அணுகியிருக்கிறார். ஆணித்தரமான சான்றாதாரங்களை வைத்து மார்க்சிய இயக்கம் செய்துவருவதை பதியவும் செய்திருக்கிறார்.  புத்தகம் பேசுது இதழில் வெளிவந்திருந்த நேர்காணலில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, இயக்கத்திற்குள் புரட்சிகர சிந்தனைகளைக் கொண்டவரை இணைவோர் அரசியல், பொருளாதார இலட்சியங்களில் இடதுசாரி கருத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தாலும், சாதி விஷயத்தில் அதே இடதுசாரி தத்துவார்த்தப் பார்வையை தனது அன்றாட நடவடிக்கைகளில், வாழ்க்கையில் கைக் கொள்வதில் உள்ள பலவீனத்தைச் சுட்டிக் காட்டி, சாதிய உளப்பாங்கைக் கைவிட இயக்கம் எடுக்கும் முயற்சிகளில் தொடர் கவனம், கண்காணிப்பு தேவை என்று குறிப்பிட்டிருந்தார். மூன்றாண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்டு வீச்சாக வளர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி அந்த நோக்கத்தையும் நிறைவேற்ற முடியும். தீண்டாமை ஒழிப்பு, சாதியத்திற்கெதிரான நெடிய போராட்டத்தின் முக்கிய பகுதி என்கிற விதத்தில் அதில் முன்னணியில் இயங்கும் செயல் வீரர்களுக்கு சாதியம் குறித்த இந்த ஆய்வு நூல் பேருதவி புரியும்.

2004 ம் ஆண்டு வெளிவந்து இப்போது இரண்டாம் பதிப்பு மகிழ்ச்சியளிக்கும் நேரத்தில், ஒரு வருத்தம் உண்டு. முந்தைய பதிப்பில் கண்டிருந்த சில பிழைகள் திருத்தபடாமலே போய்விட்டது. சிறு எழுத்துப் பிழைகள் பரவாயில்லை. ஆனால் இந்திய தத்துவ மரபில் நாத்திக சிந்தனைகளை விவாதிக்கும் இடத்தில், சார்வாகர் என்பது சாவர்க்கர் என்று அச்சாகி இருப்பது பெரிய குழப்பத்தை உண்டு பண்ணும்.  ஆனால் புதிய தாராளமயம் நமது பண்பாட்டின் கூறுகளிலும் ஆபத்தான சிதைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்  தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட  நிலவுடைமை மதிப்பீடுகளை மேலும் கெட்டிப் படுத்துகிறது என்பதை விவாதிக்கும் நேரத்தில் இந்த இரண்டாம் பதிப்பை பாரதி புத்தகாலயம் கொண்டு வந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. மூன்றாம் பதிப்பை தமிழ் வாசகர் உலகம் விரைவுபடுத்த இயலுமானால் நூலாசிரியர் தமது உழைப்பின் கொடையாய்க் கிடைத்த நூலை இன்னும் மேம்படுத்தவும் முடியும்.

புத்தகத்தின் நிறைவில் முந்தைய பகுதிகளின் சாராம்சத்தைத் தொகுத்தளிப்பது அருமையான விஷயம். நிறைவாக, தமது கனவு என்ற ஒன்றை பிரகடனமாக சொல்லும் இடத்தில், எதிர்காலத்தில் சாதி என்றால் என்ன என்று தெரியாத சமுதாயம் மலர வேண்டும், ஆய்வில் மட்டுமே இந்தச் சொல் இடம் பெற வேண்டும், சாதியின் கோர முகத்தை அறிய வரும்போது சாதியில் சரணடைந்த இன்றைய தலைமுறை மீது காறி உமிழ வேண்டும் என்று சு பொ சொல்வது முற்போக்காளர்கள் யாவருக்குமான கனவு என்றே கொள்ள வேண்டும்.

***********

அகத்தேடல்-9

Posted by அகத்தீ

அகத்தேடல்-9

ஆணென்ன பெண்ணென்ன
ஆழங்காண முடியா மனதுக்கு..

உள்ளொன்று வைத்து
உதடொன்று பேசும்
விதி விலக்கு
யாரென்று கூறு..

நானென்றும்
நீயென்றும்
நாமென்றும்
வார்த்தை ஜலதரங்கம்

தன்னலம்கருதா
மனிதர் யாரு?
தன்னலம் என்பதன்
பொருள்தான் ஏது?

தான் வாழ தனைக் காக்க
சொல்கின்ற பொய்களும்
செய்கின்ற செயல்களும்
தவறென்று சொல்லலாமா?

தான் மட்டும் வாழ
தனைச் சுற்றி
ஜால்ராக்கள் பாட
வாழுவது தன்னலம்

லாபம் சுபம் தனக்கு அதுபோதும்
சமுதாயம் கெட்டொழிந்து போயினும்
தனக்கென்ன என வாழல்
தன்னலத்தின் உச்சம்

தன்னல மறுப்பு வேறு
தன்னைச் சுருக்குதல் வேறு
உன்னை இழந்தபின்
ஊருக்கு உழைத்தல் எங்ஙனம்?

தன்னலத்தின் சூத்திரத்தை
சரியாக உணராமல்
தன் இருத்தலை உணர்த்தாமல்
தடயமற்றுப் போனோருண்டு..

யோசித்துப் பார்க்கையில்
எதிரொலிக்கும் பெருமூச்சு
உள்மனதின் குரல் கேழு
இனியேனும் விழிப்பாய் இரு

சரி சரி இனி விழித்து என்செய்ய
பிழைக்கத் தெரியாதவன் இவனென
மனைவியும் மக்களும்
உற்றாரும் உறவும் பேசட்டுமே

வராலாற்றில் பதிய
உனக்கென்ன இருக்கிறது
மூச்சடங்கும்வரை உன்
முத்திரை தொடரட்டும் இப்படியே..

காலவெளியில் உன்
கால் பதித்த அடையாளத்தை
காலமெல்லம் தேடு
கண்டுகொள்ளாமல் ஓயாதே..
வாட்டர் பாட்டில் டூ வால் மார்ட்

Posted by அகத்தீ Labels:

வாட்டர் பாட்டில் டூ வால்மார்ட்:
தொடரும் உளவியல் யுத்தம்

தண்ணீர் குப்பி என்றோ தண்ணீர் போத்தல் என்றோ சொல்லாமல் வாட்டர் பாட்டில் என்று சொல்லலாமா? ஒய் கொலை வெறி கொலைவெறி.. என தங்கிலீஸில் பாடினால்தான் சாங்க் [ பாட்டு என்பதோ பாடல் என்பதோ தமிழ் வார்த்தை. அதனால் கெட்ட வார்த்தை. நமது தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் நடிகர், நடிகைகளுக்கும் பிடிக்காது.] ஹிட்டாகும் இண்டர்நேஷனல் மார்கெட்டுக்கு சூட்டாகும். வால்க டமில்..என்ன தலைப்புக்கு சம் பந்தம் இல்லாமல் எதை எதையோ கூறுவதா கக் கருத வேண்டாம். முழுதாய் படியுங்கள் எல்லாம் விளங்கும்.

எண்பதுகளின் துவக்கத்தில் தமிழகத்தை கடும் தண்ணீர் பஞ்சம் வாட்டியபோது சென்னையில் மாதர் சங்கம் பேரணி நடத்தியது. எம்.ஜி.ஆர். பேரணிக்கே வந்து மனுவைப் பெற்றுக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த சமயத்தில் தினசரி மணியடிக்கும் காலைப் பத்திரிகை ஒரு செய்தியையும் கட்டுரையையும் வெளியிட்டது. வெளிநாட்டிலிருந்து வரும் கிரிக்கெட் அணியினர் குடிநீரை தங்கள் நாட்டிலிருந்தே கொண்டுவருகின்றனர்; காரணம் இங்கு மினரல் வாட்டார் கிடைப்பதில்லை, மேலும் இங்குள்ள தண்ணீர் குடிக்க லாயக்கற்றது எனக் கூறியது. அதைத் தொடர்ந்து பல ஏடுகள் அதே செய்தியை பரபரப்பாக்கின. அப்போது வெளியிடப்பட்ட கட்டுரையில் குடிநீரை காசு கொடுத்தும் வாங்கும் பண்பாடு நம்நாட்டில் வளரவில்லையே என வருந்தியது அந்த ஏடு.

இந்தியாவின் தண்ணீர் சந்தை எவ்வளவு பரந்து விரிந்துகிடக்கிறது என்பது குறித்து அடுத்து அடுத்து கட்டுரைகள் வெளியாயின. தண்ணீரை விற்பனைச் சரக்காக்க உலகவங்கி திட்டமிடுகிறது என இடதுசாரிகள் மட்டுமே பேசினர். எழுதினர். பெரிய ஊடகங்களோ பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்த தலைவர்களோ பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் இடதுசாரிகள் கேலி செய்யப்பட்டனர். ஆனால் நடந்ததென்ன உலகவங்கி வெற்றி பெற்றுவிட்டது. வாட்டர் பாட்டிலோ வாட்டர் கேனோ இல்லாத நகரமும் இல்லை, கிராமமும் இல்லை, பயணமும் இல்லை என்றாகிவிட்டது. எப்படி நடந்தது?.

உலக வங்கி ஒரு திட்டம் அறிவிக்கும் போதே அதற்கு எதிர்ப்பு வருமல்லவா அதை யும் சரிகட்டி மக்களை இணங்கச் செய்ய கால அவகாசத்தையும் கணக்கில் கொண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.ஆரம்பத்தில் எதிர்ப்பு இருக்கும் மெல்ல மெல்ல அது வடிந்து மக்கள் தங்களுக்கு ஏற்ப படிந்து விடுவார்கள் என்பதே அவர்கள் கணக்கு. அந்த சமூக உளவியலை வார்தெடுப்பதற்காக எதையும் செய்வார்கள்.

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இன்னும் பல உண்டு. காசு கொடுத்துத்தான் வைத்தியம் செய்து கொள்ளவேண்டும். காசு கொடுத் துத்தான் கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி மருத்துவம் வேண்டுமெனில் காசு கொடுப்பதில் தவறென்ன என்று மக்களில் ஒருசாராரிடம் வலுவான கருத்தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்களே. இதற்கு விளக்கம் தேவையில்லை.நாட்டு நடப்பு கூறும்.

உலக மயத்திலும் தாரளமயத்திலும் எல்லாவற்றையும் சந்தைதான் தீர்மானிக்கிறது என அவர்கள் சத்தியம் செய்கிறார்கள். சாதுரியம் பேசுகிறார்கள். மக்களின் தேவையை நிறைவு செய்யும் சந்தை என்பது பாரம்பரியமானது.அதை யாரும் மறுக்க முடியாது, தேவையும்கூட. ஆனால் உலக மயம் பேசும் சந்தை  அதுவல்ல. அந்த சந்தையையே அவர்கள்தான் கட்டமைக்கிறார்கள். உங்கள் பாட்டிக்கு துவரம் பருப்பு தெரியும், கடலை பருப்பு தெரியும் ஆனால் இன்று 'கடயம் பருப்பு' 'விடயம் எண்ணை''என வர்த்தகப் பெயர்களுக்கு அடிமையாகிப் போகிறோமே எப்படி? நாம் எதை உண்ண வேண்டும்? எதை உடுத்தவேண்டும்?எதை ரசிக்க வேண்டும்? இப்படி எல்லாவற்றையும் யார் முடிவெடுக்குகிறார்கள்?

தரம், சுத்தம், அழகு என்ற மக்களின் சாதாரண விருப்பத்தை தங்களின் மூலதனமாக்கி தாங்கள்  விற்பது மட்டுமே தரமானது உயர்வானது என்ற பிரம்மையை மக்கள் நெஞ்சில் விதைத்து விடுகிறார்கள். விளம்பரம் மூலமும் ஆய்வுத் தகவல்கள் என்கிற  போர்வையிலும் மெய் போல் ஜோடிக்கப்பட்ட பொய்கள் பரப்பப்படுகின்றன.இதன் மூலம் தங்கள் சரக்குகளையே விரும்பிவாங்கும் நுகர்வோர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உகந்த சந்தையை உருவாக்குகிறார்கள்.

மக்கள் வெறும் மந்தை என்றான் ஹிட்லர். வெறியூட்டி அந்த மந்தையைதான் விரும்பிய திசையில் ஓட்டமுடியும் என்றான் அவன். மக்களை வெறும் சந்தையாகப் பார்க்கிறது உலகமயம்.அந்த சந்தையையும் தனக்கு ஏற்ப பிசைந்து உருவாக்குகிறது பன்னாட்டு நிறுவனங்கள். இந்த பின்னணி யில் வால்மார்ட் வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நியர் வருகிறார்கள். [இந்த இடத்தில் நவம்பர் 9 ஆம் தேதி தீக்கதிரிலும்-வலைப்பூவிலும் வெளிவந்த 'டிராபிக் ராம சாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்' என்ற கட்டுரையை  மீண்டும் அசைபோடவும்] அவர்கள் சரக்குகளை விற்க உலகத்தரம், உன்னத வடிவமைப்பு.பற்றி இப்போதே பேசத் தொடங்கிவிட்டனர்.ஏற்கெனவே காளிமார்க் கலர் போச்சு, கோக்கும் பெப்சியும் வந்தாச்சு. இனி  ’கடயம் பருப்பு’,’விடயம் எண்ணை’ என்பதற்கும் ஆபத்து வரும்.  ‘பெக்ரண்ட்டால்’, ’டோனி ஆயில்’ என்பதுபோல் நமது பருப்பும் எண்ணையும் புதிய நாமம் பெறும். அதுதான் உசத்தி என்று நம்மையே பேச வைத்து விடுவார்கள்.நடைபாதை கடைகள் போயாச்சு.சரவணாக்களும் மூடப்படும். வால்மார்ட் எங்கும் கடை விரிக்கும்.  

உடலால் இந்தியர்கள் உள்ளத்தால் ஆங்கிலேயர்கள் என நம்மை உருவாக்க மெக்காலே கல்விமுறையைக் கொண்டு வந்தான் பிரிட்டிஸ்காரன்.இப்போது உடலால் இந்தியன் தமிழன் எப்படி வேண்டுமானலும் இரு. ஆனால் உன் உள்ளம் என் விருப்பம் போல் ஆடட்டும் என்கிறான் பன்னாட்டுக் கொள்ளைக்கார்ர்கள். ’ஒய் கொலை வெறி கொலைவெறி..'என பாடு... உன் மொழி, இனம், தேசம் எல்லாம் என் விருப்பத்துக்கே என்கிறது அந்த பன்னாட்டு முதலை கூட்டம். புரிகிறதா? மொழி,பண்பாடு அனைத்தும் சிதைக்கப்படும். ஆனால் அதையும் நம்மை ரசிக்க பழக்கிவிடுகிறது.மொத்த சமூகமும் அவர்கள் தாளத்துக்கு ஆட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்ப உன்னை வடிவமைப் பதுதான் தகவல் தொழில் நுட்பம்,ஊடகங்கள் இவற்றின் தலையாய பணியாக உள்ளது.  

எல்லாம் சரி, வால்மார்ட்டுக்கு பலமான எதிர்ப்பு உள்ளதே எனக் கேட்கலாம்.வாட்டர் பாட்டிலையும் வாட்டர் கேனையும் ஒரு பத் தாண்டுகளில் நம்மை ஏற்கசெய்துவிடவில் லையா? வால்மார்ட்டும் அதற்குத்தான் பிள்ளையார் சுழி போடுகிறான்..ஊடகங்கள் மூலம் இனிக்கும் மொழியில் பேசி நம்மை மயங்கி இணங்கி வைக்கப்போகிறான். அதற்கு முன் நமது கடைகளில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பது குறித்து நம் ஆய்வாளர்களைக் கொண்டே பேசவைப் பார்கள். ஏன் ஆணுறை ,செக்ஸ் களிம்புகள், மாத்திரைகள் விற்பனைக்காக இந்திய செக்ஸ் பழக்கம் மாறிவருவதை சர்வே செய்து சில ஏடுகள் பக்கம் பக்கமாய் வெளியிட வில்லையா?அதில் நடிகைகளை பேரில் எதையாவது எழுதி பரபரப்பாக்கி அந்த சர்வே பக்கம் எல்லோரின் பார்வையையும் திருப்பவில்லையா?இப்படி ஒவ்வொன்றுக்கும் அவர்கள் தொடர்ந்து நட்த்தும் உளவியல் யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? 

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொரு ளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம் என்கிற நூலை இப்போது வாசியுங்கள். நம்மை ஏமாற்ற நிபுணர்கள் வல்லுனர்கள் மூலம் எப்படியெல்லாம் ஏகாதிபத்தியம் பேசும். நம்மை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

கார்ப்பரேட் ஊடகங்களை நம்பிப் பயன் இல்லை.பஸ் கட்டணம் பால்விலை உயர்த் தப்பட்டுவிட்ட்தும் என்ன நடந்த்து? ஒரு ஏடு தனது கார்ட்டூனில் நச்சென கிண்டலடித்தும். ஆம் பயணியின் கோவணத்தைகூட உருவிவிடுவதாக கிண்டலடித்தது. அதை பார்த்து மயங்கி தொடர்ந்து அந்த ஏட்டைப் படிக்கும் வாசகனிடம் விலைஉயர்வை நியாயப் படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த வஞ்சக வலையை அறியாமல் விளக்கை நாடும் விட்டில் பூச்சியாக வாசகன் விழநேர்கிறது. இப்போது இது போன்ற ஊடக வஞ்சகங்களை அம்பலப்படுத்துவதும் நம் வர்க்கத்தின் சொந்த ஏட்டை முன்னெடுத்துச் செல்வதும் தவிர்க்கவே முடியாத-தவிர்க் கவே கூடாத வர்க்கக் கடமையாயல்லவா? இதைச் செய்கிறோமா?இதை வலுவாகச் செய்யாமல் இனி நமக்கு மார்க்கம் இல்லை.

