“புரட்டாசி சனிக்கிழமை”யும் ... “ லவ் ஜிகாத்து”ம்...

Posted by அகத்தீ Labels:



 “ புரட்டாசி சனிக்கிழமை ”யும் ... 

 “ லவ் ஜிகாத்து ”ம்...

சு.பொ.அகத்தியலிங்கம் .



புரட்டாசி மாதம் முழுவதும் சிலர் புலால் உண்ணமாட்டார்கள் . இன்னும் சிலர் புரட்டாசி சனிக்கிழமைகளில் புலால் உண்ணமாட்டார்கள் . தமிழகத்தின் தென் பகுதியைவிட வட பகுதியில் இப்பழக்கம்  அதிகம் . இது அவர்களின் தனிப்பட்ட உரிமை . பழக்கம் . விருப்பம் . இதனை யாரும் பழிக்க முடியாது . பழிக்கக் கூடாது . அதே சமயம் அடுத்தவர் புலால் உண்பதை அவர்கள் தடுக்கவும் கூடாது . இதுதான் ஜனநாயகம் . இதுதான் பண்பாடு . அப்படித்தான் நம் பழக்க வழக்கம் அமைந்துள்ளன . இந்த பண்பாட்டு நல்லிணக்கம் சிதைக்கப்பட்டால் என்ன ஆகும் ?



ரம்ஜான் நோண்பிருந்த ஒரு இஸ்லாமிய சகோதரன் வாயில் சப்பாத்தியைத் திணித்து - அதுவும் அவர்கள் பகலில் எச்சில்கூட விழுங்காத நேரத்தில் திணித்து அராஜகம் செய்தார் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் . நாடே கண்டித்தது . பிரதமர் மோடி வாயை இறுக்கமூடி மவுனம் காத்தது தற்செயலானதா ? இல்லை . அடுத்தடுத்து நடக்கும் பல சம்பவங்களை அசைபோட்டால் பெரும் வஞ்சகச் சதி தெளிவாகும் .



சீனப் பிரதமர் இந்திய வருகையின் போது ; குஜராத்தில் மோடி அவருக்கு சிறப்பு விருந்தளித்தார் . அந்த விருந்தில் புலால் பரிமாறக்கூடாதென்றும் முழுக்க முழுக்க புலால் அல்லாத சைவ உணவையே -  குஜராத் பாணியிலான நூறு வகை உணவுகளையே வழங்க ஏற்பாடு செய்ததாகவும்  ; அது மட்டுமல்ல இனி அரசு விருந்துகளில்  புலால் உணவு வழங்கக்கூடாதென கறாரக மோடி சொல்லிவிட்டதாகவும்  ; சில பத்திரிகைகள் புளங்காகிதத்தோடு செய்தி வெளியிட்டன . இது சரியா ? ஜனநாய பூர்வமானதா ? பண்பாடானதா ? இதை மேட்டிமைத்த்னத்தில் ஊறிவிட்ட அந்த ஊடகங்கள் சிந்திக்கத் தவறிவிட்டது .



ஒரு கற்பனை . மோடியை சீனப் பிரதமர் அவர் நாட்டுக்கு அழைத்திருக்கிறார் . இவரும் போகத் திட்டமிட்டுள்ளார் . அப்படிப் போகும் போது  சீனப் பிரதமர் தனக்கு விருப்பமான சீன உணவுகளையே மோடிக்கு வழங்கினால் - அதுவும் அவர்களுக்கு விருப்பமான சீன புலால் வகைகளை வழங்கினால் இதே ஊடகங்கள் என்ன சொல்லும் ? எப்படி ஊளையிடும் ? கற்பனை செய்து பாருங்கள் . ஆனால் அப்படி நடக்காது . பிறரின் உணவுப் பழக்கத்தை மதிப்பதை ஒரு கறாரான செயலாக உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.

ஒரு பழைய செய்தி . இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே . ஆர் . நாராயணன் ஒரு முறை ஆஸ்திரேலிய நாட்டிற்குச் சென்றார் . அது தீபாவளி நாள் . ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரே குழப்பம் . கிறுஸ்துமஸ் எனின் செம்மறியாட்டுக் கறி ; ரம்ஜான் எனில் ஒட்டகக் கறி ; தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் ? கே . ஆர் . நாராயணனிடமே கேட்டுவிட்டனர் . அவர் சொன்னாராம் . இந்தியா பல மொழி , பல பண்பாடு கொண்ட தேசம் ஒவ்வொரு பிரிவினரும் அவரவருக்கே உரிய முறையில் கொண்டாடுவர் . புலால் சாப்பிட்டுக் கொண்டாடுவோரும் உண்டு . புலாலின்றி கொண்டாடுவோரும் உண்டு . வேற்றுமையில் ஒற்றுமை . அதுவே எங்கள் பெருமை . எனக்கு உங்கள் நாட்டு உணவே போதும் . அவரின் இந்தப் பதில் நல்லிணக்கப் பண்பாட்டைப் பிரதிபலித்தது . ஆஸ்திரேலியர் அணுகுமுறை அவர்களின் நயத்தகு நாகரீகத்தை காட்டியது . மோடியிடம் அதனை எதிர்பார்க்க முடியுமா ?



