சும்மா கிடந்த சொல்லை எடுத்து -22

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து -22எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது...


சு.பொ.அகத்தியலிங்கம்

அது நீண்டதோர் இரவு
சிவப்பு தேசத்திற்கு
விடியல் மெதுவாக வந்தது.
ஒரு நூற்றாண்டுக் காலம்
பிசாசுகளும் அரக்கர்களும்
வெறித்தனமாக நடனமாடினார்கள்.
ஐம்பது கோடி மக்கள்
ஒன்றுபடாமல் சிதறுண்டு கிடந்தார்கள்.

இப்போதோ சேவல் கூவிவிட்டது.
வானத்தின் கீழ் உள்ள அனைத்தும்
பிரகாசிக்கின்றன.
யூதியெனில் வசிப்போர் உட்பட
நம் மக்கள் அனைவரின் இசையும்
இங்கே ஒலிக்கிறது .
இதுவரை கிடைத்திராத உத்வேகம்
இப்போது
கவிஞனுக்குக் கிடைத்துவிட்டது


செஞ்சீனத்து சூரியன் தோழர் மாவோ 1950 ல் எழுதிய கவிதையின் ஈரம் இன்னும் பசுமையாக இருக்கிறது.

 என் செல்லப் பறவையே! / சென்று விடு / சென்று விடு / தாமதிப்பாயெனில்/உன்னைத் தொடர்ந்து / நானும் வருவேன் / மதுவின் மூலம் அல்ல../ என் கவித்து வத்தின் / கண்ணுக்குத் தெரியாத சிறகுகள் /உன்னருகே என்னைக் / கொண்டு வந்து சேர்க்கும்
-          இவ்வாறு வானம்பாடியை நோக்கி ஜான் கீட்ஸ் பாடுகிறான்.
-           
கவிதையே ஓர் உருவாகத் தோன்றியவர் ஜான் கீட்ஸ் என்று சொல்லலாம். மரங்களில் இலைகள் தோன்றுவதுபோல செடிகளில் பூக்கள் மலர்வதுபோல ஜான் கீட்ஸிடம் கவிதை பிறந்துவிட்டதுஎன்பர் இலக்கிய விமர்சகர்கள். 21 வயதில் கவிதை எழுத ஆரம்பித்து 26 வயதில் மரணத்தைத் தழுவிவிட்ட ஜான் கீட்ஸ் எனும் அந்த புகழ்மிகு ஆங்கிலக்கவியும் , 34 வயதில் மரணத்தைத் தழுவிவிட்ட நம் பட்டுக்கோட்டையும் என்றும் அழியாக்கவிதைக்குச் சொந்தக் காரர்கள்.


நமது பூமியில் எழுதுதல் என்பது கண்டறியப்படுவதன் முன்பே , அச்சுப் பொறி கண்டறியப் படுவதன் முன்பே , கவிதை தழைத்தோங்கி வளர்ந்திருந்தது. அதனால் கவிதை ரொட்டியைப் போன்றதென்றும், அறிவாளிகளாலும் உழவாளிகளாலும், பரந்து விரிந்த விந்தை மிகுந்த அசாதாரணத்தன்மை வாய்ந்த நமது மானுடக் குடும்பத்து எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டியது என்றும் நாம் அறிகிறோம்.” - என்பார் பாப்லோ நெருதா.


