“ஆசிரியராக வாழ்வதென்றால்..?

Posted by அகத்தீ Labels:


“ஆசிரியராக வாழ்வதென்றால்..?
 
 


போயிட்டு வாங்க சார் ! குட் பை மிஸ்டர் சிப்ஸ் ,ஆசிரியர் : ச.மாடசாமி,வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன் ,பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை , சென்னை - 600 016 .பக் :64 , விலை : ரூ . 35

“ஆசிரியராக வாழ்வதென்றால்..?

தொடர்ந்து வாசிக்கிறவர்தான் ஆசிரியர் என்கிறார்கள் . இது ஒரு விதத்தில் சரியாக இருக் கிறது . அதேநேரம் இலக்கணம் போல் கனமாக இருக்கிறது. எல்லோரும் தூக்கமுடியாதகனம்.தொடர்ந்து மாணவர்களோடு உறவு வைத்திருக்கிறவர்தான் ஆசிரியர் என்பது சிப்ஸ் வாழ்க்கை முன்வைக்கும் வாதம் .

இந்த வழி காட் டுதல்கனமற்றுஇலகுவாகஇருக்கிறது.யாவர்க் கும் கைகூடக்கூடிய வித்தையாக இருக்கிறது ”மேலே சொன்ன அனைத்தும் ச. மாடசாமி எழுதிய போயிட்டு வாங்க சார்!.. குட் பை மிஸ் டர் சிப்ஸ் என்ற 64 பக்க சிறிய புத்தகத்தில், நெஞ்சை நெகிழவைக்கும் புத்தகத்தில் இடம் பெற்றவரிகள்.மரணத்திற்கு முதல் நிமிடம் வரை ஆசிரி யராக வாழ்ந்த சிப்ஸின் கதையே இந்நூல். சிப்ஸ் என்கிற சிப்பிங்கை கதை நாயகனாக வைத்து ஜேம்ஸ் ஹில்டன் 1933 ல் எழுதியது . 1934 ல் நூலாகவும் வெளிவந்தது.

திரைப்படமாகவும் வெற்றி பெற்றது.“ அதிகாரம் எப்போதும் கசப்பை அல்லவா விதைக்கிறது ?.....ரிசல்டை குறிவைக்கும் திற மைசாலிகள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் நேசிக்கப்படுவதில்லை ”ஆஹா !! ஆயிரம் பொன் பெறும் முத்திரை வாக்கியமன் றோ இது . அதுவும் கல்வி வெறும் கடைச் சரக்காக் கப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் இதன் வீரி யம் அளவிடற்கரியது. சிப்ஸ் மாணவர்களால் நேசிக்கப்படவர் .அவர் கதை நமக்கு எளிய சாளரங்களைத் திறந்து அன்பெனும் தென்ற லின் சுகத்தை அனுபவிக்கச் சொல்கிறது .

“சிப்ஸ் திறமைசாலி இல்லை . அக்கறை உள்ளவர். திறமை கொண்டவர்கள் மேடைக ளிலும் பொறுப்புகளிலும் அமரும்போது அக் கறை உள்ளவர்கள் பிறர் மனங்களில் அமர்கி றார் கள் . அப்படி அமர்ந்திருப்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரிவதில்லை . ” அப்படி வாழ்ந்த சிப்ஸ் முன்னுதாரணமாய் ரோல்மாட லாய் நம் நெஞ்சுக்குள் நிறைகிறார் . இதயத் தோடு உரையாடும் இந்நூலை ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ; மாடசாமியோடு நீங்க ளும் சிப்ஸ் பற்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள்

.- சு.பொ.அகத்தியலிங்கம்.

 
 

சின்ன சின்ன மாநிலங்கள் : தீர்வா? சிக்கலா?

Posted by அகத்தீ Labels:

 
சின்ன சின்ன மாநிலங்கள் :
தீர்வா? சிக்கலா?


- சு.பொ.அகத்தியலிங்கம்

குட்டி குட்டி மாநிலங்களாக இருப்பின் உள்ளங் கைக்குள் பொத்திபொத்தி வளர்ப்பது போல் சிறப்பாக நிர்வாகம் செய்ய இயலும் என் றொரு வாதம் வலுவாக முன்வைக்கப்படு கிறது. மாநிலங்களை துண்டு துக்காணியாகப் பிரித்துக் கொண்டே போனால் வெங்காயத்தை உரித்த கதையாக மாறிவிடாதோ என ஆழ்ந்த கவலை இன்னொரு பக்கம் வீரியமாக வெளிப் படுத்தப்படுகிறது. முன்னதின் நம்பிக்கையும் பின்னதின் கவலையும் புறங்கையால் தள்ளி விடக் கூடியதல்ல. ஒரு அர்த்தமுள்ள விவாதம் தேவைப்படுகிறது.

“இந்திய துணைக் கண்டம் அரசியல் ரீதியில் 56 தேசங்களாக இருந்த காலமும் உண்டு. ஏன்? பிரிட்டிஷ் பார்லிமெண்ட் இந்தி யாவை ஆளும் பொறுப்பை ஏற்ற போதுகூட பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வெளியே 600 சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சுதந்திர ராஜ்யங்களுக்குத்தான் சமஸ்தான இந்தியா என்ற பொதுப்பெயரைத் தந்தது” என்கிறார் ம.பொ.சிவஞானம்.இந்த நேரத்தில் இன்னொன்றை நினைவு படுத்துவதில் தப்பில்லை. காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதம் ஒன்றில் - பிரிட் டிஸார் இந்தியாவை அடிமைப் படுத்திவிட்ட தாகக் கூறாதீர்கள்; நீங்கள் அடிமைப்பட்டீர்க ளென்று முதலில் ஒப்புக்கொள்ளுங்கள் என்றா ராம். முப்பது லட்சம் மக்களை வெறுமே 30 ஆயிரம்பேர் 3000 கி.மீ தொலைவிலிருந்து வந்து அடிமைப்படுத்தியது எப்படி? நீங்கள் பிளவுண்டு கிடந்தீர்கள், சண்டையிட்டுக் கொண்டு கிடந்தீர்கள், அதனால் அவன் அடிமைகொள்வது சுலபமானது என விளக் கினாராம்.

மீண்டும் அதே சூழலை உருவாக்கி அந்நிய ஏகாதிபத்தியத்தை - நம் நாட்டு கனிம வளங்களை கபளீகரம் செய்ய மலைப்பாம்பாய் வாய்பிளந்து நிற்போர்களை வெற்றிலை பாக்குவைத்து அழைக்கப் போகிறோமா ?இந்தியா விடுதலை அடைந்த போது பிரிட்டிஸார் தங்கள் அடக்குமுறைக்குத் தோதாக அமைத்திருந்த மாநிலங்களும் சமஸ் தான ஆளுகையிலிருந்த பிரதேசங்கள் என அறிவியல்பூர்வ அடிப்படையின்றி மாநிலங் கள் பிரிக்கப்பட்டு குழம்பிக்கிடந்தன. ஒரு தேசிய இனத்தை நிர்ணயிப்பதில் எல்லைகள், பொதுச்சந்தை, பொது கலாச்சார அமைப்பு போன்ற காரணங்களைவிட மொழி தான் மிகமுக்கிய காரணி என்று தோழர் ஸ்டாலின் கருதினார்.

அதுதான் அறிவியல் அணுகுமுறையாகவும் இருக்க முடியும். அந்த அடிப்படையில் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் அவர்களும் மலையாள தேசிய இன வளர்ச்சி மற்றும் மலையாள மொழிபேசும் மக்கள் குறித்து ஆய்வு செய்தார். 1942 ல் ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதன் தலைப்பு “ஒன் றே கால்கோடி மலையா ளிகள்” என்பதாகும். அன்றைய மக்கள் தொகை அவ்வளவுதான் இவ்வாறு இ.எம்.எஸ். எழுதிய அதே சமயத்தில் தோழர் “பி.சுந் தரய்யா விசாலாந் திரா” என்ற ஆய்வுகட்டுரை யை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது அதுதான் அன்றைய தினம் தெலுங்கு மக்களை ஒன் றிணைப்பதற்கான அடிப்படை யாக விளங் கியது. அதே காலகட்டத்தில் தோழர் பவானி சென் வங்க மொழி பேசும் மக்களைத் திரட்ட “புதிய வங்கம்” என்ற நூலை எழுதினார்.

செழிப்பான நாஞ்சில் நாடும் குமரி மாவட் டமும் செங்கோட்டையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் அடக்கப்பட் டிருந்தன. அவையும் புதுக்கோட்டை சமஸ்தா னமும் தமிழகத்தோடு இணைக்கப்பட வேண்டும் என்று “ஐக்கிய தமிழகம்” என்ற நூலை ப.ஜீவானந்தம் எழுதினார்.விடுதலைக்குப் பிறகு மொழிவழி உணர்வு வலுப்பெற்றது. விசால ஆந்திரா கோரி 1953 ஆம் ஆண்டு பிரபல தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்து 58 - வது நாளில் உயிர் துறந்தார். ஆந்திரா பற்றி எரிந்தது. துப்பாக்கிச் சூட்டில் 7 வயது பள்ளிச் சிறுமி உட்பட மூவர் பலியானார்கள். நேரு அரசு இறங்கிவந்தது. ஆந்திர மாநிலம் அமைக்கப் பட்டது. கூடவே மாநில புனரமைப்புக்குழு அமைக்கப்பட்டது. 1956 ல் மொழிவழி மாநிலங் கள் உருவாயின. அது காலத்தின் தேவை.இப்போது காங்கிரஸ் கட்சி குறுகிய கணக் குப் போட்டு தெலுங்கானா, சீமந்தரா ஆந்திரா என பிரித்திட முடிவெடுத்து அறிவித்துவிட் டது.

அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்க வேண்டும். ம .பி .இரண்டாக, மேற்கு வங்கத்தை இரண்டாக, அசாமை ஜம்மு-காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண் டும். கோலார் மாவட்டத்தை மாநிலமாக்க வேண்டும் ஐதராபாத் - கர்நாடக மாநிலம் கொங்கு சோழன், பாண்டியன், பல்லவன் மாநி லங்கள் இப்படி கரையான் புற்றைக் கலைத் ததும் அது வேகமாய் எங்கும் பரவுகிறது. சிறிய மாநிலங்கள் கேட்பது ஏன் ? யார் ? இக்கேள்வி முக்கியமானது. ஏன் என்பதற்கு பல காரணங்களை முன்வைத்தாலும்; 1. பின் தங்கிய நிலையிலிருந்து விடுபட்டு வளர்ச்சி காணவும் 2. நிர்வாகத் திறமை மேம்படவும், 3. வட்டாரப் பண்பாட்டை பாதுகாக்கவும், 4. வட் டார அல்லது உள்ளூர் மக்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு கிடைக்கவும் - சிறிய மாநிலங்கள் தேவை என வாதிடப் படுகிறது. இது சரியா? ஒவ்வொன்றாய் அலசுவோம். மாநிலத்திற்கு மாநிலம், மாவட்டத்திற்கு மாவட்டம், பிரதேசத்துக்கு பிரதேசம் ஏற்றத் தாழ்வான வளர்ச்சி இருக்கிறது என்பது உண்மையே.

இதன் அடிப்படைக் காரணம் மாநில, மாவட்ட விஸ்தீரணமோ, சிறிதா பெரிதா என்ப தோ அல்ல. மாறாக மத்திய அரசு கடைப் பிடித்துவரும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையும் அது சார்ந்த அரசியல் பாரபட் சமுமே காரணமாகும். உலகமயமும் தாராள மயமும் இந்த ஏற்றத்தாழ்வை குறைக்கவில் லை, தீவிரப்படுத்தியிருக்கிறது.அசாம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், திரிபுரா என்கிற ஏழுசகோதரிகள் என்றழைக்கப்படு கிற வடகிழக்கு மாநிலங்கள் அளவிலும் மக்கள் தொகையிலும் சிறியவையே. ஆயினும் அங்கெல்லாம் வளர்ச்சி இல்லவே இல்லை யே. நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறதே ! அங்கெல்லாம் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் தோன்றி ஏழு மாநிலங்களையும் இணைத்து தனி நாடு வேண்டும் என்றே கோரிக்கை தொடர்ந்து ஒலிக்கிறதே !

ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் திறமையான நிர்வாகத்தின் பொருட்டு என்று சொல்லித்தானே தனி மாநிலங்களாக்கப் பட்டன. பின்தங்கிய நிலைமையும் வளர்ச்சி இன்மையும் தானே அங்கே நக்சலிசத்தின் பிடியை இறுக்கி இருக்கிறது. கனிம வளங் களை கொள்ளை அடிக்க உள்நாட்டு, வெளி நாட்டு சுரங்க முதலைகளும் உள்ளூர் அரசி யல் தலைமையும் கூட்டணி அமைத்து செயல்படுகிறதே! ஊழல் முறைகேட்டில் முன்னிலை வகிக்கிறது, அன்னியில் கண்ட மாற்றம் என்ன? சுரங்கப் பணக்காரர் கொஞ்சம் பெருகியதால் சராசரி தனிநபர் வருமானம் உயர்ந்ததாக புள்ளிவிவர மாயாஜாலம் நிகழ் கிறதே ஒழிய பெரும்பான்மை மக்கள் வறுமை யிலிருந்து அறியாமையிலிருந்து, விடுபடவே இல்லையே!

வட்டாரப் பண்பாட்டைக் காத்திட சிறிய மாநிலங்கள் தேவை என்பதும் அர்த்தமற்றது . உலகமயப் பண்பாடு ஆக்டோபஸ் போல எல் லோரையும் விழுங்கி ஜீரணித்துக் கொண்டி ருக்கும் போது துண்டுதுக்காணியாக உடைந்து நின்று எந்தப் பண்பாட்டைப் பாதுகாக்கப் போகிறோம்?யார் யார் இக்கோரிக்கைகளை ஆதரிக் கிறார்களெனப் பார்ப்பதும் அவசியம். முதலா வதாக, மத்தியில் ஆளும் காங்கிரஸ் - ஏற்கெ னவே மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ் சமாக அரித்து தின்று எதேச்சதிகார பசியோடு அலைகிறது.

சின்னச் சின்ன மாநிலங்கள் அவர்களின் எதேச்சதிகாரக் கொடுங்கன வுக்கு உயிர் கொடுக்கும் . அடுத்து சங்பரிவார்- ஆர். எஸ். எஸ். மற்றும் பாஜக - இவர்களின் இந்துராஷ்டிரக் கனவுக்கு மொழிவழி மாநிலங் கள் இடைஞ்சல். இந்து, இந்தி, இந்துராஷ் டிரம் என்பதே அவர்கள் இலக்கு. ஆகவே குட்டி குட்டி மாநிலங்களை அமைக்கத் துடி யாய்த் துடிக்கிறார்கள்.அப்போதுதானே தங்கள் வலையில் பிடித்து இந்துத்துவக் கூடைக்குள் கொட்ட முடியும்.மூன்றாவதாக முக்கியமான வில்லன் பன்னாட்டு முதலாளிகள். கனிம வளங்களை மொத்தமாய் முழுங்க - சிறிய மாநிலங்கள் எனில் அரசியல் சதுரங்க காய் நகர்த்திகாரி யத்தை எளிதாக முடிக்க இயலும். வேண்டிய வரை முதல்வராக்க குதிரை பேரமோ கழுதை பேரமோ எளிது. ஆகவேதான் குட்டி குட்டி மாநிலக் கோரிக்கைகளை எழுப்புவோருக்கு போராட பணமுடை இல்லை. தாராளம் அள்ளி வழங்குகிறார்கள்.

இறுதியாக இந்திய ஜனநாயகமும் வலி மையும் கண்ணை உறுத்த; ஒற்றுமையைக் குலைத்து ஊடுருவவும் - தன் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் - மீண்டும் நவகாலனி யாக்க கனவு காணும் ஏகாதிபத்தியம் இது போன்ற கோரிக்கைகளுக்கு பக்கபலமாக இருக்கும் என்பதை அறியாதவன் அரசியலில் ஏமாளியே!சின்ன மாநிலக் கோரிக்கைகளை இடது கோடியிலிருந்து ஆதரித்தாலும் - வலது கோடியிலிருந்து ஆதரித்தாலும் போய்ச் சேரு மிடம் ஒன்றே. அது யாருக்கு லாபம்? அது யாருடைய கோரிக்கை? இன்னுமா சந்தேகம். ஆயின் மக்கள் ஆதரிப்பது ஏன் என்கிற கேள்வி எழலாம். ஒரே பதில் தான் வளர்ச்சி யின்மை, வேலையின்மை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் - நிஜ வில் லனை அடையாளம் காணமுடியாமல் திணறு கிற போது அல்லது சாதுரியமாக நிஜவில்லன் கள் முகமூடி அணிந்து நிழல் வில்லன்களை முன்னிறுத்தும் போது; தடுமாறுகிறார்கள் அல்லது திசை திருப்பப்படுகிறார்கள்.

லியோ டால்ஸ்டாய் அன்று காந்திக்கு எழுதிய கடி தத்தை இப்போது மீண்டும் அசைபோடுவோம். விழித் துக் கொள்வோம். தேசம் மீண்டும் களவு போவதைத் தடுத்திட ஒன்றுபட்டு எழுவோம்.

**************

நன்றி : தீக்கதிர் (29 08 2013)

போராடப் புதிய வழிமுறைகள்

Posted by அகத்தீ Labels:சோதித்து உரசி அலசிப் பார்க்க ஓர் நூல்


இடதுசாரிகளைப் பொறுத்தவரை , அரசியல் என்பது முடியாது என்பதை முடித்துக் காட்டும் கலையாக இருக்க வேண்டும் ..... காது கொடுத்துக் கேட்கக் கற்றுக் கொள்வதும் மக்களுடன் உரையாடலில் ஈடுபடுவதும் முக்கியம்.. ஒரு சமூக சக்தியைக் கட்டியமைக்காமல் நம்மால் ஒரு அரசியல் சக்தியைக் கட்டியமைக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது ; இப்படி நறுக்குத் தெறித்தார் போல் நம்மோடு உரையாடுகிறார் மார்த்தா ஹர்னேக்கர் .
இவர் நம் வாசகர்களுக்கு புதியவரல்ல . இடதுசாரிகளும் புதிய உலகமும்  (பாரதி புத்தகாலய வெளியீடு 2010 ல் பிரசுரமானது)  எனும் புத்தகம் மூலம் அறிமுகமான சிலி தேசத்து கம்யூனிஸ்ட் . பாரீஸில் அல்தூசரோடு பயி ன்றுவிட்டு சிலியில் அலண்டேக்கு தோள்கொடுக்க 1968 ல் தாய் நாடு திரும்பியவர்.  அலண்டே ஏகாதிபத்திய சதியால் படுகொலை செய்யப்பட்ட சூழலைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர் . கியூபாவில் குடியேறி எழுத்தாளராய்; பத்திரிகையாளராய் லத்தின் அமெரிக்க வரலாற்று பின்புலத்தில்  இன்றைய நவீன தாராளமயச் சூழலை இடதுசாரிகள் வெற்றி கரமாக எதிர்கொள்ள வழிகாட்டியவர். இவர் ஓர் உளவியல் வல்லுநர்.
இவரின் போராட்ட வழிமுறைகள் எனும் இந்நூல் 56 பக்கங்கள்தான் ஆனால் விவாதிக்க, விடைதேட, வழிகாட்ட பின்பற்ற ஏராளமான கருத்துப் பொறிகளை தன்னுள் அடக்கியுள்ளது .


