நம்பிக்கையைக் காயப்படுத்தலாமா ?

Posted by அகத்தீ Labels:








நம்பிக்கையைக்
காயப்படுத்தலாமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்


  • ஐயா பகுத்தறிவாளரே ! உங்க மனைவி கோவிலுக்கு போறாங்க அதை உங்களாலே திருத்த முடியலை .. ஊரைத் திருத்த வரீங்களா ?  

  • நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறுத்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?

  • உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன ?  கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் சம்மந்தம் என்ன ?

  • நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை ? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் ப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க !

  • அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ?


இப்படிப்பட்ட கேள்விகளை சாதாரண பாமரன் கேட்டால் பரவாயில்லை ; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்விகளை மெத்தப் படித்தவர்கள் முகநூலிலும் இணையதளத்திலும் குயுத்தியாகக் கேட்கும் போது சற்று வேதனையாக இருப்பினும் அறிவியல் ரீதியாக நாம் பயணம் செய்யவேண்டியது நெடுந்தூரம் எனப் புரிகிறது . மறுபக்கம் இந்தக்கேள்விகளுக்கு நாம் பொறுமையாகப் பதில் சொல்லியாக வேண்டும் . வேறு வழியில்லை .

ஐயா பகுத்தறிவாளரே ! உங்க மனைவி கோவிலுக்கு போறாங்க அதை உங்களாலே திருத்த முடியலை .. ஊரைத் திருத்த வரீங்களா ?  


இந்த வாதமே அபத்தமானது . தனிமனித உரிமையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் .என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள் . ஆனால் நான் பகுத்தறிவாளன் . கம்யூனிஸ்ட் . அப்பா அம்மாவை மதிப்பது வேறு ; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை . அதை நான் விட்டுக்கொடுக்கவில்லை . என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க  முழு உரிமை உண்டு . மனைவி கணவனை நேசிப்பது வேறு ; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவி கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந்தனை , சுய உரிமை எல்லாம் உண்டு .வேடிக்கை என்ன தெரியுமா முற்போக்காளர்கள் மனைவியின் சுயசிந்தனையை சுய உரிமையை மதிக்கிறார்கள் . ஆனால் மதம் பெண்களுக்குசுயம்இல்லை என மறுக்கிறது . மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதிரொலியே மேலே உள்ள கேள்வி . ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கையுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள் . யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது . திணிப்புக்கு தலைவணங்குபவராகவும் இருக்கக்கூடாது .

தவறான நம்பிக்கைகளை உடைத்து நொறுக்கி புதியன புதுக்கியோர் மிகச் சிலரே . அந்தச் சிலரால் மட்டுமே உலகம் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதன்றோ உண்மை . குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக்கலாம் . பயிற்றுவிக்கலாம் . ஆனால் , ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது . அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையையில் சமரசம் செய்யவும் முடியாது . கூடாது . வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல ; வீட்டுக்கும் தேவை.

நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறுத்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?

ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை . இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறுத்துவ மதமே விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் . சமீபத்தில் இணையத்தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லா கட்டுரைகளும் அந்தந்த நாட்டில் பெரும் பாண்மையோரின் மதநம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பியுள்ளன . இதுவே இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள நிலை . வலை தளத்தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம் . பெரும்பாலும் அங்கெல்லாம் இந்து புரணாங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங்களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம் . அவர்கள் பட்டியல் தருவதானால் ஏராளம் பக்கங்கள் தேவை .போய்த் தேடுங்கள் உண்மை அறியலாம் .

இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறுத்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறுத்துவச் சூழலில் பிறந்தவர் . பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார் . அவர் பிறந்த சூழல் அப்படி . அதே சமயம் இங்கர்சாலின்நான் ஏன் கிறுத்துவனல்லஎன்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் ?” நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே . சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கினார் . ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல்பிறப்பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு . மாறாக பிற மதத்தை விமர்சிக்கப் புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழிகோலிவிடக் கூடுமல்லவா ?

உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக்கு என்ன ? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் ?

இது மதநம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச்சனை . நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே , “ கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும்  உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம் ? கடவுள் எல்லோருக்கும் பொது என்பது பொய்யா ? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக்கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல்லோரையும் படைத்தாரா ? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா ? உண்மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார் ? இப்படி பிறர் உரிமையை மறுப்பவரல்லவா ? “

உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே ! உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா ? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா ? உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே !

நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பார்க்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை ? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் ப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க !

பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தது சரியா ? தவறா ? இது நீண்ட நாட்களாக நடக்கும் விவாதம் . அவர் காலத்தில் புரையோடிப்போன சமூகத்தை சீர்திருத்த சில அதிரடி  நடவடிக்கைகள் அவருக்குத் தேவைப்பட்டது . அவர் சுயநலத்துக்காகவோ -  கலவரத்தைத்தூண்டி பதவி நாற்காலியை பிடிப்பதற்காகவோ எந்த வழிபாட்டு தலத்தையும் அவர் இடிக்கவில்லை . அவர் பிள்ளையார் சிலை உடைத்ததால் இன்று மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை வரவில்லை ; மாறாக பிள்ளையார் சதுர்த்தி ஒரு மதவெறி அரசியல் செயல்பாடாக மாற்றப்பட்டதன் பின்னணியில்தான் பிள்ளையார் சிலை பெருக்கம் என்பதறிக ! மனித வரலாற்றில் மதம் எப்போது வந்தது ? கடவுள் எப்போது வந்தது ? இன்னும் பல கடவுள்கள் பல மதங்கள் என பிரிந்து மோதுவது ஏன் ? இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முயன்றால் அதற்கான விடை சமூக அறிவியலில்தான் கிடைக்கும் .

