நான் தேசபக்தனல்ல …

Posted by அகத்தீ Labels:




நான் தேசபக்தனல்ல …


கிரிகெட் மாட்ச் பார்க்கும்போது
தேசக்கொடியை உடலெல்லாம்
சுற்றிக்கொள்வதுதான் தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல …


யோகா செய்யும் போது
தேசக் கொடியால் மூஞ்சியைத்
துடைப்பதுதான் தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல …


அண்டை வீட்டில் வசிக்கும்
அக்பரை அக்னீஸ்மேரியை அந்நியனாய்
வெறுக்கப் பழகுவதுதான் தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல....


அடுத்தவர் உணவில் உடையில்
மூக்கை நுழைப்பதுதான் தேசபக்தியெனில்
நூறு முறை உரக்கச் சொல்வேன்
நான் தேசபக்தனல்ல....


தேசியகீதம் பாடிக்கொண்டே
மெல்ல பிக்பாகெட் அடிப்பதை
கண்டும்காணாமலிருப்பதே தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல....


வளர்ச்சி வளர்ச்சி என மந்திரம் முணுமுணுத்தபடி
ஏழை வயிற்றிலடித்து கார்ப்பரேட் வளர்க்கும்
குருட்டுத்தனமே தேசபக்தியெனில்
நான் தேசபக்தனல்ல....


தேசப்படத்தின் வரை கோடுகளை
மண்ணை மலையை கடலை காட்டை பாலையை
நேசிப்பது மட்டுமே தேசபத்தியெனில்
நான் தேசபக்தனல்ல....


வியர்வையால் இரத்தத்தால் தேசத்தை
நிர்மானிக்கும் பட்டினி வயிறுகளை
பாவப்பட்ட ஆத்மாக்களை நேசிப்பதும்
அவர்களுக்காய் சமரசமின்றி சமர் செய்வதும்
தேசவிரோதமெனில் சந்தேகமே இல்லை
நான் தேசவிரோதியே ! நான் தேசவிரோதியே !


- சு.பொ.அகத்தியலிங்கம் .

அவன் பெயர்..

Posted by அகத்தீ Labels:









அவன் பெயர்..



அவன்
வெறுப்பைப் பேசுகிறான்
வெறுப்பை எழுதுகிறான்
வெறுப்பைப் பயிற்றுவிக்கிறான்
வெறுப்பை விதைக்கிறான்
வெறுப்பை உண்கிறான்
வெறுப்பை குடிக்கிறான்
வெறுப்பை சுவாசிக்கிறான்
வெறுப்பே அவன் உடல்
வெறுப்பே அவன் எலும்பு
வெறுப்பே அவன் நரம்பு
வெறுப்பே அவன் ரத்தம்
வெறுப்பே அவன் உயிர்
அவனுக்கு கண்ணீர் வராது
தாகம் தணிக்கவும் இரத்தம்தான்
வெறுப்பும் அவனும்
வேறுவேறு அல்ல
வெறுப்பே அவன்
அவனே வெறுப்பு
அவளாயிருப்பினும்
அவனின் நகலாயிருப்பதால்
அவனும் அவளும் ஒன்றே !
அவனுக்கு
ஆர் எஸ் எஸ்
தாலிபான்
,ஐஎஸ்ஐஎஸ்.
பாசிசம் ,
நாசிசம் ,
இந்துத்துவம்
ஜியோனிசம்
இஸ்லாமிய அடிப்படைவாதம்
கிறுத்துவ வெறி
சாதியம் ,
மதம் ,
இனம்
தூய்மைவாதம்
எத்தனையோ
சொல்லாடல்கள்
ஆனால்
வெறுப்பு ஒன்றே விதை
ஆம்
வெறுப்பு ஒன்றே விதை
அவனுக்குப் பகை
மனிதம்! மனிதம் !
ஆம்!
அவனுக்குப் பகை
மனிதம் ! மனிதம் !





பெண்ணாய்ப் பிறந்த காரணத்தினாலேயே ….........

Posted by அகத்தீ Labels:











பெண்ணாய்ப் பிறந்த 
காரணத்தினாலேயே …





அரசியல் கதை அல்ல ; குடும்பக் கதை . கணவனைப் பிரிந்த பெண்ணின் வாழ்க்கை ரணம்தான் நூல் நெடுக நம் இரக்கத்தை யாசித்துக்கொண்டே இருக்கிறது .ஆனால் வழக்கமான குடும்பத்தின் கதையல்ல உறவுகளுக்குள் நடக்கும் போட்டி ,பொறாமை இவற்றின் கதை மட்டுமல்ல ; ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எவ்வளவு நுட்பமாகச் சமூகம் கட்டி அமைக்கிறது என்பதை கதைப் போக்கில் சொல்லிச் செல்வதுதான் இந்நூலின் தனிக்கூறு .



