இவனும் திருடன் அவனும் திருடன் இங்கே எவனை நம்புவது?

Posted by அகத்தீ Labels:

 
 
இவனும் திருடன் அவனும் திருடன் 
இங்கே எவனை நம்புவது?
 
 
“இவனும் திருடன்.அவனும் திருடன். எவனை நம்புவது?” பஸ்ஸில், ரயிலில், டீக் கடையில், குழாயடியில் எங்கும் எதிரொலிக் கும் விரக்திப் பெருமூச்சு இதுவே. என்ன நடக் கிறது நாட்டில்?சாதாரணக் குடிமகன் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி நிற்கிறான். புலம்பித் தவிக்கிறான்.விரக்தி பரவப்பரவ செயல் வேகம் குறை யும். முடங்கும். அதைத்தான் ஆட்சியாளர் கள் விரும்புகின்றனர்.சுரண்டும் கூட்டத் துக்கு அதுவே கொண்டாட்டம்.அதைத்தான் விரும் புகின்றனர். ஆகப் பெரும்பாலான ஊடகங்களும் அந்தத் திருப்பணியைத்தான் பரபரப்பாகச் செய்து காசு பண்ணிக் கொண் டிருக்கின்றன.

மாறாக, அதிருப்தி நெருப்பைப் பற்ற வைத்து அதில் போராட்ட எரிமலையைக் குமுறி எழச்செய்வதே காலத்தின் தேவை யாகும். ஆம், இன்று விலையேற்றம், மின் வெட்டு, விவசாய நெருக்கடி என கழுத்தை நெரிக்கும் பிரச்சனைகள் ஒருபுறம். மறுபுறம், லட்சம் கோடிகளாய் படையெடுக்கும் ஊழல் கரையான்கள். அதுவும் ஒரு இடத்தில் கரை யான் எனில் மருந்து அடிக்கலாம். நெருப்பால் பொசுக்கலாம்.வீடு முழுக்க கரையான் எனில், என்ன செய்வது?


" ஆற்றைக் காணோம்
குளத்தைக் காணோம்
வயலைக் காணோம்
ஏரியைக் காணோம்
மலையைக் காணோம்
பாறையைக் காணோம்
 சுரங்கத்தைக் காணோம்

மாயமல்ல..மந்திரமல்ல..
யாரோ செய்த தந்திரமல்ல..
உலகமயத்தின் உள்ளூர் பலி
ஊரை அடித்து உலையில் போட
உலகவங்கி காட்டிய வழி..

இன்னும் இமைகள் மூடிக்கிடந்தால்
ஒரு நாள் காலை செய்திவரும்
இந்திய நாட்டையே மொத்தக் குத்தகையாய்
பன்னாட்டு திமிங்கலம் விழுங்கியதென்று..
அமெரிக்காவின் அடிமை தீபகற்பமாய்
இந்திய நாடு கைமாறியதென்று..

அப்போதும் நாம் பதட்டமின்றி..
பழியை பாகிஸ்தான் மீது தூக்கிப் போட்டு
சாதி, மத, இன சண்டையில் மூர்க்கமாகி
நிழல் சண்டை நடத்திக்கொண்டிருப்போம்
நிஜமான எதிரியை இனம் காணாமலே..
மெய்யான தோழருடன் அணிசேராமலே.."


இதுதானே இன்றைய எதார்த்தம்?
இதற்கு என்ன காரணம்?

ஊழலைப் பற்றி பேச இன்று யாருக்கு யோக்கியதை இருக்கிறது?முந்திரா ஊழல், நகர்வாலா ஊழல், மாருதி ஊழல், போபர்ஸ் ஊழல், முத்திரைத் தாள் மோசடி, ஆதர்ஸ் ஊழல், காமென் வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜிஸ்பெக்ட் ரம் ஊழல், இஸ்ரோ ஊழல், கோதாவரிப் படுகை ஊழல், விமான நிலைய ஊழல், நிலக் கரி ஊழல் என எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் காங்கிரஸ் கட்சியை இனியும் நம்ப முடியுமா?

சவபெட்டி ஊழல்,ஹவாலா ஊழல், நாடா ளுமன்றத்தில் கேள்வி கேட்க ஊழல்,சுரங்க ஊழல்..அடடா..கர்நாடகாவில் பி.ஜே.பி என் றால் சுரங்கத்திருடன் கட்சி - பெல்லாரி ஜனார்த்தனரெட்டி பிரதர்ஸ் என்றே பொருள் அல்லவா?இப்போது படையெடுக் கும் ஊழல் அனைத்தின் மூலவேர் பா.ஜே.க ஆட்சியிலும் ஆழமாய் ஊடுருவி நின்றதே. 2ஜி ஊழலில் கூட அருண்ஷோரி அமைச் சராக இருந்த போது ஐம்பதினாயிரம் கோடி குறித்து தணிக்கைக் குழு கோடிட்டதே. ஏன் அவரது சகஅமைச்சர் ஜெக்மோகன் பகிரங்கமாக இதனைக் கூறிய தால் அவர் பதவி பறிக்கப்பட்டு காஷ்மீர் ஆளுநராக தூக்கி எறியப்பட்டு வாயடைக்கப்பட்டாரே! அங்கு அவர் காஷ்மீர் சிக்கலை மேலும் மதவெறியோடு மேலும் சிக்கலாக்கியது தனிச்செய்தி. ஊழலைப் பற்றிப் பேசுகிற தார் மீக உரிமை பாஜக -வுக்கு கூட கிடையாது.

தி.மு.க என்றாலே ஊழல் கட்சி என்றே மக்கள் கருதுகிறார்கள். இதற்கும் மேல் சொல்லவும் வேண்டுமோ! அஇஅதிமுக எந்த விதத்திலும் நேர்மையானதல்ல. வேண்டுமா னால் நீதியை விலைக்கு வாங்கத்தெரிந்தவர் என்று சொல்லலாம். டான்ஸி உதாரணம் ஒன்று போதுமே.பெங்களூரில் நீதிபடும்பாடு சொல்லவும் வேண்டுமோ?கிரானைட் மோசடி யில் இவ்விரு கட்சியினருக்கும் தொடர்பு உண்டென்பதை குழந்தையும் அறியுமே!

இவற்றை எல்லாம் விட மிக முக்கியமா னது, ஊழலை பெரிதும் ஊட்டிவளர்க்கும் உலக மயம், தாராளமயம், தனியார்மயம் கொள்கை களை ஆதரிப்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டியன்றோ நடக்கிறது. கொள்ளை அடிக்க வாசலைத் திறந்து வைத்துவிட்டு, காவலர்களை வாபஸ் வாங்கிவிட்டு,கூட இருந்து பங்கு வாங்கிக் கொள்ளுவதுதானே இவர்கள் ஆட்சியில் நடந்தது. நடக்கிறது. இதில் காங்கிரஸ் என்ன, பா.ஜ.க.என்ன, திமுக என்ன, அதிமுக என்ன, எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.

அன்னா ஹசாரே குழுகூட மக்கள் ஆத ரவை மெல்ல மெல்ல இழந்து விட்டதே..ஊழல் ஒழிப்பின் கதி அவ்வளவுதானா என முணு முணுப்போர்கள் உண்டு.ஊழலின் ஊற்றுக் கண்ணான கொள்கைகளை அடையாளம் காணாமல்-காட்டாமல் நிழல் சண்டை போட்ட அன்னா குழுவினர் தோற்றதில் வியப்பொன் றுமில்லை. கறுப்புப்பண சாமியார் பாபா ராம் தேவ் பற்றி விளக்கமும் வேண்டுமோ என்ன!

அதேநேரம் இந்த கொள்கைகளை எதிர்த்து நிற்பது யார்? மாற்று கொள்கைகளை முன்வைப்பது யார்? இடதுசாரிகளே.அவர்கள் குரல் சன்னமாக ஒலித்தாலும் சரியாக ஒலிக் கிறது.அவர்கள் பலம் குறைவாக இருப்பினும் திசைவழி மிகச்சரியாக இருக்கிறது. ஆனால் அந்தக் குரலை இருட்டடிப்பு செய்வதிலேயே கார்ப்பரேட் ஊடகங்கள் முனைப்புக் காட்டு கின்றன.இந்தச் சூழல்தான் மக்கள் மனதில் விரக்தி சூழக் காரணமாகிறது.இப்போது இடதுசாரிகள் கடமை அதிகரிக்கிறது. சவா லாகிறது.

அவருக்கு மாற்று இவரல்ல. இவருக்கு மாற்று அவரல்ல. தேசத்துக்குத் தேவை கொள்கை மாற்று. அதை கெட்டியாகப் பற்றி நிற்பவர்கள் இடதுசாரிகளே.இதை உரக்கச் சொல்ல இதைவிட உகந்த நேரம் எது? தனி நபர் தாக்குதலாகவே அரசியலைப் பேசிப் பேசி மக்களை மனச்சோர்வில் முடங்கிப் போகச் செய்கிற ஊடகங்கள் நடுவில், கொள்கைவழி செய்திகளை விமர்சனங்களை முன்வைக்கும் தீக்கதிரை வீடுவீடாகக் கொண்டு சேர்க்கா மல் மக்களை நொந்துப் பயனில்லை.

சு.பொ.அகத்தியலிங்கம்.


வாசகர்கள் கருத்து

ஒரே பாடல்... உன்னை அழைக்கும்

Posted by அகத்தீ Labels:
ஒரே பாடல்... 
உன்னை 
அழைக்கும்.........

சு.பொ.அகத்தியலிங்கம்


“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்” -பொற்காலத் திரை இசைப்பாடலாய் இவ்வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனம் உருகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும்,இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த வரிகளைப் பாடுவதாகக் கற்பனை செய்து பாருங்கள்...

அட, ஆபாசமாக இருக்கிறதே என முகத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இது ஆபாசத்திற்கு அப்பாற் பட்டதப்பா... நடப்பு எதார்த்தம் அது என்பதை உணரப்பா.. சும்மா சொல்ல வில்லை. இரண்டு செய்திகளை ஒரே நேரத் தில் சேர்த்துப்படித்தால், சில உண்மைகள் விளங்கும்.

முதல் செய்தி ஜூலை 15 ஆம் தேதி வெளியானது. கடினமான பொருளாதார சீர் திருத்தங்களை இந்தியா நிறைவேற்ற வேண்டி யது அவசியம் என்று பாரக் ஒபாமா வலியு றுத்தியுள்ளார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியப் பொருளாதாரம், உலகப் பொரு ளாதாரம், இந்தியா-பாகிஸ்தான் உறவு உள் ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பாக ஒபாமா விரிவான பதில் அளித்தார்.

அப்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும் பேசினார். “இந்தியா சில்லரை வர்த்தகத்தில் பல வெளிநாட்டு முதலீடுகளை தடை செய் துள்ளது. இது கவலை தரும் விஷயமாகும்.

இந்தியாவில் முதலீடு செய்வது கடினமாக இருப்பதாக அமெரிக்க வணிக நிறுவனத் தினர் எங்களிடம் தெரிவித்தனர். அதேசமயம் அந்நிய முதலீடு தொடர்ந்தால்தான் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு பெருகு வதுடன், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்” என்றார்.

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார சிக்கலுக்கான தீர்வு குறித்து கூறுகையில், “தீர்வுகளை தெரிவிப்பதற்கு இந்தியா அமெரிக்காவில் இல்லை. அவர்களின் பொருளாதார எதிர்கால வளர்ச்சி குறித்து இந்தியர்கள்தான் முடிவு செய்யவேண்டும். உலக பொருளாதாரத்தின் என்ஜினாக இந்திய தயாரிப்புகள் இருக்கின்றன.மேலும் சமீபத்திய சவால்களுக்கும் மத்தியில் இந்திய பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சி கண்டுள் ளது. இந்தியா எடுக்கும் பொருளாதார சீர் திருத்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடரும்” என்றார்.

