நானும் ஒரு
காலத்தில் ஊடகத்தில் பணியாற்றியவன் என்கிற முறையில் பழைய ஊடக நண்பர்களோடு தனிப்பட்ட
முறையில் உரையாடிக் கொண்டிருந்த போது மனது ரொம்பவே வலித்தது . ஊடகங்கள் இந்த அளவா சீர்கெட்டுப்
போயிருக்கு என எண்ணிக் கலங்கினேன்.
முதலில் ஊடகத்தில்
பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பின்மையும் , ஊதிய விகிதமும் .பணிச்சூழலும்
கவலை அளிக்கிறது. கிட்டத்தட்ட அத்துக்கூலி போல் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்
. வலுவான போராட்ட குணமிக்க தொழிற்சங்க அமைப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது .
செய்தி என்பது
வாங்கும் காசுக்கு ஏற்ப என்றாகிக் கொண்டிருக்கிறது ; அதாவது ஊடக முதலாளிகள் வாங்கும்
தொகைக்கு ஏற்ப எனப் புரிந்து கொள்க . முதல்வர் போன்ற ஒன்றிரண்டு பேர் பேட்டிகளே காசு
வாங்காமல் செய்தியாகும் அதுவும் அந்தந்த ஊடக அரசியல் சார்புக்கு ஏற்ப. மற்றபடி யார்
பேட்டி ஆயினும் காசை அள்ளிக் கொடுக்காமல் வராது . அதிலும் ஹோட்டல் ,பிரைவேட் ஹாஸ்பிடல்
இவற்றில் காம்போ என்பது போல் இங்கும் பலவித
காம்போக்களை/ பேக்கேஜ்களை மீடியா முதலாளிகள் வைத்துள்ளனர் .
அதேபோல் யூடியூப்
சேனல் ஒவ்வொன்றுக்கும் யார் யார் பினாமி என பழைய நண்பர்கள் சொல்லும் போது அதிர்ச்சியாக
இருக்கிறது . நடுநிலையாவது புண்ணாக்காவது ? சொல்லுகிற செய்தியில் ஒன்றிரண்டு தகவலாவது
சரியாக இருந்தால் அது குதிரைக் கொம்புதான் .
ஒரு காலத்தில் ஒரு சிறு பகுதி செய்தியாளர்கள் காசுக்கு மண்டையைச்
சொறிவார்கள் ,அது கேவலமாகக் கருதப்படும் . இன்று மதிப்புக்குரிய ஏடுகளின் செய்தியாளர்களும்
வாங்கத் தவறுவதில்லை .அதை வாங்கி பங்கு போட்டுக் கொடுக்க ஏஜென்சி போல் செயல்படுபவர்
சிலர் இருக்கிறார்களாம். ஊடக முதலாளிகளே இதை சம்பளக் குறைப்பின் மூலம் ஊக்குவிப்பதாகச் சொல்லப்படுகிறது .
ஊடக தர்மம்
.ஊடக அறம் . என்பதெல்லாம் வெறும் சொற்சிலம்பமாகிக் கொண்டிருக்கிறது . அறம் நடுநிலை
என வேடம் பூணும் ஊடகங்கள் பலவும் கூட பின்னால் இருந்து இயக்குபவர்கள் செயல்திட்டத்தோடுதான்
இணைந்து செயல்படுகின்றனவாம் .
காரல் மார்கஸ்
சும்மாவா சொன்னார் , “ ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலன் ஒளிந்து
கொண்டிருக்கிறது.” இங்கு வர்ண நலமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சேர்த்துப் புரிந்து
கொள்ள வேண்டி இருக்கிறது .
சுபொஅ
20/08/25
0 comments :
Post a Comment