ஞான பீட விருதும் விவாதங்களும் …

Posted by அகத்தீ Labels:

 



ஞான பீட விருதும் விவாதங்களும் …

 

விருதுகள் குறித்த விமர்சனம் எல்லா காலகட்டத்திலும் உண்டு . தாகூருக்கு நோபல் பரிசு கொடுத்த போது பாரதியார் வருந்தியதாகச் செய்தி உண்டு .

 

சமாதானத்துக்கான நோபல் பரிசு  வெனிசுலாவைச் சார்ந்த  மரியா கொரீனா மஹாடோவுக்கு இவ்வாண்டு வழங்கப்பட்ட போது உலகே காறித்துப்பியது ; அவர் அப்பரிசை டிரம்புக்கு அர்ப்பணித்தபோது அது கேவலப்பட்டுப் போனது .

 

பொதுவாய் அண்மைக்காலங்களில் விருதுகள் வழங்கப்படுவதில்லை ; வாங்கப்படுகின்றன என்பது புதிய செய்தி அல்ல .

 

விருதா எனில் குமரி மாவட்ட வழக்கில் வீணான என்ற பொருள் . நிற்க !

 

வைரமுத்துக்கு ஞான பீடம் கொடுத்ததும் கூச்சல் அதிகம் கேட்கிறது .

 

ஜெயமோகனின் வன்மம் கொப்பளிக்கும் எதிர்வினை மட்டுமல்ல பல்வேறு தொணிகளில் வெளிப்படும் எதிர்குரல்களும் ஆச்சரியப்படுத்தவில்லை . ஆதரவும் எதிர்ப்பும் எப்போதும் இருக்கத்தானே செய்யும் .

 

வைரமுத்துவுக்கு எதிராக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன

 

1] அவரின் இலக்கியத் தரம்

2] அவரின் தனி ஒழுக்கம்

 

பொதுவாக ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் . இவ்விருது அரசு தரும் விருதல்ல ; தனியார் முதலாளி தரும் விருதே . எல்லா விருதுக்குப் பின்னாலும் ஏதேனும் ஒரு கதை இருக்கும் . ஒரு கை இருக்கும் .

 

எம் தமிழ்மொழிக்கு இவ்விருது கிடைத்தால் மகிழாமல் இருக்க முடியுமா ? இது தமிழுக்கே அவமானம் என ஜெயமோகன் சொல்வதெல்லாம் எரிச்சலின் உச்சம் . இந்த ஜெயமோகனுக்கே கொடுத்திருக்கலாம் என சேலத்திலிருந்து ஒரு சிபாரிசும் பார்த்தேன் . எதிர் எதிர் முகாம்களின் ஒற்றுமையை அதில் பார்த்தேன் .

 

1 ] வைரமுத்து குறித்து அருணன் ஒரு நூலே எழுதி இருக்கிறார் .அதில் நான் உடன்படும் இடமும் உண்டு ; முரண்படும் இடமும் உண்டு . இலக்கிய ரசனையில் எல்லோரோடும் எல்லாவற்றோடும் எல்லோரும் உடன்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லைதான்

வைரமுத்துவின் ‘ தண்ணீர் தேசம்’ நாவலை கடுமையாக விமர்சித்தேன் . அதே வேளை ‘ கள்ளிக்காட்டு இதிகாசம்’ , ‘ கருவாச்சி காவியம் ‘ இரண்டையும் பாராட்டினேன் . ‘ மூன்றாம் உலக யுத்தம்’ அதன் கரு நன்று ; ஆயின் அதன் செய் நேர்த்தி கொஞ்சம் பலவீனம் சுட்டினேன் .

 

அவரது கவிதைகளில் மெச்சத்தகுந்தவையும் உண்டு ; அல்லாதவையும் உண்டு . அவர் சினிமாப் பாடலும் அப்படித்தான் உச்சம் தொட்டதும் உண்டு . பள்ளத்தில் குப்புற விழுந்ததும் உண்டு .

 

அவரின் ’ தமிழாற்றுப்படை’ [ இலக்கிய உரைகள் ] ,’ வள்ளுவர் மறை ; வைரமுத்து உரை’ உள்ளிட்ட நூல்களை வாசித்தேன் .தீர்ப்பு சொல்ல நான் தமிழாய்ந்த அறிஞன் அல்ல .

