தூய்மைப் பணியிலிருந்து விடுதலை எப்போது ?
[ இங்கே நான் சொல்லுவது முழுவதும் என் சொந்தக் கருத்தே.]
தூய்மைப் பணியாளர் போராட்டத்தை ஆதரிக்கிறேன் . அவர்கள் ஊதியம் குறையக்கூடாது என்பது மட்டும் அல்ல அதிகரிக்கவும் வேண்டும் .பணி பாதுகாக்கப்பட வேண்டும் . பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் .தனியார் மயம் கூடாது . இக்கோரிக்கைகளை ஆதரிப்பதும் திமுக அரசின் ஒட்டுக்குமுறையை எதிர்ப்பதும் முற்றிலும் சரி ! முற்றிலும் நியாயம் ! இது ஒரு புறம் .
தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தை சமூக இழிவிலிருந்து மீட்க சொல்லப்படும் வாதங்கள் பல. அவை அபத்தமாய் உள்ளன ,கற்பனையாக உள்ளன. சாதிசமூக வேரைச் சரியாக உள்வாங்கதவையாக உள்ளன என்பது என் கருத்து . சில வாதங்களைப் பார்ப்போம்.
1] பணி நிரந்தரம் கூடாது ; அப்போதுதான் வேறு பணி தேடி செல்வார்கள் .
2] ஒடுக்கப்பட்ட சாதியினர் தூய்மைப் பணியிலிருந்து வெளியேற வேண்டும்
3] தூய்மைப் பணிக்கு அதிக ஊதியம் கொடுத்தால் எல்லா சாதியிலிருந்தும் வருவார்கள் .
4] வேறு சாதியினர் தூயமைப் பணிக்கு வந்தால் எல்லாம் இயந்திர மயமாகிவிடும் . நவீன மயமாகிவிடும்.
முதலில் பணி நிரந்தரம் என்பது பொருளாதார ரீதியான குறைந்தபட்ச பாதுகாப்பு . அதில் காலூன்றி தம் சந்ததியினரை படிக்கவைத்து வேறு பணிகளுக்கு அனுப்ப இயலும் . ஆகவே முதல் யோசனையை ஏற்க முடியாது . சமூக பாதுகாப்போடு கூடிய பணி நிரந்தரம் என்பது வர்க்க நலன் ,சமூகநிதி இரண்டிற்கும் அடிப்படையாகும் .
இரண்டாவது , தாங்களாக அப்பணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை நிராகரிக்கவும் முடியாது ;வற்புறுத்தவும் முடியாது .ஒரு காலத்தில் நாடார் சமூகம் என்ன நிலையில் இருந்தனர் ? ஆயின் , சுயமாக வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் காலூன்றி எழுந்தனர் என்பதும் அதற்கொப்ப அங்கே அக்காலத்தில் ஓர் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது என்பதும் அனுபவம் . அதை அப்படியே காப்பி அடிக்க முடியாது .அன்றைய சூழல் வேறு ;இன்றைய சூழல் வேறு . ஆயினும் , படிப்பை கெட்டியாகப் பிடித்து சந்ததியினரை முன்னுக்கு கொண்டுவரலாம் .அதன் மூலம் தூய்மைப் பணியை உதறலாம் .இப்போதே வேறு பணிகளுக்குள் நுழைந்தோ [ அதனை முன்னிட்டு புலம் பெயர்ந்தாவது ] தூய்மைப் பணியை உதறலாம். இது அவரவர் தேர்வைப் பொறுத்தது ;திணிக்க முடியாது . அப்படி உதறி எழுவது அவர்களின் உரிமை விருப்பம் வாய்ப்பு சார்ந்தது . முடிவெடுக்க வேண்டியது அவர்களே !
