நல்லதோர் வீணை செய்தே நலங்கெட...

Posted by அகத்தீ Labels:

ஒரு அரசு மருத்துவமனையில் நேரடி அனுபவம்

-சு.பொ. அகத்தியலிங்கம்
அரசுப் பொது மருத்துவமனை உண்மையிலேயே ஒரு போதிமரம் தான். அங்கே தனிமனிதனும் சமூகமும் பெறவேண்டிய செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. ஏறத்தாழ மூன்று வார காலம் ராயப்பேட்டை அரசுப் பொது மருத்துவமனையில் மனைவிக்கு உதவியாக பெரும் பகுதி நேரத்தை செலவிடவேண்டியிருந்தது. அங்கே நான் கண்டதும் கேட்டதும் என்னு
ள் ஆழமான அகத்தாய்வை தூண்டிவிட்டன.

எந்நேரமும் 108 வண்டியின் அபாயச் சங்கொலியைக் கேட்கிற, கை-கால்-முதுகு என எலும்புகள் முறிந்து அள்ளிக்கொண்டு வந்து போடும் காட்சியைப் பார்க்கிற எவருக்கும் விபத்து குறித்த எச்சரிக்கை உணர்வு தோன்றாமல் போகாது. அந்த விபத்து எலும்பு முறிவு காயப்பிரிவுக்கு வருகிறவர்களுக்கு அளிக்கப்படுகிற அக்கறையும் பரிவும் மிக்க சிகிச்சை உண்மையில் வியப்பூட்டுகிறது. வழக்கமாய் அரசு மருத்துவமனை என்றால் அலட்சியமும் பொறுப்பின்மையும் கோலோச்சும் இடம் என்கிற பொதுப் புத்தியில் உறைந்துள்ள கருத்துகள் அங்கே தவிடுபொடியாகிறது. குறைபாடுகள் சில
மேற்பார்வைக்குத் தூக்கலாகத் தெரிந்த போதிலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் மீறி, உண்மையிலேயே விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சையில் முதலிடம் பெறுகிறது ராயப்பேட்டை அரசு மருத்துவமனை. நீண்ட அனுபவமே இதன் விலை மதிக்க முடியா
த மூலதனம். முதலில் நான் சந்தித்த நோயாளிகளில் இருவர்:

சிறுமியின் மன வலி

அதோ அந்த படுக்கையில் வலது கையி
ல் அறுவை சிகிச்சை முடிந்து முனகிக் கொண்டிருக்கிறாள் சிறுமி மோகனா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). வயது 12. ஆறாம் வகுப்பு மாணவி. அருகில் சென்று பார்க்கிறேன். தாய் காலை உணவு வாங்க வெளியே சென்றிருக்கிறார். இடது கை வளைந்திருக்கிறது. மோகனாவின் பார்வையில் உலகத்தின் மொத்த சோகமும் அப்பிக்கிடக்கிறது. கிட்ட நெருங்கி பிரெட் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன். அவள் தலையை அசைத்த
து வேண்டும் என்றா வேண்டாம் என்றா எனப் புரிந்துகொள்ள முடியவில்லை. கண் கலங்கியிருந்தவளின் வாயில், பிரெட்டைப் பிய்த்து ஊட்டினேன். இரண்டு வாய் சாப்பிட்ட பிறகு மோகன மெல்ல வாய் திறந்து சொன்னாள்: தாத்தா, எங்க அப்பா எங்க அம்மாவ விட்டுட்டு போயிட்டாரு... எங்க தாத்தா கூட வந்து பாக்கல... தழுதழுத்த குரலில் அந்த சிறுமி
சொன்னபோது நெஞ்சம் உடைந்துவிட்டது. அறுவை சிகிச்சையின் வலியைவிட - காயத்தின் வலியைவிட சிறுமியின் இதயத்தில் தந்தை ஏற்படுத்தியிருக்கிற ரணம் அதிகமாக வலிக்கிறது போலும். விவாகரத்து எப்போதும் எளிமையானதுதான். ஆனால், குழந்தைக
ளின் ஏக்கம்?
இந்தச் சிறுமியின் இடது கை தனியார் மருத்துவமனையில் செய்யப்பட்ட தவறான சிகிச்சையால் அப்படி வளைந்துவிட்டதாம். அதையும் அடுத்த வாரமே மறு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்போகிறார்களாம். அநேகமாய் இப்போது அந்தக் குழந்தை வீடு திரும்பியிருக்கும். அரசு மருத்துவமனை குறித்து குறை சொல்பவர்கள் இந்த சம்பவத்தை உணர வேண்டும்.ஒரு கணவனின் உதவி

