' மன்மோகன்சிங் , ப.சி.’ இந்நூலைப் படிக்க சிபாரிசு செய்கிறோம்...

Posted by அகத்தீ Labels:'மன்மோகன் , ப.சி' 
இந்நூலைப் படிக்க சிபாரிசுசெய்கிறோம்…

சு.பொ.அகத்தியலிங்கம்

 "ந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் : இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் [1880 - 1905] " என்கிற பிபன் சந்திராவின் 672 பக்க நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் - ஏன் ஒவ்வொரு வரியையும் வாசிக்கும்போது பிரதமர் மன்மோகன் சிங்கும் நிதி அமைச்சர் சிதம்பரமும் இன்னபிற நாடாளும் தலைவர்களும் இப்படி இந்திய மக்கள் மீதும் இந்திய தேசத்தின் மீதும் அக்கறை கொள்ளவில்லையே எனக் கோபம் பொங்குகிறது . அன்று தாதாபாய் நெளரோஜி , ரானடே , ஆர்.சி.தத் , கோகலே, ஜோஷி, சுப்பிரமணிய ஐயர் போன்ற தலைவர்கள் பிசிறில்லாமல் ஊசலாட்டம் இல்லாமல் இந்திய மக்களின் ஒட்டுமொத்த நலன் என்கிற பரந்த தெளிவான கூர்மையான பார்வையோடு அறிவுத்தளத்தில் இயங்கியதை படிக்கிறபோது இன்றைய தலைவர்களிடம் அத்தகைய தேசபக்த உறுதி இல்லையே என்கிற சினத்தை கொம்பு சீவுகிறது இந்நூல். 

வரலாற்றை படிக்க வேண்டாம் என்று ராஜீவ் காந்தி ஒருமுறை சொன்னது இப்படி நாம் உண்மையை அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தானோ!


27 க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் வெளிச்சத்தில் - தலைவர்கள் உரைகள் கட்டுரைகள் உள்ளிட்ட 2665 மேற்கோள்களுடன் - ஒவ்வொரு வார்த்தையையும் தக்க ஆதாரபூர்வ ஆவண வரிகளுடன் எழுதப்பட்ட இந்நூல் இந்திய தேசியம் என்ற கருத்து மக்களை கவ்விப்பிடித்து இயற்பியல் சக்தியாக மாற விதைதூவப்பட்ட ஆரம்பகால வரலாற்றை பழுதறப் பேசுகிறது.

 "வெற்றியை உடனடி லாபங்களால் அளவிட முடியாதபட்சத்தில்,இக்காலகட்டத்தில் தேசியத்தலைவர்கள் சாதித்தவை ஏராளம் . இந்திய மக்கள் பொதுவான பொருளாதார நலன் உள்ளவர்களாக , பொதுவான எதிரி இருப்பவர்களாக உணரச்செய்து அவர்களை ஒரு பொதுவான தேசியத்தில் இணைத்தார்கள் . " என்று வார்த்தை அலங்காரமாக போகிறபோக்கில் சொல்லிச் செல்லாமல் வலுவான தர்க்க வாதங்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளார்.

இந்தியாவில் வறுமை , தொழில் , அயல்நாட்டுவர்த்தகம்,ரயில்வே , வரிக்கொள்கை , பணமும் பரிவர்த்தனையும் , தொழிலாளர்கள் , விவசாயம் , பொதுநிதி , செலவம் வடிந்து செல்லுதல் , என 12 அத்தியாயங்களில் விரிவாக ஆராய்ந்து விட்டு ; இந்திய பொருளாதாரம் , பொருளாதார தேசியம் என முத்தாய்ப்பாய் கடைசியாக 13,14 வது அத்தியாயங்களை தந்துள்ளார் நூலாசிரியர் .  

பேரா.கா..மணிக்குமார் எழுதிய  "காலணிய இந்தியப் பொருளாதாரம் : ஓர் அறிமுகம்" என்கிற - தமிழ் பதிப்பிற்காக இணைக்கப்பட்ட முன்னொட்டு ஆழ்ந்த வாசிப்புக்குரியது.

 " வயிறார உணவும் சிறிது நீதியும் கிடைத்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் திருபதியோடு வாழ மக்கள் தயார் " என நிலைமையின் கடுமையை அம்ரித பஜார் பத்ரிகா எழுதியது மிகையல்ல ;  "....இந்திய மக்களின் நிலைமை மோசமானது , இரங்கத்தக்கது , விலங்குகளுக்கும் கீழானது, ...இந்தியர்கள் பட்டினியில் வாழ்வதாக , வெறுக்கத்தக்க , கீழான , அஞ்சி ஒடுங்கத்தக்க வறுமையில் உழல்வதாக.." இந்திய பத்திரிகைகள் விடாமல் தினந்தோறும் வாரந்தோறும் எழுதின என்பதை நூலாசிரியர் மிகச் சரியாகச் சுட்டுகிறார் .  "பஞ்சங்களின் காரணம் விளைச்சல் இல்லாதது அல்ல இருக்கக்கூடிய உணவு தானியத்தை வாங்க வசதி இல்லாததுதான் " என்பதை அன்றைய ஏடுகள் எடுத்து இயம்பின . தலைவர்கள் உரக்கச் சொன்னார்கள். ஆனால் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைபற்றி அலட்டிக்கொள்ளாமல் பங்குச் சந்தை ஏற்ற இறக்கம் பற்றியே கவலை கொள்ளும் இன்றைய ஊடகங்களை தலைவர்களை நினைக்கத் தோண்றுகிறது .