‘அவள் சிரிக்கிறாள் என்பதற்காக மயங்கிவிடாதே அது சூனியக்காரியின் பழம் பாடல்’ என்று ஏகாதிபத்தியத்தைப் பற்றி கவிஞன் இக்பால் விடுதலைப் போராட்ட காலத்தில் கூறினார். இன்றைக்கும் அது பொருத்தமாகத்தான் உள்ளது. விழிப் போமா? இப்போதாவது.....

அரசியல் பொருளாதாரக் கோணத்தில் பேசினால் மட்டும் போதாது. சமூக உளவி யலை சரியான திசையில் கட்டமைக்க நமது பிரச்சார ஆயுதங்களை கூர்தீட்டவேண்டாமா?

                                                                                     சு.பொ.அகத்தியலிங்கம்,தீக்கதிர் [5-12-2011]

Posted by அகத்தீ

Posted by அகத்தீ

அகத்தேடல்-8

Posted by அகத்தீ

அகத்தேடல்-8

கமும் புறமும் வேறாமோ
அங்கும் உளதோ முரண்பாடு?
எங்கும் தேடி சலித்தாலும்

முகம் காட்டும் கண்ணாடி
முகவரியைக் காட்டிடுமோ

கண்ணாடி காட்டும் முகம்
அசலா?போலியா?
அணிந்துள்ள முகமூடியா?
அறிய முயல்கிறேன்
அகத்துள்ளே தேடுகிறேன்

மறுபடியும் மறுபடியும்
கருங்குரங்கை நினைக்காமல்
லேகியம் சாப்பிடத்தான் ஆசை
விடாமல் துரத்துகிறதே
அந்தக் கசப்பு

பரமனின் அடிமுடியைப்
பார்த்தவரில்லை என
ஆன்மீக அடிப்பொடிகள்
அளந்த கதை கேட்டதுண்டு

சாதியின் ஆணிவேர் சல்லிவேரை
அலசி அடையாளங் கண்டு
அமிலத்தை ஊற்றிடவே
ஆசைப் படுகிறேன் வெகு நாளாய்..

இதுதான் விஷவேர் என்றே
வெளிச்சம் பாய்ச்சியவர்கள்
அநேகம் அநேகம்
ஆனால் அவர்கள்
தோற்ற இடம் எது?

தோண்டி எடு வரலாற்றை
துருவிப்பார் தத்துவத்தை
சாதிச்சிலுவை யுகயுகமாய்
அழுத்துவதின் ரகசியத்தை
அறிவியலின் வெளிச்சத்தில்
ஆராய்ந்து கண்டுபிடி
அனுபவக் கல்லில் உரசி
ஆழத்தை அளந்து சொல்

நிச்சயமாய்ச் சொல்வேன்
திறந்த மனதோடு
உனக்கு எதிராக
உன்னையே நிறுத்து
குறுக்கு விசாரணையில்
சாதிய அழுக்கைத்
தோலுரித்துக் காட்டு

இது கட்டளையா?
இலை இல்லை
சுய அடையாளத் தேடலின்
முதல் முடிச்சை
அவிழ்க்கும்
இடம் இதுதான்..

தொடரட்டும்
அகத்தேடல்...

சு.பொ.அகத்தியலிங்கம்.


..

அகத்தேடல்-7

Posted by அகத்தீ

அகத்தேடல்-7

உன் சாதிக்கு என் சாதி
உயர்ந்ததென்றும்
இழிந்ததென்றும்
பிதற்றுவதில் பெருமையென்ன?

மிதிக்கின்றாய் ஒருவனை
மிதிபடுகின்றாய் ஒருவனிடம்
கதைக்கின்றாய் சாதிப்பெருமை
உன்னை நீயே
சிமிழுக்குள் சிறையிட்டு
இழக்கின்றாய் சிறகை

தலைமுறை தலைமுறை
சாதி அழுக்கு உன்
தலைக்குள்ளே..

சுத்தமானவன் என்று
எப்படிச் சொல்கிறாய்?
வெட்கங்கெட்டவனே

சாதியின் வேர்களைத்தேடி
சரித்திரத்தின் இருண்ட தாழ்வாரங்களில்
கண்டதென்ன?

சனாதனத்தின் குடிமியையா?
வர்ணஸ்ரமப் பூணூலையா?

இரண்டும் குறியீடுதானே

மநுவின் சட்டம்
அர்த்த சாஸ்த்திரம்
கீதையின் போதனை

முக்கூட்டு மூளைச்சலவையில்
இழந்த சுயத்தை
எப்போது மீட்கப்போகிறாய்?

சடங்குகள் சம்பிரதாயங்கள்
விலங்குகள் என்பதை
எப்போது உணரப்போகிறாய்?

கடல்தாண்டினும்
மலைதாண்டினும்
மதம் மாறினும்

உடை மாற்றி குரல் மாற்றி
நடை மாற்றினும்
மாறாத சாதியை

மனதிலிருந்தே
துடைத்தெறியாத வரையிலும்
சாதிக்கறைதானே
உன் அடையாளம்?

அறிவியலில் நீ
பெற்ற வெற்றியெல்லாம்
விழலுக்கு நீர்தானே

துணியில் கறை நீக்க
சோப்பு உண்டு
சாதிக்கறை நீக்க என்ன வழி
நீ யோசி

மதம் மீறி சாதி மீறி
மனதுக்கு ஏற்ற துணை
நீ தேடு
காதல் பெ
ரு நெருப்பில்
கருகட்டும் சாதி மதம்

-சு.பொ. அகத்தியலிங்கம்

டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்

Posted by அகத்தீ

டிராபிக் ராமசாமி போன்ற மனிதர் களை கொண்டாடத் தொடங்கினால்தான் நாடு உருப்படும் இப்படி முகநூலில் (பேஸ் புக்கில்) ஒரு நண்பர் கூறியிருந்தார். மனிதர் விடாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி விதிமீறியக் கட்டடங்கள் சிலவற்றுக் காவது சீல்வைக்கச் செய்துவிட்டாரே என பாராட்டியிருந்தார். அவர் கூறியது ஒருவகையில் சரிதான். தீப்பிடித்துவிட்டதாகவோ, குண்டுவைக்கப் பட்டிருப்பதாகவோ யாரோ ஒரு வதந்தியைக் கிளப்பினால் போதும் பயபீதியில் மிரண்டோ டும் கூட்ட நெரிசலில் மிதிபட்டே நூற்றுக் கணக்கில் செத்திருப்பர். கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் கருகிச்செத்த கோரக் காட்சி இங்கேயும் அரங்கேறியிருக்கலாம். சீல் வைக்கப்பட்ட பலகட்டடங்களின் நிலை அதுதான்.

அப்படி ஒரு சோகம் நடக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. டிராபிக் ராம சாமியின் பொதுநல வழக்கும் அதில் நீதி மன்றம் காட்டிய கெடுபிடியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது. இதற்கே 15 ஆண்டு களுக்கு மேல் உருண்டோடிவிட்டது. மாறி மாறி வந்த கழக ஆட்சிகள் விதிமீறிய கட்ட டங்களை பணம் காய்ச்சி மரங்களாகத்தான் பார்த்தன. அதற்கேற்ப அடக்கி வாசித்தன. இதெல்லாம் நினைவில் அலைபாயும்போதே வேறு சில காட்சிகளும் மனத்திரையில் ஆடு கின்றன.

பொங்கல் மற்றும் இதரப் பண்டிகையை யொட்டி கிராமவீதிகளுக்கே வந்து பெட்ர மாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜவுளியை ஏலம் போட்ட நாட்கள் போயொழிந்தன. வீடு தேடி புடவை, வேட்டி, போர்வை என விற்பதும் வழக்கம். பொதுவாக இந்தியச் சந்தையை வெண்டர்ஸ் ஓரியண்டட் அதாவது வீடுதேடி வந்து பொருள் விற்கும் வகையது என்பர். மக்களைத்தேடி இங்கு சந்தைவரும். ஆனால் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ மக்கள் தான் சந்தையைத்தேடிப் போவார்கள். அதனை மார்க்கெட் ஓரியண்டட் என்பர். கடந்த நூற்றாண்டில் நகரங்களில் முளைத்த ஜவுளிக்கடைகள் மக்களை ஈர்க் கத்துவங்கின. ஜவுளி என்பதே தமிழ்ச்சொல் அல்ல என்பதிலிருந்து அது நமக்கு புதிய வரவு என்பது சொல்லாமலே விளங்கும். இந்தக் கடைகள் தலைச்சுமையாகவும் சைக் கிளிலும் விற்பனை செய்த பலரை அத்தொழி லைவிட்டே ஓட்டியது. அதேசமயம் புதிய நகரக் கடைவீதிகள் பல்லாயிரம்பேரை வியாபாரி களாக்கியது. பல்லாயிரம்பேருக்கு வேலை வாய்ப்பானது. நடைபாதை வணிகமும் பெரு கியது.

தாராளமய உலகமய யுகத்தில் இந்தியா நுழைந்ததும் வர்த்தகங்களின் தன்மை மாற லாயிற்று. ஜவுளிக்கடைகள் ஜவுளிக்கடலா யின. மின்னணு ஊடகங்களின் விளம்பரப் பொறியில் மக்கள் விழலானார்கள். மெகா சீரியல், மெகாத் தொடர்கள்,மெகா ஷோக் கள், மெகா தயாரிப்புகள் என எங்கும் மெகா மோகம் தலைவிரித்தாடலாயின. இவ்வளவு ஏன், இருபது கோடிச் செலவில் உண்ணா விரதம் இருந்த அன்னா ஹசாரேவைத்தான் காந்தியவாதி என்கிற காலம் இது. இந்த காலக்கட்டத்தில் பெருநகரங்களில் மெகா ஸ்டோர்கள் உருவெடுத்தன.அவை சின்ன மீன்களை விழுங்கி பெரிய மீன்களாக உரு வெடுத்தன.அனைத்து நெறிமுறைகளையும் காலில்போட்டு மிதித்துக் கொழுத்தன. மக்கள் அவற்றை நோக்கிப் படைஎடுக்கும்படி விளம்பர மகுடியை சினிமா நட்சத்திரங்கள் மூலம் ஊதினர். பெருகும் வாடிக்கையாளர் கூட்டத்தின் எதிரொலியாக கட்டடங்கள் வரம்புமீறி வீங்கின; வீதிகள் சுருங்கின; திண றின. எடுத்துக்காட்டாக கூறுவதெனில் சென்னை யில் தி.நகர் மெகா வியாபாரக் கேந்திர மானது.

தி.நகரில் சென்று பொருட்கள் வாங்கு வதுதான் நாகரிகமானது; கவுரவமானது என்ற மாயை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களை தொற்றுவியாதியைப் போல் கவ்வியது. அந்த மாவட்டங்களின் நடுத்தர வியாபாரிகள் பிழைப்பில் மண் விழுந்தது. பஸ்-ரயில் போக்குவரத்தும் பெரும் நெரிசலைச்சந்தித்தன.

இதே காலகட்டத்தில் தகவல்தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, குறிப்பாக கணினித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மத்திய தர மக்களில் ஒரு பகுதியினரிடம் பணப் புழக் கத்தை அதிகரித்தது. வெளிநாடு சென்று வரும் அவர்களிடம் மேலைநாடுகள் போல் இங்கு சாலைவசதி, கார்பார்க்கிங், மெகா வணிக வளாகங்கள், போன்ற எதிர்பார்ப்புகள் ஓங்கின. ஊடகங்களில் எதிரொலித்தன.

இதற்காகவே காயை நகர்த்திய உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் செயல் மேடையாக அரசும்,மாநகராட்சியும், பெரு நகரவளர்ச்சிக் குழுமமும் உருமாறின. போக்கு வரத்துக்கு இடையூறு, எனவே அண்ணா சாலையில் ஊர்வலம் போராட்டம் கூடாது. தூய்மை மிகமுக்கியம்,எனவே மெரினாவில் பொதுக்கூட்டங்கள் கூடாது. குடிசைகள் சென்னையின் எழிலையும் சுகாதாரத்தையும் கெடுக்கின்றன. எனவே அப்புறப்படுத்த வேண்டும். நடைபாதைக்கடைகளால் டிராபிக் ஜாம் ஏற்படுகின்றன. எனவே அவற்றை காலிசெய்யவேண்டும்.இவ்வாறான குரல்கள் கேட்கத்தொடங்கின. டிராபிக் ராமசாமிகள் உருவாயினர். பொதுநலவழக்குகள் புனையப் பட்டன. நீதிமன்றங்கள் வர்க்கப்பாசத்தோடு ஒத்து ஊதின. சென்னையின் முகப்பொலிவை மட்டுமல்ல ஆத்மாவையே மாற்றியமைக்கும் உலகவங்கிச்சதி அரங்கேறலாயிற்று.

வெறும் வாயை மென்ற இவர்களுக்கு விதிமீறிய கட்டடங்கள் அவலாயின. 15 ஆண்டு கள் போராடி சீல் வைக்கிற அளவுக்கு வென்றனர். அது சரிதான். அதேநேரம் அந்த வணிகநிறுவனங்களை நம்பி நிற்கிற பல்லா யிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை திடீ ரென வீதியில் தூக்கி எறியப்பட்டால் என்ன ஆகும் என்ற கவலை டிராபிக் ராமசாமி களுக்கும் இல்லை.நீதிமன்றங்களுக்கும் இல்லை. நாயை அடிப்பதானால்கூட தப் பிக்க வழிவிட்டு அடிப்பார்கள். அந்த மிரு காபிமானம்கூட இந்த ஏழைத் தொழிலா ளர்கள் மீது காட்டப்படவில்லை. அங்காடித் தெரு சினிமா இவர்களின் வாழ்க்கைப்பாட் டில் ஒரு பகுதியை காட்டின.முழுவதும்அறிந் தால் கண்களில் இரத்தம் கொட்டும். கெட்டும் பட்டணம் போ என பிழைக்க வந்தவர்கள் இன்று சென்னை நகர வீதிகளில் குப்பையாய் கொட்டப்பட்டுள்ளனர்.இவர்களின் வாழ்வு ரிமை பற்றியும் குறைந்தபட்ச கண்ணியமான பணிச்சூழல் பற்றியும் ஊடகப்புலிகளுக்கோ, அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ டிராபிக் ராம சாமிகளுக்கோ அக்கறை ஏதும் எப்போதும் இருந்ததில்லை.

இப்போது இவர்கள் கவலையே வேறு. ஏழைகள் உள்ளே நுழையக்கூட முடியாத எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் வால்மார்ட்டு களும்தான் இவர்களின் ஒரே கனவு. அதற்கு இடையூறாக உள்ள எல்லாம் அவர்கள் கண்களை உறுத்தும்.அந்த கனவு அவென் யூக்களில் கார்பார்க்கிங் செய்யவே ரூ.200/- உள்ளேபோய் வெளியே வந்தால் குறைந்த பட்சம் ரூ.3000/-காலியாகிவிடும். பெரும்பா லோரின் அரை மாதச் சம்பளம் அது. புதைப்பதற்குக்கூட போதுமானதாகஅல்லாத கைஅகல ரூம் வாடகை ரூ.5000/-யை தாண்டு கிறது. வீட்டுமனை விலையோ பலகோடி. இங்கே சாதாரண மனிதர்கள் பிழைக்க முடி யாது. வாழமுடியாது. நடைபாதை வியாபார மும் போச்சு. நடுத்தர வியாபாரமும் நொடிஞ் சாச்சு. சின்னமீன்களை விழுங்கி அடாவடிச் செயல்கள் மூலம் கொழுத்த சரவணாக்கள், போத்தீஸ்கள் உட்பட அனைத்தையும் விழுங்க வால்மார்ட் திமிங்கிலங்கள் வாய்பிளந்து நிற்கின்றன. அரசும் நீதிமன்றங்களும் அதற்குத் தான் நடைபாவாடை விரிக்கின்றன. சென்னை யாருக்கு? இக்கேள்வியை உரக்க கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐம்பது ரூபாய் கூலிக்காரன் வாழ கையேந் திபவன்களும், கோடீஸ்வரர்கள் டாம்பீகமாக வாழ நட்சத்திர ஹோட்டல்கள்,கடைகளும் என்கிற பன்முனைதான் இந்திய யதார்த்தம் என மேற்கத்திய நிபுணர்கள் பீற்றியதுண்டு. சென்னை நகரில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. நடைபாதைக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை,குடிசைகள் முதல் சாதாரண மக்கள் குடியிருப்புவரை அனைத்தையும் பிய்த்து எறிந்துவிட்டு வசதிபடைத்தவர் களின் கனவு நகரமாக சென்னையை சிருஷ் டிக்க மௌனமாக ஒரு உலகவங்கிச்சதி அரங் கேறுகிறது. டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ் பிரஸ் அவென்யூக்களும் அதன் குறியீடு தான். வாய்பொத்தி மெய்பொத்தி இருக்கப் போகிறோமா? ஒரு விழுக்காடு மக்களுக்கா கவா? 99 விழுக்காடு மக்களுக்காகவா?என வால்ஸ்ட்ரீட்டுக்கு எதிராக போராட்ட முழக் கம் அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் கேட் கிறது. அதைப்போல சென்னை யாருக்கு? வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமா? அனை வருக்குமா?இக்கேள்வி வீதிகள்தோறும் இடி முழக்கமாய் எதிரொலிக்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டது.இன்னுமா மௌனம்? உரக்கப் பேசுக.