பார்பனக் குடும்பத்திலும் தாயின் மனநிலையைப் பொறுத்தே பெண்குழந்தையின் மகிழ்ச்சியும் , வளர்ச்சியும் அமையும் .அந்தத் தாய் எனும் , ‘ மந்திரக் கோல் மங்கை’,’ தன் வாழ்வில் நிறைவடையாதவராக , பொறாமையும் ஆத்திரமும் , எரிச்சலும் உடையவராக இருந்துவிட்டால் பிறக்கும் பெண் குழந்தையின் பாடு இரக்கத்துக்கு உரியதாகிவிடும் . அதிலும் தாயைவிட நிறத்திலும் அழகிலும் சற்று கூடுதலானவளாக இருந்து பொறாமைக்கு ஆளாகிவிட்டால் ; அந்தப் பெண் குழந்தை என்ன மாதிரியான வேதனைகளை அடைவாள் என்பது பலருக்குத் தெரியாது .தாயாவது பொறாமைப்படுவதாவது என்று நம்மை ஏமாற்றிக் கொள்ளும் சுகம் இருக்கிறதே ! அது அலாதியானது . அப்படி தன்னையே ஏமாற்றிக் கொண்டவள்தான் பிரேமா . அந்த பிரேமாவின் , ‘கண்ணுக்குள் சற்று பயணித்து ,’பல போலித்திரைகளை அகற்றி மனிதர்களின் அசல் முகங்களை அறிமுகப்படுத்துகிறார் வத்ஸ்லா.” என முன்னுரையில் வழக்கறிஞர் அருள்மொழி கூறி இருப்பது மிகையன்று .

சிறு வயதிலேயே மக்கு மக்கு என சதா குட்டி குட்டி தனனம்பிக்கையை சிதைத்தே வளர்க்கப்பட்ட பிரேமா , பாட்டியின் அன்புகூட மறுக்கப்பட்ட குழந்தைமைப் பருவம் ; அண்ணனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தனக்கு தரப்படாமலே தாழ்வு மனப்பாண்மைக்கு உள்ளாக்கப்பட்டவள் . கணவன் ,மாமியாரால் மனுஷியாக்கூட நடத்தப்படாத சோகம் ; பெற்ற பிள்ளை வளர்க்க கணவனை பிரிந்தவள் ; சுயமாய் முன்னேற கல்வியை ,வேலையைச் சரணடைந்தவள் ; அங்கும் ஆணாதிக்கத்தின் வஞ்சக முகத்தை எதிர்கொண்டவள் ; தான் பெரிதும் நேசித்த தாயே தான் முன்னேறுவதை பொறுக்காமல் முட்டுக்கட்டைப் போடுவதைக் கண்டவள் ; தன் அண்ணனின் பொறாமையுடன்கூடிய பரிகசிப்பை எதிர்கொண்டவள் ; வாழ்க்கை போராட்ட அனுபவத்தோடு பெண்ணியம் நோக்கி நகருகிறாள் .

ஆம் , “ அவளுக்கு அங்கு பேசிய பேச்சுகளில் பாதிகூட மனதில் பதியவில்லை . வேறு ஏதோ ஒன்று அவளைத் தாக்கியது .அத்தனை பெண்களும் வெவ்வேறு பின்புலத்திலிருந்து .ஆனால் ஒரு விஷயத்தில் ஒத்தவர் .அதாவது பெண்ணாய்ப் பிறந்த காரணத்தால் பிரச்சனைகளுக்கு ஆளானவர்கள் .அன்று அவள் பெண்ணியத்தைப் பற்றியோ , அடிப்படை மதவாதத்தைப் பற்றியோ ,சாதிப் பிரச்சனையைப் பற்றியோ அதிகம் ஒன்றும் தெரிந்துகொள்ளவில்லை .ஆனால் இரவு உணவுக்குப் பின் கணவனில்லாமல் தனியே வாழும் பெண்களுக்கான பிரத்யேகக் கூட்டம் நடந்தது . அக்கூட்டத்தில் பங்கேற்ற அவள் அக்கணத்தில் புதிதாய்ப் பிறந்தாள்.” இது அரசியல் இல்லையா ? அரசியலின்றி எதுவும் எழுத முடியுமோ ? எது அரசியல் என்கிற புரிதலில்தான் எல்லோருக்கும் பிரச்சனை .

பிரேமா .பிரேமாவின் அம்மா , பிரேமாவின் பாட்டி ,பிரேமாவின் மகள் என நான்கு தலைமுறை பெண்கள் இந்நூலில் வருகிறார்கள் . தலைமுறை இடைவெளியும் தெரிகிறது ; தொடரும் ஆணாதிக்க போக்கும் வெளிப்படுகிறது ; கடைசி தலைமுறையில் வெளிச்ச்க்கீற்றும் பளிச்சிடுகிறது .