 வீடுவீடாகச் சென்று கையெழுத்துப் பெறுவதற்கு மேற்கொண்ட பிரச்சாரம் ஊடகத்தின் இருட்டடிப்பு முயற்சியை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது என்கிறார் . மறியலைவிட மக்களிடம் கையெ ழுத்து பெறு வது எவ்வளவு சிரமமானது , வலிமையானது என்பதை மக்கள் ஊழி யர்கள் அனுபவத்தில் நன்கு அறிவர். நமது அனைத்துப் பேச்சுகளும் செய்திகளும் ஒரே துணியிலிருந்து வெட்டப் பட்ட துண்டுகளாக இருக்கிறபோது , ஒரே சொல்லால் , ஒரே விதத்தில் எடுத் துச் சொல்லப்படுகிறபோது , ஒரே ஒலி பெருக்கியில் ஒரே தொனியில் உச்சரிக் கப்படுகிற போது , மேலும் பல ஆண்டுகள் செல்லச் செல்ல சுவரொட்டிகளும் முழக்கங்களும் மாறாதபோது , நமது சொற்கள் தமது மதிப்பை இழக்கின்றன . அவை எந்த ஒருவரின் கற்பனையையும் இதற்கும் மேலும் வெல்ல முடியாது.   ஹர்னேக்கரின் இந்த வரிகள் நம் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகத் தோற்ற மளிக்கவில்லையா? எழுச்சிகளா , புரட்சிகளா ? அரசியல் கருவியின் பாத்திரம் என்கிற முதல் அத்தியாயம் தொடங்கி - விருப்பங்களை உண்மை நிலை யுடன் குழப்பிக் கொள்ளாதீர் என்கிற 12 வது அத்தியாயம் முடிய ஒவ்வொரு அத்தி யாயத்தின் தலைப்பு தொடங்கி ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புக் கங்காய் நம் இதயத்தில் விழுகிறது . நம்பிக்கை பெறச் செய்யுங்கள் ; திணிக்காதீர்கள் என்று அவர் சொல்லும் போதும் சரி ; சிறுபான்மை சரியாக இருக்கலாம் என நுட்பமாக பகுத்துக்கூறும் போதும் சரி ; அரசியலையும் அரசியல்வாதிகளையும் மக்கள் சந்தேகப் படுவதற்கான காரணங்களை அலசும் போதும் சரி ; கட்சி இடதுசாரிகளையும் சமூக இடதுசாரிகளையும் ஒன்றிணைப்பதின் தேவை குறித்து வாதாடும் போதும் சரி ; ஒவ்வொன்றிலும் அவரது எழுத்து வீரியத் தோடு நம்முடன் உரையாடுகிறது  நம்மை ஓர் உலுக்கு உலுக்குகிறது . லத்தின் அமெரிக்க அனுபவங்களூடேதான் அவரது கருத்துகள் முகிழ்த்தாலும் ; நமது அனுபவங்களோடு உரசிப்பார்க்கத் தக்கனவாகவே உள்ளன . அப்படியே பொருத்த இயலாமல் போயினும் கற்றுக்கொள்ள, சோதித்துப் பார்க்க நிறைய செய்திகள் உண்டு . 

படிக்கவும் விவாதிக்கவும் தகுதியான நூல் என்பது மட்டு மல்ல ; செயல் ஊனத்தைக் களைந்து செயல்வேகத்தை தூண்டிவிடும் வல்ல மையும் இந்நூலுக்கு உண்டு . சோதித்து  - உரசி -  அலசிப் பாருங்களேன் !


போராடப் புதிய வழிகள் , ஆசிரியர் : மார்த்தா ஹர்னேக்கர் ,
தமிழில் : நிழல்வண்ணன் ,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அமபத்தூர் , சென்னை  600 098, பக் : 56 . விலை : ரூ. 40 .

ஜூதான்....

Posted by அகத்தீ Labels:


சுயத்தின் முடிச்சுகள்        அவிழும் கணத்தில்


 சு.பொ.அகத்தியலிங்கம்.


//த்திரப்பிரதேசத்தில்  சுஹ்ரா சாதியில் பிறந்தவன்  நான் என்று வெளிப்படையாகச் சொன்னேன் .
அவள் கண்களில் நீர் முட்டியது.  “  நீங்கள் பொய் சொல்கிறீர்கள் , அப்படித்தானே ?” என்று அழுதபடி கேட்டாள்.

  “ இல்லை சவி..நான் உண்மையைத்தான் பேசுகிறேன் . நீ இதைத் தெரிந்து கொள்ளவேண்டும் .” என்று இதமாக எடுத்துச் சொன்னேன்.
நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரனாகப் பிறந்தது குற்றம் என்பதுபோல் அழத்தொடங்கினாள் . வெகுநேரம் அழுதாள் . எனக்கும் அவளுக்கும் இடைவெளி திடீரென அதிகரித்தது . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வந்த வெறுப்பு எங்கள் மனதில் புகுந்து கொண்டது . பண்பாடு , நாகரீகம் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான பொய்கள் .//

- மேலே உள்ளவை நாடக வசனமல்ல , வெறுமே நாவல் வரிகளல்ல . நம் கதாநாயகனின் சுய அனுபவம் நாவலாய் விரிந்துள்ளது. ஒம் பிரகாஷ் வால்மீகி எழுதிய  ஜூதான் [ எச்சில் ] நாவலா சுயசரிதையா ? இரண்டும் கலந்தது. நான் சொல்வதெல்லாம் உண்மை , உண்மையைத் தவிர வேறில்லை என நீதிமன்றக் கூண்டிலேறி சத்தியப்பிரமாணம் செய்யவில்லை . ஆனால் , எழுத்தின் ஒவ்வொருவரியிலும் பொதிந்திருக்கும் உண்மையின் கங்குகள்  நம்மைச் சுட்டெரிக்கின்றன.

// இப்பவெல்லாம் யார் சாதிபார்க்கிறாங்க..யார் சாதியைக் கேக்கிறாங்க..// இப்படி வித்தாரம் பேசுகிறவர்களை நாம் அன்றாடம் சந்திக்கிறோம் . தர்மபுரி ரணத்தைக் காட்டிப் பேசினால்கூட மழுப்புகிறார்கள் . // அதுவா ? அது ஒரு அய்சலேட்டட் இன்சிடெண்ட் .. ஆமாம் விதி விலக்கான நிகழ்வு.. டோண்ட் ஜெனரலைஸ்ட் ..பொதுமைப்படுத்தக்கூடாது // இப்படி வியாக்யானம் வேறு செய்கிறார்கள் . இவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்களா அல்லது அப்பாவிகளா ? முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுவோம் . ஆனால் நாம் வாழும் இந்த யுகத்திலும் சாதி மனித்ததை எப்படி குத்திக் கிழிக்கிறது என்பதை இரத்தமும் சதையுமாய் இந்நூல் உரக்க்கப் பேசுகிறது .

// நீங்கள் தலித் என்று அடையாளம் தெரியாதவரை அனைத்தும் சுமுகமாகவே நடக்கிறது . உங்கள் சாதி என்னவென்று தெரிய வந்த அடுத்த கணமே அனைத்தும் மாறிவிடுகிறது. அவர்களின் முணுமுணுப்புகள் உங்கள் இரத்த நாளங்களில் கத்தியாய் இறங்குகின்றன . வறுமை , அறியாமை , உடைந்துபோன வாழ்க்கை , வெளியே நிற்பவர்களின் வேதனைகள் ......// இவை நுல் நாயகனின் வாக்குமூலம் மட்டுமல்ல - இவற்றின் படப்பிடிப்பே இந்நூல் .

உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் சுஹ்ரா எனப்படுகிற தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் வால்மீகி. இறந்த மாட்டின் தோலை உரிப்பது - மலம் அள்ளுவது , சுமப்பது , இப்படி சமூகத்தில் இழிவாய்க் கருதப்பட்ட தொழில்கள்  அவர்கள் சாதிக்கென விதிக்கப்பட்டிருந்தது . இதனூடே இந்த இழிவிலிருந்து கரையேற கல்வி மட்டுமே ஒரே மார்க்கம் என அவன் தந்தை நம்பினார் . பள்ளியில்  சேர்க்க அவர் பட்ட கஷ்டம் தனி . பள்ளியில் என்ன நடந்தது ?

// ஒரு நாள் தலைமையாசிரியர் என்னைத் தன் அறைக்கு அழைத்துடேய் உன் பெயர் என்ன ?” என்று கேட்டார்.

ஒம்பிரகாஷ்என்று அச்சத்துடன் மெதுவாகப் பதில் சொன்னேன் . தலைமையாசிரியர் எதிரில் வந்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள் . பள்ளியே அவரைப் பார்த்து நடுங்கியது .

 “ சுஹ்ரா சாதிக்காரனா? ” தலைமையாசிரியர் இரண்டாவது கேள்வியை வீசினார்

 “ ஆமாம் ” 

 “ சரி, அங்கே ஒரு தேக்கு மரம் தெரியுதுபார் . அதில் ஏறி சில கிளைகளை உடைத்து ஒரு விளக்கு மாறை தயார் செய் . பள்ளி முழுவதையும் கண்ணாடி போல சுத்தமாகப் பெருக்கு . இதுதான் உன்னுடைய குடும்பத் தொழில் தெரியுமா ? ” //

இது ஒரு நாள் ஒரு சமபவம் அல்ல . ஒவ்வொரு நாளும் சாதியின் பெயரால் அவன் பட்ட பாடு.. அதன் வலிகள் .. மில்லிமீட்டர் மில்லிமீட்டராய் குத்தூசியாய் நம் இதயத்துள் இறங்குகிறது .

// நான் பள்ளியில் படித்த கவிஞர் சுமித்திரா நந்தன்  பந்தின்  “ ஆகா , கிராம வாழ்க்கைதான் எவ்வளவு அற்புதம்.. ” என்ற கவிதையின் ஒவ்வொரு வரியும் செயற்கையானது ; பொய்யானது . // என வால்மீகி  சொல்வது வெறும் அனுபவம் மட்டும்தானா ? தலித்தாக வாழ்ந்து பார்த்தால் மட்டுமே அதை உணர முடியும் .

// ஏதேனும் ஒரு வழியில் வறுமையையும் , ஆதரவற்ற நிலையையும் கடந்து விடலாம் . ஆனால் , சாதியைக் கடப்பது என்பது முடியவே முடியாது. //  இந்த வார்த்தைகள் வால்மீகி தன் வாழ்க்கை ரணங்களோடு சமூகத்தின் நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் உண்மை .

கல்லூரி வாழ்க்கையும் பெரிதாய் மாறுபடவில்லை. ஆசிரியப் பணி எவ்வளவு உயர்வானது. ஆனால் ஆசிரிய நெஞ்சங்களுக்குள்ளும் சாதிய வன்மம் குரூரமாய் சிரிக்கும் போது ; ஒடுக்கப்பட்ட தலித் மாணவர்களுக்கு விடிவேது ? சேலத்தில் கண் குருடாக்கப்பட்ட தனம் நினைவில் வந்து போகிறாள் . வால்மீகியின் கல்லூரி வாழ்க்கையும் தடைபட்டது சாதியநஞ்சாய்ப் போன ஆசிரியர்களால் .