 

யாராயினும் எழுதுகிற எல்லாம் வெற்றிகரமானவை ; தரமானவை எனச் சொல்லிவிட முடியாது . எதிர்பார்க்கவும் முடியாது .

 

வைரமுத்துவின் பங்களிப்பில் பாராட்டத்தக்கவையும் உண்டு . குப்பையில் வீச வேண்டியவையும் உண்டு .

 

சமுத்திரத்துக்கு சாகித்திய அகடாமி கொடுத்த போது , இங்கும் ரிசர்வேஷனா என கொந்தளித்த படைப்புலகப் பிரம்மாக்கள் உண்டு ; அப்போது அவர் சொன்னார் , “ நீங்கள் எல்லாவற்றையும் பூணூலால் அளக்கிறீர்கள் ; நான் பனைநாரால் அளக்கிறேன்.” கொஞ்சம் காரநெடி வீசும் விமர்சனம்தான் .ஆயினும் அதன் அடிநாதம் ஓர் சமூகக் கொந்தளிப்பு என்பதைப் புரிய வேண்டும் .

 

இப்போது இதை நினைவூட்டும் தேவை வந்ததால் சொல்கிறேன் .மேலாண்மையை , சின்னப்பபாரதியை ,சமுத்திரத்தை தங்கள் தொகுப்புப் பட்டியலில் சேர்க்காத தமுஎகச தோழர்களும் உண்டு . இலக்கிய அளவு கோல் ஆளுக்கு ஆள் காலத்துக்கு காலம் மாறுபடும்.சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்துக்கு விருது வழங்கிய போது கொந்தளித்த எழுத்தாளர்கள் உண்டே !மேலாண்மைக்கு விருது கொடுத்த போது ஜீரணிக்க முடியாமல் திணறியவர்களைப் பார்த்திருக்கிறேன் .எங்கும் அகநிலைப் பார்வை உரத்து ஒலிக்கிறது என்ன செய்ய ?

 

தமிழுக்கு கிடைத்தது என்று மகிழவா ? ஏண்டா தமிழுக்குக் கொடுத்தாய் என அழவா ? தமிழ் இலக்கிய உலகப் போக்கு கவலையாகத்தான் இருக்கிறது.

 

2] தனிநபர் ஒழுக்கம் என கருணாநிதியை ,வைரமுத்துவை சதா துவைத்து எடுக்கும் மேட்டிமை மனிதர்கள் எம்ஜிஆர் ,ஜெயலலிதா ,வாஜ்பாய் என நீளும் பட்டியல் குறித்து கனத்த மவுனம் காப்பார் . ஜெயகாந்தனும் பாரதியும் கஞ்சா புகையும் ஊரறிந்த செய்தி . கோப்பையில் குடியிருந்தவர் என கண்ணதாசனை விமர்சிக்கவில்லையா ? எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் அகவாழ்வில் சறுக்கல்களும் பிழைகளும் உண்டு .வெளிச்சத்திற்கு வந்தவை கொஞ்சம் . வராதவை மலையளவு . எம் ஆர் ராதா , என் எஸ் கே இருவரும் சிறை மீண்டவரே . அவர்களின் கலைப் பங்களிப்பு அதனால் குறைத்துப் பார்க்கப்படுவதில்லை .சின்மயி சொன்ன புகார் மீது வழக்கோ விசாரணையோ நடத்தி தண்டனை வழங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்கவே முடியாது .சின்மயி புகார் சொன்ன அனைவர் மீதும் [ ஆம் . பிராமணர்கள் சங்கத் தலைவர் உட்பட] விசாரிக்க முதலில் முயற்சி எடுங்கள் . அதை விட்டுவிட்டு எப்போதும் அதையே பேசிக்கொண்டே இருப்பது தனிநபர் வெறுப்பு என்றே கொள்ள வேண்டும் .

 

குறை சொல்கிறவர்களின் இரண்டு வாதமும் அப்படியே ஏற்கத்தக்கதல்ல . அதே நேரம் எல்லா விருதுகளும் வாங்கப்படுவையே என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை .

 

பொதுவாய் எல்லா விருதுகளும் விருதாப் போனவர்களுக்கே ! இதுதான் இன்றைய பொதுவிதி!

 எம் தமிழுக்கு ஞானபீடம் கிடைத்ததில்  மகிழ்ச்சி . வைரமுத்துவைப் பாராட்டுகிறோம். அவ்வளவுதான்.

சுபொஅ.

16 /03 /26 .


0 comments :

Post a Comment