முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ?

Posted by அகத்தீ Labels: ,

 






தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 8 ]

 

முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ? 

 

 

 

 

கேள்வி :

முற்போக்கு பேசும் பலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களாக இருக்கிறார்களா ? தங்கள் வாழ்வில் கடைப் பிடிக்க முடியாத ஒன்றை அடுத்தவர்களுக்கு உபதேசிப்பது எப்படி முற்போக்காகும் ? பச்சையாகக் கேட்பதெனில் பாலின சமத்துவம் பேசிக்கொண்டே அதற்கு நேர் எதிரான செயலில் ஈடுபடுவோரை முற்போக்காளர் எனச் சொல்லலாமா ?

 

பதில் :

இக்கேள்வியை அனுப்பியவர் தற்கால செய்தி ஒன்றை எடுத்துக்காட்டியே கேட்டிருந்தார் . ஒரு குறிப்பிட்ட செய்தியை அலசுவது வேறு ; பொதுவாய்ப் பதில் சொல்வது வேறு . நான் பின்னதிலேயே ஊன்றி நிற்கிறேன்.

 

புதுமைக் கவிஞர் பாரதியாரிடம் ஒரு முறை அவர் போதைப் பழக்கம் குறித்துக் கேட்டார்களாம் , அதற்கு அவர் , “ துடைப்பம் பெருக்குகிறதா என்பதுதான் கேள்வி ; அதில் என்ன ஒட்டி இருக்கிறது என்பதல்ல  ...” இப்படி அவர் சொன்னதாகச் சொல்லப்படுவது உண்மையா ? தெரியாது . செவி வழிச் செய்தி . ஆயினும் இப்பதிலை ரசிக்கலாம் . ஏற்க முடியாது .

 

 “நதி மூலம் ரிஷி மூலம்” பார்க்கக்கூடாது என ரிஷிகளின் இருண்ட பக்கத்தைக் கண்டும் காணாமல் விடச் சொல்வது நம் நாட்டில் வழக்கமாக இருந்துள்ளது . பாரதி சொன்னதாகப் பேசப்படுவதிலும் இதே அணுகுமுறைதான் வெளிப்பட்டுள்ளது .  முற்போக்காளர்கள் விஷயத்திலும் இதே அணுகுமுறை ஏற்க முடியுமா ? முடியாது . யாராக இருப்பினும் ஏற்க முடியாது .

 

அதே நேரத்தில் முற்போக்காளர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல . இந்த பூமியில் பிறந்தவர்கள் . அவர்கள் வாழும் சமூகத்தின் நல்லதும் கெட்டதும் அவர்கள் மீதும் படிந்தே இருக்கும் .இன்றையச் சமூகச் சூழலும் குடும்பச் சூழலும் வளர்ப்பு முறையும் முற்போக்காக இல்லை . ஜனநாயகமாக இல்லை . அதன் எண்ணற்ற  நிறப் பிரிகைகள் எல்லோர் மீதும் படிந்தே இருக்கும் . முற்போக்கு பேசும் சிலர் சொந்த வாழ்வில் முற்போக்காளர்களா இல்லை என்பது நிஜம்தான் .

 

நாம் வாழும் சமூகத்தில் போலிகள் உலவுவது புதிதல்ல . நல்ல பயிர்களிடையே களைகளும் இருக்கும் .களைகளை உரிய நேரத்தில் அகற்றாவிடில் பயிர்களை அழித்துவிடும். 

 

முற்போக்காளனாக ,பகுத்தறிவாளனாக ,புரட்சிக்காரனாக அமைப்புக்கு உள்ளிருந்தே போராட வேண்டி இருக்கிறது .இதில் வெற்றி பெறுவது சவாலானதே ! ஆனால் செய்தாக வேண்டும்.

 

சாமியார்கள் , மத பீடத்தில் இருபோர் ,ஆன்மீகவாதிகளிடமும் இந்த  பலவீனம் ஓங்கி இருக்கும் . அதே வேளை அவர்களின் கருத்தியலே பெண்ணடிமைத்தனம்தான் . பெண்ணை இழிவாகப் பார்ப்பதுதான்.ஆகவே அங்கு நடக்கும் அட்டூழியங்கள் தனிநபர் வழுக்கலாகச் சறுக்கலாக மட்டுமே பார்க்கப்படுவதும் ; பொது தாக்குதல் இல்லாமல் தப்பிப்பதும் நடந்துவிடும் .

 

அதே வேளை , அந்த ஒட்டு மொத்த அமைப்பே பெண்களுக்கு எதிரானது என்பதைத்  தம் தொடர் விமர்சனம் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கும் முற்போக்காளர்களிடையே ஏற்படும் சிறிய சறுக்கலும் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவது இயல்பு .

 

 

இன்னொரு புறம்  ‘பாலின சமத்துவப் பார்வை’ நேற்றும் இன்றும் ஒருப்போல் இல்லை . ஒவ்வொரு நாட்டுக்கும் , பண்பாட்டுச் சூழலுக்கும் , காலச் சூழலுக்கும் ஏற்ப பாலின சமத்துவப் பார்வை மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது .இதனை உள் வாங்க வேண்டும் .

 

நான் பொதுவாழ்வில் நுழைந்த 1975 காலகட்டத்தில் எனக்கு இருந்த பெண்ணியப் புரிதலுக்கும் , இன்றைய புரிதலுக்கும் நிறைய வேறுபாடு உண்டு .ஜனநாயக மாதர் சங்கம் உருவான காலத்தில் இன்றைய குரலில் பேச வாய்க்கவில்லை . அன்றைக்கு திருநங்கைகளை மாதர் சங்க ஊர்வலத்தின் கடைசியில் வர அனுமதித்தற்கே தோழர் மைதிலி சிவராமன் அமைப்புக்குள்  விமர்சனங்களை எதிர்கொண்டார் . இன்றைக்கு பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது . ஆக , எல்லா கருத்தியலையும் போல  ‘பாலினப் பார்வையும்’ வளர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை முதலில் உள்வாங்க வேண்டும்.