ஆம், பட்டுக்கோட்டையின் பாடல்களில் தன் மனதை பறிகொடுக்காதார் யார்? வியர்வையின் வாசமும் - காட்டுப்பூவின் எழிலும் - வயல்களின் பசுமையும் - கிராமத்து எளிமையும் நாடோடிச் சந்தமும் - இரத்தத்தின் கதகதப்பும் - இதயத்தின் உயிர்துடிப்பும் -ஒருங்கே அமைந்து மண்ணில் வேர்கொண்ட - மானுட விடுதலையைக் கனவு கண்ட பட்டுக்கோட்டையின் பாடல்களை இன்னும் இன்னும் எழுத எழுத என் எழுத்துக்கு இளமை மிடுக்கு வரும்.. ஆயினும் எதற்கும் ஒரு வரம்பு வேண்டுமே! முடிவுரை எழுத மனமில்லை; என்றும் முடிவற்ற உயிர்த்துடிப்பன்றோ அவன். இன்னும் இங்கு எடுத்து விவரிக்காத பாடல்களும் கவித்துவமிக்க வரிகளும் நிரம்ப உண்டு - அவற்றையெல்லாம் இடம் காலம் கருதி தவிர்ப்பினும் இன்றைய அரசியல் சமூகத் தேவை கருதி இரண்டு பாடல்களை இங்கு சொல்லியே ஆக வேண்டும்.
நன்றி கெட்ட மனிதருக்கு / அஞ்சி நிற்க மாட்டோம் / நாவினிக்க பொய் யுரைக்கும் / பேரை நம்பமாட்டோம் - என்று / கூறுவோமடா - ஒன்று /சேருவோமடா/ வீறுகொண்டு சிங்கம் போல் / முன்னேறுவோமடா” - இவ்வாறு கம்பீரமாக அழைக்கிறார் பட்டுக்கோட்டை. “இரும்புத்திரை” (1960) படத்தில் இடம் பெற்ற இப் பாடல் இன்றும் இடதுசாரி மேடைகளில் ஒலிக்கத்தகுந்தவை. “சிங்கம் சிங்கிளாத்தான் வரும்என்கிற சமீபத்து திரைப்பட நெற்றியடி வசனம் அதாவது சினிமா பஞ்ச் டயலாக் அறிவியலும் அனுபவமும் இல்லாத கத்துக்குட்டித்தனம். சிங்கம் கூட்டமாகவே வரும் என்பதே இயற்கைவிதி. சிங்கம்போல் கூட்டாக முன்னேற அழைத்தார் பட்டுக்கோட்டை.
அடுத்தடுத்த வரிகள் குத்தீட்டியாய் மூளையையும் இதயத்தையும் ஒருங்கே தாக்கும். “எளிய மக்கள் தலையில் காசு / ஏறி மிதிக்குது - அதை / எண்ணி எண்ணித் தொழிலாளர் / நெஞ்சு கொதிக்குது / வஞ்சனைக்கும் அஞ்சிடோம்/வஞ்சனைக்கும் அஞ்சிடோம் / பஞ்சம் நோய்க்கும் அஞ்சிடோம் / பட்டினிக்கும் அஞ்சிடோம்/ நெஞ்சினைப் பிளந்தபோதும் / நீதிகேட்க அஞ்சிடோம்/ நேர்மையற்ற பேர்களின்/ கால்களை வணங்கிடோம் / காலி என்றும் கூலி என்றும் / கேலி செய்யும் கூட்டமே/காத்துமாறி அடிக்குது நீர் / எடுக்கவேணும் ஓட்டமே / தாலி கட்டிக் கொண்ட மனைவி/ போலுழைத்த எங்களைத் / தவிக்கவிட்ட பேரை எந்த / நாளும் மறக்க மாட்டோமேகுதிரையின் குளம்படி போல் மிடுக்காய் பயணிக்கும் இப்பாடல் நாடிநரம்பு களைச் சுடேற்றும். ஐயமில்லை. இன்றும் எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக் கத்தானே செய்கிறது. நாம் ஒன்றுசேர வேண்டாமா? இன்றையச் சூழலுக்கு கச்சித மாகப் பொருந்தும் பாடலொன்று. எழுதிய வருடம் தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் மேடையில் பாட எழுதியது.
இன்றும் பாடத்தகுந்தது.“ஒன்றுகூடி நின்று வீரசிந்து / பாடுவோம் வெற்றி / சூடுவோம் / நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று / வாட்டுவோம் நீதி / நாட்டுவோம்என அறைகூவும் பட்டுக் கோட்டை ; யார் ? யாருக்கு எதிராக என எழும் கேள்விகளுக்கு அடுத்து படையெ டுக்கும் சரணங்களில் விடை சொல்வார். “ ஈரமற்ற நெஞ்சுகொண்ட / ஈனர் மாய்கவே / ஏழையை மிதித்து வாழும் / எத்தர் வீழ்கவே / கோழை என்று நம்மை எண்ணும் / கொள்கை போக்குவோம் கிளர்ச்சி கொண்டு தாக்குவோம் / கூடிநின்று கொடி உயர்த்திக் / கொட்டி முழக்கு வோம் செல்வர் / கொட்ட மடக்குவோம் / தோழர்காள் ! துணிந்த / வீரர்காள்இந்த வரிகளுக்குப் பொருள் சொல்ல புலவர் தேவையில்லை. யார் யாருக் கெதிராக என்ன செய்வது எனச் சொல்லியதோடு நின்றாரா கவிஞர்? இல்லை.
அடுத்த சரணத்தில் குறிவைத்து சுட்டினார் , “சூழ்ச்சியால் நமைக் கெடுத்த / ஆட்சி வெல்லுவோம்/ வஞ்சகர் செருக்கொழித்து / வாழ்க்கை எய்துவோம் ”. சூழ்ச்சியால் நம்மை ஏமாற் றிக்கொண்டே இருப்பவர்களைத்தானே தொடர்ந்து மத்தியிலும் மாநிலத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாற்ற வேண்டாமா ?வேண்டும் மாற்றம். ஆனால் எதை நோக்கி ? கடைசி சரணத்தில் கூர்மையாகப் பாடுகிறார் , “கஞ்சியில்லை என்ற சொல்லைக் / கப்பலேற்றுவோம் செகத்தை / ஒப்ப மாற்றுவோம் / பஞ்சை யென்று நம்மை எண்ணும் / பான்மை வெல்லுவோம் புரட்சிப் / பாதை செல்லு வோம் ! / தோழர்காள் ! துணிந்த / வீரர்காள் !” பட்டுக்கோட்டையின் அழைப்பை ஏற்று வாரீர் தோழர்களே ! “வரம்பு மீறி வலுத்த கைகள் / மக்கள் கழுத்தை நெருக்குவதை”! இனியும் சகித்து கொண்டிருக்க முடியாது தோழர்களே ! “ தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்... தனிவுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்..” என பட்டுக்கோட்டை சொன்ன சொல்லை மறக்கலாகாது! களம் அழைக்கிறது. பட்டுக்கோட்டையின் பாடல்கள் கைவாளாய் நம்மிடம் மின்னுகிறது.