 "விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கும் நாடு நிச்சயம் ஏழையாகத்தான் இருக்கும் " என்பதை மிகச்சரியாக புரிந்த தலைவர்கள் தொழில் வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமும் அக்கறையும் காட்டினார்கள் ; அதே சமயம்   " இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை பெற்றதன் ஒரு முக்கியமான விளைவு , இந்திய நகர்புற கைத்தொழில்களும் , கிராமப்புற சிறுதொழில்களும் குறைந்து , அழிந்து பல நூற்றாண்டுகளாகப் பிணைத்திருந்த விவசாயம் உற்பத்தி தொழில்களை பாதித்ததாகும்"என்பதுடன் ,  " முன்பு தங்கள் அரசியல் அடிமைத்தனத்தால் பிரிட்டிஷுக்கு உதவிய இந்தியா இப்போது பொருளாதார அடிமைத்தனத்தால் உதவிக் கொண்டிருக்கிறது // எனவும் நூலாசிரியர் நிறுவுகிறார். // இந்திய தொழில்களை பிந்தங்கிய நிலையில் வத்து அவற்றின் முன்னேற்றத்திற்கு எதுவும் செய்யாமல் இருப்பதுதான் இங்கிலீஷ் தேசத்தின் நோக்கம்.இதன் மூலம் அவர்களது உற்பத்திகளுக்கு எல்லையற்ற இந்தியச் சந்தை கிடைக்கும்.." என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.

 "இந்தியாவின் வர்த்தகத்தை ஒரு இயல்பான அடிப்படையில் அதாவது , அதன் வளந்து வரும் மக்கள் தொகை காரணமாக ஏற்பட்டுள்ள பெரிய எல்லையற்ற சந்தையை , அதன் உள்நாட்டுத் தொழில்களால் , பொருட்களால் நிரப்பி , உபரியாக உள்ளதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து , அதற்குப் பதில் இங்கு உற்பத்தி செய்ய முடியாதவற்றை இறக்குமதி செய்யுமாறு அமைக்க வேண்டும் . இதுதான் எதிர்கால இந்தியாவிற்கு ஏற்படப் போகும் பொருளாதாரச் சீரழிவிலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும் " - இது 1901 ல் காங்கிரஸ் மாநாட்டில் ஜி.சுப்ரமணிய ஐயர் கூறிய மாற்று . இன்று இதனை மன்மோகனுக்கும் ப.சி .க்கும் எப்படி புரியவைப்பது ?

 "... நாம் போராட வேண்டிய அம்சம் இந்தியா இந்தியர்களின் நலனுக்காக ஆளப்பட வேண்டுமா அல்லது இங்கிலாந்தின் நலனுக்காக ஆளப்பட வேண்டுமா என்பதுதான் " என அன்றையத் தலைவர்கள் குமுறினார்கள். ஆனால் இப்போது இந்தியா அமெரிக்க நலனுக்காக ஆளப்படுவதை நம் அன்றைய தியாகத்தலைவர்கள் கனவிலும் நினைத்துப் பார்ந்திருப்பார்களா ?

  " ...நாட்ட்டின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் இன்னும் காலத்தின் கருப்பையில்தான் இருந்த "அன்றையச் சூழலில் அதனை விதைக்க பொருளாதார விஷயங்களை தலைவர்கள் அன்று நுட்பமாகக் கையாண்டார்கள் வறுமை , தொழில் வளர்ச்சியின்மை , செல்வ வடிதல் போன்றவற்றை விவரித்து அரசியல் விழிப்புணர்வுக்கு விதைதூவியதை இந்நூல் விரிவாக பதிவு செய்துள்ளது.

" உலகமெங்கும் சுயமுன்னேற்றத்தின் உந்து சக்தி சுயநலம்தான்.தன்னலமற்ற வேதாந்தத்தில் ஊறிய நாட்டிலும் மனித இயல்பு வேறுமாதிரியாக இருக்க முடியாது . கரும்பாறைகள் உள்ள இடத்தையும் ஒருவனுக்கு சொந்தமாகக் கொடுத்தால் அவன் அதனைத் தோட்டமாக்கி விடுவான் . இது பிரான்சிலும் நார்வேயிலும் உண்மை என்றால் இந்தியாவிலும் உண்மைதான்.இன்று விவசாயிகள் அக்கறையின்றி இருப்பதை மாற்ற அவன் உழும் நிலத்தை அவனுக்கே உரியதாக்கி அதன் பலன்களுக் அவனுக்கே என்று கூறுவதைவிட நல்லவழி ஏதுமில்லை." என்றார் அன்று ஜோஷி இன்றும் அதுவே உண்மை. பிரச்சனையிம் ஊற்றுமையத்தை அடையாளம் காட்டியது அன்றைய தேசியத் தலைமை . ஆனால் விடுதலை பாரதம் பெரிதும் மறந்த வழியன்றோ [ வங்கம் கேரளம் தவிர்த்து]

வரிக்கொடுமை குறிப்பாக நிலவரியின் கொடுமை குறித்து இந்நூல் அழுத்தமாகப் பேசுகிறது . பொழுதெலாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ என்றான பாரதி அந்த செல்வவடிதல் பற்றி அன்றைய தலைவர்கள் பேசியதும் எழுதியதும் பத்திரிகைகள் சீறியதும் இரத்தமும் சதையுமாய் இந்நூலில் உள்ளது. அந்நிய ஆட்சிதான் அனைத்துக்கும் காரணம் என்கிற கோபவெடிப்பு நூல் நெடுக விரவிக்கிடக்கிறது.