ஆயுதப்படை தொழிற்சாலையில் பயிற்சி பெற்றதும் மும்பை சென்றதும் கூட் அவனை சாதி சகதியிலிருந்து மீட்கவில்லை .மேலும்மேலும் தான் சுஹ்ரா சாதியில் பிறந்தவன் என்பதை உணரவைத்தது , ஆனால் மேம்பட்ட நிலையில் தலித் என்ற வார்த்தையையே அதன் பின்னரே அறிகிறான் . அவனுள்  போர்க்குண்மிக்க விழிப்புணர்வு மெல்ல வேர்பிடித்தது .
மரத்வாடா பல்கலைத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்தைத் தொடர்ந்து உசுப்பிவிடப்பட்ட எதிர்ப்பு கலவரம்அதன் எதிர்வினையாய் தலித் மக்களிடையே முகிழ்த்த போர்க்குணம் மிக்க எதிர்ப்புணர்வுமராத்திய அரசு தன்முடிவில் பின்வாங்கியதுதலித் பாந்தர் அமைப்பின் உதயம்தலித் இலக்கியம் என்றொரு புதியபோக்கு முளைவிட்ட்து என அண்மைக்கால சமூக அரசியல் நிகழ்வுகளில் வால்மீகி பங்கேற்றது என ஒவ்வொன்றும் இயல்பாய் நுட்பமாய் பதிவாகியுள்ளது . வால்மீகியின் அனுபவப் பதிவுகள் எல்லாமே நம் கன்னத்தில் அறைந்து சாதிய ஆணவம் இன்னும் தொடர்வதைப் பார்த்தாயா எனக் கேட்கிறது

// சாதியச் சக்திகளின் கைகள்தான் அன்றைய தினம் ஓங்கியிருந்தன . தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் வெறுப்பை விதைத்திருந்தார்கள் . “ தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குகஎன்று முழக்கமிட்டுவந்த தொழிற்சங்கங்களால்கூட இந்த வெறுப்புணர்வு வளர்வதைத் தடுக்க முடியவில்லை . // இவ்வாறு வால்மீகி சொல்வது மிகையல்ல . இங்கு தமிழகத்திலும் சாதிக் கலவரம் மூண்டபோதெல்லாம் நம் கசப்பான அனுபவமும் அதுதானே!

வால்மீகி என்றதும் இராமாயணம் எழுதியவர் என்றே தமிழக மக்கள் கருதுவர் . ஆயின் , அது தலித் சாதியில் ஒரு பிரிவினர் என்பதை அறியும் போது  அதிர்ச்சியாக இருக்கிறது . இவர் வால்மீகி பெயரைத் தாங்கித் திரிவதால் பலநேரம் தப்பாக புரிந்து கொண்டு நட்பு பாராட்டியதும் , சுஹ்ரா சாதியின் அடைமொழி என அறிந்தபோது அவமானப்படுத்தப் பட்டதும் கொஞ்சமா ? பிடிவாதமாய் வால்மீகி பெயரை போர்க்குணத்தோடு இவர் சுமந்து வாழ்ந்த கதை நெஞ்சைப் பிசைகிறது .

பெயரில் வார்த்தையில் என்ன இருக்கிறது எனக் கேட்போருண்டு. வால்மீகியின் சமூகவலியை இந்நூல் சொல்லும்.தியாகி என்றால் நாமறிந்த பொருள் வேறு அதுவும் ஆதிக்க சாதியின் பெயர் என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது . தமிழ் நாட்டில் சண்டாளத்தனமாய் உள்ளது என சில கொடுமைகளைச்  பொதுவழக்கில் சொல்வதுண்டு . ஆயின், அது தலித்தில் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல் என்று அறிந்த பின்அந்தச் சொல்லின் சமூகவேர் பிடிபட்டபின் அந்த சொல்லை இனி பயன் படுத்துவது தவறு அல்லவா ? ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று மார்க்சியம் சொல்லும் . இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் மட்டுமல்ல ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு வர்க்க்த்தின் நலன் மட்டுமல்லஒரு வர்ணத்தின், சாதியின் நலனும் ஒளிந்திருக்கிறது என்று கூறுவது சற்றொப்ப சரிதான்.

இந்நாவல் எதிர்மறையான ஆட்களை மட்டுமல்லசிமன் லால்ஜி போன்ற சாதி வேற்றுமை பாராட்டாத மனிதர்கள் சிலரையும் நமக்கு அடையாளம் காட்டி இன்னும் நம்பிக்கை வற்றிவடிந்துவிடவில்லை என கோடிட்டுச் செல்கிறத// ஒரு சமூக நோயோடு நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்ற புரிதலோடு இப்போது இந்தப் பிரச்சனையை அணுகுகிறேன் . மரியாதைக்கும் , திறமைக்கும் , சமூகமேலாண்மைக்கும் அடிப்படையாகச் சாதி இருக்கும்போது , இந்தப் போராட்ட்த்தில் ஒரே நாளில் வெற்றி கிடைத்துவிடாது . இது நீடித்த போராட்டம் , வெளி உலகிலும் , நம் உள்ளங்களிலும் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரப்  போகின்ற ஒரு போராட்டம் . சமூக மாற்றத்திற்கு வழிகாட்டுகின்ற உணர்வை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்ற போராட்டம் நமக்குத் தேவைப்படுகிறது . // இப்படி அனுபவ நெருப்பில் புடம் போட்டு நூலாசிரியர் வால்மீகி சொல்லி இருப்பது மிக முக்கியமானது

// என்னுடைய எழுத்துகள் பிரச்சாரமாகவும் முரட்டுத்தனமாகவும் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள் .//  - என நூலின் கடைசி பத்தியில் வேதனைப் பட்டு

// அதாவது , நான் தலித்தாக இருப்பதும் , என்னுடைய சூழல் , என்னுடைய சமூகப் பொருளாதாரச் சூழல் ஆகிவற்றிற்கேற்ப நான் ஒரு கண்ணோட்ட்த்துக்கு வந்து சேருவது ஆணவமாம் . காரணம் அவர்கள் கண்ணோட்ட்த்தில் , நான் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் . கதவுக்கு வெளியே நிற்பவன் // - இந்த கடைசி வரிகள் அவர் பட்ட வலியின் உச்சம்.

// இந்த நூலை நான் எழுதிக்கொண்டிருந்தபோது ஆழமான மனவேதனைக்கு உள்ளானேன் . ஒவ்வொரு அடுக்காக என் சுயத்தின் முடிச்சுகளை அவிழ்ப்பது என்பது ஒரு பயங்கரமான வேதனை என்பதை உணர்ந்தேன் . // - ஆம், நூலை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் அதே மன உழைச்சல் ஏற்படும் . அதுதான் இந்நூலின் வெற்றி .


ஜூதான் [ எச்சில் ],

ஆசிரியர் : ஓம் பிரகாஷ் வால்மீகி,

தமிழில் : வெ . கோவிந்த்சாமி,

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர் , சென்னை – 600 098 .

பக் :194  , விலை : ரூ.150. 

                       நன்றி : புத்தகம் பேசுது 8/13

மார்க்சை படிக்காமலே ஒப்பீடு செய்வதா.....

Posted by அகத்தீ Labels:


மார்க்சை படிக்காமலே 

 

ஒப்பீடு செய்வதா..... 

சு.பொ. அகத்தியலிங்கம்


உலகத்தத்துவ சிந்தனையாளர்களோடு பெரியாரை ஒப்பீடு செய்து ஒரு ஆய்வு நூல் வந்திருப்பது நல்ல முயற்சி. அதற்காக பாராட்டலாம். ஆனால் இந்த ஒப்பீடு எந்த நோக்கத்தோடு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த நோக்கத்தை இந்த நூல் நிறைவேற்றுகிறதா? சாக்ரட்டிஸ், பினோசா, ரூசோ, வால்டேர், காரல்மார்க்ஸ், கான்ட், சங்கரர் என எழுவரோடு பெரியாரை ஒப்பிட்டு பெரியாரே அனைத்திலும் விஞ்சி நிற்பதாக நூலாசிரியர் நிறுவமுயன்றிருக்கிறார். அது தான் அவருடைய நோக்கமும் கூட. அதில் பிழையில்லை.  நூலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அத்தகைய உணர்வுக்கு வந்து சேரவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை என்பது தான் இந்த நூலின் பலவீன மான பகுதி.