இன்னொரு படுக்கையில் மீனாட்சி என்ற வயதான பெண்மணி ஒருவர் இடுப்பு எலும்பு உடைந்து அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மகனும் மகளும் ஊரிலிருந்தும் எட்டிப் பார்க்கவில்லை. உதவிக்குக் கணவர் முத்துசாமியைத் தவிர யாரும் இல்லை. கணவர் செய்த உதவி... அது உதவியா? ஒவ்வொரு நாளும் மீனாட்சி தன்னுடைய தாலியில் இருந்து ஒரு குண்டு மணியை எடுத்துக் கொடுப்பதும், முத்துசாமி அதில் பாதியைக் குடித்து அழித்துவிட்டு வந்து நிற்பதும், அதற்காக இவர் சண்டை போடுவதும்... ஆனாலும் அவரைவிட்டால் இவருக்கு வேறு யாரும் இல்லை என்பதும் வருத்தமான நிலை. இதன் உச்சகட்டம் அறுவை சிகிச்சையின் முதல் நாள் மறுநாள் மருந்து மாத்திரை செலவு அதிகம் இருக்கும் என்பதால் இரண்டு குண்டுமணிகளைக் கழற்றிக் கொடுத்தார். போன கணவர் போனவர்தான், மறுநாள் மாலை வரை திரும்பவில்லை. பக்கத்துப் படுக்கையில் இருப்பவர்கள் உதவ அறுவை சிகிச்சை முடிந்தது. அதன் பின் அவன் வெறும் கையாய் போதையில் தள்ளாடி நிற்கிறார் முத்துசாமி. இவரால் திட்டவும் முடியவில்லை. உடல் பலவீனமுற்றிருந்தது. என்ன சமூகம் இது?

இங்கேயும் பாலின பாகுபாடு

ஆண்கள் தங்கியிருக்கும் வார்டில் உதவிக்கு எப்போதும் யாராவது இருக்கிறார்கள். ஆனால், பெண்கள் வார்டில் கிட்டத்தட்ட யாருமே இருப்பதில்லை. பெரும்பாலும் தனியாகத்தான் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நோயாளி இன்னொரு நோயாளிக்கு ஆறுதலும் உதவியுமாய் பொழுது நகர்கிறது.

நோயில் கூட பாலினப் பாகுபாடு!

அதுமட்டுமல்ல பெஷல் வார்டு என இருக்கிறது. அதுவும் ஆண்களுக்கு இருக்கும் அளவு பெண்களுக்கு இல்லை. சி வார்டு பெண்களுக்கு கிடையவே கிடையாதாம். பெரும்பாலும் பெண்களுக்குப் பொது வார்டுதான். அரசுப் மருத்துவமனையில் கூட ஒரு வகை பாலினப் பாகுபாடு உள்ளதோ?
நான் பார்த்த வரையில், எலும்பு முறிவிற்காக வந்திருந்த பெண் நோயாளிகள் ஒரு குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்! இது தற்செயலானதா அல்லது அந்த மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஏதாவது காரணங்களால் பெண்களுக்கு எலும்பு பலவீனப்பட்டிருக்கிறதா? சமூக ஆர்வலர்கள் இது குறித்து ஆய்வு செய்யலாம்.

