அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

Posted by அகத்தீ Labels:


அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

குழந்தை அழும் சத்தம்கூட
அமைதியைக் குலைக்கக்கூடாது
என்பதற்காகவே
பெல்லட் குண்டுகளால்
குழந்தையைக்கூட மவுனிக்கச் செய்யும் !
காஷ்மீர் பனிமலையில்…

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

ராகுலும் ,யெச்சூரியும் ,ராஜாவும்
திருச்சி சிவாவும் இன்னபிறரும்
உள்ளே நுழைந்து
மயாணத்தை
அமளி துமளி ஆக்கவிடலாமா ?

ஆளுநர் சிவப்பாய் இருக்கிறார்
அவர் பொய் சொல்ல மாட்டார் !!!

சு.பொ.அகத்தியலிங்கம்
25 அக்டோபர் 2019.


அமைதியின் ஜாதகக் குறிப்பு

Posted by அகத்தீ Labels:
அமைதியின் ஜாதகக் குறிப்பு

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்

கண்கள் இமைக்கவில்லை .
உதடு அசையவில்லை .
மூச்சுக்காற்றும் வெளிப்படவில்லை
கைகால் அசையவில்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


பசி இல்லை .சிறுநீர் ,
மலம் கழிக்கவில்லை.
காதல் ,காமம் எதுவும் இல்லை
கவலை இல்லை .சிந்தனை இல்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


யாரோடும் பேசவும் இல்லை
சண்டை போடவும் இல்லை
தூங்கவும் இல்லை
விழிக்கவும் இல்லை

அவன் அமைதியாக இருக்கிறான் .
அதோ பாருங்கள்


அசைவற்று அமைதியாய்
கிடக்கிறான்

நீங்கள்தான் தேசபக்தியின்றி
பினம் ,சவம் ,மயாணம்
என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி
வசைபாடுகிறீர் எம் இனிய காஷ்மீரை !!!!

சு.பொ.அகத்தியலிங்கம் .
14 ஆகஸ்ட் 2019.

எங்களின் தேனிலவு…. ???

Posted by அகத்தீ Labels:எங்களின் தேனிலவு…. ???


கணவனும் மனைவியும்கூட
பேசுவதற்கு யோசிக்கும் சூழல்

24 மணி நேரமும் எங்கும்
துப்பாக்கு ஏந்திய ராணுவம்

அண்டை வீட்டாருக்கு
சலாம் சொன்னாலும்
சந்தேககப் படும் ராணுவம்

விளையாட்டை மறந்துவிட்ட
குழந்தைகளின் கண்களில் மிரட்சி

கழிவறையிலும் நிம்மதியோடு
உட்கார முடியவில்லை
வீதியை நிறைக்கும் பூட்ஸ் சப்தம்

சாப்பாட்டை ருசித்து சாப்பிடவும்
முடியவில்லை ..மனசுக்குள்
அச்சத்தின் பேரிருள்

நாங்கள் மகிழ்ச்சியாய்
தேனிலவு கொண்டாடுவதாய்
அந்த பேயரக்கன் மட்டுமே
சொல்லிக் கொண்டிருக்கிறான் .

இரவை விடிய வைக்க
எதையாவது செய்தாக வேண்டும்
எங்கள் சந்ததிக்காகவாவது .

[அவர்களாய் நான் உணர்ந்து எழுதியது ]

சு.பொ.அகத்தியலிங்கம் .
10 ஆகஸ்ட்2019.


இன்று – நாளை- இன்றே….

Posted by அகத்தீ Labels:


இன்று – நாளை- இன்றே….

இன்று
நீக்கியது சரிதானே
அவர்களுக்கு ஏன் தனி அந்தஸ்த்து ?

நாளை
சட்டம் சரிதானே
நாட்டுக்கு ஒரு அதிபர் போதும்
மாநிலத்துக்கு மாநிலம் முதல்வர் ஏன் ?

நாளை
சட்டம் சரிதானே
தராதரம் இல்லாதனுக்கெல்லாம்
இடஒதுக்கீடு அவசியம் இல்லையே

நாளை
சட்டம் சரிதானே
தேவ பாஷை சமஸ்கிருதம் இருக்க
வீட்டில்கூட நீஷ பாஷை தமிழ் பேசலாமோ

நாளை
சட்டம் சரிதானே
முதலாளிக்கும் மேல்குடிக்கும்
மட்டும்தானே இந்தியா
பஞ்சை பராரிகளும் சூதிரர் பஞ்சமர்களும்
பங்கு கேட்பதில் என்ன நியாயம் ?