காரல்மார்க்ஸ், சங்கரர் தவிர மற்றவர்களுடைய தத்துவங்களை யாம் முழுமையாக கற்றவனில்லை. ஓரளவே அறிவோம். இந்நிலையில் ஆசிரியரின் ஒப்பீடு எந்த அளவு சரி, தப்பு என்று கூறுகிற நுண்மான் நுழைபுலம் எமக்கில்லை: என்று கருதுவதால்  யாம் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
அதே சமயம் காரல்மார்க்சை முறையாக பயிலாமலும், மார்க்சியத்தின் அடிப் படையை அறிந்து கொள்ளாமலும் நூலாசிரியர் ஒப்பீடு செய்ய முனைந்திருப் பது நகைப் பிற்குரியது. மேலும் வடிகட்டிய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துப்பி விட்டு இது தான் மார்க்ஸ் என்று சித்திரம் வரைய முயல்வது சிறுபிள்ளைத்தனம். இந்நூல் நெடுக நூலாசிரியர் அதைத்தான் செய்திருக்கிறார். இது மார்க்சுக்கு மட்டுமல்ல பெரியாருக்கும் செய்திருக்கிற பெருந்துரோகம் ஆகும். ஏனெனில் பெரியார் மார்க்ஸ் மீதும் மார்க்சியத்தின் மீதும் பெரும் பற்றும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவில் செயல்படும் கம்யூனிஸ் டுகள் மீது பெரியாருக்கு சில விமர்சனங்கள் இருந்த போதும் மார்க்சை அவர் கொச் சைப்படுத்தியதில்லை. ஆயினும் நூலாசிரியர் இந்த அடிப்படை உண்மையைக் கூட தெரியாமல் ஒப்பீடு செய்திருப்பது எந்த வகையில் நியாயம்? இதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அந்த குறிப்பிட்ட அத்தியாயத்திலிருந்து எடுத்துச் சொல்ல முடியும். இடம் கருதி ஒன்றிரண்டை மட்டும் இங்கே சுட்ட விழைகிறோம்.
 "பொதுவுடமை தோற்றுபோன கனவாகி விட்டதே "என தொடங்கும் வரிகளிலேயே நூலாசிரியருக்கு மார்க்சின் மீது உள்ள வெறுப்பை விதைப்பதாக உள் ளது. அடுத்து " மார்க்சின் மூலதனம் என்பது அரைகுறையான தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும்" என நூலாசிரியர் முதல் பத்தியிலேயே விஷம் கக்குகிறார். உலகமயச் சூழலில் உலகம் கடும் பொருளாதார சமூக நெருக்கடியில் சிக்குண்டு திணறுகிறது.  உலகமே மார்க்சின் மூலதனத்தில் தான் இதற்கான விடையை தேடிக் கொண்டிருக் கிறது என்பது உலகெங்கிலும் நடக்கும் விவாதத்தில் வெளிப்பட்டுள்ள பேருண்மை இதனை நூலாசிரியர் அறியாமல் இருப்பது வியப்புதான். " மார்க்சின் அழிவு தரும் கற்பனை உலகசிந்தனை" என போகிற போக்கில் நூலாசிரியர் புழுதி வாரிதூற்றுகி றாரே தவிர அதற்கான சான்றாதாரம் எதையும் சமர்ப்பிக்கவும் இல்லை.  சமர்ப்பிக்கவும் முடியாது.
கம்யூனிச சமுதாயம் என மார்க்ஸ் வரைந்து காட்டிய சமூகம் எங்கும் நிறுவப்பட வில்லை என்பதே உண்மை. ஆனால் ரஷ்யாவில் அமலிலிருந்த சோஷலிச அமைப் பிற்கு ஏற்பட்ட பின்னடைவை கம்யூனிசத்தின் வீழ்ச்சியாக சித்தரிப்பது மார்க்சைப் பற்றிய, மார்க்சியத்தைப்பற்றிய அடிப்படை ஞானமின்மையால் ஏற்படுவதே ஆகும்.  ஒவ்வொருவரும் தன் சக்திக்கு ஏற்ற உழைப்பை வழங்கிவிட்டு தேவைக்கேற்ற பங்கீட்டை பெறுகிற ஒப்புயர்வற்ற சமூகமே கம்யூனிச சமூகம். அதற்கு முந்தைய கட்டம் சக்திக்கு ஏற்ற உழைப்பு, உழைப்பிற்கு ஏற்ற கூலி என்கிற சோஷலிச கட்ட மைப்பு. அதையும் கூட ஒரே பாய்ச்சலில் அடைய முடியாது என்பதால் தான் சீனா மக்கள் ஜனநாயக புரட்சி என்றது. எது எப்படி இருப்பினும் சுரண்டலை மையமாக வைத்தி ருக்கிற முதலாளித்துவத்தைக் காட்டிலும் இந்த அமைப்புகள் பன்மடங்கு உயர்ந் தவை என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நூலாசிரியர் முதலாளித்துவத்தை உச்சிமுகர்ந்து பாராட்டுகிறார். மறுபுறம் மார்க்சை இகழ்கிறார். அவருடைய நோக்கம் பிசிறில்லாமல் சுரண்டும் வர்க்கத்திற்கு சேவகம் செய்வது என்பதாகவே இருக்கிறது.   
மதம் என்பது ஒரு அபின் (ஓபியம்)  என மார்க்ஸ்  சொன்னது ஏதோ கிறுத்துவ மதத்தின் மீது செய்யப்பட்ட விமர்சனம் எனத் தோற்றம் அளிக்கும் வகையில் நூலாசிரியர் எழுதிச் செல்வது நேர்மையற்றது. அனைத்து மதங்கள் குறித்தும் மார்க்ஸ் சொன்னது அது. ஆனால் அதற்குமேல் மதம் என்பது இதயமற்றவர்களின் இதயம் என்றும், ஏழைக ளின் ஏக்கப் பெருமூச்சு என்றும் மார்க்ஸ் கூறியதை நூலாசிரியர் படித்ததாகவே தெரிய வில்லை. அதற்கான சுவடே இந்நூலில் இல்லை. 
பல்வேறு சிந்தனையாளர்களின் கருத்தோட்டங்களை அங்கொன்றும் இங்கொன்று மாக திருடி கோர்க்கப்பட்ட ஒரு முரண்பாட்டு மூட்டை தான் மார்க்சியம் என நூல் நெடுக  தவறான சிந்தனையை நூலாசிரியர் விரவியிருக்கிறார். இது தான் ஆகப்பெரும் பிழை. மார்க்ஸ் வானத்திலிருந்து குதித்தவராக தன்னை ஒரு போதும் அறிவித்தவர் அல்ல. மார்க்சிஸ்டுகளும் அப்படிச் சொல்வதில்லை. மார்க்சியம் என்பது ஜெர்மன் தத்துவம், பிரஞ்சு அரசியல், பிரிட்டிஷ் பொருளாதாரம் என மூன்று அடிப்படைக் கூறுகளின் மீது கட்டப்பட்டது என்பதை மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் மறைத்ததில்லை.  இளம் ஹெகலி யாராக கல்லூரி நாட்களில் விளங்கிய மார்க்ஸ்  கருத்துமோதலில் விமர்சனங்களூடே ஹெகலையும் பாயர்பாக்கையும் மறுத்தும் உட்கொண்டும் புரட்சிகர தத்துவத்தை நோக்கிய படிமலர்ச்சி அடைந்தார் என்பது தான் வரலாறு.  தலைகீழாக நின்ற ஹெகலை நிமிர்த்தியது, நிறுத்தியது தான் என் பணி என்று மார்க்சே கூறியுள்ளார்.  டூரிங்கிற்கு மறுப்பு என்கிற நூல் ஒன்றே மார்க்ஸ் மற்றவர்களுடைய கருத்துக்களோடு எவ்வாறு உரசி, மோதி தனது தத்துவத்தை வளர்த்தெடுத்தார் என்பதற்கு சாட்சிகூறப்போதும்
மார்க்சை பயில்வது என்பது நூலாசிரியர் செய்வது போல் மேலோட்டமானதாகவோ அல்லது எதிர்நிலையிலிருந்தோ அணுகுவதாகாது. முதலில் நூலாசிரியர் மார்க்சை முழுமையாக புரிந்து கொள்ள முயலட்டும்.  அதன் பிறகு  விமர்சனம் செய்யவோ, ஆய்வு செய்யவோ முன் வரட்டும். சாமிநாத சர்மா எழுதிய காரல் மார்க்ஸ் வாழ்க்கைவரலாறு ஆரம்ப நிலையில் மார்க்ஸ் குறித்த எழுச்சியூட்டும் சிந்தனையை நெஞ்சில் விதைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஆய்வாளர்களுக்கு அதுமட்டுமே போதுமானதல்ல. மேலும் ஆழமான புரிதல் தேவை. அதற்கு கருவியாக பல நூல்கள் வந்துள்ளன . ஹென்ரி வோல்கவ் எழுதிய கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத் தினுடைய வளர்ச்சியின் வரலாற்றைக் கூறும்   மார்க்ஸ் பிறந்தார்  எனும் நூல் , ஒன்பது ஆசிரியர்கள் கூட்டாகத் தொகுத்த   கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு  உள்ளிட்ட நூல்களை நுட்பமாக வாசிப்பதும் அதன் தொடர்ச்சியாக  டெவிட் ரியாஜெனோவ் எழுதிய மார்க்ஸ், எங்கல்ஸ் வாழ்வும் எழுத்தும் ஓர் அறிமுகம் நூலை  வாசிப்பதும் புரிதலில் தெளிவையும் விசாலப்பார்வையை யும் உருவாக்கும். மார்க்ஸும் எங்கெல்ஸும் எவ்வாறான நிலைமைகளிலும் சுற்றுச் சூழல்களிலும் வளர்ந்து சிந்தனை  பெற்றனர் என்பதை கூர்மையாகப் புரிந்து கொள்ள முடியும் . 
 "ஒவ்வொரு தனிமனிதனும் , குறிப்பிட்ட சமூகச்சூழலின் படைப்பே ஆவான்  சாதனை ஒன்றை உருவாக்கும் எந்த ஒரு மேதையும் அதை தனக்கு முன்னால் அடை யப்பெற்ற சாதனைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாக்குகிறான் . சூன்யத் திலிருந்து அவன் உதிக்கவில்லை"  இவ்வாறு கூறும் ரியாஜெனோவ் 9 அத்தியாயங் களில் வரலாறு எப்படி மார்க்சை செதுக்கியது ? ; வரலாற்றை  பாட்டாளிவர்க்கத்துக்கு சாதகமாக மடைமாற்ற சிந்தனைக் களத்திலும் செயல் களத்திலும் எவ்வாறு மார்க்ஸ் இயங்கினார்,  இதில் எங்கெல்ஸின் பாத்திரம்யாது ? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கண்டிருக்கிறார். இந்த மார்க்சிய அறிவியலை வெறுமே தத்துவவியாக்கியானமாகப் பயிலாமல் அறிவியலாகப் பயில்வது இன்றையத் தேவை. அதற்கு  தொடர்ந்து விக் டர் ஆல்பேன் ஸீவ் எழுதிய மார்க்சிய, லெனினிய தத்துவம் என்ற நூலையும் வாசிப்பது அவசியம்.  இவற்றை எல்லாம் வாசிக்குமாறு யாம் நூலாசிரியருக்கு சிபாரிசு செய்வது மார்க்ஸ் மீதும் பெரியார் மீதும் கொண்ட பெரும்பற்றினால்தான்.
ஈரோட்டு திட்டத்தைப் பற்றி பேசுகிறபோது அதை வடிப்பதில் முதன்மைப் பாத்திரம் வகித்த தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் - செயல் முன்னோடி .சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் என்பதை நூலாசிரியர் அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஈரோட்டுத் திட்டமே பெரியார் ரஷ்யாவிற்கு போய் விட்டு வந்த பின்னர் பொதுவுடமை யின் பால் கொண்ட ஈர்ப்பால் உருப்பெற்றதே. இதனை நூலாசிரியர் உள்வாங்கியதாக தெரியவில்லை. கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலில் மொழி பெயர்த்து குடி யரசு ஏட்டில் வெளியிட்டவர் பெரியாரே. அதுவும் சோவியத் யூனியனுக்கு போவதற்கு முன்பே செய்தார். பிரிட்டிஷாரின் கடும் நெருக்கடிக்குப் பயந்து ஈரோட்டுத் திட்டத்தை  பெரியார் கைவிட்டார் என்று கூற இயலாது. மாறாக சமூக சீர்திருத் தமா கம்யூனிச பிரச்சாரமா எதற்கு முதலிடம் என்பதில் பெரியார் சமூக சீர்திருத்தத்திற்கே முன்னுரிமை வழங்க விரும்பினார். அதற்காக ஈரோட்டுத் திட்டத்தை கைவிட்டார். அதே சமயம் மார்க்சியத்தை அவர் என்றைக்கும் முற்றாக நிராகரித்ததில்லை. இந்திய கம்யூனிஸ்டுகள் மீது பெரி யாருக்கு விமர்சனங்கள் உண்டு. அதை பகிரங்கமாக சொல்லவும் அவர் தவறி யதில்லை. 
 மார்க்சையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவதும்; பெரியாரையும் அம் பேத்காரையும்  எதிர் எதிராக நிறுத்துவதும் சுரண்டும் வர்க்கம் மற்றும் மநுவாதிகளின் சூழ்ச்சியாகும். இன்றைய உலக மயத்தை எதிர்க்கவும் இந்துத்துவாவை எதிர்க் கவும் மார்க்சும், பெரியாரும், அம்பேத்கரும் தேவைப்படுகிறார்கள். இந்த கூரியபார்வை கூட நூலாசிரியருக்கு இல்லை என்பது தான் வேதனைக்குரியது. 
பிற தத்துவ ஞானிகளோடு பெரியாரை ஒப்பிட்ட நூலாசிரியர் அம்பேத்கரோடு ஒப்பிட ஏன் தவறினார்? என்கிற பெருங்கேள்வி நம்முன் உள்ளது.  அதுபோல எந்த தத்துவத்தை எடுத்தாலும் அனைத்துமே இந்துத்துவ சிந்தனையிலிருந்து பெறப் பட்டது என்பது போல் நூலாசிரியர் நூல் முழுவதும் விவரிக்கிறார். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்படி பொத்தாம் பொதுவாகக் கூறுவது ஒப்பியல் ஆய் விற்கு அழகாகாது. 
1953 ல் ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வித் திட்டம் என்பதை நாம் அறி வோம். அப்படிச் சொன்னால் தான் வாசகர்  பிழையின்றி புரிந்து கொள்ள இயலும். ஆனால் மொழி பெயர்ப்பாளர் மாற்றி அமைக்கப்பட்ட கல்வி என்று கூறுவது எதனால்? இப்படி மொழி பெயர்ப்புக்காக கையாண்ட பல சொற்களும் கூறவந்ததை  தெளிவாக புரிந்து கொள்ள தடையாக அமைந்துள்ளது. 
 பெரியாரியம் என்றால் அது வெறுமே கடவுள் மறுப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பும் மட்டும் தானா? தீண்டாமை எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு முதலியனவும் உள்ளடக்கியது அல்லவா? எல்லாவற்றிற்கும் மேலாக பெண் விடுதலை குறித்து பெரியாருக்கு நிகராக  தமிழ் நாட்டில் வேறு யாரும் சொன்னதில்லை. ஆனால் அந்த அம்சத்தை மொத் தமாக நூலாசிரியர் மறந்து விட்டாரா? அல்லது மறைத்து விட்டாரா? 
இந்தநூலுக்கு  மரியாதைக்குரிய கி. வீரமணி முன்னுரை எழுதியிருக்கிறார். எப்போதும் எதைப்பேசினாலும் எழுதினாலும் காரணகாரியங்களோடு தர்க்க நியாயங் களோடு எழுதவல்லவர் அவர். அவரோடு முரண்படுகிறவர்களும் அவர் எழுத்தை மதிப்பர். எமக்கும் பெருமதிப்புண்டு.  ஆனால் இந்த நூலை முழுமையாக  ஐயா வீரமணி அவர்கள் வாசித்துத் தான் முன்னுரை எழுதினாரா? என்கிற ஐயம் எமக்கு ஏற்படுகி றது. ஏனெனில் பெரியாரையே சரியாக நூலாசிரியர் உள்வாங்கவில்லை என்பது எம்முடைய தாழ்மையான கருத்து. இந்நூல் குறித்து வீரமணி அவர்கள் மறுபரிசீலனை செய் வார்கள் என்று நம்புகிறோம்.  குறைந்த பட்சம் காரல்மார்க்சை மிகத் தவறான கோணத் திலேயே கையாண்டிருக்கும் நூலாசிரியரின் அணுகுமுறையின் போதாமையை உணர்ந்து அந்த இயலை மட்டுமாவது திரும்பப்பெற  வீரமணி அவர்கள் முயற்சி எடுப்பார் என நம்புகிறோம்.


உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும்
ஓர் ஒப்பியல் ஆய்வு
ஆசிரியர்:  பேரா. ஆர். பெருமாள்
தமிழாக்கம்: முனைவர் ப. காளிமுத்து
வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நகர், வல்லம்,
தஞ்சாவூர் - 613403
பக் : 144,  விலை ரூ. 60/-  

தங்கக் களஞ்சியத்தைக் கொள்ளையடிக்க சதி

Posted by அகத்தீ Labels:


தங்கக் களஞ்சியத்தைக் கொள்ளையடிக்க சதி

-    சு.பொ. அகத்தியலிங்கம்


ஜூலை 18 ஆம் தேதி மாலையோடு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்படோமாஸ் கபீர் ஓய்வுபெற்றார் , 9 ஆம் தேதி  மாலை ஒரு வழக்கு குறித்து தன் சேம்பரில் வைத்தே தீர்ப்பு வாசித்தார் . அந்த வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் நடப்பதாக இருந்தது . அவசர அவசரமாகத் தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன ? 13 ஆண்டுகளாக வீதியில் நிறுத்தப்பட்டுள்ள கோலார் தங்க வயல் தொழிலாளர் குடும்பங்களில் இந்த அவசரத் தீர்ப்பு ஒளியேற்றுமா ? இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுவது யார் ? ஏன் ?

இந்தக் கேள்விகளை அலசும் முன் பழைய தகவலொன்றை அசைபோடுவோம் .  நீதிபதி கே .பாலகிருஷ்ணன் ஓய்வு பெறும் முன் அவசர அவசரமாக அளித்த தீர்ப்பு கர்நாட சுரங்கக் கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்தது . ஓய்வு பெற்ற பின் அதீத சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிக்கினார் . சமீபத்தில் தமிழக மாஜிஸ்ட்ரேட் ஒருவர்  பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்ரைக் காதலித்துக் குடும்பம் நடத்தி ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டார் . ஹரியான நீதிபதி ஒருவர் மனைவியை கொன்று கொலையை மறைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . நீதிபதிகள் சிலர் சந்தேகத்துக்கு அப்பாற் பட்டவர்களாக  இல்லை ; தீர்ப்புகளும் சிலவும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாக அமைவதில்லை .

தங்கவிலை ஏறிக்கொண்டே போகிறது . தங்கச் சுரங்கத்தை தனியாருக்குத் தரக்கூடாது . அரசே ஏற்று நடத்த வேண்டும் . எனக் காரண காரியங்களோடு கர்நாடக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் ; உலகளாவிய ஒப்பந்த புள்ளி [ குளோபல் டெண்டர் ] கோரி தனியாரிடம் உண்மையான  தங்க முட்டையிடும் வாத்தை தாரைவார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது ஏன் ? எப்படி ?
 
உண்மை நிலவரம் அறிந்தவர்கள் தீர்ப்பின் மர்ம முடிச்சை அறியாமல் தவிக்கிறார்கள் ; ஆனால் வாழ்க்கை கிழிக்கப்பட்ட கோலார் தங்க வயலின் மூத்த தொழிலாளர்கள் , ஈட்டி எட்டின வரைதான் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற பழமொழியைச் சர்வ சாதாரணமாகச் சொல்லிச் சிரிக்கிறார்கள் . அவர்களின் அனுபவத் தழும்பு அப்படிச் சொல்லவைக்கிறதோ ! சரி ! சரி! கோலாருக்கு வருவோம் .

கோலாரில் தங்கம் எடுக்கும் கலை மிகப்பழமையான தொழில் . நாகரிக மனிதன் தங்கம் என்கிற மஞ்சள் பிசாசை அதன் மதிப்பை அறிந்த காலந்தொட்டு தங்கத்தொழிலில் ஈடுபட்டுவரும் கேந்திரங்களில் கோலாரும் ஒன்று என்பர் வரலாற்று அறிஞர்கள் . பிரிட்டீஸார் வருகைக்கு முன்பே திப்பு சுல்தானும் ஹைதர் அலியும் அந்தச் சுரங்கங்களில் தங்கம் எடுத்து வந்ததாகத் தெரிகிறது . அதற்கு முன் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களும் இதில் ஈடுபட்டதாகத் தகவல் உண்டு . ஆயினும் 1880 ல் ஜாண் டெய்லர் அண்ட் கம்பெனி இத்தொழிலில் இப்பகுதியில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே முறையான சுரங்க ஏற்பாடுகள் செயல்பாட்டுக்கு வந்தது எனில் அது மிகைன்று .

குடியாத்தம் , திருப்பூர் , வேலூர்  வட்டாரத்திலிருந்து கொத்தடிமைகளாகக் கொண்டு வரப்பட்டவர்களும் - சாதிய அடக்குமுறை தாங்கமுடியாமல் தப்பி வயிற்றுப்பாட்டிற்காக இங்கே வந்து குடியேறியவர்களுமே மிக அதிகம் . பெரும்பான்மையோர் தலித்துகள் . 

   தீண்டாமை தமிழ் நாட்டில் இவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த போது இங்கே கிறுத்துவ தேவாலங்களின் வாசல் இவர்களுக்காகத் திறக்கப்பட்டதும் , தங்களுக்கென சொந்த சாமியையும் சொந்தக் கோயிலையும் உருவாக்கிக் கொள்ள முடிந்ததும் தலித்துகள் இங்கேவர ஊக்கம் தந்தது - என்கிறார் கர்நாடக மாநில சிஐடியு தலைவரும் சுரங்கத் தொழிற்சங்கத் தலவருமான வி.ஜெ.கே.நாயர்.

