வீட்டை விட்டு வெளியேறிய ஆணும் பெண்ணும்…
“ஆம்பள வீட்டைவிட்டு
சொல்லிக்காம வெளியேறிட்டானா அவன காணாமல் போயிட்டான்னு சொல்லுற இந்த ஒலகம் ,அதே பொம்பளப்புள்ள தாங்க முடியாத கஷ்டத்துக்கு வீட்டைவிட்டு வெளியேறினா
.அவ அடுத்தவனோடு ஓடிப்போயிட்டான்னு கூசாம சொல்லும் ,நீ கானாமப் போனதற்கு உம் பொண்டாட்டி
சொந்தம் பந்தம் எல்லாம் பதறியடிச்சு உன்னை தேடிக்கிட்டு இருக்கும் .அதே உங்க அம்மா
மாதிரி பொம்பள காணமல் போனா எவங்கோடயோ ஓடிப் போயிட்டான்னு அவுசேரி பட்டம் கட்டிக்கிட்டு
,வீட்டுக் கதவ இழுத்து சாத்திக்கும்”
பசுபதியின்
சொற்கள் கோவிந்துக்கு புதிய சிந்தனையை ஏற்படுத்தியது . இதுதான் இந்நாவலில் ஒன் லைன்
ஸ்டோரியும் செய்தியும் ஆகும்.
பொதுவாக பாலியல்
தொழில் செய்யும் பெண்களையும் அவர்களை வைத்து தொழில் செய்யும் பெண்ணையும் எடுபிடிகளையும்
வில்லத்தனமாகவே சித்தரித்து குவிக்கப்பட்டுள்ள கதைகள் ,சினிமாக்கள் நிறையப் பாத்திருப்போம்.
பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்பவர்தான் பசுபதி
எனும் பெண் பாத்திரம் ;ஆயின் அவரின் அன்பும் அரவணைப்பும் மனிதமும் கம்பீரமும் இந்நாவலின்
உயிர்சரடு . அவளும்கூட வஞ்சிக்கப்பட்டவள்தான் .ஜட்கா வண்டியோட்டும் சுப்பு அடித்தட்டு
மனிதனின் இயல்பான மனிதம் , சந்தர்ப்பச் சூழலால் தவறு செய்துவிட்டு கணவன் கோவிந்து தொலைந்து
போனதும் துடிக்கிற சசியின் இதயம் , சசியின் தந்தை சுந்தரம் – ரஹீம் நட்பின் ஆழம் ,பாலியல்
தொழிலாளியாய் வரும் நேத்ரா ,விடிவெள்ளி ,பானுமதி போன்றோர், பசுபதியின் வலது கையாய்
இருக்கும் திருநங்கை ராசாத்தி ஒவ்வொருவருக்குள்ளும் தளும்பும் அன்பின் அலைகள் என நாவல்
நெடுக கண்ணீரின் வெப்பத்தோடு கைகுலுக்கும் மாட்சியை எப்படிச் செல்வது ?
ஊருக்கெல்லாம்
தமுக்கடிக்கும் காய்கறி விற்கும் கிழவி பாத்திரமும் , குறிப்பறிந்து அவதூறு பரவாமல்
தடுக்கும் பாத்திமாவும் இயல்பான சித்தரிப்புகள் . ஒவ்வொரு பாத்திரமும் கிராமங்களில்
காணக்கிடைப்பதின் மாதிரியே !
“ஏண்ணே லட்சிமிய [குதிரை பேரு ] எங்கிருந்து பிடிச்சிட்டு
வந்தீங்க ….ஒண்ணுமில்லேண்ணே ,பொட்டக் குதிரைக்கு பதிலா ஆம்பளக் குதிரைய வாங்கியிருந்தா
இன்னும் வேகமா ஓடுமில்ல ..” என கோவிந்து கேட்ட கேள்விக்கு சுப்பு சொன்ன பதிலும் “ ஏண்ணே
எங்கள மாதிரி குதிரையெல்லாம் ஜட்கா வண்டிக்கு
ஆகாதாண்ணே ..” என்கிற ராசாத்தி கேள்வியும் மிகவும் நுட்பமானது .
எண்பதுகளில்
கூட திண்டுக்கல் ,பழநி எல்லாம் ஜட்கா உண்டு.
நானும் பயணித்த அனுபவம் உண்டு .ஜட்காத் தொழிலாளி போராட்டம்கூட நாவலில் வந்து போகிறது
.
வழக்கமாக
ஆண்கள் ஓடிப்போய் சாமியாராய் ,கிரிமினலாய் மாறும் காட்சிகள் பார்த்திருக்கோம் ,படித்திருக்கோம்
; பெண்களும் வாழ்க்கை நிர்ப்பந்தத்தால் ஓட நேரிடுகிறது .அதன் பின் என்னவாகுமென்பதையும்
நாவல் பேசுகிறது .
பழநியின்
இன்னொரு பக்கத்தை இந்நாவல் வரைந்து காட்டுகிறது .பொதுவாய் பெருங்கோயில்கள் , வழிப்பாட்டிடங்கள்
,சுற்றுலாத் தலங்கள் போன்ற மையங்களில் உபதொழிலாக பாலியல் தொழில் நிலைத்து இருக்கும்
.அதன் பின் ஆயிரம் ஆயிரம் கண்ணீர் கதைகள் இருக்கும் . அதிதிகள் எங்கும் இருப்பர் .
அவர்களின்
வலியை காயத்தை பெண்களின் பக்கம் நின்று சித்தரிக்கிறது
இந்நாவல் .
இடதுசாரி
இயக்க களச்செயல்பாட்டாளாராக அறியப்பட்ட வரத .இராஜமாணிக்கத்தின் முதல் நாவல் எனினும்,
தேர்ந்த கதை சொல்லியாகவும் , நுட்பமான சமூகபார்வை கொண்டவராகவும் வெளிப்பட்டிருக்கிறார்
.வாழ்த்துகள். தொடர்க உங்கள் எழுத்துப் பணி !
“நாவலில் பெரிதாக குற்றம் குறைகள் இல்லை. சில பாத்திரங்களுக்கு , குறிப்பாக குதிரைவண்டிக்காரர் சுப்பு பாத்திரத்திற்கு சில இடங்களில் மரியாதை விகுதியும், சில இடங்களில் அன் விகுதியும் மாறி மாறி வருவதைத் தவிர்த்திருக்கலாம். பழநியின் சித்த வைத்தியர்கள்,
புகழ்பெற்ற திரையரங்குகள், பிரபல விபூதி, பஞ்சாமிர்தக் கடைகள் பற்றி எல்லாம் ஆங்காங்கே சொல்லியிருந்தால் இன்னும சிறப்பாக இருந்திருக்கும்.” என சுப்பாராவ்
ஓர் விமர்சனத்தில் சொல்லியிருப்பதையும் இராஜமாணிக்கம் கவனத்தில் கொள்க !
அதிதி [ நாவல்
] ,ஆசிரியர் : வரத .இராஜமாணிக்கம் ,
வெளியீடு
: பாரதி புத்தகாலயம் , பக் : 192 ,விலை : ரூ 180/
தொடர்புக்கு
: 044 -24332924 /24332424 / 8778073949
E mail :
bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
சுபொஅ.
7/5/2023.
0 comments :
Post a Comment