இரண்டாவது செய்தி நமது பிரதமர் மன்மோகன்சிங் சுதந்திரதினத்தன்று செங்கோட் டையில் கொடியேற்றிவைத்து உரையாற்றி யது; தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வெற்றியை நோக்கி வேகமாக முன்னேற வேண்டும். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வந்த நமது நாடு, இப்போது பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது. பல்வேறு விஷ யங்களில் அரசியல் கருத்தொற்றுமை ஏற்படா ததே இதற்கு முக்கியக் காரணம்.வளர்ச்சியை எட்டுவோம்: நமது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் எவை என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண் டிய நேரம் இது. இதில் தேசப் பாதுகாப்பும் உள்ளடங்கியுள்ளது. சர்வதேச பொருளா தாரத்தில் ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை யும் நம்மை ஒருவகையில் பாதித்துள்ளது. ஆனால் இதே சூழ்நிலை தொடர்ந்து நீடிக் காது. சற்று சிறப்பாக செயல்படுவதன் மூலம் நாம் வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.

தனித்தனியாகப் பார்த்தால் இரண்டும் தேன் தடவிய பேச்சுகள்.ராகம் தாளம் பல்லவி வேறு வேறு போல் தொனிக்கும்.இரண்டும் ஒரே பாடல்.ஒரே ராகம்.உற்றுக் கேளுங்கள் புலப்படும்.

ஐ.மு.கூட்டணி-1 ஆட்சியில் இருக்கும் போது நாடு வேகமாக நடைபோட பிரதமர் மன்மோகன் சிங் விரும்பினாலும் செய்யமுடிய வில்லை, ஏனெனில் இடதுசாரிகள் கையைப் பிடிக்கிறார்கள், கழுத்தை நெரிக்கிறார்கள் என ஊடகங்கள் ஊளையிட்டன. நடுநிலை அறிவு ஜீவிகள் என்ற போர்வையில் சுரண் டல் வர்க்கக் காவலர்கள் கூப்பாடு போட்டனர்.

விஷயம் என்ன? பன்னாட்டு நிறுவனங்க ளின் லாபவெறிக்காக பொதுத்துறையைக் கூறுபோடுவதை, இந்தியச் சந்தையை அவர் கள் இஷ்டம் போல் திறந்து விடுவதை, சட்டத்தையும் நெறிமுறைகளையும் அவர்கள் தேவைக்கு ஏற்ப வளைப்பதையும் இடதுசாரி கள் எதிர்த்தனர். அதனால் இடதுசாரிகள் மீது அவதூறு மழை பொழிந்தனர்.

தேர்தல் வந்தது. இடதுசாரிகள் தயவு இல்லாமல் சில மாநிலக்கட்சிகள் ஆதரவோடு ஐ.மு.கூட்டணி-2 ஆட்சி அமைந்தது. அமெ ரிக்க நலனுக்காகவே இந்தியப் பொருளா தாரத் திட்ட முடிவுகள் என மன்மோகன் அரசு அமெரிக்க எஜமான விசுவாசத்தோடு செயல்படலாயிற்று.ஆனால் ஏறும் விலைவா சியின் சுமை.உள்ளூர் தொழில்,வியாபார நசிவு...... இத்துடன் சில்லரை வர்த்தகத்திலும் அந்நியர் வர ரத்தினக் கம்பளம் விரிப்பு என வந்தபோது மாநிலக் கட்சிகள் தயங்கின. மக் களை நாளை சந்தித்தாக வேண்டுமே.
அக் கட்சிகள் யோசிக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. அத்துடன் தங்கள் அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலுக்காக மம்தா போன்றவர்கள் ஆடுகிற நாடகம். இவற்றால் மன்மோகன் சமா ளித்து அடுத்த அடியை எடுத்துவைக்க வேண்டிய கட்டாயம். பொறுக்குமா ஏகாதி பத்தியத்துக்கு?

மன்மோகன் செயல் வேகம் இல்லாதவர் என ஒரு அமெரிக்க ஏடு விமர்சனம் செய்தது. அதையே வேறு வார்த்தைகளில் ஒபாமா சொன்னார். “அடிமையே..எங்கள் சவுக்குக்கு நீங்கள் அடிபணியும் வேகம் போதாது. இன் னும் இன்னும் வேகமாய் சரணாகதி ஆவாய்” என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

அவர்கள் சொல்லி ஒரு மாதம் ஆக வில்லை, எஜமான விசுவாசத்தோடு மன் மோகன் கருத்தொற்றுமை என்கிற நுட்பமான சொல்லைப் பயன்படுத்தி கூட்டணிக்கட்சி களையும் ஆதரிக்கும் கட்சிகளையும் இடது சாரிகள் தவிர்த்த மற்றவர்களையும் சரணா கதிப் பாதைக்கு வருமாறு இனிக்கப்பேசி அழைக்கிறார். கடினமான நடவடிக்கைக்கு இந்தியா தயாராக வேண்டும் என ஒபாமா கூறுவதும், கருத்தொற்றுமையோடு ஒத்து ழைக்கவேண்டும் என மன்மோகன் கூறுவதும் ஒன்றுதான்.

பெட்ரோல், டீசல் விலையை ஏற்று, சமை யல் எரிவாயு விலையை மேலும் மேலும் ஏற் றிக்கொண்டே இரு, சில்லறை வர்த்தகத்தில் அந்நியர் இஷ்டம் போல் வேட்டையாட அனுமதி, அமெரிக்க நலனுக்காக இந்திய மக்கள் நலனைக் காவுகொடு; - இவைதான் ஒபாமா கூறும் கடின நடவடிக்கை; இதற்கு எல்லோரும் ஒப்புக்கொண்டு வெண்சாமரம் வீச வரவேண்டும் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் “கருத்தொற்றுமை வேண்டும்” என்கிறார் மன்மோகன்.

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் பாடிய பாடலை அசை போடுங்கள்.. இரு வரையும் கற்பனை செய்யுங்கள்.. அருவருப் பாகத் தோன்றாது. கோபம் வரும்.ஆவேசம் எழும்.

மொய்:வட்டியில்லாக் கடனா?

Posted by அகத்தீ Labels:


 மொய்:வட்டியில்லாக் கடனா?
அர்த்தமிழக்கும் திருமண வரவேற்புகள்

சு.பொ.அகத்தியலிங்கம்


பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான தனி மனித வாழ்வில்
பெரும்பாலானோருக்குத் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாகிறது. சமூக வாழ்வில்திரு மணத்தின் முன் உள்ள சவால்கள் அநேகம். சாதி, கவுரவம், பணம், கர்வம்,மதம், மமதை என் னென்னவோ, தடைகள். விரும்பியபடி திருமணம் கைகூடுவதே பெரும்பாக்கியம். அந்த மகிழ்ச் சிக்கு ஈடேதும் கிடையாது. உற்றார், உறவினர்,நண்பர்கள் புடை சூழ - அவர்களின் வாழ்த் தொலி, கிண்டல், சிரிப்பு, ஆரவாரம்இவற்றுக்கி டையே கைத்தலம் பற்றக் கனாக் காணா தார் யார்?

முன்பெல்லாம் ஏழு நாட்களுக்குத் திருணச் சடங்குகள் தொடர்ந்ததாய்ப்
பெரியவர்கள் சொல் லிக் கேட்டிருக்கிறோம். அது படிப்படியே சுருங்கி இரண்டு
நாட்களாகி, இப்போது ஒரு நாளாக மாறிவிட்டது. நல்லதுதான். தேவையற்ற பணச்செலவு குறைக்கப்பட்டிருக்கிறது. சம்பந் திச் சண்டை, பங்காளிச் சண்டை எனஇரவு முழுவதும் வாய்ச்சண்டை நடத்துவது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.அதுவும் நல்லதே.

சென்னை போன்ற நகரங்களில் முதல்நாள் திருமண வரவேற்பு என்றும், மறுநாள்காலை திருமணம் என்றும் புதிய வழக்கம் யாருடைய உத்தரவும் உபதேசமும்இல்லாமல் அமலுக்கு வந்துவிட்டது. சாதிரம் ஏற்கிறதோ இல் லையோ, சமுதாயம்அதை ஏற்றுக் கொண்டது. இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் அவரவர் வந்துபோகவசதி கருதி இப்பழக்கம் வந்திருக் கிறது. திருமண மண்டபங்களின் அதீத வாடகையும் இவ்வாறு தீர்மானிக்க நிர்ப்பந்திருக்கிறது. எப்படியோ ஏற்பட்டுள்ளமாற்றம் நல்லதே. சடங்குகளுக்குள் மனித குலம் சிறைப்பட முடியாது.தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப புதிய பழக்கவழக்கங்களை வரிந்து கொள்வது அவசியமே.

அதே சமயம் திருமணங்களுக்கு வருகை தருவது வெறும் சடங்காகலாமா? அப்படி வருவதும், மொய் அல்லது அன்பளிப்பை வட்டி யில்லாக் கடன் எனக் கருதுவதும்நெஞ்சில் உறுத்தத்தான் செய்கிறது.

பொதுவாக இப்போது சென்னையில் மாலை நேர திருமண வரவேற்பு எப்படி நடக்கிறதுஎன்று பார்த்தால் அதன் போலித்தனமும் அதனை நிர்ப்பந்திக்கும் வாழ்க்கைச்சூழலும் நிஜத்தைத் தரிசிக்க வைக்கும்.

அலுவலக நண்பர்களும் பெரும்பாலான உறவினர்களும் மாலை 7 மணிக்குள் மண்டபத்துக்கு வந்துவிடுகின்றனர். பியூட்டி பார்லருக்குப் போன மணப்பெண்ணும்மணமகனும் மண்ட பத்தை அடைய எட்டு அல்லது எட்டரை மணி யாகி விடுகிறது.அலுவலகத்திலிருந்து வந்த பெண்கள் பதைக்கின்றனர். சென்னை போன்ற நகரில் பஸ் பிடித்து வீடு போய்ச் சேரும் கஷ்டம் பட்டால்தான் புரியும்.எட்டுமணிக்குள் புறப்பட் டால்தான் 9.30 மணிக்காவது போய்ச் சேர முடியும்.குழந்தைகள் பசியோடு இருப்பார்கள். சமையல் வேலை காத்திருக்கும். இரவு11.30 மணிக்குள்ளாவது தூங்கினால்தான் மறுநாள் காலை 4.30 மணிக்கு மனிதஇயந்திரமாய் ஓட் டத்தைத் தொடங்க முடியும். பெண்கள் என்ன செய்வார்கள்?அவர்கள் பதைப்பை வார்த்தை களும் கண்களும் காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த மாதிரி நேரங்களில் “ டிரபிள் ஷூட்டர் கள் ”- அதாவது பிரச்சனைக்கு
ரெடிமேடு தீர்வு வைத்திருப்பவர்கள் - பிரசன்னமாவார்கள். யாரு “ ப்ரீபெய்டு”,
யாரு போட்பெய்டு என தமாஷாகப் பேசுவதுபோல் வழிகாட்டுவார்கள்.