மூன்று , அதிகச் சம்பளம் கொடுத்தால் எல்லா சாதியினரும் இப்பணிக்கு வந்துவிடுவார்கள் என்பது மிகை மதிப்பீடு . அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் வரக்கூடும் ; இப்போதும் உள்ளனர் .ஆனால் அவர்கள் குறுக்கு வழிகளில் இப்பணியைச் செய்யாமல் பிறர் தலையில் கட்டிவிட்டு மேய்ப்பனராகி விடுகின்றனர் . அப்படியே செய்ய நேரிட்டாலும் ‘கார்ப்பரேஷன் வேலை’ என வெளியில் சொல்லித்
திரிவர் . இப்பணியிலும் உயர் பொறுப்புகளுக்கு வேறு சாதியினர் வருகின்றனர் . அது பதவி கிரீடமாகிவிடுகிறது .sewage
engineer கழிவுநீரகற்று
பொறியாளர் , wast
management expert கழிவு
மேலாண்மை வல்லுநர் போன்றவற்றில் வேறு சாதியினர் வந்துவிட்டனர் .ஆனால் அடிமட்டத்தில் குப்பையை ,கழிவை நேரடியாக அகற்றும் பணியில் இன்னும் சாதியில் ஒடுக்கப்பட்டோரே உள்ளதைப் பார்க்க வேண்டும். ஆகவே அதிகச் சம்பளம் கொடுத்தால் இழிவு தொலைந்து எல்லோரும் வருவர் என்பது மிகைக் கற்பனையே !
நான்காவதாக , வேறு சாதியினர் இந்தப் பணிக்கு வந்தால் எல்லாம் நவீனமாகிவிடும் என்பதும் ஓர் மிகைக் கற்பனையே . இன்று அடுப்பங்கரை நவீனமயமாகிவிட்டது ஆயினும் இந்த அறைக்குள்தானே பெண்களைப் பூட்டி வைக்கிறோம். ஏன் எனில் பாலின சமத்துவ சிந்தனை இன்னும் வலுவாக வேர்விடவில்லை என்பதால்தானே . ’கேட்டரிங் டெக்னானலஜி’ படிக்க ஆண்கள் அதிகம் முட்டி மோதினாலும் , வீட்டு சமையலறை சுமை முழுவதும் யார் தலையில் ? பெண்கள் தலையில்தானே! ’லெதர் டெக்னாலஜி’ படிக்க ஐஐடி போவது யார் ? மேல் சாதியினர் . தோலைப் பதப்படுத்தும் அடிமட்டப் பணியில் இன்னும் யார் உள்ளனர் ? ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினருமே ! ஆகவே நவீனம் மட்டுமே முழுவிடுதலை தந்துவிடுமா ?
உழவாரப் பணி , கோயில் குளத்தை சுத்தம் செய்வது புண்ணியம் , காந்தி ஆசிரமத்தில் எல்லோரும் தூய்மைப் பணி செய்தனர் , ’தூய்மை இந்தியா’ என கூவி மோடி
பெரிதாகத் தப்பட்டம் அடித்தார் . காலங்காலமாகப் பிரச்சாரம் தொடர்கிறது .ஆனாலும் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவது என்பது நம் பழக்க வழக்கமாக பண்பாட்டுக் கூறாக இன்னும் மலரவில்லையே ஏன் ? தடை நம் மூளையில்தான் உள்ளது .
தூய்மைப் பணி என்பது கர்மயோகம் என எழுதி ; அதன்
மூலம் சொர்க்கம் நிச்சயம் என மோடி உறுதி
சொன்ன பின்பும் குஜராத்தில் கூட வேறு சாதியினர் தூய்மைப் பணிக்கு வந்தனரா ? இல்லையே ! சொர்க்க வாசல் திறக்க வைகுண்ட ஏகாதேசியில் விழித்திருக்கும் ஆன்மீகக் குஞ்சுகள் சொர்க்கத்தற்கு ’எளிதான ரூட்’ என மோடி சொன்ன
இப்பணியில் வந்தனரா ? தேசபக்தியை பற்றி வாய்கிழியப் பேசும் குஜராத்திகள் இராணுவதில்கூட சேருவதில்லை .அங்கே எல்லோரும் அம்பானி அதானி அல்ல ; வறுமை சூழினும் பாணி பூரி விற்றுப்பிழைத்தாலும் இராணுவத்திற்கு போவதில்லை குஜராத்திகள் . அது ஒரு சமூக இறுக்கம் . ஆக தூய்மைப்பணிக்கு அதிகச் சம்பளமோ
நவீனமோ இந்த சமூக இழிவைப் போக்கிவிடும் என்பதும் மிகைக் கற்பனையே !
