மலர்களின் கொண்டாட்டம்..

Posted by அகத்தீ Labels:

 





மலர்களின் கொண்டாட்டம்..

 

 [ சென்ற ஆண்டு செர்ரி ப்ளாசம் [ cherry  blossom ] கொண்டாட்டத்தின் போது அமெரிக்காவில் பேரன் பேத்தியோடு இருந்தேன் . இந்த ஆண்டு அதனை நினைவூட்டி கான்வாஸில் Acrylic paint cherry blossom வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பேரன் முகில் . பழைய நினைவும் புதிய புகைப்படமுமாய் இங்கு …]

 

புகுந்த வீட்டில் கொண்டாடப்படும் மருமகள்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

 

ஆண்டுதோறும் அலைஅலையாய் திரண்டு ஆர்ப்பரிக்கும் அதிசயத்தை தரிசித்து இருக்கிறீர்களா ?

 

மருமகள்கள் கூட்டம் ஒருப்போல் புன்னகைத்து மெல்லிய ஊதா கலந்த வெள்ளுடையோ மெல்லிய இளம் சிவப்பு கலந்த வெள்ளுடையோ பூண்டு ஒயிலாக ஆடுவதை கண்டு ரசிக்காத கண்கள் இருந்தென்னவோ !

 

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் ஆண்டுதோறும் வசந்த கால துவக்கத்தில் ( மார்ச் இறுதி முதல் இரண்டு வாரங்கள் ) கொண்டாடப்படும் " மலர்களின் புன்னகைத் திருவிழா" -  "செர்ரி ப்ளாசம் (cherry blossom ) திருவிழாவில்" தான் இந்த அற்புதம்

 

செர்ரி மலர் கூட்டம் அமெரிக்க மண்ணில் இயல்பாய் பிறந்ததல்ல.

 

வந்தேறியதுதான் ; குடியேற்ற அமெரிக்க மண்ணைப் போல..

 

பூர்வகுடிகளை அழித்து உரிமைகொண்ட இரத்த கறை படிந்த பாரம்பரியம் இந்த மண்ணுக்குத்தான் செர்ரி மலருக்கல்ல..

 

1912 ல்  ஆம் முதல் உலகப்போருக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு நட்பு கரத்தோடு ஜப்பானில் இருந்து வந்ததே இம்மலர் கூட்டம் . இம்மலரின் பூரவீகம் சீனா எனபது அதன் சொந்தக்கதை.இந்த மலர் காகித மலர் போல் மெனமையாக இருக்கும். மல்லிகை முல்லை போல் வாசம் கிடையாது.

 

ஜப்பான தலைநகர் டோக்கியோ மேயர் ஓகியோ முவாயிரம் செரி மலர் செடிக் கனறுகளோடும் சர்வதேச சகோதரத்துவச் செய்தியோடும் இந்த மண்ணுக்கு வந்தார்.

 

அன்று வேர்பிடித்த மலர்க்கூட்டம் .இன்றும் கொண்டாடப்படுகிறதே வரலாற்று அற்புதம். 1935 ல் தான் அரசின் அதிகாரபூர்வ கொண்டாட்டமானது.

 

 

 

இடையில் இரண்டாம் உலகப்போரின் போது கொண்டாட்டம் இல்லாது போனது.

 

மதப்பூச்சோ சடங்குகளின் தொகுப்போ இல்லாத ஜனநாயகத் திருவிழா. எல்லோருக்குமாக புன்னகையை வாரி இறைக்கும் திருவிழா ! ஊட்டி மலர் காட்சியோடு ஒப்பிடலாம். ஆனால் அங்கு போவோரும் கோவில்கள் தேடுவது நம் ஊர். ஸ்பெஷல்.

 

ஜோடிகளாய் தம்பதிகளாய் குடும்பமாய் நட்பாய் இளையோர் நடுத்தரவயதினர் முதியோர் குடும்ப அங்கமாகிவிட்ட நாய்கள் மகிழ்வோடு கூடும் நாளே செர்ரி ப்ளாசம்.

 

ஆடிப்பாடி ,காற்றாடி விட்டு ,பாய் விரித்தமர்ந்து ,கொண்டுவந்த உணவைக் கூடி உண்டு இன்பச் சிற்றுலா ( PICNIC)வென மகிழ்வே முந்தி நிற்கும்.

 

ஓவியம் வரைவோர் ஓர்புறம். புகைப்படம் எடுக்காதோர் விழாவுக்கு வராதாரே என்பது எழுதா இலக்கணம்.

 

சடங்குகளில் சம்பிரதாயங்களில்  கொண்டாட்டங்களை தொலைத்த இந்தியன் தமிழன் மலர்களின் புன்னகைக் கொண்டாட்டத்தில் மனதைப் பறிகொடுத்தேன்.

 

30/03/25 எங்கள் வாழ்வில் இனிய நினைவலைகள்...

 

சுபொஅ.

31/03/25

வர்ஜீனியா.

 

 

 


 


0 comments :

Post a Comment