”ப்ரீபெய்டு” எனில் மொய் எழுதிய பின்னரே சாப்பிடப் போவது; போஸ்ட் பெய்டுஎனில் சாப்பிட்டு விட்டு மொய் எழுதுவது! ஒன்றிரண்டு நெருக்கமான
நண்பர்களைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் போட் பெய்டுக்குத் தாவிவிடு
வார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வந்தாலும் பெரும்பாலும் பெண்ணும்
மாப்பிளையும் வந் திருக்க மாட்டார்கள். அலங்காரம் முடிந்திருக் காது.
ஒவ்வொருவராக மெல்ல நழுவுவார்கள். அவர்கள் கொண்டு வந்த மொய் கவர், கிஃப்ட்பாக்கெட் ஆகியவை அடுத்தவர் கைக்குப் போகும். பெண்ணும் மாப்பிளையும் மேடையேறும் போது நான்கைந்து பேர் வந்து மொத்த கவர் களையும் கிஃப்ட்பாக்ட்டுகளையும் கொடுப் பதும்; பெண்ணும் மாப்பிள்ளையும் தாமத மானதற் காகஅசடு வழிவதும் இப்போது பெரும்பாலான திருமண வரவேற்புகளில் காட்சியாகிறது.

உறவுகள் நட்புகள் சந்திக்க, உரையாட, கருத்துகள் பரிமாற, இழந்த
சொந்தங்களைப் புதுப் பிக்க என பயன்பட்ட திருமண வரவேற்பு அதன்
உள்ளடக்கத்தை மெல்ல மெல்ல இழந்து வருகின் றதோ? காதைக் கிழிக்கும் இசைநிகழ்ச்சிகள் கொஞ்ச நஞ்ச உரையாடலையும் முடக்கி விடுகிறதே!

இப்படியே போனால் அடுத்து என்ன செய்ய லாம்? மண்டப வாசலில் மணமகன் மணமகள்என இரண்டு பெரிய பெட்டிகள் வைத்துவிடலாம். வரு கிறவர்கள் மொய்ப்பணம்கவரையும் பரிசுப் பொருள் பார்சலையும் அதில் போட்டுவிட்டு நேராகஉணவுக்கூடம் சென்று சாப்பிட்டுவிட்டுச் சென்று விடலாம். மணமக்கள் தங்கள்வரவேற்புப் படங் களை உற்றார் உறவினரின் கைப்பேசிகளுக்கும், மின்னஞ்சல்முகவரிகளுக்கும் அனுப்பி விடலாம்! காலப்போக்கில் இப்படியும் ஆகலாம்தானே!

அன்பின் குதூகலம் மிக்க திருமண நிகழ்வு வெறும் மொய், பரிசு, சாப்பாடு என
சுருங்குவது உங் கள் மனதை வருத்தவில்லையா? ஏன் இந்த இயந் திரத்தனமானவரவேற்பு?

அதிலும் மொய் விவகாரம் ஒரு பெரிய சமூக நோயாகிவிட்டது. தனக்கு யார் யார்எவ்வளவு மொய் செய்தார்கள், என்னென்ன பரிசு தந்தார்கள் என ஒரு
நோட்புக்கில் எழுதி வைப்பதும்; அவர்கள் வீட்டு விசேஷத்தின்போது அதை அதேமதிப்பில் திருப்பிச் செலுத்துவதும்; கேட்டால் மொய் என்பதே வட்டியில்லாக்கடன்தான் என்று வியாக்கியானம் செய்வது காலங்காலமாக நடக்கிறது. சிலசமூகத்த வரிடையே நான் உனக்கு அவ்வளவு செய்தேன், நீ இவ்வளவுதானேசெய்கிறாய்,என சண்டை கூட நடக்கும். நகரங்களில் அந்தச் சண்டை குறைவு.ஆயினும் பரிசு என்பதை வட்டியில்லாக் கடன் என்பது சரியா? அவரவர் சக்திக்குஏற்ப அன்பை வெளிப்படுத்தும் விதமாகக் கொடுப்பதுதானே பரிசு? அதைவட்டியில்லாக் கடனாக மாற்றலாமா?

குசேலன் கொண்டு வந்த அவலை கிருஷ் ணன் விரும்பி ஏற்றதாகக் கதை சொல்லிமகிழ்கிற வர்கள், ஏழை தரும் எளிய பரிசு கண்டு எள்ளி நகை யாடாமல்இருக்கிறார்களா? இவங்க இதைத் தர லைன்னு யாரு அழுதா, என்று வார்த்தைகள்பொரியத் தானே செய்கிறது? எப்போது மாறப் போகிறோம்?

இறுதியாக ஒரு கொசுறுத் தகவல்: ஐரோப்பிய நாடுகளில் ஒரு பழக்கம் உள்ளதாம்.திருமண விருந்துக்கு அழைப்பு தரும்போது அதனுடன் விருத்துக் கூப்பனும்கொண்டு வருவார்களாம். அதற்குக் கட்டணம் உண்டு. காசு செலுத்தி கூப்ப னைப்பெற்றுக் கொள்ள வேண்டும்! மாலை வேளை தொடங்கும் திருமண விருந்து நள்ளிரவுவரை நீடிக்கும். மதுவும் இடம் பெறும் என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ?முதலிலேயே மணமக்கள் வந்துவிடுவார்களாம். வாசலில் நின்று அவர்கள்அனைவரையும் வரவேற்பார்களாம். திருமண விருந்தை தொடங்கி வைத்து ஒரு மணிநேரம் அங்கு வந்திருந்தவர்களோடு அளவளாவி விட்டு மணமக்கள் சென்றுவிடுவார்களாம். நள்ளிரவு வரை கேளிக்கையும் கும்மாளமும் தொடருமாம். இதுசரியா, தவறா? ஆனால் ஒன்று அவர்களிடம் ஒளிவு மறைவு இல்லை. இருண்மைத் தனம்
இல்லை. நேர்மை இருக்கிறது.

இங்கே தஞ்சையிலும் வேறு சில மாவட்டங் களிலும் அடித்தளத்து மக்கள்
திருமணத்தின் போது மணமக்கள் பொருளாதாரச் சுமையில் மூழ்கா திருக்க
நெல்லும் காய்கறிகளும் தேங்காயும், பிற பொருட்களும் மற்றவர்கள் தந்து
தோள் கொடுக்கும் நல்ல பண்பாடு முன்பு இருந்தது. இப்போது அங்கே
அவர்களிடையேயும் மெல்ல மெல்ல இந்தப் பண்பாடும், பரிசம் போடும் உயரிய பண்பாடும் கரைந்து காணாமல் போய் வரதட்சனையும் பிரா மணச் சடங்குகளும்ஆக்கிரமித்து விட்டனவே! என்ன சொல்ல? எப்படி நல்லதை மீட்டெடுக்கப்போகிறோம், அல்லது மேலும் உயரிய ஒன்றை எப்படிக் கட்டமைக்கப் போகிறோம்?

அன்பில் தோய்ந்த வாழ்த்துகளை விட மிகச் சிறந்த பரிசு எதுவாக இருக்க
முடியும்? ஆனால் எல்லா உறவுகளும் பணத்தால் தீர்மானிக்கப்படுகிற பண்டையசமூகத்தின் அன்பும் குதூகலமும் பொங்கி வழிந்த திருமணக் கொண்டாட்டம் பொய்யாய் பழங்கனவாய்ப் போய் விடுமோ? கூடாது. புதி தாய் நிகழ்ச்சி நிரலைஉருவாக்க வேண்டும்; அதில் அன்பும் தோழமையும் கைகோர்க்க வேண்டும்; பொருள்பொதிந்ததாய் அது அமைய வேண்டும். சாத் தியமா? முயன்றால் முடியாதது எது?சடங்குகளின் சிறை உடைபடட்டும்! சமத்துவம் கைகுலுக் கட்டும்!

சீர்திருத்தம் வேண்டி நிற்கும் சீர்திருத்தத் திரு மணங்கள் குறித்து
இப்போது விவாதிக்கத் துவங்க வேண்டாமா?

நன்ற் : வண்ணக்கதிர்[12-08-2012]

இளைஞர்கள் வீரியமான விதை நெல்தான்...

Posted by அகத்தீ Labels:
இளைஞர்கள் வீரியமான விதை நெல்தான்...


சு.பொ.அகத்தியலிங்கம்.
‘‘எங்கள் காலம் பொற்காலம் .இப்போது காலம் கெட்டுவிட்டது”.இப்படிப் புலம்புகிற வர்கள் எல்லாகாலத்திலேயும் இருந்து வந் திருக்கிறார்கள் .மாறுதல்களையும் வளர்ச்சி யையும் உள்வாங்காதவர்கள்- உள்வாங்க மறுக்கிறவர்கள் - இளைய தலைமுறை மீது நம்பிக்கையில்லா பிரகடனம் வாசிக்கவே செய்கிறார்கள்.

தினமணி நாளேட்டில் (10 -8-2012) ‘காக்க காக்க இளைஞரைக் காக்க’ என்ற தலைப்பில் மா.பா.குருசாமி ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார்.இளைஞர்களை  “விதை நெல்” என்ற மூதறிஞர் மேற்கோளெல்லம் சுட்டுகிறார். மெத்த சரி.
 “இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்கிற கட்டுரையாளரின் நல்லெண்ணமும் போற்றுதலுக்கு குரியது. ஆனால் பார்வை இன்னும் விசா லப்பட வேண்டும்.

முதலாவதாக,பஞ்சாபில் ராணுவத்தில் சேர்வதில் இளைஞ்ர்கள் பேரார்வம் காட்ட வில்லை என்பதாக, ஒரு விதிவிலக்கான செய்தியைக் காட்டி முடிவுக்கு வருவது தவறானது.தமிழகம் உட்பட பல மாநிலங் களில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நேரங்களில் கூட்ட நெரிசல் தாங்காமல் சில அசம்பாவிதங்கள் நடந்த செய்தியை கட்டு ரையாளர் அறிய மாட்டாரா? வேலையின்மை யும் இளைஞர்களை ராணுவத்திற்கு விரட்டு கிறது, தேசபக்தியும் சற்றும் சளைத்ததல்ல. கார்கில் போரில் நம் இளைஞர்கள் செய்த தியாகம் கணக்கில. பஞ்சாபிலும் நடந்தது என்ன என்பதை நாம் அறிய வேண்டும். ஒன்று- ராணுவத்துக்கு ஆளெடுப்புச் செய்தி போதுமான அளவு விளம்பரப்படுத்தாமல் இருந்திருக்கவேண்டும். இரண்டு,எல்லா காலத்திலும் இளைஞர்கள் ஆர்வம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கவேண்டும்? ஒரு காலத்தில் ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட அவர்கள் இன்று வேறு துறைகளை ஏன் தேர்வு செய்யக் கூடாது?


அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவன் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் பற்றி கட்டுரையாளர் கூறுகிறார். பண்பாட்டுச் சீரழிவு வேதனை அளிக்கத்தான் செய்கிறது. ஆனால் அது விதிவிலக்கான நிகழ்வு.
உண்மையில் இன்றைய மாணவர்கள் கல்வியில் காட்டுகிற வெறித்தனமான அக் கறையை பொதுவிஷயங்களில் காட்டுவது இல்லை என்று வேண்டுமானால் சொல்ல லாம். அதற்கு இன்றைய அரசியல், பொரு ளாதாரச் சூழ்நிலைகளையே குற்றவாளி யாக்க வேண்டும். மாணவர்களையோ இளைஞர்களையோ அல்ல.

போதைப் பழக்கம் கவலையளிக்கிறது. சமூகப் பொருளாதார பண்பாட்டுக் களம் போதை மீதான மோகம் அதிகரிக்கக் காரண மாக உள்ளது.உலகமய தத்துவம் இதற்கு தீனி போடுவதை அடையாளம் காட்டாமல் போதைக்கு எதிரான போர் அரைகுறை யாகவே இருக்கிறது.