சுயமரியாதை உணர்வும் , தேசவிடுதலை ஆர்வமும் தமிழகத்தில் ஓங்கியதன் எதிரொலி இங்கும் வலுவாய் எழுந்தது . 1930 ல் சுமார் 16000 ம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் . அவர்களுக்கு ஒரு அடையாள எண் தரப்பட்டு , செம்புத் தகட்டில் அடையாளம் பொறித்து இரும்பு வளையத்தில் கையில் காப்பு போல் பூட்டப்பட்டிருக்கும் ; இவர்கள்  தப்ப முயன்றால் சித்தரவதையை , கடும் தண்டனையை அனுபவிக்க நேரிடும் . கொத்தடிமை கைவளையத்தை அகற்றக்கோரியும் , கடும் குளிரிலிருந்து தப்ப ஒரு இடம் கோரியும்  போராட்டம் வெடித்து 24 நாட்கள்  நடந்தது ; கே .ஆர் .சண்முகம் செட்டியார் என்ற தேசபக்தர் களத்தலைவரானார் .பிலிப் செயலாளரானார் . போராட்டம் தீவிரமானது .  துப்பாக்கிச் சூடு நடந்தது . 44 பேர் காயமடைந்தனர் . பெரும் போராட்டத்துக்குப் பின் கைவளையம் அகற்றப்பட்டது .

தொழிலாளர்களிடையே மெல்ல தொழிற்சங்க விழிப்புணர்வு ஏற்பட்டது. தமிழகத் தலைவர்கள் ப.ஜீவானந்தம் , சாரி , சர்க்கரைச் செட்டியார் உள்ளிட்ட தலைவர்கள் பெரும்பங்காற்றினர் . வேறு சில தொழிற்சங்கங்கள் இருப்பினும் செங்கொடி இயக்கம் தொழிலாளர் தோழனாய் படைத்தளபதியாய் ஆனது . தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன .செங்கொடிப் புதல்வர்கள் கே.எஸ். வாசனும் , வி.எம். கோவிந்தனும் வீரியமிக்க தலைவர்களாய் வலம் வந்தனர் . 1946 ஜனவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை 77 நாட்கள் தீரமிக்கப் போராட்டம் நடை பெற்றது . விளைவு குறைந்த பட்சக் கூலி 12 [ 75 பைசா ] அணாவிலிருந்து  ஒரு ரூபாய் ஒரு அணா அதாவது 106 பைசாவாக் கூலி உயர்ந்த்து.வேறு சில சலுகைகளும் கிடைத்தன .
 
மைசூர் சமஸ்தானத்துக்கு பொறுப்பாட்சி கோரும் போராட்டத்தில் தொழிலாளர்கள் குன்றா உறுதியுடனும் , தளரா ஊக்கமுடனும் பங்கேற்றனர் . வெகுண்டது பிரிட்டீஸ் அரசு . தொழிற்சங்கத்தை உடைத்தெறிய சதிவலை பின்னியது . திடீரென 1946 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் நாள் வெடித்த போராட்டத்தைத் தொடர்ந்து நவம்பர் 4 ஆம் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ; காளியப்பன் , ராமசாமி , ராமையா , சுப்பிரமணி உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர் . கோவிந்தனும் வாசனும் கைது செய்யப்பட்டனர் . தொழிற் சங்கங்களிடையே மோதல்கள் உசுப்பிவிடப்பட்டது.இந்து முஸ்லீம் மதக்கலவரமாக மாற்றவும் முயற்சிகள் பிரிட்டீஸாரால் மேற்கொள்ளப்பட்டன.

பத்திரிகையாளர் சாய்நாத் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டது போல் ; பல மதம் , சாதி , மொழி , இனம் இருப்பினும் பகமையற்ற சமநிலை சமூகமாக கோலார் விளங்கியதே அதன் பாரம்பரியம் . போராட்டங்கள் தொடர்ந்தன . 

வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுப் போனாலும் சுரங்கத்தை விட்டு போகவில்லை . 1966 ல் மைசூர் அரசாங்கம் சுரங்கத்தை ஏற்றெடுத்த பின்னரே இந்தியச் சுரங்கமானது . 1972 ல் மத்திய அரசு தேசவுடைமை ஆக்கியது . போராட்டங்களின் பயனாய் குடியிருப்பு,இலவசக் கல்வி,ஆரோக்கியம், குடிநீர் , சமூக நலத் திட்டங்கள் கிடைத்தன . 

1956 முதல் ஒரு முறை வாசனும் , ஒரு முறை  என். சி .நரசிம்மனும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சட்டமன்ற உறுப்பினரானாயினர் . அடுத்து இராஜகோபால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் .தேன் .சு .மணி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். குடிஅரசுக்கட்சி , அ இ அ தி மு க , காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஏனைய சந்தர்ப்பங்களில் வெற்றிபெற்றனர் . தொழிற் சங்கத்திலும் கட்சி சார்பு சங்கங்கள் வலுப்பெற்றன .

சுரங்கத்தின் ஒவ்வொரு நூறு அடியும் ஒரு லெவல் எனப்படும் .ஒவ்வொரு லெவலாக்க் கீழே போகப்போக தொழிலாளை துயரம் அதிகரித்த்து . சிலிகாஸ் எனும் தொழில்சார் நோய் கடுமையாகத் தாக்கியது . நுரையீரலை விஷ தூசித் தாக்குவதால் மூச்சுத்திணறல் , இரத்த வாந்தி , சளி , காய்ச்சல் இதனால் மரணமும் ஏற்பட்ட்து . மண்சரிவாலும் சாவுகள் நேர்ந்தன.

             சிலிகாஸ் நோயிலும் விபத்துகளாலும் இச்சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் இதுவரை 8000 எட்டாயிரம் பேர் உயிர்பலியாகி உள்ளனர் . இதுவரை 800 எட்டு நூறு டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளது . அதற்காக கொடுத்த இந்த உயிர்களின் பெருமதிப்பை எப்படிக் கணக்கிடுவது ? எந்தக் கணக்கில் சேர்பது ?

லெவல் 174 ஆனபோது  ,தொழிலாளர்கள் உயிரைப் பணையம் வைத்து கீழே போகத் தயங்கினர் . நிர்வாகத்தின் ஆட்குறைப்பாலும் , ஊழியர் வெளியேற்றத்தாலும் படிப்படியாக ஊழியர் எண்ணிக்கை 8000 ஆக்க் குறைந்தது . வேலை நியமனத் தடையும் அமலுக்கு வந்தது . இதனால் அத்தியாவசியப் பணிக்கு ஆளெடுக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது. சுரங்கத்தை முடக்கிய போது 3500 பேரே பணியாற்றினர் . 2001 ஆம் ஆண்டு பா. . ஆட்சியில் சுரங்கம் முடக்கப்பட்டது . பணி நின்றது . தொழிலாளர்கள் எந்தப் பணப் பயனுமின்றி வீதியில் தூக்கி எறியப்பட்டனர் . அத்துக்கூலிகளாய் பஞ்சம் பிழைக்க அன்றாடம் பெங்களூருக்குப் பயணப்படலானார்கள் . சுரங்கம் மூடப்படக் காரணம் நட்டம் எனக்கூறப்பட்ட்து உண்மையா ?

தங்கச் சுரங்கத்தில் நட்டம் ஏன் என்பதை அறிய 1992-93 ல் எஸ்.எப்.ஆர். சாரி கமிஷன் அமைக்கப்பட்ட்து . தங்கம் விலையேறும் போது நட்டம் ஏன் ? இக்கேள்வி சாரியைக் குடைந்தது . மற்ற பொருட்கள் உற்பத்தியெனில் சந்தைப்படுத்தல்  சிரமம் அதிகம் . இங்கு உற்பத்திப் பொருளே தங்கம் , வாங்குவது அரசு . பின் நட்டம் ஏன் ? தங்கம் உள்ளூர் சந்தையில் நாளும் விலை ஏறும் சூழலில் தங்க்க் கட்டுப்பாடு அமலில் இருந்த அன்றையச் சூழலில்   லண்டன் சந்தை நிலவரப்படி தங்கவிலையைக் குறைவாக அரசு நிர்ணயித்தது . இதனால் 1972 முதல் 1985 வரை 13 ஆண்டுகளில் மட்டிலும் இந்த விலை பாரபட்சத்தால் ரூ.8400 கோடியை அரசு மறைமுகமாகச் சுருட்டிக் கொண்டது . அரசாங்கம் ஒரு பைசாகூட சுரங்கத்தில் மூலதனம் போடவில்லை என்பதையும் சேர்த்துப்பார்க்க வேண்டும் . சுரங்கம் இழந்தது. மைசூர் சுரங்கம் , நந்தி துர்க்கா சுரங்கம் , சாம்பியன் சுரங்கம் இம்மூன்றிலும் சேர்த்தே இந்நிலைதான் . சாரி கமிஷனைத் தொடர்ந்து நடராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது . அதுவும் நட்டத்தின் பின்னால் உள்ள அரசின் மறைமுகச் சுரட்டலைச் சுட்டத் தவறவில்லை .

இதற்கிடையில் தங்க உற்பத்தி சுருங்கியது . மேல் லெவல்களில் ஒரு டன் தாதுமண்ணில் 20 கிராம் வரை கிடைத்த காலம் மலை ஏறிட பசிப்படியாக 7 கிராம் , 5 கிராம் என்றானது . இதுவரை மோசமில்லை . ஆனால் 174 லெவலில் அது வெறும் 0.7 கிராமாகக் குறைந்தது . இப்போது உற்பத்திச் செலவு மிக அதிகமானது . விருப்ப ஓய்வூதிய செலவு சுமையும் , அதற்கு அரசு கொடுத்த கடனுக்கு 17 சத வட்டிச் சுமையும் சுரங்கத்தை மூச்சுத் திணற வைத்தது.சுரங்கத்தை முடக்கி தொழிலாளரை கசக்கித் தூக்கி எறிந்தது.

டெத் ஆப் மைன்ஸ் [ சுரங்கத்தின் மரணம்] என இதன் கதையை ஃபிரண்டு லைனில் எழுதும் போது பார்வதி மேன்ன் தலைப்புக் கொடுத்திருப்பார் . ஆனால் சுரங்கம் சாகடிக்கப் படாமல் கோமா நிலையில் இவ்வளவு காலம் வைத்திருந்ததும் இப்போது தோலோடு சுளையோடு விழுங்க பன்னாட்டு திமிங்கிலங்களை அழைப்பதும் ஏன் ? சுரங்கத்தை மீட்க நடந்த முயற்சிகளும் விழுங்க நடந்த சதிகளும் கொஞ்சமோ! அதையும் பார்ப்போம்.