 

மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் பி.டி.ரணதிவே அடிக்கடி சொல்லுவார் , “ மேடையில்  மாபெரும் புரட்சிக்காரர்கள் … வீட்டிலோ மோசமான இந்துக் கணவர்கள் …” [ இங்கே கிறுத்துவக் கணவர்கள் ,இஸ்லாமியக் கணவர்கள் எனவும் போட்டுக்கொள்க ] மார்க்ஸ் , எங்கெல்ஸ் ,லெனின் எல்லோரும் இந்த இரட்டைத் தனமைக்கு எதிராக கடுமையாக எச்சரித்துள்ளனர் .  ‘வாய்ச்சொல் வீரர்கள்’ என சாடியுள்ளனர் . மேடையில் பேசும் முற்போக்கு ஏன் வீட்டிற்கு வரவில்லை ?  

 

 

மேடையில் பாலின சமத்துவம் பேசுவதற்கு ஒரு கருத்து போதும். ஆனால் வீட்டில் அதை பின்பற்றி வாழ்வதற்கு தினம் தினம் உன் அதிகாரத்தை, உன் சௌகரியத்தை, உன் குடும்பத்தின் பழக்கத்தை நீயே உடைக்க வேண்டும். ‘குடும்ப ஜனநாயகம் ‘ பயில வேண்டும் .பழக வேண்டும் . இங்கே இரத்தத்தில் ஊறிப்போன ஆணாதிக்கம் குறுக்கிடுகிறது . அதை உடைப்பது எளிதல்ல . ஒவ்வொருவரும் தமக்குள்ளும், வீட்டுக்குள்ளும் போராட வேண்டும் .அதிலும் வீடு மொத்தமும் உறவுகளும் அக்கம் பக்கமும் ஒரே பக்கமாக நிற்கும் போது தனியாளாய் வாளைச் சுழற்றுவது மிகச்சிரமமான செயலே !

 

ஆணாதிக்கம் என்பது ஆண்களிடம் மட்டுமல்ல பெண்களிடமும் இருக்கிறது .ஆணாதிக்கத்தை எதிர்த்த போராட்டத்தைப் பெண்கள் தங்களுக்குள்ளும் நடத்தியாக வேண்டும் . சடங்கு , சம்பிரதாயம் , சென்டிமெண்ட் ,பழக்க வழக்கம் இவற்றினோடு தன்னை நிலை நிறுத்த முயலும் , பாலின பேதத்தை எதிர்த்த போராட்டம் ஒவ்வொரு வீட்டிலும் ஆணும் பெண்ணும் இணைந்தே நடத்திட வேண்டும்.

 

 

ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலுடன் விருப்பமுடன் எப்படி நடந்து கொள்வது என்பது அவரவர் உரிமை .அதனை யாரும் கேள்வி கேட்க முடியாது . இதனை தோழர் சுந்தரய்யா அவர் வாழ்க்கை வரலாற்று நூலில் ஓரிடத்தில் வலியுறுத்திச் சொல்கிறார் . அதே சமயம் , வற்புறுத்தியோ / ஆசைவார்த்தை காட்டியோ / உண்மைகளை மறைத்து ஏமாற்றியோ; ஏதோ ஒரு வகையில்  யாரேனும் ஒருவர் பாதிக்கப்படும் போது - பாதிக்கப்பட்டவர் புகார் செய்யும் போது , அது நிச்சயம் தண்டனைக்குரிய குற்றமே என்கிறார் . 

 

இப்படி குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்கள் முற்போக்களராக இருந்தால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது . இது அவரின் முற்போக்கால் ஏற்பட்ட தவறல்ல ; அவரின் சுய பலவீனத்தால் நடந்ததென அறிக ! அவர் தான் பேசிய கொள்கைக்கும் விசுவாசம் இல்லாமல் நடந்துள்ளார் என்பதே உண்மை . தவறே செய்யாதவனல்ல கம்யூனிஸ்ட் ; தவறை ஒப்புக் கொண்டு தன்னை திருத்திக் கொள்பவனே கம்யூனிஸ்ட் . தண்டனையை ஏற்று ,தன்னைத் திருத்திக் கொள்ளாதவன் கம்யூனிஸ்டாக தொடர முடியாது .

 

 

மேலே சுட்டியது போன்றோர் ஒரு வகை . இன்னொரு வகையினர் கட்சிக்குள் இருக்கும் விஷக்கிருமிகள் . இவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும் . முழுக்க முழுக்க தன்னிச்சையாகச் செயல்படுவார்கள் . தவறு செய்துவிட்டு மறைக்க முயல்வார்கள் . நியாயப்படுத்த வியாக்கியானம் செய்வார்கள் .கோஷ்டி சேர்ப்பார்கள் .இந்த சந்தர்ப்பவாதிகளை அம்பலப்படுத்தியாக வேண்டும் . தண்டித்தாக வேண்டும் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகையோர் இருக்கலாம் . அடையாளம் கண்ட போதெல்லாம் கட்சி கறாராக நடவடிக்கை எடுத்திருக்கிறது .கட்சி நியாயப்படுத்த ஒரு போதும் முனைந்ததில்லை .

 

 

முற்போக்கு என்பது என்ன உடுத்துவது, என்ன படிப்பது, என்ன பேசுவது என்பது மட்டும் இல்லை. அது யாரை எப்படி நடத்துகிறாய் என்பதிலும் அடங்கி உள்ளது .நீ பொதுவில் பெண் விடுதலை பேசிவிட்டு, தனிப்பட்ட உறவில் ஒரு பெண்ணை அவமதித்தால், அவள் உழைப்பைச் சுரண்டினால், அவள் உடல் மீது உனக்கு உரிமை உண்டு என்று நினைத்தால், நீ பேசிய அத்தனை கருத்தும் செத்துப் போகிறது. உன் செயல்தான் உன் கொள்கை. 

