யோகா பில்டப்பும் மரக்கறி உணவு கித்தாப்பும் .

Posted by அகத்தீ Labels:

 

 


யோகா பில்டப்பும் மரக்கறி உணவு கித்தாப்பும் .

 

ழுபதுகள் ,எண்பதுகளில் நங்கநல்லூர் இலக்கிய வட்டத்தில் நண்பரான சிலபேர் இன்னும் என் தொடர்பில் இருக்கின்றனர் .எதிரெதிர் சித்தாந்த முகாம்களில் இருந்த போதும் ; அவ்வப்போது  மோதிக்கொண்ட போதும் அது எம் தனிப்பட்ட பகையாய் மாறவில்லை .அப்படிப்பட்ட ஓர் நண்பர் சில தினங்கள் முன்பு அலைபேசியில் அழைத்தார் .

 

 “ என்ன தோழா ! நான் காலையில் புள் மீல்ஸ் சாப்பிட்டுவிடுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் . மாலை மூன்று மணிக்கு ஏதாவது இட்லி /தோசை தேடி அலைகிறேன் .எங்கும் பீப் பிரியாணியும் சிக்கன் பிரியாணியும்தான் நிறைந்து கிடக்கிறது . சைவ ஹோட்டலைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன் . இனி என் போல் சைவ பட்சிணிகள் அருகிவிடு வார்களோ ? அபூர்வ ஜந்துவாகிவிடுவார்களோ ?” என அங்கலாய்த்தார்.

 

 “ அதுவும் உண்மை ‘அக்கிரஹார ஹோட்டல் ; சுத்த சைவம்’ [ சென்னையில் ஓர் ஹோட்டலின் பெயர்] என இயங்குவதையும் பார்க்கிறோம். ஏ2பி போன்ற ஹோட்டல் ஏழைக்கு அல்ல என்றாகிவிட்டது . கையேந்தி பவன்கள் ,சாலையோர உணவங்கள், இட்லி கடைகள் , தள்ளுவண்டி பீப் பிரியாணி ஸ்டால் ,சிக்கன் மட்டன் பிரியாணிக் கடைகள். இவை எல்லாம் இல்லாவிடில் சாதாரண மக்கள் திண்டாடி விடுவார்களே ?” என்றேன்.

 

“அதுவும் சரிதான் .. சைவம் அசைவம் இரண்டிலும் மலிவு விலை உணவங்களும் உண்டு ; மணி [பணம்] இருப்பவருக்கான உணவகங்களும் உண்டு . இதுதான் இந்தியா…” என்றார் .

 

 “ ஆமாம் .. ஆனால் சோறு இல்லைன்னு யாரும் வருந்த வேண்டாம் .. அப்படி பிரச்சனையே இல்லை … சுவிக்கில ஆர்டர் பண்ணினா எங்கிருந்தாலும் எந்த மூலையில் இருந்தாலும் உணவு வரும்னு பொறுப்பற்று பேசின ஸ்மிருதி ராணி  நம்ம மந்திரி…” இதை பேசி முடிக்கும் முன் நண்பர் குறுக்கே பாய்ந்தார் , “ அரசியல் வேண்டாம் பிளீஸ் … சைவ உணவு பழக்கம் அருகிவருகிறதே ..!!!” என புறப்பட்ட இடத்திற்கே வந்தார் .

 

நான் சொன்னேன் , “ இந்தியாவில் புலால் உண்பவரே அதிகம் , அதிலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு ,கேரளாவில் முக்கால் பங்குக்கு மேல் அவங்கதான் …இங்கும் வீட்டில் சைவம் வெளியில் அசைவம் என்கிற உத்திராட்சப் பூனைகள் அதிகமாகிறது.”

 

 “ அது …அது … மெய்தான் ஆனால்… “ என இழுத்தார் .

 

 “சைவம் திணிக்கப்படுகிறது . பீப் எதிர்க்கப்படுகிறது .விளைவு பீப் உண்போர் சதவிகிதம் அதிகரிக்கிறது . சைவம் பெருமைக்கு பீற்றுவதாக ஒரு புறம் ;மறுபுறம் நடைமுறையில் புலால் ஈர்ப்பு …”

 

அவர் வழக்கம் போல் யோகா ,தியானம் எனத் தாவினார் ; உரையாடலின் சாரம் .