1992 ஆண்டே பி. . எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தின் முன் சுரங்க நிலை ஆய்வுக்கு வந்தது . எட்டு முறை கூடி விவாதித்து விட்டு 2000 ஆம் ஆண்டு சுரங்கப் பணியை மூட்டைகட்டி வைக்க உத்தரவிட்ட்து . . . . எப். ஆர் எனப்படும் தொழில் மற்றும் மறுசீரமைப்பு ஆணையமும் அதே ஆண்டு இறுதியில் அதே முடிவுக்கு வந்த்து , ஒரு டன் தாதுவில் கிடைக்கும் தங்கத்தின் அளவு ஒரு கிராமுக்கும் கீழே கீழே போவதால் உற்பத்தியை அதிகரிக்க அதிகரிக்க நட்டமே ஏற்படும் எனக் கூறியது ; அதே சமயம் தொழிலாளர்களில் ஒரு பிரிவினரும் சூப்பர்வைசர்களும் அடங்கிய பிரிவு கூட்டுறவு நுறையில் சுரங்கத்தை நடத்த கேட்ட அனுமதியை ஆணையமும் நிபந்தனைகளுடன் ஏற்றது . முதலில் கூட்டுறவு எனதற்குப் பதிலாக பங்கு நிறுவனமாக மாற்றப்படவேண்டும் . உலகளாவிய டெண்டர் [ குளோபல் டெண்டர்] அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்பன உட்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இக்குழுவே மத்திய அமைச்சர் கே . ஹெச் . முனியப்பாவின் கைப்பாவை அமைப்பு என்பது ஊரறிந்த கைப்புண் . இவர்களுக்குப் பின் ஆஸ்திரேலிய நிறுவனம் இருப்பது வெள்ளிடை மலை. இவர்கள் எழுப்பிய கோரிக்கை எதுவும் புதிதல்ல , சி ..டி .யு விடமிருந்து ஹை ஜாக் செய்த்துதான் , ஆனால் அதனை அமலாக்க விட்டுக்கொடுத்தல் என்கிற சாக்கில் நீர்த்துப்போகச் செய்வதும் ; ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குச் சாதகமாக பூசிமெழுகுவதும் தான் அவர்களின் சிறப்புப் பங்களிப்பு , என்கிறார்கள் மூத்த தொழிலாளிகள் . அவர்கள் அனுபவ வார்த்தைகள் பொய்யல்ல .

ஆஸ்திரேலிய கம்பெனி லாபம் தராத ஒரு நிறுவனத்தைக் கைப்பற்ற நாயாய் பேயாய் அலையுமா ? நரித்தனங்களில் இறங்குமா ? ஆம் , நரியின் கண் கோழியின் மீதுதான் . கோலார் தங்க வயலில் இறங்கி நடக்கும் யாரும் மலை மலையாய் குவிந்திருக்கும் கறுப்பு நிற மணல் குன்றுகளைக் காணலாம் . இதனை சயனைடு குன்று [ சயனைடு குப்பை என்பதே பொருத்தமாக இருக்கும் ] என்று அழைப்பர் . டெய்லிங் டம்ப்பு என்றும் கூறுவர் . ஆனால் தங்கப் புதையல் இதில் இருப்பதைக் கண்டு கொண்டது அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் . அங்கேதான் கொள்ளைக்காரன் மூளை மிகச் சரியாக திட்டமிடத்துவங்கியது .

நம் ஊரில் பழைய பிலிம்சுருளை சேகரித்து வெள்ளி எடுப்போர் உண்டு . பழம் பட்டுப் புடவையிலிருந்து சரிகை எடுப்போர் உண்டு . அது போலத்தான் இதுவும் ஆனால் பெரும் கொள்ளை . எப்படித் தெரியுமா ?

38 மில்லியன் டன் சைனைடு குப்பைகள் உள்ளன . ஒரு டன் சைனைடு குப்பையிலிருந்து 0.7 கிராம் தங்கம் எடுக்கலாம் . இதற்கு சுரங்கம் தோண்டத் தேவை இல்லை . அரித்து அல்லது சலித்தெடுத்தால் போதும் . லாபம் கொட்டும் . ஒரு சின்னக் கணக்கு 38 மில்லியன் என்றால் 3.8 கோடி டன் ஆகும் . ஒரு டன்னில் 0.7 கிராம் தங்கம் கிடைக்கும். ஒரு கிலோ என்பது 125 பவுனாகும் . அப்படியானால் ஒரு டன்னில் 1,25.000 பவுன் அதாவது ஒன்றே கால் லடசம் பவுன் தங்கம் எடுக்கலாம் . அதாவது 3.8 x 1000 x 1000 x 0.7 x 1,25 ,000 = 3,32,50,00,00,000 பவுன் எனினும் ; சேதாரக் கணக்கெல்லாம் போட்டபின்னும் 25.9 டன் தங்கம் கிடைக்கும் எனக் குறைந்த பட்சக் கணக்கை அதிகார வர்க்கமே ஒப்புக்கொள்கிறது . மிகக்குறைவாகக் கணக்கிட்டாலும் 7,770 கோடிரூபாய் கிடைக்கும் என்பதும் எல்லோரும் ஒப்புக் கொண்ட கணக்கு இது போக 12 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலமும், இதர கட்டிடங்களும் , வசதிகளும் கிடைக்கும் ; சுரங்கத்தை நவீனப்படுத்தினால் மேலும் லாபகரமாகத் தங்கம் எடுக்க முடியும் . உண்மையில் பொன்முட்டையிடும் வாத்து இது . இதைக் கைப்பற்றவே ஆஸ்திரேலிய நிறுவனம் பெரும் முயற்சி எடுக்கிறது .

இந்தக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் . அரசே சுரங்கத்தை ஏற்று நட்த்த வேண்டும் . பாதிக்கப்பட்ட தொழிலாளார்களுக்கு இரட்டை ஓய்வூதியப் பலனும் , வாரிசுதாரருக்கு வேலையும் வழங்க வேண்டும் . இக்கோரிக்கைகளுக்காக வீதியிலும் , நீதிமன்றத்திலும் , அரசியல் களத்திலும் முயற்சி எடுத்தது . பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதை மணிக்கணக்கில் விவரிக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி .அர்ச்சுனன் .

கர்நாடக உயர்நீதி மன்றம் சுரங்கத்தை அரசே ஏற்று நடத்த பரிந்துரை செய்தது . தங்கம் ஊசிப் போகாது . விலை ஏறிக்கொண்டே இருக்கும் . தனியாரிடம் கொடுப்பது என்பதும் அமைச்சரவை முடிவல்ல என்பதையெல்லாம் ஆதாரதோடு சுட்டிகாட்டியது . இது தொழிலாளி வர்க்கத்திற்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் . இதனைக் கழுகுக் கணகள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா ? கைப்பொம்மை குழு மூலம் பொம்மலாட்டம் துவங்கியது . மேல் முறையீடு செய்தது . இந்த வழக்கில் நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிபிட்டபடி உச்சநீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு வழங்கியுள்ளது . உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி மூலம் தனியாருக்கு வழங்க ஆணையிட்டுள்ளது .

இதனை பெரும் சாதனையாகக் கொண்டாடுகிறார் முனியப்பா . ஆனால் தேசத்தின் பொற்களஞ்சியத்தை ஆஸ்திரேலிய நிறுவனம் வேட்டையாட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சங்கத் தலைவரும் சிஐடியுவின் மூத்த தலைவருமான வி.ஜெ.கே நாயர் சுட்டிக்காட்டுவதுடன் ; அரசே ஏற்று நட்த்துவதுதான் சரியான ஒரே தீர்வு என்கிறார் .மேலும் பெரும்பாலான தொழிலாளிகள் முதுமை அடைந்து விட்டதால் கிடைத்தது போதும் எனக் கருதுவார்கள் என முனியப்பா கணக்குப்போட்டு பிரச்சாரம் செய்கிறார் என்பதயும் விஜெகே சுட்டுகிறார். இரட்டை பணப்பயன் சிஐடியு ஆதிமுதல் கோரிவருவதே .  சுரங்கப் பணி நிறுத்தப்பட்டதே தவிர நிறுவனம் முறையாக மூடப்படவில்லை - இதனை உயர் நீதி மன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது . எனவே அறிவிக்கப்பட்ட பணப்பயனுடன் 2001 ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் . அது தவிர வாரிசு ஒருவருக்கு வேலையும் வழங்கவேண்டும் . தேசத்தின் பொற்களஞ்சியத்தைக் காக்க மார்க்சிஸ்ட் கட்சியும் சிஐடியுவும் இறுதிவரை உறுதியாகப் போராடும் என்கிறார் வி.ஜெ.கே.

தங்க இறக்குமதியை குறைக்க நீட்டிமுழக்கும் சிதம்பரம் பல ஆயிரம் கோடி பெறுமான தங்கக் களஞ்சியத்தை காவுகொடுப்பதைத் தடுக்க வேண்டாமா ? அந்நிய செலாவணி இருப்புக் குறைந்து பண மதிப்பு வீழும் சூழலில் நமது தங்கச் சுரங்கத்தை பாதுகாப்பது அரசின் கடமையன்றோ! தங்கம் துருப்பிடிக்காதுதங்க மதிப்பு குறைந்து போகாதுஅதனை
இழக்கலாமோ ! வெள்ளையன் அன்று கொள்ளையடித்துப் போன கோகினூர் வைரத்தை மீட்போம் என அடிக்கடி வீர வசனம் பேசும் அரசும் ஆட்சியாளர்களும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆஸ்திரேலியனோ வேறு எந்த அந்நியனோ கொள்ளை அடிக்க அனுமதிக்கலாமோ ? கேளாக் காதினராய் இருக்கும் ஐ. மு . கூ அரசின் செவிப்பறை கிழிய பாட்டாளி வர்க்கம் குரல் எழுப்பாமல் தங்கக் கழஞ்சியத்தைத் தாரை வார்ப்பதை தடுக்கவே முடியாது .