இனியும் மவுனியாகலாமோ
இன்றே
மூளை இருப்பவன் யோசிக்கக் கடவன்
உணர்ச்சி இருப்பவன் விழித்தெழக் கடவன்
வாயிருப்பவன் கண்டிக்கக் கடவன்
மனிதனாயிருப்பவன் போராடக் கடவன்!!!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
6 ஆகஸ்ட் 2019.

ஆடி பதினெட்டு : கொஞ்சம் அசை போடுவோம் : காவிரியில் கால் நனைப்போமா ?

Posted by அகத்தீ Labels:


//...... காவிரி பொய்த்துப் போனதும் ; ஆடி பதினெட்டு நம் பண்பாடு ஆரியத் தலையீட்டால் வெறும் சட்ஙகாய் சிறுத்துப் போனது எவ்வளவு பெரிய பண்பாட்டுச் சோகம் ?....//

ஆடி பதினெட்டு : 
கொஞ்சம் அசை போடுவோம் : காவிரியில் கால் நனைப்போமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.

உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!

என மகிழ்ந்து கூத்திடுவார் சிலப்பதிகாரத்தில் இளங்கோ.


ஆற்றைக் கொண்டாடுவது தமிழ்ர் பண்பாடு.நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கும் வேளை ஊரே மகிழ்ந்து ஆடிப்பாடி காதல் கடைக்கண் வீசி கொண்டாடிய மரபு நம்முடையது .


காவிரி பொய்த்துப் போனதும் ; நம் பண்பாடு ஆரியத் தலையீட்டால் வெறும் சட்ஙகாய் சிறுத்துப் போனது எவ்வளவு பெரிய பண்பாட்டுச் சோகம் ?


சித்திரை முழுநிலவில் வசந்த விழாவும் , ஆடிப் பதினெட்டில் நதியில் ஆடிக் கொண்டாட்டமும் தமிழரின் காதல் பெருவிழா அன்றோ ; அந்த வேரை மறந்தோம் . இப்போது வாலண்டின் தினம் .காதலர் தினம் கொண்டாடலாமா கூடாதா என வெட்டிப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம் . காதலையும் இயற்கையையும் கொண்டாடுவதே உயர்ந்த பண்பாடு அதன் சொந்தக்காரர்களே நாம் .


காவிரியயை எப்படி எல்லாம் மகிழ்ந்து போற்றினோம் என ஒரு சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம் .

"வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப்பாலை:1-6)

அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த் ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்...’ புறநானூறு (பாடல் 35)

இன்குரல்இசை கெழும் யாழ் முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர் --- பொன்கரை பொரு பழங்காவிரியின்...’ [திருஞானசம்பந்தர் தேவாரம்.]

'கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவைமணிமேகலை (பதிகம்:24-25)

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும் சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை....’ சிலப்பதிகாரம் (காதை 10:104-109)

வாழி அவந்தன் வளநாடு, மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாது ஒழுகல் உயிரொப்பாய் ஆழி ஆள்வோன் பகல்வெய்யோன் அருளா வாழி காவேரி  [சிலப்பதிகாரம் கானல்வரி 152-55]

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக் கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன் திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’ [சிலம்பு]

திருக்குறளில் கடவுள் வாழ்த்தை அடுத்து உள்ள அதிகாரம் வான்சிறப்பு .அவ்வளவு முக்கியத்துவம் மழைக்கு தருவது தமிழர் வாழ்வின் உயர் சிறப்பாகும் . “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து/உள்நின்று உடற்றும் பசி.” ஆம். கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.  ஆக மழை ,நீர் ,நீர்நிலை இவை தமிழரின் பண்பாட்டில் நீக்கமற நிறைந்தது .

மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் /காடும் உடையது அரண்” மணிபோல் தெளிந்த நீர் நிலைகளை உடைய அகழியும், வெளிநிலமும் மலையும் அணிகலன் போன்ற அழகிய நிழல் தரும் காடுகளையும் உடையதே சிறந்த அரண் ஆகும்.