 " பழங்காலத்தில் நாட்டின் செல்வம் வெளியே செல்லவில்லை.முகலாயர்களும் மராட்டியர்களும் மக்களை கொள்ளையடித்திருக்கலாம் எனினும் அவர்கள் செல்வம் இங்குதான் இருந்தது. இங்குதான் செலவிடப்பட்டது. தனிப்பட்ட குடிமகன் துன்பப்பட்டிருக்கலாம் , நசுக்கப்பட்டிருக்கலாம் , செல்வத்தை இழந்திருக்கலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக நாடு எதையும் இழக்கவில்லை . ஒரு குடிமகனின் இழப்பு மற்றவனின் செல்வமாக மாறியது . மாறாக பிரிட்டிஷார்  செல்வத்தை இங்கிருந்து கொண்டு சென்று வெளிநாட்டில் செலவு செய்தார்கள் …. நாதிர் ஷா போன்றோர் வந்து கொள்ளையடித்துச் சென்றபோதும் , அந்த இழப்பு தற்காலிகமானதுதான் . அடி விழுந்த்து . அதோடு விஷயம் முடிந்த்து .மேலும் அந்த அடியும் எப்போதாவதுதான் விழுந்த்து . பிரிட்டிஷ் ஆட்சியைப் பொறுத்தவரையில் செல்வ வடிதல் என்பது நிலவி வரும் அரசு அமைப்பில் ஒரு பகுதி. எனவே அது தடையற்றது . தொடர்ச்சியானது . ஆண்டுதோறும் அதிகரிப்பது. எனவே இது ஆறாத புண் போன்றது. " இப்படி வெடித்து குமுறியதில் உண்மை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் பெருந்தீமையே செல்வ வடிதலே என தலைவர்கள் ஆகச்சரியாகச் சுட்டிக்காட்டினார்கள்.

நிரந்தரத் தீர்வையா ? வரியா ? ஏற்றுமதியா ? இறக்குமதியா ? செலவினமா ? வறுமையா ? செழிப்பா ? செல்வ வடிதலா ? என எதைப் பேசினாலும் ; அது பெருவாரியான இந்திய மக்களுக்கு நன்மை பயக்குமா ? தீமை பயக்குமா ? என்கிற ஒரே நேர்மையான எளிமையான உரைக்கல்லிலேயே உரைத்துப் பார்த்தனர் அன்றையத் தலைவர்கள் . இன்றையத் தலைவர்கள் அப்படி உரசிப் பார்க்க ஒரு கணம் துணிந்தால் தாங்கள் பயணிக்கும் பாதை தவறென்பதை உணர்வர்.
வர்க்கப் பிரச்சனைகளில் ஏற்பட்ட சில தயக்கங்களும் கூட அன்றைக்கு பொதுப்பார்வையின் வழுவே தவிர வேறல்ல . அந்நிய ஏகாதிபத்தியத்தை அதன் பொருளாதாரச் சுரண்டலை கண்டு பொங்கியவர்கள் அன்றைய தலைவர்கள் அதன் சாட்சியம் இந்நூல் நெடுக பதிவாகியுள்ளது.மிதவாதிகளும் தங்கள் அறிவார்ந்த விவாதத்தினூடே தீவிரவாதிகளாக மாறினார்கள் என்பதை நூலாசிரியர் உறுதி செய்கிறார்.பொருளாதாரப் பின்புலத்தில் எவ்வாறு இந்திய தேசியம் கட்டமைக்கப் பட்டு எழுபப்பட்டது என்பதை இந்நூல் விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது. யதார்த்தமாகிவிட்ட இந்திய அரசியல் தேசியம் என்பதை இடது கோடியிலிருந்தும் வலது கோடியிலிருந்தும் எதிர்ப்போர் ; இந்திய ஒற்றுமைக் குலைவு ஏகாதிபத்திய நலன்களுக்கே ஆதாயம் என்பதை மறந்து விடுகின்றனர். இந்நூல் இந்திய தேசியம் குறித்த சிந்தனையை வலுப்படுத்தும்.

அரசியல் விழிப்புமிக்கவர்களும் ஆய்வு மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய - விவாதிக்க வேண்டிய புத்தகம். மன்மோகன்களும் சிதம்பரங்களும் இந்நூலைப் படித்தேனும் கொஞ்சம் புத்திதெளிய மாட்டார்களா என்பது எமது நப்பாசை..சுப்பாராவின் சீரிய மொழிபெயர்ப்பிற்கு பாராட்டுகள்.

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் 
[ 1880 - 1905 ]
ஆசிரியர் : பிபன் சந்திரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,
421, அண்ணா சாலை , தேனாம்பேட்டை ,
சென்னை - 600 018.
பக் :672 , விலை : ரூ .490.
                                             நன்றி : தீக்கதிர் 29-09-2013
 
பெரியாருக்கு ஒரு கடிதம்

Posted by அகத்தீ Labels:

 
பெரியாருக்கு ஒரு கடிதம்…மரியாதை மிக்க ஐயா பெரியார் அவர்களுக்கு ,

வணக்கம்.