 

 “பள்ளி சிறார்கள் ,பணிக்கு செல்லும், இளம்பெண்கள் , ஆண்கள் என கணிசமானோர் கையில் கக்கத்தில் யோகா மேட் [ yoga mat ] கிடுக்கியபடி திரிந்ததை பெங்களூரில் 2015 காலகட்டம் முதல் பார்த்திருக்கிறேன் . எங்கள் அடுக்ககத்தில் இல்லத்தரசிகளுக்கு யோகா பயிற்சி என ஒரே பில்டப் .எங்கள் அடுக்ககம் மட்டுமல்ல வளாக குடியிருப்புகளில் [ gated community ] எல்லாம் இதே நிலைதான் . மரக்கறி உணவு அதுதான் சைவ உணவே ஆகச் சிறந்தது என ஆரோக்கிய உடுக்கையடி வேறு.”என்றேன்.

 

 “ அது ஒரு நல்ல முன்னெடுப்பு ஆனால் அமல் படுத்தும் போது சில பிழைகள் நேர்ந்து இருக்கலாம் …” என்று இழுத்தார் சோகமான குரலில் .

 

 “ பெரும்பாலான மத்தியதர வீடுகளில் டிவி சானல்களில் யோகா பயிற்சிதான் காலை நேர நிகழ்வானது . சைவ உணவு போதனை ஃபுள் கியரில்  முடுக்கிவிடப்பட்டது .யோகா செய்தால் மருத்துவ செலவே கிடையாது .சர்க்கரை ,இரத்தக் கொதிப்பு அண்டாது .சிறுநீரக நோய் ,இதய நோய் ,வயிற்று நோய் ,சுவாச நோய் ,புற்று நோய் வரவே வராது . தன்னம்பிக்கை ஓங்கும் ..கோபமே வராது .ஆத்திரம் பொங்காது ,கெட்ட எண்ணம் தோன்றாது. பாசிட்டிவ் என்ர்ஜி கிடைக்கும் . வாழ்வில் இன்பம் பொங்கும் . அப்பப்பா …. அவிழ்த்துவிட்ட ரீல்கள் இப்போது அறுந்து தொங்குகின்றன .” என மீண்டும் நான் யதார்த்தத்தை விவரிக்க நண்பர் கடுப்பானார் .

 

 “யோகா மேட்”கள் பெரும்பாலான வீடுகளில் பரணுக்கு போய்விட்டன . சிறார்கள் ,இளம்பெண்கள் ,ஆண்களுக்கு யோகா மீதான ஈர்ப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன் அதனால் யோகாவே தவறு என சொல்ல முடியுமா ?” எனக் கேட்டார் நண்பர் .

 

 “யோகா மூச்சு பயிற்சி . அது உடற்பயிற்சியின் ஒரு கூறு. என்பதுவரை சரி ! அந்தவகையில் அதற்கு ஓர் இடம் என்பதும் சரி ஆயின் ,அதற்கும் மேல் அதன் மீது சுமத்தப்பட்ட தெய்வீக , புனித , சர்வரோக நிவாரணி போன்ற பில்டப்புகள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கின்றன . நொறுக்கப்பட வேண்டும் . ! ஏன்  நீச்சல்கூட சிறந்த மூச்சுப் பயிற்சியும் உடற்பயிற்சியும் ஆகுமே !.. அதைப் பேசலாமே….”

 

நண்பன் சொன்னான் , “யோகா ,தியானம் ஓவர் பில்டப்பால் மதிப்பிழந்து கொண்டிருக்கிறது .சைவ கித்தாப்பு முகமூடி கழன்று விழுந்து கொண்டிருக்கிறது .நல்லவற்றைகூட ஓவர் பில்டப்பு கெடுத்துவிடும்…” என அவர் பார்வையில் சமாதானம் சொன்னார் .