 

 

அடுத்தவர்களுக்கு உபதேசிப்பது முற்போக்காகாது. அது வெறும் பிரச்சாரம். தன் வாழ்வில் கடைப்பிடிக்க முடியாததை அடுத்தவனுக்கு சொல்வது அறம் இல்லைதான் , ஆயின் ,  வீட்டில் அமலாக்க முனைந்து தோற்றுப்போனால் ; அதனை வெளிப்படையாகச் சொல்வதில் தப்பில்லை .நீ நேர்மையாக முயற்சித்திருக்கிறாய் ... வெற்றி தோல்வி பொருட்டல்ல.… அதே வேளை முயற்சியே எடுக்காமல் ஜால்சாப்பு சொல்லித் திரிவோர் உண்டு .அதனை இனம் கண்டு .அம்பலப்படுத்தியாக வேண்டும் .

 

இங்கே இன்னொன்றை சுட்டியாக வேண்டும் திமுக ,அதிமுக ,தவெக போன்ற கட்சிகளில் பாலின சமத்துவம் குறித்து கூர்த்த சிந்தனையுடையோர் உண்டு .தொடர்ந்து பிரச்சாரம் செய்வோரும் உண்டு .ஆயினும் பல வேளைகளில் பெண்களை தரக்குறைவாகப் பேசும் போக்கும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது . ஏன் ?

 

கருத்தியல் ரீதியாக முற்போக்காக இவர்கள் இருப்பினும் ; வாழ்க்கை நெடுகிலும் பழக்க வழக்கம் சார்ந்து அழுகிய சமூகச் சூழலின் பிரதிநிதியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் அவர்கள் இயல்பிலேயே அது ஒட்டிக்கொண்டிருக்கிறது . பல வேளை வெளிப்பட்டுவிடுகிறது .சிலர் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிடுகின்றனர் .பலர் வறட்டுப் பிடிவாதத்தால் நாறிப்போகின்றனர் .

 

 

 

விமர்சனம் ,சுயவிமர்சனம் என்கிற இரண்டு கூர்மையான ஆயுதங்களை கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புவிதி தந்திருக்கிறது .அதனை சரியாகப் பற்றி நின்றால் வெல்ல முடியும் . சுயவிமர்சனம் என கம்யூனிஸ்டுகள் சொல்வதும் அகத்தாய்வு என ஆன்மீகவாதிகள் சொல்வதும் ஒன்றல்ல . கம்யூனிஸ்டுகள் சொல்வது தவறை பகீரங்கமாக ஒப்புக் கொண்டு  தனக்குத்தானே திருந்தி வாழப் போராடுவது .ஆன்மீகவாதிகள் சொல்வது அதை அல்ல ; உள்ளுக்குள் நீ மாற இறையை நாடு என்பதுதான் .அதில் எனக்கு உடன்பாடில்லை .

 

ஜெர்மன் தத்துவஞானம் நூலில் - மார்க்ஸ் சொல்கிறார், "மனிதர்களின் உணர்வு அவர்களின் இருப்பை தீர்மானிப்பதில்லை, அவர்களின் சமூக இருப்புதான் அவர்களின் உணர்வை தீர்மானிக்கிறது."

 

இதன் பொருள் என்ன? நீ மேடையில் என்ன பேசுகிறாய் என்பது முக்கியம் இல்லை. நீ உற்பத்தி உறவில், சொத்துரிமையில், குடும்பத்தில் யார்? நீ எஜமானனா, அடிமையா? நீ சுரண்டுகிறாயா, சுரண்டப்படுகிறாயா?

 

ஆக உன் வாழ்நிலை உன் உணர்வைத் தீர்மானிக்கும் ; நீ வாழும் சமூகத்தை தலைகீழாக மாற்றும் புரட்சிக்காரனாக வாழ முடிவெடுத்தால் உன் சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் நேர்மையை ,ஒழுக்கத்தை , உண்மையை முன்னிறுத்துவது தவிர்க்க இயலாதது .அப்படிச் செய்யாதவர்கள் போலிகள் என்றறிக !

 

ஒரு அளவுகோல் வைத்துக் கொள் தோழா:

 

மேடையில் இல்லாதபோது, கேமரா இல்லாதபோது, யாரும் பார்க்காதபோது நீ யாராக இருக்கிறாயோ, அதுதான் நீ. மற்றதெல்லாம் விளம்பரம். ஆக , நீ ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு விசுவாசமாக இருக்க எல்லா இடத்திலும் எல்லா சந்தர்ப்பத்திலும் போராடிக்கொண்டே இரு . பலன் ஒரு நாள் நிச்சயம் கிட்டும் .

 

சரி ! ஓர் உண்மையைச் சொல்லட்டுமா ? நானும் பாலின சமத்துவத்துக்காக  தொடர்ந்து அகமும் புறமும்  போராடிக்கொண்டேதான் இருக்கிறேன் … நீங்களும் அப்படியே ஆகுக!

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

 

17/10 /26.

 

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

Posted by அகத்தீ Labels: ,

 






முதியோர் சொல்…

 

 

 

இளமையில்

அருகில் தெரிந்த துருவ நட்சத்திரம்

முதுமையில்

வெகுதூரத்தில் கண்சிமிட்டுகிறது …

 

அன்றும் இன்றும்

போராட்டச் செய்திகளிலேயே

இரத்தம் சூடேறுகிறது ….

 

அன்றோ

போராட்ட களத்தில் கம்பீரமாய்

மீசை முறுக்கி….