நான் எழுதும் இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க மாட்டீர்கள் . அறிவியல் பூர்வமாக படிக்கவும் முடியாது. இதனை நீங்கள் உயிரோடு இருந்தால் உரக்கச்சொல்வீர்கள்.உயிரோடு நான் இருப்பதால் அதனை உரக்கச் சொல்கிறேன். ஆயினும் கற்பனையில் கடிதம் வடிக்கிறேன்.

இல்லாத பொல்லாத சொர்க்கம் , நரகம் கட்டுக்கதைகளை நீங்கள் நம்பியதில்லை . எனவே உங்களை அங்கே தேடுவது வீண்.இறப்புக்குப் பின் வாழ்வதென்பது தான் கைக்கொண்ட லட்சியத்தின் தொடர்ச்சியையைத்தான் கூறவேண்டும் . ஆம் வெறுமே நீங்கள் சொன்னவற்றைக் கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத்திரும்ப சொல்வது மட்டுமே இலட்சியத் தொடர்ச்சி ஆகாது.நாளது வரை சமூகம் சந்தித்துள்ள வளர்ச்சிகளை மாற்றங்களை உள்வாங்கி ஈடுகொடுத்து வளர்ந்து புதிய சவால்களை சந்திக்க அந்த லட்சியம் தயாராக வேண்டும் ; தொடர்ச்சி என்பதன் பொருள் அதுவே.

நலிவுற்ற சமுதாயம் மீள்வதற்காக உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஊர் ஊராய் பிரச்சாரம் செய்தவர் நீங்கள் . ஆனால் உங்கள் பாதம் அழுத்தமாகப் பதிந்த இந்த மண்ணில் மதவெறி விஷச்செடிகள் ஆங்காங்கு முளைத்தது எப்படி ? உங்களைவிட சாதியத்திற்கு எதிராய் அதிகம் பேசியவர்கள் யார் ஆயினும் சாதிவெறி போதை உச்சிக்கேறி காதலுக்கு எதிராக கொலைவாள் சுழற்றுவோர் மிடுக்கோடு திரிவது எப்படி ? ஐயரைத் தவிர்த்து பொதுமேடையில் திருமணம் செய்தாலும் – திருமண அழைப்பிதழில் உங்கள் படத்தையும் பொன்மொழியையும் பொறித்தாலும் - சாதியையும் வரதட்சணையையும் மட்டும் பற்றிநிற்பவர் எண்ணிக்கை பெருகுகிறதே! ஏன் ? பெண்விடுதலை குறித்து தங்களைவிட அதிகம் சிந்தித்தவர் பேசியவர் எழுதியவர் யார் ? யார் ? ஆயினும் கற்பை ஒருதலையாய் பற்றி நின்று இங்கு கூத்தடிப்பதை என்னென்பது ?

ஐயா ! சைவ மடங்கள் போல் – வைணவ மடங்கள் போல் உங்கள் வழித்தோன்றல்கள் திராவிட மடம் ஆக்கிவிடுவார்களோ என்கிற என் ஐயத்தை சொல்லாம்ல் இருக்க முடியவில்லையே ! உங்கள் பேச்சை எழுத்தை வார்த்தைக்கு வார்த்தை கிளிப்பிள்ளைபோல் – நகலெடுப்பது போல் திருப்பிச் சொல்வது போதுமா ? அது இன்றையத் தேவையை நிறைவு செய்யுமா ? காலம் மாறிக்கொண்டே இருக்கிறது – அறிவியலும் சமூகக்கண்ணோட்டமும் மாறிக்கொண்டே இருக்கிறது வளர்ந்துகொண்டே இருக்கிறது – மக்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் கூடிக்கொண்டே இருக்கிறது ; இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் யுத்தி மாறவேண்டாமா ? வளரவேண்டாமா ?

"வைதீகப் பழமைக்கு எதிராக தமிழ் மொழியும் இலக்கியமும் முன்னிறுத்தப்பட்ட அதே வேளையில் தமிழ் பழமையும் பெருமிதங்களும் விமர்சனமின்றி பாராட்டப்பட்டன. இது பகுத்தறிவு வகைப்பட்ட அரசியல் அன்று - அறிவின் சமூக மாற்றப் பண்பு நீர்த்துப்போயிற்று. திராவிட இயக்கத்தின் இரண்டாம் தலைமுறையினர் வளர்த்தெடுத்த தமிழ்ப் பழமையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெருமிதங்களுக்கிடையில் அரசு எனும் அடக்குமுறை இயந்திரம் குறித்த விமர்சனம் அடியோடு இல்லாமல் போயிற்று. கண்ணகியின் கற்பு பற்றிய மலைப்புகளுக்கிடையில் பெண் விடுதலை என்பதே அரவமில்லாமல் மறைந்துபோயிற்று. இவையெல்லாம் சமூக மாற்றத்திற்கான பகுத்தறிவுப் பாதை அல்ல." என முத்து மோகன் நொந்து கூறுவதை புறந்தள்ளிவிட முடியுமா ?

