முதியோர் இல்லங்கள் : பழுதான பார்வையை மாற்றுக

Posted by அகத்தீ Labels:முதியோர் இல்லங்கள் : 
பழுதான பார்வையை மாற்றுக

சு.பொ.அகத்தியலிங்கம் .


“ இது ஒரு மனிதகாட்சி சாலை
‘ பால்குடித்த மிருகங்கள்’
எப்போதாவது
 வந்துபோகும் இடம் ”

-இப்படி ஒரு புதுக்கவிதை சீறும் . படிக்கும் நமக்கும் கோபம் வரும் .

’ பூமியில் ஒரு நரகம் முதியோர் இல்லம்’ என்றும் ; ‘ முதியோர் இல்லங்கள் வேகமாய் பரவிவரும் கரையான்கள்’ என்றும் கவிஞர்கள் ஆவேசப்படும் போது  நாம் உயரிய பண்பாட்டைத் தொலைத்துவிட்ட வெட்க உணர்வு மேலிடும் . ஆயினும் இது ஒரு பக்கத்தை மட்டுமே சுட்டுகிறது . யதார்த்தத்தை அறிவு பூர்வமாகவும் நடைமுறைக்கு சாத்தியமான வகையிலும் பார்க்க உணர்ச்சி மிகப்பெரும் தடைகல்லாகிவிடும் . அதன் ஆகச்சிறந்த உதாரணமே முதியோர் இல்லம் குறித்த நம் புரிதலும் அணுகுமுறையும் .

அறுபது வயதைத் தாண்டி விட்ட முதியோர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் சுமார்  85 கோடியைத் தாண்டிவிட்டது . 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உலகம் முந்நூறு கோடி முதியவர்களைக் கொண்டதாக இருக்கும் . மருத்துவ உலகில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் சராசரி வயது கூடிக்கொண்டே போகிறது . ஆகவே 60 வயதைக் கடந்தவர்கள் மட்டுமல்ல 70 ஐக் கடந்தவர்கள் , 80 ஐக் கடந்தவர்கள் விகிதமும் அதிகரித்துக் கொண்டே போகிறது .

இந்தியாவில்  சுமார் 10 கோடிப்பேர்  60 வயதைத் தாண்டியவராக உள்ளனர் . இதில் 70 வயதைக் கடந்தவர்கள் சுமார் 3.6 கோடியாகவும் , 80 வயதைக் கடந்தவர் சுமார் 90 லட்சமாகவும் உள்ளனர் . தற்போதைய இந்திய சராசரி வயது ஆண்களுக்கு 68.8 பெண்களுக்கு 68.9 ஆக உள்ளது . இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது . இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் பெருகி 60 வயதைக் கடந்தவர் 13.3 கோடியாகவும் , 70 வயதைக் கடந்தவர் 5.1 கோடியாகவும் , 80 வயதைக் கடந்தவர் 3.2 கோடியாகவும் உயருமாம் ; 2051 ல் இதுவே இன்றைவிட மூன்றுமடங்காகிவிடக்கூடுமாம் . அதாவது இன்னும் கால் நூற்றாண்டில் இந்திய மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் முதியோராக இருப்பர் . இந்த புள்ளி விவரங்களை மிரட்டுவதற்காகப் பதியவில்லை ; சமூகத்தின் முன் உள்ள சவாலை கூர்மையாக விசால மனப்பாண்மையோடு பார்க்க வேண்டும் என்பதற்காவவே எடுத்துக் காட்டுகிறோம்.

தமிழ்நாட்டிலும்  சுமார் 60 லட்சம் முதியோர்கள் தற்போது இருக்கின்றனர் . இதில் முறையான பென்ஷன் பெறுவோர் , முதியோர் ஓய்வூதியம் பெறுவோர்  ,எந்த ஆதாரப் பிடிப்பும் அற்றோர் என எல்லோரும் இதில் அடக்கம் . இந்த எண்ணிக்கை வேகமாக உயரும் .ஆனால் முதுமை இரங்கத்தக்கதல்ல முதுமையும் ஒரு வாழ்வுரிமையே என்கிற கம்பீரமான நம்பிக்கையோடு நடை போடுவோர் எத்தனை பேர் ? முதியோர் இல்லம் மட்டும்தான் நமக்கு அவமானமாகத் தெரிகிறதோ! கொஞ்சம் நிதானமாக கீழ்க்கண்ட கேள்விகளை அசை போட்டுப்பாருங்கள் ..

