நூல் சிறியது. உள்ளடக்கம்

Posted by அகத்தீ Labels:

நூல் சிறியது. உள்ளடக்கம்ஆத்மாவும் அது படும்பாடும்,ஆசிரியர் : சாகித் ,வெளியீடு : பறையோசை பதிப்பகம் ,1/171 , கடைத் தெரு ,பி.அழகாபுரி, கீழச்செவல்பட்டி - 630 205.பக் : 36 , விலை : ரூ.20.
 
“ மதவாதிகள் அனைவரும் ஒரே சுருதியில் பேசுகிறார்கள் . அதற்குத் தேவையான பொய்கள்தான் இந்த ஆத்மா, சொர்க்கம் , நரகம், தலைவிதி என்ற கடவுள் கோட்பாடு கள் .” என்கிறார் நூலாசிரியர். இந்நூலின் சாரம் அதுதான் . ஆத்மா என்ற கற்பிதத்தை வழக்கமாக இந்துமத புனைவுகளை தோலுரிப்பதன் மூலமே அம்பலப்படுத்துவர். இந்நூலில் அத்தோடு குரான் வழியாகவும் ஆத்மா என்கிற பொய்மை கட்டுடைக்கப் பட்டுள்ளது மிகமுக்கியமானது . முதலாவதாக பெரியார் வழியில் மதக்கருத்துகளின் முரண்பாட்டை மையமாக வைத்து ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவை எவ்வளவு அபத்தமானது என இந்நூல் வாதாடுகிறது ; மறுபுறம் நடை முறை அனுபவம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் வாதிடுகிறது. உடலின் எந்த உறுப்பினுள் தேடிப்பார்ப்பினும்; சோதித்து சலித்து நுணுகிப் பார்த்தாலும் ஆத்மா அகப்படாது .

ஏனெனில் அது இல்லாத ஒன்று . நூலாசிரியர் கூர்மையாக ஆய்ந்து தக்க வாதங்கள் மூலம் இதனை நிறுவுகிறார்.மதநம்பிக்கையாளர்கள் மனம் புண்படுமே என சிலர் வாதிடக்கூடும். என்ன செய்வது... உண்மை உறுத்தத்தானே செய்யும். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றும் மதக்கற்பனையை பகடி செய்த படிதானே பிறக்கின்றன.

அதற்காக அறிவியல் வேண்டாமென்று சொல்லமுடியுமா?இஸ் லாமை யாரும் விமர்சிப்பதில்லை என்கிற இந்துத்துவ ராமகோபாலன்கள் கூற்றுக்கு இந்நூல் ஒருபதிலடி .ஆசிரியர் இஸ்லாம் மதத்தில் பிறந்து விட்டதாலும் ; அதனை உள்வாங் கியவர் என்கிற முறையிலும் - எதிர்ப்புவரும் என்ற நிலையிலும் துணிந்து எழுதியுள்ளது பாராட்டுக்குரியது . இதனை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் ; இது அவர வர் உரிமை ; ஆயினும் படிப்பது அவசியம் படித்து விட்டு முடிவுக்கு வாருங்கள்.

மநுவை காக்கும் நூதன உத்தி...

Posted by அகத்தீ Labels:

மநுவை காக்கும் நூதன உத்தி...

சு.பொ. அகத்தியலிங்கம் 
 

சாதி இன்று ஆசிரியர்கள் : சி .லக்ஷ்மணன் , ஸ்டாலின் ராஜாங்கம் , ஜெ.பாலசுப்பிரமணியம் , அ.ஜெகநாதன், அன்புச்செல்வம்வெளியீடு :தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம் , தமிழ் நாடு - புதுச்சேரி , தொடர்பு: ஸ்டாலின் ராஜாங்கம் ,முன்னூர் மங்கலம் , செங்கம் வட்டம் ,திருவண்ணாமலை மாவட்டம் - 606 705 . பக் : 112 , விலை : ரூ.70.
 