அம்மை நோய்க்கும் பிளேக் நோய்க்கும் ஒரு குறிப்பிட்டக் கடவுள்தான் காரணம் என எத்தனை நூற்றாண்டுகளாக மனிதகுலம் நம்பி வந்தது . அந்நோய் ஒளிக்கப்பட்ட்து சுமார் இருநூறாண்டுகளுக்குள்தானே ! அதுபோல் அறிவியல் உண்மைகளை சமூகம் ஏற்க பல்லாண்டாகலாம் . எவ்வளவு காலம் என்பது முக்கியமில்லை . எவ்வளவு பேர் ஏற்கிறார்கள் என்பது முக்கிய மில்லை . இது விழிப்புணர்வுக்கான தொடர் போராட்டமே !

மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதற்கு அறியாமை ஒரு காரணமெனில் சமூகச்சூழல் இன்னொரு காரணம் . அறிவியல் ஒளி பரவப் பரவ அறியாமை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியிருக்க வேண்டும் ; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை . இதனால் மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் என வறட்டு நாத்திகவாதிகள்போல் கூறலாமோ . கூடாது . காரணம் சமூக ஏற்ற தாழ்வும் வறுமையும் கையறு நிலையும் மக்களை மேலும் மேலும் கடவுள் பக்கம் தள்ளுகின்றன . ஆகவேதான் மதம் அபின் என்று சொன்ன மார்க்ஸ் அது இதயமற்றவர்களின் இதயமாகஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது என்கிற உண்மையையும் சுட்டிக்காட்டினார் . ஆக , சமூக ஏற்ற தாழ்வுக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்று படுத்துவதன் மூலமே அவர்களை சரியான பாதைக்குத் திருப்ப முடியும் . வெறும் போராட்டம் மட்டுமே சாதித்துவிடாது . இடைவிடாது தத்துவஅறிவியல் போதனையும் இணையும் போதே நீடித்த பலன் கிட்டும் .

அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ?

எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது . காயப்படுத்தும் கூடாது ; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன ? உண்மையைச் சொல்வதும் ; அறிவியலாய் கேள்வி எழுப்புவதும் காயப்படுத்துவதாகுமா ?  ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது ? அதை எதிர்த்து முறியடிக்காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா ? அன்று நரபலியை கேள்விகேட்ட போது மதநம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டிருப்பார்கள் . தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறியிருப்பார்கள் . உடன்கட்டை ஏறுவது மத நம்பிக்கையாக இருந்தது ; அதனை எதிர்த்த போது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர் . ஆயினும் விடாது போராடியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது . இன்னும்  சதிமாதா கி ஜேஎன்போரை விமர்சனம் செய்வது எப்படிக் காயப்படுத்துவது ஆகும் ? தேவதாசி முறை ஒழிப்பு , தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே ! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல .

உலகம் தட்டையல்ல உருண்டை ; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரியனைத்தாம் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது ; உடலில் எலும்புகள் இத்தனை ;  சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது சூரியனின் பிரதிபலிப்பே ; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது ; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர் . மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாமல் போயிருக்குமே !

மனித குல வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும் ? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்புவதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் ? அறிவியல் உண்மைகளை ஏற்கத் திராணியற்று நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகக் கூப்பாடுபோடுகிறார்கள் என்பதே உண்மை . ஆத்திகம் ஒருசாரார் உரிமை எனில் நாத்திகம் இன்னொரு சாரார் உரிமை இதை ஏற்க மறுப்பது ஏன் ?

இந்திய சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே ! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்தஇந்திய நாத்திகம்எனும் நூல் உரக்கப் பேசும் . உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்கவழக்கங்களையும் சாடிச்சாடி கேள்விகேட்டு கேள்விகேட்டு பெறப்பட்ட முன்னேற்றம்தான் ;  நாத்திகரும் ஆத்திகரும்  - அனைவரும் அனுபவிக்கும் அனைத்துமாகும் .


இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில்  சாமான்ய சளஎன்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும் . இந்த குயுத்தியை அவர்கள் நிராகரிப்பர் . மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான் . ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட்டாயமாகிவிட்ட்து . எல்லா விமர்சன்ங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு ; அதே நேரம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும் . அதனைத் தொடர்ந்து செய்வோம் . யாரையும் காயப்படுத்த அல்ல : விழிப்புணர்வுக்காகசமூக சமத்துவத்துக்காகசமூக நீதிக்காகசமூக முன்னேற்றத்துக்காக !.











0 comments :

Post a Comment