தொடரும் கேள்விகள்

பொதுவான அரசு மருத்துவமனை பற்றிய சித்திரத்தை அரசு ராயப்பேட்டை மருத்துவமனை முழுதாக மாற்றிவிடவில்லைதான். ஆனாலும் சில செய்திகளைச் சொல்லித்தான் ஆகவேண்டும். இங்குள்ள மருத்துவர்கள் மிகவும் திறமையானவர்கள். பரிவோடு கவனிக்கிறார்கள். சரியான சிகிச்சை அளிக்கிறார்கள். செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள், ஆயாக்கள் எல்லோருமே பழுத்த அனுபவத்தின் சொந்தக்காரராய் வழிகாட்டுகிறார்கள். ஆனாலும், தனியார் மருத்துவமனை போல் ஏன் இல்லை? குறிப்பாக சுகாதாரம் பாராட்டும்படியாக இல்லை.

யார் குற்றவாளி?

உதாரணமாக எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் முன்பு ஷிப்டுக்கு 3 செவிலியர், 4 ஆயா, 2 பணிப்பெண், 2 வார்டு பாய் இருந்தார்களாம். இப்போதோ, சுமார் 110 உள்நோயாளிகளை கவனிக்க ஒரு ஷிப்டில் ஒரு செவிலியர், ஒரு ஆயா, ஒரு வார்டு பாய், ஒரு பணிப்பெண் இவர்கள்தான். இது போதுமா? இவர்களால் எப்படி அங்குள்ள அனைவருக்கும் சேவை செய்ய முடியும்? அங்கு சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் எப்படிப் பேணிக்காக்க முடியும்? தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பணத்தை வாரி இறைக்கும் தமிழக அரசு இங்கே அடிப்படைப் பணியாளர்களை அதிகரிக்க ஏன் முயல்வதில்லை?

திருவாளர் பொதுஜனத்தின் பங்கு

இது ஒரு புறம். மறுபுறம் நமது பொது மக்களும் தங்கள் பங்கிற்குச் செய்கிற கோளாறுகள் ஒன்று இரண்டல்ல. பான்பராக் போட்டுக்கொண்டு ஜன்னல், கதவோரம், மாடிப்படிக்கட்டுச் சுவர் என கண்ட கண்ட இடங்களில் துப்புகிறவர்களை என்ன செய்வது? மருத்துவமனையில் மட்டுமல்ல ரயில்களில், பேருந்துகளில், பொது இடங்களில் என எங்கும் இப்படிப்பட்டவர்களைக் காணலாம். இப்படி ஆட்களை வாயிலேயே சுட்டால் என்ன சார் என்று கேட்டார் உடனிருந்த நண்பர். ஆனால், இதே பான்பராக் பேர்வழிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது மட்டும் எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புவதில்லையே! பொது இடம் என்றால் எதையும் செய்யலாமா?
நான் அங்கே இருந்தபோது ஒரு கழிவறை பெரும்பாலான நாட்கள் அடைத்துக்கொண்டு நிரம்பி வழியும். நான் சில முறை ஆர்.எம்.ஓ.விடம் புகார் செய்தேன். அவரும் அவசரமாக ஆட்களை அனுப்பி சரி செய்கிறார். மறுநாளே மீண்டும் அதே நிலை. ஏன்?

ஆண்கள் வார்டுக்கு அருகில் உள்ளது அந்தக் கழிப்பறை. மது அருந்த மருத்துவமனையில் தடை உண்டு. செவிலியரும் வார்டு பாயும் கறாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனக்குத் துணையாய் இருக்கும் ஆட்கள் மூலம் டாமாக் வாங்கிவந்து குடித்துவிட்டு கழிப்பறையில் போட்டுவிடுகிறார்கள். இது போய் அடைத்துக் கொள்கிறது. இது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு? நோயாளிகளுக்கும் கட்டுப்பாடு தேவை. மருத்துவமனையிலும் தகுந்த பாதுகாப்புப் பணியாளர்களை நியமித்து வாயிலைக் கடக்கும்போதே டாமாக் இருக்கிறதா என்று பரிசோதித்து அனுப்புவது நல்லது. இத்தகைய நடைமுறைகளை அரசு அறிமுகப்படுத்தினால் என்ன?