கல்வியோ,வேலையோ இளைஞர்கள் ஒவ்வொருவரின் விருப்பத் தேர்வாக உள்ளது?அவன்/அவள் எதைப் படிக்க வேண்டும்? என்ன வேலை செய்ய வேண்டும்- இவற்றை தீர்மானிப்பது எது?அவனா/அவளா? இல்லை. இல்லை. எல்லாம் வியாபாரமாகி விட்ட சூழலில்-கடும் போட்டியாகிவிட்ட சூழலில் அவன்/அவள் விருப்பத்துக்கு மாறாக கல்வியும் வேலையும் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. விரும்பிச் செய்வதற்கும் கடமைக்குச் செய்வதற்கும் வேறுபாடு இருக் கத்தான் செய்கிறது.

கட்டுரையாளரே கூட கல்வி நிலையங் களை வியாபாரிகளிடமிருந்து மீட்டு கல்வி யாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றல் லவா கூறுகிறார். கல்வியில் தனியார் மயத்தை எதிர்க்காமல் கல்வியாளர்களிடம் ஒப்படைத்தால் சரியாகிவிடும் என்பது ஆபத் தான தீர்வல்லவா? கல்வி வழங்குவது அரசின் கடமையாக்கப்பட வேண்டாமா?அதை ஏன் கட்டுரையாளர் வற்புறுத்தவில்லை?

வேலையின்மை,  கிடைக்கிற வேலையிலும் சமூகப்பாதுகாப்பின்மை,    இதனால் எதிர் காலம் குறித்து ஏற்படும் அச்சம், உலகமயம் உருவாக்கும் பணமைய உளவியல், நுகர்வு வெறி,கிரெடிட் கார்டு கலாச்சாரம் இவை உரு வாக்குகிற சமூக பதற்றமே இளைஞர்களை யும் பாதிக்கிறது.
இதைப் பற்றி பேசாமல் இளைஞர்கள் பற்றி அவநம்பிக்கை புராணம் வாசிப்பது அர்த்தமற்றது.

மறுபக்கம், எல்லா வகையிலும் நம்பிக்கை யற்ற சூழல் நிலவும் போதும் அதையும் மீறி எமது இளைஞர்கள் சாதனைகள் படைப்ப திலும் போர்க்களத்திலும் முன்னிலையில் நிற்பது பெருமை அல்லவா?

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிர்க் கெல்லாம் இனிது” - என்ற வள்ளுவப் பெருமான் வாக்கு எவ்வளவு தெளி வானது! .இதை மறக்கலாமா?


கடைசியாக ஒன்று; விடுதலைப் போரா கட்டும், தமிழகத்தில் மொழிப்போராகட்டும் மொத்த இளைஞர்களுமா ஈடுபட்டார்கள்? இல்லையே. துடிப்புள்ள முற்போக்கான ஒரு பகுதி இளைஞர்களே முதலில் களம் ஏகுவர். சூழல் கொதிநிலையை எய்தும் போது அது மாபெரும் எழுச்சியாகும். இளம் தலைமுறை எப்போதும் வீரியவிதைதான்.
ஆனால் உரம். தண்ணீர், சூரிய ஒளி,காற்று அனைத்தும் வேண் டும். பூச்சிகள் அரிக்காமல் காக்கவேண்டும். உழவன் பயிரைக் காப்பதுப் போல் முதியோர் களும் சமூகமும் இளைஞர்களை வளர்த் தெடுக்க வேண்டும். புரட்சிகர தத்துவம் இளை ஞர்களைக் கவ்விப்பிடித்தால் இந்தியா உல கிற்கே வழிகாட்டும்.அந்தந்திக்கு நோக்கி விரைவோம்...

நன்றி: தீக்கதிர்  11 ஆகஸ்ட் 2012

கிரிமினல்கள் தப்புவது எப்படி? ஏன்?

Posted by அகத்தீ Labels:


 
 
 
கிரிமினல்கள் தப்புவது எப்படி? ஏன்?
 
சு.பொ.அகத்தியலிங்கம்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்திகள் பலவற்றை ஊடகங்கள் மூலம் அன்றாடம் அறிகிறோம். ஒன்றிரண்டு செய்திகள் மட்டுமே பரபரப்பாக சில நாட்கள் பேசப்படுகிறது. அதுவும் அப்புறம் நினைவுத்திரையிலிருந்து மறைந்துவிடுகிறது. பல செய்திகள் எந்த சலனத்தையும் உருவாக்குவதில்லை. வெறும் தகவலாக அறிந்து கொள்வதோடு நின்று விடுகிறோம். ஏன் அப்படி? சமூகத்தின் மனசாட்சி மரத்துப்போய்விட்டதா? அப்படி சொல்வது கடுமையான விமர்சனமாகிவிடும். ஆனால் சமூகத்தின் பொதுப் புத்தியில் குற்றச் செயல்களுக்கு எதிரான விழிப்புணர்வு போது மானதாக இல்லை. குறிப்பாக ஜனநாயகப் பூர்வமானதாக இல்லை.

 முதலாவதாக, நாட்டில் நடைபெறும் அனைத்து கிரிமினல் குற்றங்களும் வெளிச்சத்திற்கு வருகிறதா? நிச்சயம் இல்லை. சாதிச் செல்வாக்கு, பணச் செல்வாக்கு இவற் றால் மூடி மறைக்கப்படும் குற்றச்செயல்களே அதிகம். அதையும் மீறி வெளிவருவது சரிபாதிக்கூட இருக்காது. அப்படி வெளிச்சத்திற்கு வந்த கிரிமினல் செயல்களில் எத்தனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது? அதில் எத் தனை மீது முறையான குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டது? எத்தனை வழக்குகள் உரிய காலத்தி நடத்திமுடிக்கப்பட்டது? அதில் எத்தனை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்கள்? இப்படி கேள்விகளை எழுப்பி, விவரங்களை சேகரித்து அலச விரும் பினால், முதலில் விவரங்கள் கிடைப்பதே அரிது. கிடைக்கிற விவரங்களோ அதிர்ச் சியையூட்டும்.

இந்தியாவில் 28 விழுக்காடு கிரிமினல் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதாவது நூற்றுக்கு 72 பேர் எளிதாக தப்பிவிடுகின்றனர். கொலை வழக்குகளில் நூற்றுக்கு 64 பேரும், கொள் ளை வழக்குகளில் நூற்றுக்கு 79பேரும் தப்பி விடுகின்றனர். முறையே 36 பேரும் 21பேரும் தண்டிக்கப்படுகின்றனர். இது நமது காவல் துறை செயல்பாட்டின் ஊனத்தை படம்பிடிக் கிறது. நீதித்துறையின் லட்சணத்துக்கு சாட்சி யாக உள்ளது.

வழக்குகள் பதிவு செய்வதில் அகில இந்திய சராசரியை விட 10 விழுக்காடு அதிகம் பெற்று தமிழகம் முன்னிலையில் இருப்பதும்; தண்டனை பெறும் விகிதத்திலும் தமிழகம் அகில இந்திய சராசரியை விட சற்று மேலே உள்ளதும் அரசு தன் சாதனையாக பீற்றிக் கொள்ள உதவலாம்; ஆனால் மக்கள் மகிழ்ச்சி யடைய எதுவுமில்லை.ஏனெனில் உப்புசப்பு இல்லாத சில சில்லரை பிரச்சனைகளில் வழக்குப்பதிந்து ஆயிரம், இரண்டாயிரம் அபராதம் கட்டவைத்து, தங்கள் சாதனை புள்ளி விபரத்தை பெருக்கிக் காட்டும் வித்தை தமிழக காவல்துறைக்கு கைவந்திருக்கிறது; அவ்வளவுதான். சமூகத்திற்கு சவாலான குற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதி லும், தண்டனை பெற்றுத்தருவதிலும் மிகவும் பின்தங்கியே உள்ளது தமிழகம். இந்தியாவின் பொது வியாதியிலிருந்து தமிழகமும் தப்ப வில்லை. வாச்சாத்தி வழக்கு எவ்வளவு காலம் இழுத்தடிக்கப்பட்டது என்பதும்; பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் அரசின் பாரபட்சமான போக்கும்; விழுப்புரம் இருளர் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான வழக் கில் காவல்துறையின் நகைப்புக்கிடமான செயல்பாடும் காவல்துறையின் சீழ்பிடித்த ரணத்தை நமக்கு காட்டுகிறதல்லவா?

நீதித்துறையும் பெரும் நம்பிக்கையூட்டு வதாகவும் கூறமுடியாது. சுமார் 30 லட்சம் வழக்குகள், 21 உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதி மன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் சுமார் 2.6 கோடியாகும். உயர்நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் கிரிமினல் வழக்குகள் மட்டும் சுமார் 7 லட்சத்திற்கும் மேல் இருக்கும். போதுமான நீதிபதிகள் இல்லாமை ஒரு கார ணம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் வழக்கை இழுத்தடிப்பதும்; வழக்கை நடத்து வதில் காட்டப்படும் எல்லையற்ற மெத்தன மும் இடையூறும் எல்லாமுமாக சேர்ந்து வழக் குகள் மலைபோல் தேங்கிடச் செய்கின்றன.

விசாரணைக் கைதியாகவே சிறைகளில் பல ஆண்டுகள் அப்பாவிகள் அடைக்கப்பட் டுள்ள கொடுமையில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. அதிலும் தமிழகம் தனி இடம் வகிக்கிறது. இதனை தனியாக பரிசீலித்தால் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் தான் இதில் பெரும் எண்ணிக்கையினர். நம் சமூக நீதி பாழ்பட்டிருப்பதன் கோரச்சாட்சி இது.

தூங்கும் நீதித்துறை போதுமான நீதிபதிகள் இல்லை என்று புலம்புவது போல காவல் துறையிலும் போதுமான ஆட்கள் இல்லை என்ற குரல் கேட்கிறது. அமெரிக்காவில் 10 லட்சம் மக்கள் தொகைக்கு 27 போலீஸ், கன டாவில் இது 30 ஆக உள்ளது. பிரிட்டனில் 20 ஆக உள்ளது. சீனமும் பிறநாடுகளிலும் இது இரண்டிலக்க எண்ணாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 10கூட இல்லை. 9 மட்டுமே என்பதும்; காவல்துறையில் கணிசமான பகுதி யினர் விஐபி, விவிஐபி எனப்படுகிற பெரிய மனிதர்களின் பாதுகாப்புப் பணிகளிலுமே உள்ளனர். ஆக, போதுமான எண்ணிக்கையில் காவல்துறை இல்லை என்பதும்; தேவைக் கேற்ப பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படு வதில்லை என்பதும் பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே.

இதை எல்லாவற்றையும் விட காவல் துறைக்கு அளிக்கப்படும் பயிற்சி அவர்களை மரத்துப்போன, மனசாட்சியற்ற இயந்திரங்ளாய் மாற்றிவிடுகிறது. ஏவிவிட்டால் கடித்துக் குதறுகிற மிருக இயல்பு, இவர்களுக்கு பயிற்சியின் போதே வழங்கப்பட்டு விடுகிறது. இதைத்தான் முதலமைச்சர் ஜெயலலிதா புகழ்கிறார். மனித உரிமை, பெண்ணுரிமை, சமூக நீதி, சாதிய ஒடுக்குமுறை, இவைக் குறித்த ஜன நாயகப்பூர்வமான பார்வை காவல்துறைக்கு இல்லை; வழங்கப்படுவதில்லை.