 

 “கோபம் ,வன்மம் ,வெறுப்பு அரசியல் ,வன்புணர்வு ,கூட்டுவன்புணர்வு ,கும்பல்கொலை , சகிப்பின்மை போன்ற போன்ற அனைத்து மனிதவிரோத கொடுஞ்செயல்களிலும் கடந்த பத்து ஆண்டுகளில் ஈடுபடுவோர் யாரென பட்டியலிட்டால்  “யோகா ,தியானம் ,பக்தி,சைவ உணவு ” என வாய்ப்பறை கொட்டுவோர்  ஈடுபட்டுள்ளதையும்  அவதானிக்கலாம். மகாத்மா படுகொலை தொடங்கி இன்றுவரை அதுவே மெய் . ஆக யோகாவோ தியானமோ பக்தியோ சைவ உணவோ ஒழுக்கத்தை மனிதத்தை நிலைநாட்டிவிடாது . மனிதம் போற்றும் சமத்துவம் ,சமூகநீதி ,பாலின பேதமற்ற வாழ்க்கைமுறை போன்ற உயர் விழுமியங்களும் ; சமூகத்தை வாழ்வைக் குறித்த அறிவியல் பார்வையும் மக்களின் மூளையில் விதைக்கப்படும் போது மட்டுமே நல்ல பயிர் வளரும்.”

 

நான் பேசி முடிக்கும் முன் டக்கென நண்பர் அடுத்ததுக்குத் தாவினார் .

 

 பேலியோ டயட் உணவுகள் [ Paleo Diet ] , மரச் செக்கு எண்ணை , ஆர்கானிக் புட்ஸ்  இப்படியெல்லாம் பேசப்படுபவை நல்லது இல்லையா ? இவைகூட அந்தந்த காலத்தி வந்து காணாமல் போகும் பேஷன்களாகி விட்டனவே . உயர் மத்தியதர டிரெண்டாகிவிட்டதே… ஏன் ?”இதுவும் நண்பர் வினாதான் .

 

 

 “ முதலில் போலி அறிவியல் மூலம் தூக்கி நிறுத்தப்படும் எதுவும் நிலைக்க முடியாது . வாட்ஸ் அப் யூனிவர்சிட்டியில் பிஎச்டி வாங்கினாலும் வாழ்க்கை யதார்த்தத்தோடு அது நெருங்கவே இல்லை . மிகப் பெரிய மக்கள் தொகைக்கு மிகக்குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும் எல்லோராலும் பின்பற்றத்தக்க உணவும் உடையும் வீடும் தருவது எப்படி ? இதுவே ஆதாரமான கேள்வி .இதனை விடுத்து தாவிதாவிச் செல்லும் எதுவும் வேலைக்கு ஆகாது .” என்றேன்.

 

” நீங்கள் சொல்வது சரிதான் … பில்டிங் ஸ்டிராங் பேஸ்மட்டம் வீக்ன்னா எப்படி தாக்குப் பிடிக்கும் …? என்னுள்ளும் இந்த கேள்வி இப்போது எழத்தான் செய்கிறது …” என்றவர் மீண்டும் தாவினார்  ; “ கோடிக்கோடியாய் கொட்டி யழுதும் ஸ்வச்ச பாரத் ,தூய்மைத் திட்டம் மகா தோல்வியாகிக் கொண்டிருக்கிறதே … இதிலாவது மக்கள் விழிப்பற்று இருக்கிறார்கள் என ஒப்புக் கொள்வீர்களா ?” என முடித்தார் .

 

இக்கேள்வியை வைத்து நாங்கள் உரையாடியது பின்னர் …

 

சுபொஅ.

31/5/2023.

 

[ தனிப்பட்ட உரையாடலை கட்டுரை ஆக்குதல் நாகரீகம் அல்ல ; நானும் அறிவேன் .அவரிடம் சொல்லிவிட்டு பேச்சில் பலவற்றை எடிட் செய்தே பதிகிறேன் .அவருக்கு ஒரு நாள் முன்பே அனுப்பிவிட்டேன் . அவரிடம் நோ அப்சக்‌ஷன் சர்ட்டிபிகெட் வாங்கிவிட்டேன்.]