இந்த நவராத்திரி காலம் முழுவதும் ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலின் படி  “ மாட்டுக்கறி உண்பதை எதிர்த்தும் ”,  “ லவ் ஜிகாத்தை கண்டித்தும் ” மோடியின் மாடல் குஜராத்தில் இந்துமதவெறி அமைப்புகளும் அவர்களின் மாதர் அமைப்புகளும் பிரச்சாரம் செய்ய முடிவெடுதுள்ளன . பிற மாநிலங்களிலும் உரிய முறையில் இப்பிரச்சாரம் கொண்டு செல்லப்படுமாம் . ஊடகங்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது . இது ஆத்திர மூட்டும் மதவெறி திட்டமாகும் .



மாட்டுக்கறி உண்பது உலகெங்கும் பெரும்பாலான மக்களின் உணவுப் பழக்கம் . முஸ்லீம் , கிறுத்துவர் உள்ளிட்ட மதநம்பிக்கையுள்ளோரி்ன் உனவுப் பழக்கமும் ஆகும் . இந்துக்களிலும் சுமார் 25 விழுக்காட்டினருக்கு மேல் - தலித்தும் வேறு இதர பகுதியினரும் மாட்டுக்கறி உண்பவரே  முஸ்லீம் , கிறுத்துவர்கள் மட்டுமல்ல ; இந்து மதத்திலும் கணிசமான பகுதியினரின் உணவில் இந்த ஆர் எஸ் எஸ் கூட்டம் மண்ணைப் போடுவது என்ன நியாயம் ? பொதுவாக புலால் மறுப்பு என்பது 90 விழுக்காடு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானதல்லவா ? அரசு விருந்துகளில் எளிமை வேண்டும் - சிக்கனம் வேண்டும் என்பது சரிதான் .ஆனால் புலால் மறுப்பு எப்படிச் சரியாக இருக்கும் ?  இது ஜனநாயக விரோதம் அல்லவா ?



. தமிழரின் ஆதிப் பண்பாடு புலால் உணவே . நெய்யில் பிசைந்த புலால்கூடிய சோறே சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் காட்டும் .

   “ பிணர்ச் சுவற் பன்றி தோல் முலைப் பிணவோடு,

கணைக் கால் ஏனல் கைம்ம்மிகக் கவர்தலின்,

கலதர் அரும்புழை அல்கி , கானவன்

வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை,

புனை இரும் கதுபின் மலையோன் கெண்டி,

குடிமுறை பகுக்கும் நெடுமலை நாடே!

உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும்

இரவின் அஞ்சாய் ! அஞ்சுவல் - அரவின்

ஈர் அனைப் புற்றம் , கார் என முற்றி

இரைதேர் என்கினம் அகழும்

வரைசேர் சிறு நெறி வாராதீமே !” [ நற்றிணை - 336 ] என நற்றிணை காட்டும் காட்சி புதிதானது .



“தினைக்கதிர் அளவு கடந்து விளைந்து கிடக்கிறது . சொரசொரப்பான கழுத்தையுடைய ஆண் பண்றியும் - தோலாய் வற்றிய கொங்கையுடைய பெண் பன்றியும் கணக்கின்றி தினைப்பயிரை மேய்ந்து தள்ளாடி நடந்தது . தெருவின் ஒடுக்கத்தில் மறைந்திருந்த கானவன் - காட்டில் வாழ்பவன் ; ஆண் பன்றியை வில்லால் அடித்துக்கொன்று எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுக்கிறான் . அவளும் சுற்றத்தார்களுக்கும் நண்பர்களுக்கும் அதைப் பங்கிட்டுக்  கொடுத்து தானும் சமைத்து கணவனுக்குப் பரிமாறுகிறாள். இதகைய பண்பாடு நிலவும் மலை நாடே ! ஆண் யானை புலியை எதிர்பார்த்து இருக்கும் இரவில்கூட வர அஞசாதவனே! பாம்புப் புற்றை கரடிக் கூட்டம் தோண்டும் வழியில் வராதீர் ..” இப்படித் தொடரும் அப்பாடல் .