பகுத்தறிவிலும் உண்மை - போலி உண்டு. இது சிங்காரவேலர் வாதம். உண்மைப் பகுத்தறிவு எது? அவர் கூறுகிறார்: "பகுத்தறிவின் தன்மை என்ன? எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தல்; எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும். எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும். எங்கே பசியும் பிணியும் வறுமையும் அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கே பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவிபுரிந்து நிற்கும். இதைத்தான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம். மற்றவைகளெல்லாம் போலிப்பகுத்தறிவே" என்றார். இதனை தமிழ் சமூகம் உணர்ந்ததா? பின்பற்றுகிறதா?

ஐயா நீங்களும் சிங்காரவேலரும் அயோத்திதாசப் பண்டிதரும் ஜீவாவும் அம்பேத்கரும் துவங்கிய சமூகசீர்திருத்தப் பணிகளை அடுத்தகட்ட்த்திற்கு – அறிவியல் சமூக தளத்தில் முன்னெடுத்துச் செல்லும் கடமையும் பொறுப்பும் தகுதியும் ஆற்றலும் உள்ள கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் அதனை தேவைக்கேற்ப உணர்ந்திருக்கிறார்களா ? செய்கிறார்களா ? இந்த அறுவரும் உடன்படும் இடமும் உண்டு முரண்படும் இடமும் உண்டு ஆனால் இது நட்பு முரண்பாடு ; இதனை பகை முரண்பாடு ஆக்குவோர் இறுதியில் சுரண்டும் வர்க்கத்திற்கும் மநுவாதிகளுக்குமே சேவை செய்கிறார்கள் . இந்த சாதாரண உண்மையை உங்களை – இவர்களை புகைப்படமாக்கி மாலை அணிவிப்போர் உணர்வார்களா ? இன்னும் காலம் கடந்துவிடவில்லை . இன்னும் நம்பிக்கை இருக்கிறது .இப்போது விழித்துக் கொண்டாலும் பிழைத்துக் கொள்ளலாம்.

தற்போதைய மார்க்சிய அறிஞ்ர் சீதாராம் யெச்சூரி கூறுகிறார், “இன்றைக்கு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்வதற்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் களச் சூழலை ஆய்வு செய்து முதலாளித்துவத்தை கடந்து செல்வதற்கான முடிவை சிந்தித்து எடுக்க வேண்டியுள்ளது. அவ்வாறு செயல்படாவிட்டால் அதிகரித்துவரும் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் பயங்கரவாதம், மதத்தீவிரவாதம், இனக்குழுவாதம் பிற அடிப்படை வாதங்கள் போன்ற அழிவுத்தன்மையுடன் கூடிய வீண்வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும். நாம் எட்ட வேண்டிய இறுதி லட்சியத்தைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அது புரட்சிகரத்தன்மை கொண்டதாகவும் சமூகக் கட்டுமானத்தை மறு உருவாக்கம் செய்வதாகவும் இருக்கும். மக்கள் தங்கள் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சுதந்திரம் அளிக்கும் வகையில் அது அமைந்திருக்கும். அந்த லட்சியத்தை நாம் எட்டவில்லை என்றால் பொருளற்ற, குறிக்கோளற்ற, முடிவற்ற வன்முறைச் சுழற்சியே நம் கண்முன் மற்றொரு இறுதிக்கட்டமாக இருக்கும். அது மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரிக்கும். இரண்டாவதாகக் குறிப்பிட்ட நிலை ஏற்படாமல் தவிர்ப்பதற்கான ஒரே நம்பிக்கை (வேறு எதனையும் தவிர) மார்க்சியம்தான் என்று குறிப்பிடலாம்”

ஐயா ! உங்கள் பிறந்த தினத்தன்று என் சிந்தனையில் திரண்டவற்றை கடிதம் வாயிலாக பகீரங்கமாக தெரிவித்துவிட்டேன்..விவாதங்களை எப்போதும் ஊக்குவிக்கிறவர் அல்லவா நீங்கள் ..

அன்புத் தோழன்,

சு.பொ.அகத்தியலிங்கம்.

சென்னை , 17 செப்டம்பர் 2013.

தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்.

Posted by அகத்தீ Labels:


தகர்க்கப்படும் கிருஷ்ண பிம்பம்

சு.பொ.அகத்தியலிங்கம்
காபாரதமும் இராமாயணமும் வற்றாத இலக்கியச் சுரங்கங்கள் . அள்ள அள்ள குறையாத அமுதசுரபியாய் புதியபுதிய கற்பனைகளை ஊற்றெடுக்கச் செய்யும் . அதன் தெய்வீகத்தைக் கட்டுடைத்துப் பார்த்தால்  இந்திய சமூகத்தில் புரையோடிப்போன வர்ணாஸ்ரமும் , ஆணாதிக்கமும் தன் கோரப்பற்களை நிணமொழுக காட்டி நிற்கும் . இப்படி அதிரடியாய் தீர்ப்பெழுதும் போது ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . பக்தியில் தோய்ந்த பெரும்பான்மை மக்கள் காதுகொடுத்து இவ்வுண்மையை கேட்கவும் மறுப்பர் . கதை சொல்லி கதை கேட்டு வளர்ந்த மரபின் சொந்தக்காரர்களன்றோ நாம் . எந்தக் கதைகள் வழி நமக்கு மயக்க மருந்து ஊட்டப்பட்டதோ அதே கதைகளின் வழி மயக்கத்தைத் தெளியவைப்பது உன்னதமான செயலன்றோ !அதனைத்தான் இந்நாவலில் ப.ஜீவகாருண்யன் செய்துள்ளார்.