சாதி குறித்த ஆய்வுகள் முற்றுப்பெறவில்லை. தொடர்கிறது. அதன் இன்னொரு முயற்சி தான் இது. தருமபுரி சம்பவத்திற்கு பிந்தைய தமிழகச் சூழலில் சாதி குறித்தான விவாதம் சூடு பிடித்துள்ளது .
“தருமபுரி வன்முறைக்குப் பின்னர் பல்வேறு கட்டங்க ளில் உரையாடி இந்த கூட்டறிக்கையைத் தயாரித்திருக்கிறோம்” என்கிறார்கள் நூலாசிரியர்கள். “ இன்றைய சாதி அமைப்பின் இயங்கு நிலை, யதார்த்தத்தைப் புரிந்து கொள் வதன் மூலமே அதனை எதிர்கொள்ள முடியும் என்கிற விதத்தில் தலித் ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பிற்கான திட்டம் என்றெல்லாம் அமையாமல், முழுக்க சாதியின் பரிணாமங்களைப் பேசுவ தாக மட்டுமே இந்த அறிக்கை அமைந்திருக்கிறது.”என முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதை நம்பி உள்ளே புகுந்தால் ஆய்வு திசை மாறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .

அரைகுறை உண்மை அதிக ஆபத்தானது ; அது மெய்போல் தோற்றமளிக்கும். ஆனால் பொய்மைக்கு வலுசேர்க்கும் . இந்நூல் அந்த வகைப்பட்டது . இந்த அறிக்கை ஏழு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. அறிமுகம் என்கிற முதல் பகுதி சாதி பொதுவாகக் காலந்தோறும் தன்னைத் தகவமைத்துக் கொண்டேவந்துள்ளது என கூறி விட்டு, அதனுடைய வேரை பண்டைய சனாதன வரலாற்றிலிருந்து துண்டித்து இந்நூல் அணுகுகிறது . காலந்தோறும் பிராமணியம் தன் சமூக மேலாண்மையையும், அதிகாரக் கூட்டையும் எப்படி தக்க வைத்துக் கொண்டுள்ளது என்ப தைப் பற்றி பேசாமல் நழுவவே இந்த அறிமுகம் அச்சாரம் போட்டுள்ளது .

சாதிகளின் தோற்றம் குறித்துப் பேசும் இரண்டாவது அத்தியாயம் அம்பேத்கர் செய்தது போல் அதன் கருத்தியல் கொடுமைக்கு மநுவைக் குற்றவாளி ஆக்கும் காரியத்தை செய்ய வில்லை . மாறாக சோழர் மற்றும் விஜயநகர ஆட்சிக்காலத்தில் சாதியம் இறுக்கம் பெற்ற வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் நூலாசிரியர்கள் வலுவாக சுட்டுவது ஏன்? தமிழகத்தில் வேரோடி இருக்கிற பிராமணிய எதிர்ப்பை தெலுங்கர் - வடுகர் எதிர்ப்பாக மடைமாற்றம் செய்ய சில தொண்டு நிறுவனங்களும் சங் பரிவாரின் ஆசிபெற்ற அறிவுஜீவிக் கூட்டமும் செய்யும் முயற்சிக்கு சற்றும் குறையாத முயற்சியாகவே இந்நூலாசிரியர் வாதம் உள்ளது . சாதியத்தின் மெய்யான கருத்தியல் ஆணிவேரான வர்ணாஸ்ரமம் மற்றும் மநுதர் மத்தை வாதத்தின் மைய இழையிலிருந்து ஒதுக்குவதன் மூலம் மறைமுகமாக அதனை பாதுகாக்கிறது.
இந்துத்துவக் கூட்டத்துக்கு இதைவிட இதமான காரியம் வேறென்னவாக இருக்கமுடியும் ?சாதியத்தின் உருவாக்கத்திற்கு காலனியத்தின் பங்களிப்பு என்கிற மூன்றாவது அத்தியாயத் தில் நூலாசிரியரின் போக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிட்டது. சாதி என்பது பிரிட்டிஷார் இங்கு உருவாக்கியதா ? இல்லவே இல்லை . இங்கி ருந்த சாதிப்பிரிவினையை சாதி மோதலை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் ஆட்சி அதிகாரத்தைக் காப்பாற்ற பயன்படுத்திக் கொண்டது என்பதே வரலாற்று உண்மை; ஆனால் சாதிக் கொடுமையே பிரிட்டிஷாரின் கொடை என்பது போலவே சங்பரிவார் வாதிடும்; அதே குரல் இந்நூலிலும் வெளிப் படுவதுதான் வேதனை.