ஒரு உதாரணம் போதும், நம் காவல்துறை யின் ஊனப்பார்வையை பறைசாற்ற; ஒரு ஊரில் சாதிக்கலவரம் நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அங்கு நம் காவல்துறை எப்படி செயல்படும். அனுபவத்தை உரசுங்கள். ஆதி க்கச் சக்தியினர் தெருவில் செல்லும் போது, ஊர் நாட்டாமையை அழைத்து மென்மையாக பேசி சம்பந்தப்பட்டவர்களை காவல்நிலை யத்திற்கு அழைத்துவர வேண்டுகோள் விடுக்கும். விசாரணையும் நட்பாக நடைபெறும். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் சேரியில் காவல்துறை பேயாட்டம் போடும். பண்டபாத் திரங்களை உடைக்கும்; கையில் அகப்பட்ட வர்களை உதைக்கும்; மனைவியை, அம்மா வை பிணையக் கைதியாக பிடித்து வரும்.
இந்த பாரபட்ச அணுகுமுறை அறுபத்தைந்து ஆண்டுகளாகியும் மாறவேயில்லையே! காவல்துறையை நவீனமயமாக்கினால் போதாது. மனசாட்சியுள்ளதாகவும் மனிதஉரிமை யை மதிப்பதாகவும் பயிற்றுவிக்கப்பட வேண் டும். குறிப்பாக சாதிவெறி, மதவெறி, தீண்டா மை, ஆணாதிக்க வெறி இல்லாத காவல்துறை நம் நெடுங்கனவாகவே போய்விடுமோ?

மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும். தங்கள் உரிமைகள் எவை? எவை? ஒருவர் கைது செய்யப்படும்போது என்னென்ன செய்யலாம்? எதை எதை செய்யக்கூடாது? என்பனவற்றை அறிந்து வைத்துக் கொள்வது என்பது முதல் நிபந்தனை.

கடுமையான தண்டனை தான் குற்றங் களை குறைக்கும் என்று கருதுவதும்; பாஸ்ட் புட் மாதிரி உடனடி தண்டனை வேண்டுமென தவறாக கருதி போலீசாரின் அத்துமீறல்களு க்கும் மோதல் கொலைகளுக்கும் வக்காலத்து வாங்குவதும் மிகவும் ஆபத்தானது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பது சரி தான். ஆனால் அவசர கோல தண்டனை அதைவிட ஆபத்தானது. காவல்துறை குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதை மட்டுமே செய்ய வேண்டும். தண்டிக்கும் அதிகாரம் ஒருபோதும் எங்கேயும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை; வழங் கப்படவும் கூடாது.

கிரிமினல்களைசுட்டுக்கொல்லக்கூடாது எனில் அவர்கள் நீதிமன்றங்களில் தப்பிவிடு கிறார்களே! எனவே என்கவுண்ட்டர் எனப் படுகிற மோதல் கொலைகள் சரி என்பது போ ன்ற மனோநிலை பொதுவில் உள்ளது. ஊடக ங்கள் அதை நியாயப்படுத்துகின்றன. அதற்கு ஆதரவாக வலிந்துகட்டி பிரச்சாரம் செய்கிறது. இது மிகமிக ஆபத்தானது. காவல்துறை வழக் கை சீக்கிரம் முடித்ததாகக் காட்டவும் மக்க ளின் கோபத்திலிருந்து தப்பவும்; உண்மை யான குற்றவாளிகளை தப்புவிக்கவுமே என் கவுண்ட்டர்கள் செய்யப்படுகின்றன என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். சமீபத்தில் ஒரு ஆங்கில நாளேட்டில் முன்னாள் போ லீஸ் அதிகாரி எழுதிய கட்டுரையில், என் கவுண்ட்டருக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக மகிழ்வுடன் குறிப்பிடுகிறார். இது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர வேண்டும். விழிப்புணர்வை விதைக்க வேண்டும்.

அதைபோல் “மக்களே திருடனை உதை த்துக் கொன்றனர்” என்பது போன்ற செய்திகள் ஊடக பரபரப்புக்கு உதவலாம். ஆனால் மிக வும் ஆபத்தானப் போக்கு இது.கும்பல் கூடும் போது எளிதில் உணர்ச்சிவசப்படும் மக்க ளின் மனோநிலையை குற்றவாளிகள் பயன் படுத்தி அப்பாவியை அல்லது சாட்சியை அழி க்கவும்; வழக்கை திசைதிருப்பவும் உதவிடும் போக்கு இது. சந்தேகப்படுபவர்களை பிடித் துக்கொடுப்பது சரி; மக்கள் தாங்களே தண் டனை வழங்குவது ஆபத்தானது. காவல் துறையின் அத்துமீறலுக்கு இது லைசென்ஸ் வழங்கிவிடும்.

அப்படியானால், என்ன வழி என்று கேட் போருக்கு, பதில் உண்டு. வாச்சாத்தி வழக்கி லாகட்டும், சிதம்பரம் பத்மினி வழக்கிலா கட்டும் இறுதியில் நியாயம் கிடைக்க உதவி யது ஒன்றுபட்ட அமைப்பு ரீதியான போராட்ட மும் முயற்சியும் அல்லவா? பிரேமானந்தா வழக்கில் அவர் தண்டனை பெற உதவியது மக்களின் தொடர்ச்சியான கண்டனமும் போராட்டக்குரலும் அல்லவா? எங்கெல்லாம் மக்கள் அமைப்பாக திரள்கிறார்களோ- எங் கெல்லாம் அமைப்புரீதியாக இணைந்துநின்று அநீதிக்கு எதிராக விடாமல் போராடுகிறார் களோ, அங்கெல்லாம் அவர்களால் வெற்றி பெற முடிகிறது. திரட்டப்பட்ட மக்களின் கோபம் மட்டுமே தீமைகளை சுட்டெரிக்கும். மாறாக என்கவுண்ட் டர்களும், ஆத்திரத் தாக் குதல்களும் எதிர்விளைவையே உருவாக்கும்.

 
 

அடையாள சிக்கல்

Posted by அகத்தீ Labels:அடையாள சிக்கல்

சு.பொ.அகத்தியலிங்கம்

பள்ளிச் சான்றிதழ்படி என் பெயர் கு. பரந்தாமன். வீட்டில் அழைக்கிற பெயர்
குட்டி. உறவினர் கள் எல்லோருக்கும் குட்டி என்றால்தான் தெரியும்.

தெருவிலோ என் பெயர் சர்வேயர் பிள்ளை. அப்பா சர்வேயர் வேலை செய்வதால்அப்படியா னது. ஆனால் என் ஜோடு பிள்ளைகள் மத்தியில் பச்சை. ஏனெனினில்கடும்பச்சை கலக் காத ஒரு டவுசர், சட்டை நான் போட்டு யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். என் அப்பாவுக்கு பச்சை கலர் ராசியாம். பள்ளியூனிபார்மில்கூட ஏதா வது ஒரு மூலையில் சின்னதாக பச்சை எம்பி ராய்டு செய்துவிடுவார்அம்மா. வேறு வழி? அப்பாவின் கட்டளையை மீற முடியுமா என்ன?

எப்படியோ இளமைப் பருவம் கடந்தது. ஆனாலும் என் பெயர் குழப்பமும் அடையாளக்குழப்பமும் தீர்ந்தபாடில்லை.

படித்து வேலைக்குப் போனபின் கண்டகடர் பரமு என்ற பெயர் ஒருவழியாகத்
தேறியது. கல்யாணம் முடிஞ்சது. மனைவி டீச்சர். அதுவும் உள்ளூர்
பள்ளியில், நானோ எக்ஸ்பிரஸ் பஸ் கண்டக்டர். ஊர்காரர்களுக்கு டீச்சர்
வீட்டுக்காரர் என்றானேன்.

எப்போதுமே என் முகமும் முகவரியும் சிக் கலாகவே உள்ளது. குழந்தைகள் பிறந்தபின் படிப்படியாக குமரன் அப்பா என்றும் கவிதா அப்பா என்றும் முகவரி
மாறும் போது உறுத்த லில்லை. மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. நான் பக்குவம்
அடைந்துவிட்டேனா? அல்லது பிரமோஷன் கிடைத்த கவுரவமா?

காலம் ஓடியது. பேரப்பிள்ளைகள் வந்து விட்டனர். சதீஷ் தாத்தா, ரம்யா
தாத்தா என்றான போது கர்வம் ஓங்கியது.சுய அடையாள இழப்பு மகிழ்ச்சியானஒன்றாகிவிட்டது.

ஆனால் இப்போது புதிய அடையாளச் சிக்கல்... அதனால்
ஏகப்பட்ட பிரச்சனைகள்.மின்சாரக் கட்டணம் கட்ட, இன்சூரன்ஸ் பிரீமியம் கட்ட, போன் பில் கட்ட,ரயில்  - பஸ் டிக்கட் எடுக்க என எதற்கும் அலைய வேண்டாம்.வீட்டிலிருந்தபடியே. கம்ப்யூட்டரில் கட்டிவிடலாம்.

அங்கேதான் சிக்கல்.ஒவ் வொன்றுக்கும் பதிவு செய்யும் ஐடியும் பாஸ் வேர்டும் ஞாபகம்வைத்துக்கொள்ளவேண் டும். அது மட்டுமல்ல மூன்று வங்கிக் கணக்கு களுக்கும்பின் நம்பர் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். எப்போதும் இந்த ஐடி, பாஸ்வேர்டு குழப்பம் என்னைப் பாடாய்ப்படுத்து கிறது.

 மாற்றிமாற்றிபோட்டு,குழப்பிசிக்கலிலமாட்டிக்கொள்வதுவாடிக்கையாகிவிட்டது.
நம் பெயரைவிட இமெயில் ஐடி, பின் நம்பர், பாஸ்வேர்டு இவைதான் இப்போது நமது மெய் யான அடையாளம் என்றாகிப்போனது. கம்ப்யூட்டருக்கு கூட பையன்பாஸ்வேர்டு செட் பண் ணித் தந்துவிட்டான். அதை வேறு ஞாபகத்தில்
வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பொடியன் வந்து கம்ப்யூட்டரை ஒப்பன் செய்ய
அடம் பிடித்தான். எல்லாம் கேம் விளையாடத்தான். பாஸ்வேர்டு
மறந்துபோச்சுன்னு ரீல் விட்டேன். உங்க பாஸ் வேர்டு கமலா என்றான். அட...
படவா உனக்கு எப்படிடா தெரிஞ்சுது என்று கேட்டேன். தாத்தா நீங்கள்ல்லாம்
ஓய்ஃப் பேரு அல்லது பேரப்பிள்ளைக பேரைத்தான் பாஸ் வேர்டா வைப்பீங்கன்னு,குட்டைப்போட்டு உடைச்சான்.

ஐய்யய்யோ நம்ம ஐடி, பாஸ்வேர்டல்லாம் ரகசியமானதாக இல்லையே என மனம் எண்ணலானது.தாத்தா இந்த வருஷம் அறுபதாம் கல்யா ணமா, என்று கேட்டான் பேரன்.உற்சாகமாக ஆமாம் வர்ற மாசம் அறுவது முடியுது என்றேன்.உங்க பேங்க் ஏடிஎம் எல்லாற்றுக்கும் 1952 பின் நம்பரா, என்றான்.
அதையும் கண்டுபிடிச்சுட்டியா, என்றேன். ஞாபகம் மறக்காமலிருக்க பிறந்த
வருஷத் தைத்தான் எல்லா இடத்திலேயும் பின் நம்பரா வச்சுக்குவாங்க, என்று
புதிரை அவிழ்த்தான்.