 “ கிருஷ்ணன் என்றொரு மானுடன் ” என்பது பெயர் மட்டுமல்ல இந்நாவலின் மைய இழையே அதுதான் .மக்களிடம் ஆழமாக வேருண்றியுள்ள கிருஷ்ணன் என்றொரு கடவுள் / அவதாரக் கற்பிதத்தை - பிம்பத்தை உடைத்தெறிவதுடன் கிருஷ்ணன் இறந்துவிட்டான் என அறிவிக்க மகா துணிச்சல் வேண்டும் . போகிற போக்கில் சொல்லிவிட முடியாது . வலுவான செய்திகள் நிகழ்வுகளூடே வாசிப்பவன் நெஞ்சில் பதிய வைக்கவேண்டும். ஏற்கச்செய்ய வேண்டும் . இதில் ஜீவகாருண்யன் வெற்றி பெற்றுள்ளார் .

 “ அல்லும் பகலும் அனவரத நேரமும் ஊண் , உறக்கத்தையும் பொருட்படுத்தாமல் கடலிலும் நிலத்திலும் ஒயாமல் உழைத்துத் துவாரகைச் செல்வம் கொழிக்கச் செய்யும் யாதவர்கள் ஓய்வு சாய்வாக கொஞ்சம் மதுவோடு உறவாடுவதில் தவறொன்றுமில்லை என்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் பொதுநெறியாக இருந்த “ மது நெறி ” இன்று ” மது வெறி ” யாக மாறி ,ஒப்பற்ற இனத்தின் பேரழிவுக்கு மூலகாரணமாகிவிட்டது ” என முதல் அத்தியாயத்தில் கடல்விழா கொண்டாடி துவாரகை மக்கள் மது போதையில் அழிந்தொழிந்த கதையை விவரிக்கிறபோது நெஞ்சில் தமிழ் சமூகமும் டாஸ்மாக்கும் ஏனோ வந்து தொலைக்கிறது .

விழாவில் கூடிய அத்தனை பேரையும் விழுங்கிய மது அரக்கனுக்கு தப்பிய தாருக்கனை அர்ச்சுனனுக்கு சேதி சொல்ல அனுப்பிவிட்டு - போதை முற்றும் தெளியாத - எண்பத்தி நான்கு வயதைத் தாண்டிய - முதுமையின் தள்ளாட்டம் மிகுந்த கிருஷ்ணன் தனிமையில் -  “ ..உயிர்களிடத்தில் பாகுபாடில்லாத ஒற்றை நிச்சயமான இறப்பை எதிர் நோக்கி காத்திருப்பதுதான் ” என்ற பிரபஞ்ச உண்மை உறைக்கும் வேளையில் - கிருஷ்ணர் நெஞ்சில் பின்னோக்கிக் குமிழியிடுகிறது கடந்தகால வாழ்க்கைக்கதை .நினைவலைகளில் 1] பிறவிப் பேறு , 2] சூது - தூது - வனம் , 3] குருதிக்களம் 4] சகோதர அம்பு 5] யாத்திரை எனும் ஐந்து பாகமாக நாவல் நீள்கிறது . நினைவலைகள் ஒடுங்கும் நேரம் ஜரா மறைந்திருந்து தாக்கிய விஷ அம்புக்கு பலியாகிறான். ஆம் , கிருஷ்ணன் இறந்தே விட்டான் - அதுவும் எண்பத்தி நாலே வயதில் - நூறாண்டு கூட வாழவில்லை . அடடா! அதற்குள் எத்தனை எத்தனை புதிர் நிறைந்த நிகழ்வுகள் .

ருக்மணி ,ஜம்பாவதி , சத்தியபாமா , சத்தியவதி , காளிந்தி , மித்ரவிந்தை ,நீலாவதி , லட்சுமணை , என எட்டு மனைவிகளை மணந்த கதைமட்டுமா - ஆறு வயது மூத்த ராதையோடும் சைரந்திராவோடும் இளமையில் காமம் சுகித்தது- அது போக ;  “ சரி , எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள் ! நரகனால் பாதிக்கப்பட்டு நீங்கள் ஏற்றுக்கொண்டது போக மிச்சமாயிருக்கும் இந்த இருபத்தி நான்கு பெண்களும் என் மனதறிந்த உண்மையில் எனக்குரியவர்கள் ” என அறிவித்து மனைவியாய் ஏற்று அனுபவித்த இருபத்தி நாலு பெண்களும் என கிருஷ்ணனின் பட்டியல் நீளும்.முகமது நபிக்கு 13 மனைவிகள், அதில் யுத்தத்தால் விதவையாக்கப்பட்டவர்களும் உண்டு . இதனை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இந்துத்துவ சக்திகள் கிருஷ்ணலீலை எனில் கொண்டாடுவார்கள். மதங்கள் அனைத்தும் சாராம்சத்தில் ஒன்று என்பதை சொல்லவும் வேண்டுமோ ! மது ,மாது , மாமிசம் அனைத்திலும் கிருஷ்ணன் கொண்ட மோகமும் வெறியும் இந்நாவல் நெடுக நன்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பேரன்களுக்காக  அவர்கள் விரும்பும் பெண்களுக்காக கிருஷ்ணன் நடத்திய யுத்தங்கள் அதற்கான நியாயங்கள் இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும் போது நாம் நேற்றைய ஆணாதிக்கச் சமூகத்திலிருந்து விடுபடாமலிருப்பதை உணர்த்துகிறது . திரெளபதி ஐவரின் மனைவியாக வாழ்ந்த கதை மட்டுமா ? சப்தரிஷிகளை மணந்த ஐடிலா, பிரிசேட்டகமுனி சகோதரர்கள் பதின்மரை மணந்த ரிஷிபத்தினி , பலபேரை மணந்த வார்ஷி எல்லாம் எதன் குறியீடு ? ஒருவனுக்கு ஒருத்தி வழக்கதிற்கு வரத்துவங்கினும் கட்டற்ற பாலுறவு சமூகத்திலிருந்து முற்றிலும் விடுபடா காலகட்டத்தின் விளை பொருளே பாரதம் . இந்நூல் அதனையும் கதைப் போக்கில் நிறுவுகிறது.