குறிப்பாக சமூக நீதி - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அல்லது பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்கிற கருத்தோட்டம் உருவானதை எதிர்நிலையாக நூலாசிரியர்கள் பார்ப்பது வரலாற்று முரணாகும்.தமிழ் நவீன அரசியல் உருவாக் கமும் சாதிகளின் எழுச்சியும் என்ற நான்காவது அத்தியாய மும், இடஒதுக்கீடும் சாதிகளின் மீள்கட்டு மானமும் என்ற நான்காவது அத்தியாயமும் சமூகநீதி அல்லது இடைநிலை சாதிகள் இடஒதுக்கீடு மூலம் சற்றே முன்னேறியதை தலித்துகளுக்கு எதிரான வரலாற்றுப் போக்காக இனம் காட்டுகிறது. சமூகவரலாற்றில் நிலப்பிரபுத்துவம் மிக வஞ்சகமாக பிராமணர்களோ அல்லது மேல்சாதியினரோ நேரடியாக களம் இறங்காமல் இந்த இடைநிலை சாதிகள் மூலமே தலித்துகளை பண்ணை அடிமைகளாய் நெடுங்காலம் அடக்கி வைத்திருந்தனர் என்பதும், மநுவின் சாதியபடி நிலை சமூக உளவியல் இந்த அடக்குமுறைக்கு கருத்தியல் வலுசேர்த்தது என்பதையும் வசதியாக நூலாசிரியர் மறந்து விடுகிறார்.

அதன் நீட்சி யும் தொடர்ச்சியும் இன்றுவரை உள்ளதை நூலாசிரியர் பார்க்காமல், இடஒதுக்கீட்டின் பிந்தைய விளைவாகப் பார்ப்பது தலைகீழ் பார்வையாகும்.சமூக மாற்றத்துக்கான போரில் ஒன்றுபடவேண்டிய தலித்துகளையும் பிற்படுத்தப்பட் டோர்களையும் நேரெதிராக மோதவிடுவதும், முதல் எதிரிகளாகக் கருத்து உருவாக்குவதும் மேல் தட்டையும் சுரண்டல் வர்க்கத்தையும் பாதுகாக்கும் சதிச் செயலே. இதனை நாம் கூறுகிற போது தருமபுரி போன்ற வன்முறைகளில் இந்த இடைநிலை சாதியில் ஒரு பிரிவினரின் ஆதிக்க அராஜகத்தை மறுக்கவில்லை.
அந்த சாதிய அரசியல் அணிதிரட்டலுக்கு எதிராக போராட வேண்டியதின் அவசியத்தை உணர்கிறோம். இடதுசாரிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட்டுகள் களத்தில் நிற்கின்றனர். அதே சமயம் தலித்துகளின் எதிரி பிற்படுத்தப்பட்டோரே என்கிற இந்த நூலாசிரியரின் கருத்தையும் தொண்டு நிறுவனங்களின் கருத்தையும் நிராகரிக்கிறோம். தலித்துகளுக்கான இடஒதுக்கீடு தவிர்க்க இயலாத வரலாற்றுக் கடமை என்பதை நூலாசிரியரோடு நாமும் வழி மொழிகிறோம். அதே நேரத்தில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தலித்துகளுக்கு எதிராக கருத்து ரீதியாக நிறுத்துவது தவ றானது ; அது மண்டலை எதிர்க்கும் மநுவாதிகளின் குரலே.

இட ஒதுக்கீடு அமலாக்கத்தில் நிரம்பக் குறைபாடுகள் உள்ளன . அதை யாரும் மறுக்க முடியாது. அதை நிவர்த்திக்கப் போராடுவது என்பது வேறு; பிற்பட்டோருக்கான இடஒதுக்கீட்டையே கேள்விக்குறி ஆக்குவது என்பது வேறு; அதனை ஏற்க இயலாது.சாதியும் தீண்டாமையும், சாதிகளின் இன்றைய உருநிலை என்கிற கடைசி இரு அத்தியாயங்க ளும் சொல்வது ரொம்பவும் அபத்தமானதாக உள்ளது. தீண்டாமைக்கு உட்படும் அடித்தட்டு சாதிகள் என்கிற நான்காவது படிக்கட்டாகவே தலித்துகள் இன்றளவும் தொடர்கிறார்கள் என்கிற சமூக யதார்த்தத்தை நூலாசிரியரோடு நாமும் உணர்கிறோம். உடன்படுகிறோம். ஆனால் நூலாசிரியர் கூறுவதுபோல் மறவர், அகமுடையார், கள்ளர் கொங்கு வேளாளக்கவுண்டர், வன்னியர், நாடார், யாதவர் உள்ளிட்ட பிராமணரல்லாத பெரும்பான்மை சாதியினர் சகல சௌபாக்கியங் களுடனுன் அதிகார அந்தஸ்துடனும் சமூகத்தின் முதல் அதிகார வர்க்கமாகிவிட்டனர் என்பது உண்மையல்ல; இந்தப் பிரிவினரிலும் பெரும்பான்மையானோர் இன்னும் அன்றாடங் காய்ச்சிகளாகவே உழல் கின்றனர் என்பதும் உறுத்தும் உண்மை.