படைப்பாளிகளே ! பட்டுக்கோட்டையின் பாடல்களில் தோய்ந்தெழுங்கள் ! அவனை எந்த விருதும் அலங்கரித்ததில்லை .. ஆனால்மக்கள் கவிஞர்  என மக்களின் நெஞ்சில் குடியிருந்தான் . [ விருதுகளுக்கு நாம் எதிரி அல்ல ஆனால் நோக்கம் இன்னும் கூர்மையானது என்பதுதான் ] பாப்லோ நெருதா வாங்கிய நோபல் பரிசைவிட - ஆளும் வர்க்கம் அவன் கவிதைகளைக் கண்டு அஞ்சி கொடுத்த துப்பாக்கித் தோட்டாதானே உயர்ந்த அங்கீகாரம் ? நீங்கள் யாருக்காக பாடவேண்டும் படைக்கவேண்டும் என்பதை உணர இதுவே உரிய தருணம் . நல்ல தருணம் இதை நழுவ விடலாமோ !

அவசரகாலத்தில் நான் எழுதியது பின்னர் 1989 ஆம் ஆண்டு வீதி நாடகக் கலைஞன் சப்தர் ஹஷ்மி வர்க்க விரோதிகளால் குருதிவெள்ளத்தில் சாய்க்கப்பட்ட போது அவனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இளைஞர் முழக்கம் இதழில்  வெளியிட்ட கவிதை ! இதோ !

 நோபல் பரிசு வேண்டாம் !
ஞானபீடம் வேண்டாம் !
சாகித்திய அகாடமி வேண்டாம் !
ஆளும் வர்க்கத்தின்
அடிவயிற்றைப் புரட்டுகிற
அக்கினிக் கவிதைகள்
ஆயிரம் படைப்போம்அவை
தூக்கு மேடையைப்
பரிசாகக் கொண்டுவரட்டும் !
தூக்கு மேடையைப்
பரிசாக்க் கொண்டுவரட்டும் !”

( நிறைவு )

நன்றி : தீக்கதிர் இலக்கியச்சோலை [ 29-09-2014]