வேறுவழியே இல்லை ஐடி, பாஸ்வேர்டு எல் லாற்றையும் மாற்றியாகணு வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் எப்படி ஞாபகத்தில் வைத்துக் கொள்வது?

முன்பு ஊரறியபெயர் இருந்தது. சிக் கல் இருந்தாலும் அதுவே முகமும் முகவரியு மாக இருந்தது. இப்போது ஐடி, பாஸ்வேர்டுன்னு ஏகப்பட்ட முகவரிகள், முகங்கள்.
அனைத்தையும் நினைவில் வைத்திருப்பதும் பாஸ்வேர்டுகளை ரகசியமாக
பாதுகாப்பதும் ரொம்ப சிரமமாக உள்ளது.

இதையே எப்படித் தீர்ப்பது என்று திணறிக் கொண்டிருக்கிறேன். அரசியலில்
ஐடண் டிட்டி கிரைசிஸ் - அதாவது  அடையாளச் சிக்கல் - என்று பேசுகிறார்களேஅது என்னவென்று விளங்கவில்லையே. போங்கப்பா நவீன உலகத் திலே ஐடி சிக்கல்இடியாப்பச் சிக்கல்தான்...

- வண்ணக்கதிர் 24.6.2012

ஞானம்

Posted by அகத்தீ Labels:

ஞானம்

சு. பொ. அகத்தியலிங்கம்

ஊர் திரும்பினேன்; உளம் திரும்பக் காணேன் எனப் புலவர்கள் மடல் எழுதியதாகபள்ளிக் கூடத்தில் தமிழாசிரியர்கள் சொல்வதுண்டு.ஆனால் அவனளவில் அது நிஜமாகும் என்று எதிர்பார்த்ததே இல்லை. ஊர் திரும்பி
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆயினும் அவள் பார்வையின்ஏக்கமும் வெப்பமும் அவனைச் சுட்டெரிந்துக் கொண்டே இருக்கிறது.

அன்றும் அப்படித்தான் அவள் வார்த்தைகள் அவனது நெஞ்சில் நங்கூரமிட
உட்கார்ந்த படியே யோசனையில் விழுந்தான். மனைவி காபியோடு எதிரில் நின்றதுஅவனுக்கு உறைக்கவே இல்லை. “ காபி எடுத்துக்கோங்க” என சொன்னது கூட காதில்விழவில்லை.

 “இன்னமும் அந்த நினைப்புத்தானா? ”ஒரு குத்தல் விழுந்த போதுதான்மனைவி எதிரே நிற்பது கண்ணில் பட்டது. எவ்வளவு சுதாகரித்தும் அவனால் தன் நினைப்பை மறக்க முடியவில்லை.

  “நினைப்பு பொழப்பைக் கெடுக்குமாம்” என மனைவி இடித்துவிட்டுச் செ;லலும் போது பதிலேதும் இன்றி அமர்ந்திருந்தான். இது அவனின் வழக்கமல்ல. வார்த்தைக்குபதில் வார்த்தை என வீசிவீசி சின்ன விஷயத்தை பெரியதாக்கிவிடும்இயல்புடையவன் அவன். இதனால் அவன் மனைவிதான் எப்போதும் சற்று இறங்கிவிட்டுக் கொடுத்து நிலையை சீர் செய்வாள். இன்று பதில் பேசாமல் இருந்தான்.

அவனது நொந்த மனதுக்கு இப்போது தனிமை தேவை எனக்கருதிய மனைவி மெல்லநகர்ந்தாள். பிள்ளைகளையும் சாடை காட்டி நகர்த்தினாள். எதிரே ஓடிக்
கொண்டிருந்த டிவியை ரிமோட் மூலம் நிறுத்தினாள்.டிவி ஓடியதோ அல்லது நிறுத்தப்பட்டதோ எதுவும் அவனைச் சலனப்படுத்தவில்லை. அவன் நெஞ்சத்தில் குறும்படமாய் அந்த காட்சி மீண்டும் மீண்டும் ஓடிக்
கொண்டே இருந்தது.

இதுதான் நான் படித்த முதல் பள்ளிக் கூடம்; இந்த பள்ளிக் கூடத்தில்தான்
பத்தாவது வரை படித்தேன். இது சாமிதேர், இது அம்மன் தேர், இது பிள்ளையார்
தேர், இது சப்பரத்தேர், மார்கழிமாதம் பத்துநாள் திருவிழா நடக்கும்.
நாலுதேரும் ஒடும். சித்திரை மாதம் சாமிதேர் ஓடாது. தெப்பத் திருவிழா  நடை
பெறும். பத்து நாளும் பள்ளி விடுமுறை. எங்கள் பள்ளிக்கூடத்தில்
பொருட்காட்சி நடக்கும். மரணக்கிணறு, மிட்டாய்கடை, உருகும் பெண்... இப்படிபழைய நினைவுகளை மனைவியிடம் சொல்லிக் கொண்டே ரத வீதியைச் சுற்றிச் சுற்றிகாண்பித்தான்.

மார்கழி, சித்திரைத் திருவிழாக்களின் போது பத்து நாட்களும் ஊரே
கொண்டாட்டமாக இருக்கும். ஆட்டம்பாட்டம் எல்லாம் தான்.
திருவிழா தொடங்கும் முன்பே பேயின் வாயை கட்டிவிடுவார்கள். தினசரி
காலையிலும் மாலையிலும் அவற்றுக்கு சோறுபோட சீவிலி கொண்டு போவார்கள்.அப்போது யாரும் குறுக்கே போகக்கூடாது. மற்றபடி இரவு எந்நேரமானாலும் வீதியில் விளையாடலாம். அவனையொத்த சிறுசுகள் போட்ட ஆட்டத்தை மனைவிக்கு விவரித்தபடி வந்தான்.

அந்த தெற்குதெரு மூலைக்கு வந்ததும் அப்படியே நின்றுவிட்டான். இங்கேதான் என் தாய்மாமா வீடு உள்ளது. மாமா இறந்துவிட்டார். அத்தை என நினைவு தெரிந்த நாளிலேயே உயிரோடு இல்லை. மூத்த மகன் பரமு என்னைவிட சிறியவன், சங்கரவடிவு,ஞான வடிவு இரண்டு பெண்கள் எனக் குடும்பக்கதையை விவரித்துக்கொண்டிருந்தான்.

  “சரி... சரி... உங்க மாமா வீட்டுக்கு போகலாம், அதற்குள் கோயிலுக்கு போய்
வந்துவிடுவோம்” என மனைவி நச்சரிக்க கோயிலுக்கு வேண்டா வெறுப்பாகச்
சென்றான். கோயிலுக்குள் சிறு வயதில் நேர்ந்த எதிர்மறை அனுபவங்களை அசைபோட்டு மனைவியிடம் சொல்ல அவள் முறைத்தாள்.
  “உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லாவிட்டால் விடுங்க. நான் சாமி
கும்பிடுறதைக் கெடுக்காதீங்க” என அவள் விரட்ட அமைதியானான்.


மனைவி வாங்கி வந்த அனுமார் வடையை ருசித்தபடி மீண்டும் பழைய நினைவுகளுள் அமிழ்ந்துவிட்டான்; அவன் மெல்ல மெல்ல தனது பதின் பருவத்துக்குள் பிரவேசித்துவிட்டதை உணர்ந்து மனைவி  காது கொடுத்தாள்.

கோயிலின் ஒவ்வொரு சிலையும் தெருவின் ஒவ்வொரு அடியும் அவனுக்குள் கிளறிவிட்ட கடந்த காலத்தில் மூழ்கி எதை எதையோ அள்ளிவந்து மனைவி முன்பரப்பினான். அதில் முத்து இருந்தது. சிப்பி இருந்தது. கூழாங்கல் இருந்தது.பழைய ஹேர்பின் இருந்தது. குட்டி பென்சில் இருநதது. ரிப்பன் இருநதது.மயிலிறகு இருந்தது. வெடி தேங்காய் இருந்தது.தற்கொலை செய்து கொண்டஆறுமுகம் இருந்தார். நடுத்தெரு மாமா பெண் ராணி இருந்தார். அடுத்தவரோடுஓடிப்போன திருமணமான பெண்- தன் வாழ்வில் சந்தித்த முதல் அதிர்ச்சிஇருந்தது. இடிதாக்கிச் செத்துப் போனகுருசாமி சார் இருந்தார். இப்படிஎன்னென்னவோ...


  “உங்க பால்ய புராணம் போதும். மாமா வீட்டுக்கு போய் நேரத்தோடு கன்னியாகுமரிபோவோம். அப்போதுதான் நாளை சூரியோதயம் பார்க்க முடியும்” என மனைவி உசுப்ப கதையை சற்று நிறுத்தி காலை எட்டிப் போட்டான்.

இங்கதானே தாய் மாமனார் வீடு இருந்தது. பழைய நினைவுச்சுரங்கத்தை தோண்டிஅடையாளத்தை உரசிப்பார்த்தான். ஊரே மாறியிருந்தது. மாமா வீடு புதிதாகிவிட்டது. ஒன்றும் புரியவில்லை. எல்லை மாடன சிலையைப் பார்த்ததும் நினைவுப்பொறிதட்டியது.எல்லை மாட சாமியின் எதிர்வீடு தானே... இப்போது வீட்டைக் கண்டு பிடித்துவிட்டான்.

கதவைத் தட்டினான். நடுத்தர வயதுப் பெண் கதவைத் திறந்தாள். பரமுவின்
மனைவியாக இருக்கும். ஊகித்தது சரியாக இருந்தது. சுய அறிமுகம் முடிந்தது.உள்ளே அழைத்தாள். நாற்காலியை இழுத்துப் போட அவனும் மனைவியும்உட்கார்ந்தனர்.

அறையிலிருந்து ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும் வெளிப்பட்டனர். உங்கஅப்பாவுக்கு அத்தை மகனாம் ஐம்பது வருஷத்துக்கு பிறகு வந்திருக்காங்க என சுரத்தில்லாமல் அறிமுகம் நடந்தது. அவர்களும் ஒப்புக்கு வணக்கம்சொல்லிவிட்டு மின்னலாக அறைக்குள் புகுந்து கம்ப்யூட்டரில் மூழ்கினர்.


அடுக்களையில் கிழிந்தபுடவை, ஒடுங்கிய தேகம் கொண்ட ஒரு பெண் பாத்திரம்தேய்த்துக் கொண்டிருந்தாள். இயந்திரம் பேல் இருந்தாள். திரும்பிப்
பார்க்கவே இல்லை.

  “ஏய்! உங்க அத்தை மகன் வந்திருக்காங்க காபி போடு” ஏன உத்தரவு போட அந்தஇயந்திரத்துக்கு மனித உயிர் வந்தது. துள்ளிக் குதித்து முன்னே நின்றது

  “அத்தான் சொகமா இருக்கேளா.. எங்களையெல்லாம் மறந்தே போச்சா..” என பொரியத்தொடங்கினாள்.மதினி முறைக்க அடுப்படிக்கு ஓடி அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தைவைத்து பாலை ஊற்றிவிட்டு.. பழையபடி பரக்க பரக்க திரும்பினாள்.  “அத்தான்”  என அழைப்பதற்குள் மதினி முறைக்க உள்ளே அடுப்படியில் புகுந்தாள்.

மூத்தவன் சங்கரவடிவு செத்துப் போனது அவன் அறிவான். எனவே இது ஞானவடிவு.இவளோடு பாண்டி ஆடியது, பல்லாங்குழி ஆடியது - ரிப்பனை கோயில் முகப்பு பந்தக்காலில் கட்டிவைத்திட அவன் அழுதது. அந்த பசுமையான காட்சிகளைஅசைபோட்டபடியே இருக்க, காபி வந்தது. அந்த நேரம் பார்த்து வாசலில் யாரோ அழைக்க மதினி  நகர்ந்தாள்.