கிருஷ்ணன் பிறந்த கதை , கம்சனை வதைத்த கதை ,ஜராசந்தாவை போரில் தோற்கடித்தாலும் அவன் வலிமைக்கு பயந்து மதுராவை காலி செய்துவிட்டு யாதவ குலமே துவாராகவுக்கு பெயர்ந்த்து - துவாராக கட்டி எழுப்பப்பட்டது ; என விரிந்த கதையில் கிருஷ்ணன் பலராமன் இருவரும் ஆற்றிய பங்குபாத்திரம் என பலவற்றை பேசும் முதல் அத்தியாயம் பாகவதத்தின் மறுவாசிப்பு . கிருஷ்ணனை அவதாரமாக அணுகாமல் ஆசா பாசம் பலம் பல்வீனம் அனைத்தும் உள்ள மனிதனாக நிறுவுகிறார் ஜீவகாருண்யன்.

சூது - வாது - வனம் என்கிற இரண்டாவது அத்தியாயமும் , குருதிக்களம் என்கிற மூன்றாவது அத்தியாயமும் மகாபாரத்த்தின் மறுவாசிப்பு அதுவும் கிருஷ்ணன் என்ற மனிதனின் நினைவோடையில் கதை நகர்த்தப்படுகிறது .சாம்பன் சிறைப்பட்ட கதை 144 ஆம் பக்கத்திலும் 162 ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது. கட்டுரை எனில் கூறியது கூறல் தேவைப்படக்கூடும் ; ஆனால் புதினத்தில் தேவையா ? இப்படி சில வழுவுகள் இந்நூலில் உண்டு .

நியோகம் எனப்படும் கர்ப்பதானத்தில் பிறந்தவர்களே பாண்டவர்கள் ; அவர்கள் பாண்டுவின் பிள்ளைகள் அல்ல ; குந்தியும் அவள் இளையவளும் காட்டுவாசிகளிடம் கட்டற்று உறவு கொண்டு பிறந்தவர்கள் எனவே சொத்தில் பங்கேது என்பதுதான் கெளரவர்களின் வாதம் ; இது வாரிசுரிமைப் போரே தர்ம-அதர்ம யுத்தம் அல்ல . குந்தி மந்திரத்தால் பிள்ளை பெறவில்லை ; மானிடரால்தான் பெற்றாள் . கொண்டவன் ஆண்மையற்றவனெனில் அவள் வேற்றிடம் நாடலில் பிழை என்ன ? இக்கேள்வி நாவலில் வலுவாக பதிவாகவில்லை என்பது என் கருத்து.அது போல் கர்ணனின் வீரம் அர்ச்சுனனின் வீரத்தைவிட பன்மடங்கு ஓங்கி உயர்ந்தது இது போர்க்களத்தில் காட்சி படுத்தப் பட்டிருப்பினும் அர்ச்சுனன் வெற்றிக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிவலை இன்னும் வலுவாய் சொல்லப்பட்டிருக்க வேண்டுமோ !

கடோத்கஜன் சாவை அவமரியாதை செய்யும் கிருஷ்ணன் தன் தங்கை மகன் அபிமன்யு மரணத்தில் இடிந்து போவது ரத்த பாசம் மட்டுமல்ல ; வர்ணாஸ்ரமத்தின் கோரமுகமும் கூட. அது நன்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