 

 

 

 


யானை அழகாகத்தான் இருக்கிறது…

Posted by அகத்தீ Labels:

 


யானை அழகாகத்தான் இருக்கிறது…

 

யானை அழகாகத்தான் இருக்கிறது

அதன் காது இன்னும்

கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமோ ?

 

யானை அழகாகத்தான் இருக்கிறது

ஆனாலும் அதன் கால்கள் இன்னும்

உயரமாக இருந்திருக்கலாமோ ?

 

யானை அழகாகத்தான் இருக்கிறது

ஆயினும் அதன் கொம்புகள் இன்னும்

கூர்மையாக இருந்திருக்கலாமோ ?

 

யானை அழகாகத்தான் இருக்கிறது

அதன் தும்பிக்கை இன்னும்

பெரிதாக இருந்திருக்கலாமோ ?

 

யானை வலுவாகத்தான் இருக்கிறது

ஆனால் அது புலால் உண்ணுமானால்

இன்னும் வலுவாய் இருந்திருக்குமோ ?

 

இவ்வளவு பெரிய உடலை வைத்துக்கொண்டு

அவசரத்துக்கு ஓடி தப்பிக்க முடியுமோ ?

பூனைபோலவே இருந்திருக்கலாமோ ?

 

யானை பிழிறியபடியே சொன்னது !

“சரிதாம் ! மனிதா! உனக்கு கொஞ்சம்

மூளையும் இதயமும் இருந்திருக்கலாமோ ?”

 

 

சுபொஅ.

24/5/2023.

 

 


மின்னலும் இடியும்

Posted by அகத்தீ Labels:

 


மின்னலும் இடியும்

வானத்தைக் கிழித்துப் போடுகிறது

மழை கொட்டுகிறது.

 

கிழித்த வானத்தை

டக்கென யார் தைத்தது ?

மழை சட்டென நிற்கிறது .

 

மீண்டும் இதே விளையாட்டு

கிழிப்பதும் தைப்பதுமாய்

 

மண்டையைப் பிளப்பதுபோல்

வெடிக்கிறது இடி

கண்ணை மூடவைக்கிறது மின்னல்

பயமில்லைதான்…

 

ஆனால்,

இடி வெடிக்கும் போது

ஓடிவந்து கட்டிப்பிடிக்கும்

பேரன் பேத்திகள்

வெளிநாட்டில் இருக்கும் போது

இந்த தனிமை

பயமுறுத்துகிறதோ ?

 

 

நான் இணையரைப் பார்க்கிறேன்

அவள் என்னைப் பார்க்கிறாள் !

 

சு.பொ.அ.

22/5/2023 இரவு 7.30 மணி,


செல்லாதப்பா சொல்லாது

Posted by அகத்தீ Labels:

 

செல்லாதப்பா சொல்லாது

 

செல்லாதப்பா சொல்லாது – நீ

சொன்னது எதுவும் செல்லாது

அடிச்ச நோட்டும் செல்லாது – நீ

அளந்த பொய்களும் செல்லாது

 

                                                   [ செல்லாதப்பா..]

 

போட்டோஷாப்பும் செல்லாது –இனி நீ

புளுகிய எதுவும் செல்லாது

பொய்யில் கட்டிய மணல் வீடு – இங்கே

பொக்கென உதிருது நீ பாரு !

 

                                                   [ செல்லாதப்பா..]

 

பரம்பரைச் சொத்தை விற்றழிக்கும் – நீ  

ஒரு தறுதலை  என்றே ஊர் சொல்லும்

வளர்ச்சி என்பது  கனவாச்சு –  அது நீ

வாயில் சுட்ட வடையாச்சு

 

                                                   [ செல்லாதப்பா..]

 

கடவுள் பெயரை சொன்னதெல்லாம் – நீ

எங்கள் கழுத்த அறுக்க செஞ்சசதி … [ ஆமாம் கழுத்தை அறுக்க செஞ்சசதி]

அடுத்தவீட்டு பாயை சிலுவையை பகை யென்றாய்

அம்பானி அதானி களவாணி கூட்டாளி நீயானாய்

 

                                                   [ செல்லாதப்பா..]