இப்படிப்பட்ட இயற்கை அரண்களை உடைய நாட்ட பாதுகாப்பானது ஆகும். ஆனால் இன்றைய உலகம் மேற்கண்ட அணிகலன்களின் பொலிவை இழந்து சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. என்ன செய்யப் போகிறோம் ? ஆடி பதினெட்டில் இது குறித்து உரக்க சிந்திக்க தொடங்கலாமே !Ø  இப்போது நம் காவிரி நிலை என்ன ? ஒரு புறம் நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் .இதனைப் பேசபேச நீளும் அரசியலாய் … அறிவியலாய் … வரலாறாய் …

Ø  மறுபுறம் காவிரியை தூர் வாரினோமா ? நீர் நிலைகளைத் தூர்வாரினோமா ?

Ø  காவிரி நெடுக  - நீர் நிலைகள் நெடுக குப்பைகொட்டாமல் மாசுபடுத்தாமல் தூய்மை காத்தோமா ?

Ø  நீர் நிலைகளில் நீர் வழிகளில் பிளாஸ்டிக் குப்பை , மனிதக் கழிவுகள் ,அன்றாடம் நாம் கொட்டும் குப்பைகள் தவிர்ப்போமா ?

Ø  பூஜை ,புனஸ்காரம் அது இதுவென ஆற்றில் குளத்தில் நதியில் நாம் கொட்டுவது தீங்கானது என்பதை அறிந்தோமா?புஷ்பகரணம் ,மகாமகம் என்றெல்லாம் பொருளற்ற சடங்குகளில் நீர் நிலைகளை மாசு படுத்துவதும் ; சடங்காக சம்பிரதாயமாக வெறும் பூஜை ,வழிபாடென பண்பாட்டை மரத்துப் போகச் செய்வது சரியா ?

ஆடிப்பதினெட்டு போன்ற ஆழமும் அழகும் பொருளும் மிக்க விழாக்களை நம் சொந்தப் பண்பாட்டின் கூறாக மீட்டெடுக்க வேண்டாமா ? காலத்திற்கு ஒப்ப அதனை மேலும் பொருட்செறிவு மிக்கதாய் மாற்ற வேண்டாமா ?

ஆடிப்பதினெட்டை நதி ,ஆறு ,குளம் ,ஏரி ,கண்மாய் ,குட்டை ,ஊரணி இப்படி பலவாறான நீர்நிலைகளை காக்கவும், தூய்மைப்படுத்தவும், தூர்வாரவும், விழிப்புணர்வு ஊட்டவும் , ஆழவிவாதிக்கவும் ,உரக்கப் பேசவும் ஆரம்பம் செய்யலாமே .

பண்டிகைகளே இல்லாத சமூகம் வறட்டுத்தனமாக மலட்டுத்தனமாகப் போய்விடும் . மூடத்தனமான பண்டிகைகளை ஒதுக்குவோம் . ஆடி பதினெட்டு போன்றவற்றை சடங்காக்காமல் தமிழர் பண்பாட்டு பெருமையை பறைசாற்ற – நீர் நிலை பேண விழித்தெழும் விழாவாக மறுகட்டமைப்பு செய்யலாமே ! முற்போக்காளர்கள் , இடதுசாரிகள் , சிவப்பு ,நீலம் ,கருப்பு இணைந்து முயலலாமே ! தொடங்குக விவாதம் ….உள் பெட்டிச் செய்தி

தமிழர் நீர் நிலை குறித்த பார்வைக்கு சான்றாக உள்ள நீர்நிலை வடிவங்கள் கீழே உள்ளது .நதி என்பது பின்னர் வந்த சொல் ஆறு என்பதே பழமையானது . அருவி என்பதே பழஞ்சொல் நீர்வீழ்ச்சி என்பது பின்னர்  புகுந்தது .

அகழி : பெரிய கோயில்கள் மற்றும் கோட்டைகளைச் சுற்றி இருக்கும் நீர் நிலை

ஆழ்கிணறு : கிராமங்களி விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தோண்டப்பட்டிருக்கும் நீர் நிலை

ஊருணி : ஊர் நடுவே உள்ள குடிநீர் குளம்

இலஞ்சி : ஒரு சிறிய நீர் தேக்கம். பெரும்பாலும் குடிநீருக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

கட்டுங்கிணறு : சரளை நிலத்தில் வெட்டி இருப்பார்கள். செங்கல்லால் உட்புறச்சுவர் எழுப்ப்ப்பட்டிருக்கும்.