 

இன்றோ

செய்திகள் தரும் தெம்பில்

வீட்டில் இருந்தபடி….

 

உணர்ச்சி கொந்தளிப்பில்

தொட்டுவிடும் தூரமென

எட்டிநடை போட்டேன் அன்று …

 

வரலாற்றுத் தடத்தில்

அனுபவ வெளிச்சத்தில் பொறுமையைப்

போதிக்கும் இன்று …

 

செங்கொடிதான் மாற்று என்பதில்

மாற்று இல்லை ; நாளைய

தலைமுறை சாதிக்கட்டும்… !!

 

ஆசிர்வாதமா கனவா

ஆசையா இலட்சியமா

இது முதியோர் சொல் …..

 

இளமையில்

அருகில் தெரிந்த துருவ நட்சத்திரம்

முதுமையில்

வெகுதூரத்தில் கண்சிமிட்டுகிறது …

 

 

சுபொஅ.

 

 

மனிதனின் அடிப்படை சுபாவமே பேராசையும் சுயநலமும்தானே?

Posted by அகத்தீ Labels: ,

 



தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 7 ]

 

மனிதனின்  அடிப்படை சுபாவமே பேராசையும் சுயநலமும்தானே?

 

 

கேள்வி :

மனிதனின்  அடிப்படை சுபாவமே பேராசையும் சுயநலமும்தானே?  இன்னும் சொல்லப் போனால் சுயநலம்தானே மனிதனை தொடர்ந்து முயற்சிக்கிறவனாக மாற்றும் ; முதலாளித்துவம் இந்த மனித இயல்புக்கு மிகவும் நெருக்கமானது அல்லவா ? ஆகவே மனிதன் முதலாளித்துவத்தின் மீது இயல்பாக பக்தி கொண்டிருக்கிறான் என்பது உண்மையல்லவா?

 

பதில் :

இப்படி ஒரு கேள்வி வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை . பதில் சொல்வதா நழுவிவிடுவதா என யோசித்தேன் .சரி ! சொல்லிவிடுவோம் எனத் துணிந்தேன் . வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிச் செலுத்தி்னேன். 

 

ஆதி மனிதனுக்கு எந்த வகையில் சுயநலம் இருந்திருக்கும் ? பசி ,தாகம் ,தூக்கம் ,காமம்  எல்லோருக்குமானது ; அதற்கான முயற்சியை சுயநலம் என்று ஒதுக்கிவிட இயலுமா ? இன்றைய சமூக விழுமிய அளவுகோல்கள் அன்றைக்கு பொருந்தா ..... எங்கெல்ஸ் எழுதிய ‘ குடும்பம் ,தனிச் சொத்து ,அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல்  ‘தனிச் சொத்து’ உருவாக்கம்தான் ஒடுக்குமுறைக் கருவியான  ‘அரசு’ உருவாக்கத்தில் முடிந்தது என விவரித்திருப்பார் . அதில் தனிச் சொத்து உருவாக்கத்தோடு உருவான சுயநலம் சுட்டப்படும். அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று .

 

 இராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘ வால்கா முதல் கங்கை வரை’ நூலை வாசித்தால் அதில் ’கணபதி’ வருவார் .அவர் கணங்களின் பதி அதாவது கணங்களின் தலைவர் .அவர் வேலைக்குச் செல்லாமல் உட்கார்ந்து அடுத்தவன் பங்கையும் சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தொப்பை வளர்த்தவராக இருப்பார் . அந்த கணபதிதான் , ஒரு வேளை சுயநலத்தின் தோற்றமாக இருக்குமோ ?

 

மனிதன் இயல்பில் கூடி வாழும் விலங்குதான் . ஒருவரை ஒருவர் சார்ந்தும் உதவியும் வாழ்வதுதான் இயற்கையானது . இதில் சுயநலம் எங்கு வந்தது ? பாலுணர்ச்சி சார்ந்து ஏற்பட்டப் பொறாமை உணர்ச்சி அவருள் இருந்திருக்கலாம் . இன்றைக்கும் இருக்கக்கூடும் , ஆயின்  அன்றைய அளவுகோல் வேறுதான்.

 

மனிதனுக்கும் விலங்குகளுக்குமான அடிப்படை வேறுபாடு , உற்பத்திக் கருவிகளைச் செய்யத் தெரிந்தவன் ; அதனை கையாளத் தெரிந்தவன் என்பதுதான். அந்தக் கருவி யார் கையில் இருக்கிறது என்பது சார்ந்து உற்பத்தி உறவுகள் தீர்மானிக்கப்படும் போது ஏற்றதாழ்வுகள் உருவாயின .அங்குதான் சுயநலத்தின் விதை விழுந்தது எனலாம் .

 

ஒருவன் / ஒருத்தி தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஆசைப்படுவது பேராசை அல்ல . தேவை . அதை நிறைவேற்றிக் கொள்ள எடுக்கும் சுய முயற்சிகள் பாராட்டத் தக்கதே .அது சுயநலம் அல்ல .   ‘எல்லாம் எனக்கு ;அதை அடைய எதையும் செய்வேன்’  என்பதுதான் சுயநலம் .

 

‘ பிறன் பொருள் விழையாமை’ குறித்து எல்லா மதங்களும் போதிக்கும் .யாருக்கு ? இல்லாதவனுக்கு. ஆயின் ,கோடிக்கோடியாய்ச் சொத்துக் குவித்துள்ள யாரும் அதை உழைத்துச் சம்பாதிக்கவில்லை . பிறர் உழைப்பைத் திருடி ,சட்டத்தை ஏமாற்றி , கொள்ளை லாபம் ஈட்டிச் சேர்த்தவைதான் .அவருக்கு ‘ பிறன் பொருள் விழையாமை’ உபதேசம் கிடையாது .இதுதான் முரண்பாடு .