அகத்தேடல்-6

Posted by அகத்தீ Labels:

“ஆயிரம் சொன்னாலும்
நல்லது கெட்டதுக்கு
சாதி சனம்தானே வந்தாகணும்...

கொள்வினை கொடுப்பினையில்
சாதியை விட்டுவிட இயலுமா?

ஆசிட்டிலே
முங்கி எழுந்தாலும்
உன் சாதி அடையாளம்
உன்னை விட்டுத்தொலையுமா?”

கேள்விக் கொடுக்குகள்
மீண்டும் மீண்டும்
கொட்டும்போதும்

உனக்குள்ளிருக்கும்
சாதிய நச்சரவம்
தலைநீட்டத்தான்
செய்கிறது..

மேடையில் முழக்கிய
சாதிய எதிர்ப்பு
வீட்டுக்குள்
முடங்கிப் போகிறது

பொதுவெளியும்
தனிவெளியும்
முரண்பட
சாதியவெறியரின்
நகைப்புக்கு இடமாக..
சாதிபடுத்தும் பாடு
தாளம்படுமா?
தறிபடுமா?

சாதிக்குள் முடங்க
அறிவும் தடுக்கிறது
மனச்சாட்சியும் மறுக்கிறது

ஆயினும்

சமூகநிர்பந்தமும்
குடும்ப நிர்பந்தமும்
முடிவைத்திணிக்கிறது

இப்போதும்
திமிறி வெளிவருவதில்தான்
உனது
மெய்யான இருத்தல்
அர்த்தம் பெறுகிறது...

அதற்கு நீ
அதிகவிலை
கொடுக்கநேரலாம்..

ஆனாலும்
சூழும் தோழமை
கொட்டிய கேள்விக்கெல்லாம்
விடையாகும்
மருந்தாகும்

இன்னும் மீதமிருக்கிறது
நம்பிக்கை

தேடலைத்தொடர்க..

பண்டிகைகள் புத்தாக்கம் பெற வேண்டி..

Posted by அகத்தீ Labels:

பண்டிகைகள் மனிதர்களின் கூட்டுவாழ்க்கையின் வெளிப்பாடு. இயல்பாய் முகிழ்த்தவை. பருவகாலமாறுதல்கள்,வேட்டையில்வெற்றி,விளைச்சல்,மகப்பேறு,துக்கம்,மகிழ்ச்சி,என எல்லாவற்றையும் அன்றைய மனிதர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அவையே காலகதியில் பண்டிகைகளாக தோற்றம் கொண்டன. பண்ட உற்பத்தி பெருகப் பெருக விற்பனை யுத்திகள் தேவைப்பட்டன. பண்டிகைகள் அதற்குக் களமாயின. பண மறுசுழற்சிக்கு பண்டிகைகள் வாகனமாயின. பண்டிகைகளின் கூட்டுக்கொண்டாட்டம் என்பது பண்டங்களோடு பிணைக்கப்பட்டது. வர்த்தக நோக்கை நிறைவேற்றாத பண்டிகைகள் மெல்ல விடை பெறலாயின. புதிய பண்டிகைகள் வலம்வரலாயின.

சமயங்கள் தோற்றிவிக்கப்பட்டபோது அவை மக்கள் மனதில் எளிதில் சிம்மாசனம் போட்டு அமர பண்பாட்டுநிகழ்வுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. பண்டிகைகளை சமயவாதிகள் தன்வயப்படுத்தலானார்கள் .பண்டிகைகள் மீது பொய்மைப்புராணங்கள் திணிக்கப்பட்டன.. பண்டிகைகள் சடங்குகளாக உருமாற்றப்பட்டன. வர்த்தகநோக்கும் உடன்சேர பண்டிகைகள் தன் இயல்பில் திரியலாயிற்று. பண்டவிற்பனையும் பணசுழற்சியுமே பண்டிகைகளின் இருத்தலை உறுதிசெய்வன ஆயிற்று. இதன் பொருட்டு புவிசார் சூழலில் உருவான பல விழாக்கள் பண்டிகைகள் காலதேச எல்லைகளை ஒருபுறம் தாண்டின. மறுபுறம் சாதி,மத,பிரதேச,இன,தேச வரப்புகள் பண்டிகைக்குள்ளும் வேலிகள் கட்டின. ஆச்சாரங்கள் மேலோங்க சகோதரத்துவம் பலியிடப்பட்டது.

மிக அண்மையில் யுத்தத்திற்கு எதிராக உருவமைக்கப்பட்ட காதலர்தினம் கூட வர்த்தகநெடியில் தீய்ந்து கருகலாயிற்று. தனிமனிதரின் பிறந்த நாள், திருமணநாள் கொண்டாட்டங்களும் சமூகபடிநிலைக்கு ஏற்ப உயர்வுதாழ்வை பறைசாற்றலாயின. மனிதகுல மகிழ்வுக்காக முகிழ்த்த பண்டிகைகள் சடங்காக,சுமையாக,பணத்திமிரின் சாட்சியாக பலவிதமாக சிதைந்தாலும் அவற்றின் தேவையை மனிதகுலம் இழந்துவிடவில்லை. எனவே தொடர்கின்றன. இனியும் தொடரும். இதன் இடத்தை இன்னொன்று பிடிக்காத வரை;ஆயிரம் குறைகளை அறிவு கூறினாலும் பொதுபுத்தியில் உறைந்துபோயுள்ள பண்டிகைக்கொண்டாட்டங்கள் நிலைக்கும். நீடிக்கும். ஆகவே பண்டிகைகளை புறக்கணிப்பதல்ல புத்தாக்கம் செய்வதே நம்பணி. இது சுலபமல்ல...ஆயினும் முயல்வோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

ஓய்வெனப்படுவது யாதெனில்...............

Posted by அகத்தீ

ஓய்வெனப்படுவது யாதெனில்...............

பிறந்தநாளின் அகத்தேடல் ---15 ஜூன் 1953

(2011 ஜூன் 15 ஆம் நாள் வாழ்த்துகள்)இன்று(ஜூன் 15 ) எனக்கு ஐம்பத்தெட்டு வயது நிறைகிறது. வாழ்த்திய

நெஞ்சங்களுக்கு நன்றி. இதற்கு முன் எந்தப் பிறந்தநாளின்போதும் என்னைத்

தொற்றிக்கொள்ளாத பரபரப்பு இன்று ஏன்?குடும்ப மரபின்படி என் முதல் பிறந்த நாளைக் கோயிலில் கொண்டாடி

இருக்கிறார்கள்.பின்னர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் பிறந்த

நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அது நடந்ததாம். இதுவும் செவிவழிச்

செய்தியே.நினைவு தெரிந்து நான் பிறந்த நாள் கொண்டாடியதில்லை.பத்தாம்

வகுப்பு படிக்கும் போது பிறந்த தேதியை ஆசிரியர் கேட்க சொல்லத்தெரியாமல்

அசடு வழிந்தது நினைவிருக்கிறது.தொழிற் பயிற்சி நிலையத்தில்(ஐ டி ஐ ) சேர

விண்ணப்பிக்கும்போது படிவத்தில் அந்தப் பகுதியை பூர்த்தி செய்ய எஸ் எஸ்

எல் சி சர்ட்டிபிகட்டை பார்த்துத்தான் எழுதினேன்.பிறந்த நாளுக்கு

அதற்குமேல் முக்கியத்துவம் அன்றநாட்களில் இருந்ததில்லை.திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் பிறந்த நாளில் காலையில் மனைவி

வாழ்த்துச் சொன்னதும்- புது சட்டை வேட்டி பரிசளித்ததும்- வீட்டில்

பாயாசம் செய்ததும்- புது அனுபவமாக இருந்தது. மனைவியின் பிறந்த நாளை அன்று

மிகுந்த அக்கறையோடு கேட்டறிந்தேன்.அவள் பிறந்த நாளன்று வாழ்த்துச் சொல்ல

வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது.முதல் நாள்வரை அந்த ஞாபகம் இருந்ததும்,

ஆனால் பிறந்த நாளன்று மறந்துவிட்டதும்-இரவில் அவள் நினைவுபடுத்தும்போது

சுருக்கென்று குத்தியதும்- பிறந்தநாள் கொண்டாடுவதைக் கிண்டலடித்து

சமாளித்ததும்- ஒவ்வொன்றாய் நெஞ்சில் நிழலாடுகிறது.ஏறத்தாழ கடந்த

இருபத்தொண்பது வருடங்களாக இதே கதைதான்..கடந்த சில வருடங்கள் முன்புவரை

என் பிறந்த நாளையும் யாராவது நினைவூட்டாமல் நான் உணர்ந்ததே இல்லை.பிள்ளைகளின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துச் சொன்னதோ

பரிசளித்ததோ அபூர்வம். ஆயினும் மனைவி இதனை ஈடுகட்டிவிடுவதால் பிரச்சனை

ஏற்பட்டதில்லை.பேரனின் பிறந்த நாளே உணர்வுபூர்வமாக வாழ்த்தும் மரபை

என்னுள் ஊற்றெடுக்கச் செய்தது.கடந்த சில ஆண்டுகளாக அலுவலச் சூழலாலும்

,முகநூல் தொடர்பாலும் பிறந்த நாள் முக்கியத்துவம்

பெறத்துவங்கிவிட்டது,ஆனாலும் என் பிறந்த நாளுக்கென்று யாருக்கும் இதுவரை

ஒரு சாக்லேட்கூட வாங்கிக் கொடுத்ததே இல்லை.ஆயினும் முகநூல் நண்பர்களுக்கு

வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இப்போது எனது அன்றாட கணினிப்பணியின்

பாகமாகிவிட்டது.

மதச்சார்பற்ற-மனதை மிகவும் நெருங்கவைக்கிற-பிறந்த நாள் கொண்டாட்ட மரபு

நன்று ,ஆயினும் அது ஆடம்பரமாகவோ கைமீறிய செலவாகவோ

மாறிவிடக்கூடாது.நெஞ்சார வாழ்த்தினால் போதுமே. இதுவே இப்போதைய என்

மனோநிலை.பொதுவாக இப்படி பல சிந்தனைகள் என்னுள் ஓடினாலும்,இந்த முறை என் பிறந்த

நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்

நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ

இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது

வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது

பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்

எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு

முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?

இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்

தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்

நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல

கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில

பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது

குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்

கலைத்

தவிர குடும்பத்துக்குள் பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்

இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.

உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை

உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக

பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை

சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ

ரும்

அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு

வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது

சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்

கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு

தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்

எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்

பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட

அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;

அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க

முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு

ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;

விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது

வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்

ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு

ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி

பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க

வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -

எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்

விசாலமாகவேண்டும்.என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு

பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்

விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்

பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்

அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்

எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து

கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்

உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்

எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்

இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமாஓய்வெனப்படுவது யாதெனில்

அகத்தேடல்-5

Posted by அகத்தீ

ஊரு முழுக்க உறவு
மூச்சு முட்டப் பகை
உதறவும் முடியாது
அணைக்கவும் முடியாது
விசித்திரமான சிலந்திவலைஉனக்குத்தான்
எத்தனை எத்தனை
அடையாளங்கள்

நீயே
மகன்/மகள்
நீயே
தந்தை/தாய்

மாமா/அத்தை
அக்கா/அண்ணன்
தம்பி/தங்கை
இன்னுமுள்ள
எல்லா உறவுகளும்
நீயாயும் இருக்கிறாய்
உனக்கும் இருக்கிறது

ஆனாலும்
உனக்காக யார்
எப்போதும்
தொக்கிநிற்கும் கேள்வி

தாய்தந்தை உறவும்
ஒரு எல்லையோடு சரி

கடைசிவரை
ஒட்டிக்கொண்டிருக்கும்
உறவுச் சங்கிலி
கணவன் மனைவி

அதிலும்
எத்தனை விரிசல்கள்

கவிதையில்
உபதேசத்தில்
பட்டுத்தெறிக்கும்
விசாலமனது
சொந்தவெளியில்
தொலந்துபோனது

சொந்தங்கள்
சுகமாவதும் சுவையாவதும்
போதா காலவினை அல்ல
புழங்கும் காசு நிலையால்

உனக்காக யாருமில்லை
ஓயாமல் புலம்புகிறாய்
யாருக்காகவேனும்
இருக்கிறாயா நீ

உன்னோடு
உறவுகளுக்குப் பிரச்சினையா
உறவுகளோடு
உனக்குப் பிரச்சினையா

நீ கொஞ்ச நேரம்
அந்தப்பக்கம்
நின்றுபார்
சிக்கலின் முடிச்சு
தானாய் அவிழும்

ஆனாலும்

வீம்பும் பிடிவாதமும்
ஈரக்கம்பளியாய் அழுத்த
அகம்பாவ மழையில்
அணு தினமும் அலைகிறாய்
அணுவேனும் அகத்தில்
உணர்ந்தாயில்லை

சொந்தங்களின்
சுழல்வட்டத்திற்கு
வெளியே
சற்றே எட்டிப்பார்
விரிந்துகிடக்கிறது
வானமும் பூமியும்..

-சு.பொ.அகத்தியலிங்கம்


அகத்தேடல்-4

Posted by அகத்தீ

அகத்தேடல்-4

கருப்பை வாசமும்
மண்வாசமும்
கல்லறை வரை

புழுதிவிளையாடிய
நினைவுகளை
அசைபோட்டபடி கழியும்
முதுமை

பெயர்
பிறந்த தேதி
பிறந்த ஊர்
மூன்றின் அடையாளங்களும்
உன்னோடு ஒட்டிக்கொள்ளும்
இறுதிவரை

வாழ்க்கைச் சூறாவளியில்
பிடுங்கி எங்கோ வீசப்பட்டாலும்
வேரோடு ஒட்டிவந்த
ஊரடிமண்
சொல்லிகொண்டே இருக்கும்
பிறப்பின் முகவரியை

திருமணத்தில்
திடீர்பயணத்தில்
திருவிழாக்கூட்டத்தில்
சந்தித்தவர்கள் மூலம்
சேகரித்த
ஊர்ச்செய்திகளை
இணையருக்கும்
சந்ததிக்கும்
சொல்லும்பொழுது
கண்ணில் மின்னிடும்
சந்தோஷம்

உலமயமும்
நுகர்வுவெறியும்
புரட்டிபோட்டது
உன் பண்பாட்டை

ஆயினும்

நாக்கின் ருசியும்
மொழியின் சாயலும்
முடிச்சுப்போட்டது
ஊரோடு உன்னை

உலகையே
வலம்வரினும்
உள்ளூர் தெருவில்
காலாற நடக்கும்
சுகமே தனிதான்

ஆனாலும்

ஊரும் சேரியும்
ஒற்றை அடையாளமாய்
இல்லாத
நாள்பட்ட ரணத்தை
உணரும்
ஒவ்வொரு தருணமும்
எனக்கே
பிடிக்காமல் போகிறதே
என் ஊர்...

-சு.பொ.அகத்தியலிங்கம்.அகத்தேடல்-3

Posted by அகத்தீ

ஞாபக்கேணியின்
அடியாழத்தில்
நேற்றின்
நினைவுகள்.

கல்லெறிந்த குளத்தில்
கரைதொடும் அலைகள்
அற்ப ஆயுளெனினும்
ஸ்பரிசம் இனிது.

இன்னாரின் மகனென/மகளென
தெருவோர் சுட்ட
மிடுக்குடன் திரிந்த
நாட்கள் இனிது

அது
கவலையறியா
பிஞ்சு அடையாளம்

இன்னாரின்
மனைவி/கணவர்
தாய்/தந்தைஇவரென
விரல்கள் சுட்ட
கர்வம் மிகுந்தது

அது
பருவப்பசியால்
ஈட்டிய அடையாளம்

முகத்தின் சுருக்கம்
முகவரியாக
இனிக்கும் பழமாய்
தாத்தா/பாட்டி

அவரவர்
வாழ்க்கை சிறுவெளியில்
அதுவன்றோ
முழுமையின் அடையாளம்.

நோய்வாய் படாமல்
பாயில்கிடந்துழலாமல்
சட்டென வருவதோ
கல்யாணச்சாவு

நைந்து நசிந்து நாறி
கிடந்து இழிந்து
நொந்து வெந்து
முடியும் வாழ்வை
என்னென்று சொல்ல

எது எப்படியோ
வந்ததும் செல்வதும்-உன்
வசத்தில் இல்லை
வாழ்ந்ததில்-நீ
பதிந்த அடையாளம் எது?

அகத்தாய்வோ
அகத்தேடலோ
காட்டுமோ
உன்
அடையாளத்தை?

-சு.பொ.அகத்தியலிங்கம்.
அகத்தேடல்-2

Posted by அகத்தீ

நி


ரப்பமுடியா
வெற்றிடம் ஏதுமில்லை

நிரம்பியதும் வெளியேறியதும்
ஒன்றாகவும் இருக்கலாம்
வேறாகவும் இருக்கலாம்

ஒவ்வொன்றிலும்
முந்தையதின் எச்சமும் உண்டு
மூண்டெழும் புதியதும் உண்டு

அடையாளத்தை
நிலைநிறுத்த
வாழ்வோடு நடக்குது
மல்லுக்கட்டு

வென்றது எது? வீழ்ந்தது எது?

எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்

பிறப்பா?
உறவா?
குடும்பமா?


புழுதி விளையாடிய தெருவா?
இளமை கழிந்த
ஊரா?நட்பா?
வித்தை பயின்ற இடமா?

தேமலாய் தொடரும்
சாதியா?
தொப்புள்கொடிவழி வந்த
மொழியா?

எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்

மண்டையில் உறைந்த
மதமா?
மனதுக்கு உகந்த
மாநிலமா?

போராடிப்பெற்ற
தேசமா?
போராட்ட வாழ்வின்
வர்க்கமா?

எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்

இயற்கையாய் அமைந்த
பாலினமா?
இணையேதும் இல்லா
மானுடமா?

படித்தபடிப்பும்
பெற்ற காயங்களும்
துடைத்தெறிந்ததா?
துலங்க வைத்ததா?
அடையாளங்களை

ஆழங்காணமுடியா
அடையாளச் சிக்கலில்
அகப்பட்டு உழலும் வேளை
அகத்தேடல் காட்டும்பாதை...

-சு.பொ.அகத்தியலிங்கம்.

அகத்தேடல்-1

Posted by அகத்தீ


நீ
இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..வேறோன்று

நிரப்பிவிடும்.காலச்சூறாவளியில்

உன் தடயமும்

காணாமல் போய்விடும்.நேற்றின் சுவடுகளைத்

தடவிப் பார்க்கலாம்

தழுவமுடியாதுநாளைக் கனவுகளில்

மிதந்து திரியலாம்

கரைந்து போக இயலாதுஇன்றின்

யதார்த்த்ச் சூட்டில்

பாதம் கொப்பளிக்க

நடந்தாக வேண்டும்பொய்கலவாத

உண்மையோ

மெய்கலவாத

பொய்யோ

எங்ஙணும் இல்லைசெம்புகலவாமல்

தங்கம்

நகையாவதில்லை

மேனிக்கு

எழிற்சேர்ப்பதில்லைஉன்

வாழ்வின் எச்சங்களை

வரலாறு பதிந்துகொள்ளட்டும்நொடிகளில்

மரணம்

கதவைத் தட்டலாம்நொடிகளுக்கிடையேயும்

வாழ்க்கையுண்டுநீ

வாழும்போது

பிறர் புன்னகைக்கட்டும்உன்

மரணத்தின்போது

அண்டைவீட்டாரின்

ஒரு துளி கண்ணீர்

அடையாளம் காட்டட்டும்நீ

இல்லாதுபோனால்

அந்த இடம்

சூன்யமாகிவிடாது..

-சு.பொ.அகத்தியலிங்கம்

சுயதரிசனம்

Posted by அகத்தீ


வெற்றி முக்கியம்

வாழ்தல் அதினினும் முக்கியம்விட்டுக்கொடுத்தலும் சமரசமுமே

வெற்றியின் ரகசியம்பொய் சொல்லலாம்

உரிய பயன் உண்டெனில்..காக்காபிடித்தலும் தவறல்ல

ஜால்ரா அடிப்பதும் பிழையல்ல

படிக்கட்டில் ஏறிக்கொண்டே இரு

அதுதான் அதுதான் முக்கியம்செயலில் முன்முயற்சிமட்டும் போதா

தன்னை முன்னிலைப் படுத்தல்

தவிர்க்கமுடியா வெற்றிவிதிவென்றால் உன் செயல்கள்

திறமையாய் மெச்சப்படும்வீழ்ந்தால் உன் நியாயங்கள்கூட

தலைக்கனம், வீம்பு

பிடிவாதம்,உதவாக்கரை

இன்னும் என்னென்னவோ..வென்றவன் சரிதம் முழுதும்

புகழ்போதையும்

பொய்மையும் நிறைந்தது

அதில்

கற்பதற்கு எதுவுமிருக்காதுதோற்றவனின் காயங்களில்

ஆயிரம் சேதி உண்டு

ஆனாலும்

யாரும் கேட்பதில்லைகாலம் கடந்து புரிகிறது

இதுவும்

தோல்வியின் நியாயமோ- வழிப்போக்கன்

கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள்

Posted by அகத்தீ

கேள்விகள்...கேள்விகள்..கேள்விகள்காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்சிக்கும் சில கேள்வி1) மடியில் கனமில்லையெனில் வழியில் பயம் எதற்கு? ஜன்லோக்பால் மசோதாவை ஏற்கமுடியாவிட்டலும் அந்த அறச்சீற்றத்தை உள்வாங்கி வலுவான மசோதா கொண்டுவரத் தயக்கம் ஏன்?2) உங்கள் ஆட்சியில் ஊழல் அடுத்தடுத்து படை எடுக்கும் போது உங்கள் மன்ச்சாட்சி உறுத்தவில்லையா?அதனை சுயவிமர்சனம் செய்ததுண்டா?நீங்கள் போற்றிப்புகழும் உலகமயக் கொள்கைகளின் கோரநர்த்தனமே பல லட்சம் கோடி ஊழல் என்பது உண்மையல்லவா?அதனை ஒப்புக் கொள்ளும் மனத்திண்மை உண்டா?3) பெருகும் ஊழலுக்கு தார்மீகப் பொறுப்பு பிரதமர்தானே? அவர் அதை ஏற்காமல் எனக்கு எதுவும் தெரியாது என்பது நாட்டுமக்களை மடையர்களாகவும் ஏமாளிகளாகவும் கருதும் அதிகாரத்திமிர் அல்லவா?4) உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் கொள்கைப் போருக்கும் மனம் திறந்த விவாதத்திற்கும் பகிரங்கமாக அழைக்கலாமே? அதைவிடுத்து அடக்குமுறையை ஏவியது ஏன்? புண்ணை சொறிந்து சீழ்பிடிக்க வைப்பதுபோல் முட்டாள்த்தனமாக நடந்துகொண்டது ஏன்? ‘சிவில் சொசைட்டி’என்ற போர்வையில் செயல்படுவது யார் என்று தெரியாதா? பின்புலம் தெரியாதா? அவர்களிடம் பேசி கருத்துக் கேட்பது என்பது வேறு; அவர்களோடு கூட்டுக்குழு அமைத்தது ஏன்?ஊழலை ஒழிக்கும் உறுதியும் தொலைநோக்குப் பார்வையும் இல்லாது தடுமாறுவது தலைமைப் பண்பாகுமா?5)போபர்ஸ் ஊழலில் சம்மந்தப்பட்டவரைக் காக்க அரசு நிறுவனங்கள் அனைத்தும் தவறாக ஈடுபடுத்தப்பட்டதால்தானே ஊழல் பெருச்சாளிகளுக்கு குளிர்விட்டுப்போனது? அதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவிவிலகி மீண்டும் மக்களைச் சந்திக்க என்ன தயக்கம்?மேலும் கேள்விகள் பின்னர்...

பாஜகவுக்கு சில கேள்விகள1) நீங்கள் அன்னா ஹஷாரே முன்மொழியும் ஜன்லோக்பாலை ஆதரிக்கிறீர்களா? ‘ஆம்’ எனில் நாடாளுமன்றத்தில் உங்கள் கட்சியின் சார்பில் அதனை தாக்கல் செய்யலாமே? ஏன் செய்யவில்லை? ஏன் இரட்டை வேஷம்?2) ஊழல் ஒழிப்பில் உங்கள் கட்சிக்கு உண்மையான அக்கறை இருப்பின் எடியூரப்பாவை காப்பாற்ற பெருமுயற்சி ஏன்?2ஜி ஊழலின் தொடக்கப்புள்ளியான ஐம்பதாயிரம் கோடி ஊழல் அருண்ஷோரி பற்றி வாய் திறக்காதது ஏன்? சுரங்கத்திருடர் ரெட்டி சகோதரர்கள் பல ஆயிரம் கோடி சூறையாடுவதுக்கு மவுனமாகத் துணைபோவது ஏன்?ஊழல் பெருச்சாளி சுக்ராமுக்காக பல நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கினீர்கள்,ஆனால் அடுத்த சில மாதங்களில்- அந்த ஊழல் வழக்கு நிலுவையிலுள்ளபோதே அவரை ஆதரித்து இமாச்சலபிரதேச முதல்வர் ஆக்கினீர்கள்.உங்களை ஆதரித்த அடுத்த நொடியே அவர் புனிதரானது எப்படி?3) இன்றைய ஊழல் பெரும் கொள்ளைக்கு அடித்தளமாக இருப்பது உலகமய தனியார்மய தாராளமயக் கொள்கைகள் அல்லவா?அதை அமலாக்குவதில் உங்களுக்கும் காங்கிரஸுக்கும் ஒரே நிலைபாடுதானே?இந்தக் கொள்கைகளை மாற்றாமல் ஊழலை வேரறுக்க முடியுமா?அடிப்படை பிரச்சனைகளிலில் இருந்து மக்கள் கவனத்தை சற்றே திருப்பி ஆட்சியைப்பிடிக்கும் குறுக்குவழியாகத்தான் நீங்கள் ஊழல் ஒழிப்பு நாடகம் ஆடுகிறீர்கள் எனில் தவறா?4) மண்டல் கமிஷனுக்கு எதிராக அன்று ஊடகங்களும் மேல்தட்டு மக்களும் நட்த்திய நாடகத்துக்கும்; இன்று ஹஷாரே குழுவினர் போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு? இப்படி முகமூடி அணியாமல் - மக்களிடம் உண்மைகளை மறைக்காமல் போராட உங்களால் முடியுமா? பாசிஸ்டுகளின் குணமே இப்படி மோசடித்தனமானதுதானே..அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கிறீர்கள் அல்லவா?5) சிவில் சொசைட்டி நாடாளுமன்றத்துக்கு மேலானது என்பதை உங்களால் ஏற்க முடியுமா? அரசியலின் பாலபாடம் தெரிந்தோர்கள் யாராயினும் இதனை ஏற்க மாட்டார்களே..அப்படியிருக்க அன்னாஹஷாரேவுக்கு நீங்கள் அதை உணர்த்தாதது ஏன்? உள்ளொன்றுவைத்து வெளியொன்று பேசும் உத்தமவேடம் ஏன்?ஏன்?மேலும் கேள்விகள் பின்னர்...


அன்னா ஹஷாரே அவர்களுக்கு சில கேள்விகள்
:
1) ஊழலின் ஊற்றுக்கண் இன்றைய தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளே என்பதை அறிவீர்களா? ‘ஆம்’ எனில் அதற்கு எதிராக இதுவரை உங்கள் குரல் ஒலிக்காதது ஏன்? ‘இல்லை’ எனில் நீங்கள் நடத்துகிற போராட்டம் நிழல் சண்டை அன்றி வேறென்ன?2) உங்கள் ஜன்லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கட்சிகள் எவை? எவை? உங்கள் போராட்டத்தின் பின்பலமாக உள்ள பாஜக உங்கள் மசோதாவை பகிரங்கமாக ஆதரிக்காதது ஏன்? அதை ஏன் நீங்கள் கேட்கவில்லை?3) எளிமையான உண்ணாவிரதத்துக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம்?அள்ளிக் கொட்டும் பணத்திற்கு பின்னால் உள்ள வஞ்சகக் கைகள் எவை?உங்களை ஆதரிக்கும் தொண்டுநிறுவனங்கள் எப்படி யாரால் எதற்காக இயக்கப்படுகின்றன? இதனை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று நம்ப முடியுமா?4) உங்கள் பின்னால் திரளும் மேட்டுக்குடி இளைஞர்களின் பெற்றோர்கள் திரட்டிய பெரும் செல்வம் நேர்மையான உழைப்பால் பெறப்பட்டதென்று நீங்கள் உறுதிதர முடியுமா?5) ஊழலால் கொள்கைகள் தடம் மாறியதா?அல்லது ,தவறான கொள்கைகளின் விளைவு ஊழலா?மூலதனத்தின் மூர்க்கக் கொள்ளையின் உடன்பிறப்புதானே ஊழல்? இதை எதிர்க்க உங்களிடம் உள்ள மாற்று என்ன?மேலும் கேள்விகள் பின்னர்...
மக்களுக்கு சில கேள்விகள்...1) அடி முதல் நுனி வரை ஊடுருவி இருக்கும் ஊழலுக்கு எதிராக நீங்கள் குக்கிராமம் தொடங்கி தலைநகர் வரை வீதிகளில் திரளுவது எப்போது?உங்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பயன்படவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய் ஊழலில் கொள்ளை போவதற்கு எதிராக வெஞ்சினம் பொங்kuவது எப்போது?2) காங்கிரஸும், பாஜகவும் ஆண்ட லட்சணம்தான் இந்த ஊழல்கள்

என்பதை நீங்கள் இனியும் புரியாமலிருக்கலாமா?இன்று இவர்கள் நடத்துகிற நாடகங்கள் உங்களை ஏய்க்கவும் பதவிக்காகவும்தான் என்பதை மறக்கலாமா?3)உங்கள் விளைநிலங்கள் பறிக்கப்படும்போது-விவசாயம் நொடிந்து

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும்போது-விலையேற்றம் குரல்வளையை நெரிக்கும்போது-வேலையின்மை உங்கள் வீட்டில் குடியேறும்போது-சுயதொழில்,சிறு குறு தொழில்கள் நசிந்து வாழ்வை இழக்கும்போது-தீண்டாமை மிதிக்கும்போது உண்ணாவிரதம் இருக்காதவர்கள்,ஓடோடிவராத ஊடகங்கள் இப்போது ஊளையிடுவது ஏன்? யோசிக்க வேண்டாமா?ஊடகங்கள் பிரச்சாரம் செய்வதற்கும் உங்கள் வாழ்க்கைக்கும் ஏதாவதுதொடர்பு உள்ளது என்று கூறமுடியுமா?அல்லது இன்று கூப்பாடிடுவோர் உங்கள் நலனை என்றாவது உண்மையாக சிந்தித்ததுண்ட?இன்னும் எத்தனை நாள் ஏமாளியாக இருக்கப் போகிறோம்?4) குடியானவன் வீட்டு மாடு பண்ணையார் வயலில் மேய்ந்துவிட்டால்,குடியானவனுக்குத்தான் தண்டனை;அதேசமயம் பண்ணையார் வீட்டு மாடு குடியானவன் துண்டுதுக்காணி நிலத்தில் மேய்ந்துவிட்டால் புகார் செய்யவும் இயலுமா? அப்படியே புகார் செய்தாலும் கேள்வி என்ன எழும் தெரியுமா?வயலுக்கு ஏன் வேலி போடவில்லை? இது தான் வர்க்க நியாயம்.எப்போதும் யார் எதைச் சொன்னாலும் அதற்குப் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பதை இனியும் உணராமல் இருக்கலாமா?5) நீங்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் ஓடோடிவந்து போராட்டம் நடத்தியவர்கள் யார்? உங்கள் பிரச்சனைகளுக்கு மாற்று திட்டம் வைத்திருப்பவர்கள் யார்?இடது சாரிகள் அல்லவா?அவர்களோடு தோள் இணைந்து நிற்கவேண்டாமா?மேலும் கேள்விகள் பின்னர்...
சமூகத்தை ஆற்றுப்படுத்தும் மு.வ. எழுத்துகள்

Posted by அகத்தீ Labels:
மு.வ இந்த இரண்டெழுத்துக்குள் ஆழமான சிந்தனை வரலாறு பொதிந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. “மு.வ எப்போதும் காதுக்குள் புகுந்து போதனை செய்பவர்”என்று குறை கூறுவோரும் சரி; ”மு. வ எப்போதும் அறவிழுமியங்களை உயர்த்திப்பிடிப்பவர்”என மெச்சிப் பேசுவோரும் சரி:பார்வைக்கு எதிர் எதிராக இருப்பதாகத் தோன்றினாலும் சாராம்சத்தில் ஒரே புள்ளியில்தான் சந்திக்கின்றனர்.அவரைப் பற்றிய சரியான மதிப்பீடு இருசாராருக்கும் இல்லை என்றே கூறவேண்டும்.

“ஆற்றுப்படை” என்பது தமிழ் இலக்கிய மரபு.வள்ளைலை நோக்கியோ, அரசனை நோக்கியோ,இறைவனை நோக்கியோ ஆற்றுப்படுத்துவது அல்லது வழிநடத்துவது புலவர் தொழில்.தமிழ்ப் புலமையில் ஊறிமுகிழ்த்த மு.வ.அந்த பழமையை முழுமையாய் உள்வாங்கிக்கொண்டவர்.அன்றன்று மலரும் புதுமையை மிகநுட்பமாக இனம்கண்டவர். எதிர்கொண்டவர். ஆகவே தமிழ்ச்சமூகம் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற தணியா ஆர்வத்துடன் எழுத்தை வாகனமாக்கினார்.

விடுதலைப் போராட்ட முதல் அலை வீசியகாலத்தில் பிறந்தவர்,அதே சமயம் விடுதலைப் போர் மூன்றாம் அலை வீசியடிக்கிற காலகட்டத்தில்தான் எழுத்துலகில் அடியெடுத்துவைக்கிறார்.தமிழகத்தில் சுயமரியாதை இயக்கமும் தமிழுணர்வும் மேலோங்கிய காலகட்டமே இவரது எழுத்துகளின் காலகட்டமாகும்.மேலும் பொதுவுடைமை இயக்கம் களத்தில் தீவிரமாகச் செயல் பட்ட காலமும் ஆகும்.கல்விசார் பல்வேறு பொறுப்புகளை வகித்துக்கொண்டேதான் இவர் எழுதிக்குவித்தார்.62 ஆண்டுகளே வாழ்ந்தார். அதற்குள் 85 நூல்களை எழுதினார்.