காலம்காலமாக இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களை அடிமைப்படுத்தியதோடு நில்லாமல் அவர்களை மூளைச் சலவை செய்து அதே ஆணாதிக்கச் சிந்தனைகளை அவர்கள் மனதிலும் ஊறவைத்துவிட்டது. ஆகவேதான் நிறைய பெண்கள் ஆண்களின் ஒப்புதலுக்காக ஏங்குகிறார்கள் .அதனால்தான் மற்ற பெண்களை சகபோட்டியாளர்களாய்ப் பார்க்கிறார்கள் .அம்மாவும் அதனால்தான் தன்னிடம் அப்படி நடந்து கொண்டார்களோ?” இவ்வாறு பிரேமா யோசிப்பது சரியான புரிதலின் தொடக்கமாகும் . இங்கே சில பெண்களின் புரியாமையும் பிடிவாதமும் குடும்பத்தில் தலைவலியாவதைச் சுட்டும் ஆண்கள் பழியை அவர்கள் மீதோ அவர்களின் வளர்ப்பு மீதோ சாற்றிவிடுவதே வாடிக்கை . இப்போக்கின் சமூகவேரை புரிந்து பிரச்சனையைக் கையாண்டால் சிக்கலை அவிழ்ப்பது சற்று எளிதாகக்கூடும் ! ஆணாதிக்கம் என்பது ஆணிடம் இருப்பது மட்டுமல்ல ;பெண்களிடமும் உண்டு . இந்நூலில் நிறையக் காணலாம் .

பிரேமா யாரையும் வெறுப்பவராக இல்லாமல் புரிந்து கொள்கிறவராக பரிமாணம் அடைகிறார் . ஒவ்வொருவர் கோபதாபத்துக்கும் - குறிப்பாக பெண்களின் போக்கிற்கும் அவரவர் வளர்ந்த சூழலும் அவர்களுக்கு ஏற்பட்ட மனக்காயங்களுமே காரணம் ; அதுவும் இந்த ஆணாதிக்கச் சமூகப் போக்கின் விளைவு என்பதை பிரேமா உணரும் சமயம் நமக்கும் வெளிச்சம் கிடைக்கிறது .

மதம் பொதுஜனங்களுக்கு ஓபியம் போன்ற மயக்க மருந்து என்பது உண்மையோ இல்லையோ , விஞ்ஞானிகள் அந்த அளவு மனவலியைக் குறைக்கக்கூடிய ஒரு மயக்க மருந்தைக் கண்டுபிடிக்கும் வரை உண்மையான மதநம்பிக்கையைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.” என்று பிரேமா கருதுவதுகூட செயற்கையானதல்ல . மார்க்ஸ் மதம் அபினி என்றுமட்டுமா கூறினார் .இல்லை மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும்,அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும்,இதயமற்ற உலகின் இதயமாகவும்,ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.இப்படி மார்க்ஸ் சொன்னதையும் சேர்த்தே பார்க்க வேண்டும் . ஏன் பெண்களிடம் மதநம்பிக்கை அதிகமாக உள்ளது என்பதற்கு இது விடையாகவும் உள்ளது .



பொதுவாய் ஒவ்வொரு வீட்டிலும் மாமியார் ,மருமகள் ,நாத்தனார் என பலவித பெண் உறவுகளுக்குள்ளும் ; கணவன் மனைவி உறவுக்குள்ளும் , சகோதரன் சகோதரிக்குள்ளும் முட்டி மோதும் பிரச்சனைகள் ,கோபதாபங்கள் அனைத்துக்குப் பின்னாலும் இந்த சமூகம் ஊட்டிவளர்க்கும்
ஆணாதிக்க கருத்தோட்டமே மூலவிதையாய் இருக்கிறது என்பதைச் சொன்னால் பெரும்பாலான ஆண்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது . அதுவும் பெண்களை வாயாடியாய் ,வில்லியாய் , பிரச்சனையின் மூலமாய்ப் பார்க்கும் நம் சமூக பொதுபுத்தி அப்படி ஆணாதிக்கம் பற்றி பேசுவோரை யதார்த்த நிலையை உணராத மூளைவீங்கியாகவே பார்க்கிறது . . இந்நூலைப் படித்து முடிக்கும் போது அப்பார்வை அகலக்கூடும் ; மனசும் விசாலப்படும் .

இந்நாவல் பிரேமாவின் சுயசரிதை போல் நீள்வதும் ;ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பாட்டைச் சொல்வதுபோல் இருப்பதும் வாசிப்புக்கும் ஒரு வகையில் ஈர்ப்பாய் இருக்கிறது . ஆயினும் இலக்கிய விமர்சனக் கோடாரிகள் தட்டையாக இருப்பதாகவும் ஆங்காங்கு ஆசிரியர் மூக்கை நுழைப்பதாகவும் குற்றம் சாட்டக்கூடும் . சாட்டட்டும் இந்நூலின் பலமே அதுதான் . இது வெறும் குடும்பக் கதை மட்டுமல்ல அதையும் தாண்டி பொய்மையை உடைக்கும் பெண்ணியத்தின் நுண்குரலும்கூட.
- சு.பொ.அகத்தியலிங்கம்.


கண்ணுக்குள் சற்று பயணித்து ,புதினம் ,
அசிரியர் : ஆர்.வத்ஸலா ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7 . இளங்கோ தெரு ,
தேனாம்பேட்டை ,சென்னை - 600 018.

பக் : 512 ம் விலை : ரூ.450 /