·         முதியோர் ஓய்வூதியம் பெறுகிறவர்களில் எதனை பேருக்கு உரிய இருப்பிடம் உள்ளது? மாதம் ரூ 1000 / கொடுத்துவிட்டால் போதுமா? பிரச்சனை தீர்ந்ததா?

·         முதியோர்களின் நோய்க்கென சிறப்பு மருத்துவர் எத்தனை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ளனர் ? வட்ட / வட்டார மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவர் உண்டா ? மூட்டுவலி , சர்க்கரை , இரத்தக்கொதிப்பு என முதியோர்களின் நோய்க்கு தனி கவனிப்பு உண்டா ?

·         கர்நாடக மாநிலத்தில் முதியோருக்கு தனி அடையாள அட்டை  [ சீனியர் சிட்டிசன் கார்டு ]உண்டு;இதன் மூலம் பஸ்ஸில் பயணச் சலுகை உண்டு ரயிலைப் போல .தமிழ் நாட்டில் எப்போது? ஜெயலலிதா தேர்தலில் வழங்கிய வாக்குறுதியும் கூட , ஆனால் அமுலாவது எப்போது?

·         படியேற முடியாத முதியவர்களுக்கான நடை மேடை எல்லா இடத்திலும் உண்டா ? சாலையை நிதானமாகக் கடக்க வழிவகை உண்டா ? தனிவரிசை உண்டா?

·         இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு பதில் இல்லை . இது ஒரு புறம் . மறுபுறம் முதியோர் இல்லங்களை எதிர்மறையாய் பார்க்கலாமா ?

·         கூட்டுக் குடும்பம் தான் முதியோருக்கு உரிய பாதுகாப்பும் கவுரவமும் என நீட்டி முழக்குவது கேட்க நன்றாக இருக்கும் . ஆனால் ,இனியும் அதுமட்டுமே நடை முறை சாத்தியமானதா ?

·         இன்றைய பொருளாதார நெருக்கடியில் கூட்டுக்குடும்பம் நடத்தும் அளவு சற்று வசதியான வீட்டை வாடகைக்கு எடுப்பது எத்தனை பேரால் சாத்தியம் ? இட நெருக்கடியும் – பொருளாதார நெருக்கடியும் உறவுகளில் விரிசலை உருவாக்குகிறது என்பதன்றோ யதார்த்தம்?

·         தனிக் குடும்பம் நடத்துவதே சிரமம் அதில் பெற்றோரை கூடவே வைத்துக் காப்பாற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள் என்ன செய்வது ? இதனை இயல்பாகப் பார்ப்பதா ? குழந்தைகள் பெற்றோரை மதிக்கவில்லை என்கிற விதிவிலக்கான நிகழ்வை பொதுப்போக்காகக் கூறலாமோ?

·         வசதியான வேலையும் கைநிறையச் சம்பளமும் கிடைக்கப் பெற்றவர்கள் தொழில் நிமித்தம் இடம் விட்டு இடம் ஓடிக்கொண்டிருக்க வேண்டியவர்களாயும் – நாடு விட்டு நாடு பறந்து கொண்டிருக்க வேண்டியவர்களாயும் உள்ள சூழலில் ; அதுவும் வேகமான பொருளாதார நெருக்கடியில் வேலைக்கும் வாழ்க்கைக்கும் உத்திரவாதமான நிலை இல்லாத போது ; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள  ஓட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்காக பணம் நிறைய செலவு பண்ண இயலும் , ஆனால் உடன் இருந்து பார்க்க இயலுமா ? இந்த நடை முறைச் சிக்கலில் இருந்து விடுபட தரமான முதியோர் இல்லங்களைத் தேடுவது எப்படிப் பிழையாகும் ?