13 நாவல்கள், 2 சிறுகதைத்தொகுப்பு,6 நாடகநூல்கள். 2 சிந்தனைக்கதைகள்,11 கட்டுரைநூல்கள்,24 இலக்கிய விருந்துகள்,4, சிறுவரிலக்கியங்கள்,4 இலக்கியம்,1 பயண இலக்கியம்,1 இலக்கிய வரலாறு,6 மொழியியல் நூல்கள்,4 வாழ்க்கை வரலாறுகள்,3சிறுவர் இலக்கணம்,2மொழிபெயர்ப்புநூல்கள், இவற்றுடன் தமிழிலக்கியம் குறித்த இரண்டு ஆங்கிலநூல்கள் என இவர் படைத்தவற்றின் மைய நீரோட்டமாய் அமைந்த சிந்தனைக்கரு எது? என் கட்டுரையின் தேடல் அதுதான்.

”காலம் என்பது மக்களின் தனி வாழ்க்கையை வரையறுப்பது போலவே, நாட்டின் வாழ்வையும் வரையறை செய்வதாகும்.தமிழ் நாட்டின் வரலாறும் காலத்தின் பேராற்றலுக்குக் கட்டுப்பட்டு விளங்கிவருகின்றது.இப்போது பலரும் காண்பது பழைய தமிழகத்தின் மறைவும் புதிய தமிழகத்தின் தோற்றமும் ஆகும்.”

”பழைய தமிழகத்திலிருந்தே புதிய தமிழகம் தோன்றிவளர்ந்து வருகின்றது.பழைய தமிழகம் தாய்,புதிய தமிழகம் சேய் ; தாயிடமிருந்து சேய் கற்க வேண்டியவை பல உள்ளன.புதிய தமிழகம் பலவகையிலும் வேறுபட்ட வளர்ச்சி உடையது.ஆனாலும் ,பழைய தமிழகமாகிய அன்னையின் அனுபவ அறிவுரைகளைப் புறக்கணிக்க முடியாது.அந்த அறிவுரைகளைப் புதிய தமிழகம் எவ்வளவிற்கு ஏற்கின்றது....”

மு.வ. வின் இந்த உள்ளக்கிடக்கைதான் அவரது எழுத்துகள் நெடுக ஊடும் பாவுமாய் விரவிநிற்கிறது எனில் மிகையல்ல. அவரது சிந்தனை நீரோட்டத்தினை சரியாக உள்வாங்க அவரது கடித இலக்கியங்களும், கி.பி.2000 என்ற சிந்தனைக் கதையும் பெரிதும் துணைசெய்யும்.இது என் உறுதியான முடிபு. அதனை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் வாழ்கிற நாம் எதிர்கொள்கிற சிக்கல்கள் பன்முகம் கொண்டவை. நாளையைப் பற்றிய நமது கனவுகள் வேறுவிதமானவை. ஆனால் 1947 ஆம் ஆண்டு மு.வ. கண்ட கனவு கி.பி.2000 என்ற நூலாய்- ஆவணமாய் நம்முன் உள்ளது.இந்தியா 2020 என்ற நூலில் அப்துல் கலாம் விதைத்த கனவுகள் ஒருவகை.அது உலகவங்கியின் விருப்பங்களுக்குக் கொடுத்த நூல்வடிவமே தவிர வேறல்ல.ஆனால் மு.வ.வின் கனவோ மானுடம் தழுவியது. உட்டோபியன் சோஷலிசம் எனப்படுகிற'கற்பனா சோஷலிசம்' வகையைச் சார்ந்தது.அதே சமயம் தமிழ்ச்சூழலிலிருந்து தன் கற்பனைச் சிறகை விரித்துள்ளார்.

'அளவளாவி' என்றொரு கருவியை மு.வ. இந்நூலில் கற்பனை செய்து படைத்திருக்கிறார்.வீடியோ கான்பரன்ஸ் வசதி கொண்ட அலைபேசியை அது ஒத்திருக்கிறது.நாமும் ”அலைபேசியை” இனி ”அளவளாவி” என அழைத்தால் என்ன?அவர் கனவில் நம் கையைப் பிடித்து ஒரு விருந்து மனைக்கு அழைத்துச் செல்கிறார்.அங்கே பல விதிகள் உண்டு.அதில் முதல் விதி,”உலகத்தில் மக்கள் எல்லோரும் வாழ வேண்டும்.ஆதலால் எந்த வேற்றுமையும் மறந்து அன்பைப் பாரட்டுங்கள்.' இன்னொரு விதி “ இந்த விருந்துமனையைக் கடந்து வெளியே செல்லும் போது பொதுவுடை அணிந்து செல்லுங்கள்:பொது உள்ளம் பெற்றுச் செல்லுங்கள்”. இவற்றின்மூலம் பொதுமை உலகை அவர் உள்ளம் நாடுவதை அவதானிக்க முடியும்.

மேலும் அந்த நூல் நெடுக அவர் சித்தரிக்கிற காட்சிகள் ஒவ்வொன்றும் உழைப்பை மையப்படுத்தியே உள்ளன. கல்வி. ஆராய்ச்சி. நூலகம்.பொழுதுபோக்கு,தேர்தல். ஆட்சிமுறை.தண்டனை அனைத்துமே உழைப்பை மையம் கொண்டதாகவே இருக்கக் காணலாம்.திருடுதல்,கொள்ளையடித்தல் போன்றவை கடந்தகால வரலாற்று செய்திகளாக - பள்ளிகளில் சொல்லித்தருபவையாக மட்டுமே இருக்கும் என அவரின் கனவு நீள்வதைக் காணலாம்.பள்ளிக் கூடங்கள் பூங்காக்களாய் மகிழ்விக்கும் காட்சி அற்புதம்.காதல் வாழ்வுக்கு தடைகளேதுமற்ற சூழலில் கட்டற்ற அன்பு வாழ்க்கையில் திளைக்கும் மக்களுக்கு அதுவே தீமையாகிவிடுகிறதாம்.ஒருவர் இறந்தால் இன்னொருவர் உயிர்விடுகிற சோகம் ஏற்படுகிறதாம்,அதைத் தவிர்ப்பது எப்படி என்பதுதான் அங்கு விவாதமாம். சுகமான கற்பனை.அரசு என்கிற அடக்குமுறைக்கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற கம்யூனிச சமூகம் போன்ற ஒரு அமைப்பைக்கூட கற்பனை செய்கிறார்.இன்றும் அதாவது அவர் கனவு கண்டு ஏறத்தாழ 64 ஆண்டுகள் முடிந்தபின்னரும் இன்னும் அது வெறும் கனவாய் மட்டுமே நம்முன் இருப்பது ஏன்?

கற்பனா சோஷலிசத்தை விஞ்ஞான சோஷலிசமாய் மாற்றிய பெருமை காரல்மார்க்ஸுக்கு உண்டு. அதற்கு செயல்வடிவம் கொடுத்த பெருமை லெனினுக்கு உண்டு.தத்துவவெளிச்சமும் கட்சி என்ற நெம்புகோலும்தான் அதனை சாதிக்க உதவியது.இது குறித்து மு.வ. அறியாமல் இருந்திருக்க முடியாது.அவர் பரந்த வாசிப்புப் பழக்கம் உடையவர். ஆயினும் அவர் தம் கனவை தத்துவதரிசனமாக்காமல் விட்டதோடு கட்சி என்ற நெம்புகோலையும் குறைத்து மதிப்பிட்டிருக்கிறத் தவறை செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.இக்குறை விமர்சன நோக்கோடு படிக்கிற சிலரால் மட்டுமே காணமுடியும். பொதுவாசகன் ”வெள்ள அன்பால் மானுடம் தழுவுகிற” உயர்கனவாகவே இன்றும் இநூலை புரிந்துகொள்வான். அதுவே மு.வ.வுக்கு கிடைத்த வெற்றி.

இதன் தொடர்ச்சியாகவே அவரது கடித இலக்கியங்களை நான் பார்க்கிறேன்.தம்பிக்கு,தங்கைக்கு, அன்னைக்கு, நண்பருக்கு என நான்கு கடித இலக்கியங்கள் நம் முன் உள்ளன. தமிழ்ச்சமூகம் சந்திக்கும் சவாலகள், அதனை எதிர்கொள்ள எப்படித் தமிழ்சமூகம் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் ஆகியன அவற்றில் மைய இழையாக உள்ளன.”நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது:வல்லவனாகவும் இருக்க வேண்டும்” என பொதுவாகவும், தமிழனுக்கு சிறப்பாகவும் அவர் எழுதியுள்ளார்.

தமிழின் பெருமை, தமிழ் பண்பாட்டின் மேன்மை குறித்து தமிழருக்கே உரிய கர்வமும் பெருமையும் மு.வ.வுக்கும் உண்டு.ஆனால் அதற்கும் மேல் செல்ல விழைந்தார். சென்றார்.”உன் மொழிப் பற்றையும் நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன். ஆனால்.உணர்ச்சி வெள்ளம் மட்டும் இருந்தால் போதாது. அது என்றைக்கேனும் ஒரு நாள் வற்றிவிடும். வற்றாத ஊற்று உன் உள்ளத்தில் இருக்கட்டும். செயல் திறன் வளரட்டும்”என்கிறார்.அதற்கான ஆற்றுப்படுத்தலையே இக்கடித இலக்கியங்கள் குறிப்பாக செய்கிறது எனில் மிகையல்ல.”தமிழ் மொழி நல்ல மொழிதான்:ஆனால் அதை வல்ல மொழியாக்கினோமா?”” என்ற மு.வ. வின் அர்த்தமிகுந்த கேள்வி இன்றைக்கும் நம்முன் வலுவாகவே ஓங்கி நிற்கிறதே.

தமிழன் சுயநலமியாக இருப்பதை , விரிந்தபார்வையும் செயல்திறனும் பெறாதவனாக இருப்பதை அவர் மீண்டும் மீண்டும் தம் கடிதங்களில் இடித்துரைப்பதைக் காணலாம்.”தமிழர்க்கு நல்ல பண்புகள் பல உண்டு.ஆயினும் பொதுவாக தமிழரின் வாழ்வு நலிந்துள்ளது எனக் கூறலாம். காரணம் என்ன?தமிழரிடையே சில குறைகளும் இருத்தல் கூடுமன்றோ? இந்த எண்ணமே இத்தகையக் கடிதங்கள் எழுதத் தூண்டியது.'தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காணல்' திருவள்ளுவர் நெறி. நம் குற்றம் குறைகளை நாமே உணர்தல் நலம். 'குற்றம் உணர்வான் குணவான் ' என்பது நன்மொழி”இப்படி தமிழ்சமூகம் அகத்தாய்வு செய்து தன்னைச் சீர்திருத்திக் கொள்ள விழைந்தார். முன் மொழிந்தார்.குறை நிறை இரண்டையும் அடையாளம் காட்டினார்.விடிவுக்கான பாதையை உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக எடுத்துக் காட்டினார்.அதனால் மு.வ காட்டிய வழி இன்றும் பேசத்தக்கதாக உள்ளது.

மொழிவழி மாநிலம் குறித்தும் நிறையவே பேசி இருக்கிறார்.இக்கடிதங்களில் தேதி இடப்படாததால் காலப்பின்னணியோடு இக்கடிதங்களை சரியாக இன்றைய தலைமுறை உள்வாங்குவது சிரமமாகும்.அவர் 1974ல் இறந்துவிட்டார். 1950களின் முன்னும் பின்னுமாக இந்நூல்கள் வெளிவந்துள்ளன. எனவே திராவிட இயக்கம் மேலோங்கிவந்த காலகட்டத்தில் - தமிழனின் உயர்வு பாடுபொருளாக இருந்த காலகட்டத்தில்- மொழிவழிமாநில சிந்தனை வலுப்பெற்றுவந்த காலகட்டத்தில் அதற்கு உரம்சேர்க்கும் விதமாகவும்: அதே சமயம் வெறியையும் பற்றையும் சரியாக இனம்பிரிக்கும் விதமாகவும் மு.வ பெரிதும் முயன்று. அதில் வெற்றியும் ஈட்டினார் எனில் மிகையல்ல.

'”இப்போது பெற்றிருப்பது அரசியல் விடுதலையே. இனிப்பெற வேண்டிய உரிமைகள் பொருளாதார உரிமையும், சமுதாய உரிமையும் அறவுரிமையும் ஆகும்.இவற்றிற்காகப் பாடுபடுவதே இனி உள்ள கடமை”இந்தத் தெளிவோடு அவர் தமிழ்ச் சமூகச் சிக்கல்களை அடையாளம் காட்டியுள்ளார்.அறபோதனை என்கிற சாக்கில் பழமையை அப்படியே பற்றி நிற்கக் கூறாமல் பண்பாட்டில் காலூன்றி புதிய உலகச்சூழலை உள்வாங்கி தமிழ்ச்சமூகம் முன்னேற எழுதுகோலை மிக எச்சரிக்கையோடு கையாண்டிருக்கிறார்.சமூகத்தில் வெறும் சீர்திருத்தப் பிரச்சாரம் மட்டுமே இலக்கை எட்ட உதவாது என்பதை மிகச்சரியாகவே பதிவு செய்துள்ளார்.”வாழ்க்கைக் கவலை குறையும் வரையில் வீட்டுக்கு ஒரு சீர்திருத்தத் தலைவர் பிறந்தாலும் மூடநம்பிக்கைகளைப் போக்கமுடியாது.என்று நான் கூறினேன்; இன்னும் அதையே திரும்பக் கூறுகிறேன்;எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போது மனிதனுடைய மனதில் சூழும் இருள்தான் மூடநம்பிக்கைக்குக் காரணம்.இனிமேல் எப்படி வாழ்வது,எப்படி வயிறு வளர்ப்பது,நம் வயிற்றில் பிறந்த மக்களை எப்படி வாழ வைப்பது ,நம் முதுமையின் போது நாம் கவலையில்லாமல் வாழ முடியுமா நம்மை அப்போது யார் காப்பாற்றுவார்கள்?இப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணும் ஒவ்வொருவர் மனதிலும் இருள் சூழ்வது இயற்கை.அங்கெல்லாம் மூடநம்பிக்கைகள் காளான் போல் தோன்றும்.அந்தக் கவலைகளில் பெரும் பங்கானவை பொருள் பற்றிய கவலைகளே. ஆகவே இந்த பொருட்கவலை தீர்ந்தாலின்றி இந்த மூடநம்பிக்கைகளை ஒழிக்கமுடியாது,”இப்படி நுட்பமாகப் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அலசும் மு.வ. .' வாழ்க்கை நெருக்கடிகளே அவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாக மாற்ற முடியுமே தவிர வேறு எதனாலும் அல்ல.”என்பதை வலியுறுத்தி நடைமுறை சார்ந்தே வழிகாட்டுகிறார்.

.தங்கைக்கு எழுதிய கடிதத்தில் பெண்விடுதலையை அன்றைய சமூகநிலைசார்ந்து பண்பாடு சார்ந்து அதேநேரம் அடுத்தகட்டத்துக்கு தமிழ்ப்பெண்களை முன்னேற்றும் நோக்கோடு வரைந்துள்ளார்.

“உலகத்தில் எவர்க்குள்ளும் உண்மையான சமத்துவம் இல்லை;இருக்கவும் முடியாது.மக்கள் வெவ்வேறான ஆற்றலுடனும் பண்புகளுடனும் பிறந்து வளரும்படியாகப் படைப்பு அமைந்துள்ளது.ஆதலின் சமத்துவம் என்பது இயற்கையில் இல்லை”என்கிறார். ஆண்பெண் பற்றியே இப்படிக் கூறுகிறார் என்பதை மனதில் பதிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த வரையறையை சாதியோடு போட்டுக் குழப்பித் தவறான முடிவுகளுக்குப் போகும் அபாயம் உண்டு.அதே சமயம் இன்றைய பெண்ணியியலாளர்கள் இந்த வரையறையையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.அன்றையச் சூழலில் இவர் கூற்றை புரிந்து கொள்வதே அறிவுடைமை.அடுத்த வரிகளில் அவர் கூறுவதை பார்த்தால் நம் ஐயம் அகலும்.

”இயற்கையை வெல்ல முயலும் மனிதன் சமத்துவத்தைப் படைக்க முயலுகிறான்.சமத்துவத்தை அன்பால் ஏற்படுத்திக் கொள்கிறான்;அல்லது சட்டத்தால் அமைத்துக் கொள்கிறான்”

“மனத்தின் தொடர்பு அவ்வளவாக இல்லாத துறைகளில் சட்டத்தின் சமத்துவம் நிலைக்கும். இல்வாழ்க்கை என்பது மனத்தின் உணர்ச்சிகளையே பெரும்பாலும் அடிப்படையாகக் கொண்டது.அதனால் சட்டம் இங்கு என்ன செய்யும்?அன்பு ஏற்படுத்தும் சமத்துவம்தான் நிலைக்கும் “ என்கிறார்.உளவியல் சார்ந்து குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதுதானே இன்றும் ஏற்புடைத்து.