தடைகளை மீறிய சேவை

தினசரி பெருகும் விபத்துகளால் அலைமோதும் நோயாளிகள் எண்ணிக்கை மருத்துவமனை நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாகவே உள்ளது. ஏற்கெனவே உள்ள படுக்கைகள், அடிப்படை வசதிகளைக் கொண்டு அனைவரையும் திருப்திப்படுத்துவது மிகக் கடினமான செயல். ஆயினும் மல்லுக்கட்டி சமாளிக்கிற மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

மூன்று அறுவை சிகிச்சை மேசைகள் முன்பு இருந்தன. இப்போது அவற்றில் ஒன்று பழுதாகிவிட, இரண்டு மட்டுமே பயன்படுகின்றன. அதே போல் அறுவைக் கருவிகளில் கிருமி நீக்கம் (ஸ்டெரிலைஸ்) செய்வதற்கான வசதிகளும் போதுமான அளவுக்கு இல்லை. இதனால், மருத்துவர்களும் உதவியாளர்களும் இருந்தும் கூட அறுவை சிகிச்சைகள் தாமதமாகின்றன. அரசு அவசரமாகக் கவனம் செலுத்தியாக வேண்டிய பிரச்சனை இது.

சுகாதாரத்தைப் பேணுகிற பொறுப்பை அரசும் முழு அர்ப்பணிப்போடும் அக்கறையோடும் உரிய ஏற்பாடுகளோடும் செய்ய வேண்டும். பொது இடத்தை தூய்மையாகப் பராமரிக்க பொது மக்களும் ஒத்துழைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையால் தூய்மையைப் பராமரிக்க முடியும் என்றால், அரசு மருத்துவமனையால் ஏன் முடியாது? மிகவும் திறமை வாய்ந்த மருத்துவர்களும் இதர ஊழியர்களும் இருந்தும் தூய்மைக்கேடு என்கிற ஒரு முக்கிய அம்சத்தில் பொது மருத்துவமனைகளை புழுத்துப் போகவிடலாமா?

இப்போது இலவச அறுவை சிகிச்சை என்று கிட்டத்தட்ட எதுவும் இல்லை. பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களில் பயன்பெறுவோர், பணம் கட்டத் தயாராக இருப்போர் என கணிசமான நோயாளிகள் பணம் தந்துவிடுகின்றனர். மீதம் இருப்பவர்களும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் வந்துவிடுகின்றனர். அப்படியிருக்க ஏதோ சும்மா கிடைக்கிற வைத்தியம் என இனியும் சும்மா சொல்லித் திரியக் கூடாது. அரசு கொஞ்சம் கவனத்தை செலுத்தினால், பணத்தை ஒதுக்கீடு செய்தால் தனியார் மருத்துவமனைகளை சவாலுக்கு இழுக்க அரசு மருத்துவமனைகளால் முடியும். ஆனால், நடப்பதென்ன?

அவிற்பாக ஆதங்கமா?

தற்போது ஒவ்வொரு நோயாளியும் தனக்கு தனி இடம் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அரசு இதை உணர்ந்து சில மறைப்புகளை ஆங்காங்கு உருவாக்கி ஒவ்வொரு நோயாளியும் தனித்தனியாக பராமரிக்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையை அரசால் உருவாக்க முடியும். இதற்கொன்றும் அதிக செலவாகாது. தனியார் நிறுவனங்களுக்கு அரசு மருத்துவமனைகள் சவால்விட முடியும் என்றாலும் ஆட்சியாளர்கள் ஏன் செய்யவில்லை? தங்களுக்குரிய அவிர்ப்பாகம் கிடைக்காது என்பதாலா?