  “அத்தான்... நீங்க என்னை கட்டிட்டு போயிருந்தா.. நான் இப்படி நாதியற்று..
வேலைக்காரியைவிட கேவலமாக நாறணுமா.. என் தலையெழுத்து...” என அவன் மண்டையில்அடித்துக் கொள்ளவும் மதினி திரும்பவும் சரியாக இருந்தது.

ஒப்புக்கு காப்பியை விழுங்கிவிட்டு.புறப்படத் தயாரானான். ஞானம்
அடுக்களையிலிருந்து பார்த்தாள் பேசவில்லை. அவள் கண்கள் ஆயிரம் செய்திகளைஅஞ்சல் அனுப்பியது.வெளியே வந்த அவன் நடையில் துள்ளல் இல்லை. பிறந்த ஊருக்கு வந்த பூரிப்பு செத்துவிட்டது. மவுனமானான். அப்புறம் இரண்டு நாள் கணவனும் மனைவியும் கன்னியாகுமரியில் பல இடங்களுக்கு போய் வந்தனர். அவன் எதுவும் பேசவில்லை.மனைவிக்கு சூழல் புரிந்தது மவுனம் காத்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகு ஞானம் அவன் நினைவிலிருந்து அகல மறுக்கிறாள். அவள்கேள்விக்கு அவனிடம் என்ன விடை இருக்கப் போகிறது?

சின்ன வயதில் ஞானத்தை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் இவனை
ரொம்பப் பிடிக்கும்.இப்போது அவள்... எதையோ கேட்கிறாள். நினைவூட்டுகிறாள்.

  “நீங்க சின்ன வயதில உங்க மாமா பொண்ணு ஞானத்தை காதலிச்சிங்களா?” மனைவியின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முயடிவில்லை.

யாரும் அப்புறம் அதைக் கிளறத் துணியவில்லை. ஆயினும் அடிக்கடி அவன் இப்படிமவுனமாகிப் போகிறான்... 65 வயதில்.

தற்கொலை எண்ணத்தை விரட்டும் ஒரு படைப்பாளியின் வாழ்க்கைக் கதை

Posted by அகத்தீ Labels:


தற்கொலை எண்ணத்தை விரட்டும் 
ஒரு படைப்பாளியின் வாழ்க்கைக் கதை சு.பொ.அகத்தியலிங்கம்


நினைவுக் குறிப்புகள்,அன்னா தஸ்தயேவ்ஸ்கி,தமிழில்:யூமா.வாசுகி,பாரதி புத்தகாலயம்.421,அண்ணா சாலை,சென்னை-18.பக்:80. விலை:ரூ. 45
உள்ளங்களின் உள்ளறைகளை ஊடுருவும் வல்லமைமிக்க எழுத்துக்குச் சொந்தக்காரர் தஸ்தயேவ்ஸ்கி.அவரது வாழ்க்கை திறந்த புத்தகம்.இது அவரின் வாழ்க்கை வரலாறு அல்ல;எனினும் அவரது வாழ்க்கையை கறுப்பு வெள்ளையாகக் காட்டும் வலுவான ஆதாரம்.

 கடவுளின் அம்சங்களும் சாத்தானின் அம்சங்களும் இணைந்த ஆளுமை தஸ்தயேவ்ஸ்கியுடையது என்ற கருத்து இலக்கிய உலகில் நிலவுகிறது.ஆம் என்கிறது இந்த நினைவுக் குறிப்புகள்.

“அமைதியற்ற , மனம் பிறழ்ந்த , வேதனை நிறைந்த வாழ்க்கையாக இருந்தது அவர் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை.தன் இயல்பின், ஒன்றுக்கொன்று முரணான இரு ஆளு மைப் பண்புகளை அவரால் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் இயலவில்லை. தரித்திரமும், குற்றவாசனையும்,குரூரமெல்லாம் நிறைந்த கீழுலகின் ஊடேதான் அவ ரது கட்டுப்படுத்தப்படாத வாழ்க்கை கடந்து சென்றது. மனித சுபாவத்தின் பெருஞ் சிக்கல்கள் அத்தனையும் நிறைந்த மகத்தான இலக்கியப் படைப்புகள் பிறந்ததும் அங்கிருந்துதான்”என அறிமுகத்தில் எழுதியுள்ள வரிகள் நம்மைஉலுக்குகிறது.

வெற்றியாளர்களைப் பற்றி எழுதும்போது புனையப்படும் போலித்தனங்கள் எது வும் இந்நூலில் இல்லை.அவர் எழுத்தைப்போல நினைவுக்குறிப்புகளும் ஒழிவு மறைவு ஏதுமின்றி உண்மையைப் பேசுகிறது. அவர் மரண தண்டனையிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர்.சைபீரியாவில் தண்டனை அனுபவித்தவர். சூதாட்டப் பிரியர்.வலிப்பு நோயாளி.பெரும் கடன்காரர்.எட்டு பெண்களை நேசித்தவர்; பலரால் ஏமாற்றப்பட்டவர்.கடனில் சீரழிந்தவர்.அன்னாவை மணந்த பின்னரே அன்பின் வாசத்தை முழுமையாய் நுகர்ந்தவர்.

ஆதலால் அன்னா தானே கூறுகிறார், “அவரின் உயர்வு தாழ்வுகளுடன் வாசகர் களுக்கு வெளிப்படுத்துவதற்கான என் ஆத்மார்த்த மான மற்றும் மனப்பூர்வமான பேராவலை முன்வைத்து”.

ஆம்.உண்மையைத் தவிர வேறில்லை.அவர் வலிப்பு நோயாளி. இதை அவர் மறைத்ததில்லை;மாறாக அதையே பல மாக்கியதில்தான் அவரது வெற்றி அடங்கி இருக்கிறது.அவரது நாவல்களில் வலிப்பு நோயாளிகளை பாத்திரம் ஆக்குவதில் அவர் பெற்ற வெற்றி மகத்தானது.கரம்சோவ் சகோதரர்கள் நாவலில் ஸ்மிர்ட்யாகோவ் பாத்திரம் நம்மை அதிரவைக்கும்.அதுபோல் மேலும் மூன்று நாவல்களில் வலிப்பு நோயாளிகளைச் சித்தரிப்பதில் அறிவியல் பார்வையும் அனுபவப் பிசைவும் அவரின் தனிச்சிறப்பு.

காதல் வாழ்வில் அவர் வாழ்க்கையில் ஏழெட்டுப் பெண்கள்மலர்க்கொத்துகளுடன் வந்திருக்கிறார்கள்.ஆனால் இவர்களில் யாரிடமுமே அவரது காதல் யதார்த்த மாகவில்லை. மாக்ஸிம் கார்க்கி இவரை ‘டெவில் ஜீனியஸ்’ அதாவது தீமைகளின் ஞானி என்று வர்ணித்துள்ளார்.
அவரது காதல் வாழ்வே ஒரு நாவலை விஞ்சியது.

“மகிழ்ச்சி!அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை”என்கிற தஸ்தயேவ்ஸ்கி இறுதியில் அன்னாவிடம் காதல் சரணடைந்ததை டைரி குறிப்புகளின் விவரங்களிலிருந்து சுவைபட தந்துள்ளார் அன்னா. “வாட்டமும் சலிப்பு மான மனோபாவத்துடன் வாழ்கிறேன்”.. என்றவர்

 தஸ்தயேவ்ஸ்கி.அவர் சூதாட்டத் தில் சுகங்கண்டவர்.ஈட்டிக்காரனிடம் சிக்கியவர்.வலிப்பு நோயாளி.அன்னாவைவிட பலவயது மூத்தவர்.ஆயினும் அவர்களுக்குள் மெய்யான காதல் அரும்பியது பெருங்கதையாகும்.அது உயிர் துடிப்புடன் பதிவாகியுள்ளது.

தற்கொலை மனோநிலையிலுள்ள யாராயினும் இவரது வாழ்க்கையை அறிந்தால் அந்த கெட்ட எண்ணத்திலிருந்து மீள்வது திண்ணம்.எண்பது பக்க இந்நூலைப் படித்த பின் பலமணிநேரம் இதயம் கனத்து இருந்தது.சமீபத்தில் ஆயிரத்து ஐநூறு பக்க இவரது நாவல் கரம்சோவ் சகோதரர்களைப் படித்தபோது ஏற்பட்ட அதே உணர்வு இப்போதும் ஏற்பட்டது.

 
 

அன்னா ஹசாரே தோற்றது ஏன்? அவரின் அரசியல் எது?

Posted by அகத்தீ Labels:அன்னா ஹசாரே தோற்றது ஏன்?
அவரின் அரசியல் எது?

சு.பொ.அகத்தியலிங்கம்


அன்னா ஹசாரே போராட்டம் தோற்றுவிட்டதா?அல்லது சுயரூபம் அம்பலமாகிவிட்டதா?உணர்ச்சிவசப்படாமல் அலச வேண்டிய தருணம் வந்துவிட்டது.
கேள்வி-1
முதலாவதாக ஊழலுக்கு எதிரான மக்கள் கோபம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வீறிட்டெழுந்தது ஏன்?

பதில்:
கையூட்டு,லஞ்சம்.லாவணியம்,ஊழல்,முறைகேடு இவை எல்லா காலத்திலும் இருந்துவந்துள்ளது. ஆளும் வர்க்கமும் சுரண்டும் கூட்டமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில ஓட்டைகளை உருவாக்கும்.குறுக்கு வழியில் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்-கோடீஸ்வரர் ஆகமுடியும் என்ற மயக்கவலையை விரிப்பதன் மூலமும்,சில எலும்புத்துண்டுகளை வீசி எறிவதன் மூலமும் வாலைக் குழைக்கும் நாய்களைத்  தன்னைச் சுற்றிவரச் செய்வது ஆளும் வர்க்கத்தின் தேவை.மக்களின் பார்வை சுரண்டலின் ஆணிவேரை அடையாளம் காணவிடாமல் தடுக்கவும் மக்கள் எழுச்சியை முடிந்தவரைத் தள்ளிப்போடவும் அது ஒரு உத்தியாகும்.அதே சமயம் ஊழலுக்கு எதிராக உரக்கக் குரைப்பதன் மூலம் தங்களை மீட்பர்களாக முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும்;அதாவது கொள்ளைகாரர்களே நியாயவாதிகளாய் மாறும் ரசவாத நிகழும்.சுரண்டலுக்கும் ஊழலுக்கும் இடையிலான மர்ம முடிச்சை அறுத்தெறியாமல் திசைதிருப்பும் வித்தையை ஆளும் வர்க்கம்  நுட்பமாக அறியும்.அந்த நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றவும் செய்யும்.

அதிலும் உலகமய யுகத்தில்.தாரளமய சகாப்தத்தில் ஒரு நாட்டின் இயற்கை வளத்தையும் ,செல்வாதாரங்களையும் தங்குதடையின்றி சூறையாட பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தப் பசியோடு நுழையும்.அதனை சாத்தியமாக்க ; இயல்பாக எழும் உள்ளூர் கோபங்களைச் சரிக்கட்ட தனக்கு கையாட்களை வளைத்துப்போடும்.அதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவு பணம் கைமாறும்.புதிய திடீர் கோடீஸ்வரர்கள் உருவாக்கப்படுவார்கள்.சுயநல அரசியல்வாதிகள் பணமழையில் திழைப்பார்கள்.தற்போது இந்தியாவில் நடப்பது இதுதான்.ஆனால் இந்த தாரளமயக் கொள்கைகள் மக்கள் வாழ்வை பெரும் பள்ளத்தில் உருட்டிவிடுவதால் எழும் கோபத்தை மடைமாற்ற ஊழல் எதிர்ப்பையே ஆளும் வர்க்கம் ஆயுதமாக்குவதுதான் முரண்நகை..இப்போது இந்தியாவில் நடப்பது இதுதான்.அவர்களின் படைப்பே அன்னா ஹசாரே.