 

சு.பொ.அ.

21/5/2023.

 

வீட்டை விட்டு வெளியேறிய ஆணும் பெண்ணும்…

Posted by அகத்தீ Labels:

 

 


வீட்டை விட்டு வெளியேறிய ஆணும் பெண்ணும்…

 

“ஆம்பள வீட்டைவிட்டு சொல்லிக்காம வெளியேறிட்டானா அவன காணாமல் போயிட்டான்னு சொல்லுற இந்த ஒலகம்  ,அதே பொம்பளப்புள்ள  தாங்க முடியாத கஷ்டத்துக்கு வீட்டைவிட்டு வெளியேறினா .அவ அடுத்தவனோடு ஓடிப்போயிட்டான்னு கூசாம சொல்லும் ,நீ கானாமப் போனதற்கு உம் பொண்டாட்டி சொந்தம் பந்தம் எல்லாம் பதறியடிச்சு உன்னை தேடிக்கிட்டு இருக்கும் .அதே உங்க அம்மா மாதிரி பொம்பள காணமல் போனா எவங்கோடயோ ஓடிப் போயிட்டான்னு அவுசேரி பட்டம் கட்டிக்கிட்டு ,வீட்டுக் கதவ இழுத்து சாத்திக்கும்”

 

பசுபதியின் சொற்கள் கோவிந்துக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்தியது . இதுதான் இந்நாவலில் ஒன் லைன் ஸ்டோரியும் செய்தியும் ஆகும்.

 

பொதுவாக பாலியல் தொழில் செய்யும் பெண்களையும் அவர்களை வைத்து தொழில் செய்யும் பெண்ணையும் எடுபிடிகளையும் வில்லத்தனமாகவே சித்தரித்து குவிக்கப்பட்டுள்ள கதைகள் ,சினிமாக்கள் நிறையப் பாத்திருப்போம்.

 

 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர்தான் பசுபதி எனும் பெண் பாத்திரம் ;ஆயின் அவரின் அன்பும் அரவணைப்பும் மனிதமும் கம்பீரமும் இந்நாவலின் உயிர்சரடு . அவளும்கூட வஞ்சிக்கப்பட்டவள்தான் .ஜட்கா வண்டியோட்டும் சுப்பு அடித்தட்டு மனிதனின் இயல்பான மனிதம் , சந்தர்ப்பச் சூழலால் தவறு செய்துவிட்டு கணவன் கோவிந்து தொலைந்து போனதும் துடிக்கிற சசியின் இதயம் , சசியின் தந்தை சுந்தரம் – ரஹீம் நட்பின் ஆழம் ,பாலியல் தொழிலாளியாய் வரும் நேத்ரா ,விடிவெள்ளி ,பானுமதி போன்றோர், பசுபதியின் வலது கையாய் இருக்கும் திருநங்கை ராசாத்தி ஒவ்வொருவருக்குள்ளும் தளும்பும் அன்பின் அலைகள் என நாவல் நெடுக கண்ணீரின் வெப்பத்தோடு கைகுலுக்கும் மாட்சியை எப்படிச் செல்வது ?

 

ஊருக்கெல்லாம் தமுக்கடிக்கும் காய்கறி விற்கும் கிழவி பாத்திரமும் , குறிப்பறிந்து அவதூறு பரவாமல் தடுக்கும் பாத்திமாவும் இயல்பான சித்தரிப்புகள் . ஒவ்வொரு பாத்திரமும் கிராமங்களில் காணக்கிடைப்பதின் மாதிரியே !