 “ஆன்மா நிலையானது . அழிவற்றது . அது உடலாகிய நைந்த ஆடையை - பழைய ஆடையைக் களைந்து விட்டு புதிய ஆடையை உடுத்திக்கொண்டு எந்நாளும் உயிர்ப்புடன் இருக்கக் கூடியது என்று போர் தொடங்கிய நாளில் போரிடத் தயங்கிய அர்ச்சுனனிடம் நான் செய்த உபதேசம் அபிமன்யு இறப்பு விஷயத்தில் பொருந்திவராதது குறித்து நான் வெட்கப்பட்டேன். ஆன்மா என்று ஒன்று உண்டா ? ஆன்மா நிலையானதுதான் என்றால் அபிமன்யுவின் ஆன்மா அடுத்து எந்த ஆடையை உடுத்திக்கொள்ளும் ? என்று என் மனம் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை ” என கிருஷ்ணனை புலம்பவைத்து அவன் கீதையின் பொய்மையை தோலுரித்துவிட்டார் ஜீவகாருண்யன். மேலும் கீதையின் அடிநாதம் வர்ணாஸ்ரம்மே என்பதை கதை மாந்தர்கள் வழி சாட்சிப்படுத்திவிட்டார். கடைசியில் யுதிராஷ்டிர் பட்டமேற்புவிழாவில் சார்வாகன் எழுப்பிய கேள்விகள் மூலமும் சார்வாகன் கொல்லப்பட்டதின் மூலமும் பிராமணியத்தின் நிஜமுகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.பிராமணர்கள் மது மாமிசப் பிரியர்களே என்பதை பட்டவர்த்தனமாய் போட்டுடைக்கிறார். போரின் கொடுமையும் போரில் விளையும் வெற்றியின் வெறுமையும் இநாவலில் மனதை உருக்கும் விதத்தில் பதிவாகியுள்ளது.

மகாபாரதம் என்பது ஏதோ பாரத தேசம் முழுமைக்கானது என்ற கட்டுடைத்து சில இனக்குழுக்களிடையேயான யுத்தம் - ஹிரண்ய நதிக்கரையில் நடந்த யுத்தம் என்கிற அளவிலேயே நாவல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கியம் பெரும்பாலோர் பாகவதத்தையும் மகாபாரதத்தையும் முழுமையாப் படித்திருக்க வாய்ப்பில்லை .இந்நிலையில் மூலமும் இந்நாவலும் வேறுபடும் இடம் எதுவென்பதை சாதாரண வாசகன் ஊகித்துணர்வதில் சிரமம் உண்டு.
இராமாயணமாகட்டும் மகாபாரதமாகட்டும் சில இனக்குழுக்களிடையே மண்ணுக்காகவும் பெண்ணுக்காகவும் மாட்டுக்காகவும் நடந்த மோதல்களின்- கர்ணபரம்பரைக் கதைகளின் தொகுப்பாய் ; ஊதி ஊதி பெருக்கப்பட்டதின் வடிவம்தான் . ஒவ்வொரு காலத்திலும் அன்றைய தேவைக்கு ஏற்ப கருத்தூட்டம் செய்யப்பட்டுக்கொண்டே வந்ததை புரிந்து கொண்டால் ; இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப மறுவாசிப்பின் தேவையை உணர முடியும்.

குறிஞ்சி வேலனின் அணிந்துரை முக்கியமானது . பல தகவல்களைத் தருகிறது . ம்ருத்தியுஞ்செய , யுகாந்தா , யயாதி, முதலிய மராட்டிய நாவல்கள் - யாக்ஞசேனி எனும் ஒரிய நாவல் - வங்கமொழி நாவல்கள் = இனி ஞான் உறங்ஙட்டே , ரண்டாமூழம் முதலிய மலையாள நாவல் - மேலும் பைரப்பாவின் பருவம் - தமிழில் எஸ். ராமகிருஷ்ணனின் உப்பாண்டவம் என பெரும் மறுவாசிப்பு நாவலகளை நினைவு கூரும் குறிஞ்சி வேலன் அவற்றிர்க்கு ஈடாக - அதற்கும் மேலாக ஜீவகாருண்யன் இந்நாவலில் வெற்றி பெற்றுள்ளதாகக் கருதுகிறார் . சுப்பாராவ் ,அருணன்,ராஜம் கிருஷ்ணன் உட்பட பலரும் இதிகாசக் கதையின் பல்வேறு கூறுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தியுள்ளனர் . திராவிட இயக்கத்தினர் எதிர் நிலையிலிருந்து புராணங்களை அணுகியுள்ளனர் . இந்த இதிகாசங்களை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பக்தி பூர்வமாய் அணுகுவதும் ; முற்றாய் எதிர் நிலையிலிருந்து அணுகுவதும் சாராம்சத்தில் ஒரே விளைவுதான். இலகியச் செறிவும் பண்டைய வாழ்க்கைக்கூறும் ஊடுபாவாய் உள்ள இவற்றைக் கட்டுடைத்து மறுவாசிப்பு செய்வது மிகவும் தேவையானது . அவதார தெய்வீக மாயமைகளை தகர்க்கவும் பிராமணியம்,வர்ணாஸ்ரமம் , பெண்ணடிமைத்தனம் இவற்றை அம்பலப்படுத்தவும் மறுவாசிப்புகள் தொடர வேண்டியது அவசியம் . இந்நாவல் அத்தகு பணியில் தனக்குரிய சிறப்பான பங்கை ஆற்றியுள்ளது . அவதார மாய்யைத் தகர்க்கும் இந்நாவலை ஒவ்வொருவரும் வாசிப்பது அவசியம்.

கிருஷ்ணன் என்றொரு மானுடன் ,
ஆசிரியர் : .ஜீவகாருண்யன்,
வெளியீடு : சீதை பதிப்பகம் ,
10/14 ,தோப்பு வேங்கடாசலம் தெரு ,
சென்னை 600005.
பக் : 392 ,விலை ரூ.200 .

நன்றி : புதிய புத்தகம் பேசுது - செப் 2013