மெத்தப் படித்தவர்கள் வாழும் எம் அடுக்ககத்தில் குப்பை கொட்ட தனி இடமும் தொட்டியும் உண்டு ; தினசரி பஞ்சாயத்தார் அதை எடுத்துச் செல்வர் . ஆனால் இங்கு குப்பைத் தொட்டியில் போடுவதில்கூட பொறுப்பின்மையே நிலவுகிறது . டூ விலரிலோ காரிலோ
பயணித்தபடியே குப்பைப் பையை வீசி எறிவதும் அது எங்கும் சிதறுவதும் வாடிக்கை . தெருக்களிலும் இதே நிலைதான் . மாடியிலிருந்து வீசும் புத்திசாலிகளும் உண்டு . எங்கள் அடுக்ககத்தில் ஹவுஸ் ஹிப்பிங் தூய்மை பணி செய்யும் வேலைக்கு ஊதியம் உயர்த்த வேண்டும் என்ற வாதம் எழுந்த போது , இது பெண்கள் வேலை ஆண் செய்தாலும் குறைவாகத்தான் சம்பளம் கொடுக்க வேண்டும் என வாதிட்ட படித்த
நல்ல ஊதியம் வாங்குகிற பிரக்ஸ்பதியைப் பார்த்தேன். குப்பை அள்ளுபவரை மனிதனாகவே மதிப்பதில்லை . கடுமையாக சண்டை நடத்தி ஊதியம் உயர்த்தினோம் . குடியரசு தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பை அளித்து பெருமைப் படுத்தினோம். இது சும்மா தகலுக்காக .
வீட்டில் குப்பைகளை பெருக்குவது துணி துவைப்பது [ வாஷிங்மெஷின் ஆனாலும் ] , வீட்டை சுத்தம் செய்வது ,பாத்திரம் கழுவுவது எல்லாம் இன்னும் பெண்கள் தலையில்தானே பெரிதும் சுமத்தப்படுகிறது . பெண்களால் இச்சுமையைத் தூக்கி எறிய முடியாத அளவு குடும்பச் சூழல் ,சமூகச்சூழல் . அந்தக் கோபத்தில் கண்ணை மூடிக்கொண்டு குப்பையை வெளியே தூக்கி வீசுகின்றனர் . தெருக்களிலும் இதே நிலைதான் . மாடியிலிருந்து வீசும் புத்திசாலிகளும் உண்டு .
வீட்டுக்கு உள்ளே தூய்மைப் பணி செய்ய பெண்கள் ,வெளியே தூய்மைப் பணி செய்ய ஒரு குறிப்பிட்ட சாதி என்கிற சனாதனப் பார்வை நம் மூளையில் உறைந்திருப்பதால் தூய்மையைப் பற்றிய பொறுப்பற்று குப்பையை கண்டபடி வீசுகிறவராக உள்ளனர் ஆண்களும் பெண்களும் . இந்த கரடு தட்டிப்போன வறட்டுப் பார்வை அனைவர் மூளைகளிலிருந்தும் துடைத்தெறியப்படும் வரை பெரிய மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை . ’தூய்மை இந்தியா’ அதுவரை வெறும் பேச்சே ! அடித்தளத்திலிருந்து எரிமலைபோல் கலகம் வெடிக்கும் போதே விடை கிடைக்கும் . அதற்காக இப்போதே கனலை விசிறிவிடுவது தவறல்ல . தேவை .
சமூகநீதி பேசுகிறவர்களும் சமத்துவம் பேசுகிறவர்களும் இந்தப் போரில் ஒன்றிணையாமல் விடிவு இல்லை . இதனை உணர்ந்தோமா ?
சுபொஅ.
21/08/25.