 

 “சுயநலம் தான் மனித இயல்பு” என்பது தாமஸ் ஹாப்ஸ், ஆடம் ஸ்மித் போன்ற முதலாளித்துவ தத்துவவாதிகளின் கருத்து. அது முதலாளித்துவச் சுரண்டலைப் பாதுக்காக்கிற வாதமே ஒழிய வேறில்லை .அதனை மார்க்ஸ் கடுமையாக எதிர்த்தார். 

 

 "ஃபாயர்பாக் பற்றிய ஆய்வுரைகள் (Theses on Feuerbach - 1845)" நூலில் மார்க்ஸ் சொல்கிறார் ;

 

"மனிதனின் சாராம்சம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் உறைந்திருக்கும் ஒரு கருத்தியல் அல்ல; அது சமூக உறவுகளின் தொகுப்பே. “the essence of man is no abstraction inherent in each single individual, but the ensemble of social relations”

 

அதாவது, மனிதன் சூழலாலும், உற்பத்தி உறவுகளாலும் உருவாக்கப்படுகிறான், அவன் இயல்பிலேயே நல்லவனோ கெட்டவனோ, சுயநலமியோ பொதுநலமியோ அல்ல. தான் வாழும் சமூகம் அவன் மீது ஒரு சமூக உறவை அவன் விரும்பியோ விரும்பாமலோ திணிக்கிறது . சூழநிலையால் முடங்கிப் போகாமல் ,அதோடு மல்லுக்கட்டி இந்த சமூகத்தை மாற்ற  முயல்கிறான்.  .ஆக , சுயநலம்தான் மனிதனை ஆட்டுவிக்கிறது என்பது மெய் அல்ல ; வாழ்வதற்கான போராட்டமே அவனை இயக்குகிறது .

 

இங்கு முதலாளித்துவம் வாசலை அகலத் திறந்து வைத்திருப்பது போலவும் ; வெற்றிப் படிகட்டுகள் தடையின்றி இருப்பதாகவும் ;சோம்பேறித்தனமாகவோ வேறு ஏதோ கெட்ட நடத்தையாலோ தனி மனிதனே அதை இழந்துவிடுவதாகவும் பெருங்கதையாடல் நடக்கிறது .சமூக பொது புத்தியிலும் அது வலுவாக உள்ளது . உண்மை என்ன ?

 

 “ ஆசை இருக்கு தாசில் பண்ண ; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க” என உன்னை விதியின் சங்கிலியில் மாட்டிவிடுவார்கள் . முன்பெல்லாம் ஊர்வலத்தில் நாங்கள் ஒரு பாட்டுப்பாடுவோம் , “ பூண்டியூரு வாண்டையாருக்கும் ,கருப்பையா மூப்பனாருக்கும் ,வலிவலம் தேசிகருக்கும் ஆண்டவனே பட்டா போட்டு அளந்துவிட்டானா ? அவனவனே அகப்பட்டதைச் சுருட்டிக்கிட்டானா ?” அகப்பட்டத்தைச் சுருட்டியதுதான் சொத்து . அரசரை ஆட்சியாளரை அண்டி ஊரை சுருட்டி உலையில் போட்டதுதான் சொத்து .  [ இங்கே நாம் சொத்து என்று சொல்வது குடியிருக்கும் எட்டடிக் குச்சையோ அவசரத்துக்கு உதவும்ன்னு வைத்திருக்கும் நாலு கிராம் தங்கத்தையோ ,ஒரு டூ வீலரையோ அல்ல . ஏக்கர் கணக்கில் நிலம் ,சுரங்கம் ,தொழிற்சாலை , கோடிக்கோடியாய் பணம் இவற்றைத்தான் .இவை உலகில் வெறும் ஒரு சதம் பேரிடம்தான் இருக்கிறது ]

 

சுய நலத்தை பற்றி அதிகம் உபந்யாசம் செய்யும் முதலாளித்துவம்தான் மிகப்பெரிய கொள்ளைக்காரன் . மார்க்ஸ் எழுதிய  ‘மூலதனத்தின் ஆதிதிரட்டல்’ பற்றிய கட்டுரைகளில் இரத்தம் வடியும் இந்த வரலாற்றை அறியலாம்.

 

முதலாளித்துவம் உன் ஆசையைத் தூண்டும் .கனவு காணச் சொல்லும் ; கனவில் நீ மிதக்கும் போது கட்டிய கோவணத்தையும் களவாடிச் சென்றுவிடும் . இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்து அவரவர் சக்திக்கு உழைத்துவிட்டு அவரவர் தேவையை பெற்றுக்கொள்ளும் ஓர் உன்னத சமூகமான கம்யூனிஸ தத்துவத்தை சமூக அறிவியலை வடித்துத் தந்தவர் மார்க்ஸ்தான் .ஆயின் அது மந்திரத்தால் விளையும் மாங்காய் அல்ல ; பல படிநிலைகளைக் கடந்து போராடி அடைய வேண்டிய ஒரு பொன்னுலகம் .

 

நடப்பு உலகம் எப்படி இருக்கிறது ?

 

உலகம் ஒரு சதம் கார்ப்பரேட் நலன்களுக்காக 99 சதம் மக்களை வதைக்கிறது . சுயநலம் ஓங்கி இருப்பது அந்த ஒரு சதத்திடமா அல்லது 99 சதத்திடமா ? இதுவே அடிப்படைக் கேள்வி . இதனை பூசி மெழுகி முதலாளித்துவம் எல்லோருக்கும் வாய்ப்புகளை வாரி வழங்குவதாகவும் பொறுப்பற்ற மனிதர்கள் அதைக் கோட்டைவிடுவதாகவும் பழி தூற்றுகின்றனர் . முதலாளித்துவம் ஏழைகளுக்கு தரும் ஆதரவு என்பது தூக்கு கயிற்றில் தொங்குகிறவனுக்கு அந்த தூக்குக் கயிறு ஆதரவு தருவது போலத்தான்.

