பண்டிகைகள் புத்தாக்கம் பெற வேண்டி..

Posted by அகத்தீ Labels:

பண்டிகைகள் மனிதர்களின் கூட்டுவாழ்க்கையின் வெளிப்பாடு. இயல்பாய் முகிழ்த்தவை. பருவகாலமாறுதல்கள்,வேட்டையில்வெற்றி,விளைச்சல்,மகப்பேறு,துக்கம்,மகிழ்ச்சி,என எல்லாவற்றையும் அன்றைய மனிதர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அவையே காலகதியில் பண்டிகைகளாக தோற்றம் கொண்டன. பண்ட உற்பத்தி பெருகப் பெருக விற்பனை யுத்திகள் தேவைப்பட்டன. பண்டிகைகள் அதற்குக் களமாயின. பண மறுசுழற்சிக்கு பண்டிகைகள் வாகனமாயின. பண்டிகைகளின் கூட்டுக்கொண்டாட்டம் என்பது பண்டங்களோடு பிணைக்கப்பட்டது. வர்த்தக நோக்கை நிறைவேற்றாத பண்டிகைகள் மெல்ல விடை பெறலாயின. புதிய பண்டிகைகள் வலம்வரலாயின.

சமயங்கள் தோற்றிவிக்கப்பட்டபோது அவை மக்கள் மனதில் எளிதில் சிம்மாசனம் போட்டு அமர பண்பாட்டுநிகழ்வுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. பண்டிகைகளை சமயவாதிகள் தன்வயப்படுத்தலானார்கள் .பண்டிகைகள் மீது பொய்மைப்புராணங்கள் திணிக்கப்பட்டன.. பண்டிகைகள் சடங்குகளாக உருமாற்றப்பட்டன. வர்த்தகநோக்கும் உடன்சேர பண்டிகைகள் தன் இயல்பில் திரியலாயிற்று. பண்டவிற்பனையும் பணசுழற்சியுமே பண்டிகைகளின் இருத்தலை உறுதிசெய்வன ஆயிற்று. இதன் பொருட்டு புவிசார் சூழலில் உருவான பல விழாக்கள் பண்டிகைகள் காலதேச எல்லைகளை ஒருபுறம் தாண்டின. மறுபுறம் சாதி,மத,பிரதேச,இன,தேச வரப்புகள் பண்டிகைக்குள்ளும் வேலிகள் கட்டின. ஆச்சாரங்கள் மேலோங்க சகோதரத்துவம் பலியிடப்பட்டது.

மிக அண்மையில் யுத்தத்திற்கு எதிராக உருவமைக்கப்பட்ட காதலர்தினம் கூட வர்த்தகநெடியில் தீய்ந்து கருகலாயிற்று. தனிமனிதரின் பிறந்த நாள், திருமணநாள் கொண்டாட்டங்களும் சமூகபடிநிலைக்கு ஏற்ப உயர்வுதாழ்வை பறைசாற்றலாயின. மனிதகுல மகிழ்வுக்காக முகிழ்த்த பண்டிகைகள் சடங்காக,சுமையாக,பணத்திமிரின் சாட்சியாக பலவிதமாக சிதைந்தாலும் அவற்றின் தேவையை மனிதகுலம் இழந்துவிடவில்லை. எனவே தொடர்கின்றன. இனியும் தொடரும். இதன் இடத்தை இன்னொன்று பிடிக்காத வரை;ஆயிரம் குறைகளை அறிவு கூறினாலும் பொதுபுத்தியில் உறைந்துபோயுள்ள பண்டிகைக்கொண்டாட்டங்கள் நிலைக்கும். நீடிக்கும். ஆகவே பண்டிகைகளை புறக்கணிப்பதல்ல புத்தாக்கம் செய்வதே நம்பணி. இது சுலபமல்ல...ஆயினும் முயல்வோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்.

-சு.பொ.அகத்தியலிங்கம்

0 comments :

Post a Comment