பெற்றோர்களின் உணர்வைப் பிள்ளைகள்  புரிந்து கொள்வதும் ; தம் கடமையை உணர்ந்து செயல்படுவதும் மிக அவசியத் தேவை . அது போல் மாறியுள்ள சூழலைப் பிரிந்து பிடிவாதங்களைத் தளர்த்தி பிள்ளைகளோடு இணைந்து வாழ பெற்றோரும் முயலவேண்டும் . இது இருவழிப் பாதை . இப்படி இருவரும் மனம் ஒத்து நல்ல பாதுகாப்பான குடும்பச்சூழலை உருவாக்குவதுக்கே முன்னுரிமை தரவேண்டும் .அதற்காக உரக்கப் பேசுவோம் . இதில் மாற்றுக் கருத்தே இல்லை . இத்தகைய இணக்கமான சூழல் நூற்றுக்கு 75 பேருக்கு அமையப் பெற்றாலே அது பெரும் வெற்றி . அப்போதும் 25 விழுக்காடு முதியோருக்கு முதியோர் இல்லங்கள் நிச்சயம் தேவைப்படுமே !அதுவே பெரும் எண்ணிக்கையாகுமே !அதனை யோசிக்க வேண்டாமா ?


ஆக . முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் தொடங்கி – பென்ஷன் பெறும் அரசு ஊழியர் – இனி பென்ஷனே கிடைக்காமல் போகிற ஊழ்யர்கள் , வசதியான குடும்பத்தில் உள்ளோர் வரை கணிசமான முதியோருக்கு இல்லங்கள் தேவை . தற்போது இந்தியா முழுவதும் சுமார் 750 முதியோர் இல்லங்களே உள்ளன என்பதும் ; அரசு சார்ந்த இல்லங்கள் மிகக்குறைவு என்பதும் ; தொண்டு நிறுவனங்கள் நடத்தும் இல்லங்களே ஓரளவு தேவையின் மிகச் சிறிய பகுதியை நிறைவு செய்கிறது என்பதும் உறுத்தும் உண்மை அல்லவா ?

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு இரண்டு முதியோர் இல்லங்கள் திறக்கப்படும் என்கிற ஜெயலலிதா அறிவிப்பு வெறும் கண்துடைப்பானதன்றி அமுலாகவில்லையே !வட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அரசு உதவியோடு உருவாக்கப்படும் என்கிற கொள்கை குறிப்பு ஆழக்குழி தோண்டி புதைக்கப் பட்டுவிட்டதேன் ? பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பல்கிப் பெருகியுள்ள சூழலில் ; அரசு கணிசமான நிதி உதவிதருவதாக அறிவித்த பின்னும் முதியோர் இல்லங்கள் நடத்த தன்னார்வத் தொண்டு பொங்கி வழியாதது ஏன் ? இந்த வெற்றிடத்தில் வெறும் லாப நோக்கோடு எந்திரகதியாய் இயங்கும்\தனியார் முதியோர் இல்லங்கள்  பெருகுகிறதே ; இதற்கு மாற்று என்ன ?

முதியோருக்குத் தேவை படுத்துக் கிடக்க ஒரு கட்டிலும் , வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டுமே என்கிற வறட்டுப் புரிதலோடு முதியோர் இல்லங்களைப் பார்க்கும் பழுதான பார்வையை முழுதாகத் தலை முழுகப்படவேண்டும் . முதியோர் நம்மிடம் உயிர் யாசகம் கேட்கவில்லை . கவுரவமான வாழ்க்கை அவர்களின் அடிப்படை மனித உரிமை . முதியோர் இல்லங்கள் நல்ல சுற்றுச் சூழலோடு அமையவேண்டும் . நல்ல படுக்கை , சத்தான அவரவருக்குத் தேவையான உணவு  , சரியான மருத்துவ உதவி ,சுயதேவையை நிறைவு செய்யும் காய்கறித் தோட்டம் [ இதனை முதியோர்களே பராமரிக்கலாம் ] பொழுதுபோக்க உரிய வாய்ப்புகள் , உலாவப் பூங்கா ,நூலகம் , கணினி , நடைபயிற்சிக்கு தோதான இடம் , முதியோர்களின் ஆற்றலை , ஈடுபாட்டை பகுத்தறிந்து பயன்படுத்த ஊக்குவிக்க தக்க வழிகாட்டல் , மொத்தத்தில் முதியோர் இல்லங்கள்  தென்றல் அரவணைக்கும் பூங்காக்களாக மாற வேண்டும் என்பது கனவல்ல . தொலை நோக்கு திட்டம் .படிப்படியாக இந்தத் திக்கில் நடை போட வேண்டும் .