 

கழுத்தறுப்புத் தொழில்  போட்டியில் சகல நெறிமுறைகளையும் காற்றில் பறக்கவிடுவது யார் ? மேலும் மேலும் லாபம் என வெறிக்கொண்டு ; மனிதத்தைக் காலடியில் போட்டு மிதித்துவிட்டு வெறியோடு ஓடுவது யார் ?

 

இன்றைக்கு மூலதனம் சர்வதேச தன்மை உடையதாகிவிட்டது. அதற்கு சாதி ,மதம் ,இனம் ,நாடு ,மொழி எந்த எல்லையும் இல்லை . லாபம் ,மேலும் லாபம் ,மேலும் மேலும் லாபம் என்பது மட்டுமே நோக்கமென அலைகிறது .

 

மார்க்ஸ் சொல்லுவார் , “ முதலாளித்துவம் தன் லாபத்துக்காக எதையும் செய்யும் .லாபம் இல்லாமலோ குறைந்த லாபத்திலோ தொழில் நடத்த ஒரு போதும்  சம்மதியாது .

 

பத்து சதம் லாபம் வருமெனில் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயங்காது ; நாடு ,மத எல்லை எல்லாம் பார்க்காது.அதுவே இருபது சதம் லாபமெனில் வெறியோடு ஈடுபடும் .

 

ஐம்பது சதம் லாபம் எனில் அம்மணமாகவும் ஓடத் தயங்காது.நூறு சதம் லாபம் எனில் எல்லா சட்டங்களையும் நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கக் கொஞ்சமும் அஞ்சாது .

 

முந்நூறு சதம் லாபமெனில் எதற்கும் துணியும் ; படுகொலையை எந்த உறுத்தலுமின்றி அரங்கேற்றும் ; சமூகக் கொந்தளிப்பை மோதலைத் தூண்டிவிட்டால் மேலும் லாபமெனில் அதையும் செய்யும் .

 

கள்ளக்கடத்தல் ,ஊழல் .அடிமைவணிகம் எல்லாம் அதைத்தாம் நிரூபிக்கின்றன.” என்றார் மார்க்ஸ் .

 

கொரானா காலத்தில் ஆலைகள் இயங்கவில்லை . வியாபாரம் நடக்கவில்லை . பாதிக்கப்பட்டவர் தொழிலாளார்கள் தாம் . அம்பானி அதானி செல்வம் அக்காலத்தில் குட்டி போட்டது  எப்படி ? அரசை தம் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கஜனாவை தம் வீட்டுப் பக்கம் திருப்பிக் கொண்டதுதான் . லாபம் தாம் அவர்களின் ஒரே குறிக்கோள் . ஆயின் பேராசைகூடாது ,சுயநலம்கூடாது ,பிறன் பொருள் மீது ஆசைகூடாது என்ற மகா உபதேசங்கள் உழைப்பாளிகளை நோக்கி மட்டுமே !

 

தான் வாழநினைப்பது சுயநலமல்ல ; சுய முயற்சி ; சுய நம்பிக்கை . ஆனால் தான் மட்டுமே வாழ வேண்டும் ; அதற்காக பிறர் காலைவார வேண்டும் ; கழுத்தை அறுக்க வேண்டும் என உந்துவது முதலாளித்துவ சுயநலமே !

 

புரட்சியை முடித்த பிறகும் தோழர்  லெனின்  கவலைப்பட்ட  எச்சரித்த ஓர் விஷயம் என்னவெனில் ‘தனிமனித சுயநலம்’

"It is the beginning of a revolution that is more difficult, more tangible, more radical and more decisive than the overthrow of the bourgeoisie, for it is a victory over our own conservatism, indiscipline, petty-bourgeois egoism, a victory over the habits left as a heritage to the worker and peasant by accursed capitalism."

 

  “முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிவதை விட மிகக் கடினமான எதுவெனில் நம்முடைய சொந்த பழமைவாதத்தின் மீதான, ஒழுக்கமின்மையின் மீதான, குட்டி முதலாளித்துவ சுயநலத்தின் மீதான  நாம் பெறப்போகும் வெற்றி. சபிக்கப்பட்ட முதலாளித்துவம் தொழிலாளிக்கும் விவசாயிக்கும் பரம்பரை சொத்தாக விட்டுச்சென்ற பழக்கவழக்கங்களின் மீதான வெற்றி மிக முக்கியமானதாகும் .” என 1919 இல் ‘பிராவ்தா பத்திரிகையில் ‘மாபெரும் துவக்கம்’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது கவனத்துக்கு உரியது .

 

மனித சுயநலத்துக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்கப் போராட்டத்தோடு இணைந்தது ; வர்க்கப் போராட்டம் முடிந்த பின்னும் நெடுநாட்கள் போராட வேண்டி இருக்கும் என பல சந்தர்ப்பங்களில் தோழர் லெனின் எச்சரித்துள்ளார் .

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

10/10 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com    

 

 

.

 

 

 

 


மார்க்சியத்துக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி ?

Posted by அகத்தீ Labels:

 



தொடக்கநிலைக் கேள்வி- பதில் - [ 6 ]

மார்க்சியத்துக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி ?

 கேள்வி :

 எத்தனையோ அரசியல் கொள்கைகள் இருக்கும்போது, மார்க்சியம் மட்டும்தான் சமூகத்தில் உண்மையான நிரந்தர மாற்றத்தைக் கொண்டுவரும் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? காலந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதானே இருக்கின்றது ; அப்படி இருக்க மார்க்சியத்துக்கு அப்படி என்ன ஸ்பெஷாலிட்டி இருக்கிறது ?