கேள்வி-2
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நாடகம் ஆடுகிறாரா ?அவர் நடத்திய போராட்டம் ஆரம்பத்தில் பெருமளவு மககளை ஈர்த்தது உண்மையல்லவா?

பதில்:
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் கோபமும் ஆவேசமும் நியாயமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அவர் போர்க்கொடி தூக்கியதும் காலத்தின் தேவையே.ஒரு பகுதி படித்த மத்தியதர வர்க்கம் அவர் பின்னால் திரண்டதும் சமூக யதார்த்தமே.அதே சமயம் அவருக்கு ஊழலுக்கு எதிராக கோபம் இருந்த அளவுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை.அவரின் தத்துவப் பின்புலம் அப்படி.அதனைப் பின்னர் பார்ப்போம்.

2ஜி,காமென் வெல்த்.ஆதர்ஷ் என படை எடுத்த ஊழல் ஆள்விழுங்கி மலைப்பாம்புகள்  உருவாக்கிய வெஞ்சினத்தை தன் ஆட்சிக்கனவுக்கு மூலதனமாக்க பாஜக விரும்பியது,ஆயினும் அவர்களின் குரல் எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டது.எனவே அவர்களின் சங்பரிவார் வழக்கப்படி முகமூடி தேடிய வேளை வசமாக அகப்பட்டார் அன்னா.அதிலும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அறிவுஜீவிகள் களத்தில் நின்றது சுலபமானது.பாஜக பின்பலத்தோடு ஊடகங்களின் எல்லைமீறிய ஆதரவோடு அன்னா ஹீரோ ஆக்கப்பட்டார்.தொண்டு நிறுவனங்களும் அந்நிய நிதி உதவியோடு இயங்குவதும்;அவற்றின் அரசியல் உள்நோக்கமும் ஒன்றோடொன்று ஒத்துப்போக அன்னா டீம் காந்தக்கவர்ச்சியோடு களத்தில் காட்சியளித்தனர்.சுரண்டும் வர்க்கத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் அடிப்படையில் அன்னா இயக்கம் ஆபத்தானதும் அல்ல. அடிப்படை மாறுதலுக்கானதுமல்ல.ஆதலால் நாலா பக்கமும் ஆதரவு பெருகியது.பாஜவின் தொண்டர் பலமும் அமைப்பு பலமும் இதன் ஆதார தளமாக இருந்ததை ஆர்.எஸ் எஸ் தலைவர் ஒரு பேட்டியில் போட்டுடைத்திவிட்டார்.ஆயினும் அதை மறுத்துவந்தனர்.

ஊடக விளம்பரமும் செல்வாக்கும் அன்னா டீமுக்கு போதை மயக்கத்தை தந்தது.விளைவு நாடாளு மன்றத்தைவிட இவர்கள் நாலைந்து பேரே சகலத்தையும் தீர்மானிக்கும் அக்மார்க் யோக்கியர்கள் என்ற ரீதியில் செயல்படலானார்கள்.பா.ஜ.கவுக்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டது.பாபா ராம்தேவை போட்டிக்கு களத்தில் இறக்கிப் பார்த்தது.குட்டை குழம்பியது.அன்னா ஹசாரேவின் இன்னொருபக்கமும் வெளிச்சத்துக்கு வந்தது.அது சமூக நீதிக்கு எதிரானது.வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப்பிடித்தது.ஜனநாயகத்தை மறுத்தது.இவை எல்லாம் அன்னா மீதான மோகத்தைக் குறைத்தது.இன்றைய[ஆகஸ்ட் 4] தினமணி தலையங்கம் பாஜக அன்னா விவகாரத்தில் முழுமையாக பின்புலமாக நின்றதை ஒப்புக்கொண்டுள்ளது.தேசியக்கொடியையே முகமூடியாக்கியதுதான் சங்பரிவார் சாமர்த்தியம்.ஆனாலும் என்ன செய்ய அன்னாவின் செல்வாக்குபோதையேறிய செயல்பாடும் பேச்சும் அவர்களுக்கும் சங்கடமாகிவிட்டதே.ராம்தேவ் வாழ்த்தவரும்போது மட்டுமே ஒரளவு கூட்டம்;அப்புறம் இல்லை என்பதை செயலில்காட்டி அன்னாவுக்கு தங்கள் பலத்தைக் காட்டியும் விட்டார்கள்.காற்றடைத்த பலூனில் ஒட்டைவிழுந்து சுருங்கி,சூம்பியது கண்டி அன்னா டீம் நொந்தது.விளைவு அரசியலுக்கு வரப்போபதாக கூறி உண்ணாவிரத நாடகத்துக்கு திரை போட்டுவிட்டனர்.ஒவர் பிளே என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல் வரம்பெல்லை கடந்து அரங்கேற்றிய நாடகம் துன்பியலாக முடிந்தது.
கேள்வி:3  
இது ஊழல் எதிர்ப்புக்கு பின்னடைவாகாதா?அல்லது இனியும் ஊழலை பற்றி பேசுவது வீண் என்று ஆகிவிடாதா?இது அன்னாவுக்கு கிடைத்த தோல்வியா?மக்களுக்குக் கிடைத்த தோல்வியா?

பதில்:
அன்னாவின் தவறான அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வியே,ஆயினும் லோக்பால் மசோதா பற்றிய ஒரளவு விழிப்புணர்வு பரவிட அன்னா போராட்டம் உதவியது எனில் மிகையல்ல.லோக்பாலோ, ஜன்லோக்பாலோ ஊழலுக்கு எதிரான சர்வரோகநிவாரணி அல்ல.ஊழலின் ஊற்றுக் கண்ணான இன்றைய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து முறியடிக்காமல் பெரும் மாற்றம் காண இயலாது.இந்தப் பார்வை இல்லாதுதான்அன்னாவின் பெரும் பலவீனம்.ஊடகங்கள் காட்டியதுபோல் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர் பின் திரள வில்லை.படித்த மேல்தட்டு வர்க்கத்தின் சிறுபகுதியினரே திரண்டனர்.அவர்கள் சமூகநீதிபோரில் எதிர்நிலை எடுப்பவர்கள்.ஊழலுக்கு காரணமான பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பவர்கள்.அதனால் பலனடைந்தவர்கள்.இந்த வர்க்கசேர்மானமும் அன்னாவின் பலவீனம்.,உழைக்கும் மக்களை ஈர்க்கவோ இணைக்கவோ இவர்களிடம் எந்த கோஷமும் இல்லை.திட்டமும் இல்லை.நோக்கமும் இல்லை.ஆகவே இதை மக்கள் தோல்வி என்பது பேதமை.பிதற்றல்.மேல்தட்டுமக்களின் விரக்திப் புலம்பலே அது.அரசியல் உறுதி இல்லாமல் வறுமை ஒழிப்போ,ஊழல் ஒழிப்போ சாத்தியமே இல்லை.அது குறித்து இவர்கள் இப்போது பேசுவதும்கூட அரைகுறையானதே.

கேள்வி-4
அரசியல் உறுதி எனபது யாது? அன்னா கட்சி தொடங்கினால் வெற்றி கிட்டுமா?கட்சி என்றானதும் முதலாளிகள்,அந்நிய நிறுவனங்களிடம் தானே நிதி திரட்டல் இருக்கும்;அப்படியானால் ஊழல் எதிர்ப்பு எதிர்ப்பு என்ன ஆகும்?

பதில்:
அரசியல் உறுதி என்பது வெற்றுப் பிரகடமல்ல.தத்துவம் சார்ந்தது.இடதுசாரிகளின் அரசியல் உறுதி பாட்டாளிவர்க்க நலன் சார்ந்தது.அதற்கேற்ற மார்க்சிய தத்துவம் சார்ந்தது.பாஜகவின் அரசியல் உறுதி மேல்தட்டினர் மற்றும் முதலாளி வர்க்க நலன் சார்ந்தது.இந்துத்துவா எனப்படும் சனாதனம் சார்ந்தது.பாட்டாளிவர்க்கம் ஊழலுக்கு எதிரானது.முதலாளிவர்க்கம் ஊழலை ஊட்டி வளர்ப்பது.காங்கிரசும் இதர கட்சிகளும் முதலாளித்துவ நலன்களை பிரதிபலிப்பவையே.வட்டாரம்,பிராந்தியம் சார்ந்து சில கட்சிகள் சற்று மாறுபடலாம்.ஆயினும் ஊழல் எதிர்ப்பில் அரசியல் உறுதியை இடதுசாரிகளைத் தவிர வேறுயாரிடமும் எதிர்பார்க்க முடியாது.அன்னாவின் அரசியல் எத்தகையது என்பது ஏற்கெனவே ஓரளவு மக்களிடம் அம்பலமாகிவிட்டது.எனவே அடுத்த கட்ட நாடகம் இன்னும் மோசமாகவே அமையும்.

கேள்வி-5
நல்லவர்கள்,நேர்மையாளர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?வருவதற்கு முன்பே முன்கணிப்புகள் சொல்லலாமா?
பதில்:
நல்லவர்களும் நேர்மையாளர்களும் அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதுதான் தப்பு.அரசியல் கிரிமினல் மயமாவதற்கு இப்போக்கும் ஒரு காரணம்.எனவே அவர்களின் அரசியல் வருகையை இருகைதட்டி வரவேற்போம்.அன்னா அவர் கிராமத்தில் தேர்தலே நடத்த விடுவதில்லைஎன்பதும்.தாழ்த்தப்பட்ட மக்கள் வர்ணாஸ்ர அடிப்படையில் நடத்தப்படுகிறார்கள் என்பதும்,மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைக்கிறார் என்பதும்,கூட்டுறவு சங்கத்துக்கு  தேர்தலே நடத்துவதில்லை எல்லாம் நியமனம்தான் என்பதும்,சிறுபாண்மையோருக்கும்,சமூகநிதிக்கும்,இடஒதுக்கீட்டுக்கும் எதிரானவர் என்பதும் அம்பலமான உண்மைகள்.அன்னாவின் தீவிர ரசிகர் ஜெயமோகன் இதுதான் இந்தியபாணி கிராம ஆட்சி என அவர் நூலில் வியந்துள்ளார்.இந்த பின்னணியில் அன்னாவின் அரசியல் பிரவேசம் நம்பிக்கை அளிப்பதைவிட ஐயத்தையே அதிகம் தருகின்றது.இதற்கிடையில் அன்னா காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து காங்கிரசுக்கு சாதகம் செய்துவிடுவார்;பாஜவுக்கு இழப்பாகும் என அலறுகிறது தினமணி தலையங்கம்.இல்லை இல்லை மாநிலக்கட்சிகளின் வாக்கைக் கவருவதன் மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடிதருவார்;பாஜகவுக்கு சாதகம் ஆகும் என்கிறார்கள்  வேறு சில விமர்சகர்கள்.பெரிதாக யாருக்கும் எந்த பாதிப்பையும் அவரால் ஏற்படுத்த முடியாது என்கிறார்கள் இன்னொருசாரார்.காலம் அனைத்துக்கும் உரிய பதிலை வைத்துக் கொண்டு புன்னகைக்கிறது.