கண்மாய்: அளவில் சிறியதாய் இருக்க்க்கூடிய ஏரி பாண்டிய நாட்டில் இதனை கண்மாய் என்று குறிப்பிடுகிறார்கள்.

கலிங்கு : ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்கள் உடைப்பு எடுக்காமல் இருக்க முன் எச்சரிக்கையாக கட்டப்பட்டு பல கைகளால் அடைத்து திறக்க்க்கூடிய (விட்டர்ஸ்) மாதிரியான கட்டமைப்பு.

கால் : சாதாரணமாக நீர் ஓடும் வழியைக் கால் என்று சொல்வார்கள்.

கால்வாய்: ஏரி, குளம், ஊருணி போன்ற நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் “gபாயும் கால்வழி.

குட்டை : கால் நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை

குட்டம் : அளவில் கொஞ்சம் பெரிதாக இருக்கும். குட்டைகளை குட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

குண்டு: சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் குளிக்கும் நீர்நிலை/செயற்கையாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீச்சல் குளங்கள்இந்த குண்டு வகையைச் சார்ந்தவைதான்.

குண்டம்: குளிப்பதற்க்க உள்ள சிறிய களம் தான் குண்டம் என்று குறிப்பிடப்படுகிறது.

குமிழி ஊற்று: நிலத்தின் பாறையைக் குடைந்து ஆழ ஊற்றை மேல் எழுப்பி வரச் செய்யும் குடைபோன்ற கிணறு

குளியல் குளம்: ஊரின் நடுவே மக்கள் குளிக்கப் பயன்படுத்தும் நீர் நிலை.

பாசனகுளம் : உருக்கு வெளியே பாசனத்திற்காகப் பயன்படுத்தும் நீர்நிலை

கூதும் : ஒழங்காக வெட்டப்பட்ட கிணறு

கூவல்: ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

கேணி: அகலமும், ஆழமும் உள்ள பெரிய கிணறு

சிறை: தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

சுணை: கால்நடைகளை குளிப்பாட்டப் பயன்படும் சிறிய நீர் நிலை

சேங்கை : பாசிக்கொடி மண்டிய குளம்

தடாகம் : நான்கு புறமும் அழகாக்க் கட்டப்பட்ட குளம்

தணிக்குளம்: கோயிலின் நான்கு புறத்தையும் சுற்றி அமைந்துள்ள அகழிபோன்ற நீர் நிலை

தாங்கல் : காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஏரியைக்குறிக்கும் சொல் தாங்கல்.

திருக்குளம் : கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்

தெப்பக்குளம்: தெப்பம் சுற்றி வரும் வகையில் அமைக்கப்பட்ட கோயிலின் திருக்குளம்

தொடுகிணறு : ஆற்றின் உள்ளேயும், அருகிலும் அவ்வப்போது மணலைத் தோண்டி நீர் எடுக்கும் இடம்

நடைகேணி: இறங்கிச் செல்லும் படிக்கட்டுகளுடன் கூடிய பெரிய கிணறு

நீராழி : நடுவில் மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்

பொங்குகிணறு : ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

பொய்கை : தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்ட நீர் நிலை

மறுகால் : அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

வலயம் : வட்டமாய் அமைந்த குளம்

வாய்க்கால் : ஏரி முதலிய நீர் நைலகளிலிருந்து பயிருக்கு நீர் பாய்ச்ச சிறிய கால்

ஆழிக்கிணறு : கடல் அருகில் தோண்டிக் கட்டிய கிணறு

ஆறு: பெருகி ஓடும் ஏரி

உறைகிணறு : மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண்ணில் வளையமிட்ட கிணறு

 ஊற்று: பூமிக்கு அடியில் இருந்து நீர் ஊறி வரும் நீர் நிலை

ஏரி: வேளாண்மைப்பாசனம் செய்வதற்கான பெரிய நீர்த்தேக்கம்.

ஓடை: ஆழத்தில் இருந்து ஊற்றெடுக்கும் நீர், எப்போதும் ஊறி ஓடிக் கொண்டேயிருக்கும் நீர் நிலை.

நன்றி : தீக்கதிர் , 3 ஆகஸ்ட் 2019 .