 

பதில் :

 

இயல்பாக எழக்கூடிய சந்தேகம்தான் . எத்தனையோ அரசியல் கொள்கைகள் ஆட்சி முறைகள் உலகெங்கும் இருக்கின்றன.அதிலொன்றுதான் மார்க்சியமா ? இல்லை .பாக்கி எல்லாம் ஒன்று . இது நேர் எதிர். இப்படிச் சொன்னால் குழப்பமாக இருக்கிறதா ? ஆயின், அதுதான் உண்மை .

 

லத்தின் அமெரிக்க பாதிரியார் ஒருவர்  சொன்னார் , “ நான் பசித்து வருவோர்க்கு தேவாலயத்தில் ரொட்டிகள் வழங்கினேன் . காருண்ய வள்ளல் என்றனர் .புகழ்ந்தனர் . விருதுகள் வந்தன . ‘அவர்களை, ஏன் ரொட்டி இல்லை?’ என்று கேள்வி எழுப்பச் சொன்னேன் . என்னை கம்யூனிஸ்டு என்றனர் . சிறையில் அடைத்தனர்.”

 

எல்லா மதங்களும் தத்துவங்களும் கட்சிகளும் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காவும் கண்ணீர் வடித்தன . உதவிக்கரம் நீட்டின . ஆனால் ஏழ்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்பதை மட்டும் சொல்ல மறுத்தன . இங்கேதான் மார்க்சியம் விதிவிலக்காய் எழுந்தது . “ தானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய் ; தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு செய்! “ என்றது மார்க்சியம்.

 

பசிப்பிணி போக்க அட்சய பாத்திரத்தை மணிமேகலை நமக்கு காட்டியது .பசியைப் பிணி என்று சொன்ன வகையில் நல்ல பார்வை . அனைவருக்கும் சோறு அளிக்க கனவு கண்டது மிக நன்று . ஆனால் அவை கனவாகவும் கற்பனையாகவுமே முடிந்து போயின .

 

ஏனைய தத்துவங்கள் வறுமையை வியாக்கியானம் செய்வதில் போட்டி போட்டன ; ஆனால் அதை மாற்றுவதற்கு முன்கை எடுத்தது மார்க்சியம் மட்டுமே !

 

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாக ஆட்சி அமைப்பு , கொள்கைப் பிரகடனங்கள் இருக்கலாம் . ஆயின் அங்கு நிலம் ,தொழிற்சாலை ,சுரங்கம் போன்ற உற்பத்தி சாதனங்கள் யாரிடம் இருக்கின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வி .

 

ஒரேவிதமான வாழ்க்கைச் சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்கள் திரளையே வர்க்கம் என்பர் . இது வெறும் ஏழை பணக்காரன் என்ற வகைப்பாட்டுக்குள் அடங்காதது . நிலம் ,தொழிற்சாலை , சுரங்கம் , பட்டறை , வணிகம் இவற்றில் அவர் உழைப்பு சார்ந்து அவருக்குரிய இடம் தீர்மானிக்கப்படுகிறது . இதன் மூலம் உருவாகும் சமூக உறவே வர்க்கம் எனலாம் . முதலாளி / தொழிலாளி , நிலப்பிரபு /விவசாயி , கார்ப்பரேட் /கூலியடிமை , வர்த்தகர் / கூலிக்காரன் இப்படி எதிரெதிர் வர்க்கங்களாக வடிவம் பெறும் .

 

ஒவ்வொரு கட்சியும் / தத்துவமும்  பொதுவாக மக்களுக்கானது எனப் பேசினாலும் இறுதியில் அது மக்களில் எந்த வர்க்க நலனைப் பாதுகாக்கப் போகிறது என்பதே கேள்வி . வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பது வெறும் உடல் பலம் சார்ந்தல்ல சொத்து சார்ந்தது . ஆக சொத்துடையவன் வகுக்கிற நீதி ,சட்டம் ,ஒழுக்கம் ,விழுமியம் ,அறம் எல்லாம் அவர்களின் சொத்துடைமையைப் பாதுகாக்கவே . மேல்தட்டு மக்களின் கண்ணசைவில் இயங்குபவையே . எல்லா கட்சிகளும் தத்துவங்களும் இதனைப் போதிக்கவே. பாதுகாக்கவே . இதற்கு நேர் எதிராய் கலகக் கொடி உயர்த்தி அடித்தட்டு    உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை மேம்படுத்த அதிகாரம் அவர்கள் கைக்கு வரவேண்டும் என வரையறுப்பது மார்க்சியம் மட்டுமே ! ஆகவே மெய்யான மாற்றம் மார்க்சிய வழியில் மட்டுமே என்கிறோம் .

 

அதுமட்டுமல்ல ஒவ்வொரு தத்துவமும் அல்லது கட்சியும் அல்லது ஆட்சியும் உடனடி நிவாரணம் என்பதோடு திருப்தி அடைந்து விடுகின்றன .ஆயின் அதன் வேர் எது என்பதை அடையாளம் காண அக்கறை காட்டுவதில்லை . மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் கம்யூனிஸ்டுகள் குடை பிடிப்பார்கள் எனக் கேலி பேசுவது உண்டு .ஆனால் உண்மை என்ன ? ஈரானில் யுத்தம் நடந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறும் .நாம் வாழும் இப்பூமிப்பந்தின் எந்த ஒரு மூலையில் நடக்கிற நல்லதுக்கும் கெட்டதுக்கும் உலகளாவிய தாக்கம் உண்டு . குண்டுச் சட்டிக்குள் மட்டும் குதிரை ஓட்டினால் போதும் என்கிற கட்சிகளுக்கு இது புரியாது .இதனை பேசமாட்டார்கள் .  உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அனைத்தையும் ஒருங்கிணைத்து அறிவியல் பூர்வமாக அலசி பிரச்சனைகளுக்கு விடை தேடுவது மார்க்சியம் மட்டுமே !