தங்கைக்கு இப்படி அறிவுரை சொல்வது மட்டுமின்றி அதற்கும் மேல் சென்று கூறுகிறார்,”மனம் கிணற்றுத் தவளையாய் தாழாமல் வானம்பாடியாய் உயர்வதற்குப் பரந்த உலகப் பழக்கம் வேண்டும் என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்தப் பரந்த உலகத்தை வீட்டினுள் வரவித்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறேன்.அதாவது,அனுபவிக்கும் இன்ப துன்பம் எதையும் உலகத்தோடு,உலகப் படைப்போடு இயைத்துப் பார்.நடைபெறும் நிகழ்ச்சிகளை உலக வரலாற்றோடு இயைத்துப்பார். காணும் சுற்றுப் புறத்தைக் காவியங்களில் உள்ள கற்பனையுலகத்தோடு ஒப்பிட்டுக் கருதிப்பார்.இன்று உள்ள இந்தச் சிறுவாழ்க்கை என்றும் உள்ள கடவுள் தன்மையாகிய கடலில் ஒரு துளி என்றும் உணர்ந்து பார்.இவ்வாறு எண்ணுவதாலும் கருதுவதாலும் உணர்வதாலுமே உண்மையான பரந்த உலகப் பழக்கம் மனதிற்கு ஏற்படும்.அப்போதுதான் புள்ளி போல் உள்ள சிறு வட்டம் வளர்ந்து பெரிய வட்டம் போல் பெருகி உலகையெல்லாம் வளைத்துக் கொள்ளும் பெருமனம் ஆகும்”இப்படி வாழ்க்கை வட்டத்தை அழகாக சித்தரித்துக் காட்டிய மு.வ. வின் பரந்த மனமும் கூர்த்தமதியும் எண்ண எண்ண வியப்பாக விரியும்.

கடித இலக்கியத்தை தமிழில் அறிமுகம் செய்தவர் அதனை நன்கு பயன்படுத்தியவர் மு.வ. என்றே துணிந்து கூறலாம்.மற்றவர்கள் இவர் அடியொற்றி முன்சென்றவரே.கட்டுரையாக எழுதுவதைவிட கடிதமாக எழுதும்போது 'பெர்சனல் டச்' என ஆங்கிலத்தில் கூறுகிற வாசகன் 'நெஞ்சோடு நெருங்கும்' அனுபவம் அதிகம்.அது 'சோஷியல் கவுன்சிலிங்' என இப்போது கூறப்படுகிற 'ஆற்றுப்படுத்தலை' சாத்தியமாக்கும்.அமெரிக்க அறிஞர் நாம்சோம்ஸ்கி கூறுவதைப் போல கருத்துருவாக்கம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கும்.மு.வ இதனை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார் என்பதே என் கருத்து.அவர் எழுதியுள்ள கருத்துகள் சில இன்று தேவைப்படாமல் போகலாம்;ஆனால் பல இன்றைக்கும் பொருந்துவனவாக இருக்கின்றன.. அவரின் சமூக அக்கறை பொருள்பொதிந்தது.காலத்தை வென்று நிற்பது.நேற்றும் தேவைப்பட்டது. இன்றும் தேவைப்படுகிறது. நாளையும் தேவைப்படும்.ஆம், மு.வ. காலத்தை மீறி வாழ்கிறார்.இனியும் வாழ்வார்.அவரது எழுத்துகள் சமூகத்தை ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

சின்னக்குத்தூசி: நினைவலைகள்

Posted by அகத்தீ Labels:திருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார்.

முன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை.

காட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி.

பிறப்பால் பிராமணர். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தின் வைரி. பெரியாரின் கொள்கை முரசம். இவர் வாழ்க்கையும் பயணமும் இன்றைய தலைமுறை அவசியம் அறியவேண்டிய பெரும் செய்தி.

இயற்பெயர் தியாகராஜன். திருவாரூரில் ஏழ்மையான பிராமணக் குடும் பத்தில் பிறந்தவர். வறுமையை சுவைத்தவர். மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பிராமணர்கள் தி.க வில் உறுப் பினராக முடியாது என்ற அன்றைய விதி காரணமாக உறுப்பினராக வில்லை. ஆயினும் திராவிடர் கொள்கைகளில் தீவிரமாய் செயல்படலானார்.

மணலூர் மணியம்மா என்கிற கம்யூனிட் போராளி, இடதுசாரி புத்தகங் களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவரது உதவியாளராக சிறிது காலம் செயல்பட்ட போது புத்தகங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.

வாழ்க்கைப் பயணத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். அக் காலத்தில் திமுக அரசியலோடு இவரது நெருக்கம் அதிகரித்தது. ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என தனி ஆவர்த்தனம் செய்த போது அவரைப் பின் தொடர்ந்தார். சம்பத் காங்கிர கட்சிக்குப் போன போது இவரும் காங்கிரஸோடு இணைந்து நின்றார். அப்போதும் பெரி யாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமூக நீதி கருத்துகளையும் உரக் கப் பேசிக் கொண்டே இருந்தார். காமராஜருக்குப் பின் திமுக அரசியலில் ஆர்வம் காட்டினார்.

மாதவி என்ற ஏட்டில் எழுதத் துவங்கி தமிழ்ச் செய்தி, அலையோசை, நவசக்தி, எதிரொலி, முரசொலி, நக்கீரன் என பல பத்திரிகைகளில் கூர்மை யான அரசியல் விவாதக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். இறக் கும் தருவாயிலும் மருத்துவமனையில் இருந்த படி அரசியல் விமர்சனக் கருத்துக்களை இவர் சொல்ல, மற்றொருவர் எழுத, பின்னர் அதுக் கட்டு ரையாக வெளிவந்தது என்பது தாம் மேற்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும்.

தீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் வாதங்களில் சின்னக் குத்தூசி எழுத்துகள் முக்கிய இடம் பெறும். பொதுவாக ஆதாரமோ மேற் கோளோ காட்டாமல் எதையும் எழுதமாட்டார். பழைய ஏடுகளில் தேடித் துருவி சில செய்திகளை சுட்டிக் காட்டி அரசியல் விவாதம் செய்யும் இவரது பாணி தனித்துவம் ஆனது.

முதல் நாள் இவரைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டு மறுநாள் நேரில் சென்று பார்க்கும் போது, தோழர் ரொம்ப நல்லா எழுதி இருந் தீங்க எனப் பாராட்டுவார். நமக்குத் தான் கூச்சமாக இருக்கும். கருத்துச் சண்டை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் கறாராக வாழ்ந் தார். தன் நிலைபாட்டில் வழுவ மாட்டார்; ஆனால் எதிராளி சொல்வதை காது கொடுத்துக் கேட்பார்; படிப்பார். இந்த ஜனநாயகப் பண்பு இப்போது எத்தனை பேரிடம் காண முடியும்?

இவரது எழுத்துகள் புதையல் கருவூலம் களஞ்சியம் பவளமாலை வைரமாலை பொற்குவியல் பூக்கூடை இடஒதுக்கீடு அன்று முதல் இன்று வரை என பல்வேறு தொகுதிகளாக நக்கீரனால் வெளியிடப்பட்டுள்ளன.

அவை அவ்வப்போது எழும் அரசியல் தேவையை ஒட்டி அவர் பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. அவற்றில் பல கட்டுரைகள் அன்றைய சூழ்நிலை சார்ந்தது மட்டுமே. ஆயினும் பாபர் மசூதி இடிப்பு இட ஒதுக்கீடு மாநில உரிமை மதவெறி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு சமூக நீதி ஜனநாயக உரிமைகள் நதி நீர் பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் காலத்தை மீறி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.

சின்னக் குத்தூசி என்ற புதையலைப் பற்றி கூறும்போது ஏ.எ. பன்னீர் செல்வன் கூறினார்: தமிழக தற்கால அரசியல் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. குறிப்பாக 1952 - ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை அறிந்து கொள்ள எந்தப் புத்தகமும் இல்லை. மாறாக வெவ்வேறு பத்திரிகைகளின் பழைய பிரதிகளை தேடிப் படித்துதான் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை. இந்தச் சூழலில் எல்லா பத்திரிகையாளர்களும் நாடிச் செல்லும் ஒரு தனிநபர் நூலகம் தான் சின்னக்குத்தூசி. அவரின் எழுத்துகளையும் இந்த வரலாற்றுப் பதிவின் ஒரு அம்சமாகவே நோக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு தடை சர்ச்சை என்ற தலைப்பில் 21.10. 2003 அன்று நக்கீரனில் எழுதிய கட்டுரை, எப்படி நீதிமன்றம் மக்களின் கோப உணர் வை வெளிப்படுத்தும் போராட்ட வடிவங்களை மேலோட்டமாக பார்க்கிறது என்று சாடியதுடன், அதனை உறுதியுடன் எதிர்கொண்ட மேற்குவங்க கம் யூனிட்களை பாராட்டவும் செய்தார். ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டும் போராட்டத்தில் இத்தகைய நேர்மையான குரல்கள் எப்போதும் தேவை அல்லவா?

தொகுக்கப்பட்ட இவரது எழுத்துகள் நிகழ்கால திராவிட இயக்க அர சியல் சார்ந்த வரலாற்றை பேசும். அதே சமயம் இடது சாரி இயக்கம் சார்ந்த அரசியலைப் பேசும் வரலாற்று தொகுப்புகள் இதுபோல் இல் லையே என்ற ஏக்கமும் எழுகிறது. பத்திரிகையாளர்கள் உரிமை பறிக்கப் படும் போது, அதனை பாதுகாக்க முன்வரிசைப் போராளியாக நின்றவர் சின்னக்குத்தூசி.

திருமணமே செய்து கொள்ளாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழு வதும் எழுத்துத் தவம் நோற்ற இவரின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாறாகும்.

ஊடக உலகம் தார்மீக விழுமியங்களை இழந்து காசுக்கு விலை போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எழுத்துக்காக வாழ்ந்தவரின் இறப்பு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகப் பெரியது. ஆயினும்....

சின்னக் குத்தூசியைப் போலவே வளரும் தலை முறை மீது நம்பிக்கை கொள்வோம்.

அரசியல் களத்தில் விவாதங்கள் சூடாகட்டும்.... கருத்துப் போராட்டம் கூர்மை அடையட்டும்... மக்கள் எது சரி எது தவறு என்று முடி வெடுக் கட்டும்... அய்யா சின்னக் குத்தூசிக்கு எமது இதயம் கனத்த அஞ்சலி.

ம.பொ.சி - யின் ஜனநாயகக் குரல்

Posted by அகத்தீ Labels:

இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட சிறந்த ஆளுமைகளில் ம. பொ.சி மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரது மீசையைப் போலவே தனித்து வமானவர். தேசிய விடுதலைப் போரில் ஈடுபட்டவர். காங்கிரதான் அவரது தாய்வீடு. ஆனால், கொள்கை அடிப்படையில் காங்கிரசி லிருந்து விலகி தமிழரசுக் கழகம் கண் டவர். மாநில சுயாட்சிபற்றி பொருள் செறிவுள்ள இவரது பேச்சுகளும் எழுத்துகளும் காலத்தால் அழியா தவை. தமிழ் இனத்தின் மீது இவர் கொண்ட காதல் எல்லையற்றது. ஆயி னும், குறுகிய வேலிக்குள் அடைபடா தவர். இன்றைக்கு முதலமைச்சர் கன வோடு கட்சி தொடங்குவோருக்கு மத் தியில் அன்று கொள்கை பற்றின்பால் தனிக்கட்சி கண்ட இவரது நெஞ்சுர மும், லட்சிய வேகமும், இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. இடது சாரிகளோடு இவர் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆனாலும், இவ ரது அரசியல் பயணம் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறமுடியாது. வாழ்வின் பிற்பகுதியில் திமுகவோடு கிட்டத் தட்டஒட்டி நின்று பதவிகளைப் பெற் றது வாழ்க்கை நாடகத்தின் ஒரு துன்ப யியல் முடிவுதான். இதைக் கொண்டு மட்டும் அவரது ஆற்றலை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவரது எழுத்துக்களை இன்று படித்தாலும் அதில் நியாயத்தின் குரல் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.

விடுதலைப் போரில் தமிழகம் குறித்து இவர் பதிவு செய்யவில்லை என்றால் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். சிலம்பு குறித்து இவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதாகக் கூறமுடியாது. சிலம்பு செல்வர் என்கிற பட்டம் இவரைப் பொறுத்தவரை கவுரவப்பட்டம் அல்ல. மாறாக உண்மையின் குறியீடே. ம.பொ.சியைப் பற்றி ஒரு முழுமை யான மதிப்பீட்டை - அரசியல், இலக்கியம், சமூக அரங்கில் அவரது பங்களிப்பை குறித்து ஒரு சரியான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். வளரும் தலை முறைக்கு நாம் அளிக்க வேண்டிய கொடை.

காங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளி யேறிய சூழலில் தமது தமிழ் தேசியச் சிந்தனையை பரப்புவதற்காக அவ ரால் தொடங்கப்பட்ட ஏடு தமிழ் முரசு (1946-51), தமிழன் குரல் (1954-55), செங்கோல் (1950-95). இந்த ஏடுகள் இன்றைக்கு முழுமையாக கிடைக் குமா என்று தெரியவில்லை. ஆயினும், தி. பரமேவரி அரிதின் முயன்று தமி ழன் குரல் இதழ்களைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக வெளிக்கொ ணர்ந்துள்ளார். இது பாராட்டத்தக்க பங்களிப்பாகும். சரவதி, மணிக் கொடி, சிகரம், சுபமங்களா இப்படி நின்று போன ஏடுகள் பலவற்றை தேடிச் சேக ரித்து தொகுக்கும் முயற்சிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இது வர லாற்றை சரியான முறையில் பிழை யின்றிப் புரிந்துகொள்ள உதவும் ஊன்றுகோல்களாகும். அந்த வகை யில் தமிழன் குரல் தொகுப்பும் அடங் கும். அரசியல் கட்டுரைகள், இலக்கி யக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என மூன்றுப் பகுதிகளாக அமைத்துள் ளது வாசகனுக்கு எளிதாக வாசலைத் திறக்கும் நல்ல உத்தியாகும்.

அரசியல் கட்டுரைகள்


மொழி, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய எல் லாத்துறைகளிலும் தமிழினத்தின் நலன்களைக் காக்கவும், அவற்றை வளர்க்கவுமே தமிழன் குரல் வெளி வருகின்றது. என்று முதல் இதழ் தலையங்கத்திலேயே தன்னுடைய நோக்கத்தை ஐயம்திரிபுஅறச் சொல்லி யிருக்கிறார். அதனை உறுதியாகப் பிரச் சாரம் செய்ததை இந்தத் தொகுப்பு எடுத்துக்காட்டுகிறது. தமிழன் குரலில் வந்த தலையங் கம், ம.பொ.சி. அவர்களால் எழுதப் பட்ட அரசியல் கண்ணோட்டம் இரண் டும் தனித்த வாசிப்புக்குரியன. அரசி யல் என்கிற தலைப்பிலும், வரலாறு என்கிற தலைப்பிலும், டாக்டர் மு. வரதராஜன், நாமக்கல் கவிஞர் ராம லிங்கம், சோம.லெட்சுமணன், சாமிநா தசர்மா, ரா.பி. சேதுபிள்ளை உள் ளிட்ட பலரின் கட்டுரைகளும் உள் ளன. மொழிபற்றியும், தேசிய இனம் பற் றியும், தமிழ்மாநில உரிமைகள் பற்றியும், ம.பொ.சிக்கு இருந்த தெளிவு அன்றைக்கு காங்கிரசாரிடமும் இருக் கவில்லை. திராவிட இயக்கத்தாரிட மும் இல்லை. பெருமளவு இடதுசாரி கள் மட்டுமே இவரின் பல முடிவுக ளோடு ஒத்துப்போயினர். அவர்களும் எல்லைப் போராட்டத்தில் சில நேரங் களில் இவரோடு வேறுபட்டதும் உண்டு.

இவரின் தொலைநோக்கு பார் வையை ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க இயலும். ஆயினும், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேரு வின் சோஷலிசம் என்ற கட்டுரையை பார்க்கலாம். 1954 டிசம்பர் மாதம் எழுதி யது. அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் கூறுகிறார்: பிரதமர் நேரு விரும் புகிறபடி, அடுத்த இருபதாண்டுக்குள் இந்தியா சோஷ லிச நாடாக வேண்டுமானால், ஐந் தாண்டுக்கு ஒருமுறை திட்டம் தயாரித் தால் மட்டும் போதாது. பின்வரும் மாறு தல்களை உடனடியாகச் செய்தாக வேண்டும்.

சோஷலிசம்தான் இந்தியாவின் லட்சியம் என்ற வாசகத்தை இந்தியக் குடியரசுச் சட்டத்தில் சேர்க்க வேண் டும். மற்றும், அந்த லட்சியத்தை அமல் நடத்துவதற்குச் சாதகமான வகையில் அரசியல் அமைப்பைத் திருத்தவும் வேண்டும்.

ஆளுங்கட்சியான காங்கிரசை சோஷலிச கட்சியாக புனருத்தாரணம் செய்ய வேண்டும்.

அரசாங்க நிர்வாக எந்திரத்தை சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களின் நலனுக்கேற்ப செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

இந்திய ராஜ்யங்களை மொழிவாரி திருத்தி அமைப்பதோடு, அந்த ராஜ்யங் களை சம அந்ததுடைய சுயாட்சி அங்கங்களாகவும் செய்ய வேண்டும்.

இந்த நான்கு அம்சங்களை நிறை வேற்றாத வரை இந்தியா சோஷலிசப் பாதையில் ஒரு அங்குலம் கூட முன் னேற முடியாது

இந்த வரையறை ஓரளவுக்கு ஏற்கத் தக்கது. இதில் அரசியல் சட்டத் தில் சோஷலிசக் குடியரசு என்கிற பெயர் அவசர காலத்தில் அவசர கதி யில் சேர்க்கப்பட்டது. பெரும் போராட் டத்திற்குப் பிறகு மொழி வழி மாநிலங் கள் அமைக்கப்பட்டன. ஆனால், மாநில உரிமைகள் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளன. இந்தப் பின் னணியில் அன்றே இதுகுறித்து தீர்க்க மாய்ச் சிந்தித்த ம.பொ.சி.யின் பார்வை நம்மை வியக்க வைக்கிறது.