ஆகவேதான் தலித்துகளில் ஒரு சிறு பகுதியினர் சற்று முன்னேறி இருப்பதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை; இந்த சாதிய படிநிலை உளவியலைத்தான் ஆதிக்க சக்திகள் உசுப்பிவிட்டு சாதி மோதலாக நீட்சி பெறச் செய்கின்றன. இந்த உண்மையை இந்நூல் காண மறுக்கிறது .“இன்றைய சாதிக்குழுக்களை பொது நிலையில் நான்கு பிரிவாகப் பார்க்க இந்த அறிக்கை முயற்சிக்கிறது. 1.தீண்டப்படாத சாதிகள், 2.பிராமணர்கள், 3.பிராமணரல்லாத எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகள், 4 . பிராமணரல்லாத எண்ணிக்கை சிறுபான்மை சாதிகள்” இப்படி வகைப் படுத்தி விட்டு அதில் நாம் மேலே சுட்டிக்காட்டியது போல் பிராமணரல்லாத பெரும்பான்மை சாதியினரை குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் தவறான கருத்தியலையே இந்நூல் முன்வைக்கிறது. தீண்டாமை ஒழிப்பிலும் சமூக மாற்றத்திலும் தோள் இணைய வேண்டிய உழைக்கும் மக்களை பிரித்து மோதவிடும் மோசமான கருத்தியல் . இந்துத்துவ சக்திகளுக்கு மறைமுகமாக வலுகூட்டும் ஆபத்தான கருத்தியல்.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்ட தோல்விகளை பெரியாரிய - அம்பேத்கரிய தோல்வியாக சித்தரிப்பது - நேச சக்தியாக இருக்க வேண்டிய பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய சக்திகளை நேரெதிர் சக்திகளாக நிறுத்து வதும் சாதியத்துக்கு எதிரான போரை முனை மழுங்கச் செய்யும் சூழ்ச்சியே! இந்நூலின் உள்ளடக்கம் இந்தக் கைங்கரியத்தையே அறிவுஜீவிகளின் வார்த்தைகளில் செய்கிறது.தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் கூறிய எச் ரிக்கையை நினைவிற்கொள்ள வேண்டும் , “சாதி பல வடிவங்களாக மாறுதல் அடைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட வகுப்பினரான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடையேயான மோதல் விஸ்வரூபம் அடையும் அளவுக்கு இந்த மாறுதல் ஏற்பட்டுள்ளன. எனினும் 3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் சாதியப் பிரமாணம் நீடிக்கின்ற விசேஷத் தன்மையைக் கணக்கில் கொண்டு வர்க்க மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் சாதிய மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டமும் தொடர வேண்டும்.
” ஆம், பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக் கும் இடையே உள்ள மோதலை நியாயப் படுத்துவதும் கருத்தியல் முலாம் பூசுவதும் விசிறிவிடுவதும் தீர்வாகாது; ஆனால் இந்நூலின் குவிமையம் அதை நோக்கித்தான் உள்ளது.“மக்களை பிளவுபடுத்தும் சாதி மற்றும் தீண்டாமை என்ற சவாலை முறியடிக்க சுரண்டப்ப டும் மக்களிடையே சாதி உணர்வுக்கு எதிராக சமூகசீர்திருத்த தத்துவார்த்தப் போராட்டத்தை நடத்துவது கடமையாகும். பாட்டாளி மக்கள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த இது அவசியமாகும்” என்றார் பி.டி.ரணதிவே.மநுதர்மத்திற்கு எதிராகவும் வர்ணாஸ்ரம சிந்தனைக்கு எதிராகவும் தத்துவார்த்தப் போராட்டத் தைக் கூர்மைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் அதனை திசைதிருப்பவும் முனைமழுங்கச் செய் யவும் இந்நூல் முயற்சிப்பது இந்துத்துவத்திற்கு முட்டுக் கொடுக்கும் செயலன்றி வேறில்லை.