ஒரு சர்வாதிகாரி எல்லாருடைய கோரிக்கைகளையும் நிராகரித்து வந்தான் . அவனே சிறைத்துறையை சீர் திருத்த வேண்டும் என்கிறபோது நூறு விழுக்காடு ஏற்று செயல்படுத்தினானாம் . காரணம் நாளை தனக்குத் தேவைப்படலாம் என்கிற சுயநலம்தான் . அது எப்படியோ இன்னும் கால் நூற்றாண்டுக்குப் பின் மொத்த மக்கள் தொகையில் மூண்றில் ஒரு பகுதி முதியோராகவே இருப்பர் . எனவே சகலரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது . இன்றைய இளைஞர் நாளைய முதியோரே! முதியோர் இல்லங்கள் சாபக்கேடல்ல தவிர்க்க முடியாத சமூகத்தேவை என்பதுணர்க !

நன்றி :தீக்கதிர் 31-10-2014
பெருங்கடலெனிலும்..

Posted by அகத்தீ Labels:
பெருங்கடலெனிலும் ..

-          சு.பொ.அகத்தியலிங்கம்


குழந்தை இளமை முதுமை
இன்பம் எதுவென
நண்பர் வினவினர்

ஒன்றின் இனிமை
இன்னொன்றில் உண்டோ?
ஒவ்வொன்றையும்
வாழ்ந்து பார்ப்பதே
வாழ்வெனப் பகர்ந்தேன் .

வலிமிக தருவது
எதுவென சொல்க!
கேள்வி தொடர்ந்தது ..

அவ்வப்போது
அவ்வலி பெரிது
வலியும்
வாழ்வின்  கூறென்றறிக        !


முதுமையும் சுவையோ ?
அழுத்தும் சுமையோ
ஐயம் அகற்றுக
என்றே வினவினன்..

சுவையும் சுமையும்
கலந்தததே வாழ்வு
அனுபவ நெருப்பில்
எஃகாய் மாறின்
சுமையும் சுவையே!

தன் வலி பிறர் வலி அறிந்து
சூழ் நிலை உணர்ந்து
தகவமைத்தலில் அடங்கும்
வாழ்வின் ரகசியம் .

இதன் பொருள்
அடங்கி ஒடுங்கலோ
ஆமையாய்
ஓட்டில் பதுங்கலோ அல்ல .


விசாலாப் பார்வையால்
மக்களை விழுங்கி
வெள்ள அன்பால்
மானுடம் நனைத்து
கொடுமைக்கு எதிராய்
நெஞ்சுரம் நல்கி
மேலும் மேலும்
மானுடம் தழைக்க
நாளும் பொழுதும்
நாமே உரமாய் சொரிதல்

ஐயா ! ஐயம் கேட்டேன்!
நாவில் வரையும் சொற்கோலம்
வாழ்வுக்கு உதவுமோ ?
சொல்லுக நீவீர்!

நல்லது! கேட்டாய் !
சொல்வது கேட்பாய் !
வைராக்கியத்தோடு
வாழ்ந்து பார்
வாழ்வின்
ஒவ்வொரு கணமும்
உன்னதமானதே !

பிறவி பெருங்கடலென
அஞ்சுதல் வெறுத்தல்
ஆகாது என்றும்

பெருங்கடலலெனிலும்
அலையொடு எழுந்தும் விழுந்தும்
அலையோடு பழகியும்
ஆழ நீந்தியும்
அகலம் நீளம் அடிமுடி
தேடி அலைந்தும்
மூச்சை அடக்கி
முத்துக்குளித்தும்….

அடடா! இன்பம்!
அதுவே வாழ்வென
அனுபவம் காட்டும்.