இந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் காங்கிர எப்படியெல் லாம் சீரழிந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. காந்தியமும் காங்கிரசும் என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் மிக முக்கியமான கட்டுரைகள். ஏழைக ளுக்கு நில விநியோகம் செய்வது குறித்து லூயி பிஷருக்கும் காந்திக் கும் நடந்த உரையாடலை மிகப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டி விளை நிலங்களை உழுது பயிரிடும் விவசா யிக்கே வழங்க வேண்டும். இதை காந்தி விரும்பினார். காங்கிர நிறை வேற்றவில்லை என அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இப்படி ஒவ்வொரு கட்டு ரையும் அன்றைய உடனடி நிகழ்வை ஒட்டி தீட்டப்பட்டிருப்பினும் அதன் பார்வை தொலைநோக்கோடு அமைந் திருப்பதுதான் ம.பொ.சி.யின் சிறப்பு. அவருடைய அரசியல் பார்வையை முழுமையாக அப்படியே அங்கீகரிக்க எல்லோராலும் முடியாது. கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும், பெரிதும் சரியான நிலைபாட்டிற்காக உறுதி யாக தொடர்ந்து போராடியவர், எழுதிய வர் என்பதை இத்தொகுப்பை படிப்பவர் உணரலாம்.

இலக்கியக் கட்டுரைகள்


மூன்றாம் வகுப்பு வரை படித்த மனிதர் நாற்பதாவது வயதில் அரிதின் முயன்று இலக்கியம் பயில்வதும் அந்த இலக்கியத்தின் அழகியலைத் துய்ப்பதுடன் நிறைவுறாமல் தமிழ்நாட் டின் நலனுக்குப் பயன்படுத்துவதும், அரசியலையும் இலக்கியத்தையும் குறிப்பிட்ட கலவையில் கலந்து பயன் பாட்டுத்தன்மை பெறுவதும் ம.பொ.சி. வாழ்வில் குறிப்பிடத்தகுந்தவை. மர பார்ந்த இலக்கியத்தில் ஆழ்ந்திருக் கும் கவியுளம் காணுதலும் அதன்வழி அரசியலை மீட்டெடுத்தலும் புதுமை நோக்காகும். என தி. பரமேவரி கூறுவது மிகவும் பொருத்தமானது. பொதுவாக நாட்டைப்பற்றி எழுதுவ தென்றால் தேசியவாதி என்ற புனைப் பெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் என் றால் ஞானம் என்றப் புனைப் பெயரி லும் பாட்டாளி மக்களுக்கானது என் றால் பாமரன் என்றப் புனைப் பெயரி லும் எழுதுவது ம.பொ.சி. வழக்கம். தன் பெயரை நேரடியாகவும் குறிப்பிட்டு எழுதுவார். இலக்கியப் பகுதியில் அவர் எழுதியது மட்டுமின்றி ந. சஞ் சீவி, கு.ரா, மதுரை சிவம், அ.ச.ஞான சம்மந்தம், கி.வா. ஜகநாதன், குன்றக் குடி அடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நா. பார்த்தசாரதி உள்ளிட் டோர் பங்களித்துள்ளனர்.

சங்க இலக்கியம், குறளும் சிலம் பும், பிற்கால இலக்கியம் என்ற தலைப் புகளில் கட்டுரைகளை பரமேவரி தொகுத்துள்ளது நுழைவதற்கு எளிதா னது. இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. என்ற கட்டுரை மிகுந்த முக்கியத்து வம் உடையது. அதில் பெரியாருடைய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிவிட்டே, இலக்கியத்துறை யில் அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ. வெ.ராவுக்கு அறிவோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டையத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவ ருக்கு நல்ல எண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பய னற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமானக் கருத்து. இத்தகைய கடு மையான வார்த்தைகளோடு விமர்சிக் கிறார் ம.பொ.சி. அதற்கு தி.க. வட் டாரத்திலும் கடுமையாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பதிலுக்கு மீண்டும் ம.பொ.சி. பதில ளித்திருக்கிறார். இலக்கியம் குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந் திருக்கிறது. தமிழரசு இயக்கத்தா ருக்கு இலக்கியம் என்பது பொழுது போக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந் தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்ப டும் உரைகல்; எதிர்காலத் தமிழகத் துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம் ம.பொ.சி.யின் இந்தப் பார்வை இத்தொ குப்பு நெடுக நிறைந்திருக்கிறது. இந்த இலக்கியக் கட்டுரைகளை இன்றைய இளைஞன் வாசிப்பது அவசியம். அது தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள ஒரு ஜனநாயகப் பார் வையை நிச்சயம் வழங்கும்.

படைப்பிலக்கியம்
பல்துறைக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் என பண் முகப் படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. குயிலன், லட்சுமி, ஆ.ரா. இந்திரா, சீதாலட்சுமி, தண்ட பாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிஞர் கா.மு. ஷெரீஃப், பெ. தூரன் உட்பட பலரின் அரிய கட்டுரை கள் இடம் பெற்றுள்ளன. பண்டிகையும் பொருளாதாரமும் என்றக் கட்டுரை யைப் படிக்கிறபோது அதை ஆதாரக் குறிப்பாகக் கொண்டு பண்டிகை களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண் டால் மிகுந்த பயன் உண்டாகும் எனத் தோன்றுகிறது. அந்தக் கட்டு ரையில் அவர் கூறுகிறார், பொதுவாக பண்டிகைகளெல்லாம் சமயங்களின் பேரால் - புராணங்களின் போதனை யால் கொண்டாடப்படினும் அந்தப் பண்டிகைகளைத் துவக்கி வைத்த தற்கான அடிப்படைக் காரணம் பொரு ளாதாரம்தான்..... ஒரு பண்டத்தை கொடுத்து இன்னொரு பண்டத்தை வாங்கும் பண்டமாற்று வாணிபம் இருந்த காலத்தில் நாடு முழுவதுமாக பண்டிகைகள் கொண்டாடப்பட வில்லை. பண்டத்தைப் பணத்திற்கு விற்கும் நாணயமாற்று முறை ஏற்பட்ட காலத்தில்தான் பண்டிகைகள் கொண் டாடும் வழக்கம் ஏற்பட்டதாகத் தெரி கின்றது. பண்டிகைகள் பழக்க வழக் கங்கள் ஆகியவற்றின் உண்மைக் காரணங்களை மறைத்து கற்பனைக் காரணங்களைச் சொல்லுவது இந்துக் களிடையே தொன்றுத்தொட்டு இருந்து வரும் வழக்கம்..... தீபாவளி பண்டி கையையொட்டி வழங்கி வரும் புரா ணக் கதையும் கற்பனையே அன்றி சரித்திரமன்று. இப்பார்வை அனைவ ருக்கும் உண்டாயின் மதப் பகைமை தோன்றுமோ!

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆவடியில் ஆண்டியப்பன் என்ற படைப்பு விடுதலைக்குப் போராடிய காங்கிர வேறு, ஆவடி சோஷலிச மாநாடு கூட்டுகிற காங்கிர வேறு என்பதை அற்புதமாக சித்திரமாகத் தீட்டிக்காட்டிவிட்டது.
மொழிபெயர்ப்பு கதைகளை வெளி யிட்டிருப்பது எட்டுதிக்கிலும் சென்று கலைச் செல்வங்களை தமிழில் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சி. தமிழன் குரலில் மொழி பெயர்ப்பு சிறு கதைகள் இடம் பெற்றிருப்பது பாராட் டுக்குரியது. பூட்டு சாமியார், மாளி கையும் மண்குடி லும், வளர்த்த கடா போன்ற படைப்புகளின் தலைப்பே செய்தியைச் சொல்லும் பொதுவாக வெறும் பொழுது போக்குக்காக எந்த படைப்பும் இடம் பெறவில்லை.

நாடும் நகரும் / நகர்ப்புறமும் நன்றாக / வீடும் குடியும் / விளக்கமுற நீடுலகில் / தக்கபணி யாற்றி / தமிழன் குரலென்றும் / மக்களிடை வாழ்க / வளர்ந்து என தமிழன் குரலுக்கு கவி மணி தேசிய விநாயகம்பிள்ளை எழு திய வாழ்த்துக்கவிதையும் இடம் பெற் றுள்ளது. கவிமணிக்கு ம.பொ.சி. தீட் டிய இரங்கல் கட்டுரையும் இதே தமி ழன் குரலில் இடம் பெறநேர்ந்தது.

பொதுவாக தமிழன் குரல் ஒரு விரிந்த தளத்தில் தமிழ்தேசிய அரசி யலை பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வாகனமாக திகழ்ந்திருக் கிறது. அதே நேரத்தில் அது பிரி வினை முழக்கமாகவோ வேறு திரிபு வாத போக்குகளாகவோ சிதைவுறா மல் ஆக்கபூர்வமான வகையில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும், அன் றைய தமிழ்ச் சூழலில் இத்தகைய ஜனநாயக ரீதியான புரிதல் ஏனோ பெரும் வரவேற்பை பெறாமல் போய் விட்டது. முதலில் பிரிவினைவாதிகள் கை ஓங்கியதும் பின்னர் அவர்களே அதைக் கைவிட்டு சரணாகதி ஆகிய தும் ஆன தமிழகச் சூழலில் ம.பொ. சி.யின் ஜனநாயகக் குரல் உரிய கவ னிப்பைப் பெறாதது தமிழகத்துக்குத் தான் நட்டம்.

இப்போது இந்த மூன்று தொகுப் பையும் வாசிப்பதும் ஆய்வுக்குட்படுத் துவதும் அடுத்த கட்ட அடிவைப்புக்கு உதவும். ம.பொ.சி.யின் இதர ஏடு களையும் இதுபோல் தொகுக்க தி. பரமேவரி முயல்வாராக.

ம.பொ.சி.யின் தமிழன் குரல்
இதழ்த் தொகுப்பு: தி. பரமேவரி
அரசியல் கட்டுரைகள்
பக். 272 விலை ரூ. 150/-
இலக்கியக் கட்டுரைகள்
பக். 216 விலை ரூ.125/-
படைப்பிலக்கியம்:
பக். 272 விலை ரூ. 145/-
சந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083

கழுத்தை நெரிக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகள்

Posted by அகத்தீ

தேர்தல் களத்தில் மக்களின் குரலாய் நான்கு பிரசுரங்கள்

தேர்தல் பிரச்சாரம் கொதிநிலையை எட்டிக்கொண்டிருக்கிறது. எல்லா பக்கங்களிலும் உணர்ச்சிகள் கொம்பு சீவிவிடப்படுகின்றன. மக்கள் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளி தனிநபர் தாக்குதல்கள் உக்கிரமடைகின்றன. எல்லாத் தேர்தல்களிலும் வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க நடக்கும் விபத்துதான் இது.
இவற்றிற்கு மத்தியிலும் சமூக அக்கறையோடு தேர்தலில் போட்டியிடாத பல்வேறு அமைப்புகளும் மகளிர், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் என தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அவை எந்த அளவு அரசியல் கட்சிகளால் கண்டுகொள்ளப்பட்டன என்பது கேள்விக்குறியே.
தேர்தல் களத்திலும் அடிப்படை மக்கள் பிரச்சனை குறித்து ஒரு அக்கறைமிகு விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொதுவாக நடுநிலையாளர்கள் கூறுவதுண்டு. ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வது கிடையாது. அதேநேரம் இடதுசாரிகள் ஒவ்வொரு தேர்தலின் போதும் மக்களை வாட்டிவதைக்கும் பிரச்சனைகள் குறித்து நுட்பமான சிறு பிரசுரங்கள் வெளியிடுவது என்பது வாடிக்கை. இந்தத் தேர்தல் களத்தில் இடதுசாரி சிந்தனையாளர்கள் எழுதிய நான்கு சிறு பிரசுரங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு கால்கோள் நாட்டியிருக்கிறது.

பவர் கட் திமுக: தமிழக மின்வாரியத்தை திவாலாக்கிய திமுக என்ற பெயரில் காண்டீபன் எழுதிய 16 பக்க பிரசுரம் இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு ஒளி பாய்ச்சுகிறது. இந்தப் பிரசுரத்தில் பல உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 156 மெகாவாட்டாக இருந்த தமிழக மின்சார உற்பத்தி 1990ஆம் ஆண்டு வரையில் நேர்த்தியான வளர்ச்சியைக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 100 விழுக்காடு  கிராமங்கள் மின்மயப்படுத்தப்பட்டன. மின்சாரம் உபரியாக இருக்கிற நிலையை தமிழகம் கொண்டிருந்தது என கடந்த காலத்தை வரைந்துகாட்டும் சித்திரம் நிகழ்காலத்தைக் குறித்து என்ன சொல்லுகிறது தெரியுமா?
1990லிருந்து 2008ஆம் ஆண்டு வரையிலான 18 ஆண்டுகாலத்தில் மின்வாரியம் தன்தொகுப்பில் 1180 மெகாவாட் தனியார் மின் நிலையம் உட்பட கூடுதலாக 4470 மெகாவாட் மின்சாரத்தையே பெற்றுள்ளது. இதுதான் நாம் இன்று எதிர்கொள்ளும் மின் தட்டுப்பாட்டிற்கு அடிப்படைக் காரணமாகும். இக்காலகட்டத்தில் ஆண்டுத் தேவை சுமார் 500 மெகாவாட்டுகள் கூடிக் கொண்டே சென்றது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கும் மேலாக தமிழகத்தில் 120 பன்னாட்டுக் குழுமங்கள் தொடர்புடைய தொழிற்பூங்காக்கள் அமைக்க அனுமதி அளித்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மட்டுமே கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தடையில்லா மின்சாரம் வழங்கும் உத்தரவாதத்தோடு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம் முதல்வரால் ஒப்பமிடப்பட்டன. மேலும் ஒரு கோடி வண்ணத் தொலைக்காட்சிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கு மட்டும் 500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படும். இதன் விளைவாக தமிழகத்தின் மின்பற்றாக்குறை சுமார் 3000 மெகாவாட்டுகளாக உயர்ந்தது. இதனைச் சமாளிக்க இயலாமல் அரசே மின் வெட்டை அறிவிக்க வேண்டிய மோசமான நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர்த்திருக்க முடியாதா? இக்கேள்விக்கும் விடைகாண இப்பிரசுரம் முயற்சித்திருக்கிறது. 1995ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரை தமிழக அரசின் தரப்பில் நிறைவேற்றப்பட்ட மின் உற்பத்தி திட்டங்கள் சுமார் 514 மெகாவாட்டுகள் ஆகும். மக்கள் நலன் சார்ந்து தொலை நோக்கோடு சிந்திப்பதாக பீற்றிக் கொள்ளும் அரசு ஆண்டுக்கு குறைந்த அளவு 500 மெகாவாட்டுகள் மின்சாரத்தை கூடுதலாக உற்பத்தி செய்வதற்குத் திட்டமிட்டு நிதி ஒதுக்கியிருந்தால் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 7500 மெகாவாட் மின்சாரத்தை இன்று கூடுதலாகப் பெற்று உபரி மின்சாரம் படைத்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்திருக்க முடியும்.
இப்படி தமிழக அரசு கோட்டைவிட்ட வாய்ப்புகளையும் மறுபுறம் கொள்ளையடிக்க தனியாருக்கு வாசல் திறந்துவிட்டதையும் விவரமாய் பதிவு செய்திருக்கும் இப்பிரசுரத்தை வாசிப்பது அவசியம். குறைந்தபட்சம் அரசியல் கட்சியின் ஊழியர்கள் இதனை படித்தால் அவர்கள் பிரச்சாரத்தில் உண்மை ஒளிரும்.