இதற்காக இப்போது எல்லோரும் பன்றிக்கறி சாப்பிட்டால்தான் தமிழன் எனச் சொல்லலாமோ ? கூடாது . விரும்புகிறவர் சாப்பிடுவதைத் தடுக்கவும் கூடாது ; விரும்பாதவர் வாயில் திணிக்கவும் கூடாது .தயிர் சாதம் சாப்பிடுகிறவன் வாயில் மாட்டுக்கறியைத் திணிப்பதும் அரஜகம் ; மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கையை முறுக்கி சாப்பிடாதே என மிரட்டுவதும் அராஜகம் . அயோக்கியத்தனம்.



 சைவம் , அசைவம் என்ற சொற்பிரயோகமே சமயம் சார்ந்தது . மத உணர்வு மிக்கது . புலால் உணவுதான் பெரும்பாலோரின் உணவுப் பழக்கம் . புலால் மறுப்பு என்றே வள்ளுவரும் சொல்வார் . ஆகவே  “புலால் உணவு உண்போர்” ,  “புலால் மறுப்போர்” என்கிற சொல்லுவோம் . சைவம் , அசைவம் என்ற வார்த்தைகளைத் தவிர்போம்.



உணவைப் போன்றே மனிதனுக்கு காதல் உணர்வும் இன்றியமையாதது . யார் யாரைக் காதலிக்கலாம் ? யார் யாரைக் காதலிக்கக் கூடாதெனக் கட்டளை எதுவும் இடமுடியாது . இது அவரவர் உரிமை  விருப்பம் . தேர்வு . அது மட்டுமா ? சாதி , மதம் , இனம் , நாடு அனைத்தையும் நொறுக்கி முன் செல்வதே காதல் . இந்துக்களை முஸ்லீம்கள் காதலித்து மதம் மாற்றுகிறார்கள் எனப் பிதற்றுகிறது  ஆர் எஸ் எஸ் கூட்டம் .



மதமாற்றம் தனி மனித உரிமை . காதலும் அப்படியே . காதலுக்காக ஒருவனோ / ஒருத்தியோ மதம் மாறுகிறார்கள் எனில் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு . 18 வயது நிரம்பிய ஆண் / பெண் இரு பாலருக்கும் சுயமுடிவெடுக்க உரிமையும் உண்டு . ஆற்றலும் உண்டு. நாட்டை ஆள யாருக்குத் தகுதி உண்டென முடிவுகூறும் வாக்குரிமையே அவர்களுக்கு வழங்கப்பட்ட பின் திருமண வயதை அடைந்து விட்ட ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்வு செய்ய உரிமை இல்லையா என்ன ?



இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரந்து விரிந்து இந்தியாவை பல நூறு ஆண்டுகள் கட்டி ஆண்டபோதும் இந்தியா முஸ்லீம் நாடாகிவிடவும் இல்லை ; பெரும்பாலான இந்தியர் முஸ்லீம் ஆகிவிடவும் இல்லை . வெள்ளையர்கள் ஆண்டபோதும் எல்லோரும் கிறுத்துவராகி விடவில்லை ; அம்பேத்கர் பெளத்தம் தழுவிய பின்பும்  அம்பேத்கரைத் தெய்வமாகவே கொணடாடும் பெரும்பாலான தலித்துகள்  தன் மதத்தை மாற்றிக் கொள்ளவில்லை ; காரணம் ஒருவர் தன் மத அடையாளத்தை அவ்வளவு எளிதில் துறக்க மாட்டார் . நியாயமான - தேவையான காரணம் இல்லாமல் ஒருவர் மதம் மாறுவது அபூர்வம் . எனவே “ லவ் ஜிகாத் ”என  மோடிக்கூட்டம் கூப்பாடு போடுவது மதவெறிக் கலவரத்தைத் துண்டவே தவிர வேறொன்றுமில்லை .



புரட்டாசி சனிக்கிழமை புலால் சாப்பிடுவதும் சாப்பிடாது இருப்பதும் அவரவர் உரிமை ; தன் மனம் விரும்பியவரை தேர்வு செய்து மணமுடிப்பதும் அவரவர் தனி உரிமை . விருப்பம் . இதனை யார் எதிர்த்தாலும் அது அராஜகமே . பண்பாட்டுத் தாக்குதலே .

[ இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட பகுதி தீக்கதிர் 24 -09-2014 இதழில் வெளியாகியுள்ளது ]

1 comments :

  1. ganesan

    RSS மோடி உலகிலேயே அதிசயமான பொம்மை

Post a Comment