 

 “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.”  [ குறள் : 948 ]

இந்தக் குறளுக்கு விளக்கம் தேவை இல்லை .படித்ததும் புரியும் .

ஆயினும்  விளக்கத்தையும் அறிவோம் .கலைஞர் மு.கருணாநிதி எழுதிய விளக்கம் என்ன வெனில் “நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்யவேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்). அடைப்புக்குறிக்குள் எழுதியதும் அவரே !

 

அடைப்புக் குறிக்குள் அவர் எழுதியதும் சரியே . வறுமை ,வேலையின்மை ,ஏற்றதாழ்வு ,ஒடுக்குமுறை , பொருளாதார சமத்துவமின்மை ,சமூக சமத்துவமின்மை இப்படி சமூகத்தைப் பீடித்துள்ள அனைத்து நோய்களையும் அதற்கான காரணங்களையும் அதன் விஷ வேர்களையும் பழுதற விளக்கி அதற்கான தீர்வையும்யும் முன்மொழியும் ஒரே தத்துவம் மார்க்சியம் மட்டுமே . ஆகவேதான் மார்க்சியமே ஒரே தீர்வென உறுதியாகச் சொல்கிறோம்.

 

 

‘விலைவாசியைக் குறை’ என்பதை ஒரு பொருளாதாரக் கோரிக்கையாக மட்டும் பார்ப்பது ஓர் அரசியல் . அதனை அரசியல் பொருளாதாரக் கொள்கை சார்ந்த பிரச்சனையாக அணுகுவது மார்க்சியம் மட்டுமே !

 

அண்மையில் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வருவது குறித்த அறிவிப்பில் , ‘அவர் கல்வி ,வேலை பற்றி மட்டுமே பேசுவார் ; அரசியல் பேசமாட்டார்’ என அறிவித்தனர் . கல்வியும் வேலையும் பற்றி பேசுவது அரசியல் அல்லாமல் வேறென்ன ? மார்க்சியர் அதனை ஓர் அரசியல் போராட்டமாகவேப் பார்க்கின்றனர்.

 

அரசியல் ,சமூகம் ,பொருளாதாரம் , பண்பாடு , அறிவியல் என ஒவ்வொன்றையும் தனித்தனி துறைகளாக மட்டுமே பார்ப்பது ஓர் வகை தத்துவம் .கிட்டத்தட்ட எல்லா தத்துவ போக்குகளும் அவ்வழிதான் செல்லும் . எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தும் தேவையானதை தனித்து கூர்மைப் படுத்தியும் பார்க்கிற பார்வை மார்க்சியத்துக்கு மட்டுமே உரிய ஒன்று .அதுதான் சரியான தீர்வுக்கு இட்டுச் செல்லும்.

 

 

  

2000 ஆயிரத்தின் துவக்க தசாப்தங்களில் அமெரிக்காவில் நடந்த ‘வால் ஸ்ட்ரீட் போராட்டம்’ நினைவிருக்கிறதா ?  “ நாங்கள் 99 சதம் நீங்கள் 1 சதம்” என்பதே போராட்ட முழக்கம் . ஒரு சதம் கார்ப்பரேட் முதலாளிகள் லாபவெறிக்கு 99 சதம் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா என்பதுதான் கேள்வி . முதலாளித்துவம் எந்தனை வடிவம் எடுத்தாலும் பெயர் தரித்தாலும் அவை அனைத்தும் சுரண்டல் வர்க்க தத்துவங்களே ! கேடயங்களே ! உழைக்கும் மக்கள் வாளும் கேடயமும் மார்க்சியம் மட்டுமே !

 

அப்படியாயின் வேற்பல தத்துவ முகாம்களும் கட்சிகளும் ஏன் என்கிற கேள்வி இயல்பானது .  பல்வேறு வர்க்கங்களும் சமூக அடுக்குகளும் நிலவும் சமூகத்தில் அவரவர் வர்க்க நலன் சமூக அடுக்கின் நலன் இவற்றைப் பாதுகாக்க பல்வேறு முகாம்கள் தவிர்க்க முடியாதது . உழைக்கும் வர்க்க நலனைப் பாதுகாக்க உழைக்கும் வர்க்க ஆட்சி அதிகாரத்தை நிறுவ ஒரே வழி மார்க்சியம் மட்டுமே . அதே வேளை மார்க்சிஸ்டுகள் தனிக்காட்டு ராஜாவாக பயணிக்கும் சூழல் இல்லை .ஆகவேதான் இடது முன்னணி ,இடது ஜனநாய முன்னணி போன்ற பல படிக்கட்டுகளை மார்க்சிஸ்டுகள் வியூகமாக முன்னிறுத்துகின்றனர் . இதனை முன் கேள்வி பதிலில் பார்த்தோம். அதனை நினைவிற்கொள்ள வேண்டும் .

 

நிரந்தர மாற்றம் என கேள்வியாளர் குறிப்பிடுவதில் மாறுபடுகிறோம் . மாற்றம் என்பது தொடர் நிகழ்வு , உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி ,அறிவியல் முன்னேற்றம் இவைகளுக்கு ஏற்ப உழைக்கும் மக்கள் வாழ்வும் வளமும் மேம்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற திசை வழிதான் மார்க்சியம். தொடர் முன்னேற்றத்தின் முகவரிதான் மார்க்சியம்.

 

- சு.பொ.அகத்தியலிங்கம் .

03 /10 /26.

குறிப்பு : ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘கேள்வி -பதில்’ வெளிவரும் . நீங்களும் கேள்விகளை அனுப்பலாம். முந்தைய கேள்வி பதில்களை வாசிக்க  akatheee.blogspot.com