விலை உயர்வும் வெங்காயக் கனவும் விருதுநகர் கண்ணன் எழுதிய 64 பக்க பிரசுரம் விலை உயர்ந்து கொண்டே போவதின் காரணத்தை மிக நுட்பமாக ஆழமாக அலசியிருக்கிறது. விலை உயர்வு என்பது இந்தியா முழுவதும் மக்களைப் பாதிக்கிற மிகப்பெரிய பிரச்சனை மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் விலை உயர்வின் மூலம். இதனை எடுத்துச் சொல்வதில் ஊடகங்கள் மிகப் பெரிய தவறு செய்கின்றன. அதிலும் விலை உயர்வுக்கு அடிப்படையான தாராளமய தனியார் மய கொள்கைகளை ஊடகங்கள் விமர்சிப்பதில்லை. தேர்தல் பிரச்சாரத்திலும் விலைஉயர்வு குறித்து கோபமும் வேதனையும் வெளிப்படுத்தப்படுகிறதே தவிர அதன் அடிப்படைகள் சுட்டிக்காட்டப்படுவது மிகக் குறைவாகவே உள்ளது. இந்தப் பிரசுரம் அந்தக் குறையை போக்குவதற்கு உதவி செய்யும். வெங்காயத்தை உரிக்க உரிக்க இறுதியில் ஒன்றுமில்லாமல் போகும். அதுதான் இன்று வெங்காய விவசாயிகளின் நிலை மட்டுமல்ல. ஒட்டுமொத்த விவசாயிகளின் நிலையும் கூட என விலை உயர்வின் ஏற்றமும் இறக்கமும் கூட சாதாரண மக்களையும் விவசாயிகளையும் ஒருசேர பாதிப்பதையும் மறுபுறம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வெங்காயத்தைப் பார்க்காமல் சர்க்கரையைப் பார்க்காமல் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்துகொண்டு விலையை ஏற்றுகிற அக்கிரமத்தை அழகாக உதாரணங்கள் மூலம் இந்நூல் எளிமையாய் சொல்லியிருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி குறித்து மத்திய அரசு - திமுகவும் அங்கம் வகிக்கிற - ஐமுகூ அரசுக்கு எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை என்பதை இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பொருளாதார வளர்ச்சி என்று மன்மோகனும் கருணாநிதியும் கதைப்பதை இந்நூல் தோலுரிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அபாரம்! ஆகா! ஓகோ!!! என அவ்வப்போது 8 விழுக்காடு, 89 விழுக்காடு என சில புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிடுகிறது. அப்படியென்றால் நானும் இந்தியாவில்தான் இருக்கிறேன். ஏன் என்னுடைய (பொருளாதாரம்) பொழப்பு மட்டும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிக்கொண்டிருக்கிறது என எண்ணத் தோன்றும் அதுவும் சரிதான்.
நம்ம பொழப்பு நாறும்போது, 2008ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்தக் கோடீவரர்கள் எண்ணிக்கை 84 ஆயிரம். 2009ல் அதாவது ஒரே ஆண்டு 51 விழுக்காடு அதிகரித்து 1.26 லட்சம் பேர் கோடீவரர்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளனர் என அரசு பெருமைப் பேசுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் 82.5 கோடி பேர் ஏழைகள் இருக்கிறார்கள் என்று ஆசிய வங்கி வளர்ச்சி கூறுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருவரது மாத வருமானம் ரூ.1035க்கு கீழ் இருந்தால் ஏழை என்று கணக்கிடப்படுகிறது. இப்படி உண்மை நிலைமைகளை படம் பிடிக்கும் இந்நூல் அம்பானி குடும்பம் மட்டும் ஓகோ என்று வளர்ந்திருப்பதை அதிலும் முகேஷ் அம்பானி என்ற ஏழை 4,500 கோடி ரூபாய் செலவில் ஒரு எளிய குடிலை கட்டியிருப்பதை அற்புதமாக இந்நூல் எடுத்துக்காட்டியிருக்கிறது. 2-ஜி பெக்ட்ரமில் 1 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு பற்றிப் பேசுகிறோம்.அதில் முகேஷ் அம்பானியின் பங்கு காத்திரமானது. இதையெல்லாம் அறிய இந்நூல் உதவும். அதுமட்டுமா ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி டாலர் பணத்தை ஒபாமாவின் பொருளாதார ஆலோசகர் லாரன் சம்மர்சுக்கு இந்த அம்பானிகள் தட்சணைக் கொடுத்திருப்பதை என்னென்பது? அதாவது 50 மடங்கு பெக்ட்ரம் பணம் தட்சணையாகவே கொடுத்தார் என்றால் இவர் எவ்வளவு விழுங்கியிருப்பார்?
அரசின் பார்வை எப்படி இருக்கிறது? 2010-11ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஏழைகளின் உயிர் வாழ்விற்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.450 கோடி வெட்டப்பட்டது. ஆனால் அதே நேரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் 50 ஆயிரம் கோடி சலுகைகள் வாரி வழங்கப்பட்டது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். காங்கிர தலைமையிலான (திமுகவும் பங்குபெறும்) அரசின் கொள்கை முடியும். காங்கிர தலைமையிலான அரசின் கொள்கை என்பது பெரும் செல்வந்தர்களைப் பாதுகாப்பது மட்டுமே. கடைக்கோடி ஏழை தெருக்கோடிக்கு தள்ளப்பட்டு, நாதியற்று நாண்டு செத்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ள (திமுகவும் பங்குபெறும்) காங்கிர அரசு தயாரில்லை. இப்படி உண்மைகளை கேன் ரிப்போர்ட்டாக நம்மிடம் இந்நூல் படம் பிடிக்கிறது. பிரச்சாரத்தில் இதன் ஒரு சிறு பகுதியாவது இடம் பெறுமானால் அதன் அரசியல் எழுச்சியும் விழிப்புணர்வும் எதிர்காலத்தை நிச்சயம் பாதுகாக்கும்.

சிறப்புமில்லை... கூறுமில்லை...: தலித் நலத்திட்டம் குறித்த ஒரு பார்வை அ.பழனியப்பன் எழுதிய 24 பக்க பிரசுரம். தலித் மக்களுக்கு நாங்கள்தான் அதிகம் நன்மை செய்திருக்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பதும்; எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்றம் வரும் என்றும் பிரச்சாரத்தில் உரக்கக் கேட்கிறோம். ஆனால், தலித் மக்களுக்கு இதுவரை என்ன கிடைத்தது என்பதை இந்நூல் துல்லியமாக கணக்கிட்டு காட்டிவிட்டது. குறிப்பாக சிறப்புக் கூறு திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட வேண்டிய நிதி பெருமளவு ஒதுக்கப்படாமலே கழிந்ததும் ஒதுக்கப்பட்டபோது அது அவர்களுக்கு உரிய முறையில் செலவிடப்படாமல் வேறு வகைக்குத் திருப்பப்பட்டதும் வேதனை மட்டுமல்ல. வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் செயலுமாகும். இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில விவரங்களை இங்கே தருகிறோம். தலித் மாணவர்களில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டால் பாடை கட்டுவதற்கும் கக்கூ கட்டுவதற்கும் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்குகிறார்கள். இதை இவர்களிடம் யார் கேட்டது? என்று ஒரு ஐ.ஏ.எ அதிகாரி சீறியதை இந்நூல் சரியாக பதிவு செய்துள்ளது. அதுபோல் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட அக்கிரமத்தை இப்பிரசுரம் அம்பலப்படுத்துகிறது. மறுபுறம் தலித் மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இப்பிரசுரம் சுட்டுகிறது: சென்னையில் தோல் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புக்கு மத்திய தோல் ஆராய்ச்சி நிறவனம் (ஊநவேசயட ஐளேவவைரவந டிக டுநயவாநச கூநஉடிடடிபல) உள்ளது. செருப்புத் தைக்கும் தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுவரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட, இதுவரையில் அந்த உயர்கல்வி நிறுவனத்தை எட்டிப்பார்க்கவில்லை. ஐஐடி (ஐனேயை ஐளேவவைரவந டிக கூநஉடிடடிபல)  ஐஐஎம் (ஐனேயை ஐளேவவைரவந டிக ஆயயேபநஅநவே) எய்ம் (ஹடட ஐனேயை ஐளேவவைரவந டிக அநனஉயட ளுஉநைஉநள) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மற்ற மாணவர்ககளைப் போல எளிதாக இடம் கிடைத்து படிக்கிற வாய்ப்புகள் தலித், பழங்குடி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. தலித் மாணவர்களுக்குக் கிடைக்கிற ஒரே தொழில்நுட்ப படிப்பு ஐடிஐ (ஐனேரளவசயைட கூசயபே ஐளேவவைரவந) மட்டுமே. அதிகபட்சமாக பாலிடெக்னிக்கில் பட்டயப்படிப்பு பெறுவார்கள். தலித் மக்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகளை அரசு வழங்குகிறது. ஆனால், தொழிற்பயிற்சி முடித்தவர்கள் தொழில் துவங்குவதற்கு வங்கிக்கடன் பெறுவது குதிரைக்கொம்பாக உள்ளது.
அதுமட்டுமல்ல தலித்  விடுதி மாணவர்கள் அடிக்கடி போராடுகிறார்கள். அப்போதெல்லாம் ஊடகங்களும் சில பெரிய மனிதர்களும் தலித் மாணவர்களை பொறுப்பற்ற சமூக விரோதிகள் போல் அவதூறு செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்டுள்ள இம்மாணவர்களின் நிலையை ஊடகங்கள் சொல்லுவதில்லை. தலித் மாணவர்களிடையே உருவாகும் கொந்தளிப்புக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுதியின் அவல நிலையே அடிப்படைக் காரணம். இப்பிரசுரம் அந்த அவலத்தை விவரமாக பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,241 விடுதிகள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை விடுதிகளுமே படுமோசமான நிலையில்தான் உள்ளன. தமிழகத்தில் உள்ள 67 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் படிக்கிற மாணவர்களுக்கு 58 விடுதிகளே உள்ளன. மாணவிகளுக்கு 50 விடுதிகள் மட்டுமே உள்ளன. ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான மாணவர்களுக்கு 108 விடுதிகளே உள்ளன. இவற்றில் 9,929 பேருக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகத்தில் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மொத்தம் 9 விடுதிகளே உள்ளன. இவற்றில் ராயபுரத்தில் உள்ள அரசு முதுகலை மாணவர் விடுதிக்கு மட்டுமே தனிக்கட்டிடம் உள்ளது. மற்ற 8 விடுதிகளும் இளங்கலை படிக்கிற விடுதி மாணவர்களோடு இணைக்கப்பட்டுள்ளது. பெருகிவரும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய விடுதிகள் உருவாக்கப்படவில்லை.
சென்னையில் மாநிலக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இங்கு படிக்கிற ஒட்டுமொத்த மாணவர்களில் 70.7 விழுக்காட்டினர்  கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும் பகுதியினர் தலித் மாணவர்கள். இந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்னையில் போதுமான விடுதிகள் இல்லை. ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர் விடுதிகள் வெறும் 7 மட்டுமே உள்ளன. இவற்றில், அரசின் கணக்குப்படி, 1,722 மாணவர்கள் தங்குவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதியில் இடம் கிடைக்காத ஏழை மாணவர்கள், வெளி மாணவர்களாக 1,200 பேர் இந்த 7 விடுதிகளில் தங்கியுள்ளனர். 15-10 அடி கொண்ட ஒரு அறையில் கிட்டத்தட்ட 20ல் இருந்து 25 மாணவர்கள் தங்கியுள்ளனர். சென்னை ராயபுரத்தில் உள்ள மாணவியர் விடுதியில் இளங்கலை, முதுகலை, ஐடிஐ மாணவியர் என 800 பேர் தங்கியுள்ளனர். இங்கு போதுமான குடிநீர் வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகள் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இவை மாட்டுத்தொழுவத்தைவிட கேவலமான நிலையில் உள்ளன. இந்த லட்சணத்தில்தான், சிறப்புக்கூறு திட்ட நிதியான 3,828 கோடி ரூபாயில் வெறும் 22 கோடியை உயர்கல்விக்கு ஒதுக்குகிறது தமிழக அரசு. தலித்துகளும், பழங்குடி மக்களும் உயர்கல்வி பெறக்கூடாது என்கிற நோக்கத்திலேயே ஆட்சியாளர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இப்படி சிறப்பு கூறு திட்டத்தை கூர்மையாக பிய்த்து அலசி ஆய்ந்திருக்கிறது இந்நூல். இதில் வெளிப்படும் உண்மையின் சூட்டினை தேர்தல் களத்தில் நிற்கும் ஊழியர்கள் சிறிதளவேனும் உணர்ந்து மக்களிடம் வெளிப்படுத்தினால் அதன் பலன் பன்மடங்கு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வசூல் ராஜா: மக்கள் நல்வாழ்வை சீரழித்த திமுக விஜயராகவன் எழுதிய 16 பக்க சிறு பிரசுரம் தமிழக நல்வாழ்வுத்துறை குறித்த சிடி-கேன் ரிப்போர்ட் என்றால் மிகையல்ல. அனைவருக்கும் நல்வாழ்வு என்ற இலக்குடன் சுதந்திர இந்தியா தனது பயணத்தை ஆரம்பித்தது. பணம் இல்லை என்ற காரணத்திற்காக யாருக்கும் மருத்துவ சேவை மறுக்கப்படக் கூடாது என்று 1946ல் அமைக்கப்பட்ட போரே கமிட்டியின் பரிந்துரைதான் இந்த இலக்கை தீர்மானிப்பதற்கு உதவிகரமாக இருந்தது. அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை என்ற கொள்கையே சுதந்திர இந்தியாவின் கொள்கையாக இருந்தது. இதை அமல்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வு என்ற பொறுப்பு மாநில அரசின் அதிகாரப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டது. காலம் செல்லச் செல்ல இக் கொள்கையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, 1990களின் ஆரம்பத்திலிருந்து அமல்படுத்தி வரும் உலகமயமாக்கல் கொள்கைகளின் பலனாக, இலவச மருத்துவ சேவை என்பது அரசின் கடமை என்ற நிர்வாகவியல் கோட்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது.
இப்படி கொள்கைத் தடுமாற்றத்தை வலுவாக எடுத்துரைத்திருக்கிற இந்நூல் எவ்வாறு தமிழக அரசு மக்களின் நல்வாழ்வை தனியாருக்குக் காவுக் கொடுக்கிறது என்பதை விளக்கமாக அலசி இருக்கிறது. பெரும் சாதனையாகப் பேசப்படும் உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் எப்படி ஊனமுடையதாகவும் மக்களுக்கு பயன்தராததாகவும் உள்ளது என்பதை நுட்பமான ஆய்ந்திருக்கிறது.
குறிப்பிட்ட 51 வகை நோய்களில், மருத்துவ நோய்கள் (ஆநனஉயட டைநேளள) பெருமளவிற்கு விடுபட்டுள்ளன. சாதாரண வைர நோய்களுக்கு (டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை) மலேரியா, எலிஜூரம் (டுநயீவடி) கூக்ஷ போன்ற எந்த தொற்று நோயும் (சமீபத்திய பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட) இதில் சேர்க்கப்படவில்லை. இதுபோன்ற நோய்களால் இறப்பவர் எண்ணிக்கை, பட்டியலிடப்பட்டுள்ள எல்லா அறுவை சிகிச்சை நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகம். இதைத்தவிர தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நோய்களான சர்க்கரை வியாதி, இரத்த அழுத்த நோய் ஆகியவற்றிற்கான சிகிச்சையை இத்திட்டத்தின் மூலம் பெற முடியாது.
இந்த 51 நோய்களுக்கும் சிகிச்சைக்கான செலவு ஒரு லட்சத்திற்குள் முடிந்துவிடும் என்ற உத்தரவாதமும் கிடையாது. ஒரு லட்சத்திற்கு மேல் ஆகும் கூடுதல் தொகையை நோயாளி தனது சொந்த பணத்திலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். அதற்கான வசதி ஆண்டுக்கு 72000 ரூபாய் வருமானம் ஈட்டும் குடும்பத்தில் எப்படி இருக்க முடியும்? சிகிச்சை பெறும் ஒரு சிலர் அரசை வாழ்த்துவதை ஊடகங்களில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய நடவடிக்கைகள் இத்திட்டத்தின் வெற்றி என்ற தோற்றத்தை உருவாக்க உதவுமே தவிர உண்மையான வெற்றியை இது பிரதிபலிக்காது. சிகிச்சையையும் துவக்கி நடுவிலும் கைவிட முடியாமல் கடனாளியாகும் நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். ஒரு குடும்பத்தில் சராசரியாக 5 பேர் என்று கணக்கிட்டால் (கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் ஒரு குழந்தை) கூட உயிர்காக்கும் உயர் சிகிச்சை தேவைப்படுகிறவர் நான்கு ஆண்டுகளில் ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக இத்திட்டத்தின் கீழ் பலனடைய முடியாது. இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலைமைகளில்  உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்குள் செய்துவிட முடியும் என்பது சற்று கடினமான விஷயம்தான். இத்திட்டம் ஜூலை 2009ல் அமலுக்கு வந்தது. 2012ஆம் ஆண்டு சிகிச்சை பெறுபவர் அன்றுள்ள விலைவாசி நிலைமையில், இத்திட்டம் யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற நிலையை அடைந்துவிடும்.
இப்படி இத்திட்டத்தை அம்பலப்படுத்துவதுடன் மீண்டும் மலேரியா, யானைக் கால், டெங்கு இவற்றுடன் சிக்குன்குனியா, பன்றிக்காய்ச்சல் என பரவும் தொற்றுநோய்களுக்கு எந்த முறையாக சிகிச்சையும் கிடைக்கவில்லை என்கிற எதார்த்தத்தை இந்நூல் குறிப்பிடுகிறது. பணம் இருப்பவனுக்கு நட்சத்திர வைத்தியம். ஏழைக்கு இல்லை என்கிற சுடும் உண்மையை ஆழமாய் புரிய வைக்கிறது இந்நூல். இதன் சிறு துளியாவது தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிரொலிக்குமானால் அது ஆரோக்கியமான புதிய மாற்றத்திற்கு தொடக்கமாகும்.
இப்படி நான்கு பிரசுரங்களும் தேர்தல் களத்திற்கான பிரச்சார வாகனமாக மட்டும் அல்லாமல்; தேர்தலுக்குப் பின் இந்தப் பிரச்சனைகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் தீர்வு வழங்குவதற்கான சாவியாகவும் உள்ளது. மேலும் இவை இப்போது மூச்சைப் பிடித்துக்கொண்டு தேர்தல் களத்தில் பேசுவதற்காக மட்டுமல்ல; உண்மையான மாற்றைத் தேடிக் கண்டடைய ஆரோக்கியமான விவாதத்திற்கு அடிப்படையாகவும் உள்ளது. அரசியல் ஊழியர்கள் யாராக இருப்பினும் அவர்கள் படிக்க வேண்டிய கையேடாகும் இவை.

--