 

 “ஏண்ணே லட்சிமிய [குதிரை பேரு ] எங்கிருந்து பிடிச்சிட்டு வந்தீங்க ….ஒண்ணுமில்லேண்ணே ,பொட்டக் குதிரைக்கு பதிலா ஆம்பளக் குதிரைய வாங்கியிருந்தா இன்னும் வேகமா ஓடுமில்ல ..” என கோவிந்து கேட்ட கேள்விக்கு சுப்பு சொன்ன பதிலும் “ ஏண்ணே எங்கள மாதிரி  குதிரையெல்லாம் ஜட்கா வண்டிக்கு ஆகாதாண்ணே ..” என்கிற ராசாத்தி கேள்வியும் மிகவும் நுட்பமானது .

 

எண்பதுகளில் கூட திண்டுக்கல் ,பழநி  எல்லாம் ஜட்கா உண்டு. நானும் பயணித்த அனுபவம் உண்டு .ஜட்காத் தொழிலாளி போராட்டம்கூட நாவலில் வந்து போகிறது .

 

வழக்கமாக ஆண்கள் ஓடிப்போய் சாமியாராய் ,கிரிமினலாய் மாறும் காட்சிகள் பார்த்திருக்கோம் ,படித்திருக்கோம் ; பெண்களும் வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் ஓட நேரிடுகிறது .அதன் பின் என்னவாகுமென்பதையும் நாவல் பேசுகிறது .

 

பழநியின் இன்னொரு பக்கத்தை இந்நாவல் வரைந்து காட்டுகிறது .பொதுவாய் பெருங்கோயில்கள் , வழிப்பாட்டிடங்கள் ,சுற்றுலாத் தலங்கள் போன்ற மையங்களில் உபதொழிலாக பாலியல் தொழில் நிலைத்து இருக்கும் .அதன் பின் ஆயிரம் ஆயிரம் கண்ணீர் கதைகள் இருக்கும் . அதிதிகள் எங்கும் இருப்பர் .

 

அவர்களின் வலியை   காயத்தை பெண்களின் பக்கம் நின்று சித்தரிக்கிறது இந்நாவல் .

 

இடதுசாரி இயக்க களச்செயல்பாட்டாளாராக அறியப்பட்ட வரத .இராஜமாணிக்கத்தின் முதல் நாவல் எனினும், தேர்ந்த கதை சொல்லியாகவும் , நுட்பமான சமூகபார்வை கொண்டவராகவும் வெளிப்பட்டிருக்கிறார் .வாழ்த்துகள். தொடர்க உங்கள் எழுத்துப் பணி !

 

 “நாவலில் பெரிதாக குற்றம் குறைகள் இல்லை. சில பாத்திரங்களுக்கு , குறிப்பாக குதிரைவண்டிக்காரர் சுப்பு பாத்திரத்திற்கு சில இடங்களில் மரியாதை விகுதியும், சில இடங்களில் அன் விகுதியும் மாறி மாறி வருவதைத் தவிர்த்திருக்கலாம். பழநியின் சித்த வைத்தியர்கள்புகழ்பெற்ற திரையரங்குகள், பிரபல விபூதி, பஞ்சாமிர்தக் கடைகள் பற்றி எல்லாம் ஆங்காங்கே சொல்லியிருந்தால் இன்னும சிறப்பாக இருந்திருக்கும்.” என சுப்பாராவ் ஓர் விமர்சனத்தில் சொல்லியிருப்பதையும் இராஜமாணிக்கம் கவனத்தில் கொள்க !

 

அதிதி [ நாவல் ] ,ஆசிரியர் : வரத .இராஜமாணிக்கம் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , பக் : 192 ,விலை : ரூ 180/

தொடர்புக்கு : 044 -24332924 /24332424 / 8778073949

E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

 

 

சுபொஅ.

7/5/2023.

‘அவர்களுக்கோ’

Posted by அகத்தீ Labels:

 

ராமர்

அனுமார்

சிவன்

முருகன்

துர்க்கா

இவர்களெல்லாம் யார் ?

 

நீங்கள் கடவுளென

கைக்கூப்புகிறீர்கள்…

 

 ‘அவர்களுக்கோ’

தேர்தலில் வாக்கு சேகரிக்க

கலவரம் செய்ய

கொலை செய்ய

ஊரை ஏமாற்ற

 வேறென்ன சொல்ல…

 

சுபொஅ.

3/5/2023.