மருத்துவமனைக்குள்ளேயே தனியார் மருத்துவமனையின் ஏஜெண்டுகள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதுபோல் பொதுவாகப் பேசி அரசு மருத்துவமனை சீர்கேட்டை சொல்லிக் கலவரப்படுத்தி - தனியார் மருத்துவமனையின் மகாமியங்களை பாடி நோயாளிகளை மனோரீதியாக வெளியேற தூண்டுகின்றனர்! சந்தடி சாக்கில் தனக்குத் தெரிந்த ஒருவர் இந்த மருத்துவமனையில் இருக்கிறார். அவரைப் போய்ப் பாருங்கள் என முகவரி கொடுப்பதும், தொலைபேசி எண் கொடுப்பதுமாக செய்கின்றனர். அதாவது அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாய் அனுமதிக்கப்பட்டவர்களைக் கூட மெல்ல கடத்திக் கொண்டு போகிற வேலையை தனியார் மருத்துவ வியாபாரிகள் செய்கிறார்கள். அரசும் அந்தத் தனியார்களுக்குத்தானே கோடிக்கோடியாய் காப்பீடு என பணம் கொடுக்கிறது.

பொது மருத்துவமனையில் திறமையும் தகுதியும் மிகுந்திருக்க நல்லதோர் வீணை செய்தே; அதை நலம் கெட புழுதியில் எறியலாமோ?


இது நம் வீடு

பொது மருத்துவமனை நம்முடையது. நமது வீட்டைப் போன்றது. இங்கே சிகிச்சை பெற வந்திருக்கிறோம். அதற்குரிய ஒழுங்கும் கட்டுப்பாடும் நமக்குத் தேவை. இதை ஒவ்வொருவருக்கும் உணர்த்த போதுமான சமூக சேவகர்களை அரசு மருத்துவமனைகள் நியமிக்கலாம். நோயாளிகள் மருத்துவரை சந்திக்கக் காத்திருக்கும்போதோ, உள்நோயாளியாகச் சேர்ந்த பிறகோ அவர்கள் பார்த்துப் புரிந்து கொள்ளத் தக்க விதத்தில் சில பிரச்சார வீடியோக்களை ஒளிபரப்பலாம்.உரக்கப் பேச வேண்டிய நேரம்

மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வருவோர்கள் பற்றி நாம் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். வெளிநாடுகளில் பொதுவாக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டபின் வெளியார் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அவர்களே உதவிக்குத் தேவையான அனைத்து உத்தரவாதத்தையும் செய்துவிடுகின்றனர். ஆனால், நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம். நோயாளிகளும் அதிகம். எனவே, வெளிநாடு போல் உதவிக்கு யாரும் தங்கக் கூடாது என உத்தரவு போட முடியாது. ஆயினும் அதற்கு ஒரு கட்டுப்பாடு தேவை. பார்வையாளர்களுக்கு ஒரு கட்டுப்பாடு தேவை. தற்போது அரசு மருத்துவமனைகளில் அது இல்லை. அதற்கான ஊழியர்கள் இல்லை.

எனவே, கூட்டமாக நோயாளியைப் பார்க்க வருவதும் அங்கேயே உண்பதும், சுற்றுச்சூழலை கெடுப்பதும் பெரிதும் நடக்கிறது. அதற்கு மேல் என்ன நோய் எத்தகைய மருத்துவம் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆளுக்காள் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப சொல்லுவதும் தவறாக வழிகாட்டுவதுமான விபரீதமும் நடக்கிறது. அதைவிட நோயாளி எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் தடுக்கிறார்களோ அவையெல்லாம் பார்வையாளர்களால் அன்போடு தரப்படுவதும் அதை சாப்பிடுவது நல்லது என அனுபவ உபதேசம் செய்வதும் மருத்துவ அறிவியலுக்கே எதிரானது. வருகிறவர்கள் எல்லாம் எதையாவது வாங்கிக் கொண்டு தருவதற்கு பதில் காசு பணமாகக் கொடுத்தாலாவது எளிய நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும். இதையும் சமூக ஆர்வலர்கள் உரக்கப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.


(27 மார்ச் 2011 வண்ணக்கதிரில் வெளியானது)